அத்தியயயம் 71

வெங்கட் சாமிநாதன்சீனுவாசன் மாத்திரமில்லை.எனக்கு ஒரு பரந்த உலகம் வெளியே விரிந்து கிடப்பதைக் காட்டியவர்கள். மற்றவர்களைப் பற்றி அவ்வப்போது சொல்கிறேன்.  சீனுவாசன் என் அறையில் வசித்த காலத்தில். வெளியூரில் வேலை பார்த்திருந்த காலத்திலும் அவர் அவ்வப்போது வந்து போவார். அவருடைய பாதிப்பு என்னை மாத்திரமல்ல.  என்னோடு அறையில் இருந்த நண்பரகள் அனைவரையும், அவர் தன் அன்பாலும் அக்கறையினாலும் பாதித்தார். வெளித் தோற்றத்தில் அவர் கொஞ்சம் பேச்சில் கடுமை காட்டுபவராக, கிண்டல் நிறைந்தவராக, கட்டுப்பாடுகள் மிகுந்தவராக, ஒரு அலட்சிய மனோபாவம்  மிகுந்தவராகத் தோற்றம் அளித்தாலும், அவர் போல் நண்பர்களின் கஷ்டங்களில், நட்புறவுகளில் பங்கு கொண்டு ஆழ்ந்த ஈடுபாடு காட்டியவர் இல்லை. வீட்டில் ஒரு பெரியண்ணாவின் கண்டிப்பும் வெளிக்காட்டாத பாசமும் அவரிடம் இருந்தன. அவரது கண்டிப்பில், கேலியில் மனம் கசந்திருந்த வேலுவுக்கு ஆலிவ் ஆயில் ஏதோ கொஞ்சம் தேவை அது கிடைக்கவில்லை என்று தெரிந்ததும், ரொம்ப அமைதியாக எதுவும் சொல்லாமல் கொள்ளாமல், அதைத் தேடி ஒரு காலன் டின்னில் கொண்டு வந்து, அல்ட்டல் எதுவும் இல்லாமல், “இந்தாய்யா, வேலு, இனி உங்களுக்கு ஆலிவ் ஆயில் கவலை தீர்ந்தது” என்று ஆலிவ் ஆயில் டின்னை எங்கள் முன் வைத்து  எங்களை யெல்லாம் திகைப்பில ஆழ்த்தியது ஒரு உதாரணம்

எங்களுக்கு அவர் இன்னும் பல விஷயங்களுக்கு  ஆசானாக இருந்தார் அப்படி ஒன்றும் அவர் ரொம்பவும் வயதில் மூத்தவர் இல்லை. எங்களை விட அவர் நான்கு அல்லது ஐந்து வயது தான் மூத்தவராக இருந்திருப்பார் ஆனால் அவர் எந்த விஷயம் பற்றியும் என்ன சொல்வார் என்று ஆவலுடன் அவரைத் தான் பார்த்துக் கொண்டிருப்போம் மற்ற நண்பர்கள் எப்படியோ. எனக்கு அவர் அப்படித் தான்.

