அஞ்சலி: மூத்த இலக்கியவாதி ஏ.இக்பால் மறைவு!- எழுத்தாளர் மேமன்கவி அவர்கள் எழுத்தாளர் ஏ.இக்பாலின் மறைவு பற்றி முகநூலில் அறியத்தந்திருந்தார். அவரது செய்தியினைப் பகிர்ந்துகொள்வதுடன் எமது ஆழ்ந்த அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றோம். - பதிவுகள் -

இக்பால், ஏ. (1938.02.11) அம்பாறை, அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும் களுத்துறை, தர்காநகரை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர். இவர் அக்கரைப்பற்று றோமன் கத்தோலிக்க மிஷன் பாடசாலையில் கல்வி கற்றார். ஆசிரியராகக் கல்விச் சேவையை ஆரம்பித்த இவர், தமிழ்ப் பாடநூல் ஆலோசனை சபை உறுப்பினராகவும், இஸ்லாமிய பாடநூல் எழுத்தாளராகவும், ஆசிரிய கலாசாலையில் வருகைதரு விரிவுரையாளராகவும், கல்வியியற் கல்லூரியில் தமிழ்ப் போதனாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் மட்டக்களப்புத் தெற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயலாளராகவும், முஸ்லிம் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும், தர்க்காநகர் பதிப்பு வட்ட பதிப்பு உதவியாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

 

லப்கி, அபூஜாவித், கீர்த்தி, கலா போன்ற புனைபெயர்களைக் கொண்ட இவர், இலங்கைத் தேசிய பத்திரிகைகளிலும், முக்கியமான சஞ்சிகைகளிலும் மாத்திரமின்றி எக்ஸில், முஸ்லிம் முரசு, பிறை, நடை, தீபம் முதலிய பிற நாட்டுச் சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. இவர் முஸ்லிம் கலைச்சுடர் மணிகள், மௌலானா ரூமியின் சிந்தனைகள், மறுமலர்ச்சித் தந்தை, பண்புயர் மனிதன் பாக்கீர் மாக்கார், கல்வி ஊற்றுக் கண்களில் ஒன்று, நம்ப முடியாத உண்மைகள், பிரசுரம் பெறாத கவிதைகள், ஏ. இக்பால் கவிதைகள் நூறு, இலக்கிய ஊற்று (13 கட்டுரைகளின் ஊற்று), மாயத் தோற்றம், வித்து, மெய்ம்மை, புதுமை முதலான நூல்களையும் கல்வி, இலக்கியம், மொழி, வரலாறு தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார். 2002 இல் தமிழ் நாட்டில் இடம்பெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு நாட்டாரியல் தொடர்பான ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்துள்ளார். இலக்கியத் துறைக்கும் அப்பால் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை வானொலி தமிழ் - முஸ்லிம் சேவைகளில் பங்களிப்பு செய்து வந்துள்ளார்.

இவர் 'மறுமலர்ச்சித் தந்தை' என்ற நூலுக்காக சாகித்திய மண்டலப் பரிசு பெற்றுள்ளார். இலக்கிய உலகில் இவரது ஆளுமையையும், இவர் ஆற்றிய சேவையையும் பாராட்டி கவிஞர், இலக்கியமணி, கலாபூசணம், இலக்கிய வாரிதி, இலக்கிய விற்பன்னர், தமிழ் மாமணி முதலான பட்டங்களை அரசு, தகுதிசார் தனியார் நிறுவனங்கள் வழங்கிக் கெளரவித்துள்ளன."