சிறுகதை: வேதாளம் சொன்ன ‘சாட் ‘ கதை!

Saturday, 07 July 2018 21:53 - வ.ந.கிரிதரன் - சிறுகதை
Print

சிறுகதை: வேதாளம் சொன்ன ‘சாட் ‘ கதை!- "வேதாளம் சொன்ன 'சாட்' கதை" என்னுமிந்தச் சிறுகதை திண்ணை ஆகஸ்ட் 12, 2001 இதழில் வெளியான எனது சிறுகதை.  நானே மறந்திருந்த இச்சிறுகதை அண்மையில் என் கூகுள் தேடலில் மீண்டும் வந்தகப்பட்டுக்கொண்டது. முனைவர் வெங்கட்ரமணனின் 'திண்ணைச் சிறுகதைகள் தேர்விலொரு சிறுகதையாக' அத்தேடலில்  என்னை மீண்டும் வந்தடைந்த சிறுகதையிது. -


முற்றும் மனந்தளராத விக்கிரமன் வழக்கம் போல் முருங்கையிலேறி வேதாளத்துடன் இறங்கிய பொழுது, எள்ளி நகைத்த வேதாளம் அவனைப் பார்த்துப் பின் வருமாறு கூறத் தொடங்கியது.

‘ விக்கிரமா! நான் ஒரு கதை கூறப் போகின்றேன். இது சைபர் உலகு பற்றியதொரு கதை. இதற்கான கேள்விக்குாிய பதிலைத் தொிந்திருந்தும் நீ கூறாது விட்டாயானால் உன் தலை வெடித்துச் சிதறி சுக்கு நூறாகி விடும். ‘ இவ்விதம் ஆரம்பித்த வேதாளம் தன் கதையினைக் கூற ஆரம்பித்தது.


ராமநாதன் அன்று மிகவும் ஜாலியான மனோநிலையில் இருந்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் மனைவி பானுமதி வேலைக்குப் போய்விடுவாள். அவள் செய்வது ‘கிரேவ்யார்ட் சிவ்ட் ‘. நள்ளிரவிலிருந்து காலை வரை கனடாவின் பிரபல வங்கியொன்றின் தகவல் மையத்தில் வேலை. ராமநாதன் ஜாலியான மனோநிலையில் இருந்ததற்குக் காரணமிருந்தது. கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் ‘சாட் ‘டில் ஒரு சிநேகிதி அகப்பட்டிருந்தாள். இதுதான் அவன் முதன் முறையாக ஒரு பெண்ணுடன் சாட் செய்வது. கடந்த இரண்டு நாட்களாக ஒருவிதமான கிளூகிளுப்பு. புது மாப்பிள்ளை போன்ற உற்சாகம். அவனில் தொிந்த மாற்றத்தை பானுமதியும் கவனித்துக் கொண்டிருந்தாள்.ஆனால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பானுமதி வேலைக்கு இறங்குவதற்கு ஆயத்தமானாள்.

‘என்னங்க, அப்ப நான் போயிட்டு வரட்டா ‘

‘ம்.. ‘ ராமநாதன் கணினியை ‘ஆன் ‘ பண்ணினான்.

‘என்ன நான் சொல்லுவது காதில் விழுகிறதா ? ‘ பானுமதியின் குரலில் சிறிது கடுமை தொிந்தது.

‘குழந்தை கட்டிலோரத்திலை படுத்திருக்கு..பார்த்துக் கொள்ளுங்க…பால் கரைத்து வைத்திருக்கிறேன். அழுதாலெடுத்துக் குடுங்கோ.. ‘

‘ம்.. ‘

‘ உணவெல்லாம் வெளியிலை இருக்கு. சாப்பிட்டதும் ஃபிரிட்ஜிற்குள் வைத்து விடுங்கோ..என்ன ? ‘

‘டோண்ட் வொரி  ஐ வில் மனேஜ் இட்.. நீர் போய் வாரும் ‘

‘இப்பிடித்தான் எப்பவும் சொல்லுவீங்க..விடிய வந்தால் எல்லாம் வெளியிலை கிடக்கும்.. எத்தனை தரம் கொட்டியாச்சு..கொஞ்சமாவது கவனம் இருக்குதாயென்ன ? ‘

