நூல் அறிமுகம்: கலை இலக்கியப் பார்வைகள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

Sunday, 13 April 2014 18:57 - வெலிகம ரிம்ஸா முஹம்மத் - நூல் அறிமுகம்
Print

நூல் அறிமுகம்: கலை இலக்கியப் பார்வைகள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்புகலை இலக்கியப் பார்வைகள் என்ற இந்தத் தொகுதி மீரா பதிப்பகத்தினூடாக வெளிவரும் கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் பதினைந்தாவது நூலாகும். மீரா பதிப்பகத்தின் 102 ஆவது வெளியீடாக 122 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் இலக்கிய விடயங்களுக்கு அப்பால் நாடகம், சினமா, உலக இலக்கியங்கள், தொடர்பாடல் என பல்வேறுபட்ட விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. நவீன இலக்கியத்தின் ஆரம்பகால செல்நெறி பற்றி அறிய முனையும் இன்றைய மூத்த இலக்கியவாதிகளுக்கும், புதியதலைமுறை இலக்கியவாதிகளுக்கும் இந்நூல் ஓர் உசாத்துணையாக திகழும் என்பதை உறுதியாகக் கூறமுடியும். 26 தலைப்புக்களில் தேசிய இலக்கியம், சர்வதேச இலக்கியம் பற்றி இந்த நூல் அலசி ஆராய்கிறது.   1989 - 2000 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் தான் பத்திரிகைகளில் எழுதி பிரசுரமான பல்வேறுபட்ட ஆக்கங்களின் தொகுப்பாகவே நூலாசிரியர் இந்த நூலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று இசைத்துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் ஒரு விடயம் என்றால் அது இசை என்று உறுதியாக கூறலாம். இசைக்கு கட்டுப்படாத மனங்கள் இல்லை. சினமாப் பாடல்கள் எல்லோரையும் வசியப்படுத்துபவை. சில பாடல்கள் காலத்தால் அழியாதவை. மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பவை. அது போல் சில பாடல்கள் பொப் இசைப்பாடல் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. பொப் என்ற ஆங்கிலச் சொல்லை ஏன் பாவிக்கின்றோம் என்ற கேள்வியை தொடுக்கின்றார் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். சினமாப் பாடல்களையும் 'பொப்' என அழைக்கலாமே (பக்கம் 09) என்ற தலைப்பில் அவர் தனது கருத்துக்களைத் தெளிவாக பின்வருமாறு முன்வைத்துள்ளார்.

நமது நாட்டில் 'பொப்'  இசை என்று கூறிக்கொண்டு தமிழ்மொழிப் பாடல்கள் சிலவற்றையும் நமது இளைஞர்களில் சிலர் பாடி வருகின்றார்கள்.  'பொப்'  என்ற வார்த்தையை இவர்கள் ஏன் உபயோகிக்க வேண்டும் என்றுதான் எனக்குத் தெரியவில்லை. மக்கள் சங்கீதம் என்று தமிழில் அழைக்கலாமே. அல்லது ஜனரஞ்சகப் பாடல் என்றும் கூறலாம். ~பொப்| என்றால் 'பொப்பியூலர்' என்ற ஆங்கிலப் பதத்தின் சுருக்கம். 'பொப்பியூலர்' என்றால் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துள்ளது என்று பொருள். மக்கள் மத்தியில் பிரபல்யமான பாடல்கள், தமிழைப் பொறுத்தவரையில் சினிமாப் பாடல்களே!

கவிச்சுடர் அன்பு  முகையதீன் மணிவிழா மலரில் நூலாசிரியர் எழுதிய கட்டுரை உடனிகழ்கால பண்பாளன் ஒருவன் பற்றிய தகவற் பேழை (பக்கம் 18) என்ற தலைப்பில் வாசகர்களுக்காகத் தரப்பட்டுள்ளது.

