- வெங்கட் சாமிநாதன் -- அண்மையில் மறைந்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் சுவட்டில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள் -


நினைவுகளின் தடத்தில் (6)!'

சந்தோஷம் யாருக்கு என்ன காரணங்களால் கிடைக்கிறது என்று அவ்வளவு சுலபமாக சொல்லி விடமுடிகிறதில்லை. நேற்று ஒரு ·ப்ரென்சு படம் பார்த்தேன். தான் செய்யாத, ஆனால் தான் இருக்க நடந்து விட்ட ஒரு குற்றத்திற்காக கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ஒரு தாய் என்னேரமும் வெறிச்சிட்ட முகமாகவே காணப்பட்டாலும் ஒரு சில கணங்களில் அவள் முகத்திலும் புன்னகையைப் பார்க்க முடிகிறது. அவள் வசமாக கை ரேகை சாட்சியத்தோடு சிறையில் அகப்பட்டுக் கிடக்கிறாள். அவள் குற்றமற்றவள் என்று தன்னைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டாலும், அவளுக்கு விடுதலை என்பதே சாத்தியமில்லை. இருப்பினும் அவள் முகம் மலரும் கணங்களும் அவளுக்குக் கிடைத்துவிடுகின்றன. நாம் எல்லோரும் அறிந்த ஒரு அரசியல் தலைவருக்கு எத்தனையோ ஆயிரம் கோடிகள் சொத்து குவிந்து கொண்டே இருக்கிறது. இன்னமும் பணம் எல்லா வழிகளிலும் சொத்து சேர்த்துக்கொண்டே தான் இருக்கிறார். ஆனாலும், அவரைக் கவலைகள் அரித்துக்கொண்டே இருக்கின்றன. அங்கங்கள் ஒவ்வொன்றாக செயல் இழந்து வருகின்றன. திட்டமிடும் மூளையைத் தவிர. காலையில் இரண்டோ மூன்றோ இட்டிலிக்கு மேல் அவரால் சாப்பிட முடிவதில்லை. மான் கறியும் முயல்கறியும் ஆரவாரத்தோடு சாப்பிட்டவர் தான். இருப்பினும், அலுப்பில்லாமல், வெறும் சொத்து சேர்த்துக் கொண்டே போவதில் அவருக்கு சந்தோஷம் கிடைத்து விடுகிறது.

என்னைக் குழந்தைப் பருவத்திலிருந்து 14 வயது வரை வளர்த்துப் படிக்க வைத்த மாமாவை நினைத்துப் பார்க்கிறேன். அந்த வறுமை இப்போது நினைக்கக் கூட பயங்கரமானது. அவருடைய சம்பாத்தியமான 25 ரூபாய் 4 அணா வில் வீட்டு வாடகை ஆறு ரூபாய் போக மீத பணத்தில், நாங்கள் ஆறு பேர் கொண்ட குடும்பத்தை எப்படி சமாளித்தார் என்பதல்ல விஷயம், சமாளிக்க முடிந்ததில்லை. ஆனாலும் அவர் என் அப்பாவுக்கு, "என்னால் முடியவில்லை, பையனை அனுப்புகிறேன்" என்று ஒரு கார்டு போட்டவரில்லை. என்னைப் பார்த்து அலுத்துக் கொண்டவரில்லை. யாரும் எந்த சமயத்திலும் அந்த வீட்டில், நான் ஒரு உபரி ஜீவன் என்று நினைத்ததில்லை; உணர்ந்ததில்லை முதலில்.

