வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'விடியல்' ஆய்வு நூல் பற்றிய கண்ணோட்டம்

Friday, 25 January 2019 22:49 - யாழ். ஜுமானா ஜுனைட் - நூல் அறிமுகம்
Print

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'விடியல்' ஆய்வு நூல் பற்றிய கண்ணோட்டம்பன்னூலாசிரியராகத் திகழும் வெலிகம ரிம்ஸா முஹம்மத் தனது கலையுலகப் பயணத்தின் அடுத்த கட்டமாக 'விடியல்' எனும் தலைப்பிடப்பட்ட நூலை வெளியிட்டுள்ளார். அழகானதொரு முன்னட்டைப் படத்தைக் கொண்ட 'விடியல்' ஓர் ஆய்வு நூலாகத் திகழ்கின்றது.

கவிஞர் மூதூர் முகைதீனின் பிட்டும் தேங்காய்ப் பூவும், இழந்துவிட்ட இன்பங்கள், ஒரு காலம் இருந்தது ஆகிய மூன்று கவிதை நூல்களை அழகாக ஆய்வு செய்யும் இந்த விடியல் ஆய்வு நூல் இலக்கிய அபிமானிகளுக்கு மட்டுமன்றி மாணவர் உலகிற்கும் பயனளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. ஐந்து அத்தியாயங்களை அடுக்கடுக்காகக் கொண்ட 'விடியல்', ஆய்வு நூலின் ஒழுங்கு முறைகளுக்கு இசைவாக அமைந்திருப்பதுடன் கட்டுக்கோப்பான ஒரு நூலுருவில் நூலாசிரியரால் யாத்தமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன ஒற்றுமைக்குப் பாலமிடும் கவிதைகளை தனது ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்திருப்பது இக்கால கட்டத்திற்கு உசிதமான ஓர் அம்சமாகும்.

வைத்தியக் கலாநிதி எம்.கே. முருகானந்தன் சிறப்பானதொரு முன்னுரையை இந்நூலிற்காக வழங்கியுள்ளார். அதில் அவர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். 'இளம் - வளர்ந்து வரும் எழுத்தாளர் அதேநேரம் கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் கதை என்ற இலக்கிய உலகிற்கு அப்பால் கணக்கியல் துறையிலும் படைப்பாற்றல் பெற்ற பெண் எழுத்தாளரின் இப்புதிய நூலுக்கு முன்னுரை எழுதக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கின்றது' என தனது சந்தோசத்தை வெளிப்படுத்தியவராக, தொடர்ந்து பல கருத்துக்களைக் கூறிக்கொண்டு செல்லும் அவர் இன்னுமோர் இடத்தில், 'ஆய்வுக்காக கடமை நிமித்தம் படித்து எழுதியது போலன்றி ஒவ்வொரு கவிதையிலும் மூழ்கி முத்தெடுத்து சிலாகித்து எம்மையும் அக்கவிஞரின் உலகிற்குள் அழைத்துச் செல்கிறார்.' என ரசனையுடன் படித்ததை சுவாரஸ்யமாகக் குறிப்பிடுகின்றார்.

மேலும் வைத்தியக் கலாநிதி முருகானந்தன் தன் முன்னுரையில், 'இன ஒற்றுமைக்குப் பின்பு தவறான முடிவுகளால் சந்தேகமும் பிரிவும் ஏற்பட்டமை, இதனைத் தாண்டி மீண்டும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை கவிதைகள் ஊடாக மூதூர் முகைதீன் எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பதை வெலிகம ரிம்ஸா முஹம்மத் சிறப்பாக எடுத்துச் சொல்கிறார்.' எனத் தொடர்ந்து செல்லும் அவர், 'ஆய்வு நூல் என்பதற்கப்பால் சகல தரப்பு வாசகர்களும் சுவாரஷ்யமாக வாசிக்கக்கூடிய முறையில் இந்த நூலை ஆக்கிய நூலாசிரியருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்| என்றவாறு தனதுரையை முடிக்கின்கிறார்.

