நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)இன்றையதினம் லண்டனில் வாழும்  ஈழத்துத் தமிழறிஞர்  திரு. கா.விசயரத்தினம் அவர்களது இரண்டு நூல்களை அறிமுகம் செய்யவிருக்கிறேன். தமிழ் இலக்கணத்தில் கிறிஸ்துவுக்கு முன் 3ம் நூற்றாண்டில் தோன்றிய    தொல்காப்பியமும்,    கி.பி. 13ம்       நூற்றாண்டில் தோன்றிய நன்னூலும் இன்றளவும் போற்றுதற்குரியனவாகப் பயன்பெறுகின்றன. தமிழ் மொழிக்கு இலக்கண வரம்பை வழங்கிய முதல் நூலாக தொல்காப்பியம் கருதப்படுகின்றது. அகத்திய மாமுனிவரால் ஆக்கப்பட்ட அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை அடியொற்றியே அவரது தலைமைச் சீடரான தொல்காப்பியரால் தொல்காப்பியம் என்ற நூல் எழுதப்பட்டது என்பது வரலாறு.  முதலாம் தமிழ்ச்சங்கம் இருந்த பிரதேசம் கடல்கோளினால் முன்னர் அழிக்கப்பட்டபோது அகத்தியமும், அக்காலத்தைய தமிழ் நூல்களும் இல்லாது போயின என்பதும் வரலாறு. அகத்தியம் என்ற பண்டைய நூல் எம்மிடையே இல்லாத இன்றைய நிலையில் இரண்டாம் தமிழ்ச்சங்க காலத்தில் எழுந்த நூலான தொல்காப்பியமே இன்று கைக்கெட்டிய முதலாவது தமிழ் இலக்கண நூலாக எம்மிடையே வாழ்கின்றது.

தொல்காப்பியத் தேன்துளிகள் என்ற தலைப்பில் தமிழறிஞர் கா.விசயரத்தினம் அவர்கள் எழுதி, லண்டனிலிருந்து ஊநவெரசல ர்ழரளந என்ற வெளியீட்டு நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட இலக்கியச் சுவை மிகுந்த நூல் ஒன்றினை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகின்றேன். 224 பக்கங்களில் சென்னையிலிருந்து மணிமேகலைப் பிரசுரத்தினர் அச்சிட்டு வழங்கியுள்ள இந்நூல் 2008ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலுக்கு பேராசிரியர் கோபன் மகாதேவா ஆசியுரையையும், மீனாட்சிசுந்தரம் ராஜகோபாலன் அணிந்துரையையும், சைவப்புலவர் கதிரித்தம்பி சிவானந்தன் ஆய்வுரையையும் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். தொல்காப்பியம் இலக்கண நூலாக வகைப்படுத்தப்பட்டபோதிலும், அதிலும் இலக்கியச் சுவையே பெரிதும் காணப்படுகின்றது. நூலாசிரியர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்கள், தொல்காப்பியத்தில் காணப்படும் இலக்கியச் சுவை பற்றியே இந்நூலில் உள்ள கட்டுரைகளில் விரிவாகக் குறிப்பிடுகின்றார்.

தொல்காப்பியத்துடன் திருமந்திரம், திருக்குறள், திருமுறைகள், சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு, பரிபாடல், நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, நாலடியார், மனுஸ்மிருத்தி ஆகிய நூல்களிலிருந்தும் மேற்கோள்களை தாராளமாக எடுத்துக்காட்டி சுவைமிகுந்த ஒப்பீடும் செய்திருக்கிறார். தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் நிலவியிருந்த சமூக அமைப்புகள், ஒழுக்க விழுமியங்கள், தனிமனிதப் பண்புகள், ஆடை அணிகலன்கள், மக்களிடையே வழக்கிலிருந்த கற்பொழுக்கம், களவொழுக்கம், கைக்கிளை, பெருந்திணை மற்றும் அக்காலத்தில் காணப்பட்ட சாதிய வளமைகள், திருமணங்களும் சீதனப் பரிமாற்றங்களும் என்று ஏராளமான சுவையானதும் சிந்தனையைத் தூண்டுபவையுமான விடயங்களை இந்நூலில் எளிமையான நடையில் வாசித்து வியக்கமுடிகின்றது. புராதன தமிழ் இலக்கியங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த நூல் ஒரு பெருவிருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தொல்காப்பியத்துக்கு இளம்பூரணனார் தொடக்கம் ஆறுமுக நாவலர் ஈறாகப் பல அறிஞர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். அவ்வுரைகளை அடிப்படையாகக்கொண்ட ஆய்வுகளும் விமர்சனங்களும்கூட காலப்போக்கில் வெளிவந்துள்ளன. தொல்காப்பியத் தேன்துளிகள் என்ற இந்நூலின் ஆசிரியர் இவற்றையும் கவனத்துக்கெடுத்தே தன் ஆய்வினை மேற்கொண்டுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

