- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. க.பாலேந்திரா அவர்களின் முகநூற் பதிவுகளிலிருந்து  பெறப்பட்டது. நன்றி. - பதிவுகள் -


தினகரன் 04-07-1978

- முனைவர்  சித்திரலேகா மௌனகுரு -இம்மாதம் ஒன்பதாம் திகதி (09-06-78) மாலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ரென்னஸி வில்லியம்ஸின் (த கிளாஸ் மெனேஜரி) என்ற நாடகத்தின் தமிழாக்கமான “கண்ணாடி வார்ப்புகள்” மேடையேறியது. யாழ். வளாக இலக்கிய மன்ற நிதிக்காக க. பாலேந்திராவினால் தயாரிக்கப்பட்டு நெறிப்படுத்தப்பட்ட இந்நாடகம் சமீப காலத்தில் யாழ்ப்பாணத்தில் மேடையேறிய ஒரு சில தரமான நாடகங்களிடையே முதன்மை வகிக்கிறது என்று துணிந்து கூறலாம். ரென்னஸி வில்லியம்ஸ் என்ற அமெரிக்க நாடகாசிரியரது புகழ்பெற்ற நாடகங்களில் ஒன்றுதான் (த கிளாஸ் மெனேஜரி) ரென்னஸி வில்லியம்ஸை ஒரு நாடகாசிரியராக பொதுமக்களிடையே ஜனரஞ்சகப்படுத்தியதும் பலதடவை வெற்றிகரமாக மேடையேற்றி புகழ்பெற்றதுமான இந்நாடகம் உலகப் புகழ்பெற்ற நாடகங்களின் வரிசையில் தவறாது இடம்பெறுவதாகும்.

ரென்னஸி வில்லியம்ஸ் தனது இளமைக்கால வாழ்க்கையனுபவங்களையே இந்நாடகமாக எழுதினார் என கூறப்படுகிறது. இளமையில் தந்தையால் கைவிடப்பட்ட குடும்பத்தில் தாயுடனும் சகோதரியுடனும் வாழ்ந்து கொண்டு சப்பாத்துக் கம்பனியில் வேலை பார்த்த ரென்னஸி வில்லியம்ஸ் குடும்பப் பொறுப்புகட்கும் தனது இலட்சியம் கனவுகள் ஆகியவற்றுக்கும் இடையே சிக்கித் தடுமாறும் ரொம் என்ற பாத்திரத்தை இந் நாடகத்தில் உருவாக்கினார். இப்பாத்திரத்தின் மூலம் ரென்னஸி வில்லியம்ஸ் தன்னையே பிரதிபலித்தார். ரொம் என்ற பாத்திரத்தை விட அமென்டா-தாய், லோரா-மகள், ஜிம்-விருந்தாளி ஆகிய பாத்திரங்கள் இந்நாடகத்தில் இடம் பெறுகின்றன. மொத்தத்தில் நான்கே பாத்திரங்கள் கொண்டு இரு அங்கங்களுடையதான 8 காட்சிகளுடையதாக இந்நாடகம் அமைந்துள்ளது.

வேலை செய்யுமிடத்தில் ஏற்பட்ட சச்சரவினாலும் குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாட்டினாலும் குடும்பத்தை விட்டு வெளியேறிய ரொம்மின் நினைவாகவே நாடகம் நடக்கிறது. 1940ம் ஆண்டுகளில் சிதைந்துகொண்டிருந்த அமெரிக்கப் பொருளாதாரச் சூழலில் தேங்கிக்கிடந்த மத்தியதர வர்க்க வாழ்க்கைப் பின்னணியில் இந்நாடகம் எழுதப்பட்டுளது. சாரமற்ற வாழ்க்கையில் சிறைப்பட்டுக் கிடக்கும் மனிதனின் தேம்பல் நாடகத்தின் அடிநாதமாக ஒலிக்கிறது.

