இரகமத்துல்ல  ( மெல்பன் – ஆஸ்திரேலியா ) இவ்ளோ நாள் எங்கே இருந்தீங்க ப்ரோ?"...

"டீக்கடைல பாஸ், அதே டீக்கடை பெஞ்சுலதான்..."

அது ஒரு பிரபல திரைப்படத்தின் வெற்றி விழா. பல பெரிய புள்ளிகள் இணைந்திருக்கும் வட்டம். அதில், நான்... இப்படத்தின் வசனங்கள் எழுதிய இளம் வசனகர்த்தா. வரிசையாக பல கலைஞர்கள் பரிசு பெற்ற பின், என் முறை வந்து, நானும் பரிசு பெற்று, சில வார்த்தைகள் பேசிய  பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளன், அவன் வாங்கும் சம்பளத்திற்கு என்னிடம் கேட்ட கேள்விக்கு பதில்தான், நீங்கள் மேலே படித்தது.

கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு முன் சென்னை வந்தேன். சொந்த ஊரில் நண்பர் ஒருவரின் அறிமுகத்தில் தமிழ் சினிமாவின் கோட்டையாம் "கோடம்பாக்கத்தில்" ஒரு குறுக்கு சந்தில் மேன்ஷன் மாதிரியும் இல்லாமல் வீடு மாதிரியும் இல்லாமல் இருந்த ஒரு பழைய கட்டிடத்தில், புறாக்கூண்டு அறைகளில், என்னை மாதிரியே கனவுகளை சுமந்து வந்திருந்த படைப்பாளிகளில் ஒருவனாக தஞ்சம் புகுந்தேன். தூங்கும் நேரம் போக, சந்து முனையில் இருந்த காஜா பாயின் "டீக்கடை"தான் எங்களுக்கு சகலமும். டீக்கடைதான் என்றாலும் பீடி, சிகரெட்டு, கடலை மிட்டாய், வாழைப்பழம் என்று சிறிய பெட்டிக்கடைதான் அது. ஆனால் காஜா பாயின் டீதான் பிரசித்தம்.    

காஜா பாய்... இன்றைய தேதிக்கு சுமார் 60, 63 வயது மதிக்கத்தக்க உருவம். ஆனால் 45 வயதுக்குரிய சுறுசுறுப்புடன் கூடிய திடகாத்திரம். தலையில் தொழுகை தொப்பியுடன், முண்டா பனியனும், கட்டம் போட்ட கைலியும்தான் அவரின் அடையாளம். மனைவி இறந்து விட்டார், ஒரு பையன், ஒரு பெண்.  இருவரும் நன்றாக படிப்பார்கள் என்று மட்டும் சொல்லுவார். நடக்கும் தூரத்தில் சொந்தமாக சின்னதாய் ஒரு வீடு. அவ்வளவுதான் தெரியும். பிள்ளைகள் கடைக்கு வருவது வெகு அரிது. எப்போது சாப்பிடுவார், தூங்குவார் என்றே தெரியாது. பெரும்பாலான நேரம் டீக்கடையில்தான் இருப்பார். அவ்வப்போது கூட்டம் குறைவாக இருக்கும்போது கடையை விட்டு வெளியே வந்து பத்தடி தள்ளி சென்று, பீடி பற்ற வைத்து இரண்டு அல்லது மூன்று இழுப்பு இழுத்து விட்டு, பீடியை கையால் அணைத்து, கடையில் உள்ள குப்பை தொட்டியில் கொண்டு வந்து போடுவார்.  செய்யும் எல்லா செயல்களிலும் அவ்வளவு சுத்தம் பார்ப்பார். பீடி இழுத்துவிட்டு வந்தால் கட்டாயம் டீக்கு போட வைத்திருக்கும் ஏலக்காய்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக்கொள்வார்.

நான் இங்கு வந்து சேர்ந்த இத்தனை வருடங்களில் உடல்நலமில்லை என்று காஜா பாய் ஒரு நாளும் கடையை மூடி பார்த்ததில்லை. ரம்ஜான், பக்ரீத் பெருநாட்கள் அன்று மட்டும் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து பெருநாள் தொழுகை போவதைப் பார்த்திருக்கிறேன். அன்று மட்டும் மாலை 4 மணி அளவில் கடையை திறப்பார். எங்களை போல பல வாடிக்கையாளர்கள் இருந்ததால் எல்லோருக்கும் பிரியாணி தர வசதியில்லை என்று அடிக்கடி சொல்வார். ஆனாலும் மாதத்திற்கு ஒரு முறை எங்களில் இரெண்டிரெண்டு பேருக்கு பிரியாணி வந்துவிடும்.

