- ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா -உதிர்தலும் ஓர் அழகுதான்.

அவளுக்குள் எழுந்த அந்த ரசனை, நா. முத்துகுமாரின் ‘மலர் மட்டுமா அழகு, விழும் இலை கூட ஒரு அழகு’ என்ற பாடல்வரிகளை அவளுக்கு நினைவுபடுத்தியது. இலைகளை உதிர்க்கத் தயாராகியிருந்த அந்த மரங்களின் கிளைகளின் இடுக்குகளுக்கிடையே ஊடறுத்துச் சென்ற சூரியஒளிக் கீற்றுக்கள், ஓவியன் ஒருவன் கவனமாகப் பார்த்துப்பார்த்து வர்ணமிட்டதுபோலத் தோற்றமளித்த அந்த இலைகளுக்கு மேலும் அழகுசேர்த்தன. காற்றில் சலசலத்த இலைகளில் சில காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அண்ணாந்து பார்த்த அவளின் முகத்தை மெல்லத் தொட்டுப் போயின. ஒரு கணம், அவளின் மனம் ஒரு குழந்தையைப்போல ஆர்ப்பரித்துக்கொண்டது.

மரங்களின் கீழே குவிந்திருந்த இலைகளின்மேல் மெதுவாகக் காலடிவைத்து, அவை சரசரக்க அவள் நடந்தாள். விழுந்திருக்கும் இலைகளைக் கூட்டிக்குவிப்பதும் பின் அவற்றின் மேலேறிக் குதிப்பதும், விதம் விதமான வடிவங்களில் உள்ள இலைகளைச் சேகரிப்பதுமாக அம்மாவுடன் அந்தக் காலத்தில் அவள் விளையாடிய விளையாட்டுக்கள் அவளின் நினைவுக்கு வந்தன. அப்படியே சின்னப் பிள்ளையாக, அம்மாவின் ஒரு குட்டித் தேவதையாக, உறவுகளில் எந்தச் சிக்கலுமில்லாத ஒரு சிறுமியாகவே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாகவிருந்திருக்கும், நினைப்பில் அவள் கண்கள் கசிந்தன.

இயற்கை எப்போதுமே அழகானதுதான். பருவகாலத்து மாற்றங்களை ஆவலுடன் வரவேற்பதும், அவற்றுக்குள் அமிழ்ந்து குதூகலிப்பதும், பருவத்துக்கேற்ற வகையில் விளையாடுவதும்கூட எவ்வளவு இனிமையானவையாக இருக்கின்றன. ஆனால், அதே உதிர்தல்கள், விலகல்கள், விரிசல்கள் வாழ்க்கையில் ஏற்படும்போதுமட்டும் அவற்றை ஏற்றுக்கொள்ளமுடியாமல் மனசு மிகவும் வலிக்கிறது. ஒவ்வொரு புதுத்தளிரையும், ஒவ்வொரு புதுஅரும்பையும் பார்க்கும்போது உருவாகும் பரவசமும் சிலிர்ப்பும், உறவுகள் உருவாகும்போது இன்னும் அதிகமாகவே வந்து மனதை நிறைத்துவிடுகிறது, ஆனால், அதே உறவுகள் விலகும்போது மட்டும் அதே லயிப்புடன் பார்க்கமுடிவதில்லை என்ற ஒப்பீடு அவளின் கண்களை மீளவும் நனைத்தது.

மகிழ்ச்சிதரும் ஆரவாரிப்பும், இழப்புத்தரும் வேதனையுமின்றி, Giver என்ற நாவலில் வரும் மனிதர்களைப்போல உணர்ச்சி என்றே ஒன்றில்லாமல் வெறுமன கடமையை மட்டும் செய்துகொண்டு வாழமுடிந்தால், இந்த உலகத்தில் பல பிரச்சினைகள் குறைந்துவிடும் … பெருமூச்சு ஒன்று அவளிடமிருந்து வெளியேறியது.

