- முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ), கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா -அகவாழ்க்கையைப் பெண்டிர் அடுக்களைகளிலே பெரிதும் கழிக்கின்றனர். அங்கு அவர்கள் அடையும் இன்னல்கள் அளப்பறியன. அவ்வின்னல்களைப் பொருட்படுத்தாது உணவு ஏற்பாடு செய்து தம் கணவரின் பசியைப் போக்கும் மாண்புடையவர்களாகவே விளங்குகின்றனர். அதனைத் தமிழில் குறுந்தொகையும் பிராகிருதத்தில் காதா சப்த சதியும் அறைகூவுகின்றன. இவ்விரு நூல்களில் குறுந்தொகையின் நூற்று அறுபத்தேழாம் பாடலும் காதா சப்த சதியின் பன்னிரண்டாம் பாடலும் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலைகளைக் குறிப்பிடுகின்றன. இங்கு அவ்விரு பாடல்களின் ஒத்த சிந்தனைகளையும் வேறுபட்ட சிந்தனைகளையும் இனங்காணப்படுகின்றன.

பொதுவாகப் பெண்டிர் மணவாழ்க்கையை ஏற்ற பின்பு கல்வி கற்றிருந்தாலும் கற்காவிட்டாலும் அடுக்களையில்தான் தம் வாழ்நாட்களைப் போக்குகின்றனர். இப்போக்கைப் பொருளாதாரத்தில் இடைநிலையாகவும் கீழ்நிலையாகவும் உள்ளோரிடத்துக் காணலாம். உயர்குடியில் பிறந்த பெண்டிர் பெரிதும் அடுக்களைப் பக்கம் செல்வது என்பது அரிது. அதற்காக அவர்கள் ஏவலர்களையும் வைத்துள்ளனர். இது இரு வீட்டாரின் இசைவால் நிகழ்ந்த திருமண வாழ்விற்கு ஒத்தது. ஆனால் இரு வீட்டாரின் இசைவில்லாமல் நிகழும் களவு மணப்பெண்டிருக்கு அடுக்களைதான் வாழ்க்கை. அதனையே அகவிலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. அதனைக் குறுந்தொகைப் பாடல் (167) குறிப்பிடுகின்றது.

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழா துடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தாம்துழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே   – கூடலூர் கிழார்

இப்பாடல் உயர்குடியில் பிறந்தபெண் ஒருவள் தன் காதல்கேள்வனுக்கு உணவு சமைக்கும் திறனை வெளிப்படுத்துவதாக மறைமலையடிகள் குறிப்பிடும் கருத்து சுட்டுகின்றது.

தன் கணவன் மேலுள்ள காதன் மிகுதியினால் ஏவலரும் பிறருஞ் சமையல் செய்வதற்கு ஒருப்படாது தானே தன் மெல்லிய சிவந்த விரல்களால் தயிரைப் பிசைதலும், கணவன் பசித்திருப்பானே என்னும் நினைவால் விரைந்து சமையல் செய்யும்போது இடுப்பிற்கட்டிய உயர்ந்த ஆடை கழலவும் பிசைந்த கையினைக் கழுவி விட்டு உடுப்பதற்கும் காலம் நீண்டு அப்புளிப்பாகின் பதங் கெடுமென உணர்ந்து அக் கையுடனேயே அவ்வுயர்ந்த ஆடையினைக் கட்டிக் கொள்ளுதலும், அங்ஙனம் பிசைந்து திருத்திய புளிப்பாகினைத் தாளிக்கும் போதுமேல் எழும் புகை தன் குவளைப்பூவன்ன கண்ணிற்படவும் அப்புறந்திரும்பினால் அது பதங் கெடுமே என்று முகந்திரும்பாமல் அதனின் விரைந்து துழாவலும் அங்ஙனமெல்லாந் தன் வருத்தத்தினையும் பாராது சமைத்த சுவைமிக்க அப்புளிப்பாகினைக் கணவன் மகிழ்ந்துண்ணல் கண்டு தன் மகிழ்ச்சி வெளியே தெரியாமல் அவள் முகம் மலர்ந்து காட்டுதலும், இயற்கையே தனக்குள்ள நாணத்தால் அவள் முகஞ் சிறிது கவிழ்ந்து நிற்க அவளது ஒளிமிக்க நெற்றியே அம்மகிழ்ச்சிக் குறிப்புப் புலனாக முன்விளங்கித் தோன்றுதலுஞ் சில சொல்லில் மிக விளங்கக்கூறிய நுண்மை பெரிதும் வியக்கற்பால தொன்றாம் (முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை, 2007:36 – 37).

