- ஞா.டிலோசினி -“ பெண்ணியம் என்பது ஆண்கள் எந்தளவுக்கு சமூக அமைப்பிலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும் ஈடுபட்டு உரிமை கொண்டாடுகிறார்களோ, அந்தளவுக்குப் பெண்களுக்கும் மேற்கூறிய துறைகளில் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் “ என்று கூறுகின்றது பெண்களின் உரிமைக்காகப் போராடும் ஒரு புதிய இயக்கம். அத்தோடு பெண்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் சமுதாய, அரசியல், பொருளாதார சூழ்நிலையிலும் அவர்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் என்னும் உயர்நெறியை நிலைநாட்டுவதைக் கருவாகக் கொள்கிறது என விளக்குகிறது" (பிரேமா, இரா., பெண்ணியம் - அணுகுமுறைகள் : 13).

புலம்பெயர் சூழலில் பெண்களின் எண்ணிக்கை கணிசமானளவு காணப்படுகிறது. ஆரம்பத்தில் புலம்பெயர்ந்த ஆண்களின் சகோதரிகளாகவும், மணப் பெண்களாகவும் பெண்கள் புலம்பெயர்ந்து சென்றனர்.

பின்னர் கல்வி, வேலைவாய்ப்பு என வேறு தேவைகளுக்காகப் புலம்பெயர்ந்தனர். இலங்கையை விட புலம்பெயர் சூழலில் பெண்கள் தொடர்பான பண்பாட்டுக் கூறுகளை தமிழர் சமூகம் கட்டிறுக்கமாக வைத்திருக்கிறது. பெண்களது நடைமுறைகள், திருமணம் ஆகியவை தொடர்பாக அதிகாரம் மிக்க போக்குடன் நடந்து கொள்ள முனைகிறது.

தனிமைத் துயர், மொழி, அந்நியத் தன்மை, நிறவாதம் ஆகிய பிரச்சினைகளுக்கும் பெண்கள் ஆளாகின்றனர். இத்தகைய சூழலில் பெண்களே, பெண்களது பிரச்சினைகள் குறித்து சிந்திக்கவும், செயலாற்றவும் துணிந்தனர். இதனால் வெவ்வேறு நாடுகளில் பெண்கள் அமைப்புக்கள் உருவாகியதோடு, பெண்கள் சந்திப்புக்கள் இடம்பெற்றதோடு, பெண்களது பிரச்சினைகளை வெளிப்படுத்தி விழிப்புணர்வூட்டும் வெளியீடுகளும் வெளிவந்தன. (நூல்கள், சஞ்சிகைகள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள்). இத்தகைய வெளியீடுகளில் இராஜேஸ்வரி பாலசுப்பிர மணியத்தின் நாவல்களும் குறிப்பிடத் தக்கன.

இராஜேஸ்வரி, கணவர்களின் கொடுமைகளால் பெண்கள் தஞ்சம் புகும் ஸ்தாபனம் ஒன்றில் சிறிது காலம் வேலை செய்தவர். பெண்களுக்கான துயர்களும், கொடுமைகளும் இன, மத, மொழி, வர்க்கங்களைத் தாண்டியவை என்பதை உணர்ந்தவர். பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவி செய்யும் நோக்கில் ‘கிரேட் லண்டன் கவுன்சிலில் (GLC) வேலை செய்தார்.

பெண்களின் முன்னேற்றம் தொடர்பான மாநாடுகளை ஒழுங்கு செய்து நடத்தினார். பெண்களின் சுகாதாரம் தொடர்பான விடயங்கள், சிறுபான்மை பெண்களும் இனவாதமும், உலகமயப்படுத்தலும் அதனால் பெண்களுக்கான பாதிப்புக்களும், ஊடகங்களும் பெண்களும் முதலான மாநாடுகளில் கலந்து கொண்டவர்.