“அன்பு செய்யுங்கள், அன்பே தெய்வம், அன்பு செய்வது பலவீனமல்ல, அன்பை வெளிப்படுத்தத் தயங்காதீர்கள் … எல்லாமே கேட்க நல்லாத்தானிருக்கு. ஆனா எதிர்பாப்பில்லாமல் அன்புவைக்கிறது எண்டது … ம், ஐயோ என்னாலை முடியாதப்பா. உதவிசெய்யிறது வேறை, அன்பு வைக்கிறதெண்டது வேறை … சரி, அன்பு எண்டது சுயநலமும் கலந்ததுதான், இருக்கட்டுமே, எனக்கெண்டு நேரமொதுக்கேலாத, என்ரை உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காத அன்பு ஒண்டும் எனக்கு வேண்டாம்,” வாய் விட்டே அவள் சொல்லிக்கொண்டாள்.

“குளிர்வர முதல் மரங்களெல்லாம் தங்கடை இலையளை உதிர்க்கிறதும் சுயநலத்திலைதானே. இலையளை வைச்சிருந்தா தாங்க பிழைக்கேலாது எண்டுதானே அதுகளை உதிர்க்குதுகள். பின்னையென்ன, சீ பாவம் அந்த இலையள் குளிரிலை கருகிப் போடுமெண்டு நினைச்சே அதுகளை உதிர்க்குதுகள் … உறவுகளும் ஒரு வகையான addictionதான் எண்டு பிரேம் அண்டைக்குச் சொல்லேக்கே அவனும் இப்பிடித்தான் நினைச்சிருப்பான். என்னோடை தொடர்புகளை அவன் குறைச்சது அவனையும் அவன் முக்கியமெண்டு நினைக்கிற உறவையும் காப்பாத்துற ஒரு முயற்சியாத்தானிருக்கும்…” அவளின் உள்மனம் அவளுடன் பேசியது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அவரவர் துறைகளில் ஒரு மாதகாலப் பயிற்சிக்கென கனடாவில் இருந்துசென்ற மருத்துவர் குழுவுடன் அவளும் இரண்டு கோடைகளின்முன் சென்றபோது, “அங்கையெண்டாலும் ஆராவது ஒரு நல்ல ஆளாப் பாத்திடு, வயசெல்லே போகுது,” என அவளின் அம்மா பகிடியாகவும் சீரியசாகவும் அவளுக்குச் சொல்லிவிட்டிருந்தாள். ரொறன்ரோவில் மெடிக்கல் கொலிஜ்க்குப் போன அதேவருஷமே அவளின் குரூப் மேற் சுரேனுடன் அவளுக்கேற்பட்ட நெருக்கம், அதுதான் அவளின் பாதையென முதலில் அவளை நம்பவைத்திருந்தது. ஆனால், பிறகு, நீ இல்லை என்றால் நானில்லை என அவர்களிடையே எவ்வளவு விரைவாக நெருக்கம் ஏற்பட்டதோ, அவ்வளவு விரைவாக நீ யாரோ நான் யாரோ எனும் அளவுக்கு அது அருகிப்போனது.

அந்த நேரத்தில் அவளையே சுற்றிச்சுற்றி வந்த சுரேன், அவளின் கையைத் தன் கைக்குள் வைத்துக்கொண்டு அல்லது அவளின் முதுகை மெதுவாக வருடிக்கொடுத்தபடி அவளுடன் மென்மையாகக் கதைக்கும்போது, பனித் தூறல்களின் கீழ் தோளும் தோளும் உரசக் கைகோர்த்து நடந்தபடி அவளின் உதட்டை அடிக்கடி இறுகக்கெளவி முத்தமிடும்போது, அவளின் பாடங்களில் உதவிசெய்யும்போது, ஒவ்வொன்றாக யோசித்து அவளுக்காகப் பொருள்களை வாங்கிவரும்போது … அவனுக்காக எதையும் செய்யலாம் என அவளின் மனம் மிகவும் சில்லிட்டுப்போகும். ஆனால் அதே சுரேன் அவனுக்குப் பிடிக்காத விடயம் எதையாவது அவள் சொன்னால் அல்லது செய்தால் குரலை உயர்த்தி அவளைக் கடிவதும், அவளைத் தாழ்த்திப்பேசுவதும், அவளின் கையை எட்டி இறுக்கிப்பிடிப்பதும் அவளுக்குச் சுத்தமாகப் பிடிப்பதில்லை.

