நன்றி: விக்கிபீடியாகன்னியாகுமரிக்குத் தெற்கே கிடக்கின்ற இந்தியப் பேராழியின் கொந்தளிப்புக் கடல்நீர் கிறித்து ஊழிக்கு முன்னீடு பல ஆயிரஆண்டுகள் (millenniums) செழித்திருந்த தமிழருடைய ஒரு கனத்த தொன்னிலைசார் நாகரிகத்தின் மீதிமிச்சங்களை தன் ஆழத்தே மறைத்துக் கொண்டு உள்ளது.  இந்தியாவின் இடக்கிடப்பியல் (topography) பண்டை நாளைய நிலம் மற்றும் நீரின் அமைவால் இந்நாளைய நிலம் மற்றும் நீரின் அமைவில் இருந்து வேறுபட்டிருந்தது. தமிழ் நாடு நாவலந்தீவு என அறியப்பட்ட ஒரு பெருந் தீவின் மீதென் பகுதியாக இருந்தது.  இத்தீவு வடக்கே விந்திய மலைகளால் கட்டுவரம்பிடப்பட்டு தெற்கே ஆத்திரேலியா வரையும், மேற்கே தென் ஆப்பிரிக்கா வரையும் விரிந்திருந்தது. இத்தீவு இந்தியப் பேராழியில் 5,000 கல்தொலைவுகளுக்கு (miles) மேலாகவே அகற்சி பெற்றிருந்தது. கங்கைச் சமவெளி ஒரு பெரும்பரப்பான மாக்கடல் நீர்ப்போர்வையால் மூடியிருந்த காலம் ஒன்றும் இருந்தது அதோடு இரசபுத்தாரவைச் சுற்றிலும் பல ஆயிரம் ஆண்டுளுக்கு ஊழிவெள்ளம் நீடுநிலைத்திருந்தது. இது திரு எச். ஜி. வெல்சு (H.G.Wells) என்பாரால் "Outline of History" என்ற நூலுள்  உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவர் தென்இந்தியாவானது பஞ்சாபு, காசுமீர், காந்தாரம் ஆகியவற்றிடம் இருந்து அரபிக்கடலையும் வங்காள விரிகுடாவையும் இணைக்கின்ற ஒரு பெரும்பரப்பு மாக்கடல் தொடரால் துண்டிக்கப்பட்டிருப்பதை காட்டினார். கங்கைச் சமவெளியை கடல் மூடியிருந்த போது இதுவே இந்தியாவின் இடக்கிடப்பியலாக சற்றொப்ப 25,000 முதல் 35,000 ஆண்டுகளுக்கு முன்னம்  இருந்தது.

நிலத்தியல் (geological) சான்றுகளின்படி, தென்இந்தியாவானது தொடக்க காலங்களில் கிழக்கில் மியான்மர் முதல் தென்சீனம் வரை கிழக்குமுகமாகவும் மேற்கில் தென்ஆப்பிரிக்கவும் வடக்கில் விந்திய மலைகளிலிருந்தும், தெற்கே ஆத்திரேலியா வரையுமாக விரிந்திருந்த ஒரு பெரும் பரப்புடைய கண்டத்தின் பகுதியாகவே இருந்துள்ளது. அசாம் மூலமாகத் தென்இந்தியா இமயத்தோடு சிறிது தொடர்பு கொண்டிருந்திருக்காலம் என்று அவர் சொன்ன செய்தியைக் அது கொண்டுள்ளது. இக் கண்டம் வடக்கில் அசாமில் இருந்து விரிந்து, கி.பி. முதல் நூற்றாண்டில் செவ்விலக்கிய எழுத்தாளர்களால் எரித்திரியக் கடல் என்று அழைக்கப்பட்ட அரபிக் கடலோடு இணையும் நெடிது நீண்டக் கடலால் கட்டுவரம்பிடப்பட்டு இருந்தது. சற்றொப்ப 82,000 ஆண்டுகளுக்கு முன்னம் உயர் நாகரிகமுற்றிருந்த நிலங்களில் போதிய மாற்றங்களை நிகழ்த்தியபடி காந்த அலைத் தொடர்கள் உலகைச் சுற்றிலும் கிழக்கில் இருந்து மேற்கு முகமாக நகர்ந்தன என்று  நிலத்தியலாளரும், அறிவியலாளரும் சொல்லியுள்ளனர். இதன்போது ஆசியாவையும் ஆப்பிரிக்காவையும் இணைக்கின்ற இலெமூரியாக் கண்டம் தன்னை ஒரு சின்னஞ்சிறு அளவினதாகக் குறைத்துவிடும்படியாக சற்றே மூழ்கத் தொடஙகியது, அதன் விளைவாக கண்டத்தின் மேற்குப் பகுதிகள் ஆத்திரேலியா, ஆப்பிரிக்கா, சுமத்திரா, சாவா மற்றும் போர்னியோவை நோக்கிப் பல்வேறு திசைகளில் பிரிந்து சிதறியன.