கிண்ணியா எஸ். பாயிஸா அலி தனது வாழ்த்துரையில், 'சகோதரி வெலிகம ரிம்ஸா முஹம்மத் நம் நாட்டு முஸ்லிம் பெண் படைப்பாளிகள், இலக்கியச் செயற்பாட்டாளர்கள் வரிசையில் முன்னிலையில் தனித்துவப் போக்கோடு மிளிர்பவர். கவிதை, மெல்லிசைப்பாடல், சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம் என சமூகத் தளத்தில் தனக்கெனப் பல அடையாளங்களை வெளிப்படுத்தி வருபவர். பூங்காவனம் எனும் கலை இலக்கியச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகச் செயற்பட்டு பல்வேறு படைப்பாளிகளுக்குக் களம் அமைத்துக் கொடுப்பவர்.' எனக்கூறிச் சென்று இறுதியில் 'இன ஒற்றுமையையும் சமூக நல்லுறவையும் வலியுறுத்தும் மூதூர் முகைதீனின் கவிதைகள் பல்வேறு இலக்கியத் திறனாய்வாளர்களினாலும் ஆராயப்பட்டிருப்பினும் சகோதரி ரிம்ஸாவின் திறனாய்வுப் பார்வையும் அவரது அழகிய மொழி நடையும் கவிஞர் மூதூர் முகைதீனின் கவிதைகளுக்கு மென்மேலும் அழகையும் பொலிவையும் புதுப்புது ஆற்றல்களையும் காட்டி நிற்பதனைக் காண முடிகின்றது.' என்று முடிக்கிறார்.

நூலாசிரியர் தனதுரையில் தான் இதழியல் டிப்ளோமாப் பாடநெறியைக் கற்ற காலப்பகுதியில் சமாதானத்தை வலியுறுத்தி நிற்கும் மூதூர் முகைதீனின் கவிதைகள் பற்றி ஆய்வை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் அத்தியாயத்தில் கவிதைகள் பற்றிய அறிமுகத்தை வழங்கும் நூலாசிரியர், ஆய்வின் பிரச்சனை, நோக்கம், ஆய்வு முறையியல், ஆய்வின் வரையறை, ஆய்வு உள்ளடக்கம் என்பன பற்றி சிறப்பாக விளக்குகிறார். இரண்டாம் அத்தியாயத்தில் முதலாவதாக கவிதைக்கான வரைவிலக்கணத்தினை அலசும் அவர், 'கவிதைக்குத் திட்டவட்டமான வரைவிலக்கணங்கள் கிடையாது, எனினும் பொதுவாக கவிதை பற்றிச் சொல்வதென்றால் உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடு எனச் சுருக்கமாகச் சொல்லலாம்' என்கிறார். ஒரு கவிதையைப் படித்துவிட்டு குறிப்பிட்ட நான்கு கேள்விகள் கேட்கும் போது அதற்கு ஆம் எனும் விடை கிடைத்தால் அது நல்ல கவிதை என முடிவு செய்யலாம் என்று கூறும் நூலாசிரியர் அவற்றில் முதலாவது கேள்வி கவிதையின் வார்த்தைச் சேர்க்கைகள் காதில் ஒரு தரம் ஒலித்து உள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்புகிறதா என்பதாகும் என்று குறிப்பிடுகின்றார். இவ்வாறு கவிதை பற்றி தொடர்ந்து சுவாரஷ்யமான பல விளக்கங்களைக் கொடுக்கின்றார். அடுத்து கவிதைகளின் வகைப்பாடுகளை அழகாகவும் எளிதாகவும் முன்வைக்கும் நூலாசிரியர் நவீன கவிதை பற்றியும் கூறியுள்ளார்.

மூன்றாம் அத்தியாயத்தில் கவிஞர் மூதூர் முகைதீனைப் பற்றிய அழகானதொரு இலக்கியப் பார்வையை வாசகர்களுக்குத் தந்துள்ளார். அவரால் வெளியிடப்பட்ட பல நூற்களுள் ஆய்வுக்காக பிட்டும் தேங்காய்ப்பூவும், இழந்துவிட்ட இன்பங்கள், ஒரு காலம் இருந்தது ஆகிய 03 கவிதைத் தொகுதிகளையும் நூலாசிரியர் தெரிவு செய்திருப்பது இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. ஏனெனில் அக்கவிதைகள் பிளவுற்றிருக்கும் சமூகங்களுக்கிடையில் சமாதானத்தின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றன.