பனிப் பொழிவு ஒன்று 25 சென்ரி மீற்றருக்கும் அதிகமான பனியைக் கொட்டிக்கொண்டிருந்த இரவொன்றில் அறைக்குள் அடைந்துகிடந்தபோது, பார்த்த மணிரத்தினத்தின் ‘காற்று வெளியிடை’ திரைப்படமும் அதன் பின்பான சினேகிதிகளுடனான உரையாடல்களும்தான் காதல் என்ற பெயரிலான சுரேனின் துன்புறுத்தல்களை அவள் விளங்கிக்கொள்ள வைத்தன. மனதைச் சுக்குநூறாக உடைத்தெறியும் அத்தகைய நிகழ்வுகளுடன் வாழ்க்கையை நகர்த்தமுடியாதென்பது அப்போதுதான் அவளுக்கு உறைத்தது. அவளின் அந்த மன உளைச்சலைப் பற்றிய அவனுடனான அவளின் நீண்ட உரையாடல், அதே வின்ரரில் உறைமழையொன்று சிடுசிடுத்துக் கொண்டிருந்தபோது அந்த உறவுக்கு முற்றுப்புள்ளியிட்டிருந்தாலும்கூட, உறவின் நினைவுகள் முடிந்துவிடவில்லை.

மிகவும் உக்கிரமாகவிருந்த குளிரின் பாதிப்பைக் குறைப்பதற்காக ஒன்றின் மேல் ஒன்றான ஆடைகளுடன், கனத்த வின்ரர் ஜக்கற்றையும், நீண்ட சப்பாத்துக்களையும், கையுறைகளையும் போட்டுக்கொண்டு, பனியில் வழுக்கிவிழாமல் நடப்பதற்கு அவள் மிகவும் பிரயத்தனம் செய்யவேண்டியிருந்தது.

அவளையறியாது மீளத்துளிர்த்து, அவளின் இதயத்தைச் சில நினைவுகள் கசக்கிப்பிழியும்போது, சட்டெனக் கண்களை நிறைக்கும் கண்ணீரை மறைப்பதற்காக நோயாளரிடமும் சிலவேளைகளில் அவள் பொய்கள்கூட சொல்லவேண்டியிருந்தது. வகுப்பில் சுரேனைக் காணும் நேரங்களில் அவனின் பிரசன்னம் அவளைப் பாதிக்கவில்லையென அவள் பாசாங்கு செய்யவேண்டியிருந்தது.

உறைமழையால் உருவான பளபளக்கும் பனிக்கட்டியைப்போல, அவள் மனம் மெல்லமெல்ல வெளியில் மரத்துப்போனாலும்கூட, அதனைச் சுரண்டிவிடும் சந்தர்ப்பங்கள், அந்தப் பனிக்கட்டியில் கால்வைத்ததும் உள்ளே மறைந்திருந்த பனி வெளிப்பட்டு வழுக்கிவிழச்செய்வதைப்போல, அவளுக்குள் எட்டிப்பார்க்கும் அந்த உணர்வுகள் அவளின் மனதை அதிகம் அலைக்கழித்தன. முடிவில் அந்த மனக் காயங்கள் மாறாத்தழும்பாக அவளுள் சேர்ந்துவிட்டபோது மூன்று வருடங்கள் முழுமையாக முடிந்துபோயிருந்தன.