பானு சென்று விட்டாள். அவள் எப்பவுமே இப்படித்தான். எதற்கெடுத்தாலும் தொணதொணத்தபடி.. இவளது இந்தத் தொணதொணப்பிலிருந்து தப்புவதற்காகவே ராமநாதன் அவள் வேலைக்குப் போகும் நேரம் பார்த்துக் காத்திருப்பான். அண்மைக் காலமாகவே ராமநாதனிற்கு பானுவை நினைத்தாலே ஒருவித வெறுப்பு வர ஆரம்பித்தது. இத்தனைக்கும் இருவரும் காதலித்து மணம் புாிந்து கொண்டவர்கள்தாம். ஏன் இவளால் ஒன்றையும் புரிந்து கொள்ளவில்லை. அவனிற்கு எவையெல்லாம்
விருப்பமாயிருந்தனவோ அவையெல்லாம் அவளிற்கு விருப்பமில்லாதவையாகவிருந்தன. எதற்கெடுத்தாலும் எரிந்து எரிந்து விழுகிறாள். ஆரம்பத்தில் அவன் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமலிருந்தான். அவள் மீதான மோகம் கண்ணை மறைத்திருந்தது. குடம் போன்ற அவள் உடல்வாகு அவனைக் கிறங்கவைத்திருந்தது. அவையெல்லாம் அவனிற்கு இப்போதோ அழுத்துப் போய் விட்டன. அவளது சிறுசிறு குறைகளெல்லாம் அவனிற்குப் பெரிதாகத் தெரியத் தொடங்கி விட்டன. அவளிற்கும்தான்..

மணியைப் பார்த்தான். பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. பானு போய் விட்டாள். குழந்தை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அவன் ஒரு நிறுவனத்தில் கணினி ‘கான்சல்டண்ட்‘டாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தான். காலை பத்து மணியளவிலதான் செல்வான். அதிகாலை இரண்டு மணிவரை இணையத்தில் உலாவிக் கொண்டிருப்பான். அதன் பிறகுதான் படுக்கைக்கைச் செல்வான். அவனும் பானுவும் ஒன்றாக இருப்பதெல்லாம் வார இறுதி நாட்களில் மட்டும் தான்.

அவன் இணையத்தில் நுழைந்த சிறிது நேரத்திற்கெல்லாம் யாகூ மெசஞ்சர் அவனது இணையத் தோழியின் இருப்பை அவனிற்கு அறிவித்தது. அம்பிகா அதுதான் அவளது பெயர்.சாட்டில் சள் அடிக்கும் போது அப்படித்தான் அவள் கூறிக் கொள்கிறாள். அவளது உண்மைப் பெயர் எதுவோ ? யார் கண்டது ?

‘ஹாய் ஜெயாராம். ஐ ஆம் சாரி.  லிட்டில் பிட் லேட் ‘

ஜெயராம் அதுதான் அவனது இணையத்துப் பெயர். துணை தேடுவதற்கான இணையத்தளமொன்றில் அவன் தன் பெயரை அவ்விதம் பதிந்து வைத்ததன் பலனாக அறிமுகமானவள்தான் அம்பிகா.

‘நான் ஒரு கேரளத்துக்காரி. டொராண்டோவில் வேலை பார்க்கிறேன். ஜெயராம் என்னுடைய பேவாரைட் ஆக்டர். நானும் உன்னைப் போல் திருமணம் ஆனவள்தான். ஒரு குழந்தை உள்ளவள்தான் ‘ என்ற அறிமுகத்துடன் வந்தவள்தான் அவள்.

‘டோண்ட் வொர்ரி அம்பிகாக் கண்ணு ‘

முதல் நாள் சாட் முடிவதற்கிடையிலேயே அவளை அவன் ‘கண்ணு ‘ போடு அழைப்பதற்கும் அவனை அவள் ‘கண்ணா ‘ போட்டு அழைப்பதற்குமளவில் முன்னேறியிருந்தார்கள்.

‘என்ன உன் மனைவி வேலைக்குப் போய் விட்டாளா ? குழந்தை தூங்கியாச்சா ? ‘

‘நல்லவேளை போய் விட்டாள். தலைவலியென்று கூறிக் கொண்டிருந்தாள். பயந்து விட்டேன். உன்னுடைய வேலை எப்படிப் போகிறது ‘

அம்பிகா வங்கியொன்றில் இரவு வேலை பார்க்கிறவள். ஒரு பகுதிக்கு சுப்பவைசராக இருப்பவள்.

