முனைவர் இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர், நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 105.பல்லாயிரம் ஆண்டுத் தொன்மையும் மேன்மையும் உடையது தமிழ். இவ்வகையில் தமிழ் ஈடு இணையற்ற மொழி. பழந்தமிழர்கள் இனக்குழுக்களாகப் பகுத்துண்டு வாழ்ந்தனர். அறம், இசை, ஈதல், கல்வி, காதல், வீரம், போர்த்திறன் எனப் பல்வேறு சிறப்புகளோடு வாழ்ந்ததை இலக்கியங்கள் நமக்குப் பறைசாற்றுகின்றன. தமிழ்இலக்கியங்களில் காணப்படும் சிறப்புகளில் ஒன்று அறம். இந்த அறம் சங்க இலக்கியம் தொடங்கிக் காப்பியம், அறஇலக்கியம், சிற்றிலக்கியம் என நீண்டு இன்றைய நவீன இலக்கியம் வரை தமிழின் மரபு அறுபடாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய அறச் சிந்தனைகளில் சிலவற்றை இங்குக் காணலாம்.

முதலில் சங்க இலக்கியத்தை எடுத்துக் கொள்வோம். சங்கக் காலத்தில், உறையூரில் கோப்பெருஞ் சோழன் என்ற மன்னன் வாழ்ந்து வந்தான். புலவர்களைப் பெரிதும் போற்றினான். மிகுந்த பொருள்களை நல்கினான். இதனைக் கண்ட அவன் மக்கள் வெதும்பினர். தந்தைக்குப் பிறகு நாட்டில் நமக்கு எதுவும் இராது. எல்லாவற்றையும் புலவர்களும் பாணர்களும் எடுத்துக் கொள்வர். இதன்காரணமாகப் படைத்திரட்டிக் கொண்டு தந்தைக்கு எதிராகக் கிளம்பினர். போர் மூழ்வதற்குரிய சூழ்நிலை நிகழ்ந்தது. இதைக் கேள்விபட்ட புல்லாற்றூர் எயிற்றியனார் புலவருக்குப் பொறுக்க முடியவில்லை.  சோழரை அவர் சந்தித்தார். நீங்கள் போர் புரிகிறீர்கள், உங்களுக்குப் பிறகு இந்த நாட்டை யாருக்கு ஒப்படைக்கப் போகிறீர்கள்? அந்தப் போரில் தோற்றால் யாருக்கு என்னாகும்? மக்களுக்கு எதிராகப் போரிடுவது முறையன்று. போரிடுவதைக் கைவிட்டு உன் ஆட்சியின் கீழ் வாழும் மக்களுக்கு நல்லது செய்து வானுலகம் போற்றும்படி வாழ்வாயாக! என நல்லறம் உரைக்கின்றார். அவர் பாடிய பாடல் வருமாறு:

‘மண்டுஅமர் அட்ட மதனுடைய நோன்தாள்,
வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே!
பொங்கு நீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து,
நின்தலை வந்த இருவரை நினைப்பின்,
தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர்,
அமர்வெங் காட்சியொடு மாறுஎதிர்பு
-- -- - - - - - -
ஓழித்த தாயம் அவர்க்கு உரித்து அன்றே;
ஆதனால் அன்னது ஆதலும் அறிவோய்! நன்றும்’  (புறம்.213)

மேலும், ஆற்றின் வடகரையில் அமர்ந்து உண்ணாநோன்பு மேற்கொள்வதே அறம் என்றார். கோப்பெருஞ்சோழனும் அதற்கு உடன்பட்டார். அவரோடு பலசான்றோர்களும்  வடக்கிருந்தனர். அனைவரும் உயிர்த்துறந்தனர். இத்தகையதோர் அறச்செயல் உலகில் வேறு எங்கும் நடைபெற்றிருக்க முடியாது. கோப்பெருஞ்சோழன் மேற்கொண்ட நெறி தமிழர் நெறி / தமிழறம்.