இப்போதைக்கு ஒரு ஆம்பிளையின்ரை சகவாசமும் எனக்கு வேண்டாமென மனசை இறுக்கமாக்க அவள் முயற்சித்துக் கொண்டிருந்தபோது, அவளின் வாழ்வில் புகுந்தான் பிரேம். கனடாவிலிருந்து கலிபோர்னியா சென்றிருந்த மருத்துவர்கள் அனைவரும் பல்கலைக்கழகத்தின் அருகிலிருந்த அழகான வாவி ஒன்றின் அருகே ஒன்றாகச் சந்தித்து மகிழ்ந்திருந்தபோது, சாதுவாக மழை இடையிடையே தூறிக்கொண்டிருந்தது. அந்த மழையிலிருந்து ஒதுங்குவதற்கென மரமொன்றின் கீழ்ப் போய்நின்ற அவளுக்குப் பக்கத்தில் வந்த பிரேம், அவளைப் பார்த்துத் ‘தமிழா,’ என ஆவலுடன் கேட்டான். அவன் தமிழ் என்று அறிந்தபோது அவளுக்கும் அது சந்தோஷமாக இருந்தது. இயல்பாக அவனுடன் அவளால் உரையாடக் கூடியதாகவும் இருந்தது.

அதன்பின்னர், கோப்பிக்காக, இரவு உணவுக்காக என அவனுடனான சந்திப்புக்கள் தொடர்ந்தன. மருத்துவம், இலக்கியம், சங்கீதம், இயற்கை என அவர்கள் இருவரதும் ஆர்வங்கள் பொதுவாகவிருந்தது அவளுக்கு அதிசயமாகவிருந்தது. ஏதோ முற்பிறப்புத் தொடர்புபோலும், நெடுங்காலம் பழகியமாதிரி ஒரு உணர்வு வருகிறது என அவன் அவளுக்குச் சொல்லிச் சந்தோஷப்பட்டான்.

கலிபோர்னியாத் தேசிய பூங்கா ஒன்றில் அவளுடன் சேர்ந்துநின்று அவன் எடுத்த செல்பியைப் பார்த்த அவளின் அம்மா பெரிதாகச் சந்தோஷப்பட்டபோது, அப்படி ஒரு விசேடமான உறவும் தங்களுக்குள் இல்லையென்றும், அவனில் உடல்ரீதியான எந்த ஈர்ப்பும் தனக்கில்லை என்றும் சொன்ன அவளிடம், “நீ விரும்பிற அழகில்லாட்டியும், நல்ல மனசிருந்தால் காணும்தானே,” என்ற அம்மாவின் அந்தக் கூற்றுத்தான் முதன்முதலில் அவளை அந்த வகையில் சிந்திக்கச்செய்தது. அப்படி ஓர் உறவு அவர்களிடையே முகிழ்ந்தால் நல்லதென்ற எண்ணத்தை அவளுக்குள் அது வேரூன்றச்செய்தது.

அதன் பாதிப்போ, எதுவோ … நாளாக நாளாக, இறுகிப்போயிருந்த அவளின் மனதைப் பிரேமின் அன்பு மெதுவாகத் தளர்த்த ஆரம்பித்தது. பாறையொன்றில் தேங்கிநிற்கும் மழை நீர் எப்படி அதில் சிறு குழி ஒன்றைத் தோண்டுகிறதோ, அதேபோல அவனின் பண்பு கொஞ்சம் கொஞ்சமாக அவளின் மனதுக்குள் அவனுக்கான ஒரு இடத்தைத் தேடிக்கொண்டது. பின் அந்தக் குழியில் விழுமொரு விதையின் வளர்ச்சி அந்தப் பாறையில் சிறிய வெடிப்புக்களை உருவாக்கித் தன் வேரை அதற்குள் ஊடுருவதைப் போன்று, உறுதியாக இருக்கவேண்டுமென்ற அவளின் சங்கல்பம் அவனின் கரிசனையில் மறந்துபோக, அவன் அவளின் மனதுக்குள் குடிலமைத்துக் கொண்டான்.

அந்தக் கோடையில், மீண்டுமொரு வசந்தம் அவளுக்கென மலர்ந்தது, இனிய இளம்தென்றல் மென்மையாக அவளை வருடியது. ஆயிரம் மலர்கள் அவளின் இதயத்தில் அழகாக மலர்ந்தன.