இலெமூரிய மக்கள் நீல்ஆற்றுச் சமவெளி முதலாய, ஆப்பிரிக்க பகுதிகளுக்கு புலம்பெயர்ந்தனர். அவர்களே பாபிலோன், அசீரியா மற்றும் சுமேரியாவிற்கு நகர்ந்தனர் என்றும் அங்கு பெரும் நாகரிகங்களை நிறுவினர் என்றும் சொல்லப்படுகின்றனர்.

வேறொரு கருத்தின அறிஞர்களின்படி (school of scholars) பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆத்திரேலியாவை உட்கொண்டு தென் அரைக்கோளத்தில் (hemisphere) விரிந்திருந்ததாகத் தெரிகின்ற கோண்டுவானா எனப்படும் ஒரு திரண்ட பெருங்கண்டம் இருந்துள்ளது. இந்த கோண்டுவானா நிலம் பல நூறாயிரம் ஆண்டுகள் முன்னமே பிரிந்து போய்விட்டது என்பதோடு பின்னீடு இந்தியப் பேராழியில் அமிழ்ந்து போன இலெமூரியா இந்த கோண்டுவானா நிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. இந்தக் கண்டம் தான் மாந்த இனத்தின் மீதொடக்கத் தாயகமாக இருந்தது என்பதோடு குரங்கு போன்ற விலங்குகளின் வாழிடமாகவும் அது இருந்தது. அதைமுன்னிட்டு, இலெமூரியா மாந்தக்குரங்கினத்தினின்று (anthopoid apes) முதன்முதலாக வெளிப்பட்டு வளர்ந்த மாந்த இனத்தின் தாயகமாகவே கருதப்படுகின்றது. ஆனால் கெடுவாய்ப்பாக (unfortunately), இக்கால் அக்கண்டம் இந்தியப் பேராழி மேற்பரப்பிற்கு அடியில் மூழ்கிவிட்டது. இந்தியப் பேராழி தன் சிறகுகளான பெரும்பரப்பான நீர்ப் போர்வையை இந்தியா வரையான தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவின் தென்கிழக்குக் கடற்கரை நெடுகலும் பரப்பி உள்ளது. கண்டத்தின் பெரும்பால் பகுதிகளின் சரிந்தமிழ்விற்கு (subsidence) முகாமையான காரணங்கள் ஒன்றனுள் கடும் அழிவெள்ளங்களும் (cataclysms) நிலநடுக்க விசைகளுமே ஆகும். அதைமுன்னிட்டு, மிகச் சேய்மையானக் காலந்தொட்டே மக்கள் தோன்றி வாழ்ந்த நிலத்தின் பெரும் பகுதிகள் பேராழியின் அடியில் அமிழ்ந்து போயின. மேலும், இரசபுத்தாராக் கடலின் நிலயெழுச்சியும் கூட இதே விசைகளால் நிகழ்ந்ததே.

இக்கால் உலகம் மாந்தவுயிரைப் பல நூறாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து நிலைக்கவித்துக் கொண்டுள்ளது என்பதோடு கதிரவ மண்டலத்தில்  நிகழும் சிறுமையான பிரிகைகளின் (divergencies) காரணமாக மேலே குறிப்பிட்ட கடும்  இயல்புக்குலைவுகளுக்கு ஆட்பட்டு வந்துள்ளது. செவிவழிச் செய்திகளும் மரபுகளும் கூட 13,000 ஆண்டுகள் முன்னம் மண்ணுலகைத் தழுவிக் கொண்ட பேரழிவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. அக்காலங்களில் அட்லாண்டிக்கையும் இலெமூரியாவையும் அழித்தபடி கடல் சுண்டியெறிந்தும் வீழ்ந்தும், பெரும் ஓத அலைகளாய், வெள்ளமாய் எழும்பியது. நடைமுறையில் இந்த அழிவெள்ளமே உலகின் முடிவாக இருந்தது. பல்வேறு சீன, இந்திய, அமெரிக்க மற்றும் பாலிநேசியச் செவிவழிச் செய்திகளும் தொன்மங்களும் இந்நிகழ்வை குறிப்பிடத்தக்க ஒப்புமையுடன் வண்ணிக்கின்றன.

மேலுள்ள கலந்துரையாடலின் வெளிச்சத்தில் தொல்பழமையில் இலெமூரியாவின் தென்கண்டத்தில் தமிழர்களுடைய ஒரு பண்டைய நாகரிகத்தின் மறுக்கமுடியாத சுவடுகள் இருந்தன என்று சொல்லலாம். இக்கண்டத்து மக்கள் காட்டுவிலங்காண்டிகள் (Barbarians) அல்லர் ஆனால் பெரு நகரங்களையும் நகர நாகரிகத்தையும் கட்டிஎழுப்பிய நாகரிக மக்கள் ஆவர்.

