நூல் அறிமுகம்: ஒரு சகலகலாவல்லவனின் ஆடுகள வித்தை: யமுனா ராஜேந்திரனின் ‘உத்தமவில்லன்- The Anti Hero’ நூல் குறித்த சில பார்வைகளும் குறிப்புக்களும்

Friday, 16 June 2017 22:29 - எஸ்.வாசன் - நூல் அறிமுகம்
Print

ஒரு சகலகலாவல்லவனின் ஆடுகள வித்தை:  யமுனா ராஜேந்திரனின் ‘உத்தமவில்லன்- The Anti Hero’ நூல் குறித்த சில பார்வைகளும் குறிப்புக்களும்“இந்த இராவணனின் எந்த தலை உண்மையானது?” – இது மூன்றாவது மனிதன் பெப்ரவரி 2003 இதழில் பாலு மகேந்திரா குறித்து உமா வரதராஜனால் எழுதப் பட்ட ஒரு கட்டுரையின் தலைப்பு. மேற்குறித்த கேள்வி பாலு மகேந்திரா மீது மட்டும் தொடுக்கப்படும் கேள்வி அல்ல.  இப்படியான கேள்விகளை  பன்முகத்தன்மை கொண்ட  ஒவ்வொரு கலைஞனும் தன் படைப்பிலும் வாழ்விலும் மக்களிடமிருந்து தினந்தோறும் எதிர்கொண்ட வண்ணமே இருக்கின்றான். மேலும் அவனது படைப்புக்கும் வாழ்விற்கும் இடையேயான இடைவெளிகள் அதிகரிக்கும் பட்சத்தில் இது போன்ற கேள்விகளின் வீச்சு இன்னும் பலமானதாகவும் வீரியம் மிக்கதாகவும் விளங்கும். இதே போன்ற  பல்வேறு விதமான கேள்விகளை உள்ளடக்கி, அன்று தொடக்கம் இன்றுவரை  தனது திரைப்படங்களிலும் நிஜவாழ்க்கையிலும் என்றுமே சர்ச்சைகளை உருவாக்கி வரும்  நடிகர் கமல்ஹாசன் மீதும் அவர் உருவாக்கிய பாத்திரங்கள்,படைப்புக்கள்  மீதும் யமுனா ராஜேந்திரனால் வைக்கப்பட்ட விமர்சனக்கட்டுரைகளின் தொகுப்பாக ‘உத்தமவில்லன் – The Anti-Hero ‘  என்னும் 12௦ பக்கங்கள் அடங்கிய சிறு நூலொன்று பேசாமொழி பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.


யமுனா ராஜேந்திரன் தமிழக-ஈழ, புகலிட அரசியல் கலாச்சாரத் தளத்தில் பன்முகத்தன்மையுடன் இயங்கும் ஒரு படைப்பாளி, இடதுசாரி செயற்பாட்டாளர், சிந்தனையாளர். இதுவரை முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் சினிமா குறித்த விமர்சங்களையும் ஆய்வுகளையும் முன்னெடுப்பதில் எப்போதும் முழு மூச்சாக உழைப்பவர். ஒரு இடதுசாரி செயற்பாட்டாளராக இருந்தபோதிலும் வரட்டுத்தனமான கொள்கைகளினாலும் வரட்சி நிறைந்த கருத்துக்களினாலும் தனது நிலைப்பாட்டினை முன்னெடுக்காமல், உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மூன்றாம் உலகம் குறித்த கலை, இலக்கிய, பண்பாட்டுக் கூறுகளை தமிழிற்கு அறிமுகம் செய்ததில் முதன்மையானவர். இன்று பல்வேறு விதமான பிற்போக்கு சக்திகளின் ஊடாக கொந்தளிப்புக்குள்ளாகி வரும் ஈழ-தமிழக அரசியல் சூழலில் தனது எழுத்துக்களின் மூலம் ஒரு கருத்துமையமாகத் திகழும் இவர், இத்தளத்தில் ஒரு அசைவியக்கமாகத் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார். இத்தகைய பல்வேறு பரிமாணங்களில் தொடர்ந்தும் செயலாற்றி வரும் யமுனா ராஜேந்திரன், தமிழக அரசியல் கலாச்சாரத் தளத்தில் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கிவரும் கமல்ஹாசனை தனது கவன வட்டத்திற்குள் எடுத்துக் கொண்டது ஒன்றும் வியப்பான விடயம் இல்லை. கமல்ஹாசன் – ஒரு அற்புதமான கலைஞன் என்பது கலையை நேசிக்கும் எவராலும் மறுத்துரைக்க முடியாத உண்மை. உலகநாயகன் என்று அவரது ரசிகர்களாலும் உலக்கைநாயகன் என்று தமிழகத்தின் ஒரு பிரபல பத்திரிகையாளராலும் அழைக்கப்படுபவர். கடவுள், கற்பு என்ற கருத்துருவாக்கங்கள் தொடக்கம் சென்னைப்பெருமழை வரை தொடர்ந்த அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்கள், இன்று கருப்புப்பண ஒழிப்பு விவகாரத்திலிருந்து ஜெயலலிதா, சசிகலா விவகாரம் வரை தொடர்ந்தும் சர்சையையே ஏற்படுத்தி வருகின்றது. இவரது பேச்சுக்களும் செயல்களும் சிலவேளைகளில் அதிரவைக்கும். சிலவேளைகளில் வியக்க  வைக்கும், சிந்திக்க வைக்கும். இன்னும் சிலவேளைகளில் வெறுக்கவும் சிரிக்கவும்  வைக்கும்.

