அறிமுகம்

கலாநிதி குணேஸ்வரன்உலக மக்களின் வாழ்வுக்கு வேண்டிய அரிய கருத்துக்களைக் கொண்டிருக்கும் காரணத்தினாலேயே திருக்குறள் உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகிறது. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே எழுதிவைத்த அரிய கருத்துக்கள் இந்த நூற்றாண்டு மனிதர்களுக்கும் வழிகாட்டியாக அமைவதே திருக்குறளின் அழியாச் சிறப்பாகும். இந்த வகையில் உலகப் பொதுமறையாகிய திருக்குறளில் நீர்ப்பண்பாடு பற்றிக் கூறப்பட்ட கருத்துக்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

தமிழின் அரிய இலக்கியங்களாகிய சங்க இலக்கியங்கள் நீர் மேலாண்மை பற்றியும் நீர்ப்பண்பாடு பற்றியும் மிக விரிவாக இயம்புகின்றன. பரிபாடலில் வையை ஆற்று நீர்ப்பண்பாடும் இவ்வாறுதான் கூறப்படுகிறது. திருக்குறளும் நீர்ப்பண்பாட்டை வான்சிறப்பு என்ற அதிகாரத்தில் முழுமையாகவும் ஏனைய அதிகாரங்களில் பகுதியாகவும் எடுத்துரைக்கின்றது.

வான்சிறப்பில் நீர்ப்பண்பாடு

திருக்குறளின் பாயிரவியல் என்ற அதிகாரப் பகுப்பில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் ஆகியன வைக்கப்பட்டுள்ளன. வான் சிறப்பில் மழையின் இன்றியமையாமை பற்றி வள்ளுவர் எழுதிய குறட்பாக்கள் இன்றைய வாழ்வுக்குப் பொருந்தும் வகையில் அமைந்துள்ளன. அவ்வதிகாரம் முழுவதும் மழைநீரின் இன்றியமையாமையினையும் வாழ்வின் பண்பாட்டு அம்சங்களின் ஒன்றாகிய ஒழுக்கத்தையும் தொடர்புபடுத்திப் பேசுவதும் முதன்மையாக அமைந்துள்ளது.

வான்சிறப்புக்கு பரிமேலழகர் அதிகார வைப்புமுறை பற்றிக் கூறும்போது, கடவுளது ஆணையினாலே உலகமும் அதற்கு உறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல் என்று அதிகார விளக்கம் தருகின்றார். மழை பெய்தல் என்பது இயற்கை சார்ந்த ஒரு செயற்பாடாகும். திருக்குறளின் முதல் அதிகாரத்தில் கடவுள் வாழ்த்தாக முழுமுதற்பொருளான இறைவனைக் கூறியபிறகு இந்த உலகத்தின் ஒருமித்த செயலொன்றாக அமையும் மழை பற்றிக் கூறுகின்றார். இவ்வுலகம் நிலம், நீர், தீ, காற்று, விண் என்ற ஐந்து இயற்கைப் பிரிவுகளை உடையது. இந்த அதிகாரம் நீரின் சிறப்பை மட்டும் கூறவில்லை. நீர் - தண்ணீர் இன்றியமையாத ஒன்று என்றால் காற்றும் அவ்வாறானதே.

முதல் ஏழு பாக்களும் உலகம் நடைபெறுவதற்குக் காரணமாகவுள்ளதாக மழையைக் குறிப்பிடுகின்றன. கடைசி மூன்று பாக்களும் அறம், பொருள், இன்பம் என இவை நடைபெறுவதற்கும் மழையே அடிப்படைக் காரணம் என்று விளக்குகின்றன.

இந்த அதிகாரத்தில் மழையின் இன்றியமையாமை பற்றியும் மழை இல்லாமற்போனால் நேரக்கூடிய இன்னல்கள் பற்றியும் கூறப்படுகிறது. நிலவளம், கடல் வளம், மக்களின் மனவளம், உலக ஒழுங்கு ஆகிய யாவுமே மழைநீரால்தான் அமையும் என வள்ளுவர் உரைத்துள்ளார்.

வான் சிறப்பின் முதல் இரண்டு குறட்பாக்களும் உணவும் நீரும் வழங்கும் மழையின் வள்ளண்மையினையும் ஏனைய பாடல்கள் மழையின்மையால் உலகில் ஏற்படும் மாறுபாடுகளையும் எடுத்துரைக்கின்றன.