ஒரு சமயம் அவருக்கு என் அப்பாவிடமிருந்து ஐந்து ரூபாய் மணிஆர்டர் வந்தது. எதுக்கு இது வந்தது, இதற்கு என்ன அர்த்தம்? என்று மாமா அடிக்கடி தன்னையும் கேட்டுக் கொண்டார். பாட்டியையும் கேட்டுக் கொண்டிருப்பார். என்னை ஒன்றிரண்டு முறை அவர் கேட்டதுண்டு: "ஏண்டா அம்மா வந்த போது உனக்கு பணம் வேணும்னு கேட்டியா? இல்லை உனக்கு ஏதாவது வேணும்னு சொன்னியா?" என்று துருவிக் துருவிக் கேட்டார். எனக்கு இப்படியெல்லாம் எண்ணமே தோன்றியதில்லை. ஐந்து ரூபாய் என்பது அந்நாட்களில் பெரிய தொகை. எங்கள் வீட்டுக்கு எதிரில் இருக்கும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு வீட்டு வேலை செய்ய வரும் கான்ஸ்டபிளுக்கு சம்பளம் மாதம் ரூபாய் 7. ஒரு வருஷம் கழித்து நாலணா சம்பளம் கூடும். அதில் தான் அவர் தன் குடும்பத்தை நடத்தியாகணும். பிள்ளைகளைப் படிக்க வைத்து பெண்களுக்கு கல்யாணம் செய்து வைத்து...... எப்படியோ நடந்தது. சனிக்கிழமை சந்தைக்கு மாமா இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு என்னையும் அழைத்துக்கொண்டு போவார், வாராந்திர காய் கறிகள் வாங்க. அதிகம் போனால் ஒன்றே கால் ரூபாய் அல்லது ஒன்றரை ரூபாய் ஆகும். இரண்டு பைகளிலும் காய்கறிகள் நிரப்பி வீடு வருவோம். வந்து கணக்கு எழுதுவார். என்னென்ன வாங்கினார், என்ன விலை, என்ன செலவு ஆயிற்று என்று. அப்பாவிடமிருந்து ஐந்து ரூபாய் வந்த சிலநாட்களில், மாமா கணக்குப் பார்த்ததில் ஐந்து ரூபாய் குறைந்திருந்தது. பதறிப் போய்விட்டார், பதறி. என்ன யோசித்துப் பார்த்தும், என்ன செலவு செய்தோம் ஐந்து ரூபாய்க்கு என்று தெரியவில்லை. என்னிடம் கேட்டார். "ஏண்டா அப்பா அனுப்பின ஐந்து ரூபாயை நீ எடுத்தியா?" என்று. நான் இல்லை என்றேன். அவர் கேட்டது ஒரு சந்தேகத்துக்குத் தான். ஐந்து ரூபாயை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். காலணா அரையணா குறைந்து நான் எடுத்திருப்பேன் என்ற சந்தேகம் கொஞ்சம் வலுவாக இருந்திருந்தால், மாமா விலாசியிருப்பார் விலாசி. அந்த ஐந்து ரூபாய் எப்படியோ தொலைந்து தான் போயிற்று என்பது நிச்சயமாகத் தெரிந்த பிறகு ஏதோ பெரிய சொத்து கொள்ளை போனது போல கதறத் தொடங்கிவிட்டார். வெகு நாட்கள் அவர் அதை மறந்து மீறமுடியவில்லை.

 

நிலக்கோட்டையில் இந்த மாதிரியான தினப்படியான வண்டிச் சகடையோட்ட வாழ்வில் சற்று மாறுதலுடன் உற்சாகம் தரும் நிகழ்வுகள் என்று மாரியம்மன் கோவில் நடக்கும் பங்குனி மாத திருவிழாவும் ஒன்று. நல்ல வெயில்கொளுத்தும். ஊரின் ஒரு கோடியிலிருக்கும் மாரியம்மான் கோவிலிலிருந்து தொடங்கி மறுகோடியில் மதுரை கொடைக்கானல் ரோடு வரை உள்ள நீண்ட கடைத்தெரு முழுதும் ரோடை அடைத்து தென்னங்கீற்றுப் பந்தல் போட்டு விடுவார்கள். கோடை வெயிலில் பந்தலின் கீழே நடக்கவும் ஆனந்தமாகவும் இருக்கும். அது அழகாகவும் இருக்கும். இருபுறமும் இருக்கும் கடைக்காரர்கள் தான் செலவைப் பங்கிட்டுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். இந்த பழக்கத்தை நான் வேறு எங்கும் கோடை கால கோயில் உற்சவத்தை ஒட்டி இப்படிச் செய்வதை அறிந்ததுமில்லை. கேட்டதும் இல்லை. கடைக்காரர்கள் பெரும்பாலும் நாடார்கள். ஒரு சிலர் சௌராஷ்டிரர்கள். மாரியம்மன் கோயில் நாடார்களின் நிர்வாகத்தில் இருந்தது. கோயிலைச் சுற்றி இருந்த இடத்தில் நிறையக் கடைகள் வந்து விடும். ராட்டினங்கள் வந்து விடும்.

