நூல் அறிமுகம்: தமயந்தியின் ஏழு கடல்கன்னிகள்

Friday, 07 August 2020 21:56 - நடேசன் - நூல் அறிமுகம்
Print

நூல் அறிமுகம்: தமயந்தியின் ஏழு கடல்கன்னிகள்- நடேசன் -எழுவைதீவில் இருந்த காலத்தில் நான் கேட்டு வளர்ந்த பல தமிழ்ச் சொற்களை பின்பு அரைநூற்றாண்டுகளாக நான் கேட்டதில்லை. அதனால் அவை மூளையில் புதைபொருளாகிவிட்டன. தமயந்தி எழுதிய ஏழு கடல்கன்னிகள் என்ற சிறுகதைத் தொகுப்பின் பக்கங்களில் அந்த சொற்கள் மீண்டும் எழுந்து வந்தபோது மனம் புல்லரித்தது.

மீனவர்கள் மத்தியில் வளர்ந்தேன். சோளகம் , வாடை என்று பருவக்காற்றைச் சொல்வதும், அணியம் – சுக்கான் என மீன் பிடிக்கும் வள்ளங்களின் பாகங்களைக் குறிப்பதும், படுப்புவலை களங்கண்டி மீன்பிடிக்கும் முறையை அவர்கள் வர்ணிப்பதையும் மற்றும், அவர்களின் புழக்கத்திலிருந்த மண்டா போன்ற சொற்களையும் மறந்துவிட்டேன். இத்தொகுப்பில் மண்டாவை மீண்டும் வாசித்தபோது சிறுவயதில் ருசித்த கடற்தாமரை மீண்டும் நாக்கில் சுவையூட்டியது.

கம்யூனிசத்திற்கு எதிரான விலங்குப்பண்ணைபோல் T S எலியட்டின் புகழ்பெற்ற கொடுமையான சித்திரை மாதம் ( April is the Cruelest month) என்ற ஆங்கிலக் கவிதையும் சோவியத்தின் போல்சுவிக்குக்கு எதிராக எழுதப்பட்டது. இவை தொடர்ச்சியாக இலக்கியமாக மட்டுமல்ல சாதாரணமான மக்களது அன்றாட வார்த்தைகளிலும் வந்துவிட்டது. இலங்கையின் வடபகுதியில் இந்திய மீன்பிடி வள்ளங்கள் ஆக்கிரமித்து, கடற்சூழலை அழிப்பதற்கு எதிராக எழுதப்பட்டிருப்பதே தமயந்தியின் ஏழு கடற்கன்னிகள். நம்மைப் பொறுத்தவரை இது முதலாவது சூழலியல் இலக்கியம்

இலங்கையில் வடபுலத்தில் உள்ள ஏழு தீவுகளின் மையத்தில் வந்து கடல் நீரோட்டம் ஒன்றோடு ஒன்று மோதும்போது அலைகள் எழுந்து இயந்திர வள்ளங்களை தூக்கித் தூக்கிக் குத்தும். அப்பொழுது பயணம் செய்யும் எனக்கு வயிற்றைக் குமட்டியபடி வாந்தி வரும் . எழுவைதீவிலிருந்து ஒவ்வொரு கிழமையும் நயினாதீவுக்கு படிக்கப் போகும்போது அதை அனுபவித்தவன். கடல் என்பது உப்புத் தண்ணீர் மட்டுமல்ல. அங்கு வாழும் மீன், நண்டு, இறால் போன்ற உயிரினங்களோடு கடல் ஆமைகள், நட்சத்திர மீன்கள் போன்றவை வாழ்வதற்கான பளிங்குப்பாறைகளை உருவாக்கும் தாவரங்களையும் கொண்டது . இவற்றின் இடையே உள்ள கடல்பாசிகள் உயிரினங்கள் வாழ்வதற்கு அடிப்படையானவை. இவற்றை அழித்தால் மீன்கள் முட்டையிடாது, இறால் குஞ்சு பொரிக்காது, கடல் ஆமை வாழமுடியாது. கடல் பாலைவனமாகிவிடும்.

தமயந்தியின் தலைப்புக்கதை, தென்னிந்திய ரோலர்கள் எனும் இழுவைப் படகுகள் வந்து இங்குள்ள கடலில் தடை செய்யப்பட்ட இழுவைவலை போட்டு முற்றாகக் கடல் உயிரினங்களை அழிப்பது பற்றியது. இதை நானும் எழுவைதீவு சென்றபோது நேரில் பார்த்தேன். சுண்ணாம்பு பாறைகள் கொண்ட ஆழமற்ற கடல் என்பதால் அதிக மீன்கள் வாழும். அதே நேரத்தில் மிகவும் இலகுவாக அழிக்கப்படக்கூடிய பிரதேசம்.