பிரேம்குமார் என அவன் தன்னை அவளுக்கு அறிமுகப்படுத்தியபோது, பிரேம் என்று அவனை அழைக்க அவளுக்கு முதலில் தோன்றவில்லை, பிரேம் … அவளுக்கு மிகவும் பிடித்த பெயரது. டொக்டர் குமார் என்று கதைக்க ஆரம்பித்தவளை, “பிளீஸ், பிரேம் எண்டால் போதும்,” என்று அவன் கேட்டுக்கொண்ட பின்புதான் பிரேம் என அவனை அவள் அழைக்கத்தொடங்கினாள். அதன்பின்னர் அவனுடன் பழகப்பழக அவளுக்கு அந்தப் பெயர் மேலும் பிடித்துப்போயிற்று. உரையாடல்களின் இடையிடையே பிரேம் என அவளின் குரல் ஒலிக்கும்போது அவளின் தொண்டைக்குள் இருந்து ஒரு குளிர்ச்சி அவளின் வயிற்றுக்குள் இறங்கி அவளைச் சிலிர்க்கச்செய்யும். சிலவேளைகளில் நெஞ்சுக்குள் சில்வண்டுகள் ரீங்காரமிடும். பட்டாம்பூச்சிகள் படபடக்கும்.

“அம்மாவும் அப்பாவும் ஃபக்ரறி வேலைதான் செய்தவை. அதாலை எப்பவும் எங்களுக்கு வறுமைதான். என்னாலான ஒத்தாசையைச் செய்வமெண்டு விடியப்பறம் இரண்டு மணிக்கெல்லாம் எழும்பிப் பேப்பர் போடப்போவன், சனி, ஞாயிறிலையும் அக்கம் பக்கத்திலை புல்லு வெட்டப்போறது, அல்லது பனி வழிக்கிறது எண்டு ஏதோ ஒண்டு செய்துதான் பிழைக்கவேண்டியிருந்தது.” என்று பல்கலைக்கழகத்தில் இருந்தபோதுகூட அவன் அப்படிச் சீவிச்ச கதையை கதையோடு கதையாக அவன் சொன்ன போது அவளுக்கு அவனில் பாசம் மேலும் பெருக்கெடுத்தது. புலம்பெயர்ந்த அவனின் பெற்றோரின் வயதை ஒத்தவர்கள் தங்களின் பிரச்சினைகளைத் தமிழில் சொல்லிச் சிகிச்சை பெறக்கூடியதாக இருக்கவேண்டுமென்றுதான் அவன் முதியோர் மருவத்தில் நிபுணத்துவம் பெறுவதற்கு முடிவெடுத்ததாக அவள் அறிந்தபோது அவனில் அவளுக்கு ஈர்ப்பு அதிகமானது. படிப்பை மட்டும் பார் என்று விடப்பட்ட அவளே மருத்துவக் கல்லூரிக்குப் போவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு வேலைசெய்ய வேண்டியிருந்தது என்றால் பிரேம் எப்படிக் கஷ்டப்பட்டிருப்பான், எவ்வளவு புத்திக்கூர்மை அவனுக்கிருக்கவேணும் என அவளின் மனம் அவனை ஆராதிக்க ஆரம்பித்தது.

அவனுடைய முதல் காதல் அவனின் தராதரம் காட்டி மறுக்கப்பட்டதும், பின்னர் மூன்று வருடக் காதலின் பின்பான லிவிங் ருகதரின்போது ஏற்பட்ட வாக்குவாதம் பொலிஸ் வரைசென்று அமளிப்பட்ட காலங்களில் மனச்சோர்வுற்ற அவன் குடிக்கப் பழகியதும் … என அவன் மனம்திறந்து அவனது இயலாமைகளை, தப்புக்களை, தவிப்புக்களை வெளிப்படையாகக்கூறி, அது பற்றித் தற்போது வருந்துவதாகச் சொன்னபோது அவள் மனசிலும் கீறல்கள் ஏற்பட்டன.

அத்தனை பிரச்சினைகளையும் அனுபவித்தவனா இவன் என வியக்குமளவுக்கு எப்போதும் சிரித்த முகத்துடன் மற்றவர்களுக்கு உதவிசெய்யும் அவன் பண்பைப் பார்த்தபோது, அவனை நன்றாக வைத்துப்பார்க்க வேண்டுமென அவளின் மனம் ஆசைப்பட ஆரம்பித்தது.

