காதலர்தினக் கதை: கண்களின் வார்த்தை புரியாதோ..?

Sunday, 14 February 2016 01:38 - குரு அரவிந்தன் - சிறுகதை
Print

காதலர் தினச்சிறுகதை: ஆசை வெட்கமறியாதோ..?   குரு அரவிந்தன் அவளுடைய அந்தச் சிரிப்பில் ஏதோ ஒரு வித கவர்ச்சி இருந்ததென்னவோ உண்மைதான், ஆனால் அது என்னை ஒரு கணம் நிலை குலைய வைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் என்னை மறந்து அவளைப் பார்த்தேன். அவளோ ஒரு கண்ணசைவோடு என்னைக் கடந்து மெதுவாகச் சென்றாள். அதுவே எனக்குள் ஏதோ நுழைந்து விட்ட உணர்வை ஏற்படுத்தி என்னைக் குளிரவைத்தது. அவள் என்னை அசட்டை செய்தாளா அல்லது என்னை ஏங்க வைத்தாளா என்பது அப்போது எனக்குப் புரியவில்லை. வீட்டிற்கு வந்து படுக்கைக்குச் சென்ற போதும் அவள் நிiவாகவே இருந்தது. அவளது புன்னகையும், கண்ணசைவும் அடிக்கடி மனக்கண் முன்னே வந்து போனது. அந்தக் கணம்தான் அவள் நினைவாக என்னை ஏங்க வைத்திருக்கிறாள் என்பது புரிந்தது.

உண்மைதான், அவள் என்னை ஏங்க வைத்திருக்கிறாள் என்பதை என்னால் நம்ப முடியாமல் இருந்தது. நானுண்டு என்பாடுண்டு என்று தான் இது வரை காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தேன். இன்று மட்டும் ஏன் இந்த மயக்கம் என்பது தெரியவில்லை. ஒருவேளை பிறந்த மண்ணின் வாசனை என்னை எதிலும் ஈடுபாடு கொள்ள விடாமல் இதுவரை தடுத்து வைத்திருந்திருக்கலாம். அல்லது எனது பெற்றோர் அடிக்கடி தந்த போதனை என்னைப் பெண்கள் பக்கம் திரும்பாமல் தடுத்திருக்கலாம். ஆனாலும் காலவோட்டத்தில் எனது பதுமவயதைப் பல்லைக் கடித்துக் கொண்டு எப்படியோ ஓட்டியாகி விட்டது.

இனியும் இந்த உடம்பும் மனசும் பொறுமையாக இருக்குமா என்பதில் எனக்குள் சந்தேகம் இருந்தது. புலம் பொயர்ந்த இந்த மண்ணின் சூழ்நிலை அடிக்கடி மனதைச் சஞ்சலப் படுத்தியது. மதில் மேல் பூனைபோல இதுவரை தவிப்போடு இருந்த மனசு மறுபக்கம் தாவிக் குதித்துவிடு என்று அடிக்கடி ஆசை காட்டியது. வீட்டிலும், உறவுகளிடமும் ஒரு முகத்தைக் காட்டி, வெளியே மற்றவர்களிடம் மறு முகத்தைக் காட்டி எத்தனை நாட்கள்தான் ஆசைகளை எல்லாம் துறந்தவன் போல, இப்படி நடிப்பது. என் வயதை ஒத்தவர்களைப் பார்க்கும் போது, இயற்கையின் தேடலுக்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ற கேள்வி எனக்குள் எழுந்து கொண்டேயிருந்தது.

