லண்டனில் ‘மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக...’ நூல் வெளியீடு

Friday, 18 August 2017 12:44 - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் - நிகழ்வுகள்
Print

லண்டனில் ‘மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக...’ நூல் வெளியீடு‘திருநாவுக்கரசு சிறிதரன் (சுகு) அவர்களின் ‘மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக...’ என்ற நூல் விடுதலை சுவர்க்க பூமிக்காக ஏங்கும் அவரது கனவின் வெளிப்பாடாகும். ஒரு வன்முறையற்ற பூமியைநோக்கி,  படுகொலைகளைக் களைந்து சமூக சௌஜன்யத்துடன் வாழும் சூழலை அவாவிய கனவு அவருடையது. இனப்பிரச்சினைக்கான தீர்வினை நடைமுறையில் நின்று நிதானமாய்ப் பரிசீலிக்கும் சிறிதரன் தொடர்ந்தும் தன் இலட்சியப்பாதையில் தொய்வின்றிப் பயணம் செய்து வருகின்றார். கடந்த முப்பது ஆண்டு கால யுத்தப் பேரழிவினை, மனத்தடைகளைக் களைந்து பார்ப்பதற்கான ஒரு கைவிளக்காக இந்த நூல் திகழ்கிறது.

இலங்கை அரசும், இராணுவமும், விடுதலைப்புலிகளும் ஏற்படுத்திய அவலங்களை அவர் யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார். இத்துணை மனிதப் பலிகளை நிறுத்தி, 13ஆவது சட்டத்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், தமிழர்கள் பெற்றிருக்கக்கூடிய நன்மைகள் அதிகமாகவே இருந்திருக்கும் என்பதை இந்த நூல் தெளிவாக வெளிப்படுத்துகிறது. போலியான பிரகடனங்களின் பின்னால் செல்வதைவிடுத்து சிறிதரன் நெறிப்படுத்தியிருக்கும் அரசியல் பாதை நடைமுறை சார்ந்தது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை’ என்று அரசியல் விமர்சகர் மு.நித்தியானந்தன் லண்டனில் கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புரை ஆற்றும்போது தெரிவித்தார்.

‘திரு. சிறிதரனின் மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக ... என்ற தலைப்பு எங்கள் தமிழ் சமுதாயத்தின் மிகப் பிரமாண்டமான மாற்றத்தை எதிர்பார்க்கும் ஒரு நம்பிக்கையில் பிறந்த கருத்துக்களின் தொகுப்பே என்று நினைக்கிறேன். இந்த நூலில் இலங்கையில் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் இழந்துவிட்டவற்றை சொல்லியடங்காத துயருடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஒரு புதிய முற்போக்கான தலைமுறையை எதிர்பார்ப்பதுää தமிழ் மக்களின் அரசியலுடன் தன்னை நெருக்கமாகப் பிணைத்துக்கொண்ட சுகுபோன்ற தன்னலமற்றவர்களிடம் இருந்து துளிர்ப்பது யதார்த்தமானதாகும்’ என்று பிரபல நாவலாசிரியை ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தனது உரையின்போது தெரிவித்தார்.

அரசியல் வகுப்புகள் எடுப்பதில் சுகுவின் அணுகுமுறை யாரையும் கவரக்கூடியதாகும். இரவு பகலாக அவரது சிந்தனை முழுவதும் அரசியலை நோக்கியே மையம் கொண்டிருந்தது. இத்தனை மெல்லிய மனிதருக்குள் ஓர்மம் மிகுந்த அரசியல் குணாம்சம் நிறைந்து காணப்பட்டது. அவர் அரசியலில் பிரவேசித்த காலத்திலிருந்து இன்றுவரை அயராது.  தளராது எவ்வளவோ கஸ்டங்களுக்கு மத்தியிலும் அவர் செயற்பட்டு வந்திருப்பதை பாராட்டாமல் இருக்க முடியாது’ என்று கண்ணோட்டம் இதழின் ஒருங்கிணைப்பாளர் தோழர் தம்பா உரையாற்றும்போது தெரிவித்தார்.     ‘சொந்த வாழ்க்கையில் அன்றும் சரி இன்றும் சரி வறுமையில்  வாடும் தோழர் சுகுவின் எளிய வாழ்வு மனதில் துயரை ஏற்படுத்துவதாகும்’ என்று டாக்டர் பாலா தெரிவித்தார்.

‘தாராளவாத நவகாலனித்துவ சூழலுக்குள் இலங்கை சென்றுகொண்டிருக்கும் அபாயத்தை தோழர் சுகு தன்னுடைய நூலில் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றார்’ என்று வி.சிவலிங்கம் தனது விமர்சன உரையில் தெரிவித்தார்.


லண்டனில் ‘மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக...’ நூல் வெளியீடு


‘யாழ்ப்பாணத்தில் தன்னுடன் தொடர்ச்சியான அரசியல் கலந்துரையாடல்களை நடத்தி வந்த தோழர் சுகு அன்றைய கொள்கையிலிருந்து வழுவாமல் மிகுந்த பற்ருறுதியோடு தொடர்ந்து செயற்பட்டு வருவதை வலியுறுத்திக் கூற வேண்டும். தமிழ் மக்களின் சுபீட்சமான எதிர்காலம் குறித்த அவரின் கனவு மெய்ப்பட வேண்டும்’ என்று நிர்மலா ராஜசிங்கம் பேசுகையில் தெரிவித்தார்.

‘தனது பள்ளிக்காhலத்திலிருந்து பொதுப்பணியில் தீவிரமாக ஈடுபடும் ஒரு நண்பனாக தோழர் சுகுவை நான் காண்கிறேன். இன்றுவரை இலங்கை அரசியல் சார்ந்து மட்டுமல்ல சர்வதேச அரசியலிலும் தன் பார்வையை விஸ்தரித்துச் செல்லும் போக்கினை நாம் அவதானிக்க முடிகிறது’ என்று தோழர் முத்து தனது உரையில் குறிப்பிட்டார்.

‘தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்’ ஒழுங்கு செய்திருந்த இந்த நூல் வெளியீட்டுவிழாவை இரு அமர்வுகளில் சிவபாதசுந்தரம், எதுவரை எம். பௌசர் வழிப்படுத்தினர். விம்பம் - ஓவியர் கே.கே.ராஜா, பல்வேறு அரசியல் ஆய்வாளர்கள், இலக்கியவாதிகள் கலந்து கருத்துக்களைப் பகிர்ந்தும், சிறிதரன் - சுகுவுடனான தமது அனுபவங்களைப் பரிமாறியமையும் மிகச்சிறப்பாகவே இருந்தது.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
02.08.2017

 

Last Updated on Friday, 18 August 2017 12:48