- தேவகி கருணாகரன் (சிட்னி அவுஸ்திரேலியா) -என்னுடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சேர்ந்து எனது  எண்பதாவது பிறந்த நாளை அமோகமாக  சிட்னியில் கொண்டாடினார்கள். என் மூத்த பேத்தி மாதுமையும் மூத்த பேரன் கபிலனும் கேக் வெட்டியபபின் என்னைப் பற்றி சிறு சொற்பொழிவு ஆற்றி என்னையும் எல்லோரையும் மகிழ்வித்தார்கள். 

பேரன் கபிலன், “அப்பம்மாவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த பூமியில் எண்பது வருடங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள் அப்பம்மா, இது மிக நீண்டகாலம் ஒரு சாதனை எனச் சொல்லலாம். 1938 இல் இந்த உலகைச் சுற்றி வர நாலு நாள் எடுத்தது.  அந்தக் கால கட்டத்திலே ஒருவரின் வருடாந்தச் சம்பளம் $1700 ஆக இருந்தது.  அவுஸ்திரேலியாவில் ஒரு கட்டிப் பாண் ஒன்பது சதம், நீங்கள் பிறந்த வருடத்திலே தான் சவுதி அரேபியாவில் எண்ணை கண்டுபிடிக்கப்பட்டது.  நம்புகிறீர்களோ இல்லையோ அது சர்வாதிகாரர்களின் காலம், சகாப்தம். ஸ்டாலின், முசலோனி, ஹிட்லர் ஆகியோர் அதிகாரத்தில் இருந்த காலம். இப்படிச் சரித்திர முக்கியத்துவமான காலத்தில் பிறந்திருக்கிறீர்கள். பேரப் பிள்ளைகளான எங்களுக்கு பெருமையாகவிருக்கிறது.  அதுமட்டுமா, ஹிட்டலர் யூத மக்களை கொடுமைப் படுத்தியகாலமும் அதுதான்.” எனக்கூறியதோடு தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது பள்ளி விடுதலை நாட்களில் என்னோடு கழித்த இன்பமான நினைவுகளைப் பகிர்ந்து என்னையும் எல்லோரையும் மகிழ்வித்தான்.

இந்தச் சொற்பொழிவு என்னை பின்னோக்கி சிந்திக்க வைத்தது. என் நினைவு தெரிந்த நாள் முதல் இந்த எண்பது வயது வரை கண்ட மாற்றங்களோ ஆயிரம் ஆயிரம். அந்த நினைவுகள் என் நெஞ்சினிலே திரும்பி எழ மனதிலே சொல்லமுடியாத ஏக்கமும் தாபமும் எழுந்தது.    

இரண்டாவது மகா யுத்தம் தொடங்குவதற்கு மூன்று வருடங்களுக்கு முன், ஆயிரத்து தொளாயிரத்து முப்பத்தி எட்டில், தாய் தந்தையருக்கு எட்டாவது குழந்தையாக இந்தப் பூமியில், கொக்குவில் கிராமத்தில் இருந்த எனது பாட்டா பாட்டி வீட்டில் பிறந்தேன்.  எனக்கு சிந்தாமணி எனப் பெயரும் வைத்தார்கள்.  எனக்கு ஆறு வயதாக இருக்கும் போது, ஏன் எனக்கு இந்த பழங் காலத்துப் பெயரை சூட்டினீர்கள் என பெற்றோரிடம் கேட்டதற்கு, ஐம் பெருங் காப்பியங்களில் ஒன்றான சிந்தாமணி  சினிமாப் படமாக 1937 ஆம் ஆண்டில் வெளிவந்து மக்களிடையே புகழ் பெற்றிருந்தது, அம்மாவிற்கும் அந்தப் பெயர் பிடித்திருந்ததால், அந்தப் பெயரை எனக்கு வைத்தார்களாம்.

