இலங்கை: '1000 கவிஞர்கள் கவிதைகள்' உலகளாவிய பெருநூல் வெளியீட்டு விழா.

Friday, 29 September 2017 07:10 - ரசிகா - நிகழ்வுகள்
Print

1000 கவிஞர்களும், படைப்புகளும்.கவிதைகள் சார்ந்து தமிழ் மொழியிலும், பிற மொழிகளிலும் பல்வேறு நூல்கள் தொடராக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவை கவிதைகளாக, கவிதை பற்றிய ஆய்வுகளாக, கவிஞர்கள் சேர்ந்த தொகுப்புகளாக, கவிஞரின் தனி நூலாக என பல்வகைத் தளங்களில் உலாவருகின்றன. இந்தச் சூழ்நிலையில்தான் தமிழ்மொழிக்கு இன்னொரு புதிய வரவாக '1000 கவிஞர்கள் கவிதைகள்' பெருநூல் கிடைக்கின்றது. பல்வேறு நாடுகளினைச் சேர்ந்த‌ ஆயிரத்திற்கும் அதிகமான கவிஞர்களின் கவிதைகளினை ஒரே நூலில் காணும் வாய்ப்பினை வழங்கும் நூலே '1000 கவிஞர்கள் கவிதைகள்' பெருநூலாகும். 

2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்த நூலுக்கான கவிதைகள் பெறுவது தொடர்பான செய்திகள் பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணைய ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் என்பவற்றில் வெளிப்படுத்தப்பட்டன. உலக அளவில் ஆகக்குறைந்தது 25 நாடுகளின் கவிஞர்களையாயினும் இணைப்பதே இப்பணியின் முதல் இலக்கு எனினும் பணி தொடங்கப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளாகவே பாரிய வரவேற்பு உலகெங்கிலும் இருந்து கிடைத்தது. ஒவ்வொரு தேசங்களில் இருந்தும் கவிதைகளினை பெறும்பொருட்டு அந்தந்த தேசங்களுக்கு 'செயலாற்றுநர்' எனும் பணியில் பலர் ஈடுபட்டனர். இலங்கை, இந்தியா போன்ற தேசங்களுக்கு மாவட்ட ரீதியாகவும், மாநில ரீதியாகவும் செயலாற்றுநர்கள் இயங்கினர். செயலாற்றுநர்களின் தீவிரமான முயற்சியினால் விரைவாகவே கவிஞர்கள் நூலுடன் இணைந்துகொள்ளத் தொடங்கினர். குறிப்பாகச் சொல்வதென்றால் இந்தியா தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களின் கவிஞர்களும் இப்பெருநூலில் இடம்பெறுகின்றனர். இலங்கையின் அனைத்துப் பிரதேச கவிஞர்களும் பெருநூலுக்கு கவிதை அளித்துள்ளனர்.

'1000 கவிஞர்கள் கவிதைகள்' பெருநூலில் 32 நாடுகளின் 1098 கவிஞர்கள் இடம்பெறுகின்றனர். நூலின் மொத்தப் பக்கங்கள் 1861 ஆகும். இப்பக்கங்கள் ஏ4 தாள் அளவு கொண்டவை. நூலொன்றின் மொத்த நிறை 04.415 கிலோகிராம் ஆகும். நூலினை வள்ளுவர்புரம் செல்லமுத்து வெளியீட்டகம் வெளியிடுகின்றது.

இலங்கையின் மூத்த கவிஞர்கள் என சொல்லத்தக்கவர்கள் பலரும் பெருநூலினை அலங்கரிக்கின்றனர். சேரன், சோ.பத்மநாதன், எம்.ஏ.நுகுமான், அனார் என இப்பட்டியல் நீள்கின்றது. இந்திய அளவில் மூத்த, இளைய, சினிமாசார் கவிஞர்கள் என பலரும் நூலில் உள்வாங்கப்பட்டனர். அப்துல் ரகுமான், வைரமுத்து, கலைஞர் கருணாநிதி, கமல்ஹாசன், அறிவுமதி, பா.விஜய், தாமரை என யாவரும் இப்பெருநூலில் உள்வாங்கப்பட்டுள்ளனர். நூலின் பின் அட்டைக்குறிப்பினை தமிழுலகு அறிந்த உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் வரைந்திருக்கின்றார்.

