“விந்தைமிகு விண்வெளி விபத்து” விஞ்ஞான நாவல் - நூல் விமர்சனம்

Saturday, 24 September 2016 04:47 - அகணி சுரேஸ், கனடா - நூல் அறிமுகம்
Print

“விந்தைமிகு விண்வெளி விபத்து”   விஞ்ஞான நாவல் - நூல் விமர்சனம் ஈழத்தில் இருந்து கனடாவிற்குப் புலம்பெயர்ந்து தமிழ் மொழியில் விஞ்ஞானத்தை வாசகர்களிடம் இலகு தமிழில் எடுத்துச் செல்லும் நோக்குடன் பல அறிவியல் நூல்களை உருவாக்கியதோடு தொடர்ச்சியாக அறிவியல் கட்டுரைகள், கவிதைகள், தொடர்கதைகள் போன்றவற்றைப் படைத்து வரும் எழுத்தாளர் கனி விமலநாதன் அவர்களின் “விந்தைமிகு விண்வெளி விபத்து” என்ற தலைப்புக் கொண்ட விஞ்ஞான நாவல் எனது கையில் கிடைத்ததும் மிக்க ஆவலுடன் படிக்கத் தொடங்கினேன். நாவலைப் படித்து முடித்ததும் நாவலைப் பற்றி ஒரு விமர்சனக் கட்டுரையை எழுத வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஊற்றெடுத்தது. நாவலை வாசிக்கத் தொடங்கியதும் நான் முழுமையாக வாசித்திட வேண்டும் என்ற ஆவலை எனக்குக் கொடுத்ததை வைத்துக் கொண்டே நூலாசிரியர் வாசகர்களிற்கு ஆவலைத் தூண்டும் வகையில் இந்த நாவலைப் படைப்பதில் வெற்றி கொண்டுள்ளார் என்று திடமாக என்னால் கூற முடிகின்றது.

கனி விமலநாதன் ஒரு முழுமையான கலைஞர். வில்லுப்பாட்டு, நாடகம், இசைப்பாடல் எனப் பல்வேறு பரிமாணங்களில் தனது திறமையை மேடைகளில் இவர் காட்டி வருவதை நான் நன்கு அறிவேன். நாவலில் வரும் உரையாடல்களில் இவர் கையாளும் வாக்கிய அமைப்புக்கள் இவரின் கலைத்திறமையை வெளிக்காட்டுகின்றன.
நாவல் ஆப்பரே~ன், ஆச்சிவீடு, கனடாவில் இனியன், இன்னொரு, இன்னமும் முடியவில்லை என ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டதோடு ஒவ்வோரு பாகங்களும் தனித்தனி குறுநாவல்களுக்கான கட்டமைப்புடன் அமைவதோடு வாசகர்களிற்கு விறுவிறுப்பையும், எதிர்பாராத திருப்பங்களையும் கொடுக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. நாவலின் “இன்னமும் முடியவில்லை” என்ற இறுதிப் பாகம் இந்த நாவல் இன்னும் தொடரப் போகின்றதா? ஏன்ற கேள்வியையும் எழுப்பி அறிவியல் பாடத்தையும் வாசகர்களுக்கு அள்ளி வழங்கி நிறைவு பெற்றுள்ளது.

“ஆப்பரே~ன்” என்ற தலைப்பில் அமைந்துள்ள முதலாம் பாகத்தில் வைத்தியர் மகாதேவன் என்ற உயர்ந்த இலட்சியம் கொண்ட கதாபாத்திரத்தை நாவலாசிரியர் கவனமாக தனது கற்பனைத் திறனோடு கையாண்டிருக்கின்றார். இவர் போன்ற வைத்தியர்கள் நமது சமூகத்தில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை நாவலாசிரியர் இந்த நாவலின் ஊடாகப் பதிவு செய்கின்றார். சோதிடர் நீலகண்ட கணியர்  என்ற கதாபாத்திரத்தை நாவலில் கொண்டு வந்து “ஒரு கல்லால் இரண்டு மாங்காய்கள்” என்ற முதுமொழி போன்று இரண்டு விடயத்தை நாவலாசிரியர் சாதித்திருக்கின்றார். சோதிடர்கள் கூறும் எச்சரிக்கைகளை மனதில் கொண்டு வைத்தியர்களின் அறிவுரைகளைப் புறக்கணிக்கக் கூடாது என்ற அறிவுரையையும் வழங்கி, சோதிடம் என்ற விஞ்ஞானமும் முற்றிலும் பொய்யானதல்ல என்ற நடுநிலைப் போக்கையும் வெளிக்காட்டியிருக்கிறார்.