அன்றைய களத்தூர் கண்ணம்மாவிலிருந்து இன்றைய பாவநாசம் வரை இவரது அறுபது வருடத்திற்கும் மேற்பட்ட திரையுலக வாழ்வில் வெளியான இவரது 200  இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அதிகமானவை தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் பல மைல் கற்களாக விளங்கியவை என்பதையும், இதில் பலவும் தமிழக அரசியல், பண்பாட்டு தளத்தில் பலத்த அதிர்வுகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியவை என்பதினையும் நாம் மறுக்க முடியாது. மேலும் இவற்றில் சில  உண்மையிலேயே அற்புதமான திரைக்காவியமாக விளங்கியவை என்பதுவும் நாம் அறிந்தவையே. அன்றைய நாட்களில் வெளிவந்த  உணர்ச்சிகள், அவள் அப்படித்தான், அபூர்வ ராகங்களிலிருந்து பின்னாளில் வெளிவந்த ராஜபார்வை, மூன்றாம் பிறை, நாயகன், பேசும் படம், தேவர் மகன், விருமாண்டி,அன்பே சிவம்  என இப்படங்களின் பட்டியல் மிக நீளமானது. 

இத்திரைப்படங்களுக்கும் அப்பால் இவர் தனது நிஜ வாழ்வில் தன்னை வெளிப்படுத்தும் விதத்தில் கூட பல்வேறு சிக்கல்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கி வருகின்றார். இவை யாவும் இவரது நிஜ முகமா அல்லது இது இவரது நடிப்பின் தொடர்ச்சியா என்று ஒரு புரிந்து கொள்ள முடியாத ஒரு புதிராகவே பார்வையாளர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் என்றும் இருந்து வருகின்றார்.

கீழ் வெண்மணி படுகொலை குறித்த பாரதி கிருஷ்ணகுமாரின் ஆவணப் படமாகிய ‘ராமையாவின் குடிசை’ வெளியீட்டு விழாவிற்கு சமூகமளித்த இவர், எரியூட்டப்பட்ட அஸ்தியை இன்னொரு தோழரிடம்  கையளிக்கும் போது இந்நிகழ்வுகள் பற்றிய இவரது கவன வட்டம் எம்மை வியக்க வைக்கின்றது. ஆனால் அதே வருடமே வெளியான அவரது   ‘குருதிப்புனல்’ படத்தில் பல்வேறு விதமான புரட்சிகர சக்திகளுக்கும்  எதிரான கருத்துக்களை முன் வைக்கும் போது எமக்குள் குழப்பம் ஏற்படுகின்றது.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் பேராசிரியர் தொ.பரமசிவனின் புத்தகங்களை மற்றவர்களுக்கு விநியோகம் செய்கிறார். இது தொ.பரமசிவனை மானசீக குருவாக வரித்துக் கொண்ட எம் போன்றவர்களை புல்லரிக்க வைக்கின்றது. புளகாங்கிதம் அடையச் செய்கின்றது. ஆனால் இதற்கும் சில வாரங்களுக்குள்ளேயே இன்னொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இவர் இந்துத்துவா எழுத்தாளரும் பாசிஸ்டுமான ஜெயமோகனின் ‘அறம்’ என்ற நூலினை ஒரு அற்புதமான நூலாக கூறி எமக்கெல்லாம் விளக்கம் அளிக்கும் போது நாம் அதிர்ச்சியில் உறைந்து போய் விடுகின்றோம்.