அதனால் மேலும் மேலும் பிரேமைப் பற்றி அறியவேண்டுமென்ற ஆவல் அவளுக்கு மிகுந்தது. அப்படியாக, புல்லாங்குழல் வாசிக்கும், படம் வரையும், பாட்டுப் பாடும் அவனின் திறமைகளை ஒவ்வொன்றாக அறிந்தபோது, அவள் பிரமித்துப் போனாள். சமூகத்தில் நடக்கும் அதர்மங்களுக்கு அவன் காட்டும் ரெளத்திரம் அவன் மேல் அவளுக்கிருந்த மதிப்பைப் பெருக்கியது.

அந்தக் குழுவில் அவர்கள் மட்டுமே தமிழர்களாக இருப்பதால்தான் அவர்களிடையே நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது, ரசனைகள் ஒன்றாக இருப்பது ஒத்துப்போக வைக்கிறது, மனம் விட்டுப்பழக உதவுகிறது என அவன் இடையிடையே சொல்லும்போது … அது மட்டுமில்லை எனக்கு உன்னை நிறையப் பிடித்திருக்கிறது, உன்னுடன் வாழவேண்டுமென எனக்கு ஆசையாகவிருக்கிறது, உன் காயங்களுக்கு ஒத்தடமாய் என்னை இருக்கவிடு எனச் சொல்லவேண்டுமென அடம்பிடிக்கும் அவள் மனதை இறுக்கிக் கட்டிவைத்திருப்பதற்கு அவள் மிகவும் கஷ்டப்பட்டாள்.

அந்த இரண்டு மாதப் படிப்பு முடிந்து அவன் வன்கூவருக்கும் அவள் ரொறன்ரோவுக்கும் பயணமானபோது தொடர்பில் இருக்கவேண்டுமென அவர்கள் திட்டமிட்டுக் கொண்டனர். அப்படியே அடிக்கடி அவனிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் அவளுக்கு வந்தன, அத்துடன் சமூக ஊடகங்களினூடும் அவர்கள் பேசிக்கொண்டார்கள், கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள். படம் பார்த்தாலோ, அல்லது கதை வாசித்தாலோ அதுபற்றி அவனுடன் பகிரவேண்டுமென்ற துடிப்பு அவளுக்கு வழமையானது. அப்படியாக அவன் அவள் வாழ்வின் ஒரு பகுதியானான். அவனின் அன்பு அவளைத் தாலாட்டியது, அவனின் ஆதரவு அவளை வருடிக்கொடுத்தது, அவனின் கனிவு அவளுக்குக் கீச்சுமூச்சுக் காட்டியது.

‘கனா’ என்ற திரைப்படத்தைப் பார்க்கும்படி அவன் அவளுக்குச் சொன்னபோது, அதில் வரும் ஆசைப்பட்டால் மட்டும்போதாது, அடம்பிடித்துப் பெறத்தெரியவேணும் என்ற செய்தி தனக்காக அவனால் மறைமுகமாகச் சொல்லப்பட்ட செய்தியோ என அவளின் மனம் ஆரவாரித்தபோது, தன் கனவை அவனுக்குச் சொல்லவதற்கான துணிவு அவளுக்கு வந்தபோது … அவர்களின் அந்த நட்பின் ஆறு மாத கால நிறைவில் … தனக்கொரு காதல் மலர்ந்திருப்பதாக அவன் அவளிடம் சொன்னான்.

ரொறன்ரோவில் வரலாறு காணாத குளிர் என வானிலைச் செய்திகள் அறிவித்துக் கொண்டிருந்தன. காற்றின் குளிர் மறை நாற்பதுக்கும் கீழாக இருந்தது. அந்த வார விடுமுறையின்போது வருடாந்தம் செல்லும் பனிச்சறுக்கல் விளையாட்டுக்குப் போனபோது, அவளால் வழமையான உற்சாகத்துடன் விளையாட முடியவில்லை. அதனைக் கவனித்த மரியா, “என்ன விது, ஆர் யூ ஓகே,” என்ற போது அவளின் கண்களிலிருந்து அவளை அறியாமல் வழிந்த கண்ணீர் அவளின் முகத்தில் உறைந்துகொண்டது.