ஏறக்குறைய தந்தை ஸ்தானத்தில்தான் அங்கிருந்த அனைவரும் அவரை பார்த்தோம். எங்கள் கதைகளை, சுமைகளை, ஆற்றாமையை, சந்தோஷத்தை, படைப்புகளை, வெற்றி தோல்விகளை அவரிடம்தான் முதலில் சொல்வோம். அமைதியான ஒரு புன்னகையுடன் அனைத்தையும் கேட்டுக்கொள்வார். காலையில் எப்போது கடையை திறப்பார் என்பது தெரியாது... முழித்து பழக்கமில்லை. ஆனால், இரவு நாங்கள் எல்லோரும் போகும் வரை இருப்பார். சற்றும் முகம் சுழிக்காமல் டீ போட்டுத் தருவார். கடைக்கு புதிதாய் வரும் வாடிக்கையாளர்கள் தவிர வழக்கமாக அங்கு வரும் அனைவருக்கும் என்ன மாதிரி காபி, டீ என்று ஞாபகமாய் பரிமாறுவார். டீ போட்டு, இரண்டு ஆற்று ஆற்றியபின், சின்ன கரண்டியால் நுரையை வழித்து எடுத்துவிட்டு, அதன் மேல் சற்று டிகாக்ஷனை போட்டு குடிப்பது என் வழக்கம். அந்த டீ கிளாசை வாயில் வைக்கும்போது, மேலிருக்கும் டிகாக்ஷன் ஒரு விதமாக கசக்கும். அது எனக்கு பிடிக்கும்.

ஒரு முறை கூட காஜா பாய் இதை மறந்ததில்லை.  "எப்படி பாய், அவ்ளோத்தையும் ஞாபகம் வச்சிருக்கீங்க?" என்று கேட்டால், சிரித்துக்கொண்டே, "செய்ற தொழில புடிச்சு செஞ்சா எதுவுமே மறக்காதுப்பா!!" என்பார்.

அவர் கடைக்கு வெளியே போடப்பட்டிருக்கும் ரெண்டு நீள பெஞ்சுக்கள்தான் எங்கள் கூடாரம், கோட்டை, பேட்டை எல்லாம். என்னை போல வசனம் எழுத, பாடல் எழுத, கதை எழுத, உதவி இயக்குனர்கள் ஆக, நடிகர்கள் ஆக,  ஸ்டண்ட் நடிகர்கள் ஆக என்று திரைத்துறை சம்பந்தப்பட்ட பலரும் மாலையில் அங்கேதான் சங்கமிப்போம். எங்கள் உரையாடல்கள் பெரும்பாலும் அன்றைய சம்பவங்களை சுற்றியே இருக்கும். யாருக்கேனும் வாய்ப்பு கிடைத்து விட்டது என்றால் அன்று கொண்டாட்டம்தான். காஜா பாய் அமைதியாக அனைத்தையும் ரசித்துக்கொண்டு, கேட்கும்போது, வேண்டியதை தருவார். சில நாட்களில் நேரமாகிவிட்டால் அவரை கடையை மூட சொல்லி விட்டு நாங்கள் அங்கேயே பெஞ்சிலேயே படுப்பதும் உண்டு.  

கையில் காசு இருந்தால் குடித்த டீக்கு காசு தருவோம். இல்லையென்றால் கணக்கில் வைத்துக்கொள்வார். அப்படி எவ்வளவு கணக்கு பாக்கி என்று தெரியாது. அவரும் கேட்க மாட்டார். எனக்கு தெரிந்து இந்த பண்பினாலேயே இதுவரை யாரும் அவரை ஏமாற்றியதில்லை என்று கூறுவேன். வியாபாரம் நன்றாக நடப்பதால் சற்று பரவாயில்லாமல் கையை கடிக்காமல் போகும் என்பார். வாய்ப்பு கிடைத்து அங்கிருந்து வெளியேறிய பழைய நண்பர்கள் அவ்வப்போது அங்கு வருவார்கள். அவர்கள் செய்யும் முதல் வேலை, காஜா பாயின் பழைய பாக்கியை தீர்ப்பதுதான். அது போக, அன்பாக 1,000, 5,000, 10,000 என்று அவரவர் வசதிக்கு பணம் தர விரும்புவர். எல்லோரிடமும் காஜா பாயின் பதில் இதுதான்...