இதே போன்றே இன்னுமொரு பத்திரிக்கை பேட்டியில் ஆந்திர புரட்சிகர  மக்கள் கலைஞர் கர்த்தார் பற்றி குறிப்பிட்டு அவர் பற்றிய உரையாடலை தொடர்கிறார். இவரது இந்த புரட்சிகர சிந்தனை எம்மை வேர்க்க விறுவிறுக்க வைக்கின்றது. ஆனாலும் அதற்கு அடுத்த வருடமே வெளி வந்த சிங்காரவேலனில் ‘ஓ ரங்கா சிறிரங்கா கொப்பரத் தேங்காய்’ என்று குஷ்பு பின்னால் ஆடிப் பாடி அல்லாடும் போது இவ்வளவுதானா இந்த மனிதர் என்று எம்முன் கேள்வியொன்று எழுகின்றது.

இப்படியாக இந்த சகலகலாவல்லவனின் ஆடுகள வித்தைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த ஆடுகள வித்தைகளை, ஒரே சமயத்தில் தன் வெவ்வேறு முகங்களை  எம் முன் வெளிப்படுத்தும் இந்த மனிதரின் உண்மையான முகத்தை வெளிக்கொனரும் முகமாக யமுனா ராஜேந்திரன் தனது வாசிப்பனுபவங்களினூடும் மற்றைய தென்னிந்திய, மேற்கத்தேய, மூன்றாம் உலக சினிமாக்களின் அனுபவங்களோடும்  தான் விரித்துக் கொண்ட தனது இடதுசாரிய தத்துவார்த்த சிந்தனைகள் சார்ந்து ஆராய்ந்து இச்சிறு நூலினூடே விபரிக்கின்றார்.

தனது ஆய்விற்கும் விமர்சனத்திற்கும் கமல்ஹாசனது சமகாலத்தில் வெளியான நான்கு திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அதனை பின்வரும் நான்கு தலைப்புக்களில் நான்கு கட்டுரைகளாக விரிவான விளக்கங்களோடு எம்முன் வைக்கிறார்.

ஹே ராம் – ஆர்.எஸ்.எஸ். ஊழியனின் உளவியல்.
தசாவதாரம் – உயிர்கொல்லி நாயகனின் தமிழ் அவதாரம்.
உன்னைப் போல் ஒருவன் – பயங்கரவாதம் குறித்த பயங்கரவாதம்.
விஸ்வரூபம் – அமெரிக்கப் பைத்திய நிலை தரும் சந்தோசம்.

இத்தலைப்புக்களே எமக்கு இலகுவாக இனம் காட்டி விடும் சமகால அரசியல் சமூக கலாச்சார சூழ்நிலையில் அந்த கலைஞனது நிலை என்ன என்பதினையும்  அது குறித்து ஆசிரியரின் நிலை என்ன என்பதினையும். இன்றைய தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் மிகவும் அச்சுறுத்தலாக உள்ள இந்துத்துவா, இஸ்லாமிய எதிர்ப்புணர்வு, உலகமயமாதல், அமெரிக்க அச்சுறுத்தல் என்பவற்றை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் தனது சார்பு நிலை எது என்பது குறித்து ஒரு தெளிவற்ற நிலையில் கலைஞன் தடுமாறுகின்றான். ஆனால் ஆசிரியரோ  அதன் பின் உள்ள நுண்ணரசியலை உள்ளே நுழைத்து  அறிந்தோ அறியாமலோ கலைஞன் எம்மை இட்டு செல்லும் ஆபத்தான பாதை குறித்தும் வழிமுறைகள் குறித்தும் தெளிவாக எமக்கு தெரியப்படுத்துகிறார். இந்து-முஸ்லிம் பிரச்சினை குறித்தும்  அமெரிக்காவின் இஸ்லாமிய நாடுகளின் மீதான படைஎடுப்பு குறித்தும் பேசுகின்ற இப் படங்கள் குறித்த இவரது விவாதமானது இந்த விடயங்கள் குறித்து மட்டுமன்றி அதற்கு அப்பாலும் போகின்றது. ஈழ-காஷ்மீர் பிரச்சினை, கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு, யாழ்ப்பான முஸ்லிம் மக்கள் வெளியேற்றம், பாபர் மசூதி தகர்ப்பு, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், காந்தி படுகொலை, ஈராக் இரசாயன ஆயுதம், ஆப்கான் யுத்தம், என இவர் பேசுகின்ற விடயங்கள் எம்மை இவ்வுலகின் வெவ்வேறு எல்லைகளுக்கு இட்டு செல்கின்றது.