“ஆச்சிவீடு” என்ற நாவலின் இரண்டாம் பாகம் ஒரு விறுவிறுப்பான துப்பறியும் நாவல் போன்று அமைந்திருந்தது. ஆனால் நாவலின் இறுதிப் பகுதிகளை வாசிக்கும் பொழுதே விஞ்ஞான நாவலாக அமைவதற்கான அடித்தளம் இந்தப் பாகத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது என்பது புரிகின்றது. நாம் வாழும் சமூகத்தில் ஒரு துர்ப்பாக்கிய சம்பவம் நிகழும் பொழுது அச்சம்பவத்திற்கான பழியைப் பலர் மீதும் சுமத்தப்படுதல்;, துப்பறியும் முயற்சியில் பலரும் சந்தேக நபர்கள் ஆக்கப்படுதல்; போன்ற சமூக யதார்த்த நிலைகளையும் நாவலாசிரியர் கவனத்துடன் உட்புகுத்தி கதையினையும் விறுவிறுப்பாக்கியுள்ளார்; என்றே எண்ணத் தோன்றுகின்றது. கதாபாத்திரம் நீலகண்டர் மீது எனக்கு கதையின் நகர்வால் பரிதாபம் ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

நாவலில் பாகம் மூன்றின் தலைப்பு நாவலின் பொருளடக்கத்தைப் பார்க்கும் பொழுதே நாவல் செல்லும் திசையை முன்கூட்டி அறிவிக்கச் செய்து விடுமோ என்ற அச்சத்தை எனக்கு ஏற்படுத்தியது. ஆனால் பொருளடக்கத்தைப் படிக்காது நாவலினை நான் படித்ததால் அந்தப் பாதிப்பு எனக்கு எற்படவில்லை என்பதையும் நான் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். முழுநாவலின் தலைப்பு “விந்தைமிகு விண்வெளி” என்று அமைந்திருந்தால் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. நாவலிற்கான தலைப்புக்களை பதிப்பகங்கள் தமது எண்ணத்திற்கு ஏற்றவாறு மாற்றி விடுவதால் இது நாவலாசிரியன் தெரிவாக இல்லாமல் இருந்திருக்கலாம். நாவலின் மூன்றாம் பகுதியின் ஈற்றில் சற்றும் எதிர்பாராத விதத்தில் திருப்பத்தைக் கொடுத்து நாவல் நகரவேண்டிய திசைக்கான ஆரம்பத்தையும் கொடுத்து நாவலாசிரியர் வெற்றி கண்டுள்ளார்.

நாவலின் நான்காம் பகுதியில் நாவலாசிரியரின் கற்பனைத்திறன் நன்கே வெளிப்படுகின்றது. ஈழமக்களின் போராட்டப் பாதிப்பையும் சாதுர்யமாக நாவலில் பதிவு செய்து விட்டார் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டதோடு அதற்காகவும் நாவலாசிரியரைப் பாராட்டிக் கொள்கின்றேன். நாவலாசிரியர் அறிவியல் கருத்துக்களை எவ்வளவு திறமையாக இந்த நாவலில் விதைத்து நாவலை நிறைவு செய்திருக்கிறார் என்று பார்க்கும் பொழுது தனது நோக்கத்தில் முழுமையான வெற்றியைப் பெற்றுக் கொண்டார் என்பதில் ஐயமில்லை. வாசகர்கள் சற்றுப் பொறுமையுடன் இவற்றை வாசித்து அறிந்து கொள்ளுதல் நல்லது.

நாவலின் இறுதிப்பகுதி விஞ்ஞான ஆய்வுகளின் தொடர்ச்சி தொடரப்பட வேண்டியதே என்ற யதார்த்த நிலையையும் வெளிப்படுத்தி நாவல் இன்னும் தொடரப்போகின்றதோ என்ற வினாவையும் வாசகர்கள் மனத்தில் ஏற்படுத்தும் என்று நினைக்கின்றேன். நாவலைப் படித்து முடித்ததும் பயனுள்ள ஒரு நாவலைப் படித்து விட்டேன் என்ற மன நிறைவு ஏற்பட்டது. கனி விமலநாதன் அவர்களின் அருமையான படைப்பு. இந்த நாவலை வாசகர்களாகிய நீங்களும் வாங்கிப் படிக்க வேண்டும். இந்த நாவலினை உருவாக்கிய எழுத்தாளர் கனி விமலநாதன் மேலும் பல படைப்புக்களைத் தரவேண்டும் என்று வாழ்த்தி நிறைவு செய்கின்றேன்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 24 September 2016 04:54