மழையின் வள்ளண்மை

மழைநீரே ஊற்று நீருக்கும் ஆற்று நீருக்கும் ஆதாரமாக விளங்குகின்றது. மழையில்லையேல் மனிதர்களுக்கு உண்ணவும் நீர் கிடைக்காது. ஒரு காலத்தில் மிக அதிகமாகப் பெய்யும்மழை நிலத்தின் அடிவரை சென்று மழை இல்லாக் காலங்களில் மனிதர்களுக்கு பயன்படுகிறது. இவையெல்லாம் இந்த அதிகாரத்தில் மிக விரிவாக மனித வாழ்வோடு ஒப்பிட்டுக் கூறப்படுகின்றன.

உணவும் நீரும் வழங்கும் மழையின் வள்ளண்மை பற்றிக் கூறும்போது

“வானின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்றுணரப் பாற்று” (குறட்பா 11)மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான் அம்மழைதான் உலகிற்கு அமிழ்தம் என்று உணரும் பாண்மையை உடைத்து என்று உரைப்பார் பரிமேலழகர்.

இங்கு வான் மழைதான் உலகிற்கு அமிழ்தம் என்று கூறப்படுகிறது. அமிழ்தம் கிடைத்தற்கு அரிதானது. உயிரை வாழ வைப்பது. அதேபோல உலகிற்கு உணவுதந்து இந்த உலகம் அழியாது தொடர்ந்து வாழ வழி செய்வதால் மழையை அமிழ்தம் என்றார். உயிர்களை அழிவின்றி வாழ வைப்பது மழை. அமிழ்தம் உண்பவருக்கு அது சாவா மருந்தாகக் கருதப்படுவதுபோல இந்த உலகத்தையும் உலகத்தில் வாழும் உயிர்களையும் நிலைநிறுத்துகின்ற வானை அமிழ்தம் என்று உணருமாறு செய்துள்ளார். மழை உலகிற்கு நீரைத் தந்து அந்நீரால் உணவு அளித்து வாழ்வை வழங்குகிறது. எனவே மழையினாலேயே உயிர்களும் பயிர்களும் வாழ்கின்றன. இந்த உண்மையை வான்சிறப்பின் இரண்டாவது குறளும் எடுத்துரைக்கின்றது.

மழையே பசியையும் நீர் வேட்கையையும் நீக்குவதோடு மறுபுறத்தில் தானும் மற்றவர்களுக்கு உணவாக இருக்கின்றது. எனவே உலகத் தொடர்ச்சியை நிலை நிறுத்துவதற்கு மழைநீர் அமிழ்தம் என்று சொல்லப்படுவதோடு உணவுப் பொருள்களை விளைவிப்பதோடு தானும் நீராக உண்ணப்படுவதனால் வான்சிறப்பின் முதல் இரண்டு பாக்களும் உணவும் நீரும் வழங்குகின்ற மழையின் வள்ளண்மையைக் கூறுகின்றன.

மழையின்மையால் உலகில் ஏற்படும் மாறுபாடுகள்

ஏனைய குறட்பாக்கள் மழை இன்மையால் ஏற்படும் மாறுபாடுகளை எடுத்துரைக்கின்றன.

வானம் மழை பொழியாவிட்டால் பசி நீக்க உணவு கிடைக்காது (குறட்பா 3)

மழைப் பொழியாவிட்டால் வேளாண்மைத் தொழில் சிறக்காது (குறட்பா 4)


உலகத்தை இயங்க வைக்கின்ற மழை சில சமயங்களில் மனிதர்களுக்கு இடர் தருகின்றது. இங்கு மழையின் பேராற்றல் காட்டப்படுகிறது. (குறட்பா 5)

மழை இல்லாவிட்டால் ஓரறிவுடைய புல்கூட முளைக்காது (குறட்பா 6)

கடலும் தன் தன்மையில் இருந்து மாறுபடும் (குறட்பா 7)

மழையில்லாவிட்டால் தெய்வங்களும் நினைக்கப்படமாட்டா (குறட்பா 8)

நாட்டில் அறம் நிலைக்கவும் மழை பெய்தல் இன்றியமையாதது (குறட்பா 9)

உயிர்கள் நிலை பெற்றிருக்க மட்டுமல்ல மண்ணில் ஒழுக்கம் நிலைபெறவும் மழையே காரணம் (குறட்பா 10)