முன்னரே சொல்லியிருக்கிறேன். மாமா பிறந்து வளர்ந்ததெல்லாம் சுவாமிமலையில். சுவாமிமலை மட்டுமல்ல. அனேகமாக தஞ்சையைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் சுவாமி மலை சுவாமிநாதன் தான் குல தெய்வம் ஆகவே மாமாவுக்கும் சுவாமிநாத ஸ்வாமி தான். என் சின்ன மாமாவின் பெயரும் சுவாமிநாதன். என் பெயரும் அப்படியே. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு சுவாமிநாதன் இருப்பது சுவாமி மலைப் பக்கம் சகஜம். ஆனால் மாமாவுக்கு தன் குல தெய்வம் சுவாமிநாதன் தான் என்ற கட்டுப்பாடு ஏதும் கிடையாது. நிலக்கோட்டை மாரியம்மனிடம் அவருக்கு பக்தி அதிகம். அதனால் தானோ என்னவோ, ஒரு முறை அந்நாட்களில் தஞ்சைக்கு என்னை அழைத்துச் சென்றபோது, அவர் பெரிய கோவிலுக்குப் போகவில்லை. தஞ்சை மாரியம்மன் கோவிலுக்குத்தான் அழைத்துச் சென்றார்.

மாரியம்மன் கோவிலை அடுத்து பெருமாள் கோவில் ஒன்றும் இருந்தது நிலக்கோட்டையில். ஆனால் அந்தப் பெருமாள் ரொம்பவும் ஏழ்மைப்பட்ட பெருமாள். யாரும் அவரைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. மாமாவோடு அவர் கோவிலுக்குப் போகும் போதெல்லாம் நானும் அவருடன் செல்வேன். எனக்கு பெருமாள் கோவிலுக்கு என்றும் போனதாக நினைவு இல்லை. பெருமாளும் நின்ற பெருமாளா, அமர்ந்த பெருமாளா அல்லது சயன கோலத்தில் சேவை சாதிப்பவரா என்று தெரியாது. அது பற்றி இப்போது நினைத்துப் பார்க்கும் போது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. பெருமாள் எந்த கோலத்தில் இருந்தாலும் அழகானவர். அதனால் அவர் அலங்காரப் பிரியரும் கூட. வடுவூருக்கு கைசிகி நாடகம் பார்க்க ராமானுஜம் என்னை அழைத்திருந்தார். கோதண்ட ராமர் கோவில் பிரகாரத்தில் கைசிகி நாடகம் நடந்தது. அன்று தற்செயலாக எங்கள் அதிர்ஷ்டம் உற்சவ மூர்த்தியை வெளிப்பிரகாரத்தில் வைத்து அலங்காரம் செய்திருந்தார்கள். அந்த கோதண்ட ராமன் போல அழகான சிற்ப வடிவத்தை நான் பார்த்ததில்லை. ராமனுக்கு சேவை செய்து கொண்டிருந்த பாட்ராச்சாரியாரிடம், ராமன் ரொம்ப அழகாக இருக்கிறார் என்று சொன்னேன். அவரும் இத்தகைய அழகான சிற்பங்கள் நான்கோ ஐந்தோ இருப்பதாகவும் அவை இருக்குமிடங்களையும் சொன்னார். இப்போது அந்த இடங்கள் எனக்கு மறந்து விட்டது. கோவில்கள் எனக்கு எப்போதுமே பெரும் உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் தரும் இடங்களாக இருந்து வந்துள்ளன.