உருவகக் கதைகளுக்கான விளக்கம் (பக்கம் 33) என்ற தலைப்பில் எம்.ஐ.எம். முஸம்மில் எழுதிய பிரதிபலன் உருவகக் கதைத் தொகுதியை மேற்கோள் காட்டி தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.  இக்கட்டுரையில் உருவகக் கதைகள் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

'உலகத்திலேயே திறமை மிகுந்த முதல் உருவகக் கதாசிரியர், கிரேக்க ஞானி ஈசாப் ஆவார். வெளிப்படையாகக் கூறும் கசப்பான உண்மை, உலகத்தாருக்கு எடுத்த எடுப்பில் பிறப்பதில்லை. பெரும்பாலும் அதற்குப் பயன் ஏற்படுவதும் இல்லை என்பதை அறிந்தே அவன் உருவகக் கதை என்னும் இலக்கிய உருவத்தை எடுத்துக் கொண்டு, கணந்தோறும் புதிது புதிதாய் மலரும் தன் கற்பனைத் திறத்தினால் அதை விதம் விதமாக அலங்கரித்து உலகத்துக்குத் தந்தான்.'

'உருவகக் கதை, உருவில் சிறியதாகவும் முடிவு அழகாகவும் அமைவதனால் மனதில் நீண்ட நாள் பதிவாகவும் இருக்கும். உருவகக் கதையில் பொழுது போக்கு மட்டுமன்றிச் சிந்தனையையும், உணர்ச்சியையும் தூண்டும் தன்மை கட்டாயம் இருக்க வேண்டும். இழையும் படியான குறைந்த சொற்களைக் கொண்டு சூழ்நிலையை உண்டாக்கி, தேர்ந்தெடுத்த அதிசயமான கற்பனைகளினால்  அழகை தெளிவுபடுத்தி, இவற்றோடு கூடவே சிந்தனையையும், உணர்ச்சியையும் கலந்து உண்மையான வாழ்க்கையையும், வாழ்க்கை மதிப்புகளையும் வாசகருக்குத் தீவிரமாக உணர்த்தவல்ல இந்த உருவகக் கதை என்னும் இலக்கிய வடிவம் காவியத்துக்குச் சமமானது.'  என்ற விடயங்களை வாசகருக்குச் சொல்லி நிற்கின்றார் ஆசிரியர்.

சமூக முன்னேற்றத்திற்கான பத்திரிகையாளரின் பங்களிப்பு (பக்கம் 37) என்ற தலைப்பில் இதழியல் கற்கைநெறியைக் கற்கும் மாணவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய கட்டுரை ஒன்றை முன்வைத்துள்ளார்.

நாம் அனைவரும் சமூகப் பிராணிகள் என்று அரிஸ்டோடர்டில் கூறியதற்கிணங்க சமூகத்தில் நாம் தனித்து வாழ இயலாது. ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வதாகவே நமது வாழ்க்கைப் போக்கு அமைந்திருக்கின்றது. அத்தகைய சமூகத்தில் நிகழும் விடயங்களை எல்லோரும் அறிவதற்காக பத்திரிகை என்ற ஊடகம் பெரிதும் துணை புரிகின்றது. அத்தகைய ஊடகத்தில் பணிபுரிந்த ஒருவரான. சி. குருநாதன் என்பரைப் பற்றியும் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் பத்திரிகைகள் பற்றியும் எடுத்து நோக்கப்பட்டுள்ளது.

இலக்கிய நுகர்ச்சியை மீள வலியுறுத்தும் சுவையான நூல் (பக்கம் 52) என்ற தலைப்பில் அகளங்கனின் இலக்கியச் சரம் என்ற நூல் பற்றிய கண்ணோட்டத்தை முன்வைத்துள்ளார். இந்தக் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

'தான் பெற்ற அனுபவமொன்றை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ள விழையும் இலக்கிய கர்த்தா அதற்கு ஏற்ற பழக்கத்தையும், வழிமுறைகளையும் தெரிந்து கையாளுகிறான். ஏற்பட்ட அனுபவத்தை அப்படியே வெற்றென வெளியிடுவதன் மூலம் கேட்போர் உள்ளங்களில் அவ்வனுபவத்தைக் கிளர்ந்தெழ வைத்தல் சாத்தியமன்று. எனவே பொருத்தமான அமைப்பினையும், சொல் ஒழுங்கையும், அணிகளையும் தெரிந்து கற்பனைத் திறனுடன் கையாளும் வல்லமை சிருஷ்டியாற்றல் என்று போற்றப்படுகிறது. ஆக்க இலக்கியங்கள் அனைத்துக்கும் பொருத்தமான இவ்வல்லமை கவிதைக்கு இன்றியமையாததாகும்.'

