ஒரு மொழி வழிப் பயணத்தில்..: வி.இ.குகநாதனின் ‘தெரிந்தும் தெரியாத தமிழ்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்.- வி.இ.குகநாதன் -Covid 19 வைரஸ் பரம்பலினையிட்டு ஒரு உள்ளிருப்பு வாழ்வினை வாழ்கின்ற ஒரு நெருக்கடி மிகுந்த கால கட்டத்தில், எத்தனையோ உயிர்ப்பலிகளும் இழப்புகளும் துன்பங்களும் துயரங்களுமாகத் தொடர்கின்ற வாழ்க்கையிலும், வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்துமுகமாக சில புதிய சிந்தனைப் போக்குகளும் செயற்பாடுகளும் உருவாகி வருவது உண்மையில் மனதிற்கு ஒரு சிறிய ஆறுதலையும் ஆசுவாசத்தினையும் ஏற்படுத்தி நிற்கின்றது. இவ்வகையில் புதிய வகை எழுத்துக்களும், படைப்புக்களும் காணொளி வாயிலான உரையாடல்களும் நேர்காணல்களும் பல்வேறு தளங்களிலும் உருவாகி உலா வந்து கொண்டிருப்பதானது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயங்களாகும். (இங்கு நான் அண்மையில் உருவாகி மறைந்து போன யாழ் நூலக திறப்பு விழா குறித்த அலப்பறை உரையாடல்களையும் சர்ச்சைகளையும் கணக்கில் எடுக்கவில்லை). இவ்வகையில் இலண்டனைத் தளமாக கொண்டு இயங்கி வரும் மக்கள் கலை பண்பாட்டுக் களமானது இந்நெருக்கடி மிகுந்த காலகட்டத்திலும் மிகக் காத்திரமாக செயற்பட்டு வந்த அமைப்பாகும். அவர்களது செயற்திறன் மிக்க ஒரு வினையாற்றுகையின் வடிவமாக அவ்வமைப்பினர் தோழர் வி.இ. குகநாதனின் ‘தெரிந்தும் தெரியாத தமிழ்’ என்ற நூலினை வெளியிட்டு, உள்ளிருப்புக் காலகட்டத்தில் புகலிடத்தில் வெளிவந்த ஒரேயொரு நூலினை வெளியிட்ட பெருமையினையும் தக்க வைத்துக் கொண்டுள்ளனர், இன்று அச்சக – பதிப்பக துறைகள் முற்று முழுதாக முடங்கிப் போயுள்ள காரணத்தினால் அவர்கள் இந்நூலினை ஒரு மின்னூலாக அமேசன் இணையத்தளம் மூலமாக வெளியிட்டுள்ளனர்.

தோழர் வி.இ.குகநாதன் அவர்கள் மக்கள் கலை பண்பாட்டுக் களத்தின் முக்கியமான செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர். இடதுசாரிய, திராவிட சிந்தனைகளின் பின்புலத்தில் தனது ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அவர் தமிழ் மொழி மீதான ஆய்வுகளில் எப்போதுமோ ஒரு விரிந்ததும் ஆழமுமான பார்வையினைச் செலுத்தி வருபவர். தமிழ் மொழி மீதான பற்றுதலை பலரும் இன்று மொழி வெறியாக இனவெறியாகக் கட்டமைத்து வரும் இக் கால கட்டங்களில் குகநாதன் வரலாற்று ரீதியான ஆய்வு முறைமையின்படி நம்பகத்தன்மையான ஆதாரங்களின் அடிப்படியில் வெளிப்படுத்தி வருபவர். அத்துடன் இன்று சமூக அரசியல் தளங்களில் தமிழின் மீதான சிதைப்புக்களை இருட்டடிப்புக்களை அம்பலப்படுத்தி அதற்கெதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருபவர். வினவு, கீற்று, குளோபல் தமிழ் நியூஸ், இனியொரு, புதிய கலாச்சாரம் போன்ற இதழ்களில் தொடர்ந்தும் எழுதி வரும் இவரது இரண்டாவது நூலாக இந்நூல் அமைகின்றது. அவரது முதலாவது நூலாக ‘கிரந்தம் தவிர்’ என்ற நூல் பல வருடங்களுக்கு முன் வெளி வந்ததினையும் இங்கு குறிப்பிடுவது அவசியம்.

‘தெரிந்தும் தெரியாத தமிழ்’ – ஒரு சிறு திகைப்பினை ஏற்படுத்தி நிற்கும் தலைப்புடன் வெளிவரும் இந்நூலானது ஒரு தொகுப்பு நூல் என்று கூறுவதே மிகப்பொருத்தமானதாகும். பல்வேறு அறிஞர்களும் சிந்தனையாளர்களும் வெளியிட்ட கருத்துக்களினதும் அவர்களிடையே இன்றளவும் உலா வரும் விவாதங்களினதும் தொகுப்பாக, ஆனால் சாதாரண மக்களும் வெகு எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் எளிமையாக குகநாதன் இந்நூலினை எழுதியுள்ளார். அதுவே இந்நூலின் சிறப்பெனவும் குறிப்பிடலாம். இந்நூலினை இவர் 5 படலங்கலாக அதாவது அத்தியாயங்களாக எழுதியுள்ளார்.

தாய் மொழியான தமிழ்.
தமிழ் மொழியின் சிறப்பு
தமிழ் மறைப்பும் தமிழ் சிதைப்பும்.
மதம் கொண்ட/கொன்ற தமிழ்.
தமிழும் சாதியும்.

