எதேச்சையாகத்தான் அந்த நூல் எனது கண்ணில் பட்டது. ஆனாலும் புறந்தள்ள முடியவில்லை. எமது மறக்கப்பட்ட, அல்லது மறக்கடிக்கப்பட்ட வரலாற்றின் பெரும்பகுதி இது போன்ற இலக்கியப்பிரதிகளுக்குள்தான் புதையுண்டு கிடப்பதாக எனக்குள் ஒரு நம்பிகை. எனவே இது பற்றி ஒரு சிறு குறிப்பொன்றினை எழுதலாம் எனது மனதில் தோன்றியதால், அதனை எழுதுவதற்கு எண்ணாமல் துணிந்தேன். இதற்குமப்பால் அந்த நூலின் வடிவமைப்பும் மிகவும் விசித்திரமாக இருந்தது. மற்றைய நூல்களைப் போல் அல்லாமல், 6’*6’ என்ற அங்குல அளவுத்திட்டத்தில் பதிப்பிக்கப்பட்ட அந்நூலானது அச்சு அசலாக ஒரு இறுவெட்டு(DVD) அல்லது குறுந்தகடு(CD) ஒன்றின் உறையின் வடிவத்திலேயே மிகவும் சிறியதாகவும் கவர்ச்சிகரமாகவும் தோற்றமளித்தது. அந்த நூலின் பெயர் : அர்த்தம் ஆசிரியர் : கதிர் சயந்தன் (இப்போது சயந்தன் கதிர் ) வெளியீடு : நிகரி பதிப்பகம் (2003)

சயந்தன் கதிரிற்கு இப்போது அறிமுகம் தேவையில்லை. ஆரம்பத்தில் பல்வேறுபட்ட சிறுகதைகளையும் எழுதிய அவர் இன்று ‘ஆறாவடு’ ‘ஆதிரை’ போன்ற நாவல்களின் மூலம் நவீன தமிழ் இலக்கிய உலகில் தனது தடத்தை ஆழமாகப் பதித்து, தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமையாக உருப்பெற்றுள்ளார்.

6 சிறுகதைகளை மட்டும் கொண்ட இந்த 84 பக்கங்கள் அடங்கிய இந்த நூல் பற்றி நான் எழுத ஆரம்பிக்கும் போதே என்னுள் ஏதோ உறைத்தது. பல வருடங்களுக்கு முன்பு சயந்தனின் ‘ஆதிரை’ நாவல் வெளிவந்த போது ‘பதிவுகள்’ இணையத்தளத்தில் ஒரு சிறு குறிப்பொன்றினை எழுதியிருந்தேன். அந்த குறிப்பின் ஆரம்பத்தில் பின்வருமாறு எழுதியிருந்தேன். “இன்றைய நவீனதமிழ் இலக்கிய உலகில் சயந்தன் மிகவும் கவனத்திற்குரிய ஒரு எழுத்தாளர். இவரது ஏனைய நூல்களை நாம் கண்ணுற்ற போதும் அது மிகப் பெரிய பாதிப்புக்களை எம்மிடையே ஏற்படுத்தவில்லை. ‘அர்த்தம்’ சிறுகதைத்தொகுதி தமிழ்த்தேசியத்தின் பிரச்சார ஊதுகுழல்களாக விளங்கிய பல சிறுகதைகளையும் ‘ஆறாவடு’ நாவல் பலத்த சிரமமான வாசிப்பனுபவத்துடன் கடக்க வேண்டிய ஒரு நாவலாகவும் விளங்கியது”. இப்போது நினைத்துப் பார்க்கும் போது ஒரு தவறான தகவலை இதனை வாசித்தவர்களிடம் பகிர்ந்து கொண்டதற்காக மனம் மிகவும் வருந்தியது. நான் அதில் எழுதியது போல் இந்தச் சிறுகதைகள் ஆனது தமிழ்த்தேசியத்தின் அல்லது விடுதலைப்புலிகளின் பிரச்சார ஊது குழழ்களாக அமைந்திருக்கவில்லை. மாறாக தம்மீது வலிந்து திணிக்கப்பட்ட போரை எதிர்கொண்ட மக்களின் போராட்ட வாழ்வினையும், அவ்வாழ்வில் அவர்கள் எதிர்கொண்ட வலிகளையும் துயரங்களையும் கூடவே அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளையும் வெற்றியை நோக்கிய அவர்களது கனவுகளையும் குறித்தே இது பேசுகின்றது.