அப்போது இலங்கை பிரித்தானியரின் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது.  அன்ட்ரு கல்டிகொட் ஆளுனராக இருந்தார். எனது தந்தை வீரசிங்கம் அரசாங்க உத்தியோகத்திலே இருந்தமையால், மூன்று வருடத்திற்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்பட்டார்.  இதனால் எனக்குப் பல ஊர்களில் வாழும் சந்தர்ப்பம் கிடைத்தது.

1941 ஆம் ஆண்டில் இரண்டாவது உலக மகா யுத்தம்  நடைப்பெற்றுக் கொண்டிருந்தது.  அப்போது என் தந்தை வட மத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரத்திற்கு உத்தியோகபூர்வமாக   நியமிக்கப்பட்டிருந்தார். அங்கு பிரித்தானியரால் கட்டப்பட்ட பெரிய பங்களாவில் வாழ்ந்தோம். அந்த வீட்டின் முன் வராந்தாவில் இருந்த பெரிய வெள்ளை நிற வட்டத் தூண்களை என் சிறு கரங்களால் வளைத்துப் பிடிக்க முடியாமல் தவித்தது இன்னும் நினைவில் பசுமையாக இருக்கிறது. ரோட்டைக் கடந்தால் முன்னால் பசுவக் குளம்.

அனுராதபுரத்திலே இருக்கும் போதுதான் எனக்கு தம்பியோ தங்கையோ பிறக்கப் போவதாகச் சொன்னார்கள். என் தாயின் பிள்ளை பேறுக்காக குடும்பமாக கொக்குவிலுக்கு பயணமானோம்.  அப்போது எனக்கு மூன்று வயது தான், எனினும் அந்த ரயில் பயணம் மனதில் அப்படியே பசுமையாகவிருக்கிறது.  என் தந்தை மேல்நிலை அதிகாரி என்பதால், ரயில் பயணத்திற்கா குடும்பத்தில் உள்ள அங்கத்தவர் அனைவருக்கும் முதல் வகுப்பில் பயணம் செய்ய பயண ஆணைச்சீட்டு (Railway warrant) கிடைக்கும்.  பத்து படுக்கை (பெர்த்) புக் பண்ணி உல்லாசமாக, பயண அலுப்பே தெரியாது போய்ச் சேர்ந்தோம்.  ஆயா இல்லாமல் யார் ஏழு பேரையும் கவனிப்பது, ஆகவே ஆயாவையும் கூடவே மூன்றாம் வகுப்பில் ஏற்றி கூட்டிக்கொண்டு போனோம். அப்பாவும் அம்மாவும் அதோட நிறுத்தவில்லை.  இந்த ஒன்பதோடு இன்னும் நாலு வால்கள் அடுத்த நாலு வருடங்களுக்குள் பிறந்தன. அதாவது பேக்கர்ஸ் டசின்   குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி அறியாதகாலம் அது. ஆகையால் அந்தக் காலத்தில் குடும்பங்கள் பத்து பதின்மூன்று என்று பெற்றுப் போட்டார்கள்.  பாவம் அம்மா, சுந்திரவல்லியின் உடம்பு இனியும் தாங்காது என்று கடவுள் முடிவெடுத்ததால் பதின்மூன்றோடு நிறுத்தி விட்டார் போலும்.

பிள்ளைப் பேறுக்காக தாய் வீடு தேடிப்போவது அந்தக்காலம்.   இன்று அவுஸ்திரேலியாவில் பிள்ளைப்பேறு ஆஸ்பத்திரியிலே தான் நடைபெறுகிறது. பிறந்த பேரப்பிள்ளையை அடிக்கடி போய் பார்க்கலாம் தவிர பத்தியச் சாப்பாடு சமைக்க தேவையில்லை. பத்தியச்சாப்பாட்டின் உள்ளி மணம் எங்கள் உடலிருந்து வியர்வையோடு சேர்ந்து துர்நாற்றமாக வெளியே வரும். அதனாலே அவுஸ்திரேலியர்கள் மத்தியில் எங்கள் மானம் தான் போகிறது என்று பத்திய உணவு தேவையில்லை என்கிறார்கள். நல்ல சத்துள்ள புரதம் நிறைந்த உணவு போதும் என்று சொல்லி மாமிசத்தை நெருப்பிலே வாட்டி பச்சை மரக்கறி வகைகளோடு உண்கிறார்கள். இப்போ இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் பிள்ளைப் பேறுக்கு கணவருக்கும் வேலையிலிருந்து சம்பளத்தோடு லீவும் கிடைக்கும். கணவர்மார்தான் பிள்ளைப் பெத்த மகராசிக்கு, உணவு சமைத்து, ஊட்டி விட்டு, குழந்தையின் பராமரிப்பிற்கு எல்லா உதவியும் செய்வார்கள்.  இதனால் அவர்களுக்கிடையே அன்பும் நெருக்கமும் கூடுமாம்.  என்ன செய்வது, இது 1980 ஆம் ஆண்டிற்கு பிறகு பிறந்த Y generation (வை) தலைமுறை அல்லவா?

