ரகசியம் பேசுதல் – சுனேத்ரா ராஜகருணாநாயகவின் ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கான முன்னுரை

Tuesday, 03 December 2013 20:17 - அம்பை - நூல் அறிமுகம்
Print

ரகசியம் பேசுதல் – சுனேத்ரா ராஜகருணாநாயகவின் ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கான முன்னுரை[ ரிஷான் ஷெரீப்பின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியான சுனேத்ரா ராஜகருணாயகவின் 'அம்மாவின் ரகசியம்' நூலுக்கு எழுத்தாளர் அம்பை எழுதிய முன்னுரை. இதனைப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ரிஷான் ஷெரீப். - பதிவுகள்]

பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே  கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்தபடி. அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்து வந்து இளைப்பாறலைத் தரும் வாய்ப்புகளை வாழ்க்கை ஏற்படுத்துகிறது. சில சமயம் ரகசியங்கள் மூர்க்கத்தனமாக உடைபடும் அபாயங்கள் நேர்கின்றன. சில சமயம் அவற்றைப் பேசியே ஆகவேண்டிய நிர்பந்தத்தை சிலர் எதிர்கொள்ளும்போது நூலிழை பிரிவதுபோல் மெல்லமெல்ல அவை பிரியலாம். அல்லது சலனமற்ற குளத்தில் எறிந்த கல்லைப் போல் அலைகளை ஏற்படுத்தலாம். அபூர்வமாக அவை அடுத்தவரின் மனத்தை இளக்கி உறவின் ஒரு மூடப்பட்ட சன்னலைத் திறக்கலாம். இந்தக் குறு நாவலில் வரும் முத்துலதாவுக்கும் ஒரு ரகசியம் இருக்கிறது. அது எப்படி உருவாகியது, அந்த ரகசியத்தை அவள் எப்படித் தாங்கினாள்,  ஏன்,  எப்படி அதை வெளியிடத் தீர்மானித்தாள் போன்றவற்றின் ஊடே கதை தன் பாதையை அமைத்துக்கொள்கிறது.

இந்தக் குறுநாவலை எழுதியிருக்கும் சுனேத்ரா ராஜகருணாநாயக சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதும் ஓர் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர், ஊடகவியலாளர் மற்றும் இதழாளர். இதுவரை பல உயர் விருதுகளைப் பெற்றிருப்பவர். 2009இல் ஸ்வர்ண புஸ்தக விருதும் 2010இல் தன் புத்ததாசி நாவலுக்காக All Ceylon Buddhist Congress  விருதும் இவர் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரங்கள்.

மிகச் சிறு வயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டார் சுனேத்ரா. இடதுசாரி அரசியல் பற்றிய புரிதலும், எல்லோரையும் சமமாகப் பார்க்கும் மனப்பாங்கும் உள்ள குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்த சுனேத்ராவுக்கு எழுதுவது என்பது மூச்சு விடுவதைப் போல எளிதாக இருந்தது. தான் கட்டாயம் ஒரு நாவலாவது எழுதுவோம் என்ற நம்பிக்கை இருந்தது அவருக்குச் சிறு வயதிலிருந்தே. 1999இல் இவரின் முதல் நாவல் வெளிவந்து மூன்று மாதங்களிலேயே விற்றுப்போனது. ஆனால் ஒரு விமர்சனம் கூட வரவில்லை. அதற்காக அவர் முயலவில்லை. தொலைக்காட்சியிலும், நாடகத் துறையிலும், பத்திரிகைகளிலும் இவர் பல முறை செயலாற்ற நேர்ந்தபோதும் எந்தவித சமரசங்களுக்கும் உடன்பட மறுத்தே செயலாற்றினார். தொலைக்காட்சிகளில் பெண்களுக்கான நிகழ்ச்சிகள் வெறும் சமையல் நிகழ்ச்சிகளாக இல்லாமல் பெண்களைப் பாதிக்கும் பிரச்சனைகளைப் பேசும் ஒன்றாக மாற்றினார். நேரிடையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக அரசியல் குறித்த விமர்சனங்களை வைக்கும் நிகழ்ச்சிகளைத் தயாரித்தார்.

பல கடுமையான, ஆபாசமான  விமர்சனங்களை இவர் எழுத்து எதிர்கொள்ள நேரிட்டது. அரசுக்குச் சொந்தமான ஆங்கிலச் செய்தித்தாள் இவரது நாவல் பொது புருஷயாவை கிட்டத்தட்ட ஓராண்டு தொடர்ந்து தாக்கி எழுதியது. ஐக்கிய தேசியக் கட்சியின் அரசைக் கவிழ்க்க ஜனதா விமுக்தி பெராமுனா முயன்றபோது பல இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 1971இலும் பிறகு எண்பதுகளின் இறுதியிலும்  ஜேவிபி இயக்கம் கொடூரமான முறையில் நசுக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் வீதிகளில் மரித்தனர். பள்ளி மாணவர்கள் கூட கடத்தப்பட்டனர். ஜேவிபி இயக்கத்தினர் புனிதர்கள் இல்லை; அவர்களும் அரசியல் கொள்கையில் மாறுபட்டவர்களை, ஏழைகளை,  இரக்கமில்லாமல் கொன்றார்கள். இந்த நாவலின் களம் சிற்றூர் ஒன்றில் பாதுகாப்புப் படையினரால் அலைக்கழிக்கப்பட்ட ஏழைச் சிங்களக்  குடும்பம். அதிலுள்ள ஒரு பெண் மனத்தில் புதைத்திருக்கும் ரகசியம் ஒன்று கடைசியில் வெளியே வருகிறது.

வெகு குறைவான விவரணைகள். சொற்களை விரயமாக்காத நடை. குறியீடுகளும் ஒப்புவமையும் கிடையாது. மிகை இல்லாத, மிகக் குறைந்த அளவுத் தளத்தில் உள்ள minimalist ஓவியம் போல் இருக்கிறது நாவல்.

சுனேத்ராவின் படைப்புலகை எட்டிப் பார்க்க அமைந்த ஒரு காலதர்தான் இந்த மொழிபெயர்ப்பு. இதன் பின் அப் படைப்புலகின் பெருஞ் சன்னல்களும் கதவுகளும் திறக்கப்படும் வாய்ப்பு உண்டு என்று கட்டியம் கூறும் மொழியாக்கக் காலதர். இத்தகைய படைப்பு ஒன்றை அதன் எல்லா அம்சங்களும் ஊறு படாமல் மொழியாக்கம் செய்வது மிகக் கடினமான வேலை. அதை ரிஷான் கவிஞராக இருப்பதால் மிகவும் செம்மையாகச் செய்திருக்கிறார். ஒரு வேளை இது தமிழில்தான் எழுதப்பட்டதோ என்று ஐயப்பட வைக்கும் மொழியாக்கம்.

சுனேத்ராவின் மற்ற படைப்புகளையும் ரிஷான் தமிழுலகுக்குக் கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ரிஷான் இந்த மொழியாக்கம் மூலம். ஒரு பெருங் காற்று இந்த நாவல். இது அடித்து ஓய்ந்ததும் புயலும் வெள்ளமும் கூடவே மந்தமாருதங்களும் வரும் என்று எதிர்பார்ப்போம். அவற்றையும் ரிஷான் தன் வசப்படுத்திக்கொண்டு நமக்கு அளிப்பார் என்று நம்புகிறேன்.

அனுப்பியவர்: ரிஷான் ஷெரீப் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 03 December 2013 20:48