முனைவர் இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர், நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 105.சங்க இலக்கியத்தின் பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் ஆறாவதாக இடம்பெறும் மதுரைக்காஞ்சி அளவில் பெரியதாகும். பாண்டிய நாட்டுத் தலைநகரான மதுரையின் மாண்பையும், அதனை ஆண்ட தலையானங்கானத்து செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் செம்மாந்த பண்புகளையும் மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியில் பாடுகிறார். காஞ்சித் திணையின் பாடுபொருளான நிலையாமையையும் பாண்டிய மன்னனுக்கு அறிவுறுத்துகிறார். மேலும் பாண்டிய மன்னனின் நிருவாக மேலாண்மைதிறன்  சிறப்பாக / செம்மையாக விளங்கியதை இவர் பாடலில் காணமுடிகிறது. இவற்றை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது. பாண்டிய மன்னராட்சியில் நிலவிய சங்கக் காலத்துச் சமூக நிலை, அரசியல் நிலை, நீதி வழங்கும் நெறி முறைகள்,  அறங்கூறும் அவையம், வணிகநிலை சமய நிலை, தொழிலாளர் நிலை, பெண்களின் நிலை, விழாக்கள், மன்னனின் கொடை போன்ற பல்வேறு நிருவாகத்திறன்களை மதுரைக்காஞ்சி வாயிலாக அறியமுடிகிறது.

சமூகஅமைப்பு:
பழந்தமிழர் சமுதாயத்தில் சாதிப்பிரிவினை இருந்தமைக்குச் சான்றுகள் இல்லை மக்கட்பாகுபாடு, இயற்கையையும் தொழிற்பண்பையும் அடிப்படையாகக் கொண்டே அமைந்தது. நிலஅமைப்புக்கு ஏற்ப மக்கட்பாகுபாடு இருந்தது. இயற்கையோடு இயைந்த இன்ப வாழ்வையே மேற்கொண்டனர்.

நீர்வளமும் நிலவளமும்:
ஒரு நாடு நன்னாடாக விளங்குதற்கு மக்கள் உணவுக் குறையின்றி வாழ்தல் வேண்டும் எள்பதே மன்னரின் தலையாய கடமையாக இருந்தது. எனவே நீர்வளமும் நிலவளமும் பெருக்குதலைத் தமது கடமையாகக் கொண்டனர். இயற்கைப் பகையாகிய பசி ஒழிதல் வேண்டும். உணவுப் பொருளைப் பெருக்குவதற்கு நிலத்தை வளப்படுத்தல் வேண்டும். இத்தகைய வளமை பாண்டிய நாட்டில் நிறைந்து இருந்ததையும் காணமுடிகிறது.

மதுரைநகரில் ஐவகை நிலங்களும் நல்ல வளத்துடன் செழிப்பாக இருந்தன. மருத நிலம் செழிப்புள்ள நிலமாகவும் வளமுள்ள மண் நிறைந்தும் காணப்பட்டதால் விளைச்சல் மிகுதியாகப் பெருகியது. இதன்காரனமாக களை பறிப்பார் ஓசையும், கரும்பாலைகளின் ஓசையும், கழனியில் நெல் அரிபவர் முழங்குகின்ற பறையின் ஓசையும், திருப்பரங்குன்றத்தில் நிகழும் திருவிழாவின் ஓசையும், மகளிரும் ,ஆடவரும் நீராடும் ஓசையும் காற்றில் கலந்து பேரொலியாக ஓலித்துக் கொண்டேயிருந்தன. வயலுக்கு நீர் பாய்ச்சும் போதும் களைப்புத் தெரியமல் மக்கள் பாடி இன்புற்றிருந்தனர். இதனை, 'நீர்த் தெவ்வும் நிரைத் தொழுவர், பாடு சிலம்பும் மிசை' (89-90) என்கிறது.

முல்லை நிலத்தில் திணைக் கதிர்கள் அறுவடை செய்யும் பருவத்தில் வளர்ந்துள்ளன. எள் இளங்காயும் வரகின் கதிரும் முற்றியிருந்தன. மான்கள் பிணைகளோடு துள்ளி விளையாடும். கொன்றை மரத்திலிருந்து உதிர்ந்த மலர்கள் அழகுடன் காட்சி தரும். நன்கு விளைந்த பயிர்களின் மேல் முசுண்டைக் கொடியின் பூவும், முல்லைப் பூவும், நீலம், ஆம்பல் போன்ற நறுமலர்களும் உதிர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கும்.