அண்மைக்கால ஆக்கங்கள் எழுப்பும் சலனங்கள் (பக்கம் 67) என்ற தலைப்பில் க. சட்டநாதன் எழுதிய உலா, எஸ். அகஸ்தியர் எழுதிய எரி நெருப்பில் இடைபாதை இல்லை, மாத்தறை ஹஸீனா வஹாப் எழுதிய வதங்காத தலரொன்று, ஏ.பி.வி. கோமஸ் எழுதிய வாழ்கையே ஒரு புதிர், எஸ்.எல்.எம். ஹனீபா எழுதிய மக்கத்துச் சால்வை, செ. யோகநாதன் எழுதிய கிட்டி, கதைவாணன் எழுதிய காளை விடு தூது, சோ. ராமேஸ்வரன் எழுதிய யோகராணி கொழும்புக்குப் போகிறாள், மாத்தளை கார்த்திகேசு எழுதிய வழி பிறந்தது, மண்டூர் அசோகா எழுதிய பாதை மாறிய பயணங்கள், ஓ.கே. குணநாதன் எழுதிய ஊமை நெஞ்சின் சொந்தம், ந. பாலேஸ்வரி எழுதிய தந்தை விடு தூது, ஜமுனா ராணி எழுதிய பூவிதழின் புன்னகை ஆகிய தொகுதிகள் பற்றிய விஷேட குறிப்புக்கள் காணப்படுகின்றன.

மட்டக்களப்பைச் சேர்ந்த ஓர் எழுத்தாளரால் எழுதப்பட்ட மலையகம் பற்றிய முதல் நாவல் தொடர்பான விடயங்கள் ஓ.கே. குணநாதன் எழுதிய ஒரு துளி (பக்கம் 87) என்ற தலைப்பில் விரிவாக நோக்கப்பட்டுள்ளது.

ஷாமிலாவின் இதயராகம் என்ற கதையை எழுதியிருப்பவர் ஜெக்கியா ஜுனைதீன் என்ற முஸ்லிம் பெண் எழுத்தாளர். ஆயினும் கதைக்கான கருவை வழங்கியவர் நாவலாசிரியையின் கணவரான பேராதனை ஏ.ஏ. ஜுனைதீன் என்பவராவார் போன்ற விடயங்களை உள்ளடக்கியும், நாவலில் இலக்கிய ரசம் வெளிப்பட்டு நிற்கும் தன்மை பற்றியும் ஷாமிலாவின் இதயராகம் (பக்கம் 97) என்ற தலைப்பில் விபரங்களை நூலாசிரியர் விரிவாகத் தந்துள்ளார். ஜனரஞ்சகமாக எழுதப்பட்ட இந்நாவல் இன்றும் பேசப்படுகின்றது.

இவை தவிர இன்னும் பல விடயங்கன் இந்ந நூலில் உள்ளடங்கியுள்ளன. விரிவஞ்சி ஒரு சில விடயங்களையே எடுத்து நோக்கியுள்ளேன். தான் வாசித்து இரசித்தவற்றை வாசகர்களுக்கு முன்வைப்பதில் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு வருபவர் திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். அந்த வகையில் அவரை ஒரு தகவல் களஞ்சியமாகவே பார்க்க வேண்டியுள்ளது. தனது எழுத்துக்களாலும், பணிவான குணத்தினாலும் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார் இந்த நூலாசிரியர்.  அவரைப் பல்லாண்டு காலம் வாழப் பிரார்த்தித்து, இன்னுமின்னும் பல தரமான புத்தகங்களை இலக்கிய உலகுக்குத் தர வாழ்த்துகின்றேன்!!!

நூல் - கலை இலக்கியப் பார்வைகள்
நூல் வகை - ஆய்வு
நூலாசிரியர் - கே.எஸ். சிவகுமாரன்
வெளியீடு - மீரா பதிப்பகம்
விலை - 250 ரூபாய்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 13 April 2014 19:08