பூங்காவனம் 28 ஆவது இதழ் மீதான ஒரு பார்வைபூங்காவனத்தின் 28 ஆவது இதழ் ஓய்வு பெற்ற அதிபரும், இலக்கிய ஆர்வலருமான திருமதி மர்ளியா சித்தீக் அவர்களின் புகைப்படத்தை அட்டைப்படமாகத் தாங்கி வந்திருக்கிறது.

இதழின் பிரதம ஆசிரியர் தனது ஆசிரியர் கருத்துப் பக்கத்தில் குடிநீரின் முக்கியத்துவத்தைப் பற்றிய கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். மார்ச் மாதம் 22 ஆம் திகதி குடிநீர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால் நீரின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து நீர்ப்பாவனையை மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் முற்று முழுதான நீரின் 03 சதவீதமே மனிதனது பாவனைக்கு உள்ள நீரின் அளவான படியினால் நீரின் பாவனை எந்தளவுக்கு சிக்கனமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதனை எடுத்து விளக்கியிருக்கின்றார். நீர் போட்டிப் பொருளாகவும், வியாபாரப் பொருளாகவும் இன்று மாறியிருப்பதால் சில வேளைகளில் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள மென்பானங்களை உட்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன என்பதனையும் நினைவுபடுத்தியிருக்கிறார். எனவே வாசகர்களாகிய நாமும் அவரது கருத்துக்களை மனதில் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று சொல்லலாம்.

இனி பூங்காவனத்தின் உள்ளே வழமைபோன்று நேர்காணல், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நூல் மதிப்பீடு, வாசகர் கடிதம், நூலகப்பூங்கா ஆகிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

நேர்காணலில் இம்முறை திருமதி மர்ளியா சித்தீக் அவர்களின் நேர்காணல் இடம் பெற்றிருக்கிறது. அதேபோன்று பதினொரு கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கவிதைகளை பதுளை பாஹிரா, ஆ. முல்லைதிவ்யன், மருதூர் ஜமால்தீன், எம்.எஸ்.எம். சப்ரி, ஷப்னா செய்னுள் ஆப்தீன், டாக்டர் நாகூர் ஆரீப், ஏ.சீ. ஜரீனா முஸ்தபா, எம்.எம். அலி அக்பர்,  ஆர். சதாத், எச்.எப். ரிஸ்னா, குறிஞ்சி தென்றல் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

இந்த இதழில் நான்கு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றை வெலிப்பன்னை அத்தாஸ், சூசை எட்வேட், சுமைரா அன்வர், எஸ்.ஆர். பாலசந்திரன் ஆகியோரும், உருவகக் கதையை எஸ். முத்துமீரானும் எழுதியிருக்கின்றனர். கவிஞர் ஏ. இக்பால், கா. தவபாலன், ஆஷிகா ஆகியோர் கட்டுரைகளைத் தந்திருக்கின்றார்கள். கிச்சிலான் அமதுர் ரஹீமின் நூல் மதிப்பீடும் நூலில் இடம் பிடித்திருக்கிறது. ஐனுல் மர்ளியா சித்தீக் அவர்கள் இலக்கியப் பங்களிப்புக்களைவிட சமூக சேவைகளிலேயே அதிக ஈடுபாடு கொண்டு தம்மால் இயன்ற பங்களிப்புக்களைச் செய்து இருக்கின்றார். 75 வயதை எட்டியிருக்கும் இவர், கொழும்பு லெயார்ட்ஸ் புரோட்வேயைப் பிறப்பிடமாகவும், மொரட்டுவயை வசிப்பிடமாகவும் கொண்டவர். மருதானை கிளிப்டன் பாலிகா வித்தியாலயத்தில் தனது கல்வியை ஆங்கில மொழி மூலம் கற்று இருபதாவது வயதில் ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்றதோடு 1963 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை சுமார் 21 வருட கால சேவையின் பின்னர் அதிபராக பதவி உயர்வு பெற்று கொழும்பு கொம்பனித்தெரு அல் இக்பால் வித்தியாலயத்தில் கடமையாற்றினார். இப்பாடசாலை ஒரு மகளிர் பாடசாலையாக பரிமாற்றம் பெற்றதால் அப்பாடசாலையின் முதலாவது பெண் அதிபர் என்ற பெருமையையும் இவர் பெற்றுக் கொண்டார். இளம் முஸ்லிம் மாதர் சங்கம், முஸ்லிம் மாதர் கல்வி வட்டம், அகில இலங்கை முஸ்லிம் மாதர் மாநாடு, அகில இலங்கை பெண்கள் நிறுவனம், இலங்கை – பாகிஸ்தான் நற்புறவுச் சங்கம், அகில இலங்கை முஸ்லிம் பெண்கள் யூனியன் போன்ற பல்வேறு பெண்கள் அமைப்புகளில் உயர் பதவிகளை வகித்த வண்ணம், சமூக சேவைகளைப் புரிந்துள்ளதோடு தொடர்ந்தும் அச்சங்கங்களினூடாகப் பல்வேறு பங்களிப்புக்களைச் செய்து வருகின்றார்.