இளமை துள்ளுமா? அதைத்தான் அவளிடம் நான் அன்று கண்டேன். பொன்னிறத்தில் முழப்பாவாடை சட்டை அணிந்து, குருத்துப் பச்சை அரைத்தாவணியில் அவள் அழகாகாக இருந்தாள். ரொறன்ரோவில் நடந்த தமிழ் மரபுத் திங்கள் விழாவிற்குத் தன்னார்வத் தொண்டராக நான் சென்றிருந்த போதுதான் அங்கே அவளைக் கண்டேன். ரொறன்ரோவில் உள்ள பிரபல நடன ஆசிரியை ஒருவரின் நடனக் குழுவில் அவளும் இடம் பெற்றிருந்தாள். பண்பாடு, கலாச்சாரத்தை மறந்து எங்கேயோ போய்க் கொண்டிருந்த தமிழ் சமுதாயத்தைப் புலம் பெயர்ந்த இந்த மண்ணில் பிடித்திழுத்து நிறுத்தியிருந்தது இந்த தமிழ் மரபுத் திங்கள். ஆமாம், கடந்த சில வருடங்களாக என்னைப் போன்ற இளம் தலைமுறைக்கு இந்த மரபுத்திங்கள் கொண்டாட்டம் எங்கள் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் உணர்த்துவதாகவே இருக்கின்றது. ஆர்வத்தோடு பல பகுதிகளில் இருந்தும் இளம் தலைமுறையினர் பங்கு பற்றுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. இளைஞர்கள் பட்டு வேட்டி, சட்டை, சால்வையில் கம்பீர நடைபோட, பதுமவயதுப் பெண்கள் பாவாடை சட்டை அரைத்தாவணியில் அழகு நடை நடந்து செல்ல அந்த மண்டபமே பண்பாட்டுக் கோலம் போட்ட சொர்க்கமாய்த் தோன்றயது.

இடைவேளையின் போது உணவகத்தில் சர்க்கரைப் பொங்கல், வடை, சுண்டல் எல்லாம் இலவசமாகக் கிடைத்தது. அப்போது அவளும் தோழிகளுடன் அங்கே உட்கார்ந்திருந்தாள். அவளது இடத்திற்கு நானாகவே சென்று அவளது நடனத்தைப் புகழ்ந்து பாராட்டினேன். அவள் வெட்கப்பட்டு ‘தாங்ஸ்’ என்று சொல்லி விட்டுத் தோழிகளுடன் ஓடிமறைந்தாள்.

மீண்டும் ஒரு கிராமிய நடனத்தில் அவள் பங்கு பற்றியிருந்தாள். சுளகுடன் வந்து நடனமாடிய போது அசல் கிராமத்தவள் போலவே இருந்தாள். விழா முடியும் போது அவளை மீண்டும் பாராட்டினேன். ‘நடனத்தில் ஆர்வம் இருக்கிறதா’ என்று கேட்டாள், இருக்கிறதோ இல்லையோ ‘ஓம்’ என்று பதில் சொன்னேன். இனிய புன்னகையோடு எங்கள் செல்பேசி எண்களைப் பரிமாறிக் கொண்டோம். அதன் பின் செல்பேசியின் துணையுடன் ஒருவரை ஒருவர் நெருங்கி வந்தோம். செல்பி எடுத்துக் கொண்டோம். ஒரு வாரத்தின் பின் நடன நிகழ்ச்சி ஒன்று இருப்பதாகவும் அதற்கு வர முடியுமா என்றும் அவள் கேட்டிருந்தாள்.

அந்த நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தாலும் அதிக நேரம் அங்கு நிற்கவில்லை. தனியே அவள் நடனமாடப்போதாகச் சொன்னாள். ஏனோ எனக்கு அது பிடிக்கவில்லை, அவளிடம் சொல்லாமலே திரும்பி வந்திருந்தேன். மறுநாள் இருவரும் சந்தித்தபோது அவள் கேட்டாள்,

‘நடனம் முடிஞ்சதும் ஓடி வந்தேன், ஆனால் உன்னைக் காணவில்லை, ஏன் போய்விட்டாய், சொல்லி விட்டுப் போயிருக்கலாமே.’
நான் எதுவும் பேசவில்லை, மௌனமாக இருந்தேன்.

‘ஏன் உனக்கு அந்த நடனம் பிடிக்கலையா?’ எனது முகபாவத்தை அவள் கவனித்திருக்க வேண்டும், அவளாகவே கேட்டாள்.

‘ஆமா..!’ கொஞ்சம் உரக்கவே சொன்னேன்.

‘உனக்கு நடனம் பிடிக்கும் என்றுதான் நான் நினைத்தேன். அதனால்தான் உன்னையும் அங்கே வரச் சொன்னேன்.’

‘ஆமா எனக்கு நடனம் பிடிக்கும்தான், ஆனால் இப்பிடிக் கூத்தடிக்கிறதல்ல!’