அக்காலத்தில் தமிழர்களிடையே வழக்கிலிருந்த இறந்தோருக்கான நடுகல் வழிபாட்டு நடைமுறைகள் பற்றியும் இந்நூலில் ஆராய்ந்து விளக்கியுள்ளார். ஆரம்பத்தில் நினைவுத் தூபிகளாக அமைந்து பின்னாளில் பரிணாம வளர்ச்சிபெற்று எமது மூதாதையர் இறைவனின் நிலைக்கு உயர்த்தப்பட்ட நிலைமையினையும் சுவையாக ஓரிடத்தில் எழுதியிருக்கிறார்.

இவை அனைத்தும் தொல்காப்பியச் சூத்திரங்களிலிருந்து எடுக்கப்பட்டு எளிய தமிழில் எமது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆசிரியர் தன் ஆய்வின் ஓரிடத்தில் பறை வாத்தியம் பற்றியும் கி.மு.3ம் நூற்றாண்டளவில் அதன் பயன்பாடுகள் பற்றியும், இன்று அதன் முரண்பட்டதும் திரிபடைந்ததுமான சாதியம்சார்ந்த பயன்பாடு பற்றியும் சுவையாக ஒப்பிட்டுள்ளார். மேலும் தொல்காப்பியம் பிறந்த காலத்தைக் கணிப்பதிலும் தனது ஆய்வின் ஒரு பகுதியை இவர் செலவிட்டுள்ளார். இந்தத் தகவல்கள் அனைத்தும் 16 கட்டுரைகளாக இந்நூலில் விரிகின்றன. தொல்காப்பியம் கூறுகின்ற முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் போன்ற விடயங்களையிட்டு ஆசிரியரின் பார்வைக் கோணம் மற்ற ஆசிரியர்களைவிட சற்றே வித்தியாசமாயுள்ளதை இந்நூலை வாசித்து முடித்ததும் வாசகர் எளிதில் புரிந்துகொள்வார்.

இலங்கையின் வடமாகாணத்திலுள்ள சாவகச்சேரி என்னும் ஊரின் நுணாவில் என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கார்த்திகேயன் விசயரத்தினம் அவர்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களில் மேலான பாண்டித்தியமும் மொழிப்பற்றும் கொண்டதொரு சைவப் பாரம்பரியத்தைப் பின்புலமாகக் கொண்டவர். இலங்கையில் அரச கணக்காய்வுத் திணைக்களத்தில் கணக்காய்வு அத்தியட்சகராகக் கடமையாற்றி இளைப்பாறியவர். தற்போது லண்டனில் புலம்பெயர்ந்து குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றார். முன்னதாக இவர் ‘கணினியை விஞ்சும் மனித மூளை’ என்ற நூலையும், ‘பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்’ என்ற நூலையும்,  ‘Essentials of English Grammar’ என்ற ஆங்கில இலக்கண நூலையும் வெளியிட்டுள்ளார் என்பதை அறியமுடிகின்றது. இலக்கிய ஆய்வு நூலுக்கான தமிழியல் விருதினை இவர் 2011இல் பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

திரு கா.விசயரத்தினம் அவர்களின் தொல்காப்பியத் தேன்துளிகள் என்ற நூலின் அறிமுகத்தை மேற்கொள்ளும் அதே வேளையில் இவரது அண்மைக்கால வெளியீடான மற்றுமொரு நூலையும் அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.

‘இலக்கிய -அறிவியல் நுகர்வுகள்’ என்ற தலைப்பில் அண்மையில் 2012இல் திரு கா.விசயரத்தினம் அவர்கள் 250 பக்கம் கொண்ட இந்த நூலை எழுதியிருக்கிறார். லண்டனிலிருந்து செஞ்சுரி ஹவுஸ் பதிப்பு நிறுவனம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது.

நூலாசிரியர் பழந்தமிழ் இலக்கியத்தில் தீவிர ஆர்வம் கொண்டவர். அதனால் அவர் எழுதும் நூல்களிலும் கட்டுரைகளிலும் - அவை விஞ்ஞானக் கட்டுரைகளாக இருந்தாலென்ன, ஆன்மீகக் கட்டுரைகளாக இருந்தாலென்ன- இடையிடையே சங்க இலக்கிய மணம் கமழ்வதை அவதானிக்க முடிகின்றது. இது இவரது தனித்துவமான எழுத்துநடை என்றே கருதவேண்டியுள்ளது.