அமைதியான தலைமுறையை (silent generation) சேர்ந்த நான் இலங்கையில் பதின்மூன்று உடன் பிறப்புகளுடனும் ஒற்றுமையாக  வாழ்ந்தேன்.  அக்கா அணிந்த உடைகளை தங்கைமார்களும், அண்ணன்  உடைகளை தம்பி மார்களூம், அணிந்து, கிடைத்ததைக் கொண்டு நாங்கள் குடும்பமாக சந்தோசமாக வாழ்ந்தோம்.

என் பெற்றோர் காலத்தில் பெண்கள் தங்கள் வீட்டிலும் தங்கள் தோட்டத்திலும் வேலை செய்தார்கள் தவிர வேலைக்கு போகவில்லை. என் அம்மாவும் வேலைக்கே போகவில்லை, அவரே பார்த்துப் பார்த்து எங்களுக்கு தேவையானதை செய்தார். எங்களுக்கு பொருள் ரீதியான தேவைகளுக்கு குறைவு இருந்தாலும், அன்புக்குக் குறைவேயில்லை. என் அன்னை பதிமூன்று பிள்ளைகளையும் வட்டமாக இருத்தி சோற்றைப் பிசைந்து ஊட்டிய அந்த நினைவு இப்பகூட என் கண்முன் தெரிகிறது. இந்த தலைமுறைக்கோ அம்மா கொடுக்கும் குழையல் சோறு என்ற வார்த்தைக்கே அர்த்தமில்லாமல் போய்விட்டது. சோறு உண்ணும் பழக்கம் இருந்தால் தானே அதைப் பற்றியும் அதன் அருமையும் தெரியும். பேர்கர்,  பீசா, நூடில்ஸ் எனத் தேடித் தேடி விரும்பி சுவைப்பார்கள். ஊம் இதை நினைத்து பெருமூச்செறிவதை விட வேறு என்ன செய்வது..  பாவங்கள் இந்த தலைமுறைக்கோ அம்மா இருந்தும் இல்லை போலத் தான். ஏனென்றால் இந்த போட்டிமயமான வாழ்க்கையில் கணவனும் மனைவியும் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தம்.  குழந்தை பிறந்து ஆறுமாதம் முதல் ஒரு நாளின் முக்கால் நேரமும் கிரஷ்ஷிலே- Crech தான் வளர்கிறார்கள். அம்மா பிள்ளை என்ற நெருக்கம், அன்பு பிணைப்பு வளர்வதற்கு வாய்ப்பு இல்லை. மேலும் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதுதற்குச் சாட்சி நான் வாழ்ந்த அந்தக்காலம்.  இந்த Y Generation (வை) தலைமுறைகள் “டாட்  நீங்கள் எந்தக்காலத்திலே வாழ்கிIறீங்கள்,” என தாங்கள் செய்வது தான் சரி என விவாதிப்பார்கள்.  எங்கள் காலத்தில், மூத்தோரை, அண்ணன் அக்காவை எதிர்த்துப் பேசக்கூடாது என்பது சட்டம். ஆனால் இப்போ உங்கள் மனதிற்கு சரி என்று பட்டால் அதை வெளியே சொல்லி விடவேண்டும் என்று பள்ளியில் சொல்லிக் கொடுக்கிறார்கள். எனது குழந்தை பிராயத்திற்கும் எனது  பேரப்பிள்ளைகளினதற்கும் எவ்வளவு வேறுபாடு.  இந்த கங்காரு நாட்டிலே ’வை’ தலைமுறை பிள்ளைகள் பிறக்கும்போது கூர்மதியோடுதான் பிறக்கிறார்கள் போலும். ஒன்பது மாத குழந்தைகள் கூட சொல்லிக் கொடுக்காமலே ஐ போனிலே விளையாடுகிறார்கள். சின்னவயசிலே ஐ போன் பாவிப்பது பாதகம் என எண்ணி அவர்களிடம் இருந்து எடுத்துவிட்டால், கைகால்களை உதறிக் கொண்டு வீடே அதிரும் அளவுக்கு கீச்சிடுவார்கள்.  பதின்ம வயது வந்ததும் பெற்றோர் இடும் கட்டுப்பாடுகள் அவர்கள் மனதிற்கு சரியென்று பட்டால் ஏற்றுக்கொள்வர் இல்லையேல் அது ஏன் அப்படி என கேள்வி கேட்கிறார்கள்.