குறிஞ்சி மலைச்சாரலில் வெண்சிறுகடுகும், ஐவன நெல்லும் வளர்ந்துள்ளன. ,இஞ்சி, மஞ்சள், மிளகு மலைபோல் குவிக்கப்பட்டிருக்கின்றன. திணை விளைந்துள்ள இடங்களில் கிளியை விரட்டும் ஓசையும், குறவன் பன்றியைக் கொல்லும் ஓசையும், அருவி நீரின் ஆர்ப்பரிக்கும் ஓசையும் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன.

பாலையில் சூறாவளிக் காற்று கடலலைப் போல ஓசையுடன் வீசிக் கொண்டிருக்கும். நெய்தல் நிலத்தில் முத்தும், சங்குகளும், உப்பும், மீன்களும் பெருமளவில் கிடைக்கும். கப்பல்களில் ஏற்றுமதி இறக்குமதி வணிகம் இடைவிடாது நடைபெறும். 'கட்கொண்டிக் குடிப்பாக்கத்து' (137) என்பதில் நெய்தல் நில மக்கள் குடியிருப்பு 'பாக்கம்' என்றும் அழைக்கப்பட்டதையும் மதுரைக் காஞ்சியில் எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

நெய்தல் சான்ற வளம் பல பயின்று, ஆங்கு,
ஐம்பால் திணையும் கவினி அமைவர -    (324.325)

இவ்வாறாக ஐவகை நிலமும் தன் வளமை குன்றாது செழிப்புற்று வளங்களை வாரி இறைத்துக் கொண்டிருந்த, பாண்டிய நாட்டில் நிலமேலாண்மை சிறந்து விளங்குவதைக் காணமுடிகிறது. இவ்வுலக வாழ்வுக்கு முதன்மை ஆதாரமாகத் திகழும் நீர்வளத்தைப் பெருக்கி, அதன் ஆரவாரத்தைக் கொண்டாடி மகிழ்வதையே மன்னரும் மக்களும் விரும்பியுள்ளனர்.

நகரமைப்பு:
பாண்டிய நாட்டில் நகர அமைப்பு நீர்வளம் மிகுந்த வையை ஆற்றின் கரைகளில் தொடங்குவதைக் காணமுடிகிறது. வையை ஆற்றின் கரையில் நெடுங்காலமாக அமைந்துள்ள பாணர் குடிகளும், அதனைத் தொடர்ந்து தலைநகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முறையில்  ஆழமான அகழிகளும்,  உயர்ந்த மதில்களும் திண்ணிய நிலைக் கதவுகளும் அழகிய மாடம் கொண்ட வாயில்களோடு கூடிய அரண்களும் அமைந்திருந்தன.

வையை அன்ன வழக்குடை வாயில்.
வுகை பெற எழுந்து பானம் மூழ்கி,
சில் காற்று இசைக்கும் பல் புழை நல் இல்,

யாரு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில் - (356-360)
வையை ஆற்றைப் போன்ற அகன்ற தெருக்களும், தெருக்களின் இருமருங்கிலும் உயர்ந்த இல்லங்களும் அமைந்திருந்தன. ஒவ்வொரு பிரிவினைச் சேர்நத மக்களும், தொழிலின் அடிப்படையில் வாழும் அவர்களின் தெருக்களும் இருந்தன. 

மதுரை மாநகரில் புறஞ்சேரியை அடுத்துப் பாணர் சேரி இருப்பதைக் காண முடிகிறது. பிற மக்களிடமிருந்து பாணர்களை இழிவாகவும் ஒதுக்குப் புறங்களில் வாழ்பவர்களாகவும் மதுரைக்காஞ்சி காட்டுவதில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வருணாசிரம வேறுபாடுகள் இருந்த நிலையையும் அறியமுடிகிறது.