மழை வேண்டுங் காலத்தில் பெய்யாது பொய்க்குமாயின் கடலால் சூழப்பட்ட அகன்ற உலகத்தின் கண் பசி நிலைபெற்று உயிர்களை வருத்தும் என்றும் வள்ளுவர் கூறுகிறார். மழை பொய்த்தல் என்பது ஓரிருமுறை மழை பொய்த்தலை அன்றி நெடுங்காலம் தொடர்ந்து மழை பெய்யாது விடுதலைக் குறிக்கின்றார். மழை பெய்யாது விட்டால் மண்ணில் விளைபொருள்கள் கிடைக்கமாட்டா. விளைபொருள்கள் கிடைக்காவிடின் உணவுக் குறைவினால் மக்கள் துன்பப்படுவர். ஆதனால் மக்களும் பிற உயிர்களும் வருந்த நேரிடும். எனவே உயிர் வாழ்க்கையே மழையினால் ஆனது என்று குறிப்பிடுகிறார். இங்கு “விரிநீர் வியன் உலகத்து” என்ற தொடரில் அகன்ற நீரால் சூழப்பட்ட பெருமைமிக்க உலகத்தில் அதாவது கடலில் இவ்வளவு நீரிருந்தும் கடல்நீர் உவராக இருப்பதால் பயனில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். தற்காலத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் கடல்நீரை குடிநீராக்கும் தொழில்நுட்பத்தைக் கையாளுகின்றன. ஆனால் அதனால் பயிர்களுக்கு நீர் வழங்க முடியாது என்ற உண்மையையும் அறிதல் வேண்டும்.

மழையின் தேவையையும் அதன் அவசியமும் பற்றிக் கூறவந்த வள்ளுவர்

விண் இன்று பொய்ப்பின் (பெய்யாது பொய்க்குமானால்)

வாரி வளம் குன்றிக்கால் ( மழை வளம் குன்றினால்)

நல்காது ஆகி விடின் ( பெய்யாமல் விடுமானால்)

வானம் வறக்குமேல் ( மழை பெய்யாவிட்டால்)


என எதிர்மறையாக மழை பெய்யாவிட்டால் என்னென்ன நிலைகள் உண்டாகும் என்பதையும் கூறி வைத்துள்ளார். இதனூடாக “மழையின் தேவையையும் அதன் அவசியமும் பற்றியே கூறியுள்ளார்கள். ஆதலால் மழை இல்லாமையின் கேட்டைப் பற்றி இவ்வதிகாரத்தில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பது தெளிவாகின்றது.” (ஆ. வடிவேலு , ப 12)

மழை இல்லையாயின் உழவுத்தொழிலும் குன்றும் என்பதையும் புல் கூட முளைக்காது என்பதையும் அளவில்லாத கடலும் தன் இயல்பிலிருந்து குறைவுறும் என்றும் கூறினார். மழை ஒரு காலத்தில் மிக அதிகமாகப் பொழிந்து உணவுப் பயிர்களை நாசம் செய்து பூமியில் வாழ்வாரைக் கெடுப்பதும் பின்னர் அவர்களுக்கு மற்றொரு காலத்தில் நன்மை புரிவதும் கூட மழையினாலேயே ஆகும் என்ற மழையின் வல்லாட்சியையும் வள்ளுவர் அறிய வைக்கிறார்.

“ கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை” (குறட்பா 15)


இக்குறட்பாவில் கெடுப்பது என்பதற்கு தேவநேயப் பாவாணர் “பெய்யாது நின்று பண்பாட்டிலும் தொழிலிலும் மக்களைக் கெடுப்பது” என்று சிறப்புரை தருகிறார். இதனூடாக வளமில்லாக் காலத்தில் வள்ளண்மைப் பண்பாடு கெடுவதும் விளைபொருளும் கருவிப் பொருளும் இல்லாக் காலத்தில் வணிகர், கைத்தொழிலாளர் ஆகியோரின் தொழில் கெடுவதும் சுட்டப்படுகின்றது. இவற்றினுடாக மழை இல்லாவிட்டால் மனிதர்களின் இயல்புகளில் ஏற்படக்கூடிய மாறுபாடுகளையும் அறியமுடிகிறது. உலகம் இயங்குவதற்கு ஏதுவாக பண்புகளை எடுத்தியம்பியவர் இறுதி வரும் மூன்று குறட்பாக்களிலும் ஆன்மீக உணர்வு மனிதப் பண்பு, ஒழுக்கம் அமையாமை ஆகியவற்றையும் காட்டுகின்றார். உண்மையில் மழை பொய்த்துப் போவதற்கும் ஒழுக்கத்திற்கும் என்ன தொடர்பு என்பதை ஆராய வேண்டியுள்ளது.

“சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு” (குறட்பா 8)


மழை பெய்யாதாயின் தேவர்களுக்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழாவும் பூசையும் நடவாது என்பது எடுத்துக்காட்டப்படுகிறது. திருவிழாக்களும் நாள் பூசைகளும் மக்களின் வழிபாட்டுப் பண்பாட்டை எடுத்துக் காட்டுவன. ஆரம்ப காலங்களில் மனிதர்கள் இயற்கையை வழிபட்டார்கள். அவ்வாறு வழிபடும்போது தம் குல தெய்வங்களுக்கு உணவுப் பொருள்களைப் படைத்து பலியிட்டு வழிபாடு செய்தார்கள். இன்றுவரையும் வழிபாட்டு முறைகள் சடங்குகளில் மாற்றம் ஏற்பட்டாலும் வழிபாடு மாறவில்லை. வானம் வறண்டு மழை பொய்த்துப் போனால் அவர்களுக்கு உணவுப் பொருள்களும் இல்லை வாழ்வில் மகிழ்ச்சியும் இல்லை. அதனால் தெய்வங்களும் நினைக்கப்படாதவையாகிவிடக் கூடும். இதனையே இக்குறட்பா வெளிப்படுத்துகின்றது. இதனூடாக நீர்ப்பண்பாடு மக்களின் வாழ்வுடன் தொடர்பு பட்ட வகையினை அறியமுடிகிறது.

வானம் பொழியவில்லையானால் இந்தப் பெரிய உலகத்தில் பிறர்பொருட்டு செய்யும் தானமும் தவமும் கூட இல்லை என்றாகி விடும். தானம் என்பது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடு கொடுத்தல். தவம் என்பது மனம் பொறிவழிப் போகாது நிற்றற் பொருட்டு விரதங்களால் உண்டி சுருக்கல் முதலானவற்றைக் குறிப்பிடுவதாகும். இங்கு தானம் இல்லற வாழ்வின் போதும் தவம் துறவற வாழ்வின்போதும் நிகழ்த்தப்படுவனவாகும். இவையும் இந்த அகன்ற நிலவுலகத்தின்கண் நிலைபெறமாட்டா என வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

மழை இல்லாவிட்டால் உலகில் ஒழுக்கமும் நிலைபெறாமற் போகும் என்ற கருத்தை வான்சிறப்பில் முத்தாய்ப்பாக வைக்கிறார் வள்ளுவர். எவ்வாறெனில்

“நீர் இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு”

இக்குறட்பாவில் உயிர்கள் நிலைபெற்றிருக்க மட்டுமல்ல அவற்றின் ஒழுக்கத்திற்கும் மழையே காரணம் என்று கூறப்படுகிறது. மழைக்கும் ஒழுக்கத்திற்கும் என்ன தொடர்பு என்று பார்க்கும்போது

இக்குறளில் கூறப்பட்டுள்ள ஒழுக்கு என்ற சொல்லுக்கு மணக்குடவர் ஒழுக்கம் என்றே பொருள் கூறுவார். வானிலிருந்து மழை பொழிவதற்கும் உலகத்து ஒழுக்கத்திற்கும் எப்படி இயைபு உண்டாகிறது. வானிலிருந்து வழங்கி வரும் மழை இல்லையேல் பசும்புல் இல்லை. உழவர் ஏர் உழார். கடல் வளமும் குன்றிப்போகும். விண் பொய்ப்பதனால் உலகில் வறுமையம் பசியும் மிகும். வளமான பொருளியல் வாழ்வில்தான் மனிதப் பண்பு மிளிரும் என்பது உலக வழக்கு. எனவே இங்கு மழை இல்லாவிட்டால் ஒவ்வொன்றாக எல்லாம் தேயும் என்று கூறிய வள்ளுவர் விழாக்கள் பூசைகள் இல்லை என்றும் அதனால் ஆன்மீக உணர்வு குன்றும் என்றும் கூறினார். இதனால் மனிதப் பண்புகளும் மறக்கப்படும். ஆதனால் உயிர்கள் மடியும். இவற்றின் விளைவாக கட்டுப்பாடுகள் விலக ஒழுக்கக் கேடு உண்டாகும். எனவேதான் ஒழுங்கமைப்புக் குலையும் என்ற அடிப்படையில் வானின்றி அமையாது ஒழுக்கம் என்றார்.

