லண்டன் அம்பியின்; ‘கண்டேன் கைலாசம்’ வெளியீட்டு விழா‘இறைவனின் புண்ணிய ஸ்தலங்களுக்குத் தீர்த்த யாத்திரை செய்து இறைவனை வழிபட்டு வருவது நீண்ட நெடுங்காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் யாத்திரையாகும். அதிலும் கைலாச யாத்திரை என்பது கைலயங்கிரியில் வாழும் சிவனைத் தரிசிக்கும் புண்ணிய யாத்திரையாகும். கடினமும். ஊக்கமும்.இறைவனின் பெயரருளும் சித்தித்தால் மட்டுமே அடையக்கூடிய மகத்தான யாத்திரையாகும். சில புண்ணிய ஸ்தலங்கள் தரிசிப்பதால் மட்டுமல்ல நினைத்துப்பார்த்தாலுமேகூட அருள் தருகின்ற புண்ணிய ஸ்தலங்களாகும். அந்த வகையில் லண்டன் டாக்டர் அம்பி அவர்கள் ஆகம முறைகளை அனுசரிக்கும் இந்துப் பெருமகனாய் கைலாசத்தை இரண்டு  முறைகள் தரிசித்து வந்திருக்கிறார். அதுமட்டுமல்ல பயண அனுபவத்தை ஒழுங்காகக் குறித்து அழகிய தமிழில். தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும் என்ற நோக்கிலே ‘கண்டேன் கைலாசம்;’ என்ற நூலினை எழுதி வெளியிட்டிருப்பது நாம் பெருமையுடன் பாராட்டவேண்டிய அம்சமாகும்’ என்று பிரம்மஸ்ரீ கைலை நாகநாத சிவாச்சாரியார் ‘கண்டேன் கைலாசம்’ என்ற நூல் வெளியீட்டு விழாவின்போது தனது ஆசியுரையில் தெரிவித்தார்.

‘சிறு வயதிலிருந்தே எனக்கு மருத்துவர்கள்மேல் பயம். யாழ்ப்பாணத்திலிருந்து மருத்துவம் படிக்கப் போவார்கள். திரும்பி வரும்போது தமிழை மறந்து ஆங்கிலம் மட்டும் பேசுவார்கள். ஆனால் அந்த ஆழமான என் கருத்தை மாற்றிய சில மருத்துவரில் அம்பிகாபதியும் ஒருவர். தமிழில் நன்றாக எழுதுகிறார். பேசுகிறார். கைலை யாத்திரையில் ஏழாம் நூற்றாண்டில் ஒருவர் போனார். இப்போது உள்ளதுபோல அப்போது வசதிகள் கிடையாது. அவர் நடந்து. பின் தவழ்ந்து. உருண்டு போனதால் உடலெல்லாம் புண்ணாகி வருந்தினார்;. அவரைத்; திரும்பிப் போகும்படி அந்தணர் வடிவில் வந்த சிவன் கட்டளையிட்டார். வந்தவர் சிவன் என்பதை உணராத அவர் ஆளும் நாயகன் கயிலையில் இருக்கைகண் டல்லால்  மாளும்இவ் வுடல்கொண்டு மீளேன் என மறுத்தார்… பெரியபுராணம் அவர்தான் திருநாவுக்கரசு நாயனார். மணியன் ஆனந்தவிகடன் இதழில் இதயம் பேசுகிறது என்றொரு தொடர் கட்டுரை எழுதினார். அதில் அமரிக்காவில் ஒருவர் தனக்கு முன்னால் ஆசனத்திலிருந்து புத்தகம் ஒன்றைப்படித்துக் கிழித்ததை நகைச்சுவையாக எழுதியிருப்பார். அதுபோலத் தன்பயணத்தை அம்பிகாபதி சுவைபட எழுதியுள்ளார்’ என்று ‘கலசம் சஞ்சிகையின் ஆசிரியர் திரு. கே. ஜெகதீஸ்வரம்பிள்ளை தெரிவித்திருந்தார்.
லண்டன் அம்பியின்; ‘கண்டேன் கைலாசம்’ வெளியீட்டு விழா
டொக்டர் லண்டன் அம்பி அவர்கள் எழுதிய ‘கண்டேன் கைலாசம்’ என்ற நூல் வெளியீட்டு விழா. லண்டன் முருகன்கோயில் அறங்காவலர் எஸ்.சம்பத்குமார் அவர்கள் தலைமையில் நவம்பர் மாதம் 17ஆம் திகதி லண்டன் மனோர்பார்க் ஸ்ரீ முருகன் கோயிலில் நடைபெற்றது. இந்த நூல் வெளியீட்டில் திறனாய்வுரையை மேற்கொண்ட விமர்சகர் மு. நித்தியானந்தன் :