நகரத் தெருக்களில் பலவிதமான கூட்டத்தார் மிகுந்து இருப்பர். நாளங்காடிகளிலும்  அல்லங்காடிகளிலும் விழாவுக்கானக் கொடிகள் பறந்து கொண்டேயிருக்கும். நாளங்காடிகளில் பூ, பூமாலை விற்போரும், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு விற்போரும் மிகுந்து காணப்படுவர். வீட்டுக்குத் தேவையான  பொருட்களை அழகிய முதுமகளிர் விற்றுச் செல்வர். விழா எடுத்த ஏழாம் நாள், நாட்டில் ஆரவாரம் மிகுந்து பேரொலியாக ஒலிக்கும்.

அல்லங்காடி தெருக்களில் அருகில் உள்ள கோவில்களில் அந்திவிழா பூசனைகளுக்கான வாத்தியங்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். பௌத்தப்பள்ளிகளும், சமணப்பள்ளிகளும் அங்கிருந்தன. வேதங்களை ஓதி, உயர்ந்த ஒழுக்கத்தோடு வாழும் அந்தணர்களும் இருந்தனர். சித்திரக் கலையிலும் ஓவியக்கலையிலும் சிறப்புற்றிருந்த கலைஞர்களும் மதுரையில் இருந்தனர்.

பழந்தமிழ் மக்கள் வாழ்வில் சிறப்பாக இடம்பெறுவது ஆடல் பாடல் கொண்ட  கூத்தாகும் ஆண்களும் பெண்களும் ஆடும் குரவை கூத்து ஓசையை மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது(96-97). இசை இவர்கள் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தது. பறை, முழவு, முரசம், ஊதுகொம்பு(வயிர்) போன்ற கருவிகளை முழக்கினர்.

இவ்வாறாக திட்டமிட்ட நகரமேலாண்மை மற்றும் கலைச்சிறப்பு, நாகரிகச்சிறப்பு மதுரை மாநகரத்தில் சிறந்து இருப்பதை மதுரைக் காஞ்சியில் காணமுடிகிறது.

சமயக்கோட்பாடும் வழிபாடும்:
பழந்தமிழரின் சமய வாழ்க்கை ஒரு தனித்துவமிக்க பண்போடு இருந்ததாகத் தெரிகிறது. பிற்காலத்தில் ஆரியர் சமயக் கொள்கைகளும் வழிபாட்டு முறைகளும் அவர்களது சமய வாழ்வில் தாக்கம் பெற்றன, எனினும் பல காலமாகத் தமிழர் சமயம் தனக்குரிய சிறப்பியல்புகளைத் தக்க வைத்துக் கொண்டதை இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. தமிழருடைய வழிபாட்டிலே வெறியாட்டு முதலிய மக்களை மகிழ்விக்கும் ஆட்டங்கள் முக்கிய நிகழ்வாக இடம்பெற்றன.
முருக வழிபாடு நிகழும் இடங்களில் இத்தகைய கூத்துகள் வருணிக்கப்படுகின்றன.

'அருங் கடி வேலன் முருகொடு வளைஇ,
அரிக் கூடு இன் இயம் கறங்க, நேர் நிறுத்து,
கார் மலர்க் குறிஞ்சி சூடி, கடம்பின்
சீர் மிகு நெடு வேட் பேணி, தழூஉப் பிணையூஉ,
மன்றுதொறும் நின்ற குரவை' – (611- 615)

இக்குரவை ஆட்டத்தில் பூசாரிகள் இல்லை. கையில் வேலை வைத்துக்கொண்டு கூத்தாடுவதானால் வேலன் எனப் பெயரிடப்பெற்ற ஒருவன் முருகனை வாழ்த்தி அழைப்பான். மக்களுக்கு நேரும் துன்பம் யாவற்றிற்கும் முருகனே காவலனாக உள்ளவன் எனவே அவனை வழிபட்டு வேண்டுவான் வேலன் என்பதை மதுரைக் காஞ்சி தெரிவிக்கின்றது.

ஐம்பூத வழிபாடு:

சிவன்:
சிவன் நிலத்திற்குரிய கடவுளாகப் போற்றப்படவில்லை எனினும் சிந்துசமவெளி நாகரித்தில் பசுபதி, தவயோகி என்ற பெயரில் சிவன் குறிக்கப்படுகிறார். மதுரைக் காஞ்சியிலும் ஐம்பூதங்களைப் படைத்தவன் என்றும், மழுவினை உடையவன் என்றும் குறிப்பிடப்படுகின்றார்.