இங்ஙனமாகத் சங்ககாலத் தலைவி (தமிழ்) தன் காதல் கேள்வனுக்கு உணவு சமைத்து இன்புற்றாள். சங்க இலக்கியத்திற்கு இணையாகக் கருதப்பெறும் பிராகிருதப் பேரிலக்கியம் காதா சப்த சதி (1981:முன்னுரை). இந்நூலும் மக்களின் (அந்நூல் எழுதப்பட்ட காலத்தில் வாழ்ந்த) அக உணர்வுகளை அழகுற விளக்குகின்றது. அதிலும் மணவாழ்க்கையை ஏற்றுக் கொண்ட பெண்டிரின் வாழ்வைச் சுட்டும் பாடல்கள் மிகுதியாக உள. இவற்றுள் அப்பெண்டிர்  அடுக்களை உணவு சமைக்கும் நிகழ்வுகளைச் சுட்டும் பாடல்களும் உள. அப்பாடல்களுள் மு. கு. ஜகந்நாதராஜா மொழியாக்கத்தில் இடம்பெறும் பன்னிரண்டாம் பாடல் தன் கணவனுக்கு உணவு சமைக்கும் பாங்கை விளக்குகின்றது. அவள் சமைக்கும் காலத்து கை சுவற்றில் படுகின்றது. அச்சுவற்றில் படிந்திருந்த புகைப்படலத்தின் கருநிறம் அவளின் கையில் ஒட்டுகின்றது. உணவு சமைக்கும் நோக்கத்திலிருந்த அவள் தன் கையில் புகைப்படலம் ஒட்டியிருந்தமையை மறந்து முகத்தில் வழிந்தோடும் வியர்வையைத் துடைக்க, அப்புகைப்படல அச்சு முகத்தில் ஒட்டி விடுகின்றது. அதனை அறியாது அடுக்களையை விட்டு கணவனிருக்கும் இடத்திற்கு வருகின்றாள். அவள் கணவன் அதனைக் கண்ணுற்று, அவள் முகத்திலிருக்கும் புகைப்படல அச்சினை நிலவிலிருக்கும் கருநிற மருவிற்கு ஒப்பிட்டுப் பாராட்டுகின்றான் எனும் கருத்தைக் குறிப்பிடுகின்றது.

 அடுக்களைப் பணியாள் அழுக்கடைந் திட்ட
னபடி கையால் தைவந் திடலால்
மடந்தை முகந்தான் மறுவமர் மதியெனக்
கிடந்தது கண்டே கேள்வன் மகிழ்ந்தான்   – காலன்

இப்பாடல் கருத்துடன் மேற்சுட்டிய குறுந்தொகைப் பாடல் கருத்தை ஒப்பு வைத்து நோக்கினால் பின்வரும் கருத்துக்களை ஊகித்தறியலாம்.

 * சூழல் மாறுபடுதல். அதாவது, சங்ககாலத் தலைவி (தமிழ்) முளிதயிர் பிசைந்து புளிப்பாகிட்டுத் தயிர்க்குழம்பு சமைக்கின்றாள் என்பதால் முல்லைநிலச் சூழலையும், பிராகிருதத் தலைவி உணவு சமைக்கும் பொழுது அங்குள்ள சுவற்றில் தன் கைப்பட, அச்சுவற்றில் இருக்கும் கருநிற மை ஒட்டிக் கொள்கின்றது என்பதால் ஏழ்மையான சூழலையும் காட்டுவதேயாம்.

  * பாராட்டுந் தன்மை நிலவுதல். தலைவியானவள் தான் துன்பப்பட்டாலும் கணவனுக்கு நல்லுணவு படைக்க வேண்டும் எனும் நோக்கத்தைத் தலைவன் பாராட்டுவதேயாம்.

  * அங்ஙனம் பாராட்டுதலில் சிறுவேறுபாடு உண்டு. அஃதியாங்கெனின் சங்ககாலத் தலைவன் (தமிழ்) முதிர்ந்த தயிரைப் பிசைந்த கைகளையும், குய்ப்புகை பட்ட கண்களையும் பாராட்ட, பிராகிருதத் தலைவன் அடுக்களையின் சுவற்றுக் கருநிற மை பட்ட முகத்தைப் பாராட்டுவதேயாம்.

  * தமிழில் தலைவியும் பிராகிருதத்தில் தலைவனும் மகிழ்வதாக அவ்விரு பாடல்களும் அமைந்துள்ளன.

* தமிழ்ப் பாடல் செவிலி கூற்றாகவும், பிராகிருதப் பாடல் தோழி கூற்றாகவும் இடம்பெற்றுள்ளன.

  * பிற அஃறிணைப் பொருளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுதல். சங்ககாலத் தலைவியின் (தமிழ்) கைகளும் கண்களும் முறையே காந்தள், குவளை மலர்களுக்கும், பிராகிருதத் தலைவியின் முகம் நிலவுக்கும் ஒப்புமைப்படுத்திப் பார்க்கப்பட்டதேயாம்.

  * இருமொழிப் புலவர்களும் ஆடவராயிருத்தலிலும், அவர்கள் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலைகளைச் சுட்டுவதிலும் ஒருமித்து நிற்றல்.

  * தமிழ்ப் பாடல் களவு மணம் செய்தோரின் வாழ்க்கைமுறையைக் குறிப்பிட, பிராகிருதம் பொதுவாக மணம் செய்தோரின் வாழ்வைச் சுட்டுகின்றது.