அவளின் கண்ணீருக்கான கதையைக் கேட்ட மரியா அவனுடன் பழகுவதை நிறுத்தும்படி சொன்னது அவளுக்கும் சரியாகப்பட்டது. அதன்படி அவனுடனான நட்பின் எதிர்காலம் பற்றிய தன் சந்தேகத்தை அவள் எழுப்பினபோது, “உன்னோட கதைக்கிறது எனக்குப் பிடிச்சிருக்கு, நான் எப்பவுமே உன்ரை நல்ல நண்பனா இருப்பன், எப்பவும்போல நாங்க எங்கடை ரசனையைப் பரிமாறலாம், சேர்ந்து பாட்டுக் கேட்கலாம், தமிழ்ப்படம் பாத்திட்டு விவாதிக்கலாம்,” என அவன் உறுதிப்படுத்தியபோது அவளுக்கும் அவனிடமிருந்து கிடைக்கும் சந்தோஷத்தை, அவனில் இருக்கும் ஈர்ப்பை விட்டுவிட முடியவில்லை. அவனுடைய காதலி ஒரு கயானாப் பெண் என்பதால் அவன் சொல்வதில் அர்த்தமிருப்பதாக அவளுக்குப்பட்டது.

தொடர்ந்துவந்த வசந்தகாலத்தின்போது, மனதைக் கொஞ்சம் திசைதிருப்ப அவள் முயற்சித்தாள். அதற்காகத் தமிழ்க் கடைகளிலிருந்து கனகாம்பரம், மல்லிகை, போகன்வில்லா, செவ்வரத்தை எனப் பூமரங்களை அவள் தாராளமாக வாங்கிவந்தாள், அவை பூத்துக்குலுங்கப் போவதற்காக ஆவலுடன் காத்திருந்தாள்.

மெல்லமெல்லப் பிரேம் அவளுடன் கதைப்பது குறைந்துபோனது. அப்படி எப்போதாவது கதைக்கும்பொழுதுகளிலும் அவன் அவளுடன் கதைப்பது கரோலினுக்கு பிடிக்கவில்லை என்று அடிக்கடி சொல்லிக்கொண்டான். கோடை முப்பது பாகைக்கும் அதிகமாக, மிகவும் வெப்பமாக இருந்தது. வெளியில் சென்றால் தலைபிளக்கும் அளவுக்கு வெய்யில் அவளை வாட்டியது. மல்லிகையும் கனகாம்பரமும் பூப்பதாகக் காணவில்லை, கோடையின் வெக்கையாலோ என்னவோ செவ்வரத்தையும் போகன்வில்லாவும் காய்ந்து கருகிப்போயின.

பிரேம் அதிகம் கதைப்பதில்லை என்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அதனை மரியாவுக்குச் சொல்லி மீண்டுமொருமுறை அவள் கவலைப்பட்டபோது மரியாவுக்கு அவளில் கோபம்தான் வந்தது. “இந்த நட்பு எவ்வளவு காலத்துக்குத் தொடருமெண்டு நினக்கிறாய்?” என அவளை மரியா கேட்டபோது மரியாவுக்குச் சொல்வதற்கு அவளிடம் எந்தப் பதிலும் இருக்கவில்லை. “இது நட்பா, இந்த நட்பு நீடிக்குமா, இல்லையா எண்டெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கு எண்டால் சினேகிதன் எண்ட அந்த உறவின்ரை பொருள்தானென்ன? முதலிலை உனக்கெண்டு ஒரு சுயமரியாதை வேண்டாமே” என மரியா தொடர்ந்தபோது, அவளின் உள்மனம் அவளைக் கேட்கும் கேள்விகளும் அவைதான் என்பதும், யதார்த்த்தை ஏற்றுக்கொள்ள விரும்பாத ஒரு denial நிலையில் அவள் இருக்கிறாள் என்பதும் அவளுக்குப் புரிந்தது.