"எனக்கு என்ன சேரணுமோ அதை மட்டும் தா. எனக்கு அது போதும். அன்பு மனசுல இருக்கட்டும். நல்லவனா இரு. சாராயம் குடிக்காதே. குடும்பத்தை காப்பாத்து. இந்தா, இந்த பசங்களுக்கு ஏதாச்சும் சான்ஸ் வாங்கித்தா. அவனுங்களுக்கு உன்னால முடியுற உதவியை செய். இந்த பாய்க்கு அது போதும்."    

இதனாலேயே, அன்பளிப்பு தர வந்த நண்பர்கள், அங்கு இன்னும் எஞ்சியிருக்கும் என் போன்றவர்களின் கடன் பாக்கியை அடைப்பதாக கூறி அந்த காசை தருவார்கள். காஜா பாய் மறுக்காமல் அதை வாங்கிக்கொள்வார். ஆனால் மறக்காமல் எங்கள் கணக்கை சரி செய்துவிடுவார். இந்த காலத்தில் இப்படியும் ஒருவரா? இவருக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்? திரைத்துறையில், இன்றைய தினம் கோடி கட்டிப் பறக்கும் ஆயிரக்கணக்கான கலைஞர்களில் குறைந்தது 50, 60 பேராவது இங்கிருந்து போனவர்கள் உண்டு. அவர்கள் அனைவரும் நினைத்திருந்தாலே இந்நேரம் காஜா பாய் இந்த கடையை மூடிவிட்டு வீட்டில் ஹாயாக ஓய்வெடுக்க போயிருக்கலாம். ஏன் யாரும் உதவவில்லையா? எனக்கு வசதி வந்ததும் காஜா பாய்க்கு பெரிதாக ஏதேனும் செய்ய வேண்டும்... செய்வேன்...      

ஐந்தரை வருட காத்திருப்புக்குப் பின்னர் கிடைத்தது அந்த வாய்ப்பு. மிகச் சரியாக பயன்படுத்தி, தேக்கி வைத்திருந்த முழு அறிவையும் பிரயோகித்து எழுதியிருந்தேன். நல்ல வெற்றி, நல்ல பலன். ஒன்றரை வருட உழைப்பு. கோடம்பாக்கத்தில் இருந்து வெளியேறி இயக்குனருடன் சேர்ந்து சுற்றி, நடிகர் நடிகைகளுக்கு வசனம் சொல்லித் தந்து, காட்சி மாற்றி, வசனம் மாற்றி, இரவு பகல் ஷூட்டிங் என்று மிகவும் பிசி. நடுவே, வேறு மூன்று படங்களுக்கு வசனம் எழுத அட்வான்ஸ் தந்திருந்தார்கள். கையில் தற்சமயம் நிதி நிலை சற்று நன்றாகவே இருக்கிறது.

இதில் எப்படி காஜா பாயை மறந்தேன்? அவருக்கு ஏதேனும் பெரிதாக செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேனே, அது அவ்வளவுதானா? நான் நன்றி மறந்தவனா...

"டீக்கடைல பாஸ், அதே டீக்கடை பெஞ்சுலதான்..." என்ற அந்த பதிலில் பழைய நினைவுகளுக்கு போன என் மனம், ஞாபகம் இரண்டையும்  பார்வையாளர்களின் கைதட்டல் சட்டென்று நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. கண்களின் ஓரத்தில் எட்டிப் பார்த்த சிறு துளி கண்ணீரை விரல் நுனியால் தள்ளி விட்டேன். கைதட்டல் இன்னும் நிற்கவில்லை... "செம பதில் பாஸ்... உங்க வசனங்கள் ஏன் இவ்ளோ சிறப்பா இருக்குன்னு இப்போ புரியுது பாஸ். அப்படியே மனசிலே இருந்து பேசறீங்க... தேங்க்ஸ் பாஸ்." கூட்டத்தை பார்த்து கை கூப்பி வணங்கிவிட்டு, "இந்த வாரம் அவசியம் காஜா பாயை போய் பார்க்க வேண்டும்"  என்று நினைத்துக்கொண்டே மேடையை விட்டு இறங்கினேன்.