கேள்விகள், வெட்கம், அக்கரை, கறையான்கள், அர்த்தம், கூண்டு என்ற 6 சிறுகதைகளும் பல்வேறு தளங்களிலும் நகர்கின்றது. பல்வேறு விடயங்களையும் தொட்டுச் செல்கின்றது. அனைத்து கதைகளிலும் போர் சூழ்ந்த வாழ்வே மையமாக விளங்குகின்றது. இவை போராளிகள், பெண்போராளிகள், போராளிக் கவிஞர்கள், மாணவர்கள், பாசம் மிகு தாய்மார்கள், இயல்பு வாழ்கை மட்டுமே வாழ்கின்ற சாதாரண எளிய மனிதர்கள் என்று பல்வேறு பட்ட கதை மாந்தர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவர்கள் ஆனையிறவுப் பெருவெளியில், குன்றும் குழியும் நிறைந்த பாதைகளில் மோட்டார் சைக்கிள்களில் விரைந்து செல்கிறார்கள். இலக்கியம் குறித்தும் கவிதை குறித்தும் விவாதிக்கிறார்கள். தம்மை விட வயதில் இளைய தம்பிமார்கள் ஆயுதம் ஏந்தக் கூடாது,அவர்கள் வாழ வேண்டும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் அண்ணன்மார்களாக ஆயுதம் ஏந்துகிறார்கள். போரிட்கு முகம் கொடுக்க முடியாமல் அக்கரைக்கு தப்பி செல்ல முயல்கிறார்கள். வெளிநாடு செல்ல முயன்று அந்நிய தேசங்களில் மாதக் கணக்காக அல்லல் பட்டு தோல்வியில் நாடு திரும்புகிறார்கள். இரகசியப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். எல்லாவற்றிட்கும் அப்பால் போர் சூழ்ந்த வாழ்வில் ஏற்படுகின்ற மரணங்களை அர்த்தமான மரணம் எது, அவலமான அநியாயமான மரணம் எது என்று வகைப்படுத்தி நிற்கிறார்கள். ஆயுதங்களை ஏந்தினாலும் இவர்களும் சாதரண மனிதர்களாகவே வலம் வருகிறார்கள். பாம்பிற்குப் பயப்படுகிறார்கள். பேய்க்குப் பயப்படுகிறார்கள். போராளிகளாக வருகின்ற நகுலனும் கெனடியும் ராகுலனும். போராளிக் கவிஞராக வருகின்ற சங்கீதாவும், தமிழகத்திற்கு தப்பி செல்லும் சேயோன் குடும்பமும், சிறைக் கொடுமைகளை அனுபவித்த விஜியும் எமக்குச் சொல்கின்ற சேதிகள் ஆயிரமாயிரம்.

மேற்குறித்த விடயங்களை மிக ஆழமாக இவை வெளிப்படுத்தினாலும், இவை எமது ஈழ விடுதலைப் போராட்டத்தின் இருண்ட பக்கங்களையோ அல்லது எமது சமூகத்தில் புரையோடிக் கிடக்கின்ற சாதீயம் குறித்தோ, சமூக ஏற்றத் தாழ்வுகள் குறித்தோ கவனம் கொள்ளாமல், எமது தேசிய விடுதலை குறித்த அக்கறையில் மட்டுமே தனது பார்வையை அதிகம் செலுத்தியிருப்பது கொஞ்சம் நெருடலான விடயமே.

இந்நூல் குறித்து அழகியல் பார்வையிலோ அல்லது அதன் வடிவங்கள் குறித்தோ இலக்கிய ரீதியாக நான் எந்த விமர்சனப்பார்வையையும் இங்கு முன் வைக்கவில்லை. மாறாக இந்நூலின் ‘நட்பூக்கள்’ என்ற இறுதிப் பக்கங்களில் அவரது இரு நண்பர்கள் இக்கதை குறித்து வைத்த இரு சிறு விமர்சனக் குறிப்பிக்களை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

அதில் இ.செந்தூரன் என்பவர் “இக்கதைகளில் எங்கெல்லாம் யதார்த்தம் வெளிப்படுகின்றதோ அங்கெல்லாம் அவனது அனுபவங்கள் இழையோடுகின்றன. எங்கெல்லாம் யதார்த்தம் நடைதளர்ந்து போகின்றதோ அங்கெல்லாம் பரிச்சயமில்லாத விடயங்களை தொட்டிருக்கிறான் என்று புரிகின்றது.” என்று தனது பார்வையை முன் வைக்கிறார்.

“இவனது கதைகளில் வாழ்ந்த காலங்களின் நினைவுகள் தெரிகின்றன. வதைபட்ட காலத்தை, அந்த காலத்தின் செய்திகளை வெளியே சொல்லும் அவா தெரிகின்றது.” என்று கூறும் உ.மைதிலி தொடர்ந்தும் “இச்சிறுகதைகளில் மன உணர்வுகள் தவிர்ந்த சம்பவக் கோவைகளின்ஊடாகவே கதைகள் நகர்த்தப்படுகின்றன.இது பரிசோதனை முயற்சிகளுக்கு சயந்தன் பயப்படுகின்றானோ என்ற கேள்வியை எனக்குள் ஏற்படுத்துகின்றது.” என்று கூறிச்செல்கிறார்.

