‘புதிய சொல்’ தனது 7 வது இதழினை வெளியிட்டுள்ளது. வழமையான சிற்றிதழ் மரபின்படியே இதழ் தாமதம் குறித்த கவலையுடனும் பதிப்புத்துறையில் ஏற்படுகின்ற சிக்கல்களையும் சவால்களையும் குறித்த ஆசிரியர் குழுவின் அங்கலாய்ப்புக்களுடனும் இவ் இதழும் வெளிவந்துள்ளது. இப்போதெல்லாம் கையில் கிடைத்தவுடன் ஆணியடித்தால் போல் இருந்து படித்து முடிக்கும் வண்ணம் ஒரு சில இதழ்களே வெளிவருகின்றன. அந்த வகையில் புதிய சொல்லும் தனது 7வது இதழினை சமகால நிகழ்வுகளை பிரதிபலிக்கும் மிகச் சிறந்த சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளுடன் மிக நேர்த்தியாக வெளியிட்டுள்ளது

சிறுகதைகள்
கிஸ்டீரியா – கற்சுதா - ஆயுதப்போராட்ட ஆரம்ப காலத்தில் ஆயுதக் குழுவொன்றினால் உளவாளியாகச் சந்தேகப்பட்டு ஒரு சிங்களப் பெண்ணிற்கு வழங்கப் பட்ட கொடூரமான தண்டனை குறித்து பேசுகின்றது.

ஏவல் - பாத்திமா மாஜிதா - முஸ்லிம் சமூகத்தில் பெண்கள் எதிர் கொள்ளும் சமூக அவலங்களையும் மதத்தலைவர்களின் போலித்தனங்களையும் சாடுகின்றது.

உறுப்பு - அனோஜன் பாலகிருஷ்ணன் -சிறு வயதில் சிங்கள இராணுவ வீரன் ஒருவனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படும் சிறுவன் ஒருவன் எதிர்காலத்தில் எதிர்நோக்கும் ஆண்மை குறைவு குறித்து பேசுகின்றது.

கவிதைகள்
நீலக் கண் பறவையின் அகாலப்பாடல் – ஷமீலா யூசுப் அலி அடையாள அட்டை – என்.ஆத்மா தளங்களும் முகங்களும் – அஸ்வகோஷ் யாத்தலும் நெய்தலும் – கிரிஷாந்

‘பதினோராம் நூற்றாண்டில் சோழர்கள் – கொள்ளை அரசியல்’ என்ற மிக நீண்ட கட்டுரையொன்று சோழர்களின் ஆதிக்க வெறி குறித்து பேசுகின்றது. சி.மோகன் மொழிபெயர்த்த ‘ஓநாய் குலச்சின்னம்’ நாவல் குறித்த கிரிஷாந்தின் கட்டுரை, யாழ் சர்வதேச சினிமா குறித்த சில பார்வைகள், போன்ற மேலும் பல விடயங்களை தாங்கி அற்புதமாக வெளிவந்திருக்கும் இவ்விதழ் ஆனது வாசிப்பு அனுபவங்களின் ஊடாக பயணிக்கும் வாசகர்களுக்கு அவர்களது அனுபவ எல்லைகளை விஸ்தரித்து ஒரு புதிய அனுபவங்களை கொடுக்கும் என நம்புகிறோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.