'நீரும் நிலனும் தீயும் வளியும்
மாசு விசும்போடு ஐந்து உடன் இயற்றிய
மழு வாள் நெடியோன் தலைவன் ஆக,'  -  (453 - 455)

திருமால்:
திருமால் என்ற தெய்வ வழிபாடு, மாநிலத்தின் காவல் காக்கும் காவலனாக விளங்குகிறான் என்கிறது மதுரைக்காஞ்சி. ஆண்கள் தம் மனைவி மக்களுடன் சேர்ந்து நின்று மலரும் தூபமும் கொண்டு அவனை வணங்குவர். காக்கும் கடவுளான திருமால் அவுணர் கூட்டத்தை வென்றவன். அவன் பிறந்த ஒணமாகிய நன்னாளில் ஊரில் உள்ளோர் விழா எடுத்து  மகிழ்வர். திருமகளும் காவல் தெய்வமாகக் கருதப்பட்டாள்.

'தொல் வலி நிலை இய, அணங்குடை நெடு நிலை,
நெய் படக் கரிந்த திண் போர்க் கதவின்,' -  (353-354)

வீட்டு வாயில் நிலைகளில் திருமகளின் உருவம் தீட்டப்பட்டிருக்கும், மதிற் கதவுகளிலும் திருமகள் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.

சங்க காலத்திற்கு பிறகு ஆரியர்களின் வழிபாட்டு முறையான யாகங்கள், மந்திரங்கள் முதலியவை தமிழர் சமய வாழ்வில் புகுந்தன.

வணிகநிலை:
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உழவும், வணிகமுமே தலைசிறந்த தொழில் வளமாகக் கருதப்படுகிறது. இவ்விரு தொழில்களும் ஒருங்கு செழித்திருந்தால் இந்நாட்டின் நாகரிகம் மேம்பாடு அடையும் என்பது கண்கூடு. சங்க காலத்தில் இவ்விரு தொழிலையும் குறைவறப் பெற்றிருந்தது. 

'வியன்மேவன் விழுச்செல்வத்து
இருவகையா னிசைசான்ற
சிறுகுடிப் பெருந்தொழுவர்
குடிகெழீ இய நானிலவரொடு' (120-123)

என வரும் அடிகளால் தமிழகம் இவ்விரு தொழில்களாலும் பெற்றிருந்த செல்வாக்கு புலப்படும்.

பிறநாட்டு வணிகம்:
புழந்தமிழர் கடல் கடந்து வணிகம் செய்வதிலும் மேன்மையுற்றிருந்தனர் குறிப்பாக உரோமானியரும் பிறநாடுகளில் உள்ளோரும் தமிழ்நாட்டில் சிறந்திருந்த முத்து, சங்கு, மிளகு,நறுமணப்பொருட்கள் போன்றவற்றைப் பொன் கொடுத்துப் பெற்றுச் சென்றனர். இதனை,

பொன்தலிந்த விழுப்பண்டம்
நாடார நன்கிழிதரும்
ஆடியற் பெருநாவாய்  (81-83)

துறைமுகங்களில் மேலைநாட்டுக் குதிரைகளும் வடநாட்டுப் பொருள்களும் மரக்கலங்களிலும் பெரும் நாவாய்களிலும் வந்து இறங்கின. ஆடை, அணிகளை விற்பனைக்காக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லும் வணிகர்களைப் பற்றி மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது. மேலும் வணிகர் நடுநிலையோடும் உண்மையோடும் அறம் தவறாது ஈடுபட்டனர். 'அறநெறி பிழையா தாற்றின் ஒழுக' என்பதன் மூலம் வணிகம் இவ்வளவு நேர்மையான முறையில் நடைபெற்றதை அறியும் போது தமிழ்நாட்டின் பெருமையை உணர்ந்து கொள்ள முடிகிறது.

நிதிநிலை:
வணிகத்திலிருந்து அரசனுக்கு மிகுதியான வரிகள் கிடைத்திருக்கக் கூடும். உள்நாட்டு, வெளிநாட்டு வணிகர்களிடமிருந்து அரசுக்குத் தேவையான நிதியைப் பெற்றுள்ளனர். இறைபெறு நெறி அறிந்து, அறநெறி பிறழாது ஆட்சியை நிருவகித்துள்ளனர்.