எனது சிறுபிராயத்தில் கொழும்பு, கண்டி பட்டணங்களில் மட்டுமே மின்சார வெளிச்சம் இருந்தது.  கொக்குவிலுக்குப் போனால் பொழுது சாய்ந்தபின் எண்ணையில் எரியும் குப்பி விளக்கு, அரிக்கன் லாம்பு என்னும் கூண்டு விளக்கு வெளிச்சத்திலே தான் எல்லா வேலைகளும் நடந்தன.  எனக்கு இந்த மங்கலான வெளிச்சம் பிடித்திருந்தது. எல்லோரும் லாம்பின் வெளிச்சத்தைச் சுற்றியிருப்போம் அதுவே ஒரு தனி சொகுசு - இன்பம் நல்குகிற சுகம்.  அடுத்த அறைக்குப் போகவேண்டுன்மென்றால் லாம்பை கையில் கொண்டுதான் செல்ல வேண்டும்.  அப்படி இரண்டு பேர் போகும் போது அறைச்சுவரில் தெரிவது எங்கள் உருவத்தின் நிழல் தான் என தெரிந்தும் பயந்து கீச்சிடுவதுமே ஒரு விளையாட்டாகவிருந்தது. 

எனது சிறு பிராயத்தில் அதாவது இருபதாம் நூற்றாண்டின் முற் பகுதியில் அவசர செய்தி, அனுப்புவதற்கு இன்றுபோல் தொழில் நுட்பம் வளர்ந்திருக்கவில்லை. வீட்டுக்கு வீடு டெலிபோன் இருக்கவில்லை. முக்கிமாக ஒருவர் இறந்து போனார் என தூரத்து ஊரிலேயிருக்கும் சொந்தங்களுக்கு அறிவிக்க வேணுமெனில் தந்தி மூலம் தான் அறிவித்தனர் அவசர செய்தியானதால் தந்திக்காரன் நடு சாமத்தில் வந்து கதவைத் தட்டுவான். உடனே துக்கச் செய்தி என நினைத்து வீட்டில் உள்ளோர் தவித்துப் போவார்கள். 1958 ஆண்டு மட்டில் தான் கண்டி, கொழும்பு போன்ற சில பட்டினங்களில், வசதியானவர்கள் வீடுகளில் மட்டும் டெலிபோன் பாவிப்பிற்கு வந்திருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சாமுவியல் மோர்ஸ் என்பவர் கண்டுபிடித்த தந்தி எங்கள் நாட்டிற்கு இருபதாம் நூற்றாண்டில் தான் பாவிப்புக்கு வந்தது. ஆனால் இப்போது இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில் தந்திக்குப் பதிலாக, மிகவும் நவீன வசிதிகளான தொலைபேசி, பக்ஷ் மெசின்- fax machine மற்றும் இணையம் என தொழில்நுட்பம் முன்னேறிக் கொண்டு வரவும், தகவல் தொழில்நுட்பமும் முன்னேறி, கையடக்கி போன்கள் பாவிப்பிற்கு வந்து சொடுக்குப் போடும் நேரத்தில் முக்கிய செய்திகள், கிசு கிசு செய்திகள் சர்வதேசரீதியாக பரிமாறும் நிலை வந்து வாழ்க்கையே இயந்திரமாகிவிட்டது. இந்த இணையக் கண்டு பிடிப்பு உலக சரித்திரத்தில் ஒரு திருப்பு முனையாகக் கருதப்படுகிறது.