“மழை நீரைச் சேமிப்பதோ ஆறு குளத்தைப் பராமரிப்பதோ இன்றைய பொருளாதார மையமிட்ட உலகில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வர எதிர்கால நிலை அச்சம் தருவதாக மாறிவிட்டது. இப்பின்னணியில்தான் வள்ளுவர் கூறிய நீரின்றி அமையாது உலகு என்ற கூற்றும் துப்பாய தூஉம் மழை என்ற கூற்றும் எந்தளவிற்குத் தொலைநோக்குச் சிந்தனையாக அமைந்துள்ளது என்பது வெளிப்படும்.” ( முனைவர் அ. ஜான் பீட்டர்)

எனவே உலகம் நீரின்றி வாழ இயலாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கு ஒழுக்க வாழ்வும் மழை நீர் இன்றி இல்லை என்பதாகும்.

ஏனைய அதிகாரங்களில் நீர்ப்பண்பாடு

திருவள்ளுவர் வான்சிறப்போடு மட்டுமல்ல வேறு அதிகாரங்களிலும் நீர்ப்பண்பாடு பற்றிக் கூறியுள்ளார். “வான்சிறப்போடு வள்ளுவர் மழையை மறந்து விடவில்லை. மழையினால் எவ்வாறு உலகம் நிலைபெறுகிறதோ அதோபோல் கற்புடைய பெண்களாலும் உலகம் நிலைபெறுகிறது என்பதை நிலைநாட்டவே வாழ்க்கைத்துணை நலம் என்ற அதிகாரத்தில் கணவனை மனதிலே நினைத்து வணங்கிக் கொண்டு நித்திரை விட்டெழும் கற்புடைய பெண் கணவனதும் மற்றெல்லோரதும் நலம் வேண்டிக் கடவுளை வழிபாடு செய்பவள். எல்லோரும் விரும்பியபோது பெய்த மழையாவாள். இதுதான் மனித வாழ்வியலும் வரலாற்று விழுமியமும் என்றால் மிகையாகாது.” (க. வடிவேலு, ப51) இதனையே

“தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.”


என்ற குறட்பாவில் பெண்ணை உருவகமாகக் குறிப்பிட்டார். இதனாலேயே தவறாத மழையும் சிதறாத கற்பும் நிலைபெறவேண்டுமானால் மன்னனின் செங்கோல் வளையாதிருக்கவேண்டும் எனவும் அதற்கு மாதம் மும்மாரி மழைபெய்யவேண்டும் என்றும் கருதப்பட்டது. இது “வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழும் குடி என (குறள் 542) கூறப்படுகிறது.

மேலும் உழவு என்ற அதிகாரத்திலும் உழவின் மேன்மையைக் கூறுவதோடு மட்டும் அமையாமல்

“தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்” (குறட்பா 1037)


என ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி உழுது காயவிட்டால் ஒரு பிடி எருவும் இட வேண்டாமல் அந்நிலத்தில் பயிர் செழித்து விளையும் என நிலம் நீர் காற்று வான் தீ ஆகிய பூதங்களின் பங்களிப்பு உணவு உற்பத்தியில் இருப்பதையும் காட்டுகின்றார்.

அரண் என்ற அதிகாரத்தில் “மணிநீரும் மண்ணும்.. (742) என்ற குறட்பாவில் மணிபோலும் நிறத்தினையுடைய நீரும் வெள்ளிடை நிலமும் மலையும் குளிர்ந்த நிழலையுடைய காடும் உடையதே அரண் என நாட்டின் பாதுகாப்பான அரணாக இயற்கை விளங்கியமையும் ஆற்றுநீர் ஊற்று நீர் மழைநீர் ஆகிய நீர் ஆதாரங்களைப் பற்றியும் (737) கூறுகிறார்.