தமிழ்ச் சமுதாயத்திற்கு உரிய பொதுமையான அறங்கள் புறநானூற்றில் நிறைந்து காணப்படுகின்றன. வாழ்க்கையின் இயல்பினைச் சொல்கிறது கணியன் பூங்குன்றனாரின் பாடல்;

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
- -- - - - - - - - - -
வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும்
இலமே முனிவின், இன்னா தென்றலும் இலமே,
- - - - - -
நீர்வழிப்படூஉம் புணைபோல்
ஆருயிர் முறைவழிப் படூஉம்
என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம்’ -- - - (புறம். 192)   

உலகம் பொது. இவ்வுலகில் வாழும் அனைவரும் நம் உறவினர். நமக்கு வரும் நன்மையும் தீமையும் பிறரால் வருவதில்லை என்ற உயரிய சிந்தனையை நம் முன்னோர் அறிவுறுத்தியுள்ளனர். அண்டைநாடுகளுடன் அமைதியான முறையில் அன்பு கொண்டு வாழ முடியும் என்று தமிழிலக்கியங்களே ஓங்கி உரைக்கின்றன. வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறக்கூடியவை. பேராற்றில் நீர் பெருக்கெடுத்து வருகிறது. வெள்ளத்தில் அகப்பட்ட புணையானது, ஒரு சமயம் மேட்டிலும் மற்றொரு சமயம் பள்ளத்திலும் தங்கிச் செல்லும். வாழ்க்கையும் அது போலவே. வாழ்வில் ஒருசிலர் உயரிய இடத்திலும் சிலர் கீழ்நிலையிலும் இருக்கக் கூடும். இந்நிலை மாறக்கூடும். யாக்கை, இளமை, செல்வம் எதுவும் உலகில் நிலையானதன்று என்ற வாழ்வியலறத்தை வலியுறுத்தியுள்ளார் புலவர்.

நக்கீரர் எழுதிய ‘தென்கடல் பொதுமையின்றி’ (புறம். 189)என்ற பாடலில் இவ்வுலகம் முழுவதையும் ஆட்சி செய்யும் மன்னராகினும், நடுஇரவில் துஞ்சாமல் காட்டில் சுற்றித்திரியும் கல்லாதவருக்கும் உண்பதற்கு நாழி அளவுள்ள உணவு போதுமானதே! உடுக்க இரண்டு உடைகள் மட்டுமே. தேவைக்கு அதிகமாக சேர்த்து வைக்கும் பொருட்களைப் பிறருக்குக் கொடுத்தலே நன்மை தரும். செல்வம் அனைத்தையும் தாமே அனுபவிப்போம் என்றால் அவை அவரை விட்டு நீங்கிவிடும்.
இன்றைய நவீன உலகில் நுகர்வுக் கலாச்சாரம் மேலோங்கியிருக்கும் சூழலில் பொருளின் நிலையாமையை இப்பாடல் உணர்த்துகிறது. இன்று வேகமாகப் பரவி வரும் ‘கொரோனா’ என்ற கொடிய கிருமி, பெருஞ் செல்வந்தரையும் வறியநிலையில் உள்ளவரையும் தாக்கி வருவதை நாம் காண்கிறோம்.

இனி சிலம்பில் காண்போம்: சிலப்பதிகாரத்தில் என்ன நடந்தது? கோவலன் மதுரையில் தொழில் செய்வதற்காகக் கண்ணகியின் ஒற்றைச் சிலம்பை விற்கச் சென்றான். கோவலன் முன் அரசரின் பொற்கொல்லன் எதிர்ப்பட்டான். சிலம்பை விற்பதற்கான வழிவகை செய்ய கேட்டான். நான் அரசப் பொற்கொல்லன் எனக்கு எதுவும் சாத்தியம் என்று கூறினான். உள் மனத்தில் கள்ளம் பதிந்த பொற்கொல்லன் உடனே முடிவுக்கு வந்தான். நேரே அரசனிடம் சென்றான். உங்கள் துணைவியாரின் காற்சிலம்பைத் திருடியவனை என் வீட்டில் பிடித்து வைத்திருக்கிறேன். ஆட்களை அனுப்பி அவனை அகப்படுத்துங்கள் என்றான்.