நான் முதன் முதலில் அனுராதபுரத்தில், என் சகோதரர்களோடு ஆரம்பப் பள்ளிக்கு Buggycart இரண்டு பக்கமும் இருக்கை போட்ட ஒற்றை மாட்டு வண்டியில் போய் வந்தேன். செல்லும் போது, முகத்தில் மெல்லிய காற்று வந்து மோத, கடந்து போகும் சுகந்தங்கள் நாசியை வருட அதுவும் ஒரு தனிச் சுகம். அது அந்தக்காலம். இப்போது அதிநவீன வசதிகள் கொண்ட கார்களிலும் பஸ் வண்டிகளிலும் பயணம் செய்யும் போது அந்த மாட்டு வண்டி சவாரி தான் நினைவுவருகிறது. அது சிறு பிராயத்து  கவலையே இல்லாத வாழ்க்கை, பின்பு இளமைத் துடிப்போடு இன்பமாக வாழ்ந்த காலம். இன்று இந்த வயோதிப காலத்தில் நோய்களும் கவலைகளும் நிறைந்த வாழ்க்கைச் சுமை மனதை பாரமாக அழுத்துகிறது.

ஆயிரத்து தொளாயிரத்து நாற்பத்து எட்டு பெப்ருவரியில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. ஒலிவர் குணதிலகா கவர்னர் ஞெனரலாகவும். டி. எஸ் செனாநாயக்கா பிரதமராகவும் நியமிக்கப்பட்டனர். அப்போது நான் பெற்றோரோடு அநுராதபுரத்தில் நாலு வருடமும்  கண்டியில் நாலு வருடம் வசித்து  விட்டு தாய் மண்ணான யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தேன். கண்டியில் பள்ளிக்கூடம் பல மைல்களுக்கு அப்பால் இருந்ததால் என் உடன்பிறப்புகளும் நானும் பள்ளிக்கூட பஸ்சிலே பள்ளிக்கூடம் போய் வந்தோம்.  யாழ்ப்பாணத்தில் பள்ளிக்கூடம் நடந்துபோகக் கூடிய தூரத்தில் இருந்ததால் நானும் எனக்கு  இளையவர்களான மூன்று சகோதரிகளும் ரிக்‌ஷா வண்டியிலே பள்ளிக்குப் போய் வர மூத்த சகோதரர்கள் பொடி நடையாயாகப் பள்ளி போய் வந்தனர்.  என் பேரப் பிள்ளைகள் தலைமுறைக்கு ரிக்‌ஷாவண்டி என்றால் என்ன எனத் தெரியாது. இப்போது மியூசியத்திலே தான் அவர்கள் போய் பார்க்க வேண்டும்.  

யாழ்ப்பாணத்தில் பள்ளிக்குப் போவதும் மாலையில் பின் தோட்டத்தில் கிளித்தட்டு, மாங்கொட்டைப் போட்டு கெந்தி விளையாட்டு- Hopscotch என விளையாடினோம். விளையாடுவதற்கு வீட்டிலே ஒரு கிரிக்கட் அணிக்கு தேவையான நபர்கள் இருந்த போது சிநேகிதர்களையோ, அயலவர்களையோ அழைக்க வேண்டியிருக்கவில்லை..
தைப்பொங்கல், தீபாவளி, சித்திரை வருடப் பிறப்பு, ஆங்கில வருடப் பிறப்பு, நத்தார் எல்லாவற்றிற்கும் அரசாங்க விடுதலை கிடைக்கும். அந்தப் பண்டிகைகளை சொந்தங்களோடு கொண்டாடிய அந்த நாட்களை இப்ப நினைத்தால் கூட என் மனம் குளிர்கிறது.   