நூலில் 12 வயதுடைய பிள்ளைக்கவி முதல் தொண்ணூறு வயது கடந்த கவிஞர்கள் வரையும் இடம்பெற்றுகின்றனர். இந்தியா தமிழ்நாட்டின் மாவட்டங்கள் தவிர புதுடில்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களின் கவிஞர்களும் நூலில் இடம்பெறுகின்றமை சிறப்பு.

புலம்பெயர் தேசத்தின் மூத்த, இளைய கவிஞர்களும் நூலில் பங்கேற்கின்றமை நூலுக்கு இன்னும் மெருகூட்டுகின்றது. உதாரணமாக சுவிட்சர்லாந்து தேசத்தின் 45 கவிஞர்கள் நூலிற்கு கவிதை அளித்துள்ளனர். இப்படியாக புலம்பெயர் தேசத்தினரின் ஒத்துழைப்பு நூலுக்கு பலம் சேர்க்கின்றது.

ஆசியாவின் பிற நாடுகளின் கவிஞர்களையும் பெருநூலில் காணலாம். மலேசியக் கவிஞர்கள் 15 பேர்கள், சிங்கப்பூர்க் கவிஞர்கள் 11 பேர்களும் நூலில் இடம்பெறுகின்றனர்.

'1000 கவிஞர்கள் கவிதைகள்' பெருநூலின் சிந்தனை இவ்விதமாகவே தோன்றியது. 2015ஆம் ஆண்டில் ஈழத்தின் வன்னியில் காட்டுக்குள் வைத்து 'ஆஷா நாயும் அவளும்' சிறுகதை நூலினை யோ.புரட்சி அவர்கள் வெளியீடு செய்த பின்னர், அவ்வனத்திலிருந்து நடந்த சிறு கலந்துரையாடலின்போது ஏற்பட்ட சிந்தனையே '1000 கவிஞர்கள் கவிதைகள்' பெருநூல். யோ.புரட்சி அவர்கள் இப்பெருநூலின் செயலியக்குநர் ஆவார். கனடா யமுனா நித்தியானந்தன் நூலில் பதிப்புரிமையாளராக உள்ளார். சர்வதேச தொடர்பாற்றுநராக பரீட்சன் இயங்கினார். ஆலோசனை, மற்றும் தேசங்கள், மாவட்டங்களுக்கான செயலாற்றுநர்களும் பணிகளோடு இணைந்து நூலினை வளமாக்கினர்.

இப்பெருநூலுக்கு கவிதை தந்த சில கவிஞர்கள் நூலினைக்கா ணுமுன்னெ மரணித்தமை துயரானது. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் நூலுக்கான கவிதை மற்றும் உரையினை தனது மரணத்திற்கு முன்னேயே தந்துவிட்டார். அத்துடன் ஆலோசகராகவும் இயங்கினார். அவர் நூலின் வெளியீட்டு விழாவிற்கு முன்னதாகவே மரணித்துவிட்டார். இந்தியா தமிழ்நாட்டின் பொதுச்செயலாற்றுநராக நூலுக்காக பணியாற்றி அநேகரின் கவிதைகளினை சேகரித்துத்தந்த மனோபாரதி அவர்கள் செப்டெம்பர் மாதம் மரணித்து விட்டார். கவிஞர்கள் இன்குலாப், நா.காமராசன், கல்வயல் வே.குமாரசுவாமி, அண்ணாமலை, எஸ்,ஏ.மத்தியூ, நா.ஜெயபாலன், அண்ணாமலை, நா.முத்துக்குமார், க.கிருஸ்ணராஜன் என மரணித்தோரின் பட்டியலும் உண்டு.