நான்காம் அத்தியாயம் விடியல் இப்புத்தகத்தின் இதயமாக அமைந்துள்ளது. இப்பகுதியில் தான் ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் ரிம்ஸா முஹம்மதினால் அழகுற அலசி ஆராயப்படுகின்றது. மேற்கூறப்பட்ட மூன்று கவிதைத் தொகுதிகளிலும் ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளுக்கு நூலாசிரியர் அற்புதமான விளக்கங்களை முன்வைத்துள்ளார். அத்தியாயம் ஐந்தில் கவிதைகளின் சமூக கலாசார பங்களிப்புக்களைப் பற்றிக் கூறியுள்ளார். 'இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி என்று சொல்லப்படுகின்றன. அதிலும் கவிதைகள் உணர்ச்சி பூர்வமாக மனிதனின் வாழ்வியலைப் பற்றி பேசக்கூடியனவாகும். வரலாறுபற்றி பல புத்தகங்களைப் படித்து விளங்குவதைவிட ஓர் ஆழ்ந்த கவிஞனின் கவிதையைப் படிப்பதனூடாக புரிந்துகொள்ளுதல் இலகுவாகின்றது| எனக் கூறும் நூலாசிரியர் அதே அத்தியாயத்தில் 'கவிதைகளை இரசிக்கும் ஆற்றல் உள்ளவர்கள் தம் மனதை சந்தோசப்படுத்தத் தெரிந்தவர்கள்' என கவிதைகளின் முக்கியத்துவம் பற்றி அழகுற வார்த்தைகளால் வார்க்கின்றார்.

ஈற்றில் தனது முடிவுரையில் 'உண்மையான ஒரு சமாதானம் வளர வேண்டுமானால் கவிஞர்கள் மாத்திரமன்றி ஒவ்வொருவரும் சமாதானத்தை விரும்ப வேண்டும் அதன் மூலம் ஐக்கியமான ஒரு நாடு, ஓர் உலகம் இனியாவது அரும்ப வேண்டும்' என சமாதானத்தின் முக்கியத்துவத்தை வாசகர்களுக்கு வலியுறுத்தியுள்ளார் நூலாசிரியர் ரிம்ஸா முஹம்மத்.

பின்னட்டைக் குறிப்பில் பன்னூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர் திக்குவல்லைக் கமால் அவர்கள், வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களைப் பற்றி 'தளிர்விட்டதும் தரித்துவிடும் மூடுதிரைக் கலாசாரத்துக்குள்ளிருந்து ஒரு கையில் எழுதுகோலும் மறு கையில் ஒளிச் சுடருமாய் முகிழ்ந்தெழுந்தவள் இவள்.. கதையாய்க் கவிதையாய் மதிப்புரையாய் தொடர்கிறது இவள் சுவடுகள்.. புத்தங்கள் பூத்தன ஒரு பூங்காவனமாய்ப் பூரித்தாள் இவள்..' எனத் தொடர்கின்றார்.

'விடியல்' நூல் ஆசிரியரான ரிம்ஸா முஹம்மத் அவர்கள் ஒரு பன்னூலாசிரியரும் பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மிகவும் பயனுள்ள இந்நூல் மூலம் தனது அடுத்த கட்ட சேவையை சமூகத்துக்கு இவர் சிறப்பாக ஆற்றியுள்ளார். இந்த விடியல் நூலானது, நூலாசிரியரின் 13 ஆவது நூல் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவரது அடுத்தகட்ட நகர்வை ஆவலுடன் எதிர்பார்த்து பன்னூலாரியர் ரிம்ஸா முஹம்மத் அவர்களின் பணி தொடர வாழ்த்துகின்றேன்!!!

நூல்:- விடியல்
நூல் வகை:- ஆய்வு
நூலாசிரியர்:- ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி:- 0775009222
மின்னஞ்சல்:- This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
விலை:- 400 ரூபாய்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Saturday, 18 May 2019 08:08