மாமா குடும்பத்திற்கு குல தெய்வம் சுவாமிநாதன் என்றேன். தந்தைக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்த, கோவணம் தரித்த கோலத்தில் ஒரு பாலகன். ஹிந்து மதத்திலும் புராணங்களிலும் தான் என்னென்ன அழகான, விசித்திரமும், வசீகரமுமான கதைகள்
உருவாக்கப்பட்டுள்ளன என்று யோசித்தால் அதுவே இப்போது வியப்பாக இருக்கிறது. நிலக்கோட்டையிலிருந்து மதுரைக்குப் போகும் இரண்டு வழிகளில் பேருந்துகள் போகும். ஒன்று கொடைக்கானல் ரோடு என்று இப்போது தெரியப்படும் அம்மையநாயக்கனூர் வழி. இன்னொன்று, அணைப்பட்டி, சோழவந்தான் ஊர்கள் வழியாகச் செல்லும் இன்னொரு வழி. அணைப்பட்டி அப்படி ஒன்றும் தூரத்து கிராமம் இல்லை. ஐந்தோ ஆறோ மைல்கள் தூரத்தில் தான் அது இருந்தது. அது ஏன் அணைப்பட்டி என்று பெயர் பெற்றது என்பது எனக்கு அன்று யாரும் எனக்குச் சொன்னதில்லை. அங்கு ஏதும் அணை கட்டப்பட்டிருக்கிறதோ என்னவோ. தெரியாது. நிலக்கோட்டையை விட்டு வந்த பிறகு, "அணைப்பட்டி என்று பெயர் ஏன் வந்தது?" என்றா விசாரித்துக்கொண்டிருப்பார்கள் யாரும்? ஆகவே இப்போது எனக்குத் தெரியாது. ஆனால் அங்கு தண்டாயுத பாணி கோவில் ஒன்று உண்டு என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆக, நிரம்ப தெய்வ பக்திகொண்டவரும், சுவாமிநாதனை குல தெய்வமாகக் கொண்டவருமான மாமா, ஐந்தே மைல் தூரத்திலிருக்கும் தண்டாயுத பாணி கோவிலுக்கு அடிக்கடி போய் தரிசனம் செய்து வருவார் என்று தான் நினைக்கத் தோன்றும். ஆனால் அவரும் போனதில்லை. அதனால் நானும் போனதில்லை.

இதையெல்லாம் எதற்காக இவ்வளவு தூரம் சொல்ல வந்தேன் என்றால், நிலக்கோட்டையை விட்டு அவர் எந்த இடத்திற்கும் அவசியமில்லாமல், பெரிய நிர்ப்பந்தங்கள் இல்லாமல், சென்றதில்லை. சுவாமி தரிசனத்திற்குக் கூட பக்கத்து ஊருக்குக் கூட போய் வருவோம் என்று அவர் போனதில்லை. அப்படியெல்லாம் செலவு செய்ய அவரிடம் பணம் இருந்ததில்லை என்பதைச் சொல்லத்தான் இவ்வளவும். ஒரு முறை காந்தி மதுரைக்கு வருகிறார், இடையில் அவர் வரும் ரயிலை வழியில் நிறுத்திப் பார்த்து வரலாம் என்று நிலக்கோட்டையே இடம் பெயர்வது போல கொடை ரோடுக்கு நடைப்பயணம் சென்ற போது, பள்ளிக்கூட மானேஜர் தன் வில்வண்டியில் மாமாவையும் அழைத்துச் சென்றதால்தான் மாமா வீட்டை விட்டு நகர்ந்தார். எனக்கும் அவர், "போடா யாரும் பசங்க போனா நீயும் போயிட்டு வாடா," என்று முதல் தடவையாக, என்னைத் தனியாக எங்கும் செல்ல அனுமதி தந்தார். நிலக்கோட்டையில் நான் 13 வயது வரை இருந்த காலத்தில் என்னைத் தனியாக எங்கும் செல்ல அவர் அனுமதி தந்தது "சரித்திரம் முக்கியத்வம் பெற்றுவிட்ட" அந்த ஒரு நாள் தான்.


நினைவுகளின் தடத்தில் - (7)