தமிழ் மகளிர் அமைப்பின் தலைவியாக இருந்து பல மாநாடுகளில் கலந்து கொண்டவர். ஆகவே பெண்கள் தொடர்பான விடயங்களில் அக்கறை கொண்ட இராஜேஸ்வரியின் எழுத்துக்களில் பெண்ணியம் சார் விடயங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தனது எழுத்துக்கள் பற்றி அவர் இலங்கை ஞானம் சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:-

“ எனது எழுத்துக்களின் பெரும்பாலான படைப்புக்கள், பெண்களின் நிலையைக் கண்டு வேதனைப்பட்டு, அவர்களின் நல்வாழ்வுக்கும் முன்னேற்றத்துக்குமாக எழுதிய படைப்புக்களாகும்” ( இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், 2015).

“ இன்று இலங்கையில் பெண்களுக்கெதிராக அளவிட முடியாத விதத்தில் வன்முறைகள் தொடர்கின்றன. அதற்கு எதிராகப் பெண்கள் ஆணித்தரமாகக் குரல் எழுப்பாவிட்டால் இந்த விதமான கொடுமைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். பெண்களுக்கெதிரான வன்முறையை அழிக்க முற்போக்கான ஆண்களும் பெண்களும் ஒன்று சேர்ந்து போராட்டங்களை நடத்த வேண்டும்.”
( இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், 2015).

இவ்வாறு அவர் கூறும் கூற்றுக்கள் பெண்களின் நலனில் அக்கறையும் ஈடுபாடும் கொண்ட அவரது எழுத்துக்களில் உள்ள பெண்ணிய நோக்கை வெளிப்படுத்துகின்றது.

 'உலகமெல்லாம் வியாபாரிகள்' பெண்ணியப் பிரச்சினைகளைக் காத்திரமாகப் பேசிய நாவல்களில் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்களும் குறிப்பிடத்தக்கன. தனது 'உலகமெல்லாம் வியாபாரிகள்' என்ற நாவலில், அவர் கூறுகின்ற விடயங்கள் பெண்ணிய வாதத்தின் அடிப்படைகளாகக் காணப்படுகின்றன.

“அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை என்று சொன்ன போது நான் நினைக்கவில்லை கோடானுகோடி வருடங்களாக கலாசாரம், பண்பு, கற்பு என்ற பெயரில் அடக்கப்பட்டுத் துன்புறுத்தப்படும் பெண்களின் பிரச்சினை தனிப்பட்டது என்று. அவர்களின் விடுதலை என்பது வெளியில் போய் வேலை செய்யக் கிடைக்கும் உரிமையில்லை. வீட்டிலும் அவன் கணவனுக்குச் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். மீனா போன்ற பெண்களின் உரிமையை பேரின்பநாயகத்தார் பண்பு, கற்பு, கலாசாரம் சொல்லி அடக்கப் பார்க்கிறார். இதை விட்டுக் கொடுப்பதா? வெள்ளைக்காரனைச் செய்வதும் அதனால் வரும் பிரச்சினைகளுக்கு ஈடுகொடுப்பதும் மீனாவின் பிரச்சினை. ஆதில் மற்றறவர் ஏன் தலையிட வேண்டும்? பெண்கள் ஒன்றும் உணர்ச்சியற்ற கத்தரிக்காய்கள் அல்ல. அவர்களுக்கும் மூளை இருக்கிறது” (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், 1991, ப 24- 25 ).

இவ்வாறு சிதம்பர நாதன் என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக ஆசிரியர் கூறும் கூற்று ஆசிரியரின் பெண்ணிய வாத அடிப்படைகளுக்கு எடுத்துக்காட்டாகும்.