இப்பெருநூலில் இலகுவாக கவிஞர்களை தேடும் பொருட்டு அகரவரிசைப்படியான பொருளடக்கம் உண்டு. உதாரணமாக சிநேகன் என்பவரின் கவிதை தேடுவதெனில் பொருளடக்கத்தில் 'சி' எழுத்தில் அவரது தேச அடையாளப்படுத்தலுடன் பக்கம் இடப்பட்டிருக்கும். குறித்த பக்கத்தில் முகவரி, குறிப்பு, என்பவற்றுடன் கவிதை இடம்பெற்றிருக்கும்.

'1000 கவிஞர்கள் கவிதைகள்'  பெருநூலானது  அழகிய‌ பாதுகாப்புப்பெட்டி ஒன்றில் இடப்பட்டுள்ளது. 

'1000 கவிஞர்கள் கவிதைகள்' 
பங்கேற்கும் கவிஞர்களது 32 நாடுகளின் விரிப்பு

01. அமெரிக்கா
02. அவுஸ்திரேலியா
03. அயர்லாந்து
04. பஹ்ரைன்
05. பர்மா(மியன்மார்)
06. கனடா
07. சீனா
08. டென்மார்க்
09. துபாய்
10. ஈரான்
11. இங்கிலாந்து
12. பிரான்ஸ்
13. ஜேர்மனி
14. ஹொங்காங்
15. இந்தியா
16. இந்தோனேசியா
17. இத்தாலி
18. குவைத்
19. மலேசியா
20. நெதர்லாந்து
21. நியூசிலாந்து
22. நோர்வே
23. போர்த்துக்கல்
24. கட்டார்
25. ரஷ்யா
26. சிங்கப்பூர்
27. சவூதி அரேபியா
28. இலங்கை
29. சுவிட்சர்லாந்து
30. தாய்லாந்து
31. தைவான்
32. தென் ஆபிரிக்கா

(இந்தியா, தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் மற்றும் இந்திய பிற மாநிலங்கள், இலங்கையின் அனைத்து பிரதேசங்கள் என்பவற்றின் கவிஞர்களும் பெருநூலில் உள்ளடங்குகின்றனர்.)

பெருநூலின் வெளியீட்டு விழாவானது கீழ்வரும் திகதியில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
காலம்: 21.10.2017, சனிக்கிழமை.
இடம்: வீரசிங்கம் மண்டபம், யாழ்ப்பாணம், இலங்கை.
நேரம்: காலை 09.30 மணி. (காலை 09.30 மணிக்கு ஆயத்தமாதல்)

நிகழ்விற்கு தமிழுலகு அறிந்த  யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர்  வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் தலைமை வகிப்பார். அத்துடன் பத்து பேராசிரியர்கள் நூல் வெளியீட்டிற்கு முன்னிலை வகிக்கவுள்ளனர்.
நூலின் நோக்குரையினை அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தரும் பன்முகப் படைப்பாளி, முன்னாள் இந்து கலாச்சார விரிவுரையாளர் எம்.ஜெயராமசர்மா நிகழ்த்துவார்.

இலங்கை, இந்தியா, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா என பல தேசங்களின் படைப்பாளர்களும் நூல் வெளியீட்டில் பங்கேற்கவுள்ளனர்.

வெளியீட்டிற்கு முன்னதாக பல்வேறு கலாச்சார நிகழ்வுகளை உள்ளடக்கிய கலாச்சார பவனியும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

செயலியக்குநர்: யோ.புரட்சி
பதிப்புரிமை: யமுனா நித்தியானந்தன், கனடா.

வெளியீடு:செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம்.
பொதுத்தொடர்பு: (0094) 775892351   
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Thursday, 12 October 2017 19:41