பெண்கள் நிலை:
சங்க காலத்தில் பெண்கள் நிலை மிகவும் சிறப்புற்றிருந்தது என்பதை அறியமுடிகிறது. பெண்கள் சமூக விழாக்களிலே மிகச் சுதந்திரமாகக் கலந்துகொண்டு இன்புற்றிருந்தனர். இன்பமான வாழ்க்கை மேற்கொண்டனர்.
'கைஇ மெல்லிதின் ஒதுங்கி, கைஎறிந்து,
கலடலா மாந்தரொடு நகுவனர் திளைப்ப'  (419-420)

கல்லா மாந்தரோடு கைகோத்து விளையாடுவர். தூம் விரும்பிய ஆடவரோடும் நீர் விளையாட்டு விளையாடுவர்.  மகளிர் வைகறையில் துயில் நீங்கி எழுந்து வீட்டு முற்றத்தை கூட்டுவர் பின்னர் இல்லற வேலைகளை விரும்பிச் செய்தனர். பெண்கள் நீராடிய பின்பு தன் நீண்ட நெடுங்கூந்தலுக்கு அகில், சந்தனம் போன்ற நறும்புகை இடுவர்.(446) மலர் சூட்டிக் கொள்வர். பொன், வெள்ளி, மணி, பவளம், சங்கு, முத்து  போன்ற சித்திர வேலைபாடு மிக்க அணிகளை அணிந்தனர் (443-446). சங்கக் காலத்திற்குப் பின்னர் அவர்கள் நிலை குறையத் தொடங்கியது.

அரசியல் அமைப்பு:
அரசருக்கு அறிவுரைகள் கூறும் அவையங்கள் பல அக் காலத்தில் இருந்தன. ஒவ்வொரு குழுவினரும் ஒவ்வொரு கடமை உடையவராக இருப்பர். நாட்டில் அமைதியும் அறமும் நிலவுவதற்குச் செய்ய வேண்டியவற்றை இக் குழுவுடன் இணைந்து கலந்து கூடியே அரசர் முடிவு செய்வார். அக் குழுவின் அறிவுரையைக் கேட்ட பின்பே தீர்ப்பை வழங்குவார். பாண்டிய மன்னன் அவையிலும்,

'அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி,
செற்றமும் உவகையும் செய்யாது காத்து,
ஞெமன் கோல் அன்ன செமைத்து ஆகி,
சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும்' (486-490)

நீதி வழங்குவதற்கு  பொது மன்றங்களும் அறம் கூறும் அவையமும், அறிவுரைகள் சொல்ல வல்ல அறிஞரைக் கொண்ட நாற்பெருங்குழுக்களும் இருந்தன.

ஊர்அவைகள்:
ஊரில் நடைபெறும் சிக்கல்களை ஆராய்ந்து நீக்கி விடுதவதே இவற்றின் முக்கியமான கடமையாகும். ஊரில் உள்ள பெரியோர்கள் ஒன்றாகக் கூடி ஊருக்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இவர்களைக் கொண்ட அவை பொதியில் அல்லது மன்றம் எனப்பட்டது. 'மன்றுதொறு நின்ற குரவை' (615) என்பதில் இந்த மன்றிலே கிராம நடனங்கள் நடைபெறுவதும் உண்டு. இத்தகைய அறங்கூறும் பொதியில் ஊரின் நடுவிலே அமைந்திருந்தன. 'அவையிருந்த பெரும் பொதியில்' (161) என்று மதுரைக் காஞ்சி சிறப்பிக்கிறது.

நகர்க் காவலும் ஊர்க்காவலும்:

தன்மக்களைப் பலவகைத் தீங்குகளினின்று காப்பது அரசரது கடமையாகும். கள்ளர், கொள்ளைக்காரர் முதலியோரிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசரையேச் சாரும். எனவே நகரையும் ஊரையும் காவல் செய்வதற்குக் காவற்படைகளையும் அமைத்துள்ளார். 'இரும்பிடி மேஎந்தோ லன்ன விருள்சேர்பு' (634) காவலர்கள் இலகுவாக கள்வரைப் பிடிப்பர். புலி போன்ற வலிரை பொருந்தியவர். துயில்கொள்ளாத கண்ணை உடையவர். மழை மிகப் பெய்த நள்ளிரவிலும் கடமை பிழையாது உலாவித் திரிபவர் என்று நகரத்துக் காவலைக் குறிப்பிடுகிறது.