இந்நாவலில் பேரின்பநாயகத்தாரின் மகள் மீனா, ஆன்ட்ரியே என்ற வெள்ளையனைக் காதலிக்கிறாள். ஆங்கிலேயனைக் காதலித்து, திருமணம் செய்ய நினைப்பது தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரானது என்பது பேரின்பநாயகத்தாரின் கருத்தாகும். ஆனால், மீனா அன்புதான் முக்கியம், தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஒரு பெண்ணுக்கு உரிமை உண்டு. பெற்றோர் தலையிடுவது அவசியம் இல்லை. இதுதான் மனிதநேயப் பண்பாடு போன்ற முற்போக்கான கருத்துடையவள். மீனாவுக்கு இன்னொரு மாப்பிள்ளையை பேரின்பநாயகத்தார் ஏற்பாடு செய்வதை அறிந்து மீனா வீட்டை விட்டு வெளியே செல்லும் அளவுக்கு, மீனாவை ஆசிரியர் துணிச்சல் மிக்க பாத்திரமாகப் படைத்துள்ளார். இவ்வாறு ஆசிரியர் மீனா என்ற கதாபாத்திரத்தைப் படைத்திருப்பதன் ஊடாக பெண்ணிய கருத்துக்கள் புலப்படுவதை அவதானிக்கலாம்.

ஒரு பெண்ணுக்கு தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கு உரிமை உண்டு என்ற வகையில் இந்நாவல் அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக கார்த்திகேயன் என்ற கதாபாத்திரத்தின் ஊடாக நாவலாசிரியர் கூறும் பின்வரும் கூற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

“கல்யாணம் செய்வது அவர்கள் சொந்த விசயம். தனக்குரிய துணையைத் தானே தேர்ந்தெடுக்கத் தேவையான அறிவுடன் பெண்கள் வளர்ந்து வருகிறார்கள். அதாவது எங்கள் தமிழ்ப் பெண்களே வளர்ந்து வருகிறார்கள் என்பதே சந்தோசமான செய்தியில்லையா! ஒரு ஆளுக்கு ஒரு நீதி, ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி, ஒரு சாதிக்கு ஒரு நீதி, ஒரு சட்டம் என்று நாங்கள் பாத்து இந்த நிலைமைக்கு வந்தது போதாதா” ( இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், 1991 : 20 ).

ஆங்கிலப் பெண்களும் தமிழ்ப் பெண்களைப் போலவே நடந்து கொள்ளும் வகையில் கதாபாத்திரங்களை ஆசிரியர் படைத்துள்ளார். சினிமாவில் இடம்பெறுவது போன்ற நிகழ்ச்சிகள் இந்நாவலில் இடம்பெறுகின்றன. ஆங்கிலப் பெண்ணுடன் வாழும் கார்த்திகேயனும் சகுந்தலா என்ற பாத்திரமும் ஒன்று சேரும் வகையில் கார்த்திகேயனின் ஆங்கிலக் காதலியாகிய சில்வியா’ விலகிச் செல்கிறாள்.

தமிழ்ப் பெண்களின் எளிமையைக் கண்டு ஆங்கிலேயர்கள் காதலிக்கிறார்கள். இந்நாவலில் இடம்பெறும் ‘உசா’ என்ற பெண் கதாபாத்திரம் தனது ஆங்கிலேயக் கணவனால் மணவிலக்கு செய்யப்பட்ட போதிலும், அவள் அதை நினைத்து கவலைப்படாத பாத்திரமாக, தன்னைத் தானே நம்பி வாழும் கதாபாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளாள்.

“குடும்பப் பெண்கள் என்றால் என்ன? வீட்டில் கல்யாணம் என்ற சிறைக்குள் அகப்பட்ட கைதிகளா? ஏன் குடும்ப ஆண்களுக்கு ஒரு கட்டுப்பாடும் இல்லை. வீட்டிலும் குடும்பத்திலும் அவர்களுக்கும் தானே வேலையிருக்க வேண்டும்”( இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், 1991 : 32 ).