புர்லாவில் கோடை மாதங்களில் அலுவலகம் காலை ஏழு மணிக்குத் தொடங்கி ஒன்றரை மணி வரை வேலை நேரமாக இருக்கும். காலையில் எழுந்து குளித்துவிட்டு ஏதாகிலும் அவசர அவசரமாகச் சாப்பிட்டு அலுவலகம் போனால், 1.30 மணிக்கு திரும்ப ஹோட்டலுக்கு மதிய சாப்பாட்டுக்கு விரைவோம். வெயிலின் கடுமை கொடூரமாக இருக்கும் அஸ்பெஸ்டாஸ் கூடை வேய்ந்த வீடுகள் இன்னும் வறுத்தெடுக்கும். அந்நாட்களில் அலுவலகம் தான் எனக்கு கோடையின் தகிப்பிலிருந்து கொஞ்சம் பாது காப்பு தரும் 1.30 மணிக்கு அலுவலகம் முடிந்ததும் ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் திரும்பி விடுவேன். விசாலமான இரண்டடுக்கு ,கொண்ட காரைக் கட்டிடம். அகன்ற நீண்ட வராண்டாக்கள். சதுர வடிவில் நடுவில் பரந்த புல்தரை. அலுவலக அறைகளின் ஜன்னல்கள் கதவுகள் எல்லாம் கஸ்கஸ் தட்டிகள் தொங்கவிடப்பட்டிருக்கும். அவ்வப்போது அத்தட்டிகளில் தண்ணீர் ஊற்றிக்கொண்டே யிருப்பார்கள். உள்ளே மின் விசிரியும் ஈரம் சொட்டும் கஸ்கஸ்தட்டிகளும் தான் அந்நாளைய ஏர் கண்டிஷனிங் எங்களுக்கு. நான் மதிய சாப்பாட்டுக்குப் பின் அலுவலகத்திலேயே மாலை ஐந்து மணி வரை கழித்துவிடுவேன். இரண்டு மேஜைகளைச் சேர்த்துப் போட்டால் படுக்கையாயிற்று. சில சமயம் தூக்கம். சில சமயம் படிப்பு. இல்லை யெனில் சில சமயம் மிகுந்திருக்கும் ஆபீஸ் வேலை. இப்படித் தான் கழிந்தன கோடை மாதங்கள்.

ஐந்து அல்லது ஐந்தரை மணிக்கு அறைக்குத் திரும்புவேன். திரும்பியதும் குளித்து முடித்தால் எல்லோரும் சீனுவாசனுடன் சேர்ந்து காலனிக்கு கிட்டத்தட்ட ஒரு மைல் வெளியே போனால் மரங்கள் அடந்த சாலை கிடைக்கும். அங்கு ஏதாவது ஒரு பாலத்தின் மேல், அல்லது மரத்தடியில் உட்கார்ந்து கொள்வோம். வெயிலின் தகிப்பு குறைந்து கொஞ்சம் காற்றாடவும் இருக்கும். பின் அங்கு சுமார் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் புத்தகம் ஒருவர் வாசிக்க மற்றவர் கேட்பதாக அந்த பொழுது கழியும். கோடை காலங்களில் சீனுவாசன் இருக்கும் வரை இது எங்களுக்கு அன்றாட பழக்கமாக இருந்தது. இதில் எவ்வளவு பேருக்கு எவ்வளவு ஈடுபாடு என்பது சொல்வது கடினம். எனக்கும் சீனுவாசனுக்கும் அது மனம் விரும்பிய பொழுது போக்காக இருந்தது. இந்த சமயங்களில் நாங்கள் படிக்கும் புத்தகங்கள் எளிமை யானவையாக இருக்கும். பெர்னார்ட் ஷாவின் பல நாடகங்கள் (எனக்கு இப்போது நினவிலிருப்பவை  Androcles and the Lion, Major Barbara, Doctors” Dilemma, பின் பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் Portraits from Memory and  Other Essays, Why I am not a Christian, Unpopular Essays பின்  H.G.Wells –ன்   A short History of the World இப்படியானவை.