‘ஏன் எனன்னாச்சு உனக்கு, ஏன் அப்பிடி சொல்கிறாய்?’

‘வேற எப்படிச் சொல்லுறது, எனக்குப் பிடிக்கவே இல்லை. நீ நடனம் ஆடினபோது உன்னைச் சுற்றி இருந்தவங்களைக் கவனிச்சியா?’

‘இல்லையே, நான் என்னையே மறந்துதானே ஆட்டத்தில் மூழ்கிப் போகிறேன்’

‘தெரியும் உன்னை மறந்து நீ மூழ்கிப் போய் நடனம் ஆடினதால, சுற்றி இருந்தவங்களும் அப்போ முத்துக் குளிச்சாங்க தெரியுமா?’
‘என்ன சொல்லுறாய்?’

‘நான் சொன்னால் நம்பமாட்டாய், இப்போ இதைப்பார்’

எனது செல்போனை அவளின் கையில் திணித்தேன்.

செல்போன் திரையில் அவள் பார்த்த காட்சி அவளையே நம்பமுடியாமல் ஒரு கணம் கண்களை மூடவைத்தது.

‘அவள் சுடிதாரோடு கைகளை மேலே தூக்குவதும், மெதுவாகக் கைகளை இறக்கி பின்னால் கைகளை கட்டுவதும் பாடலுக்கு ஏற்ப மாறிமாறிச் செய்து கொண்டிருந்தாள். அவள் நடுவிலே தன்னை மறந்து ஆடிக் கொண்டிருக்கச் சுற்றிவர வேட்டை நாய்கள் போல நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு சிலர் வெறித்த பார்வையோடு அதை ரசித்துக் கொண்டிருந்தனர்.’

‘அவர்களது பார்வையைப் பார்த்தால் உனது நடனத்தை அவர்கள் ரசித்தது போல எனக்குத் தெரியவில்லை. இதைத்தான் நீ நடனம் என்று சொல்லுறியா?’

‘இல்லை இது எங்க ரீச்சருக்குத் தெரியாது, ஒரு பாடலுக்கு ஆடச்சொல்லி அம்மாவின் சினேகிதி கேட்டதால அம்மா தான் என்னைக் கூட்டிக் கொண்டு வந்தவா, மேடையில் தான் ஆடுவதாக இருந்தது. இப்படி ஆட்களுக்கு நடுவிலே நின்று ஆடவேண்டி வரும் என்று நான் நினைக்க வில்லை.’

‘கும்பலுக்கு நடுவே ஆடமாட்டேன் என்று மறுத்திருக்கலாமே’

எதுவும் சொல்லாமல் தலை குனிந்தவள் ‘என்னுடைய சினேகிதிகளும் இதைத்தான் சொன்னார்கள்’ என்றாள்.

‘பரதநாட்டியக் கலைக்கே இதனாலே இழுக்கைத் தேடித்தராதே, நீ நல்லதொரு நாட்டிய தாரகை, தயவு செய்து இப்படியான இடங்களுக்கு நடனமாடப் போகாதே!’

அவள் மீதும், பரதநாட்டியக் கலை மீதும் மதிப்பு இருந்ததால், அவன் தனது எண்ணத்தை மனம் திறந்து சொன்னான்.

புரதநாட்டியம் என்பது ஒரு தெய்வீகக் கலை மட்டுமல்ல, ஒரு பண்பாட்டு அடையாளம். அதைப் பக்தியோடுதான் அணுக வேண்டுமே தவிர வெறியோடு அல்ல. கல்லிலேதான் சிலை வடிக்கப்படுகின்றது. கோயிலிலே இருந்தால் அது பூஜிக்கப்படும் இல்லாவிட்டால், வீதியிலே கிடந்தால் அது வெறும் கல்தான், அப்படித்தான் இந்தக் கலையும், புரியுதா?’

அவன் சொல்ல அவள் ‘புரிகிறது’ என்பது போலப் புன்கையோடு விழி அசைத்தாள். அவளது கண்களின் வார்த்தை அவனுக்குப் புரிந்திருக்கும்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Sunday, 14 February 2016 01:41