அமிருதா வெளியீடு - முத்துக்கள் பத்து: சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்!

Wednesday, 01 January 2014 20:36 - கனல் - நூல் அறிமுகம்
Print

சுப்ரபாரதிமணியன்சுப்ரபாரதிமணியனின்  மொத்த சிறுகதைகளின் எண்ணிக்கை 250 தொடும்.ஆரம்ப காலக் கதைகள்  வெகு யதார்த்தமான  அவரின் குடும்பம் சார்ந்தவர்கள் பற்றின சித்தரிப்புகளாய் அமைந்திருந்தன, அப்பா என்ற ஆளுமையும் கிராமச் சூழலும், சேவற்கட்டு வாழ்க்கையும்  குறிப்பிடதக்கதான குடும்ப நிகழ்வுகளும்  சிறுகதைகளாயிருந்தன.  அவற்றையெல்லாம்  அவரின் அனுபவக் கதைகளாகக்  கொள்ளலாம். அனுபவ விஸ்தரிப்பே கதைகள் என்ற வரையறையை விட்டு வெளியே வந்த போது இவருக்குத் தென்பட்ட உலகம் பரந்திருந்தது. அந்த பரந்த உலகத்தை கூர்ந்து அவதானித்து கதைகளுக்குள் கொண்டு வந்த போது  நிறைய எழுத ஆரம்பித்தார்.  செகந்திராபாத் வாழ்க்கையை   சிறுகதைகளாக  ஒரு தமிழன் அந்நிய மொழி பேசும் மாநிலத்தில் வாழும் போது அவன் அந்நியமாக்கப்படுகிற சூழலும், மதக்கலவரங்களால் மனிதர்கள் சிதறுண்டு கிடப்பதும், அந்த பிரதேசத்திற்குரிய விசேச மனிதர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். . 
     
செகந்திராபாத் வாழ்க்கைகுப் பின்னால் அவர் தன் சொந்த ஊரான திருப்பூர் வந்த பின்  அவரின்  நாவல்கள் தரும் திருப்பூர்  வாழ்க்கையின் அனுபவங்களை மீறிய அவதானிப்புகளை இவரின் சிறுகதைகளின் பரப்பில் காணலாம்.  தொழில் நகரம் காட்டும்  உழைக்கும் விளிம்பு நிலை  மனிதர்களைப் பற்றிப் பேசுகிறார். உலகமயமாக்கல்  ஒரு பெரும் தொழில் நகரத்தை பாதித்து பெண்களையும், குழந்தைகளையும்  சிதைத்து வருவதை விரிவாகச் சொல்லியிருக்கிறார்.சுற்றுச்சூழல் பிரச்சினைகளும், மனித உரிமை பிரச்சினைகளும் அவர்களுள் எப்படி வடிவெடுத்திருக்கின்றன என்பதையும் விரிவாகச் சொல்லியிருக்கிறார்.  வாழ்க்கையையும், இலக்கியத்தையும் ஒரு சேர  கவனிக்கிற காரணத்தாலே சுப்ரபாரதிமணியனின் எழுத்துக்கள் காலத்தின் கட்டாயமாக வெளிப்பட்டிருப்பதில்  அவருக்கு இணை யாருமில்லை.அவ்வளவு  விரிவான வகையில்  அவதானிப்பும் வாழ்க்கையின் மீதும்,பிரச்சினைகள் மீதும். கொண்டுள்ளார். அவற்றை சமூகம் மீதான எதிர்வினையாகவும், விமர்சனமாகவும் படைப்பை உருவாக்கியிருக்கிறார். பிரச்சினைகள் பற்றி பேசுவதற்காக எழுதப்பட்டவை  அல்ல அவை. வாழ்க்கையை விவரிக்கும் போது  கதை மாந்தர்கள் எதிர் கொள்ளும்  பிரச்சினைகள் வெளிப்படுகின்றன, அவை இன்றைய காலத்தின் தொழில் நகரம்  சார்ந்த விஸ்வரூபங்களாக பரிமாணம் பெற்று விடுகின்றன. நகரம் சார்ந்த விளிம்பு நிலை பாட்டாளி வர்க்கத்தினர் பற்றி இவ்வளவு விரிவாயும், அதிகபட்சமான சிறுகதைகளையும் வேறு யாரும் தமிழ் சூழலில் எழுதி இருப்பதாகத் தெரியவில்லை. சுற்றுச்சூழல் அக்கறை பற்றி நிறையவே சிறு கதைகளில் விவாதித்திருக்கிறார்.  ஒவ்வொருவரும் ” சாயத்திரை”யை மறந்து விட முடியாதபடிக்கு ஒரு படிமமாகவே அது நிலைத்து விட்டது
     
அயலகத்தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி இவரின் பயண அனுபவக்கட்டுரைகளைத்தவிர இடம் பெற்றுள்ள சிறுகதைகளும் குறிப்பிடத்தக்கவை.செகந்திராபாத் சூழலில் அந்நியப்பட்ட தமிழன்களைப் போலவே இவர்களும் அன்னியப்பட்டே வாழ்க்கையைக் கடத்துகிறார்கள்.
 