சீனுவாசன் மாத்திரமில்லை. மிருணால் காந்தி சக்கரவர்த்தி என்று அலுவலகத்திலும் சீனுவாசன் மாதிரி ஒரு நண்பன்  கிடைத்தான். அவன் எனக்கு இன்னுமொரு ஆசான். ஆனால், எங்கள் அறிமுகமே மிக விநோதமான அறிமுகம் தான். எல்லா அரிய நண்பர்களின் பரிச்சயமும் இப்படி நேர்வதில்லை. முதல் சந்திப்பில் மிருணால் என்னை அனுகியபோது, அலுவலக சம்பந்தமாகத்தான், நான் அவனை அலட்சியப்படுத்தி, “இப்போ முடியாது. அப்புறமா வா. எனக்கு வேலை அதிகம்” என்று சொல்லி விரட்டினேன். அப்போது நான் அந்த அலுவலகத்தில் சேர்ந்த ஆரம்ப நாட்கள்.. என் வேலை தவிர அலுவலகத்திற்கு தேவைப்படும் பேனா, பென்ஸில், பேப்பர், ஃபைல் கவர் இப்படி சாமான்கள் எல்லாம் என் பொறுப்பில் இருந்தது.  மிருணால் என்னிடம் கேட்டது ஏதோ ஒரு அல்பப் பொருள். கொடுத்திருக்கவேண்டும். அது என் கடமை. பொறுப்பு. ஆனால் அப்போது நான்  Aldous Huxley-ன் Ape and Essense புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். படித்துக்கொண்டிருக்கும் போது என்னை அலுவலக வேலைக்காகத் தொந்திரவு செய்யலாமா? எனக்கு எரிச்சல். ஆனால் அந்த நண்பன் மிருணால் காந்தி சக்கரவர்த்தி தான் இன்றும் ஐம்பத்தைந்து வருடங்கள் பின்னும் மிக மன நெகிழ்வுடன், மிகுந்த இழப்புணர்வுடன் நினைவு கொள்ளும் ஒரே நண்பன். 1956 டிஸம்;பரில் அவனை விட்டுப் பிரிந்தேன். பின் 1958லோ என்னவோ, தில்லியிலிருந்து சென்னைக்கு விடுமுறையில் திரும்பும் போது, நாக்பூருக்குத் தெற்கே உடைப்பெடுத்து ரயில் போக்கு வரத்து தடைப்படவே, நாக்பூரிலிருந்து கல்கத்தா மெயிலில் பிலாஸ்பூர் போய் இறங்கி அங்கிருந்து பிலாய் போய் மிருணாலைச் சந்தித்தேன். ஒரு நாள் மாலை போய் அவன் இருக்கும் இடத்தைத் தேடிக்கண்டு பிடித்து மறுநாள் மாலை வரை அவனுடன் மாத்திரமில்லை. அப்போது புர்லாவிலிருந்து அங்கு மாற்றலாகியிருந்த என் பழைய அறை நண்பர்கள் தேவசகாயம் வேலு இன்னும் மற்றோருடனும் கழித்தேன். அதன் பின் மிருணால் காந்தி சக்கரவர்த்தியைப் பார்க்க வில்லை. எங்கள் வாழ்க்கை பாதைகள் பிரிந்து விட்டன. பசுமையும் மன நெகிழ்வும் தரும் நினைவுகளே மிஞ்சி யுள்ளன

மிருணாலைப் பற்றி நிறையச் சொல்லவேண்டியிருக்கிறது. இந்த முதல் பரிச்சயத்தின் உரசல் பின்னும் அவ்வப்போது. மீண்டும் மீண்டும் தலைகாட்டியது தான். இருப்பினும் அவனுடனான நட்பு எனக்கு அந்த ஆரம்ப வருடங்களில், என் வளர்ச்சிக் காலத்தில் கிடைத்தது என் அதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும். அவன் மாத்திரமில்லை. அவன் குடும்பம் முழுதுமே என்னிடம் மிகுந்த பாசம் காட்டியது என்று தான் சொல்ல வேண்டும்.