சமூக சேவைகளில் ஒன்றிப்போன இவரது சேவைகளைப் பாராட்டி அகில இன நல்லுறவு ஒன்றியம் ''சாமஸ்ரீ தேசமாண்ய'' என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. இதுதவிர இவருக்கு ''தேசசக்தி'', ''தேசகீர்த்தி'', ''ஜபருல் அமல்'' (சேவை இரத்தினம்) என்ற பட்டங்களும் கிடைத்துள்ளன. மனித உரிமை, மக்கள் பாதுகாப்பு அமைப்பினால் ''சேவை ஜோதி'' என்ற பட்டமும், தடாகம் கலை இலக்கிய வட்டம் உட்பட கல்வி கலாசார பண்பாட்டு அமைப்பினால் ''தன்னம்பிக்கைச் சுடர்'' என்ற பட்டமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.

குறிப்பாக நூல்கள் எதனையும் இதுவரை எழுதி வெளியிடாத இவர் தனது வாழ்க்கைக் குறிப்பை நூலாகக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதே வேளை சில நூல் வெளியீடுகளின் போது நூல் பிரதிகளைப் பெற்று தனது ஒத்துழைப்பையும் நல்கி வருகின்றார்.

கவிஞர் ஏ. இக்பால் தரும் இலக்கிய அனுபவ அலசல்களில் உமர் கையாம் பாடல்கள் சிலவற்றின் கருத்துரைகளைத் தந்திருக்கின்றார். சிறுகதைகளைப் பொருத்தவரையில் சூசை எட்வேட்என் 'தகராறு' என்ற கதை பஸ்ஸில் ஆசனப்பதிவு சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு தகராரை விளக்கியிருக்கின்றது. அதேபோன்று 'விதியின் வியூகம்' என்ற தலைப்பில் மல்லப்பிட்டி சுமைரா அன்வர் தந்திருக்கும் சிறுகதையானது ஒரு பாடசாலை ஆசிரியையின் அன்றாட அலுவல்களுக்கு மத்தியில் நடைபெறும் போராட்டங்களை எடுத்து விளக்குகிறது.

இன்னும் வெலிப்பன்னை அத்தாஸின் 'சின்னக்கிளி' என்ற சிறுகதை தாய்ப் பாசத்துக்கு அப்பால் இரண்டாவது கணவனாகத் திகழும் வேலுவினால் ஏற்படுத்தப்பட்ட தில்லுமுல்லுகளால் அனாதரவாக்கப்பட்ட சிறுமியின் வாழ்க்கையைச் சொல்லுகிறது. தாய் சரோஜினியின் விளக்கமறியல் இதற்கு விடை கூற வேண்டும்.

ஆண்டவனின் தீர்ப்பு காலம் கடந்தாலும் நல்ல தீர்ப்பாகத்தான் இருக்கும். அகிலாவை தாலியிழந்தவள் என்று ஒருவரும் மணக்க முன்வராமல் ஒதுக்கி வைத்திருந்தனர். என்றாலும் சாஸ்திர சம்பிரதாயங்களை ஒதுக்கிவிட்டு அகிலாவை மணக்க முன்வரும் மனோகரன் கஷ்டப்பட்டு படித்து என்ஜினியர் ஆனவன். குடும்ப நிலை காரணமாக பின் தங்கிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து படித்து முன்னுக்கு வந்தவன். அகிலா தாலி கட்டாமலே விதவையாக்கப்பட்டவள் என்றாலும் மனோகரனைவிட இரண்டு வருடங்கள் வயதில் மூத்தவள். வயது ஒன்றும் திருமணத்துக்கு தடையில்லை என்பதை மனோகரன் நிரூபித்துவிட்டான். மகாத்மா காந்தி, கஸ்தூரி பாயைவிட இளையவர். நபியவர்களைவிட கதீஜா அம்மையார் மூத்தவர். இவர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள்.

மேலும் இதழில் காலம் சென்ற இலக்கிய இமயம் கலாநிதி முல்லைமணி பற்றிய குறிப்புக்களை கலாபூஷணம் கா. தவபாலனும், பன்முக ஆளுமை கொண்ட ஐ.எஸ். நிஸாம் ஷெரீப் அவர்களின் ஷநம்பிக்கையாளர் யார்? என்ற நூல் பற்றிய பார்வையினை கலாபூஷணம் கிச்சிலான் அமதுர் ரஹீம் அவர்களும், ஷதற்கால முஸ்லிம் பெண்களும் இலக்கியப் பங்களிப்பும்| என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையை கொழும்பு ஆஷிகாவும் தந்திருக்கின்றார்கள்.

'பெருமை' என்ற உருவகக் கதையை எஸ். முத்துமீரான் தந்திருப்பதோடு பூங்காவனத்தில் பூத்திருக்கும் பன்னிரண்டு நூல்கள் பற்றிய அறிமுகக் குறிப்புகளும் தரப்பட்டிருக்கின்றன.

சகல அம்சங்களும் இடம்பெற்றுள்ள பூங்காவனத்தை ஒவ்வொருவரும் வாங்கி வாசிப்பதன் மூலம் இலக்கிய வாசனையை இனிதே நுகரலாம் எனக்கூறி மென் மேலும் பூங்காவனம் பூத்துக்குலுங்க வாழ்த்துகின்றேன்!!!

சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.