இலக்கிய அறிவியல் நுகர்வுகள் என்ற நூல் இவரது நீண்டகால நண்பரும் இவர் சார்ந்துள்ள இலக்கிய அமைப்பான பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தின் தாபகருமான பேராசிரியர் கோபன் மகாதேவாவின் முன்னுரையையும், லண்டனில் இயங்கும் சகோதர இலக்கிய அமைப்பான வேலன் இலக்கிய வட்டத்தின் தாபகர் வித்துவான் ந.வேலன் அவர்களின் மருமகனுமாகிய சட்டத்தரணி செல்லத்தம்பி ஸ்ரீக்கந்தராஜா அவர்களது அணிந்துரையையும் கொண்டுள்ளது. இந்நூலில் பண்டைத்தமிழரின் பழம் இலக்கியங்கள் என்ற கட்டுரை முதலாவதாக இடம்பெறுகின்றது. இரண்டாவதாக தொல்காப்பியர் காலம் கி.மு. 711 என்ற கட்டுரை காணப்படுகின்றது. தொடர்ந்து வரும் கட்டுரைகள் வாழ்வியலில் இலக்கியமும் விஞ்ஞானமும், தொல்காப்பியர் காட்டும் ஆறறிவு உயிர்கள், பண்டைத்தமிழரின் திருமணங்கள், குறந்தொகையில் இரு இலக்கியக் காட்சிகள், சங்ககால இலக்கியக் காதலும் பின்னெழுந்த பக்திக் காதலும் என்றவாறாகத் தொடர்ந்து 34ஆவது கட்டுரையாக சைவநெறியும் உலக அமைதியும்- திருமந்திரம் காட்டும் வழிபாடு என்ற கட்டுரையுடன் இத்தொகுப்பு நிறைவுபெறுகின்றது. தான் எழுதிய கட்டுரைகளுடன் தொடர்புபட்ட உசாத்துணை நூல்களின் விபரங்களையும் திரு கா.விசயரத்தினம் அவர்கள் 35ஆவது பதிவாகப் பட்டியலிட்டுள்ளார்.

இந்நூலின் கட்டுரைகள் பெரும்பாலும் பழந்தமிழ் இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதன்மூலம், பழந்தமிழ் மக்களின் பழக்கவழக்கங்கள் பற்றியும், அவர்கள் தமது அகவாழ்விலும் புறவாழ்விலும் கடைப்பிடித்து வாழ்ந்து வந்த ஒழுக்கலாறுகளைப்பற்றியும் பேசுகின்றன. பண்டைத்தமிழரின் இலக்கியப் படைப்புகள் பற்றியும் தொல்காப்பியர் காலம் பற்றியும் சங்க நூல்களின் படைப்பாண்டுகள் பற்றியும் ஆராய்ந்து கூறும் ஆசிரியர் குறுந்தொகைக் காட்சிகளில் அப்படியே மனம் லயித்துப் போய்விடுகின்றார்.

உள்ளத்தின் உயர்வுதான் உண்மையான நாகரீகத்தின் உயிர்நாடி என்றும் புறத்தின் வளர்ச்சி வெறும் போலித்தனமே என்றும் கூறும் ஆசிரியர் அகவளர்ச்சியும் புற வளர்ச்சியும் ஒத்த அளவில் வளர்வதே மனித நாகரீகம் மேன்மையுற ஏற்ற வளர்ச்சிப்போக்கு என்ற கருத்தினை முன்வைக்கிறார். இதுவே இவரது இலக்கிய அறிவியல் நுகர்வுகள் என்ற நூலின் அடிநாதமாகக் காணமுடிகின்றது.

திரு.கா.விசயரத்தினம் அவர்கள் எழுதிய நூல்களை லண்டனில் தபால்மூலம் பெற்றுக்கொள்ள விரும்புவோர் ஆசிரியருடன்; நேரில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும். பிரதியொன்றின் விலை 5 பவுண்களாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லண்டன் புறநகர்ப்பகுதியாகிய கென்ட் பிரதேசத்தில் புரொம்லியில் வாழும் திரு.கா.விசயரத்தினம் அவர்களது தொலைபேசி இலக்கம் 0044 203489 6569 என்பதாகும். ( K.Wijeyaratnam  35,  Southborough  Road, Bickley, Bromley, Kent.  BR1  2EA)

பதிவுகளுக்கு அனுப்பியவர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.