இந்தியப் பேராழியின் திரிவாக்கம் (Evolution of Indian Ocean):

இந்தியப் பேராழியில் ஞாயிறு தீவு (sun island) போலவும்,  பென்ஹையா தீவு போலவும் பல்வேறு தீவுகள் நிலைப்பட்டிருந்தன. பின்னீடு  ஒரு பெருந்திரண்ட நிலப்பரப்பு துண்டு துண்டாகக் கடலடியில் மறைந்து போனது அதோடு இந்தியாவையும் மடகாசுகரையும் இணைக்கின்ற நிலப் பாலம் முறிந்து சிதைந்விட்டது. அதுவே இற்றைத் தீவுகளின் நிலைப்பட்டிருத்தலுக்குக் காரணமாகியது; அவை  இலெமூரியாவின் மீதங்களாக இருந்தவை.

இந்திய மற்றும் மேலை அறிஞர்களால் எழுப்பப்பட்ட வினா திராவிடர்களின் மூல தாயகக் கொள்கையை நடுப்படச் சுற்றுகின்றது; அது அவருடைய தாயக நிலம் இந்தியப் பேராழியின் அடியில் மூழ்கிப்போனதா? அல்லது மூலதிராவிடர்கள் ஆப்பிரிக்கக் கடற்கரைக்கும் அதேபோல் வடக்குநோக்கி இந்தியக் கடற்கரைக்கும் பாரசீகக் குடாவிற்கும் இடம்பெயர்ந்தனரா? என்பதே. இலெமூரியாக் கண்டத்தின் ஊழ் (fate) மற்றும் அதன் மூலக்குடிவாணர் குறித்த இவ் வினாக்களுக்கும் புதிரிகளுக்கும் விடையளிக்கப்பட வேண்டும், இதற்கு மிகஆழ்மான பகுப்பாய்வும் இந்தியப் பேராழி மேற்பரப்பு பற்றிய ஒரு ஆழ்ந்த ஆய்வுமே வேண்டியுள்ளது. கடலடி அகழாய்வுகள் இலெமூரியக் கடைசிக் கண்டத்துடன் பிணைப்புற்றுள்ள பண்டைத் தமிழரது பண்பாட்டுச் சுவடுகளின் மேல் கவனம் செலுத்துவதற்கு உயிர் போன்று விளங்குகின்றன.

மேலே கலந்துரையாடிய கொள்கைக்குச் சார்பாகவும் எதிராகவும் இப் பொருண்மைக்கூறு (subject) குறித்த தம் நோக்குகளை வெளிப்படுத்துகின்ற மேன்மைமிகு அறிஞர்களும் உள்ளனர். அவருள் உரூசல் வாலசு (Russel Wallace), எடுவர்டு லென்சர் (Edward Lancer), விசர் எசு. கார்வி (Wisher S. Carve), ஃபெர்டினாண்டு குன் (Ferdinand Kunn), நய் எர்ரண்டு (Knigh Errant), பி. சி மசூம்தார் (B.C. Mazumdar), டி. டபுல்யூ. ஓல்டெர்நெசு (T.W. Holderness), வி.பி. கேட்கர் (V.B. Ketkar),  வாடியா மற்றும் பிற பெரும் அறிஞர்கள் அடங்குவர். இலங்கை வரலாற்றியலர் திரு குலரெத்தின, 'இலங்கையானது இற்றைய தீவக்குறை (peninsular) இந்தியா, பெரும் பகுதி ஆப்பிரிக்கா, மேலை ஆத்திரேலியா மற்றும் பிரேசில் ஆகியன அடங்கிய கோண்டுவானா நிலம் எனப்படும் ஒரு பெரும்பரப்பு மூழ்கிவிட்ட கண்டத்தின் பகுதியாக விளங்கியது' என்று சொன்னார்.

