அஞ்சலி: பண்டிதர் ம. செ. அலெக்ஸாந்தர்தமிழ் சிறுவர்களுக்காக ஒரு ஒளிநாடா ஒன்று தயாரிக்க வேண்டும் என்ற எனது விருப்பதத்தை அதிபர் பொ. கனகசபாபதி அவர்களிடம் 1990 களின் நடுப்பகுதில் தெரிவித்த போது அவர் அது நல்ல முயற்சி என்று வரவேற்றார். காரணம் தமிழ் கற்பதற்கான போதிய வசதிகள் அப்போது கனடாவில் இருக்கவில்லை. அதற்காக  சில சிறுவர்பாடல்களை நானே எழுதியிருந்தேன், ஆனாலும் மற்றவர்களும் பங்கு பற்ற வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்த போது அவர் இருவரின் பெயர்களைக் குறிப்பிட்டார். அவர்களில் ஒருவர் கவிஞர் வி. கந்தவம் அவர்கள் மற்றவர் பண்டிதர் ம.சே. அலெக்ஸாந்தர் அவர்கள். அதனால்தான் அலெக்ஸாந்தர் மாஸ்டரின் வீட்டிற்குச் சென்று அவரிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் பாடல் எழுதித் தருவதாக சம்மதம் தந்தார். தமிழ் ஆரம் என்ற அந்த ஒளித்தட்டில் இடம் பெற்று, இன்று பலரையும் கவர்ந்த ‘ஆடுவோம், பாடுவோம் சின்னஞ்சிறு பாலர் நாம்’ என்ற சிறுவர் பாடல் அவர் தந்த வரிகளை வைத்துத்தான் உருவானது. முல்லையூர் பாஸ்கியின் இசையமைப்பில் நேரு அவர்கள் ஒளியமைப்பு செய்திருந்தார்.  அலெக்ஸாந்தர் மாஸ்டரின் அறிவையும், ஆற்றலையம் புரிந்து கொள்ள எனக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்ததால், அவரது விருப்பத்தோடு அதைப் பயன்படுத்திக் கொண்டேன்.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் அங்கத்தவரான அலெக்ஸாந்தர் மாஸ்டர் அவர்களை அடிக்கடி அதிபரின் வீட்டில் சந்தித்து உரையாடுவேன். மிகவும் அன்பாகவும், மரியாதையோடும் பழகக் கூடிய ஒருவர். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக நான்  இருந்த போது மரபுக்கவிதையை இந்த மண்ணில் நிலைத்து நிற்கச் செய்ய வேண்டும் என்ற விருப்பம் காரணமாக அவரிடம் உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் அந்த ஒரு தயக்கமும் இல்லாமல் அதை ஏற்றுக் கொண்டார். எனவே கவிஞர் கந்தவனம், பண்டிதர் ம.சே. அலெக்ஸாந்தர் ஆகியோரின் உதவியோடு மரபுக்கவிதைப் பட்டறை ஒன்றை எழுத்தாளர் இணையத்தின் சார்பில் ஆரம்பித்தோம். கரு கந்தையா அவர்கள் பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காக இடத்தை ஒதுக்கித் தந்திருந்தார். அப்போது கனடாவில் இருந்த அனேகமான கவிஞர்கள் புதுக்கவிதை எழுதுவதிலேயே ஈடுபாடு கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் மரபுக்கவிதை கற்பதில் ஆர்வமாக இருந்ததால் சுமார் பதினைந்து கவிஞர்கள் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டனர். விரிவுரையாளர்களாக கவிஞர் கந்தவனம் அவர்களும், ம.சே. அலெக்ஸாந்தர் அவர்களும் விருப்போடு செயலாற்றினார்கள். எடுத்துக் கொண்ட பொறுப்பைத் திறம்பட செய்து பல மரபுக்கவிதைக் கவிஞர்களை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. இன்று 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கவிஞர் கழகத்தில் இருக்கும் பல கவிஞர்கள் அன்று அவரிடம் கவிதை கற்றவர்கள் என்பதை எண்ணி இன்றும் பெருமைப்பட முடிகின்றது. ஒக்ரோபர் மாதம் 2004 ஆம் ஆண்டு ஆரம்பித்த மரபுக்கவிதைப் பயிற்சிப்பட்டறை மார்ச் மாதம் 2005 ஆம் ஆண்டுவரை நடைபெற்று பயிற்சி முடித்தவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்பொழுது தலைவராக இருந்த சின்னையா சிவநேசன் அவர்களும் செயலாளராக இருந்த நானும் அதில் கையொப்பம் இட்டிருந்தோம். அமரர் க.பொ.செல்லையா மாஸ்டரும் அந்தப் பட்டறையில் கலந்து கொண்டு எங்களைக் கௌரவித்திருந்தார்.