இவ்வாறு சில்வியா என்ற பாத்திரத்தின் ஊடாக கேள்வி கேட்கும் வகையில் இடம்பெறும் கூற்றும்,

“நீ வேணுமானால் உலகம் உலகம் என்று உன்னையே ஏமாற்றிக்கொள், நான் என்னை மதிக்கிறேன். என் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டிருக்கிறேன். மற்றவர்கள் திட்டம் போட்டு இப்படித்தான் வாழ் என்று ஆட்டையும் மாட்டையும் சொல்லட்டும். நான் மனித ஜன்மம். எனக்கு உரிமையிருக்கிறது”(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், 1991 : 107).

இவ்வாறு மீனா என்ற பாத்திரத்தின் ஊடாக விவாதிக்கும் வகையில் இடம்பெறும் கூற்றும் ஆசிரியரின் பெண்ணிய நோக்கை வெளிப்படுத்துகின்றது.

பண்பாடு என்ற போர்வைக்குள் பிணிக்கப்பட்ட தமிழ் பெண்களை ஆங்கிலேயப் பெண்களோடு ஆசிரியர் ஒப்பிட்டு கூறுகிறார். அதாவது அமெரிக்கப் பெண்கள் வான்வெளிக்குப் போகப் போகிறார்கள். இருபதாம் நூற்றாண்டு முடியப் போகின்ற நிலையிலும் யாழ்ப்பாணத்தில் ஒரு பெண் தனியாக நடக்க முடியாத நிலையை ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார். கல்யாணம் என்பது விலங்கல்ல. பெண்கள் ஆண்களின் அடிமையில்லை, சமையல், துவைத்தல் முதலிய வீட்டு வேலைகளுடன் நிற்கவேண்டும், பண்பற்றவர்களுடன் வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்தம் பெண்களுக்கு இல்லை, பெண்மை, கற்பு என்றெல்லாம் சொல்லி பெண்களை அடக்கும் ஆண்களை எதிர்க்காதவரை பெண்களுக்கு விடுதலை கிடைக்காது போன்ற விடயங்களை ஆசிரியர் இந்நாவலில் வெளிப்படுத்தியுள்ளமை ஆசிரியரின் பெண்ணியச் சிந்தனையை வெளிப்படுத்துகின்றது.

'தேம்ஸ்நதிக் கரையில்' 'தேம்ஸ்நதிக் கரையில்' என்ற நாவலில் மைரா, லோறா, யோகலிங்கம் ஆகிய பாத்திரங்கள் ஊடாக ஆசிரியர் வெளிப்படுத்தும் முற்போக்கான கருத்துக்களும், பிற்போக்குத் தனமான கருத்துக்களை எதிர்த்துக் கூறும் விடயங்களும் ஆசிரியரின் பெண்ணிய நோக்கைப் புலப்படுத்துகின்றன. பெரும்பாலும் யோகலிங்கம் என்ற ஆண் பாத்திரத்தின் ஊடாக வெளிப்படும் கருத்துக்கள் பெண்ணிய பார்வையை வலியுறுத்துகின்றன.

“ஆட்டக்காரியாக இருக்கத் தேவையில்லை உண்மையான அன்போட பழகுற பெண்ணாக இருக்கலாம். வெறும் போலி ஆடம்பரத்தில் மயங்காத பெண்ணாக இருக்கலாம்…”(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், 1992 : 47).

“பெண்கள் வெறும் செக்ஸ் ஒப்ஜெக்ட்ஸ் இல்லை. தனிப் பிறவிகள். சுதந்திரமாக இருக்கவிடு தாலி கட்டிவிட்டேன். அவள் என் சொத்து அடுப்படியும் வீடும்தான் அவள் உலகம் என்று அடைத்து வைக்கும் முட்டாளாக இராதே. பெண் உன் காதலி மட்டுமல்ல. மனைவி மட்டுமல்ல. சினேகிதி, தோழி, ஆலோசகி என்ற அந்தஸ்த்தைக் கொடு”(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், 1992 : 94).

“தமிழ்ப் பெண் பிள்ளைகளைகள் என்று வீட்டில் வைத்து மாப்பிள்ளை எடுக்காதபடியால்தானே அவர்கள் எல்லாம் லண்டனுக்கு வந்தார்கள் படிக்க, வசதியாக வாழ, என ஒப்பாரி போடுற நீர், ஏன் உம்முடைய சகோதரிகளை வவுனியாவுக்கு அப்பால் போக விடுகிறீர்”(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், 1992 : 99).