இதில் முதலாவது படலத்தில் ஆசிரியர் எம்மொழியானது முதன்முதலில் எங்கு தமிழ் என்று குறிப்பிடப்படுகின்றது என்பதினை ஆதாரபூர்வமாக நிறுவி, பின் தமிழ் மொழியின் தோற்றம் குறித்தும் அதற்கு அந்தப் பெயர் வந்ததற்கான காரணங்கள் குறித்தும் அறிஞர்களிடையே உலாவரும் கருத்துக்களை தர்க்க ரீதியாக எழுதிச் செல்கிறார்.

தமிழ் மொழியின் சிறப்பு குறித்து இரண்டாவது படலத்தில் விபரிக்கும் அவர் இந்நூலின் மூன்றாவது படலத்தில் தமிழ் மொழியைச் சிதைப்பதற்கும் அழிப்பதற்கும் முயற்சிக்கும் சக்திகள், இதிலும் முக்கியமாக பார்ப்பன சக்திகளும் சமஸ்கிருத மொழியும் கடந்த 2௦௦௦ வருடகாலமாக எவ்வாறு ஆக்ரோஷமாகவும் நுட்பமாகவும் தொழிற்பட்டன, இன்றும் எவ்வாறு தொழிற்படுகின்றன என்ற அதிர்ச்சி ஊட்டும் விபரங்களை விளக்கிச் செல்கிறார். நான்காவது படலத்தில் ஆரம்பத்தில் மத நீக்கம் செய்யப்பட்ட சமூகமாக விளங்கிய ஆதித் தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு மதவாதக் கருத்துக்கள் புகுந்து கொண்டன என்ற வரலாற்று உண்மைகளை கூறிச் செல்கிறார். தமிழும் சாதியும் என்ற இந்நூலின் ஐந்தாவது படலத்தில் எமது இனத்தின் சாபக்கேடாகவும் கருப்பு வரலாறுகளாகவும் தொடரும் சாதீயம் எப்படி உள்நுழைந்தது என்பதினை ஆய்வு செய்கிறார். மேலும் இந்நூலின் பின்னிணைப்பாக தமிழ் மொழி வரலாற்றில் ஈழத்தின் பங்களிப்பு, chess விளையாட்டின் அதாவது சதுரங்க விளையாட்டின் தோற்றமும் அதன் தமிழ்ப் பெயரும். திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம். போன்ற பல்வேறு சமகால விடயங்கள் குறித்தும் பல தகவல்களை சொல்லிச் செல்கிறார்.

இன்று நாம் வாழுகின்ற இந்த மேலைத்தேய நாடுகளில் எமது தாய்மொழியினை அடுத்த தலைமுறையினரும் அறியும் வகையில் எடுத்துச் செல்ல வேண்டிய ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம். அதற்கான பல முயற்சிகளையும் பிரயத்தனங்களையும் கூடவே மேற்கொண்டும் வருகின்றோம். ஆயினும் இன்று தாயகத்திலும், இங்கு நாம் வாழ்கின்ற மேலை நாடுகளிலும் தவறான தகவல்களின் அடிப்படையில்தான் எமது இளைய தலைமுறையினரின் தமிழ் கற்கை நெறி உருவாக்கப்பட்டுள்ளது என்பது நம்மில் பெரும்பாலோர் அறியாத உண்மை. அவ்வகையில் இந்நூலானது உலகெங்கிலும் தமிழுக்காக ஒரு புதிய வகைக் கற்கைநெறி ஒன்று உருவாக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது.

என்றுமில்லாதவாறு இன்று எமது எமது மொழியும் நிலமும் பண்பாடும் ஒரு நெருக்கடியான அபாயகரமான காலகட்டத்திற்குள் பிரவேசித்துள்ளது. ஈழத்திலு தமிழகத்திலும் எமது மொழியினை அழிப்பதற்கும் சிதைப்பதற்கும் 2௦௦௦ வருடமாக கடும் முயற்சி எடுத்து வரும் மாபெரும் சக்திகளிடமிருந்து இதனைக் காகக் வேண்டிய கடப்பாடு எமக்குண்டு. அத்தகைய செயற்பாடுகளின் ஆரம்பப் புள்ளிகலில் ஒன்றாகத்தான் குகநாதனின் இந்நூலும் அமைகின்றது. எமது மொழியின் பண்பாட்டின் இனத்தின் சிதைவுகளைத் தடுக்கும் வகையில் தொடர்ந்தும் தோழர் குகநாதன் எழுத வேண்டும் என்பது எமது அவா. இந்நூலினை வாங்கிப் படிப்பதன் மூலமும் இதிலுள்ள தகவல்களை மற்றவர்களுக்கும் தெரிவிப்பதன் மூலமும் எமது மொழியின் வளர்ச்சிக்கும் எமது பண்பாட்டின் தொடர்ச்சிக்கும் நாமும் தொடர்ந்தும் பங்காற்றுவோம்.

நூல்: தெரிந்தும் தெரியாத தமிழ். ஆசிரியர்: வி.இ.குகநாதன். வெளியீடு: மக்கள் கலை பண்பாட்டுக் களம். பதிப்பு: அமேசன் கிண்டில் விலை: 5£ (Uk), 5 € (Europe), 5 $(Canada), 100Rs (இலங்கை. இந்தியா)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.