மேலும் கல்வி என்ற அதிகாரத்தில் அறிவுக்கு நீரைக் காட்டியவர் (தொட்டணைத் தூறும் மணற்கேணி 396) மணலின் கண் கேணி தோண்டிய அளவிற்றாக ஊறும். அதுபோல மக்களுக்கு அறிவு கற்றனைத்து ஊறும் என கேணி என்பதனூடாக அதன்கண் ஊறிய நீரைக் குறிப்பிட்டார். ஒருவர் செய்த நன்றியின் தன்மையைக் காட்டும்போதும்கூட நன்றிக்கு உவமையாக நீர்ப்பரப்பையே காட்டுகிறார். செய்ந்நன்றி அறிதல் என்ற அதிகாரத்தில் மற்றவர் அறிந்த பொருளைக் கொண்டு அறியாப் பொருளை விளக்கும்போது ஒருவர் செய்த நன்றியை மறவாதிருக்கவேண்டும் என்றும் கூறி கடலைக் காட்சிப்படுத்துகிறார். (பயன் தூக்கார் செய்த 103)

இவ்வாறாக வான்சிறப்புத் தவிர ஏனைய அதிகாரங்களிலும் நீர் மூலங்களின் தேவை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

முடிவுரை

இன்றைய உலகில் மக்கள் பல்வேறு விதமான சூழலியற் பிரச்சினைகளாலும் நோய்களாலும் அல்லற்படுகிறார்கள். அவற்றில் நீரும் சூழல் மாசுபடுவதும் முதன்மையான பிரச்சினைகளாக உள்ளன. பெருங்கற்காலத்தில் நிலத்தின் மேற்பரப்பில் இருந்த குடிநீரை இன்று நிலத்தின் ஆழத்திலிருந்து எடுக்கவேண்டியுள்ளது. கடந்த சில நூற்றாண்டுகள் வரை நீர் மேலாண்மை என்பது பேணப்பட்டு வந்துள்ளது. மழைநீரை சேமிக்கவும் பயிர் விளைவிக்கவும் நீரை மிகத் திட்டமிட்டு முன்னோர்கள் பயன்படுத்தினார்கள். இன்றைய காலத்தில் மழை கிடைப்பதே அரிதாகிவிட்டது. அதனால் சூழலியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுக்கவேண்டியுள்ளது. இந்நிலையில்தான் பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்குக் கற்றுத்தந்த வரலாற்றுப் பாடங்களைச் சீர்தூக்கிப் பார்த்து அவற்றின் உண்மைக் கருத்துக்களை தலைமேற்கொண்டு செயற்படவேண்டிய கட்டாய நிலையை இன்றைய அறிவியல் உலகம் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையிலே திருவள்ளுவர் எமக்கெல்லாம் வழிகாட்டியாக நின்று உண்மையை இடித்துரைக்கின்றார். எனவே நீர்ப்பண்பாடு பற்றி ஆராய்ந்து அவற்றைப் பேணுவதற்கு இன்றும்கூட திருக்குறள் வழிகாட்டுகிறது. இந்நிலையிலேயே வான்சிறப்பு நீர்ப்பண்பாட்டை வலியுறுத்துவதை ஆழமாக நோக்கமுடிகின்றது.


உசாத்துணை
1. திருக்குறள், பரிமேலழகர் உரை, திருமகள் நிலையம், சென்னை, முதற்பதிப்பு 1998.
2. திருக்குறள் ஆய்வுரை, ஆ. வடிவேலு, பகுதி 1, பருத்தித்துறை, ஆனி 2013.
3. திருக்குறள் ஆய்வுரை, ஆ. வடிவேலு, பகுதி 2, பருத்தித்துறை, ஆனி 2013.
4. திருவள்ளுவரும் பரிமேலழகரும், நாமக்கல் கவிஞர், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு 1999.
5. வள்ளுவரும் குறளும், கி. ஆ.பெ விசுவநாதம், பாரி நிலையம்,சென்னை, முதற்பதிப்பு 1963.
6. திருக்குறளில் கடல்:காட்சியும் கருத்தும், முனைவர் ப.சு மூவேந்தன், https://www.geotamil.com/
7. திருக்குறளில் சூழலியல் சிந்தனைகள், முனைவர் அ. ஜான் பீட்டர்  http://profjohnpeter.blogspot.com
8. அறநெறிக் காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 2011.
9. http://thirukkuralvilakkam.blogspot.com/2013/05/vaan-sirappu.html

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R