சற்றுக் கழித்து மிருணால் வந்தான். பக்கத்தில் ஒரு நாற்காலையை இழுத்துப் போட்டுக்கொண்டான்.  ” நான் முதலில் வந்தது ஒன்றும் பெரிய விஷயமும் இல்லை. அதற்கு அவசரமும் இல்லை. எனக்கு இந்த புர்லாவில், இந்த அலுவலகத்தில் அல்டஸ் ஹக்ஸ்லியை, Ape and Essense படிக்கிற, அதுவும் அலுவலக நேரத்தில்,. அலுவலக வேலையைக் கண்டு எரிச்சல் பட்டுக்கொண்டு படிக்கிற ஆளைத் தெரிந்து கொள்ளவேண்டும்” என்று ஆரம்பித்தான். நான் என்ன படிக்கிறேன், எங்கே இருக்கிறேன். என் நண்பர்கள் யார் யார் என்றெல்லாம் கேட்கத் தொடங்கினான். அப்போதைக்கு ஒரு அறிமுகத் தொடக்கமாக, அவனுக்கு நான் அவ்வப்போது சம்பல் பூரிலிருந்து சைக்கிளில் வந்து புத்தகங்கள் கொடுத்துச் செல்லும் பாதி என்பவரையும், அறை நண்பன் சீனிவாசன் பற்றியும் சொன்னேன். மனைவி பள்ளி ஆசிரியை. கணவன் சம்பல்பூரிலிருந்து புர்லாவுக்கு 10 மைல் சைக்கிளில் வந்து  புத்தகம் விற்கிற, நல்ல புத்தகங்களை ஆசிரியர்களை அறிமுகம் செய்து பொழுது கடத்துபவர். ஹைட்ரோ ஸ்டாடிக்ஸ் தெரியாத கண்ட்ராக்டரிடம் வேலை செய்ய மறுக்கும் ஒரு சீனுவாசன், இதெல்லாம் வினோதமாகத் தான் இருக்கிறது. நீ இங்கே அல்டஸ் ஹ்க்ஸ்லி படிக்கிறாய் அலுவலக நேரத்தில். அலுவலக வேலையோடு வந்தால் எரிந்து விழுகிறாய். எல்லாம் விசித்திரமான கூட்டம் தான். ஆனால் இந்தக் கூட்டம் எனக்குப் பிடித்திருக்கிறது” என்றான்.


அத்தியாயம் 72

வெங்கட் சாமிநாதன்அந்நாட்கள் மிகவும் சந்தோஷமாகவே கழிந்தன என்று தான் சொல்ல வேண்டும். சுட்டெரிக்கும் கடும் வெயில், எங்கோ தூரத்தில் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வயிற்றுப் பாட்டுக்காக வாழ்கிறோம் என்பது போன்ற கவலைகள் இருக்கவில்லை. ஏனோ தெரியவில்லை. இப்போது அந்நாட்களைப் பற்றி நினைத்தாலும் சந்தோஷமாகக் கழிந்ததாகவே தோன்றுகிறது. திரும்ப நினைவில் அசை போடுவதிலும் ஒரு சந்தோஷம் இருக்கத் தான் செய்கிறது. அலுவலகத்தில் கழியும் நேரத்தை எவராவது சந்தோஷமாக நினைவு கொள்வார்களா? அதாவது நேர்மையாக உழைத்து கிடைக்கும் அற்ப பணத்தில் வாழ்க்கை நடத்த நிர்ப்பந்திக்கப் படும் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு? இன்றைய தினம் எந்த அரசு அலுவலகமும், எத்தகைய கீழ் நிலை சேவகனுக்கும் அது பொது மக்களை ஒரு பொருட்டாகவே கருதாது அதிகாரம் செய்யவும் மிரட்டி பணம் சம்பாதிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ள இன்றைய தினம் ஒருவேளை அலுவலக நேரங்கள் தரும் பணத்தையும் முரட்டு அதிகார பந்தாக்களையும் நினைத்து சந்தோஷப் படலாம். அரசின் உச்ச நாற்காலியிலிருந்து வாசல் கேட்டில் சேவக உடை தரித்து வரும் கார்களுக்கு சலாம் போடும் கடை நிலை வரை.