நினைத்த மாதிரியே அந்த வாரம் சனிக்கிழமை சாயங்காலம் பையில் கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு காஜா பாய் கடைக்கு சென்றேன். என் ரூம் மேட் சேகர் மற்றும் இன்னும் சில பழைய நண்பர்களும் பெஞ்சில் உட்கார்ந்திருந்தார்கள். கூடவே ஒரு புது பையனும் இருந்தான். காஜா பாய் வழக்கம் போல கடையில், பாய்லருக்கு பின்னால் டீ போட்டுக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் நண்பர்கள் முகத்தில் சந்தோஷத்தை காண முடிந்தது. காஜா பாயும் சிறு புன்னகையோடு வரவேற்றார்... "வாப்பா, சொகமா இருக்கியா? ஏதோ அவார்டெல்லாம் வாங்கினியாம். இந்தா சேகர்தான் சொன்னாப்ல. நல்லா இருக்கியாப்பா? டீ சாப்பிடறியா?"... அதே வாஞ்சை, அதே அன்பு. கொஞ்சமும் மாறவில்லை. "நான் நல்லா இருக்கேன் பாய். நீங்க எப்படி இருக்கீங்க? வீட்லே பசங்க எப்படி இருக்காங்க? நம்ம பயலுக என்னா சொல்றானுங்க? கொஞ்ச நேரம் போவட்டும்  பாய், அப்புறமா டீ குடிக்கலாம்."        

சேகரிடம் குசலம் விசாரித்தேன். வேலை, வாய்ப்பு, கதை, ப்ராஜெக்ட் இதைப் பற்றியெல்லாம் பேசினோம். அந்த புது பையன் என் ரூமுக்குதான் வந்திருக்கிறானாம், எங்கோ குமரி மாவட்டம் பக்கம் என்றான். சவுண்ட் மற்றும் ரீரெகார்டிங் படிச்சவனாம். வாய்ப்பு வந்தால் சொல்கிறேன் என்றேன். சேகருக்கும் அடுத்த வாரம் ஒரு டைரக்டர் வரச் சொல்லி இருக்கிறார் என்று தகவல் சொன்னேன். மிகுந்த குஷியாகி விட்டான். "நெசமாவா... ரொம்ப நன்றி மாப்ள. மறக்கவே மாட்டேம்பா". சேகர் என்னை கட்டியணைத்துக் கொண்டான்.

கூட்டம் சற்று குறைய தொடங்கியது. காஜா பாய் கைகளை கழுவிக் கொண்டு வெளியே வந்தார். பீடி குடிக்கப் போகிறார், இதுதான் அவரிடம் பேச சரியான நேரம். அவரை பின் தொடர்ந்து போய், "பாய், உங்க கிட்டே கொஞ்சம் பேசணும்." என்றேன். பற்ற வைக்க போன பீடியை அப்படியே நிறுத்தி, "சொல்லுப்பா, ஏதாச்சும் பிரச்னையா?" என்றார்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லே பாய். போன வாரம் நான் வசனம் எழுதின படத்துக்கு அவார்டு கிடைச்சுதுல்ல. அப்ப பழைய ஞாபகம் வந்துச்சு. சரி, இங்கிருந்து போனப்புறம் உங்களை எல்லாம் வந்து பார்க்கலையேன்னு தோணிச்சு, அதான் வந்தேன். எப்படி இருக்கீங்க பாய்? பசங்க சௌக்கியம்தானே? வியாபாரம் எப்படி போகுது?"

"அட, அவ்வளவுதானா? நாங்கூட பயந்துட்டேம்பா.  உனக்கு அவார்டு கிடைச்சுது ரொம்ப சந்தோசமா இருக்கு. நல்லா இரு. பழைய நட்புகளை மறக்காதே. என் பசங்க ரெண்டு பேரும் சொகமா இருக்காங்க. ஆண்டவன் புண்ணியத்துல யாவாரம் எப்பவும் போல போய்க்கிட்டு இருக்கு."