பாண்டியன் உடனே செயல்பட்டார். பாண்டியனுக்கு வேண்டியது மனைவியின் காற்சிலம்பு. இரண்டு நாட்களாக தன்னிடம் ஊடல் கொண்டிருந்தாள் அரசி. அரசியின் ஊடலைத் தீர்க்க இது நல்ல வாய்ப்பு என்று எண்ணினான். உடனே காவலனை அனுப்பினான். பொற்கொல்லன் வீட்டில் இருக்கும் கள்வனைக் கொன்று சிலம்பைக் கொணர்க என்றான். காவலர்கள் கோவலன் கையில் இருக்கும் காற்சிலம்பைக் கண்டதும் அவனைக் கொன்று சிலம்பைக் கைப்பற்றினர்.
கண்ணகி செய்தி அறிந்தாள். உடனே கோபங்கொண்டு புறப்பட்டாள். அவள் கையிலிருந்தது மற்றொரு சிலம்பு. பாண்டியனைச் சந்தித்து நீதி கேட்டாள். தன் சிலம்பை உடைத்தெறிந்தாள். மாணிக்கப்பரல் பாண்டியன் உதட்டில் தெறித்தது. யானே கள்வன்! என்று அவர் உயிர்நீத்தார். அது கண்ட கோப்பெருந்தேவியும் உடன் உயிர்நீத்தாள்.

கண்ணகி மதுரையின் தெருக்களில் நீதி கேட்டுப் புறப்பட்டாள். இந்த நகரத்தில் தெய்வம் குடியிருக்குமா? சான்றோர் வாழ முடியுமா? கற்புடைய பெண்டிர் வாழ முடியுமா? என்று கேட்டாள். அவர்கள் இருந்திருந்தால் பாண்டியனைச் சந்தித்து நீதி கேட்டிருப்பர். யாரும் சந்திக்கவும் இல்லை. நீதி கேட்கவும் இல்லை. கண்ணகி இதன் பிறகு மதுரையை எரித்தாள்.

வேற்றுநாட்டில் இருந்து ஒருவன் வருவான் என்றால் அவன் கையில் சிலம்பு இருந்தால் அது அவனுடையதாக இருக்கமுடியாது அவன் கள்வனாகத்தான் இருக்கமுடியும். மன்னனுக்கு எதிராக கண்ணகி நீதி கேட்கிறாள். அவன் நாட்டில் சான்றோர் இருந்தால் அறம் பிறழக்கூடாது. தெய்வம் இருந்தால் அறம் தவறக்கூடாது. கற்புடைய பெண்டிர் இருந்தால் நீதி கெடக்கூடாது. இத்தகைய சிலப்பதிகாரத்தைத் தமிழராகிய நாம் கொண்டிருக்கிறோம்.

மன்னர் ஆயினும் நீதி தவறக்கூடாது. அப்படித் தவறினால் உயிர் பிழைக்கக் கூடாது. அவனோடு அவன் மனைவியும் உயிர்த்துறக்கவேண்டும் இத்தகை அறத்தைத்தான் தமிழர் மேற்கொண்டிருந்தனர். இதுதான் சிலம்பின் அறம்.
மணிமேகலையில் நாம் காணும் காட்சி என்ன? உதயகுமாரன் தவறு செய்தான். மணிமேகலை ஒரு கணிகையின் மகள் தானே! அவளுக்கு என்ன கற்பு வேண்டியிருக்கு! இவ்வாறு நினைத்து அவளைக் கைப்பற்ற நினைத்தான். இறுதியில் என்ன ஆனான்? காயசண்டிகையின் கணவனாகிய காஞ்சனன் கைவாள்பட்டு உயிர்த்துறந்தான்.