தைப்பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் வேலையாட்களோடு   எனது தாயும் சேர்ந்து, வீட்டின் திரைச்சீலைகளை தோய்த்து, வீடு முழுவதையும் தண்ணீர் ஊற்றி கழுவிவிடுவார். முன் முற்றத்தை  பெருக்கி துப்பரவாக்கி, சாணம் கொண்டு மெழுகி கோலம் போட்டு விடுவார். பொங்குவதற்கு தேவையான மண்பானை, பச்சை அரிசி, பயறு சர்க்கரை, முந்திரி கசுக்கொட்டை, பழம் பாக்கு வெற்றிலை வாங்கிக் கொண்டு வந்து கழுவிய வீட்டுக்குள் வைத்துவிடுவார்கள்.

வீட்டுத் தோட்டத்தில் நிற்கும் தென்னை மரத்தில் இருந்து குருத்தோலை வெட்டி என் மூத்த சகோதரர்கள் தோரணங்கள் செய்து மாவிலையையும் சேர்த்து மெழுகின இடத்தைச் சுற்றி அலங்கரித்துவிடுவார்கள். பொங்கல் அன்று விடியற்காலை இருட்டில் எழுந்து எல்லோரும் குளித்துவிடுவார்கள். சூரியபகவான் கிழக்கில் உதித்து மேலே வரவும் புதுப்பானையில் வெண் பொங்கலும் சர்க்கரைப் பொங்கலும் பொங்கி முடித்திருப்பார்கள். சூரியபகவானுக்கு சீனவெடியுடன் பொங்கல் அமுது படைக்கப்படும். தேவாரம் பாடி எல்லோரும் சூரிய பாகவானை வணங்கி நன்றியும் கூறியபின் முற்றத்திலே வாழை இலைபோட்டு எல்லோரும் சாப்பிட அமர்ந்துவிடுவோம். தேங்காய்ப்பூ சம்பல், பொரித்த கத்தரிக்காய் குழம்பு எல்லாமே முற்றத்து சூட்டடுப்பிலே சமைத்ததுதான். ஆகா அந்த புகைவாசனையோடு வாழையிலையில் போட்டு உண்பதைப் போல அமிர்தமில்லை என்றே சொல்ல வேண்டும். அந்த ருசி அடுத்த பொங்கல் வரை வாயில் நீடித்திருக்கும். அப்படி ஒரு பொங்கலை கொண்டாடி எத்தனை வருடங்கள் ஆயிற்று.

கலியாணம் கட்டியபின்னும் கொழும்பு பட்டணத்தில் கணவர் பிள்ளைகளோடு அதேபோல் மகிழ்ந்திருக்கிறேன்.  சிட்னிக்கு புலம்பெயர்ந்தபின், பிள்ளைகள் வேலையில் இருப்பார்கள் பேரப்பிள்ளைகளுக்கு இதுதான் பொங்கல் என்று சொல்லி காஸ் அடுப்பிலே பொங்கிக் கொடுத்து மனதை தேற்றிக் கொள்வேன். இப்போ எண்பது வயதில் அதுவும் செய்ய உடலில் சக்தியில்லை. 

ஊரிலே எங்கள் குடும்பம் பொங்கல் உண்ட கையோடு  பொங்கலையும் கட்டிக்கொண்டு, எல்லோரும் சொந்தங்கள் வீட்டுக்கு போவோம். அல்லது எங்களைத் தேடி சொந்தங்கள் வருவார்கள், வருடப் பிறப்புக்கும் தீபாவளிக்கு இதே போல் குதூகலமாக கொண்டாடுவோம். அப்படிச் சொந்தங்களுடன் ஒன்று கூடும் சந்தோசம் புலம் பெயர்ந்தபின் இல்லையே.  முருகா என்ன செய்வது உயிரைக்காப்பாற்றிக் கொள்வதற்காக எத்தனை சந்தோசங்களை இழந்து விட்டோம்!