நால்வகைப்படைகள்
யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை என நால்வகைப் படைகளைக் கொண்டிருந்தாலும் பாண்டியன் கொற்றமெல்லாம் அறத்தையே அடிப்படையாகக் கொண்டது. இவ்வுலகத்தில் உள்ளாரும் வானுலகத்தில் உள்ளாரும் பகைவராக வந்தாலும் அவர்களுக்கு அஞ்சி நடக்காமல், பழிச்சொல் வராமல்ஃதடுக்க  பொருளைக் கொடுத்து புகழைப் பெற்றவன். இதனால் பகைமன்னர்களும் இவன் ஏவலைக் கேட்டு நடந்தனர்.

புலவரும் போரும்:
அரசருக்கு வீர உணர்ச்சியைத் தூண்டிப் போர் செய்யத் தூண்டும் புலவர்களும், போரினால் நேரும் அழிவுகளை எடுத்துரைத்து பகையின் காரணமாக இருவேந்தர்களுக்குள் ஏற்பட்டுள்ள வேற்றுமைகளை விலக்கி ஒற்றுமைப்படுத்தி போரைத் தடுக்கும் செயலிலும் புலவர்கள் ஈடுபட்டனர்.

'வாழா மையின் வழிதவக் கெட்டுப்
பாழா யின நின் பகைவர் தேஎம்'  (175-176)

என்ற இவ்வரிகள் வழியே பாண்டிய மன்னனின் வீரச்செயலை மாங்குடி மருதனார் போற்றிப் பாடியுள்ளார்.

கொடைச்சிறப்பு:
பாண்டிய மன்னன் விழாக் காலங்களில் ஊர்களில் உள்ள கலைஞர்களுக்கு யானைகள் கொடுத்தும், பொற்றாமரைப் பூவைச் சூட்டிய அணிகலன்களையும் வழங்கி மகிழ்வான். விறலியருக்கு பொன் தொடிகளையும், பாணருக்குக் களிறுகளையும், பாடுபவருக்குத் தேரோடு, குதிரைகளையும் பரிசளிப்பான். படைவீரர்களுடன் வீரபானம் அருந்தி மகிழ்வான். தன் நாட்டில் வாழும் கலைஞர்களை ஊக்குவித்து கலைகளை வளர்ப்பதையும் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டடுள்ளனர்.

தொகுப்புரை:
மதுரைக் காஞ்சி, பாண்டிய மன்னனின் நிருவாகத் திறன் மற்றும் மேலாண்மைத் திறன் எத்துணை மேன்மையுற்றிருந்து என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறது. சங்க கால அரசர், அறநெறி பிறழாது மக்கள் நெறி போற்றினர். பழந்தமிழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான நீராதாரம், உழவுத்தொழில் இரண்டிற்கும் முதன்மை அளிக்கப் பெற்றன. பெண்கள் சுதந்திரம் காக்கப்படுகிறது. இன்று தமிழகத்தின் நீராதாரமான காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற நீர் நிலைகளில் தமிழருக்கு உரிமை மறுக்கப்படுகிறது. இதனால் உழவுத் தொழில் பாதிக்கப்படுகிறது, விவசாயிகள் நீரின்றி, பயிர்த்தொழிலின்றி, வாழ்வாதாரமின்றி மடிந்து போகின்றனர். இத்தகைய சூழலில் சங்க இலக்கியங்கள் தமிழர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வின் ஒழுங்கமைவை கூறுகின்றன. இயற்கை அழிக்கப்பட்டுவரும் இந்நாளில் பழந்தமிழிலக்கியங்கள் தமிழர்களின்  எதிர்கால வாழ்வுக்கு ஓர் ஊன்றுகோலாக அமையும் என்பதற்கு மதுரைக் காஞ்சி சான்றாகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர் -  முனைவர் இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர், நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 105.