உரிமையில்லாத உறவும், உண்மையில்லாத அன்பும், நேர்மையில்லாத நட்பும் என்றுமே நிரந்தரமில்லை என்று எங்கோ வாசித்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. “பிரேம் அசட்டைசெய்யிறது உன்னைப் பாதிக்கேல்லையெண்டு பாசாங்கு செய்கிறதைத் தயவுசெய்து விட்டிடு விது,” என அவளுக்கு மரியா அறிவுரை சொல்லவும் தவறவில்லை.

அப்படியே அந்தக் கோடையும் கடந்துபோய்விட இன்னொரு இலையுதிர்காலம் எட்டிப்பார்த்திருக்கிறது.

கதைக்கவிரும்பும்போது கதைக்கமுடியாது, ஒரு இடத்துக்கு ஒன்றாகச் சேர்ந்து போகமுடியாது, நாங்கள் நல்ல சினேகிதர் என்பதை வெளிப்படையாகச் சொல்லமுடியாது … என்றாலும்கூட எங்களுக்குள் அன்பிருக்கிறது, நாங்கள் ஒருவரையொருவர் விளங்கிக்கொள்ளக்கூடிய நல்ல நண்பர்கள் … என நினைப்பதெல்லாம் … சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்பது முடிவில் அவளுக்கு நன்கு விளங்கியது.

எப்போதாவது ஒரு நாளைக்கு திடீரெனப் பிரேம் கதைப்பான், அப்போது அவன் கதையைக் கேட்டு அதற்கு உணர்ச்சிரீதியான ஆதரவை அவள் கொடுப்பதும், தன் பக்கக் கதையைப் பகிர்வதும்தான் நட்பு என அவளை அவளே சமாதானம் செய்துகொள்கிறாள் என்பது அவளுக்குப் புரிந்தபோது, அப்பாவுடன் அவள் வளராமைதான் ஆண்களைச் சரியாக மதிப்பிட முடியாமல் அவளைக் குழப்புகிறதோ எனவும் அவள் தர்க்கரீதியான மூளை ஆராய்ந்தது. எதுவாக இருந்தாலும் இனியும் இந்த நாடகம் தொடர முடியாது, திரைமூட வேண்டிய கட்டம் வந்துவிட்டது என்பது அவளின் அறிவுக்குத் தெளிவாகப் தெரிந்தது.

மீண்டுமொரு முறை அறிவின் வழி அவள் முடிவெடுத்தபோது மனம் கனமாக இருந்தாலும், அதை மேவிய ஆறுதல் ஒன்று அவளை அரவணைத்துகொண்டது.

“இனிமேல் குறுஞ்செய்தி ஒண்டு வந்திருக்கெண்டு facebook சொன்னா என்ரை மனம் பரபரக்காது, போன் வந்தால் பிரேம் ஆகவிருக்குமோ எனச் சஞ்சலப்படாது. என்ன நடக்குமெண்டு ஒரு திரிசங்கு நிலையிலை இருக்கிறதிலும்பார்க்க, முடிவுகளாலை வாற விளைவுகளுக்கு மனசைத் தயாராக்கிக்கொள்றது நல்லது, முதலிலை எனக்கு நான் உண்மையா இருக்கோணும்” எனத் தனக்குத்தானே கொஞ்சம் சத்தமாகச் சொல்லிக்கொண்டவள் இலைகளைக் ஒன்றாகக் குவித்துவிட்டு, அதன்மேல் ஏறிக்குதிக்க ஆரம்பித்தாள்.

கருக்கொண்டிருந்த மேகங்கள் மழை எந்த நேரமும் கொட்டலாம் என அறிவித்துக்கொண்டிருந்தன. மரங்களிலிருந்த சில பறவைகள் சட்டெனச் சிறகுகளை அடித்தபடி எங்கோ பறக்க ஆரம்பித்தன. அவை இடம்பெயர்கின்றனபோலும் …

மீண்டும் வசந்தமொன்று வரத்தானே போகிறது!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.