‘அவ்வளவாக பிஸி இல்லை. ‘

‘நாள் முழுக்க உன்னைப் பற்றியே நினைத்த படி ‘

‘அதிகம் அலட்டிக் கொள்ளாதே. உடம்பிற்குக் கூடாது ‘

‘அம்பிக் கண்ணு… ‘

‘என்ன கண்ணா.. ‘ ராமநாதனுக்குக் கிளுகிளுப்பாகவிருந்தது. எத்தனை வருடங்களுக்குப் பின்னால் இப்படியொரு காதல் கலந்த அனுபவம். இணையமே நீ வாழி.

‘நாள் முழுக்க உனக்காகவே காத்திருந்தேன்… ‘

‘நானும் தான் ராம். உன்னைப் பற்றி ஒரே நினைப்பு.. ‘

‘ராத்திரி சாட் எப்படியிருந்தது.. ‘

‘வெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரி நைஸ்..உண்மையைச் சொல்லப் போனால் உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன் நாள் முழுக்க ‘

‘சுந்தரமான பொண்ணு.. ‘

ராமநாதன் மலையாளத் திரைப்படங்கள் சில பார்த்திருந்தான். அதன் விளைவாக ஒரு சில மலையாளச் சொற்களை அறிந்து வைத்திருந்தான். சமயத்தில் கை கொடுத்தது.

‘ ராம் நீ நல்ல பையன் ‘

‘ஐ ஆம் நாட் எ பையன் ‘

‘யேஸ் யூ ஆர் ? ‘

‘நான் குறும்பு செய்யத் தொடங்கினால் நீ தாங்க மாட்டாய் அம்பிகா ‘

‘செய் பார்ப்போம். ஐ லைக் இட் ‘

‘எடியே அம்பிகா! ‘

‘என்னடா ? ‘

‘நீ மட்டும் பக்கத்தில் இருந்தாயென்றாள்.. அப்படியே…. ‘

அவள் மெளனமாகவிருந்தாள்.

‘என்ன மெளனமா ‘

‘ம்ம்ம் ‘

‘சம்மதமா ? ‘

‘சம்மதம் தான் ‘

ராமநாதனிற்கு இறக்கைகள் கட்டிக் கொண்டு வானில் பறப்பதைப் போன்றிருந்தது. இந்த வயதில் இப்படியொரு சந்தர்ப்பமா ? அசல் காதலனாகவே மாறி விட்டான்.

சிறிது நேரம் மெளனம் நிலவியது. அதை அவளே கலைத்தாள்.

‘தூக்கமா கண்ணா ? ‘

‘தூக்கமா ? எனக்கா ? நோ. நோ. எப்படி வரும் ? ‘

‘அம்பி! ஹவ் இஸ் யுவர் மரேஜ் லைப் ? ‘

‘ —————- ‘

‘ஐ ஆம் சாரி.  உன்னை வருத்தி விட்டேனா அம்பி ? ‘

‘நோ. நோ. ஐ டோண்ட் வாண்ட் டு திங் அபெவுட் தட் ராம். ஹி இஸ் அன் அனிமல் . வாட் அபெவுட் யூ ? ‘

‘என் கதையும் உன் மாதிரிதான். சொந்தக் கதை சோகக் கதை. அது ஒரு அடாங்காப் பிடாரி. அங்கமுத்து மாதிரி ‘