- வெங்கட் சாமிநாதன் -நிலக்கோட்டையின் என் நினைவுகள் ரொம்ப பால்ய பருவத்திலிருந்து தொடங்குவதால், அப்போதிருந்து நான் ஒன்பதாவது வகுப்பு படிக்க மதுரைக்கு பாட்டியுடன் சென்ற 1946 வரை எத்தனை வருஷங்கள் என் நிலக்கோட்டை வாசம் நீடித்தது என்று சொல்லமுடியாது. உத்தேசமாக 12 வருஷங்கள், என் பதிமூன்றாவது வயது வரை, என்று இருக்கலாம். அத்தனை வருஷங்களிலும் மிகப் பெரிய அளவில் எனக்கு உற்சாகம் அளித்த நிகழ்ச்சிகள், வியப்பை அளித்த விஷயங்கள் என்று நான் அதிகம் சொல்ல முடியாது. மகாத்மா காந்தியைப் பார்க்கக் கொடைக்கானல் ரோடுக்கு நானாக தனியாக செல்லலாம் என்று மாமாவாக எனக்கு அனுமதி தந்ததும், மகாத்மா காந்தியைப் பார்த்ததுமான சம்பவங்கள் என் மனதுக்கு மிக சந்தோஷம் அளித்தவை. அது பற்றி தனியே எழுதியும் இருக்கிறேன். மாரியம்மன் கோவிலில் நடக்கும் பங்குனி உற்சவம் அது போல மற்றொன்று. தமிழ் நாட்டின் சமூக வாழ்க்கையையும் அரசியலையும், மதிப்புகளையும் தம் பகுத்தறிவு பற்றிப் பெருமை கொள்ளும் திராவிட இயக்க அரசியல் ஆக்கிரமித்துக் கொண்ட போதிலும் மாரியம்மன் கோவில் உத்சவம் அதனால் பாதிக்கப்பட்டதில்லை. எங்கும், எப்போதும்.

இது போன்று அந்நாட்களில் அது காறும் நிலக்கோட்டையின் வரலாறு காணாத மிகப் பெரிய நிகழ்வு என்று பேசப்படவேண்டியது 1944ம் வருடம், என்றோ நடந்த எங்கள் பள்ளிக்கூட மானேஜர், கரஸ்பாண்டண்ட் குடும்பத்துக் கல்யாணம். கல்யாணம் அல்ல, கல்யாணங்கள் என்று சொல்ல வேண்டும். நான்கு நாட்கள் மிகக் கோலாகலமாக நடந்த, நிலக்கோட்டையே விழாக் கோலம் பூணவைத்த, ஒரே மேடையில், பந்தலில் ஒரே சமயத்தில் நடந்த மூன்று கல்யாணங்கள். எங்கள் பள்ளிக்கூடத்திற்கு பொறுப்பேற்று நடத்தி வந்த அண்ணன் தம்பிகளான மூன்று குடும்பங்கள் ஒன்றாக நடத்தியதால் அது மிகப்பெரிய விழாக்கோலம் பூண்டது. நான் ஏழாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது என் வகுப்பில் படித்த பெண்களில் ஒரு பெண் சௌந்திரம், அப்போது மானேஜராக இருந்த சுப்புராமய்யரின் பெண், ஒரு மணப்பெண். அவளுடைய அண்ணன், எனக்கு இரண்டு வருடம் முன்னதாக எட்டாவது வகுப்பு வரை எங்கள் பள்ளியில் தன் படிப்பை முடித்துக் கொண்டு அப்பாவுக்கு உதவியாக சென்று முதலாளியாகிக் கொண்டி ருந்தவன். சுப்புராமய்யர் நிலக்கொட்டை பஞ்சாயத்து சேர்மனாகவும் அந்நாட்களில் இருந்தவர். அன்று மாப்பிள்ளையான அவருடைய மகன் அவரைத் தொடர்ந்து பின்னாட்களில் நிலக்கோட்டை பஞ்சாயத்து சேர்மனானான் என்றும் எனக்கு செய்தி சொல்லப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல், அத்தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஒரு பெண்மணியுடன் அவன் மிக நெருக்கமாக இருந்ததாகவும் ஒரு மசாலாவுடன் அந்த செய்தி என்னை வந்து சேரும். மூன்றாவது மாப்பிள்ளையோ, மணப்பெண்ணோ அந்தச் சகோதரர்கள் குடும்பங்களிலிருந்து யார் என்று எனக்கு இப்போது நினைவில் இல்லை.