உண்மைதான். சம்பவங்களின் கோர்வைகளாக விளங்கும் இந்தச் சிறுகதைகள் ஆனது வெறும் தட்டையாக, ஒரு ஒற்றைப்பரிமாண வடிவில் (உபயம் - அனோஜன் பாலகிருஷ்ணன்) நகர்வதினை நாம் மறுக்க முடியாது. அத்துடன் இன்றைய உன்னத இலக்கியங்களுக்கு அளவு கோல்களாக விளங்கும் உள் மன உணர்வுகள் குறித்து இவை அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை என்பதும் ஆத்ம விசாரங்கள், அகமனச் சிக்கல்கள் குறித்த விசாரணைகள் எதனையும் கூட இவை மேற்கொள்ளவில்லை. என்பதும் உண்மையே. ஆயினும் அழகியல் ரீதியில் இது ஒன்றும் சோடை போகவில்லை என்பதனை நான் இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன். எந்தவித மிகைப்படுத்தலும் இன்றி இன்னும் ஒரு விடயத்தை கூறிக் கொள்ள விரும்புகிறேன். சயந்தனது இந்த ஆரம்ப காலக் கதைகளில் ஏதோ ஒரு உள்ளொளி ஒன்று பரவிக் கிடப்பதினையும், ஒவ்வொரு கதைகளிலும் எதோ ஒரு பொறி ஒன்றினை அவர் தெறிக்க விட்டிருப்பதினையும் என்னால் உணர முடிந்தது. இதனை வாசிக்கின்ற ஒவ்வொரு வாசகனும் கூட உணர்ந்து கொள்வான். அன்று இக்கதைகளை இலக்கிய விமர்சகன் ஒருவன் வாசித்திருந்தால், எதிர்காலத்தில் நவீன தமிழ் படைப்பிலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் ஒரு உன்னதமான படைப்பாளி ஒருவன் உருவாகிவிட்டான் என்று அன்றே கட்டியம் கூறியிருப்பான். அப்படி யாராவது அன்று கூறினார்களா என்று நான் அறியேன்.

இன்று சயந்தன் கதிர் தனது படைப்புத் திறனின் உச்சியில் உள்ளார். ஒரு உன்னதமான தளத்தில் உருவாகின்ற இன்றைய அவரது படைப்புக்கள் யாவும் ஈழம், தாயகம் என்ற எல்லைகளை எல்லாம் கடந்து பல்வேறு பிரதேசங்களிளிலும் நிலப்பரப்புக்களிலும் பயணித்து வருகின்றது. இன்று அவை சூரிச் நகரின் மையத்தில் அமைந்த மெக்சிகன் உணவு விடுதியில், அங்கு பிறந்து வளர்ந்த இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த தமிழரசியுடன் Danna Paula இன் இசையினை ரசிக்கின்றது. மேசையில் வைக்கப்பட்டிருந்த கிளாசின் ஊடாக, அகன்று தோற்ற மயக்கம் காட்டுகின்ற அவளது மார்பினை ரசிக்கின்றது. திருமணத்திற்கு முன்னான பாலுறவு பற்றி வெளிப்படையாகப் பேசுகின்றது. அத்துடன் கொழும்பு நகரின் மத்தியில் உள்ள ‘சிலோன் ஸ்பா’ என்ற நட்சத்திர விடுதியில் மூக்குத்தி அணிந்த ஒரு இளம் சிங்களப் பெண் விபச்சாரியினால் மூர்க்கமாகப் புணரப்படுகின்றது. இப்படியாக இன்று இவரது கதைகள் யாவும் எல்லைகள் கடந்து, தேசங்கள் கடந்து பல்வேறு பிரதேசங்களிலும் பயணித்தாலும், அன்று ஆனையிறவுப் பெருவெளியிலும் வன்னி நிலப்பரப்புக்களிலும் குன்றும் குழியுமான தெருக்களில், காடுகளில் பயணித்து அவரது கதைகளும், கதை மாந்தர்களான கெனடியும், நகுலனும், ராகுலனும், சங்கீதாக்களும் மட்டுமே நிஜமான மாந்தர்களாக, எம் நெஞ்சை விட்டகலாத பாத்திரங்களாக உருப்பெற்று நிற்கிறார்கள்.