"சந்தோஷம் பாய். உங்களை மாதிரி ஆளுங்க உதவி இல்லேன்னா நான் இவ்ளோ வருஷம் தள்ளியிருப்பேனான்னு தெரியல. என்னோட இந்த நிலைமைக்கு நீங்களும் ஒரு முக்கிய காரணம் பாய்... அதான் என் நன்றியை மறக்கக்கூடாதுன்னு நெனைக்கிறேன். இவ்ளோ வருஷங்களா எங்க எல்லாருக்கும் எவ்ளோ உதவி பண்ண உங்களை ஒரு நல்ல நிலைமைல வச்சு பாக்கணும்ன்னு ஆசையா இருக்கு பாய். இந்த கவர்ல கொஞ்சம் பணம் இருக்கு. இதை மறுக்காம நீங்க வாங்கிக்கணும். உங்க கடைய நல்லா பெருசாக்கி, நாலு பேரை வேலைக்கு வச்சி, ஜம்முன்னு இருக்கணும் பாய். அதை பாத்து நாங்க எல்லாரும் சந்தோசப்படணும்."  நான் ஆவலாய் அவரைப் பார்த்தேன்.

காஜா பாய் சிறிதும் யோசிக்காமல், "இல்லே தம்பி. அது சரிப்பட்டு வராது. இந்த பணத்தை வச்சு நீ நெறைய செய்யலாம். எனக்கு இது தேவைப்படாது. மன்னிச்சுக்கப்பா!" என்றார்.

"ஏன் பாய்? என்னடா நம்ம கிட்டே அக்கௌன்ட் வச்சவன் கிட்டே பணம் வாங்கினா, கௌரவக் குறைச்சல்னு நினைக்கிறீங்களா?", என்றேன் சற்று கோபத்தோடு. பாய் சட்டென்று, "சே சே, அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாதுப்பா. ஆனா வேற காரணம் இருக்கு. உன்னை மாதிரி உதவி செய்ய வந்த நாலஞ்சு பேருக்குத்தான் அது தெரியும். உனக்கும் சொல்றேன்..."

"22 வருஷத்துக்கு முன்னாடி எங்க சொந்த கிராமத்தை விட்டு இங்கே வந்து இந்த கடைய போட்டப்போ, எனக்கும் நெறைய சம்பாரிச்சு, பெரிய கடையா போட்டு, வசதியா வாழணும்ன்னுதான் ஆசை இருந்துச்சு. ஆண்டவன் புண்ணியத்தில யாவாரமும் நல்லா போச்சு. நல்லா சம்பாதிச்சேன். அதிலேதான் இப்போ இருக்கிற வீடு வாங்கினேன். என் பொஞ்சாதியும் இங்கே கடைலேதான் எனக்கு ஒத்தாசையா இருந்தா. குழந்தைங்க பொறந்துச்சு. நல்லவிதமா வளர்த்தோம். இங்கே மேன்ஷன் பசங்களும் பாசமா... பாய், அக்கா, அண்ணே, அண்ணி ன்னு என்ன உறவு முறை வருதோ அப்படி கூப்பிட்டுகிட்டு இருப்பாங்க."

"நாங்க வந்தப்புறம் மொத முறையா ஒருத்தனுக்கு சினிமால வேலை கிடைச்சு வந்தப்போ அவன் முகத்துல ஒரு சந்தோசத்தை பாத்தோம். இத்தனை வருஷத்துல, அந்த மாதிரி ஒரு சந்தோசத்தை நாங்க பாத்ததே இல்லை. அப்ப முடிவு பண்ணோம். ஆண்டவன் நமக்கு நல்ல யாவாரம், நல்ல குடும்பம், குழந்தைங்க எல்லாம் தந்திருக்கான். அதனாலே இந்த மாதிரி சந்தோசங்களை பாக்கிறதுக்கு, நாம என்ன பண்ணலாம்னு. இப்படியே கடைய நடத்தி, எதிர்காலம் தேடி, வாழ்க்கைய தேடி, ஊரை விட்டு, உறவை விட்டு ஏதோ ஒரு நம்பிக்கையோட உங்களை மாதிரி வர்றவங்களுக்கு ஒரு ஆதரவா இருக்கணும்னு. அப்போல இருந்து இப்போ வரைக்கும், அந்த மாதிரியே இருந்துகிட்டு வரோம்.பொஞ்சாதியும் தவறிட்டா. பசங்களும் வளந்துட்டாங்க. நல்லா படிக்கிறாங்க. கூடிய சீக்கிரம் மவனுக்கு, அவன் மாமன்காரன் வெளிநாட்லே வேலை வாங்கித் தரேன்னு சொல்லியிருக்கான் . பொண்ணுக்கும் அடுத்தால நல்ல பையனாப் பாத்து கட்டி வச்சிட்டா என் கடமை முடிஞ்சுடும்."

"சரி பாய். ஆனா அதுக்கு, நீங்க ஏன் வசதியா இருக்கக்கூடாது?"