இதையெல்லாம் சொல்லக் காரணம் எங்கள் பள்ளிக்கூடம் அக்குடும்பத்தின் பொறுப்பில் இருந்ததால், அந்த மிகப் பெரிய கோலாகல கல்யாண விழாவோடு நாங்கள் மிக நெருங்கியவர்களாக, அந்த உத்சாகத்தில் பங்கு கொண்டவர்களாக உணர்ந்ததால் தான். கொஞ்ச நாட்கள் முன்னும் பின்னும் எங்கள் வாத்தியார்களெல்லாம் அது பற்றியே பேசினார்கள். கல்யாண தினங்களில் எங்களுக்கென்று பள்ளியிலேயே ஸ்பெஷலாக சாப்பாடு கிடைத்தது. அடுத்தடுத்து அக்குடும்பங்களின் பங்களாக்கள் இருந்த இரண்டு தெருக்களையும் அடைத்து பிருமாண்டமான் பந்தல் போடப்பட்டது. மாரியம்மன் கோவில் பங்குனி உத்சவத்துக்கு போடுவார்களே அது போல, ஆனால் இரண்டே தெருக்களுக்கு மாத்திரம்.

இன்னொரு குறிப்பிடத்தக்க பெரிய விஷயம், நிலக்கோட்டையின் சரித்திரத்திலேயே முதன்முதலாக இந்த நான்கு கல்யாண நாட்களிலும் சங்கீத கச்சேரி நடந்தது. அது வரை நிலக்கோட்டை பாட்டுக்கச்சேரி என்று எதையும் பார்த்ததில்லை. கேட்டதில்லை. வரலாறு காணாத அத்தகைய பெரு நிகழ்வு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்ததென்றால்..! நிலக்கோட்டையில் அந்நாட்களில் இருந்த இரண்டு காபி க்ளப்புகளில் இருந்த ரேடியோ பெட்டிகளில் (திருச்சி நிலையம் மாத்திரம் கேட்கும்) வரும் சினிமா பாட்டுக்களைத்தான் நிலக்கோட்டை வாசிகள் கேட்டு அறிவார்கள். மேடை அமைத்து வித்வான்கள் பாடுவார்கள் என்கிற சமாச்சாரம் நிலக்கோட்டை அறியாதது. நான் இருந்த வரை அந்நிகழ்வு தனிப்பெரும் நிகழ்வாகவே அது வரலாற்றில் தன்னைப் பதித்துக் கொண்டது. ஏனெனில், அதன் பின் வேறு யாரும் எக்காரணம் தொட்டும் இம்மாதிரி பாட்டுக் கச்சேரி ஏற்பாடு செய்து அத்தடத்தில் மரபு ஒன்றை உருவாக்கி விடவில்லை. மிகப் பெரிய அளவில் நடக்கும் மாரியம்மன் கோவில் பங்குனி உற்சவத்திலேயே கூட பாட்டுக்கச்சேரிகள் நடப்பதில்லை அங்கு. நாங்கள் அறிந்தவை கொடை ராட்டினமும், டூரிங் சினிமாவும் தான் நிலக்கோட்டை வாசிகள் அறிந்த பொழுது போக்குகள். ஒரே ஒரு விதிவிலக்கு. 1942-43 களில் ஒரு நாள் தாலுகா அலுவலகங்கள் இருந்த இடத்திற்கு எதிரேயான மைதானத்தில் ஒரு நாள் பாவைக்கூத்து நடந்தது. இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம் அது. சண்டைக்கு ஆள் சேர்க்க, நடந்த பிரசாரமாக அந்த பாவைக்கூத்து ஆடிய கதை இருந்தது.