“ஏன் இப்படிச் சொல்கிறீர் அழகான பெட்டைகள் ஆட்டக்காரிகள் என்பதுதான் உம்முடைய முட்டாள் தனமான கருத்தா”(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், 1992:106).

“பெண்கள் எங்கள் ‘பாட்னராக’ இருக்க வேண்டுமே தவிர அடிமைகளாக நடத்தக் கூடாது”(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், 1992 : 123).

“நீர் உம்முடைய வாழ்க்கையை யாருடனோ ஒப்படைக்கப் பார்ப்பதாற்தான் இப்படிப் பயப்படுகிறீர். தன்னம்பிக்கை இல்லாமல். ஆண்கள் தயவில்லாமல் பெண்கள் வாழ முடியாது என்ற காலம் போய்விட்டது. தகப்பன் இல்லாமல் பிள்ளை பெறுவது ஒழுக்கக் குறைவு என்பவர்கள் குறைந்து கொண்டு வருகிறார்கள். பதினெட்டு வருடத்துக்கு முன் உன் தாய் சமுதாய வசைச் செயலுக்குப் பயந்து ஸிம்சனைக் கல்யாணம் செய்திருக்கலாம். நீர் அப்படிச் செய்ய வேண்டும் என்றில்லை லண்டனில் எத்தனையோ தாபனங்கள் இருக்கின்றன. கல்யாணம் ஆகாமல் தாயாகும் பெண்களுக்கு உதவி செய்ய அதை விட்டு விட்டுச் சிறு குழந்தை போல் யோசிப்பது முட்டாள் தனம்”(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், 1992 : 156).

இவ்வாறு யோகலிங்கம் என்ற பாத்திரத்தின் ஊடாக வெளிப்படும் பெண்கள் தொடர்பான கருத்துக்களும்,

“அடுப்படியே தஞ்சம் எனக்கிடக்கும் ஆயிரம் பெண்களில் நீயும் ஒருத்தி. உன்னைச் சொல்லி பிழையில்லை. பெண்களை அப்படியாக்கி வைத்திருக்கும் சமுகத்தைத்தான் சொல்ல வேண்டும்” (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், 1992 : 83).

“லோறா பொம்மையில்லை. பெண். அவளுக்கென்று ஒரு உணர்ச்சி இருக்கிறது. உள்ளம் இருக்கிறது.”
(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், 1992 :167).

என மைரா என்ற பாத்திரத்தின் ஊடாக வெளிப்படும் கருத்துக்களும் நாவலாசிரியரின் பெண்ணியப் பார்வை எத்தகையது? என்பதைப் புலப்படுத்துகின்றன. பெண்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் இடங்கள் வரை காணப்படுகின்ற பாலியல் துஷ்பிரயோகங்களையும் ஆசிரியர் நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார். லோறா என்ற பெண் பிறந்த வீட்டில் தனது தாயின் கணவனாலும் (ஸிம்சன்), இலண்டனில் ஒரு வீட்டில் வேலைக்குச் சென்ற போது வீட்டுக்காரனாலும் (டேவிட் தொம்ஸன்), வைத்தியாலையில் வேலைக்குச் சொன்ற போது அங்கு கடமை புரியும் வைத்தியரினாலும்(மால்கம்), தனது காதலனின் சினேகிதனாலும் (யசோதரன்) பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறாள். இவ்வாறு அச்சமூகத்தில் பல பெண்களுக்கு காணப்படுகின்ற பிரச்சினையை ‘லோறா’ என்ற பாத்திரத்தின் வழியாக ஆசிரியர் பிரதிபலித்துக் காட்டியிருப்பது யதார்த்தச் சித்திரிப்பைக் காட்டுகிறது.