இந்தப் பகுதி மீனவர்கள் சிறு வள்ளங்களிலே மீன்பிடிக்கிறார்கள். மேலும் இழுவைவலை இலங்கையில் தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதால் இங்கு இன்னமும் மீன்கள் உள்ளது . தமிழக இழுவைக்கப்பல்கள் இங்கு வருவதால் இங்குள்ள மீனவர்களை வறுமைக்குத் தள்ளுவது டன் கடல் வளத்தையும் அழித்துவிடுகிறது.

இந்த ஏழு கடல்களை தமயந்தி கடல் கன்னிகளாக உருவகித்து, அவர்கள் சிதைக்கப்பட்டிருப்பதாக எழுதிய சிறுகதையைப் படிக்கும்போது எனக்கு இதயத்தில் இரத்தம் கசிந்தது.

இந்தத் தொகுப்பில் முதல் சிறுகதையாக இருப்பது கிற்றார் பாடகன் எனும் நோர்வேஜிய பகைப்புலக்கதை. அதில் நோர்வேஜிய தெருப்பாடகன் அங்கு வாழும் கறுப்பு மக்களுக்காகப் போராடி, நாஜி காடையர்களிடம் அடிவாங்கி ஆஸ்பத்திரியிலிருக்கும் கதை. ஒவ்வொரு இனத்திலும் இப்படியான மனிதர்கள் வாழ்வதாலே மனிதாபிமானம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இதில் உள்ள எட்டாம் பிரசங்கம் என்பது நீண்டகதை. நாவலாக எழுதக்கூடியது . சிறுகதையிலிருந்து விலகி, ஒரு சமூகத்தின் வரலாற்றை வேறொரு தேசத்திலிருந்து நனைவிடை தோய்வது இந்தக்கதை.

இதில் பேசப்படும் பெப்பேனியன் அம்மான், முபாரக் அலி நானா , லோஞ்சிக்கார விநாயகமூர்த்தி முதலான மனிதர்கள் இறந்துவிட்டாரகள். அவர்களது வாழ்க்கை வரலாறு வருகிறது. இந்தக்கதை பல இடங்களில் விலகித் திரும்பி வருவதால் வாசிக்கும்போது கவனமிழக்கப் பண்ணுகிறது. என்னைப் பொறுத்தவரை இதில் வரும் நீர், நிலம், சம்பவங்கள் நெஞ்சிற்கு அருகாமையானதால் ஈடுபாட்டுடன் படிக்க முடிந்தது. ஆனால், மற்றவர்களைக் குழப்பலாம். தீவுப்பகுதி, யாழ்ப்பாணத்தில் வித்தியாசமான பிரதேசம் . அங்கே விவசாயத்திற்கு நிலமோ நீரோ கிடையாது. யாழ்ப்பாணத்தின் மற்றைய நிலங்களுக்குரிய சமூக அமைப்புக் கிடையாது. கடலில் மீன்பிடிக்கும் மக்கள் கத்தோலிக்க மதத்தில் சேர்ந்து கொண்டவர்கள்.

கிறிஸ்தவ மதத்தின் ஆரம்பக்காலத்தில் அதாவது யேசு கிறீஸ்து இறந்தபின் ஜேன்றில்( Gentiles) எனப்படும் கிரேக்கர்களுக்கும் யூத கிறிஸ்துவர்களுக்கும் வேறுபாடு இருந்தது. பல நூற்றாண்டுகள் இந்த வேறுபாடு தொடர்ந்தது. இதுபோல் சாதி ரீதியான வேறுபாடுகள் தீவகத்து கத்தோலிக்க மக்களிடமுமுள்ளது.

இலங்கையில் கத்தோலிக்க மதகுருவாகச் சேர்ந்த மேட்டுக்குடியினர் தொடர்ந்து அதிகாரத்தை வைத்திருக்கிறார்கள். கத்தோலிக்க மேட்டுக்குடியினரில் பெரும்பாலானவர்கள் இந்த தீவுப்பகுதியை சேர்ந்தவர்கள். இந்தக் கதைத் தொகுப்பில் சமூகவரலாறு உள்ளது. மதம், தொழில் மற்றும் புதிய நிலம் மாறிய போதிலும் சாதி வேறுபாடு நமது சட்டையில் ஒட்டிய கறை – இலகுவில் போகாது

தயந்தியின் ஏழுகடற்கன்னிகள் தொகுப்பினை ஒரு இலக்கியப் பிரதியாக மட்டுமல்ல, நமது சூழல் அழிவுக்கு எதிரான குரலாகவும் தீவுப்பகுதி மக்களது சமூக வரலாற்றுப் பதிவாகவும் பார்க்க முடியும்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 07 August 2020 22:20