ஆனால் அந்த நான்கு நாட்கள் கல்யாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சங்கீத கச்சேரிகள் இன்னும் பசுமையாக என் நினைவில் இருக்க இன்னும் நெருங்கிய வேறு காரணங்களும் இருந்தன. அந்த நான்கு நாட்கள் நடந்த கச்சேரிக்கு வித்வான்களை ஏற்பாடு செய்து அழைத்து வந்தது என் மாமா தான். மாமா தஞ்சைக் காரரா, சங்கீதமே தஞ்சையில் விளைந்தது தானே, ஆகவே அதற்குத் தகுந்த ஆள் மாமா தான் என்று பள்ளி மானேஜ்மென்ட் முடிவு செய்தது என்று நினைக்கிறேன். வேடிக்கை என்னவென்றால், மாமாவுக்கு சங்கீதமும் தெரியாது. சங்கீத வித்வான்களையும் தெரியாது. அவருக்கு அதில் ஏதும் பிடிமானமும் இல்லை. அவர் தஞ்சை ஜில்லாக்காரர்தான் என்றாலும் சங்கீத வித்வான்களை அவர் அறிந்தவரில்லை. ஆனாலும் அவர் தஞ்சை சென்று அதற்கான ஏற்பாடுகளையும் செய்து, வித்வான்களையும் அழைத்து வந்துவிட்டார். அவர்கள் எல்லோரும் எங்கள் வீட்டுக்கு அடுத்து இருந்த ஒரு பெரிய வீட்டில் தான் தங்க வைக்கப் பட்டிருந்தனர். அந்த வீடும் இந்த சகோதரர்களில் மூத்தவரான எஸ்.ஆர். அனந்தய்யர் என்பவரின் வீடு தான். அந்த பெரிய வீடும் அடுத்து இரண்டு சிறிய வீடுகளும் அவருடையவை தான். அந்த சிறிய வீடுகள் ஒன்றில் தான் நாங்கள் வாடகைக்கு இருந்தோம். நாங்கள் அங்கு குடிபோனபோது முத்துசாமி அய்யர் என்பவருக்கு சொந்தமாக இருந்தது. பின்னர் மூன்று வீடுகளையும் எஸ்.ஆர்.அனந்தய்யர் 12,000 ரூபாய் களுக்கு வாங்கிவிட்டதாகவும் நாம் அங்கேயே தொடர்ந்து வாடகைக்கு இருக்கலாம், வேறு வீடு வாடகைக்கு பார்க்க வேண்டியதில்லை என்றும் மாமா ஒரு நிம்மதியோடும் சந்தோஷத்தோடும் சொன்னார். பரம்பரையாக பட்டு நெசவு செய்யும் சௌராஷ்டிரர்கள் எஸ். ஆர். அனந்தய்யரும் அவர் சகோதரர்களும். ஊரிலேயே பெரிய பணக்காரர்கள்.

மாமா சங்கீத வித்வான்கள் யாரையும் அறிந்தவரில்லை. இருந்தாலும் அத்தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்து வித்வான்களையும் அழைத்து வந்தவரைத் தெரியும். அவரும் வித்வான்களோடு உடன் வந்து தங்கினார். அவர்கள் எல்லோரும் அந்த பெரிய வீட்டின் பெரிய ஹாலில் உங்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். வெற்றிலைச் செல்லமும், தண்ணீர் கூஜாக்களும் பக்கத்தில் இருக்கும். வெற்றிலை போட்டுக் குதப்பும் செக்கச் சிவந்த வாயோடு தான் அவர்கள் பேச்சும் உடன் வரும். நான் அங்கு போய் உட்கார்ந்து விடுவேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் பேச்சையும் வக்கணையையும், பரஸ்பர கிண்டலையும் கேட்க. புரியவில்லை என்றாலும், அது வித்தியாசமான காட்சியாக வித்தியாசமான மனிதர்களையும் அவர்கள் பேச்சு பாவனைகளையும் கொண்டதாக இருந்ததால் அவையெல்லாம் அது வரை கண்டிராததால், எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது. அவர்கள் ஊர் வம்போடு சங்கீதம் பற்றியும் பேச்சு இருக்கும். அவர்கள் முகங்களையும், தலை, கைகள் எல்லாம் ஆட்டி ஆட்டி பேசுவதையும் பார்த்துக் கொண்டே இருப்பேன். பேசுவது புரியாவிட்டால் என்ன? வேடிக்கையாக இருந்தது.

யார் யார் வந்திருந்தார்கள் என்று இப்போது எல்லாம் எனக்கு நினைவில் இல்லை. ஆலத்தூர் சகோதரர்கள் பாட்டு ஒரு நாள். அது நல்ல ஞாபகம் இருக்கிறது. ஒரு நாள் நாதஸ்வரக் கச்சேரி இருந்தது. மற்றது எதுவும் எனக்கு இப்போது நினைவில் இல்லை. இம்மாதிரியான ஒரு அனுபவம் எனக்கு இரண்டு வருஷங்கள் கழித்து கும்பகோணம் வந்து படிக்கத் தொடங்கிய போது தான் கிடைக்க விருந்தது. அங்கு கல்யாணப் பந்தல் பார்க்கும் இடத்தில் எல்லாம் கட்டாயமாக இரவில் கச்சேரி இருக்கும். நாம் பாட்டில் பந்தலுக்குள் நுழைந்து பாட்டு கேட்கலாம்.