பெண் பாத்திரங்களின் உருவாக்கத்தில் அவர் கொள்ளும் அக்கறையும், தேர்ச்சியும் ஆச்சர்யப்படுத்துபவை. கஸ்ட அனுபவங்களுக்குள் இவர் தன்னைத் தோய்த்துக் கொண்டதுதான் இதற்குக் காரணம் என்று தோன்றுகிறது. செகந்திராபாபாத்தோ, திருப்பூரோ அவர் வெவ்வேறு களங்களுக்குள்ளும், இடங்களுக்குள்ளும் பயணிக்கிறார். போராடும் மனிதர்களின் ஆன்மாவைத் தொட்டுக் கொண்டே போகிறார். சொல்முறை உத்தி சாதாரண உரையாடல்களாலும், இறுக்கமான வாக்கிய அமைப்புகளாலும்  நிறைந்திருக்கிறது. சமூக மனிதர்களின் உளவியலுக்கேற்ப அவை நகர்ந்து செல்கின்றன.   வெவ்வேறு மையங்களுகு செல்வதாக்த் தோன்றினாலும் அவை மனிதம், அன்பு, சமூக விமர்சனம் என்ற வகையிலேயே அடைக்கலம் கொள்கின்றன. எழுத்தாளன் அவனின் அரசியலை வெளிப்படுத்தாமல் எங்கும் ஒளிந்து கொள்ள இயலாது.  தன் அரசியல் முகத்தை சுப்ரபாரதி மணியன் என்றைக்கும் ஒளித்து வைத்துக் கொண்டதில்லை. மாற்று அரசியல் குறித்த அக்கறையைஅவை சுட்டுகின்றன. அவரின் மார்க்சியம் சார்ந்த சார்பை அவரின் கட்டுரைகளில் இனம் கண்டு கொள்ளலாம். ஆனால் படைப்பாக்கத்தில் அவை கோரும் தத்துவ சார்பை எப்போதும் உரக்கத் தொனித்ததில்லை யதார்த்தம்  மீறிய மாயத்தன்மையை அவரின் சில கதைகளில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.   அவை பெரும் பாலும் கனவு நிலைகளில் வெளிப்படுகிறது. எந்த முன் தீர்மானமும் இன்றி கதைகள் நகரும் போது சொடுக்கப்படும் சாட்டையின் வீச்சை  சுலபமாகக் கண்டு கொள்ளலாம். மனிதத்துவத்திற்கு எதிராக நடக்கும் எல்லா விதமானக் கொடூரங்களையும் , அதீத செயல்களையும் அடையாளம் கண்டு கொள்கிறார். அடையாளப் படுத்துகிறார்.விளிம்புநிலை மக்களில் பொறுக்கிகள், எளிய பெண்கள், விலைமாதர்கள், ஆதிவாசிகள், சுற்றுச்சூழல்வாதிகள் என்று பலரை அடையாளம் கண்டு கொள்ளலாம். மையங்களைக் தகர்த்தெரிந்த  விளிம்பு நிலை மனிதர்கள் இவரின் கதைகளில் தென்படுகிறார்கள். குழந்தைகளின் அபூர்வ உலகத்தை  சரியாக மனதில் பிடித்துக் கொள்ளலாம்.  சாயம் அப்பிய முகங்களோடு அலையும் மனிதர்களும், தனியார் மையத்தை சகித்துக் கொள்ள முடியாமல் திணறுபவர்களும், பெரும்நகரத்தில் கை விடப்பட்டவர்களும், நகரம் உருவாக்கும்  உதிரித்தொழிலாளர்களும் கூட இக்கதைகளில் அழுத்தமாக இடம் பெற்றிருக்கிறார்கள்.    நம்முடன் உறவாட இவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்களா என்ற எண்ணமும் , நம்பிக்கையும் இவரின் கதாபாத்திரங்களோடு பயணிக்கும் போது  தென்படுகிறது. வாழ்க்கை எவ்வளவு வகையான  மனிதர்களை நம்மோடு இணைத்துக் கொண்டு செல்கிறது என்பது விசித்திரமானது. ஒரு முதிய மனிதனின் அனுபவத்தோடும், இளைஞனின் துடுப்போடும்  உள்ள இக்கதைகளை  படிக்கும் எந்த வாசகனும் தமிழ்ச் சிறுகதை வாசகப் பரப்பின் விரிவை அடையாளம்  கண்டு கொள்வான்.சிறுகதைகள் மூலம் பிரமாண்டமாய் வெளிப்படும் ஆளுமை சுப்ரபாரதிமணியனுக்குள் இருப்பதை சரியாக உணர்ந்து கொள்வான்.     

( விலை ரூ 90., அமிருதா பதிப்பகம் வெளியீடு, சென்னை )

அனுப்பியவர்: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 01 January 2014 20:41