அமெரிக்க வாழ்க்கை, அன்னியச் சூழல், மொழிபெயர்ப்பு ஆகிய பதங்களில் தமிழில் இந் நாடகத்தை பார்த்தோரை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாத வண்ணம் நாடகம் உணர்த்திய அனுபவம் அமைந்தது. கணவன் கைவிட்டுப் போனதன் பின்னர் மிகுந்த கஸ்ரங்களிடையே தனது இரு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி அவர்களை நன்னிலை அடைய வேண்டும் என்று கனவு காணும் தாயையும் தனது நிகழ்கால வாழ்க்கையின் ஏமாற்றங்களை மறப்பதற்கு இடையிடையே தனது பெருமையும் இனிமையும் மிக்க இளமைக்கால வாழ்க்கையை நினைவூட்டிக்கொள்ளும் தாயையும் அந்தத் தாயினுடைய அனுபவங்களையும் எம்மிடையே காண முடியும். குடும்பப்பொறுப்பு ஒரு புறம் இழுக்க சொந்த ஆசைகளும் கனவுகளும் இன்னொரு புறம் ஈர்க்க இரண்டுக்குமிடையே அல்லாடும் புதல்வனும் எமது வாழ்க்கையில் நாம் அல்லும் பகலும் காணும் ஒரு பாத்திரமே.

எமக்குச் சொந்தமான பாத்திரங்கள், எமது வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவை நாடகத்திலும் பிரதிபலித்ததால் அமெரிக்க நாடகமாயினும் பரிச்சயமான அனுபவத்தை இந்நாடகம் அளிக்கவல்லதாயிருந்தது. இவ்வகையில் இவ் அனுபவப் பொதுமையை மனங்கொண்டு இந் நாடகத்தை தேர்ந்தெடுத்த க. பாலேந்திரா பாராட்டுக்குரியவர். தமிழில் இந்நாடகத்தைப் பார்த்தபோது அதன் தமிழாக்கம் விதந்து குறிப்பிடக்கூடியதாயிருந்தது. பாலேந்திரா, க. மல்லிகா, நி. நிர்மலா ஆகியோர் சேர்ந்து இந்நாடகத்தினை தமிழாக்கம் செய்திருந்தனர்.

- க.பாலேந்திரா -ஏற்கனவே “கண்ணாடிச் சிற்பங்கள்” என்ற பெயரில் இந்நாடகம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மொழிபெயர்ப்பில் இல்லாத நெருக்கமும் நெஞ்சைத் தொடும் உணர்வும் இத்தமிழாக்கத்தில் காணப்பட்டது. உரையாடல்களின் பொருள், தொனி உணர்ச்சி ஆகியவற்றை உள்வாங்கி எமக்குப் பரிச்சயமான அன்றாட வழக்குத் தமிழில் அவற்றை இவர்கள் அமைத்திருந்தனர். யாழ்ப்பாண பேச்சு வழக்கின் பொதுத்தன்மை உரையாடல்களில் காணப்பட்டது. தவிர மரபுத்தொடர்கள், சிறப்புப் பிரயோகங்கள் ஆகியவற்றையும் கையாண்டமை, மேலே குறிப்பிட்ட பரிச்சயமான அனுபவத்தை இன்னும் நெருக்கமாகவும், ஆழமாகவும் உணர உதவியது. உதாரணத்துக்கு ஒன்று குறிப்பிடலாம். பிள்ளைகளை அன்பாக (டார்லிங்) என்று கூப்பிடும் இடங்களை குஞ்சு, ராசாத்தி, ராசா என்று தமிழாக்கியிருந்தமை மிகுந்த பொருத்தமாயிருந்தது.

இந்நாடகத்தில் ரொம் ஆக பாலேந்திராவும், அமெண்டாவாக நிர்மலாவும், லோராவாக ஆனந்தராணியும், ஜிம் ஆக ஜெராட் உம் நடித்தனர். நான்கு பாத்திரங்களும் ஒருவருக்கொருவர் சோடை போகாமல் தமது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினர். எனினும் நாடகப் பார்வையாளரின் ஏகோபித்த பாராட்டுதல்களை நிர்மலாவும் பாலேந்திராவும் பெற்றனர். இவ்விரு பாத்திரங்களும் நாடகத்தில் முன்னணிப் பாத்திரங்களாகையாலும் பலவித உணர்ச்சிச் சாயைகளையும் அதீதமாக வெளிக் காட்ட இடமிருந்தது.