அமரர் அலெக்ஸாந்தர் அவர்கள் என்றும் பேராசைப் பட்டதில்லை. அவர்களின் காதல் திருமணத்தின் போது ஏற்பட்ட தடங்கல்கள் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து வாழ்ந்து காட்டியது மட்டுமல்ல பேரப்பிள்ளைகளோடும் கொஞ்சி விளையாடியவர். தனது கொள்கைகளை விட்டு விலகாது இறுதிவரை கடைப்பிடித்தவர். சில சமயங்களில் விழாக்கள் முடிந்தபின் அவரை அவரது வீட்டிலே கொண்டு போய் விடுவதுண்டு. அவருக்குக் கொடுக்கும் சிற்றுண்டியைக் கவனமா வீட்டிற்குக் கொண்டு வந்து காதல் மனைவிக்குக் கொடுப்பதை சில தடவைகள் அவதானித்திருக்கிறேன். அவருக்கு விழா எடுக்க முற்பட்ட போது அவர் சொன்ன முதல் விடயம் யாரும் அன்பளிப்புக் கொண்டு வரக்கூடாது என்பதுதான். அது போல பாசத்துடன் சிலர் கொண்டு வந்து கொடுத்ததையும் வாங்க மறுத்து விட்டார். கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் எனது 25 வருடகால கனடிய இலக்கிய சேவையைப் பாரட்டி விழா எடுத்து மலர் வெளியிட்போது ‘தமிழ் தந்த குரு அரவிந்தன்’ என்ற தலைப்பில் மரபுக் கவிதை ஒன்று எழுதி என்னைக் கௌரவித்திருந்தார். சிறுவர் இலக்கியம் பற்றி உரையாற்றும் போது ‘தமிழ் ஆரம்’ பற்றிக் குறிப்பிட அவர் மறப்பதில்லை. நல்ல நட்புடன் பழகிய அதிபர் பொ. கனகசபாபதியின் பிரிவு அவரைப் பெரிதும் பாதித்திருந்தது. ‘அவரை விட்டிட்டு என்னை எடுத்திருக்கலாமே’ என்று ஒரு முறை அவர் என்னிடம் குறிப்பிட்ட போது அவர்களின் உண்மையான நட்பைப் புரிந்து கொண்டேன்.

ம.சே.அலெக்சாந்தர் அவர்களின் இழப்பு கனடிய தமிழ் இலக்கிய, இலக்கண உலகத்திற்குப் பெரும் இழப்பாகும். இன்று அக்ரோபர் 19 ஆம் திகதி அவரது பிறந்த நாள். தனது 83வது வயதில் அவர் எம்மைவிட்டுப் பிரிந்தாலும் அவரது நினைவுகள் என்றும் கனடிய மண்ணில் நிலைத்து நிற்கும். அவரை இழந்து துயரத்தில் தவிக்கும் அவரது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. அவரது ஆத்மா சாந்தியடைய அவருடைய குடும்பத்தினருடன் இணைந்து நாமும் பிரார்த்திப்போம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.