"இல்லப்பா. இந்த சின்ன கடையும், பெஞ்சும்தான், என்னோட அடையாளம். ஊரை விட்டு வர்ற உன்னை மாதிரி பசங்க, பெரிய கடைய பாத்தா, அவங்களுக்கு இப்போ என்கிட்டே கிடைக்கிற பிடிமானம், பாசம், அன்பு, கடன் இதெல்லாம் கிடைக்காது. நானும் கடைய பெருசாக்கிட்டா விலைய ஏத்தணும்,  கடன், அக்கௌன்ட் இதெல்லாம் சாத்தியப்படாது. சாயங்காலம் ஆச்சுன்னா வெளியே பெஞ்சு போட்டு, இப்படி ஆற அமர மணிக்கணக்கா பேச முடியாது. உங்களையும் மீறி, உங்க கவலைகளையும், கஷ்டங்களையும் மீறி இந்த சாயங்கால வேளை உங்களுக்கு எவ்ளோ நிம்மதியை தருது, நாள் பூரா அலைஞ்சு திரிஞ்சு சோகமா நீங்க வரும்போது, நம்ம கடையிலே டீ குடிச்சு, என்கிட்டே உங்க கதைகளை சொல்லும்போது உங்களுக்கு என்ன மாதிரி நிம்மதி கிடைக்குதுன்னு என்னாலே நல்லா புரிஞ்சுக்க முடியுதுப்பா. கைல காசில்லாம, சாப்பாட்டுக்கு வழியில்லாம இருக்கும்போது, குறைஞ்சபட்சம் பாய் கடை டீயும், வாழப்பழமும் இருக்கும்ங்கிற நம்பிக்கை... அதான் என்னோட அடையாளம்."

"நாலு பேரை வேலைக்கு வச்சா, "கடனுக்கு சாப்பிடற பயலுகதானே" ன்னு அந்த பசங்க உங்களை ஏளனமா, இழிவா பாத்தா, பேசினா உங்க மனசுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்ன்னுதான், வேலைக்கு ஆள் கூட போடாம இருக்கேன். இப்போ எனக்கு ஒண்ணும் கொறைஞ்சு போயிடலையே. நல்லாத்தான் இருக்கேன். வேணுங்கிற பணம் இருக்கு. உன்னை மாதிரி வாய்ப்பு கிடைச்சவன் திரும்பி வந்து அவன் கடனையும், கூட இருக்கிறவன் கடனையும் அடைச்சுட்டு போறாங்க. அப்புறம் என்னப்பா? இது எல்லாத்தையும் விட, வெற்றி பெற்ற உங்க முகத்துல தெரியுற சந்தோஷம், இங்கே கஷ்டப்படறவங்களுக்கு நாம இன்னிக்கு செஞ்ச உதவி, இதெல்லாம் நினைச்சா, மனசுக்கு நிம்மதியா, ராத்திரி படுத்தா நிம்மதியா தூக்கம் வருது பாரு... அது, கோடி ரூவா கொடுத்தாலும் வராதுப்பா."

"அதனாலேதான் சொல்றேன், எனக்கு இது சரிப்பட்டு வராதுன்னு. இந்தா, நீ போனப்புறம் இன்னொருத்தன் வந்துட்டான். அவன் யாரை நம்பி இங்கே வந்தானோ தெரியாது. ஆனா, என்னாலே அவனுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை வந்துச்சுன்னா அது போதும் எனக்கு. அதனாலே கவலைப்படாம இரு. முடிஞ்சா, உன் கூட இருக்கிறவனுங்க பாக்கிய கட்டிட்டு போ. அவனுங்க கொஞ்ச நாளைக்கு தலை நிமிர்ந்து நடப்பானுங்க." ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்த என்னை பார்த்து, "டீ சாப்பிடுப்பா. உன்னோட ஸ்பெஷல் போட்டு தரேன்" என்று சொல்லியபடியே திரும்ப கடைக்கு நடக்க ஆரம்பித்தார்.

என்னுடைய வழக்கமான டீயை போட்டு, இரண்டு ஆற்று ஆற்றி, சின்ன கரண்டியால் நுரையை வழித்து எடுத்துவிட்டு, அதன் மேல் டிகாக்ஷனை போட்டுத் தந்தார். அந்த டீ கிளாசை வாயில் வைத்தபோது, முதல் முறையாக மேலிருந்த டிகாக்ஷன் "இனித்தது"...

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.