தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியின் தமிழாய்வுத்துறையும் பன்னாட்டு இணைய ஆய்விதழான 'பதிவுக'ளும் இணைந்து நடத்திய 'தமிழ் இலக்கியஙளில் பண்பாட்டுப்பதிவுகள்' என்னும் தலைப்பில் அமைந்த தேசியக்கருத்தரங்கமானது 25.09.2019 அன்று சிறப்புடன் நடைப்பெற்றது. இத்தேசியக்கருத்தரங்கின் வரவேற்புரை மற்றும் சிறப்பு விருந்தினர் அறிமுக உரையினை தமிழாய்வுத்துறைத்தலைவர் முனைவர் மு. மங்கையர்கரசி அவர்கள் வழங்கினார். கல்லூரியின் ஆய்வுப்புல முதன்மையர் முனைவர் C.R. உத்ரா அவர்கள் தொடக்கவுரை வழங்கினார். இவ்வுரையில் பண்பாட்டின் சிறப்புகள், நமது வாழ்வியலில் பண்பாட்டுக்கூறுகள் பெறும் உயர்ந்த இடம், இன்றைய சூழலில் பண்பாட்டு ஆய்வுகளின் தேவைகள் ஆகியவை குறித்து விவரித்தார். E.S.S.K கல்விக்குழுமத்தின் பதிவாளர் முனைவர் E.செளந்தரராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இவ்வுரையில் தொன்மைக்கும் நவீனத்திற்கும் பாலமாய் நிற்கும் தமிழ் பண்பாட்டின் தனிப்பெரும் தனித்தன்மைகள், தமிழ் ஆய்வின் போக்குகள், பண்பாட்டு நெருக்கடிகள் மற்றும் பண்பாட்டு ஆய்வுகளின் தேவைகள் ஆகியவை குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். பதிவுகள் இதழின் ஆசிரியரும், படைப்பாளருமான வ.ந. கிரிதரன் அவர்களின் வாழ்த்துச்செய்தி மற்றும் பதிவுகள் இதழ் குறித்த பொது அறிமுகச்செய்திகள் வாசிக்கப்பட்டன.
இத்தேசியக்கருத்தரங்கில் கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழாய்வுத்துறையின் தலைவர் முனைவர் அ. ஹெப்சி ரோஸ்மேரி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முதல் அமர்வில், ‘தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள் (தொல் இலக்கியங்கள்) ’ என்னும் தலைப்பிலும், இரண்டாவது அமர்வில், ‘தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள் (தற்கால இலக்கியங்கள்)’ என்னும் தலைப்பிலும் உரையாற்றினார். இவ்வுரைகளில் தொல் இலக்கியங்களில் பதிவாகியுள்ள தமிழ் பண்பாட்டின் சித்திரிப்புகள், உலகமயச் சூழலில் தமிழர் பண்பாடு எதிர்கொள்ளும் பிரச்சனைகள், பண்பாடு குறித்த மீளாய்வுகளின் தேவைகள், பண்பாட்டு மாற்றங்கள், பண்பாட்டு மீட்டுருவாக்கத்தின் அவசியம், திராவிடப் பண்பாட்டின் எச்சங்கள் மற்றும் மக்கள் திரளை பண்பாடு வழி நடத்திச் செல்லும் வழிமுறைகள் ஆகியவை குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்.
இத்தேசியக்கருத்தரங்கில் பல்வேறு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளிலிருந்து வருகைபுரிந்த 30 ஆய்வாளர்கள் ஆய்வுக்கட்டுரைகளை வழங்கினார்கள். மேலும், 280 மாணவர்கள் பங்கேற்பாளர்களாகவும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். சிறந்த ஆய்வுக்கட்டுரைகளுக்கான பரிசுகள் மற்றும் இத்தேசியக்கருத்தரங்கில் கலந்துகொண்ட ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு சான்றோர் பெருமக்களின் திருக்கரங்களால் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வின் நன்றியுரையினை தமிழாய்வுத்துறையின் பேராசிரியர் முனைவர் வே. மணிகண்டன் அவர்கள் வழங்கினார். இவ்விழா நாட்டுப்பண் இசைக்க இனிதே நிறைவுற்றது.
மேலும் சில நிகழ்வுக் காட்சிகள்..
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
< Prev | Next > |
---|