அதெல்லாம் ஏதும்  இல்லாமலேயே அது பற்றிய சிந்தனைகளே ஏதும் இல்லாத அந்நாட்களில் அலுவலக நேரம் கூட சந்தோஷமாகவே கழிந்தன. எத்தனை ரக சகாக்கள். எத்தனை தூரத்திலிருந்து எத்தனை மொழி பேசும், சகாக்கள். அவர்கள் எல்லோருடைய பேச்சும் சுபாவமும், சுவாரஸ்யமானவை. அப்போதும் சந்தோஷமாகத்தான் இருந்தது. இப்போது எழுதும் சாக்கில் நினைத்துப் பார்க்கவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. மனோஹர் லால் சோப்ரா என்று ஒரு பஞ்சாபி. இப்போதைய ஹரியானா விலிருந்து ரோஹ்தக் என்ற இடத்திலிருந்து வந்தவன். ரோஹ்தக்கிலிருந்து நேரே புர்லாவுக்கு வந்திருப்பவன். மேல்நிலை குமாஸ்தா. (அப்பர் டிவிஷன் கிளர்க்) காலேஜில் படித்தவன்.ஒல்லியான தேகம் பஞ்சாபிக்குள்ள சிகப்பு நல்ல உயரம். மூக்கு மாத்திரம் இந்திரா காந்தி மூக்கு மாதிரி கொஞ்சம் முன்னால் நீண்டு நுனியில் வளைந்து இருக்கும் கழுகு மாதிரி என்று சொன்னால் அது மிகைப்படுத்தலாக இருக்கும். ஆனால் ரோஹ்தக்கிலிருந்து நேரே புர்லாவுக்கு வந்தவன். எவ்வளவு உருக்கமாக, ஸ்பஷ்டமான உச்சரிப்பில் வங்காளியில் பாட்டுக்கள் பாடுகிறான். என்று எங்களுக்கு ஆச்சரியம். வங்காளிகள் யாரும் அவன் ஒரு  பஞ்சாபி, என்று அவன் பாட்டின் உச்சரிப்பைக் கொண்டு சொல்லி விட முடியாது. அர்த்தம் தெரியாது. ஆனால் ஒரு வங்காளியின் உச்சரிப்பு ஸ்பஷ்டமாக இருக்கும். அதற்கு எங்களோடு வேலை செய்யும் சகா மிருணால் காந்தி சக்கரவர்க்த்தியே சாட்சி.  ”எங்கேடா கற்றுக்கொண்டாய்?” என்று கேட்டால் ஒரு திருட்டுச் சிரிப்பு தான் பதிலாக வரும். அவன் பாடியதெல்லாம் சோக கீதங்கள். ஆனால் சோகத்தைப் பிழியும் பாட்டுக்கள் என்று அவனுக்கு என்ன தெரியும்? அவை கேட்க என்னவோ மிக இனிமையாக இருக்கும். அவையெல்லாம் சோகத்தைச் சொல்வன என்று கேட்டதும் இன்னும் இனிமையாக இருக்கும் கேட்க.

அவன் எனக்கு அவன் பெயரை சரியாக உச்சரிக்கச் சொல்லிக்கொடுத்து  அலுத்துப் போனான். அலுத்துத் தான் போனானா, இல்லை, அப்படி ஒரு நாடகமாடினானா? தெரியாது. கடைசி வரை எனக்கு அது வரவேயில்லை. தப்பாகத் தான் சொல்கிறேன் என்றே சொல்லி வந்தான். ”சோப்ரா” இல்லை, இதோ பார், நாக்கை கொஞ்சம் பாதி மேலன்னத்தோடு சேர்த்து அழுத்தி சொல்லு ”ச்சோப்ரா”  என்று சொல்லிக் கொடுப்பான். நானும் அவன் சொன்ன படியே சொல்வேன். இதோ பார் சோப்ரா சரிதானா? அப்படி இல்லை, ச் ச் சொல்லு ச். நாக்கை மேலன்னத்தோடு ஒட்டி மடக்கிண்டு சொல்லு ச் ச்சொப்ரா”. இந்த தமாஷ் ரொம்ப நேரம் நடக்கும். அவன் என்னை வைத்துக்கொண்டு தமாஷ் பண்ணுகிறான் என்று சுற்றி இருக்கும் எல்லோருக்கும்  தெரியும். எனக்கும் தெரியும். எல்லோரும் சிரிப்போம்..