சான்றோர்கள் சென்று அரசனிடம் நிகழ்ச்சியைக் கூறினர். மன்னன் அறம் அறிந்தவன். அவன் வருந்தினான். என்மகன் என் கையில் சாவதற்கான வாய்ப்பைத் தவறவிட்டேனே! ஓர் இளம் பெண்ணின் கற்பைச் சூறையாடியவன் என் மகனாக இருந்தால் என்ன? அவனைக் கொல்வதே அறம். கற்பைப் போற்றுவது தமிழறம். இளவரசர் என்றாலும் ஒரு பெண்ணின் கற்பை நுகர/ விரும்பக் கூடாது. இவ்வாறு மன்னன் நினைத்தான் தன்மகன் சாவுக்கு வருந்தவில்லை. அவன் கொல்லப்பட வேண்டியவன். இதுவும் தமிழர் போற்றிய சமதர்ம பேரறம்.

அடுத்தாக திருக்குறள்: அறத்தொடு வாழ்ந்தால் மனித வாழ்வு செழிக்கும் என்ற பொதுமையறத்தை உலகிற்கு எடுத்து இயம்பிய திருக்குறளில் மாந்த நேயமே வலியுறுத்தப்படுகின்றன. ‘அறத்தான் வருவதே இன்பம்’ ‘----அறவோர்–மற்று எவ்உயிர்க்கும் செந் தண்மை பூண்டு ஒழுகலான்' எவ்வுயிர்களிடத்தும் கருணை உள்ளம் / அன்புள்ளம் கொண்டவரே அறவோர் என்கிறது உலகப் பொதுமறையாம் வள்ளுவம்.

‘தெய்வத்தால் ஆகாதெனினும்’ என்பதில்  முயற்சி செய்து உழைப்பவர்கள் உறுதியாக வெற்றி இலக்கை அடையமுடியும். உழைப்பவனுக்கு நல்லகாலம் கெட்ட காலம் என்பதும் இல்லை. தெய்வத்தின் துணை என்பதும் அவனுக்குத் ளதேவையில்லை என்ற பொதுமையறத்தை முன்வைக்கிறார் வள்ளுவர்.

போரறம், நீதிஅறம், சமதர்ம அறம், பொதுமையறம் எனப் பல்வேறு அறங்களைப் பேசும் நூல்களுக்கு மத்தியில் அறஇலக்கியமான சிறுபஞ்சமூலம் கூறும் அறங்களைக் காணலாம்:

‘குளம்தொட்டுக் கோடு பதித்து வழிநீத்து
உளம்தொட்டு உழுவயல்ஆக்கி வளம்தொட்டுப்
பாகு படுங்கிணற்றோ டெனறிவ்வைம் பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கத்து இனிது’

சொர்க்கத்திற்குச் செல்ல நினைப்பவன் செய்ய வேண்டிய ஐந்து அறங்களை கூறும் பாடல் இது. அதாவது,1.குளம் தோண்டல், 2.மரங்களை நடுதல் 3.மரங்களோடு கூடிய மக்கள் செல்லும் வழியமைத்தல் 4. தரிசுநிலங்களை நீக்கி வயல் நிலங்களை உருவாக்குதல் 5.கிணறு தோண்டல் என்பனவாகும்.

இன்றைய சூழலில் இந்த ஐவகை அறங்கள் மனிதனால் அழிக்கப்பட்டுவிட்டன. அறம் பிறழ்ந்ததால் மனிதன் சுகாதரமற்று, நோய்நொடிகளோடு கடுந்துன்பத்திற்குத் தள்ளப்பட்டு நாளும் பொழுதும் நரக வாழ்க்கை வாழ்கிறான்.
மேற்சொன்ன இந்த ஐந்து அறங்களையும் நாம் வாழும் காலத்தில் கடைப்பிடித்து சிறப்பாக வாழ்வதே சொர்க்கத்தில் வாழ்வதற்குச் சமம் என்கிறது சிறுபஞ்சமூலம். இயற்கையோடு இணைந்து வாழ்வதே இவ்வுலக உயிர்கள் அனைத்திற்குமான இயற்கையறம்.

சிற்றிலக்கியமான பள்ளு இலக்கியங்கள், காலங்காலமாக உழுவுத் தொழில் மேற்கொள்ளும் பள்ளர்களின் வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறுகின்றன. இதில் பள்ளன் விளைவித்த நெல் வகைகள், வயல்களில் விளைந்து குவித்த நெல்லை (எந்தவித குறிப்பும் இன்றி) அளத்தல், கிடைத்த இலாபத்தையும் செலவையும் மனம் தடுமாறாமல், உள்ளது உள்ளபடி எடுத்துரைக்கும் பள்ளனின் உண்மையறத்தைக் காணமுடிகிறது.