'பனி பெய்யும் இரவுகள்''பனி பெய்யும் இரவுகள்' என்ற நாவலில் ராதிகா என்ற பெண் கதாபாத்திரம் தனக்கென ஒரு வழியைத் தேர்ந்தெடுக்கும் திறமையும் வழிமுறைகளும் தெரிந்தவளாகப் படைக்கப்பட்டுள்ளாள். ராதிகா இலண்டனில் வளர்ந்தவள் என்பதால் வெட்கம், நாணம் எனத் தமிழ்ப் பெண்கள் அணிந்து கொள்ளும் போலிகளுக்கு அப்பாற்பட்டவளாகக் காணப்படுகின்றாள்.

“நான் சுதந்திரமான பெண், என்னை ஒருவரும் ஆட்டிப் படைக்க முடியாது. நான் எனது அக்கா பவானி மாதிரியில்லை. அவள் குக்கருக்கு மாலை போட்டு விட்டுத் தன் படங்களுக்கு மஞ்சல் பூசி மணவாழ்க்கை நடத்துகிறாள். நான் படிப்பேன். பட்டம் பெறுவேன். எனக்கு விருப்பமான இடங்களுக்கெல்லாம் போவேன். கல்யாணம் என்று வந்தால் நான் இஸ்டப்பட்ட மாதிரியே செய்வேன்”(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், 1993 : 164 -165).

இவ்வாறு ராதிகா என்ற பாத்திரத்தின் ஊடாகக் கூறப்படுகின்ற முற்போக்குச் சிந்தனைகளும், இத்தகைய நவநாகரிகப் பெண் பாத்திரச் சித்திரிப்பும் ஆசிரியரது பெண்ணியப் பார்வையை புலப்படுத்துகின்றது.

வசந்தம் வந்து போய் விட்டது என்ற நாவலில் ஆசிரியர் பெண்ணிய நோக்கில் நிதானமான, உறுதியான, முற்போக்கான பெண் பாத்திரங்களைப் (எமிலி, சேரா) படைத்துள்ளார். இந்நாவலில் எமிலி, சேரா ஆகிய இரு பெண் கதாபாத்திரங்களும் விடுதலையுணர்வுடன் படைக்கப்பட்டுள்ளன. பெருளாதார வளமுடைய இப்பெண்கள் தமக்குத் தேவையான வாழ்வை, குடும்பத்தை தாமே அமைத்துக் கொள்கின்றனர். சாதாரண பெண்களைப் போல் அல்லாது, தான் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற சிந்தனையுடன் காணப்படும் ‘எமிலி’ என்ற பாத்திரத்தின் ஊடாக வெளிப்படுத்தப்படும் கூற்றுக்கள் பெண் விடுலையை வலியுறுத்துவதாக அமைகின்றன.

எடுத்துக்காட்டு:

“சமய வாதிகளின் திருப்திக்காகவும், சமூகவாதிகளின் முன்னுக்குப் பின் முரண்பாடான கோட்பாடுகளுக்காகவும் குடும்பங்கள் ஒரு நாட்டின் ஆணி வேர் என்று போலிக் கூச்சல் போடும் அரசியல் வாதிகளுக்காகவும், வாழ்க்கையெல்லாம் ஒரு மனிதன் போடும் இலவச உணவுக்காகவும் எனது உடம்பையும் உணர்வுகளையும் ‘கல்யாணம்’ என்ற சடங்கின் மூலம் இன்னொருத்தரின் சொத்தாக்க நான் விரும்பவில்லை.” (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், 1997 : 67).