  * காதல் தந்த ஆற்றல். ஒன்று: துன்பத்தை ஏற்கும் தன்மை. மற்றொன்று: பொதுநலம் காட்டுதலும் ஆற்றுப்படுத்தலும். முன்னது, தலைவிக்கும் பின்னது, தலைவனுக்கும் அமைந்துகிடப்பதைக் குறுந்தொகைப் பாடல் காட்டுகின்றது.

  * பெண்டிருக்கான தொழில் சமையல் செய்வது என்பது இருமொழிப் புலவர்களிடத்தும் நிலவுதல்.

இங்ஙனம் ஒத்த சிந்தனைகளை இருமொழிக் கவிஞர்களும் பெற்றிருந்தாலும் சிற்சில வேறுபாடுகள் நிலவத்தான் செய்கின்றன என்பதை ஆய்வு முடிவுகள் மூலம் அறியமுடிகின்றது. ஆக, இம்முடிபுகள் பல்வித கருத்தியல்களை முன்வைத்தாலும், அவ்விரு மொழிகளின் பாடல்கள் திருமணம் ஆன பெண்டிர்கள் அடுக்களையில் உணவு சமைக்கும் திறனை மையமிட்டே நிற்கின்றன. எனவே, ஒரு பொது மூலக் கருத்தியலை உருவாக்க இயலும். அது, மணஉறவுப் பெண்டிரின் தொழில் சமையல் என்பதேயாம். அது எவ்வாறு பொருத்தமுடையது என எண்ணத்தோன்றும். காரணம்: சங்ககாலத்தில் திருமண  வாழ்க்கையில் பெண்டிர் சமையலை மட்டும்தான் தொழிலாகக் கொண்டனரா எனும் ஐயம் எழும். அதற்கு அப்பெண்டிர் முன்பு (திருமணத்திற்கு முன்பு) எந்த வேலைகளையும் செய்யாமல் இருந்தனர் என்பதே வெளிப்படை. இங்கு மேற்சுட்டிய குறுந்தொகைப் பாடலுக்கு மு.வரதராசன் தரும் கருத்துரையைச் சுட்டிக்காட்டலாம்.

புதுவாழ்க்கை தொடங்கிய இந்த இளம் பெண் நேற்று வரையில் எவ்வாறு வாழ்ந்தாள்? தன் மெல்லிய விரல்கள் காந்தள் மலர்போல் விளங்குமாறு மாசு படாமல் காத்து அழகுக்குக் குறைவு என்று எண்ணும் மனம் இருந்தது. உடுத்திய ஆடை ஒழுங்கு கெடாதவாறு, மாசு படாதவாறு, காக்கும் ஆர்வம் இருந்தது. அழகிய கண்களுக்கு மைதீட்டி அவை குவளை மலர் போல் விளங்குமாறு காக்கும் அழகுணர்ச்சி இருந்தது. தன் அழகைக் காத்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டு, அதை ஒரு கலையாக்கி நாள்தோறும் அழகுபடுத்திக் கொள்வதற்காகச் சில நாழிகை செலவிட்டு வாழ்ந்த இளம்பெண், இன்று புக்கத்தில் எத்தகைய பெருமாறுதல் உற்றாள்! தன் அழகு என்ற தன் முனைப்பு அவள் உள்ளத்தை விட்டு அகன்று, கணவன் மகிழ வேண்டும் என்ற வேட்கையால் தியாக உணர்வு வளர்ந்து விட்டது. ஆகவே மெல்லிய விரல்கள் ‘முளிதயிர்’ பிசைந்தன. தூய ஆடையைத் தயிர் பிசைந்த கைகள் உடுத்தின. தாளிப்புப் புகையில் மையுண்ட கண்கள் மூழ்கின. அன்று அவள் விரும்பியது தன் அழகு அன்று; கணவனின் மகிழ்ச்சியே ஆகும். விரும்பியதைப் பெற்றாள்; அவள் உள்ளம் நிறைந்தது. அந்த நிறைவால் முகத்தில் நுண்ணிய புன்முறுவல் பொலிந்தது (1994:52). 

துணைநின்றவை
1. இராகவையங்கார் ரா., 1993, குறுந்தொகை விளக்கம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம்.
2. சோமசுந்தரனார் பொ.வே., 2007, குறுந்தொகை, கழக வெளியீடு, சென்னை.
3. மணவாளன் அ. அ., 2011, இலக்கிய ஒப்பாய்வு: சங்க இலக்கியம், நியூசெஞ்சுரி புத்தகாலயம், சென்னை.
4. மறைமலையடிகள், 2007, முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
5. வரதராசன் மு., 1994, குறுந்தொகைச் செல்வம், பாரி நிலையம், சென்னை.
6. ஜகந்நாதராஜா மு.கு. (மொ. ஆ.), 1981, காதா சப்த சதி, விசுவசாந்தி பதிப்பகம், இராசபாளையம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.