முக்காலமும் உணர்ந்தவராக அறியப்படுகின்ற தந்திரஓகி திரு. பிரபாத் ரஞ்சன் சர்க்கார் என்பவர் "Human society is one and indivisible - Part 1" என்ற தம் நூலுள் "விந்திய மலைகளுக்கு வடக்காக திபெத்து வரை கிடக்கின்ற இற்றைய வட இந்தியப் பரப்பு முந்து-வரலாற்றுக் காலத் தொன்மையில் பேராழிக்கடியில் அமிழ்ந்திருந்தது. விந்திய மலைகளுக்கு தெற்கே தென்இந்தியாவையும், இற்றைய அரபிக் கடல், பாலிநேசியத் தீவுகள், மலேசியத் தீவுத்திட்டுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றை உளளடக்கிய பரப்பு கோண்டுவானா நிலம் என்னும் ஒரு பெரும்பரப்பு வட்டாரமாக விளங்கியது. ஆத்திரிக்கு (Austrics) மரபின மக்கள் கோண்டுவானா நிலத்தின் வடபகுதியிலும், நீக்கிரோ மரபின மக்கள் அதன் தென் பகுதியிலும் வாழ்ந்திருந்தனர். அதன் நடுப்பகுதியில் ஆத்திரிக்குகளும், நீக்கிரோக்களும் ஆகிய இருசாராரும் வாழ்ந்திருந்தனர். இக்காலத்து திராவிடர்கள் இந்த ஆத்திரிக்கோ - நீக்கிராய்டு மக்களின் வழிதோன்றல்கள் ஆவர்" என்று கூறியுள்ளார்.  

இலெமூரியர்கள் :

இலெமூரியக் கண்டத்துடன் தொடர்புடைய பண்டைய எகிபதின் கையெழுத்துச்சுவடி மூலங்கள் இலெமூரியர்களின் உடலுயரம் (stature), இயல்பு குறித்து ஒரு கவர்ந்தீர்க்கும் குறிப்பை வெளிப்படுத்தி உள்ளன. அம்மூலங்களின்படி, அதில் விளங்காப்புதிர்கள் (Mysteries), மெய்ந்நிகழ்ச்சிகள் (Facts) மற்றும் புனைவங்கள் (Fictions) ஆகியன இலெமூரியரின் வழித்தோன்றல்களைச்  சுற்றிச்சூழ்ந்து இருந்தன.  இலெமூரியர்கள் வழக்கமாக மலைச் சரிவுகளின் உச்சியில் தம் மனைகளையும், கோவில்களையும், குடியேற்றப் பகுதிகளையும்.கட்டி இருந்தனர். அவர்கள் வலுவானவர்களாகவும் (strong), கரடானவாகுடையவர்களாகவும் (sturdy) இருந்தனர். உருவில் செவ்விந்தியரை ஒத்திருந்தனர், அவர்தம் தோல் மங்கிய நீல மென்சாயம் கொண்டதாய் இருந்தது. அவர்கள் இயல்புவிஞ்சிய பெருந்தலையையும் நெற்றியையும் கொண்டிருந்தனர். நெற்றியின் நடுவே கற்கனிப்பருப்பு (walnut) போன்று 'மூன்றாம் கண்' என்று சொல்லப்படுகின்ற முன்துருத்தம் (protrusion)  இருந்தது. இச் சிறப்புக்கூறுகள் தொலைவிலுணர்தல் (telepathy) மற்றும் ஆறாம் அறிவுணர்வு ஆகியனவற்றை வளர்க்கும் உயர் வளர்ச்சி பெற்ற மன ஆற்றல்களைச் சுட்டும். இவ்வகை நெற்றி சிவபெருமானது நெற்றியையும் அதோடு சங்க இலக்கியத்தில் புலவர் நக்கீரரால் குறிக்கப்படும் நெற்றிக் கண்ணையும் நினைவூட்டுகின்றது. சங்க இல்க்கியத்திலிருந்து தெரிவிக்கப்படும் இவ் உண்மைகள் பலநூறாயிரம் ஆண்டுகள் முன்பாக வாழ்ந்த இலெமூரியர்களின் உடலமைப்பிற்கு சில ஒப்புமைகளை ஏந்தி உள்ளன. 

மலைஉச்சிகள், இமயம் முதல் இந்தியப்பேராழி (குமரி) வரை வாழும் மக்களால் வழிபடப்படுகின்றன. அமெரிக்கப் பழங்குடிகளும் கூட மலை உச்சிகளை வழிபடுபவர்தாம். இதனால் இலெமூரியர்களுக்கும் அட்லாண்டிக்குகளுக்கும் தொடர்புகள் இருந்தாற் போல் தெரிகின்றது. மறக்கப்பட்ட இக்கண்டத்தினுடைய வியப்பார்ந்த கமுக்கங்கள் (secrets) இன்னமும் அந்த மருட்டும் கடலில் மறைந்துள்ளன, புதையற்பொருளாய் காப்புற்றுள்ளன.

பார்வை நூல்கள்:
Alexander kondratov    :  Riddle of the Three Oceans
Dr. Rober L. Fisher      :  The Central Ridge of the Indian Ocean in 1968
H.G. Wells                  :  Outline of Histroy
Henry Yule. CB, FRGS : The Wonders of the east (translated from the latin original), London
Schoff, W.H                 :  Periplus of the Erythraean Sea, Oriental Books reprint corporation, 1974, second edition
Wishar S Carve            :  Lemuria - The Lost continent of the Pacific

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.