‘- - - -- - - - - - - - - -
அளந்தபொலி இத்தனையென் றாதாய முஞ்செலவும்
களந்தனிலே நின்றுபண்ணைக் காரனுடனே குடும்பன்
உளந்தடுமா றாதவகை உள்ளபடி சொன்னானே.’      (முக்.கூடற்.பள்ளு.140)

பள்ளன் விவசாயி. விவசாயத்தின் வழியே உலக உயிர்களின் பசிதீர்க்கமுடியும் என்ற எண்ணம் கொண்டவன். அவனுக்குத் தெரிந்தது நெல்வகை, பயிடுவகற்கான ஏற்ற காலம், பணியில் நேர்மை, உண்மை மட்டுமே. பொய் கணக்குக் காட்டித் தான் மட்டும் உண்டு  வாழும் சிறுமை எண்ணம் கொண்டவன் அல்லன்.

இவ்வுலகை வாழ்விக்கும் விவசாயமும் விவசாயியும், இன்றைய சூழலில் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். நம்மை நாம் மீட்டெடுக்க தமிழிலக்கியங்கள் எடுத்துரைக்கும் சூழல்அறம் தேவையான ஒன்றாகும்.
பாரதி போற்றும் பெண்மைஅறதைப் பார்ப்போம்.

‘பெண்ணுக்கு விடுதலை நீரில்லை என்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கை இல்லை’ என்றார்

கற்பை பொதுவாக்கி, ஆண் பெண் சமத்துவம் நிகழாதவரை இவ்வுலகில் வாழ்க்கை இல்லை எனப் பெண்ணிய அறம் பேசியவர் பாரதி.

‘பெண்கள் அறிவை வளர்த்தால் வையம்
பேதமை அற்றிடும் காணீர்’- என்றார் பாரதி. அவர் போற்றிய பெண்ணியம், பெண்கல்வி இன்று வானளாவ உயர்ந்திருக்கிறது.

பாரதிதாசனோ,

‘   ------- இன்று புவியின் பெண்கள்   
சிறுநிலையில் இருக்கவில்லை, விழித்துக் கொண்டார்! என்றார்.

ஆம். தற்பொழுது விண்வெளியில் 320 நாட்கள் தங்கி, ஆய்வு செய்து திரும்பிய  அமெரிக்காவின் கிறிஸ்டினா கோச்  விண்வெளி வீராங்கனைப் புதிய சாதனை படைத்துள்ளதை இங்கு நினைவுக்கூரலாம்.

தமிழிலக்கியங்கள் காலந்தோறும் நல்லறத்தை மக்களுக்கு ஊட்டியே வந்துள்ளன. இன்றைய காலத்தில் இவ்வகை அறங்கள் தேவையான ஒன்று. இன்றைய உலகச் சூழலில் அறங்கள் அருகி வருகின்றன. மண்ணில் நல்லவண்ணம் வாழவும் வழிநடக்கவும் இச்சிந்தனைகள் பெரிதும் பயன்படும். இவ்வகைச் சிந்தனைகள் இக்காலத்திற்கு மட்டுமல்ல எக்காலத்திற்கும் / எச்சூழலுக்கும் ஏற்றவையாகும்.  தமிழர்கள் அனைவரும் தமிழ்இலக்கியங்களை ஆழ்ந்து கற்று தற்காலத்திற்கு ஏற்றவாறு பொருள்படுத்திக் கொள்ளவேண்டும். இத்தகைய வளமான ஆற்றல் மிக்க தமிழ்மொழியை பிறமொழிகளில் மொழிபெயர்த்து உலக அரங்கில் கொண்டு சேர்ப்பது நம் கடமை.

* கட்டுரையாளர்: - முனைவர்.இர.ஜோதிமீனா, தமிழ்த்துறை, நேருகலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர்105. -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.