‘சுவாமி சச்சிதானந்தா அவர்கள் எழுதிய ‘கைலாசம் கண்டேன்’ என்ற தலைப்பில், கண்டி திவ்விய ஜீவசங்கம் 1960 ஆம் ஆண்டில் வெளியிட்ட  நூலுடன் டொக்டர் அம்பியின் நூலைச் சேர்த்து வாசிப்பது சுவாரஸ்யமான தகவல்களைத்’ தருகிறது. சுவாமி சச்சிதானந்தாவின் இந்த நூல் சுதந்திரன் பத்திரிகையில் 1958 ஆம் ஆண்டு ஆறு மாதகாலமாக வெளிவந்த கட்டுரைத் தொடராகும். கைலை நோக்கிய பயணத்தில் தங்குவதற்கு எங்கும் தங்குமிட வசதிகள் எதுவும் இல்லாது, மண்ணெண்ணை எரி அடுப்புக்களையும் சுமந்து. மிக ஆபத்தான பாதைகளுக்கூடாகப் பல தடைகளைத் தாண்டியே கைலைத் தரிசனத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. சுவாமி சச்சிதானந்தாவின் நூல் கைலைப் பயணத்தை அச்சுறுத்துவது போன்றும். பயமடையச் செய்வது போன்றும். அபாயகரமான யாத்திரையாக. கிட்டத்தட்ட மரணத்திற்கு இட்டுச் செல்வதாக அமைந்திருந்தது. அந்தக் காலத்தில் கைலை நோக்கிய பயணம் எந்த வசதிகளுமற்ற ஆபத்தான பயணமாகவே இருந்திருக்கிறது. ஆனால் அந்த நூல் வெளியாகி அறுபது ஆண்டுகளின்பின் டாக்டர் அம்பி எழுதிய ‘கண்டேன் கைலாசம்’ என்ற இந்த நூல் கைலையை நோக்கி நாங்களும் யாத்திரை மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கையைத் தருவதாக இருப்பதைக் குறிப்பிட்டுக் கூறவேண்டும்.

வாசகர்களைத் தன் கையோடு கூட்டிச்செல்லும் பாணியில். விசா ஒழுங்கிலிருந்து. மலை ஏற்றப் பயிற்சியிலிருந்து. ஹொட்டல் வசதிகளிலிருந்து, பயணச் செலவுகள் உள்ளடங்க விரிவான தகவல்களோடு இந்நூலைத் தந்திருக்கிறார். உயர்ந்த மலைகளும். மலைச்சிகரங்களும் எப்போதுமே மனதில் கவர்ச்சியையும், பிரமாண்டத்தையும் எல்லையற்ற பிரபஞ்சத்தை அவாவும் சிந்தனையையும் தோற்றுவிப்பதாகும். கிரேக்க ஐதீகங்களின்படி சகல கிரேக்கக் கடவுள்களும் ஒலிம்பஸ் மலையிலே உலவுவதாகக் கூறுகின்றனர். பழைய ஏற்பாட்டில் சினாய் மலையிலிருந்து மோசேஸ்சுக்கு பத்துக்கட்டளைகளை அருளப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஹிரா மலையிலே இறைதூதர் முஹமதுநபி அவர்களுக்கு அல்லாவின் வாசகங்கள் அருளப்பட்டன. இவ்வாறே வௌ;வேறு நாடுகளில் தத்தம் கடவுளர்கள் மலைகளில் உறைவதாக மக்கள் நம்பி வருகின்றனர். கைலையில் தனது பயண அனுபவங்களை ஒரு தேர்ந்த எழுத்தாளனின் ஆற்றலோடு டொக்டர் அம்பியின் இந்த நூல் ஆக்கப்பட்டிருக்கிறது.