பள்ளிக்கூட விடுதலை நாட்களுக்கு என் பெற்றோர் மூத்த  பிள்ளைகளை கொக்குவிலுள்ள பாட்டா பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுவார்கள்.  அது ஒரு அழகான ஊர்.  பரந்த பச்சை பசேல் என்ற வயல் வெளிகள் நடுவிலே அரசமர நிழலிலின் கீழ் ஒரு பிள்ளையார் கோவில். அங்கேதான் என்ன சுகம், சந்தோசம். காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த  கிணற்று நீரில் குளித்துவிட்டு, பின் தோட்டத்து படலையை திறந்து கொண்டு வயற்காட்டு வரம்பு மேல் நடந்து பிள்ளையார் கோவிலுக்கு போய் காலைப் பூசையை கண்டு களிப்பதும், வீடு திரும்பும் போது சணல் செடிகளுக்கு பின்னால் ஒளிந்துக் கொள்வதும், ஒருவரை ஒருவர் தேடுவதுமாக வந்து சேர்வோம். காலை உணவுக்குப்பின் பின் முற்றத்து வெள்ளை மணலில் கிளித்தட்டு ஆடுவோம். அது ஒரு நிலாகாலம். 

1956 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்கா அரசு சிங்கள மொழியை அரசாங்க மொழியாக கொண்டு வந்ததும், அன்று தொடங்கியது நிம்மதியற்ற வாழ்க்கை. சிறுபான்மையான தமிழர் ஒடுக்கப்பட்டனர். எமது இளம் தமிழ் சந்ததியினரின் உரிமைகள் மறுக்கப்பட்டது தமிழர்களான நாங்கள் எங்கள் தாய் மண்ணிலே இரண்டாந்தரக் குடிமக்களானோம்.
நாலு வருடங்கள் உருண்டோடின. கல்யாணவயது வந்த எனக்கு பொருத்தமான துணையைத் தேடி மணமுடித்து வைத்தார்கள். பதினைந்து  பேருடன் பைம்பலாய் வாழ்ந்துவிட்டு இருபத்திரெண்டு வருட உறவையும் யாழ்ப்பாணத்தையும் விட்டு கொழும்புக்கு தனிக் குடித்தனம் என வந்தபின் ஒரு புது அனுபவமாக இருந்தது. குடும்பத்தலைவியாக பொறுப்புடன் வாழ்க்கை சந்தோசமாக ஓடியது. பின்பு குழந்தைகள் பிறந்ததும் குடும்பம் இரண்டில் இருந்து ஐந்தாகி பொறுப்புகளோடு வாழ்க்கை இன்பமாக ஓடியது.