மேற்குறித்த சயந்தன் கதிரின் ‘அர்த்தம்’ சிறுகதைத்தொகுதி போன்றே, எமது முப்பது வருட காலத்திற்கும் மேற்பட்ட எமது ஈழ விடுதலை போராட்ட வரலாற்றின், துயர் மிகுந்ததும் வலி நிறைந்ததும், மரணங்கள் மலிந்ததுமான வாழ்வினையும், தியாகம், துரோகம், வீரம், அர்ப்பணிப்பு, காதல் என்று வாழ்வின் பல்வேறு திசைகளிலும் பயணித்த ஒரு மக்கட் கூட்டத்தின் வாழ்வின் சாட்சிகளாக விளங்குகின்ற ஆயிரமாயிரம் இலக்கியப் பிரதிகள் எம்மிடையே உள்ளன. ஆனால் இன்று போரிற்குப் பிந்திய இலக்கியங்களாக புற்றீசல்களாக படையெடுத்து வரும் இலக்கியப் பிரதிகளுக்கு முன்பாக, போர்க்கால சூழலில் படைக்கப்பட்ட இது போன்ற படைப்புக்கள் யாருடைய கண்களுக்கும் புலப்படாமல் கவனிக்கப்படாமல் இருப்பது எமது துரதிஷ்டமே. அத்துடன் வெவ்வேறு இலக்கிய அளவு கோள்களை முன்வைத்து இது போன்ற படைப்புக்களை ஈழத்தமிழ் இலக்கிய மரபில் இருந்து விலக்கி வைக்கப் பட்டிருப்பதற்கான காரணங்களும் என்ன என்பது எமக்கு இன்று வரை துல்லியமாகப் புலப்படவில்லை. இன்று எம்மிடையே உள்ள ‘பரிசுத்த வேதாகமம்’ ஆனது பல நூறு நூற்தொகுதிகளினால் உருவாக்கப்பட்ட ஒரு நூலாக இருந்ததென்பதும், அது காலப்போக்கில் பல்வேறு காரணங்களினால் பல நூற்தொகுதிகள் விலக்கப்பட்டு இன்று வெறும் 66 தொகுதிகளுக்குள் மட்டும் அடங்கிய நூலாக விளங்குகின்றது என்பதுவும் ஆய்வாளர்களின் கணிப்பு. இந்த ‘விலக்கப்பட்ட வேதாகமங்கள்’ போன்றே இரத்தமும் சதையுமாக எம்மிடையே உருவாகியிருந்த ஆயிரமாயிரம் படைப்புக்கள் விலக்கி வைக்கப்பட்டு, ஒரு சில பிரதிகளும் படைப்புக்களும் மட்டுமே மீண்டும் மீண்டும் விதந்தோடப் படுவதற்கான காரணங்களும் எமக்குப் புரியவில்லை.

இறுதியாக, எமது மக்களின் வாழ்வைப் பேசிய, வாழ்வியலைப் பேசிய இது போன்ற ஆயிரமாயிரம் படைப்புக்கள் குறித்து எந்தவித அக்கறையுமின்றி, சிரத்தையுமின்றி எமது சமூகம் இருப்பது மிகவும் கவலைக்குரியதே. ஒரு தடவை ஆவணப்பட இயக்குனர் சோமீதரன் ஒரு கலந்துரையாடலில் குறிப்பிட்டார். “எமது ஆவணங்களை அழிப்பதற்கு சிங்கள பேரினவாதமோ வேறு எதிரிகளோ தேவையில்லை. அந்த காரியத்தை நாமே செவ்வையாக செய்து வருகின்றோம்”, என்று. உண்மைதான். எமது ‘யாழ் நூலகம்’ எரிக்கப்பட்டு 40 வருடங்கள் ஆகின்ற போதிலும் அந்தக் கொடுங்கனவை இன்னும் மறக்கமுடியாமல் இன்னமும் கோபாவேசத்துடன் நாம் எமது பதிவுகளையும் இடுகைகளையும் பகிர்ந்து வருகின்றோம். ஆனால் இன்னமும் எம்முன் எரிக்கப்படாமல் அழிக்கப்படாமல் இருக்கின்ற இது போன்ற பிரதிகளை கரையான்களுக்கு இரையாக்கும் செயற்கரிய காரியத்தையும் செவ்வனே நிறைவேற்றி வருகின்றோம். எனவே ஏதோ ஒரு சில காரணங்களுக்காக எம்மில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு புதையுண்டு போயுள்ள இந்த இலக்கியப் பிரதிகளை தேடிக்கண்டடைவதும், அதனை வெளிக்கொணர்வதும், அது குறித்து பேசுவதும், விவாதிப்பதும், அதனையும் நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதியாகப் பிரகடனம் செய்வதும் இன்று எம்முன் உள்ள தலையாய கடைமைகளில் ஒன்றாகும். யார் இதனைச் செய்வார்? காதுள்ளவன் கேட்கக் கடவன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.