யாழ் பல்கலைக்கழகத்தில்; டாக்டர் அம்பி உடற்கூற்றியல் விரிவுரையாளராக இருந்தபோது மட்டக்களப்பில் எழுந்த புயல் அனர்த்தத்தின்போது நிவாரணப் பணிக்காகச் சென்றிருந்த வேளையில் எனக்கு அவர் அறிமுகம் ஆனார். இன்று இருபதாயிரம் அடிகளுக்கப்பால் மௌனத்தில் ஆழந்திருக்கும் கைலையைத் தரிசித்த ஆத்மசீலராக அவரைக் காண்கிறேன்’ என்று அவர் தனது விமர்சன உரையில் குறிப்பிட்டிருந்தார்.
லண்டன் அம்பியின்; ‘கண்டேன் கைலாசம்’ வெளியீட்டு விழா
பேராசிரியர் ஈ. சுவாமிநாதன் அவர்கள் உரையாற்றும்போது:  ‘தான்சானியாவின் கிளிமஞ்சரோ மலையில் தானும் டொக்டர் அம்பியும் மலை ஏறிய அனுபவத்தின்போது எந்தத் தடங்கல்கள் நேர்ந்தாலும் அவற்றிற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் பயன்படக்கூடிய ஒழுங்குகளை மேற்கொள்ளும் திறனை டாக்டர் அம்பியிடம் காணக்கூடியதாக இருந்தது. இலங்கையின் கதிர்காம யாத்திரையிலிருந்து கைலை யாத்தரைவரை அவருடன் மலைஏறிய அனுபவங்கள் உற்சாகமாகவும். மகிழ்ச்சியானதாகவும் அமைந்திருந்தன’ என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரம்மஸ்ரீ கமலநாத சிவச்சாரியார் உரையாற்றும்போது: ‘யாழ்ப்பாணத்தில் இடம்பெயாந்த சமயங்களில் தஙகளுக்கு தங்குவதற்கு உறைவிடம் வழங்கிய பெரும்மனசு டொக்டர் அம்பியிடம் இருக்கிறது. மரண பயத்தை வெல்லுகின்ற ‘ருத்ரஹோமம்’ என்ற மந்திரம் டொக்டர் அம்பிக்குப் பிடித்த மந்திரம் என்கிறார். அதனை டொக்டர் அம்பி பயன்படுத்திய பக்குவ நிலையைப் பாராட்டினார்’

‘கண்டேன் கைலாசம்’ என்ற இந்த நூலினை வெளியிட்ட தமிழியல் வெளியீட்டகத்தின் சார்பில் ஸ்ரீ.ஈ. பத்மநாப ஐயர் உரையாற்றும்போது: ‘தமிழியலில் தனது நீண்ட பதிப்புப் பயணத்தில் மிக முக்கிய ஆத்மீகம் சார்ந்த நூல்களைக் கொண்ட வடமொழி இலக்கிய வரலாறு இதுவரை மூன்று பதிப்புக்ளைக் கண்டிருக்கிறது என்றால் அந்நூலின் முக்கியத்துவம் தெரியவரும். அதேபோல ‘கண்டேன் கைலாசம்’ என்ற இந்தநூல் பயண இலக்கியத்தில்; மிக முக்கிய நூலாக விளங்கக்கூடியது’ என்று தெரிவித்தார்.

வைத்தியகலாநிதி சாரதா நற்குணராஜா பேசும்போது: ‘டொக்டர் அம்பியின் கைலை பயணத்தின்போது பேராசிரியர் ஈ.சுவாமிநாதனுடன் இணைந்து தாம் செயற்பட்டதாகவும். அவரது பயணத்திற்கு தாம் மிகுந்த உற்சாகம் அளித்திருந்தமையையும். அவர் அதனை வெற்றியாக பயணிப்பதற்கு தாம் உறுதுணையாக இருந்தமையையும் குறிப்பிட்டிருந்தார்’

ஸ்ரீமதி சுசித்திரா ராமகிருஷ்ணன். ஸ்ரீமதி சுபத்திரா வெங்கட்ராமன். மாய்ரா வெங்கடராமன். அனிஷ்கா யசோமன். மதுரா சந்திரசேகரன். தாள வாத்தியம் நிமேஷன் சந்திரசேகரன் போன்ற இளம் கலைஞர்களால் தமிழ்த் தாய் வாழ்த்து. இறை வணக்கம் போன்ற இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றிருந்தன. மக்கள் நிறைந்த மண்டபத்தில் ஸ்ரீ யசோமன் தியாகராஜா ஐயரின் நிகழ்ச்சித்தொகுப்போடு தொடர்ந்த விழா. ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மி அம்பிகாபதி அவர்களின் விருந்துபசாரத்துடன் விடைபெற்றமை மகிழ்வான நிகழ்வாக அமைந்திருந்தது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.