‘வீ போத் ஆர் இன் எ சேம் போட் ராம் ‘


இவ்விதமாக அவர்களுக்கிடையில் 'சாட்' நாள் தோறும் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருந்தது. கிளுகிளுப்பும் ஆர்வமுமாக பொழுது கழிந்து கொண்டிருந்தது. ஜெயராம் என்கின்ற ராமநாதனுக்கு மனைவி பிள்ளைகள் இருந்த போதும், இணையத்திலொரு புதுத் துணையாக அந்தக் கேரளத்துகாரி. அவளுக்கும் கணவன் குழந்தையென்று குடும்ப பந்தங்கள். தங்களது தனிப்பட்ட குடும்ப உறவுகளைக் கவனமாக பராமாரித்துக் கொண்டிருந்த போதும், இணையத்தில் இவர்கள் இருவருமே அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்கிற நண்பர்களாகவே இருக்கிறார்கள் ? இவர்களுக்குத் தங்களது சொந்த வாழ்க்கையில் திருப்தியில்லையா ? அப்படியில்லா விட்டால் ஏன் அவர்கள் தமக்கென்று புது வாழ்க்கையொன்றினை ஆரம்பிக்கக் கூடாது ? அல்லது தங்களது சொந்த வாழ்க்கையில் திருப்தியிருந்த போதிலும் தங்களது நிறைவேறாத ஆசைகளை இவ்விதம் தீர்த்துக் கொள்கிறர்களா ? உண்மையில் அவளுக்கு நிச்சயமாகத் தெரியாது உண்மையிலேயே இவன் ஒரு ஆண் தானாவென்று. இவனுக்கும் நிச்சயமாகத் தெரியாது அவள் உண்மையிலேயே ஓரு பெண்தானவென்று. இருந்தும் ஒருவருடனுரொருவர் தெய்வீகக் காதலர்களைப் போல் உரையாடுவதில் இவர்களுக்கு மகிழ்சியாகவிருக்கிறது. உரையாடுவது கூட திரையில் தோன்றும் எழுத்துருக்கள் மூலம் தான். ஆக இந்த ‘சைபர் ‘ உலகில் தோன்றும் இந்த உறவுக்கும், நிஜ உலகில் உள்ள உறவுக்குமிடையில் காணப்படும் உறவுகளுக்குமிடையிலும் ஏனிந்த விதமான வித்தியாசங்கள். இருப்பதோ இல்லாததோ என்று தெரியாத நிச்சயமற்றதொரு நிலையில்உறவுகள் இங்கே தொடர்கின்றனவே! இருந்தும் ஒரு வித கற்பனையில், கனவுலகில் அடிமைப் பட்டுக் கொண்டே நிஜ உலகில் ஒரு வாழ்வும், ‘பைனாரி ‘ உலகில் ஒரு வாழ்வுமாக ஜெயாராம் என்கின்ற இந்த ராமநாதனாலும், அம்பிகா என்கின்ற அந்தக் கேரளக்காரியாலும் வாழ முடிகின்றதே. இந்த வாழ்க்கைக்கு அர்த்தமெதுவுமுண்டா ? இதற்கொரு முடிவுதானுமுண்டா ? சொல்! சொல்! ராமநாதா! தெரிந்ந்திருந்தும் சொல்லாவிட்டாலோ உன் மண்டை தூள்.

இவ்விதமாகக் கதையினைக் கூறிய வேதாளம் கேள்வியையும் கேட்டு நிறுத்தியது.

ஒரு கணம் சிந்தித்த விக்கிரமனுக்குத் தலை சுற்றியது. ஆனால் சிறிது சிந்தித்த போது சைபர் உலகிற்கும் நிஜ உலகிற்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லையேயென்று பட்டது. எனவே அவன் வேதாளத்தைப் பார்த்துப்

பின்வருமாறு கூறத் தொடங்கினான்:

‘வேதாளமே! நாம் வாழும் இந்த வாழ்க்கை கூட ஒரு விதத்தில் இது போல் தானே. நாம் பார்க்கின்ற அறிகின்ற இந்த உலகு பற்றிய தோற்றமெல்லாமே எமது கண்களால் உள்ளெடுக்கப் பட்டு மூளையில் மின் துடிப்புகளாகப் பதியப் பட்டு தரப்படும் பிம்பங்கள் தானே. உண்மையிலேயே இந்த உலகு பற்றிய நமது உணர்வுகள் எல்லாமே எம்மூளையின் வெளிப்பாடுகள் தாமே. ஆக உண்மையிலேயே இவையெல்லாமுண்மையா என்பது கூட எமக்குத் தொியாது. இந்நிலையில் நாம் உண்மையாகக்
கருதிக் கொண்டு வாழவில்லையா ? அது போல் தான் இந்த ஜெயராம் என்கின்ற ராமநாதனின் கதையும். இருப்பின் உண்மை தொியாத நிலையேலேயே நாம் அனைவரும் வாழ்வதைப் போல் தான் இவனும் இந்த சைபர் உலகில் வாழப் பழகிக் கொண்டான். இதிலென்ன அதிசயமிருக்கு! ‘

இவ்விதம் விக்கிரமன் கூறிய பதிலில் தொக்கி நின்ற தர்க்க நியாயம் வேதாளத்திற்கும் சாியாகவே பட்டது. எனவே அது மீண்டும் முருங்கையிலேறிக் கொண்டது.


நன்றி: திண்ணை.காம் ஆகஸ்ட் 12,  2001
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 07 July 2018 22:02