நான் மகாமகக் குளம் மேற்குத் தெருவில் ஒரு விதவைப் பாட்டி வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்த மாதங்கள். நான் கும்பகோணத்திலிருந்து ஐந்து மைல் தூரத்தில் இருந்த உடையாளூர் கிராமத்திலிருந்து தான் தினம் பள்ளிக்கூடத்துக்கு வயல் வரப்புகளின் மீது நடந்து போகவேண்டும். இடையில் மூன்று ஆறுகள். குடமுருட்டி, முடிகொண்டான், அரசலாறு என்று மூன்று ஆறுகளைக் கடந்து செல்ல வேண்டும். ஆற்றில் நீர் நான் கடக்கமுடியாத ஆழத்தில் இருக்குமானால், கும்பகோணத்திலேயே தங்கிவிடுவேன். அம்மாதிரியான கும்பகோண வாச நாட்களில் ஒரு இரவு படித்துக்கொண்டிருந்தேன். மறு நாள் பரிட்சை. திடீரென யாரோ ஒருவர் வந்து "சத்திரத்தில் ஒரே கூட்டமா இருக்கு. ராஜமாணிக்கம்பிள்ளை வந்திருக்கார்" என்று சொன்னார். நான் படிப்பதை நிறுத்திவிட்டு அதே தெருவில் நான்கு வீடு தள்ளி இருக்கும் சத்திரத்திற்குச் சென்று என்ன நடக்கிறது என்று பார்க்கப் போனேன். ராஜமாணிக்கம் பிள்ளைக்கு பாராட்டு விழா என்று சொன்னார்கள். தண்டபாணி தேசிகரைப் பார்த்தேன். இன்னும் யார் யார் என்று இப்போது ஞாபகம் இல்லை. தண்டபாணி தேசிகர் பேச எழுந்தார். பிள்ளைவாளுடன் தன் பழக்கம் நட்பு பற்றியெல்லாம் பேச ஆரம்பித்தார். எனக்கு அந்த இடத்தை விட்டு எழுந்திருக்க மனம் வரவில்லை. நான் அங்கேயே உட்கார்ந்து விட்டேன். பரிட்சையாவது மண்ணாவது. அந்த நினைப்பே அப்போது எனக்கு இல்லை. அந்த பாராட்டு விழா முடிந்த பின் தான் வீடு திரும்பினேன். இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால், வீடு திரும்பியதும் தூங்கப் போய்விட்டேன். காலை எழுந்து பரிட்சை எழுத புறப்படத் தான் நேரம் இருந்தது.

என் படிப்பும் நான் பரிட்சை எழுதியதும் அந்த லட்சணத்தில் தான் இருந்தது. எல்லா பாடங்களிலும் பாஸ் செய்துவிட்டேன் தான். ஆனால் வாய்க்காலின் மறு கரை ஓரத்தில் கால் பதிந்து விட்டமாதிரிதான். ஒன்றிரண்டு மார்க் குறைந்திருந்தால் வாய்க்காலில் விழுந்துகிடத்திருப்பேன். அதுவும் எனக்கு நல்லதாயிற்று என்று தான் சொல்ல வேண்டும். இந்த மார்க்கெல்லாம் பப்ளிக் ஸர்வீஸ் கமிஷன் பரிட்சை எழுதப் போதாது, மறுபடியும் பரி¨க்ஷ எழுதி நிறைய மார்க் வாங்கு என்று மாமா சொன்னார். எனக்குத் தான் படிக்க கொஞ்சம் கூட விருப்பமிருக்கவில்லை. வடக்கு நோக்கி திக்விஜயம் கிளம்பி விட்டேன். அது பற்றிய கதைகள் பின்னர். நான் பள்ளியில் படித்த லக்ஷணம் இப்படித்தான் இருந்தது என்று சொல்லத்தான் இவ்வளவும்.

நன்றி: 'பதிவுகள்' , ஏப்ரில் 2008 இதழ் 100  -மாத இதழ்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.