சிறீலங்காவில் இனப் பிரச்சனை கூடிக் கொண்டு போனது. எமது சொந்த மண்ணிலே இனத்துவேச வன்முறைகளுக்கு முகம் கொடுக்க இயலாமல் வேறு நாடுகளை தேட நேர்ந்தது.  அவுஸ்திரேலியா எம் குடும்பத்தை அன்போடு வரவேற்றது. எமது அடுத்த சந்ததிக்கு ஒரு மேன்மையான எதிர்காலம் கிடைத்தது என சந்தோசப்பட்டோம். ஆனால் எமது பூர்வீக சொத்தான பண்பாடு, பாரம்பரியம் எல்லாமே காற்றோடு போயிற்று. இல்லை இல்லை மேல்நாட்டு நாகரீகத்தில் மூழ்கி, தாய் மொழி, எம் பண்பாடு, குடும்ப நெருக்கம் எல்லாவற்றையும் துலைத்து நிற்கிறோம். இதற்கு எமது இளைய சந்ததியை பொறுப்பாக்க முடியாது. ஊரிலே பண்டிகைகளுக்கு சொந்தங்கள் ஒன்று கூடுவார்கள். கூடி குலாவுவார்கள். இதனால் சொந்தங்களுக்கு இடையே நெருக்கம் பாசம் ஏற்படுகிறது, எமது பண்பாட்டைப் பற்றி அறிகிறார்கள். ஆனால் இங்கு அவுஸ்திரேலியாவிலே எங்கள் தமிழ் பண்டிகை நாட்களுக்கு விடுமுறை கிடையாது. பிள்ளைகளுக்கு பண்டிகைகளைப்பற்றி அறிய சந்தர்ப்பம் இல்லாமல் போகிறது. கல்யாணங்கள் கொண்டாட்டங்கள் வந்தால் சொந்தங்களை அழைப்போம் என்றால், இளம் சந்ததிதனர் எங்களுக்கு அவர்களை தெரியாது, போய் வந்து பழக்கமில்லை என்று சொல்லி தங்கள் நண்பர்களையும், தங்களோடு வேலைபார்க்கும் நண்பர்களையும்தான்  கல்யாண வைபவத்திற்கு அழைப்பார்கள். அது மட்டுமா சிக்கனம் பார்க்காமல், கிறடிட் கார்டை விசுக்கி மண்டபம், மண்டப சோடினை, விருந்து உணவு, இத்யாதி இத்யாதி என்று எல்லாம் ஒழுங்கு செய்வார்கள்.  

ஊரிலே என்றால் ஒரு மாதத்திற்கு முன்பே வீட்டிலே கல்யாணக் களை கட்டிவிடும். கொழும்பு கண்டி காலி என வெளியூர்களில் இருந்து சொந்தங்கள் வந்து இறங்கிவிடுவார்கள். கல்யாண வேலைகளில் ஒத்தாசை செய்வதோடு பெரியவர் முதல் குழந்தைகள் வரை ஒரே கொண்டாட்டம்தான் வீட்டுக்குள் பெண்களும் பிள்ளைகளும் பாய் போட்டுப் படுக்க ஆண்கள் வெளியே கல்யாணத்திற்க்குப் போடப் பட்ட பந்தலின் கீழ் காற்றோட்டமாக படுத்து உறங்குவார்கள்.  உறங்கமுன் ஊர்க்கதைகள், பழைய கதைகள் கதைத்து மகிழ்வார்கள். அந்த இனிமையான மன நிறைவான இன்பங்களை எல்லாம் துலைத்துவிட்டோமே! ஊம்!! இவற்றை நினைத்து பெருமூச்சுத்தான் என்னால் விட முடியும். அந்த சந்தோசங்கள் திரும்பி வரப்போவதில்லை.

பேரப்பிள்ளைகள் வளர்ந்து வேலைக்கும் போகத்தொடங்கி விட்டார்கள். அவர்கள் சிறுபிள்ளைகளாக இருந்த போது அவர்கள் வளர்ப்பில் சுகதுக்கங்களில் பங்கெடுத்த அந்த சந்தோசம் இப்ப நினைத்தாலும் நெஞ்சம் மகிழ்ச்சியில் நெகிழ்கிறது அல்லவா. எவ்வளவு பாசத்தோடு பழகினார்கள். இன்றும் பாசத்தோடுதான் இருக்கிறார்கள். ஆனால் இருபத்தொராம் நூற்றாண்டின் வாழ்க்கையின் வேகத்தில் பாசத்தை காட்ட எங்கே அவர்களுக்கு நேரம். கைத்தொலைபேசியில் கதைத்து பேரன் பேத்திகளின் குரலை கேட்போம் என்றால், பதில் குறும் செய்தியாக வருகிறது. குறும் செய்தி அனுப்பினால் உடனே பதிலும் குறும் செய்தியாக வருகிறது. ஆனால் பிள்ளைகளிடமிருந்தும் பேரப்பிள்ளைகளிடம் இருந்தும்  பாசத்திற்கும் கவனிப்புக்கும் எந்தக் குறையுமில்லைதான்..

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சையாகத்தான் தெரியும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.