அவன் கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்தான். கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்தால் வீட்டுக்கு ஒரு இளம் பெண் மனைவியாக வருவாள். வந்தவன் வீட்டில் உள்ளே அவன் மனைவி. வெளியே ஒரு எருமையும் கட்டியிருந்தது. என்னடா இது? என்று கேட்டால், அவன் சிரித்துக் கொண்டே, “இங்கே பாலுக்கு ரொமபவும் கஷ்டப்படுகிறேன் என்று அவராகவே நினைத்துக்கொண்டு ஒரு மாட்டையும் ஒட்டி விட்டு விட்டார் என் மாமனார்” என்றான். அவன் இருக்கும் இடம் கொழுத்த எருமைகளுக்கு பேர் போனது. அன்றிலிருந்து அவன் அலுவலக நேரத்தில் நான் அவன் வரவேற்பதும் முகமன் பரிமாறிக்கொள்வது மாறியது.

கீ ஹால் ஹை பயீ தேரா? (எப்படிடா இருக்கே நல்லாருக்கியா)?

டீக் டாக் ஹூம் யார், படியா சம்ஜோ? ( நல்லா இருக்கேன்  ரொம்ப நல்லா இருக்கேன்னு வச்சுக்க) என்று பதில் சொல்வான்.

அதோடு முகமன் விசாரிப்பது நிற்காது. அடுத்த கேள்வி

“ஓர் தேரா பைன்ஸ் தா ஹால் சுனாவ்? வஹ் பீ டீக் டாக் ஹைனா? ( உன் எருமை? அதுவும் சௌக்கியம் தானே?) 

பதில் ஒவ்வொரு தடவை ஓவ்வொரு மாதிரி இருக்கும். ஒரு சமயம் முறைப்பான். ஒரு சமயம் பதிலுக்குச் சிரிப்பான். இன்னும் சில சமயங்களில் “து கர்லே பயீ மஜாக் கர்லே” (” உனக்கென்ன வேண்டியது கேலி செய்துக்கோ”) என்று பதில் வரும். இன்னும் சில நாட்கள். அவனே எடுத்துக்கொடுப்பான். ”மேரா பைன்ஸ்தா ஹால் க்யோ நஹி பூச்சா? பூல் கயா?) (ஏன் எருமை எப்படி இருக்குன்னு கேட்கலியே,. மறந்துட்டியா?)

கல்யாணத்துக்கு முன் தனிக்கட்டையாக இருந்த போது நடந்தது இது. ஒரு நாள் அவன் தன் கடைசித் தங்கை, பத்துபன்னிரண்டு வயசுத் தங்கை ஊரிலிருந்து வந்திருக்கிறாள் என்று சொன்னான். ரோஹ்தக்கிலிருந்து அவன் அப்பாவுக்கு அவள் இங்கு வந்திருக்கும் செய்தியைச் சொல்லி  கவலைப் பட வேண்டாம் என்று தந்தி அனுப்பிவிட்டு அலுவலகம் வந்திருக்கிறான்.  தனியாக. அவன் சொன்ன கதை நெஞ்சைப் பிழியும். அவன் தங்கைக்கு அவனிடம் பாசம் அதிகம். அவன் இல்லாமல் இருக்க மாட்டாளாம். ஆனால் இங்கே வேலை என்றால் விதி செய்த விளையாட்டுக்கு என்ன செய்ய. அண்ணாவைப் பார்க்கப் போகணும் என்று நச்சரித்துக் கொண்டிருந்தாளாம். ”போகலாம் போகலாம்”, என்று அப்பாவும் அம்மாவும் சொல்லிக்கொண்டே காலத்தைக் கழித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். இதெல்லாம் மனோஹர் லாலுக்குத் தெரியும். அவனுக்கும் இந்த நச்சரிப்பப் பற்றி கடிதங்கள் எழுதியிருக்கிறார் அவன் அப்பா. பின் நடந்தது எல்லாம் அவள் இங்கு வந்து அவளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறான். ”எப்படிடா வந்தாள் இந்த 12 வயது வாண்டு”? என்று கேட்டதற்கு,  ”நீயே கேட்டுத் தெரிந்து கொள், வீட்டுக்கு வா ஞாயிற்றுக் கிழமை” சாப்பிடலாம். அந்த உன் வாண்டு தான்