அத்துடன் இவர் இப்படங்களை விமர்சிப்பதற்காக இதற்கு சமாந்தரமாக மற்றய இந்திய மொழிகளில் இருந்தும்  ஆப்பிரிக்க, ஆசிய, ஈரானிய,    ஆங்கில, மொழிகளில் இருந்தும்  வெளி வந்த படங்கள் பற்றிய குறிப்புக்களை  தரும்போது இவ்வெழுத்துக்களுக்கு பின்னால் உள்ள கடுமையான உழைப்பு எம்மை வியக்க வைக்கின்றது. மேலும் ஏற்கனவே எமக்கு தெரிந்ததும் அறிந்ததுமான விடயங்களை இவர் வேறு ஒரு கோணத்தில் அணுகி வேறு வகையான வெளிச்சங்களை பாய்ச்சுவது எம்மை வியக்கவும் திகைக்கவும் வைக்கின்றது. எந்தவித அலங்காரங்களுமற்ற ஜோடனைகள் அற்ற எழுத்து நடையில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் ஆனவை வாசிக்கும்போது ஒரு படைப்பிலக்கியம் தருகின்ற பரவசத்தினை விட அதிக பரவசத்தினையும் ஆனந்தத்தினையும் எமக்கு ஏற்படுத்துகின்றன.

மிகவும் அடிப்படையாக இந்நூலானது  தொழில்நுட்ப துறையிலும் அழகியலிலும் அசுர வளர்ச்சி பெற்ற பிம்பங்களினாலும் காட்சிப்படிமங்களினாலும் ஆன திரைப்படத் துறையானது அரசியல் ரீதியாக எப்படி சாதாரண மக்களை பலவீனமாக்குகின்றது என்பதை தெட்டத்தெளிவாக வெளிக்கொணர்கின்றது.

மேலும் யமுனா ராஜேந்திரனின் படைப்புகள் ஏற்படுத்தும் அசௌகரியங்கள் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இவரது கட்டுரைகளைப் படிக்கும் எந்த ஒரு வாசகனாலும் இதனை வாசித்து முடித்து விட்டு நிம்மதியாக இருந்து விட முடியாது.  ஒரு தேடல் மிகுந்த வாசகன் இதனைப் படித்து முடித்து விட்டு, இவர் குறிப்பிடுகின்ற தகவல்களையும் உலக சினிமாக்களையும், நூல்களையும் தேடி அலைந்து அல்லல்படுவான் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ஈழ-தமிழக உலக அரசியல் சமூகம் கலாச்சாரம் குறித்து விலாவாரியாக விபரிக்கும் இந்நூலானது இன்றைய சூழ்நிலையில் தவிர்க்கப் பட முடியாத ஒன்றாகும். ஒரு சிறிய விலை கொடுத்து வாங்கி படிக்கும் வகையில் வெளிவந்துள்ள இந்நூலானது வெளிப்படுத்தும் தகவல்கள் மிக மிக அபரிதமானவை. பக்கத்திற்கு பக்கம் மிக அதிகப் படியான தகவல்களால் நிரம்பி வழியும் இந்நூலினை வாசிக்க மறுப்பவர்கள், நிராகரிப்பவர்கள், அல்லது கண்டும் கண்டு கொள்ளாது விடுபவர்களது  சமூக அரசியல் செயற்பாடுகளை நாம் சந்தேகக் கண் கொண்டே பார்க்க வேண்டியிருக்கின்றது. யமுனா ராஜேந்திரன் தொடர்ந்தும் இது போன்ற படைப்புக்களை உருவாக்கி ஈழ- தமிழக, புகலிட அரசியல், சமூக, பண்பாட்டு தளத்தில் தொடர்ந்தும் ஒரு அசைவியக்கமாச் செயற்பட வேண்டுமென்பது எமது விண்ணப்பமும் வேண்டுகோளும் ஆகும்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 16 June 2017 22:34