'அவனும் சில வருடங்களும்' என்ற நாவலில் இலண்டனில் பிறந்து வளர்ந்த ‘புவனா’ என்ற பெண் பாத்திரத்தை உலகத்தை வித்தியாசமாகப் பார்க்கும் முறையில் படைத்துள்ளார். ‘டெவினா’ என்ற பாத்திரத்தை சரியெனப்பட்டதை நேரே சொல்பவளாக, உடனே செய்பவளாக, ஒரு உணர்ச்சி மிக்க பாத்திரமாக படைத்துள்ளார். உலகில் உள்ள நாடுகளில் இந்தியா அதிகமான படங்களை தயாரித்துள்ளது. இந்திய சினிமாக்களில் பெண்கள் கவர்ச்சியாக, போதைப்பொருளாக சித்திரிக்கப்படுவதை பற்றிய விமர்சனமும், மேலைத்தேய நாடுகளினதும் இந்தியாவினதும் சினிமாக்களில் காணப்படும் பெண்களின் சித்திரிப்பு பற்றிய விவாதமும் இந்நாவலில் இடம்பெறுகின்றது. இத்தகைய சித்திரிப்புக்கள் ஊடாகப் பெண்களுக்கு சமூகத்தில் சமநிலை வழங்கப்பட வேண்டும் என்ற ஆசிரியரின் உணர்வு வெளிப்படுகின்றது.

'நாளைய மனிதர்கள்' என்ற நாவலில் ‘ஜேன்’, ‘சித்திரா’ போன்ற பெண் பாத்திரங்களை பெண்ணியச் சிந்தனைகளுடன் படைத்திருப்பது ஆசிரியரின் பெண்ணிய நோக்கைப் புலப்படுத்துகின்றது. எடுத்துக்காட்டு:

“ ஜேன் இங்கிலாந்து தொழிற் கட்சியில் அங்கத்தவராக இருக்கின்றாள். அவள் உலகத்தை பார்க்கும் விதம் வேறு. கேம்பிரிட்ஜ் பெண்கள் அமைப்பொன்றில் வேலை செய்கிறாள். வசதியற்ற பெண்களுக்கு உதவி செய்வது, படிப்பு, தொழில் போன்ற விடயங்களில் அவர்களை ஊக்குவிப்பது போன்ற விடயங்களை அந்த ஸ்தாபனம் செய்கிறது. ஜேன் ஒரு அகில உலகவாதி. அடக்கப்பட்டோர் உரிமைகளுக்காக போராடுவாள்” (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், 2003 : 18).

“டாக்டராக வரலாமே லாயராக வரலாமே என்ற பட்டியலை திலகவதி தொடங்கிய போது “என்னை நானாக – சித்திராவாக இருக்கவிடுங்கள்,” என்று சொன்னவள். அவளுக்கு அப்போது வயது பதினாறு. நேற்றைய தத்துவங்களிலுள்ள பெண்ணடிமைத்தனத்தைக் கேள்வி கேட்கும் இன்றைய பெண் அவள்”(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், 2003 : 59).

இலண்டனுக்குச் சென்று பல வருடங்கள் கழிந்த பின்னும் பல பெண்கள் சமயலறை, வீட்டு வேலைகளில் இருந்து இன்னும் வெளிவரவில்லை, பெற்றோர்களின் விருப்பங்கள் பெண் பிள்ளைகளில் திணிக்கப்படுதல் (சித்திரா), கணவனது கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு வாழ்தல் (சுமதி) எனப் பல தளங்களில் பெண்கள் எதிர் நோக்கும்; பிரச்சினைகள் இந்நாவலில்; வெளிப்படுத்தப்படுகின்றன.

ஆகவே ஆசிரியர் தமது நாவலில் பெண்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு வகையான பிரச்சினைகளை வெளிப்படுத்துவது, பெண்கள் எல்லா விதமான பிரச்சினைகளில் இருந்தும் விடுதலை பெற வேண்டும் என்ற ஆசிரியரின் பெண்ணிய உணர்வை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. ஆசிரியர் ஒரு பெண் எழுத்தாளர் என்ற அடிப்படையிலும் அவரது பெண்ணிய நோக்கை தமது எழுத்துக்களில் வெளிப்படுத்தியுள்ளார்.


* கட்டுரையாளர்: ஞா.டிலோசினி, கிழக்குப் பல்கலைக்கழகம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.