நூல் அறிமுகம் : அழிந்த ஜமீன்களும் - அழியாத கல்வெட்டுக்களும் ஆய்வு நூல்!

Wednesday, 05 November 2014 21:29 - அனீஷ் - நூல் அறிமுகம்
Print

நூல் அறிமுகம் : அழிந்த ஜமீன்களும் - அழியாத கல்வெட்டுக்களும் ஆய்வு நூல்!நீண்ட நெடிய பாரம்பரிய பண்பாட்டை கொண்டது தமிழ் மரபு. அதை ஆய்வு நோக்கில் பயணிக்கிறது. 'அழிந்த ஜமீன்களும்-அழியாத கல்வெட்டுக்களும்'. பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்கள், நீர்நிலைகள், நாணயங்கள், செப்பேடுகள், போர்முறைகள், இறந்த ஊர்களின் நினைவைப் போற்றும் நடுகற்கள், அவர்களின் பெயர்களும் பெருமைகளும் பேசுகிறது இந்நூல். திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சார்ந்த ஆய்வை நூலாசிரியர் மேற்கொண்டு பல அறிய செய்திகளையும் ஆதாரங்களையும், கல்வெட்டுக்கள் கொண்ட புகைப்படங்களும் இதில் தெளிவாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார். பொதுவாக வரலாற்றின் வெளிச்சத்திற்கு வராமல் போன பல செய்திகளை ஆதாரங்களுடன் கொண்டுள்ளது இந்நூல். பாண்டிய நாடும் 100 நாடுகளும், பாளையக்காரர்களும் பாண்டியனின் மீன் கொடி உருவாக்கம், 73 பாளையங்களின் பெயர்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளது. ஜமீன்களின் எல்லைகள், ஊர்பெயர்களின் அர்த்தங்கள், உதாரணமாக: புரம் என்ற சொல்லும் சிறந்த ஊர்களை குறிக்கும். ஆதலால் காஞ்சிபுரம், சோழபுரம், பல்லாவரம், குள்ளப்புரம் போன்ற தகவல்களும், கூடல் என்றால் ஆறுகள் கூடிடும் துறைகளைப் பனிதமான இடங்களாகக் கருதிப் பண்டைய தமிழர்கள் கொண்டாடினார்கள் அவற்றை கூடல் என்று அழைத்துள்ளார்கள். கி.பி.1290-1296 வரை டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஆட்சி செய்தார். அலாவுதீனின் படைத்தளபதி மாலிக்கபூர். சந்த்ராம் என்ற திருநங்கை மதம் மாறி மாலிக்கபூர் ஆனார் என்ற செய்தி ஆச்சரியத்தை தரும் செய்தியாக இருக்கிறது. இந்த செய்தியை வெளிக் கொணர நூலாசிரியர் எவ்வளவு மெனக்கிட்டுப்பார் என்பதனையும் உணரமுடிகிறது.

 திண்டுக்கல் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பாளையங்கள் இருந்திருக்கின்றன என்பதும், கி.பி.1760 ஆம் ஆண்டு திண்டுக்கல்லிருந்து ஹைதர் அலியின் படைக்கும் மதுரையிலிருந்து வந்த முகமது யசூப் கானின் கம்பெனிப் படைக்குமிடையே வத்தலக்குண்டில் போர் நடைபெற்றது. இறுதியில் திண்டுக்கல் படையைப் புறமுதுகிட்டோடச் செய்து, வத்தலக்குண்டை முகமது யசூப் கான் வென்றுள்ளார் போன்ற வியப்பூட்டும் செய்திகளும் இடம் பெற்றுள்ளன இந்த நூலில்.

பண்டைய தமிழர்களின் சமூக நல்லிணக்கத்திற்கு இந்த நூலில் குறிப்பிட்டுள்ள செப்பேடுகள் ஒரு நற்சான்றாக விளங்குகிறது. பெரியகுளம் பள்ளிவாசல், மதுரை சம்மட்டிபுரம் பள்ளிவாசலும் வெள்ளைக்காரனால்  துண்டு துண்டாக வெட்டப்பட்ட முகமது யசூசுப்கான் சாகிப் (மருதநாயகம்) அவர்களின் உடலின் ஒரு பகுதி இங்கு அடக்கம் செய்யப்பட்ட செய்திகளும் பெற்றுள்ளது இந்தநூல். இதுபோன்ற அரிய செய்திகளை தனது தீராத தேடலுக்கு கிடையில் வைகை அனிஷ் 'அழிந்த ஜமீன்களும் அழியாத கல்வெட்டுக்களும்'  என்ற நூல் நமது மனதில் கல்வெட்டாக பதியும் அளவிற்கு எளிமையான மொழிநடையில் கள ஆய்வில் தன்னை முழுவதுமாய் கரைத்துச் செய்திருக்கிறார். இந்நூலுக்கு முனைவர் பானுமதி அணிந்துரை எழுதியுள்ளார். படிக்கமட்டுமல்ல. பாதுகாக்கவும் செய்யவேண்டிய நூல் இது.

கவிஞர் திட்டச்சேரி அன்வர்தீன்
வெளியீடு:
அகமது நிஸ்மா பதிப்பகம்
3.பள்ளிவாசல் தெரு,
தேவதானப்பட்டி-625 602.
தேனி மாவட்டம்.
நூலின் விலை: 30 ரூ.
தொடர்பு எண்:9715-795795

மின்னஞ்சல்: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 05 November 2014 21:34