அமென்டாவாகப் பாத்திரமேற்ற நிர்மலாவுக்கு இந்நாடகமே முதல் அனுபவமாக இருப்பினும் மேடைப் பரிச்சயமும் தேர்ச்சியும் அனுபவமும் வாய்ந்த நடிப்பாற்றலை புலப்படுத்தினார். முடிவில்லாத எதிர்பார்ப்புகள், ஏமாற்றத்தால் வரும் மன எரிச்சலாக, போலிப் பகட்டுத்தனம் இவை யாவற்றிலும் தனது அசைவுகளிலும் பேச்சிலும், முகபாவத்திலும் மிகத் தெளிவாக நிர்மலா புலப்படுத்தினார். சுருங்கச் சொன்னால் இறந்தகாலப் பெருமையை நினைவூட்டிக் கொண்டு தனது நிகழ் கால ஏமாற்றங்களைச் சகித்துக் கொண்டும் மேலும் மேலும் முன்னேற முயன்று கொண்டுமிருக்கிற, அமைதியற்ற பரபரப்பான ஒரு தாயைக் கண்முன் நிர்மலா கொண்டு வந்து நிறுத்தினார். மகளை வந்து பார்ப்பதற்காக ஒரு விருந்தாளியை அழைத்து வரச் சொல்லி மகனிடம் பரிதாபமாக கேட்கும் கட்டம், விருந்தாளி வரப் போகிறான் என்றதும் ஆயத்தம் செய்ய நேரமில்லை என்று அந்தரப்படும் கட்டங்கள் யாவும் சிறப்பாக அமைந்திருந்தன.

இவற்றை விட மறக்க முடியாத இரு இடங்களையும் குறிப்பிடத் தான் வேண்டும். விருந்தாளியின் வரவுக்காக அலங்கரித்துக் கொண்டு தனது இளமைக்கால நிகழ்ச்சிகளில் மனதை இழந்து நிற்கும் காட்சியும் இறுதியில் ஏமாற்றத்தால் இடிந்து போன மனதுடன் மகனுக்கு ஏசும் காட்சியும் நினைவை விட்டு அகலாதவை. பாலேந்திரா ரொம்மின் பாத்திரத்தை திறம்படச் செய்தார். தாயுடன் வாக்குவாதப்படும் காட்சிகள், குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சகோதரியுடன் கதைக்கும் காட்சி கதை கூறுபவனாக செயற்படும் சந்தர்ப்பம் ஆகியவை மிகத் திறமையானதாக அமைந்திருந்தன.

ஆனந்தராணி இதுவரை மேடைகளில் தோன்றியதை விட வேறுபட்ட குணாதிசயமுள்ள ஒரு பாத்திரத்தை இந் நாடகத்தில் ஏற்றிருந்தார். தாழ்வுச்சிக்கலுள்ள வெகுளித்தனமுள்ள பரிதாபத்திற்குரிய ஒரு பெண்ணை அவர் மேடையில் கொணர்ந்துள்ளார். மிக மெதுவான அசைவுகள், மிக மென்மையான முகபாவங்கள் ஆகியவற்றோடு தனது பாத்திரத்தின் உயர்வுகளை அவர் வெளிப்படுத்தினார். இறுதிக் காட்சியில் மிக மெதுவாக லோராவின் மனம் மாறுதலடைந்து அப் பாத்திரத்தின் தன்மையே மாறிப் போவதை அவர் அழகாகச் சித்தரித்திருந்தார்.

ஜிம்மாக வந்த ஜெராட் இறுதி அங்கத்தில் இரு காட்சிகளிடையே இடம் பெறினும் கதை ஓட்டத்திற்கு காரணமான தனது பாத்திரத்தின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருந்தார். இறுதிக் காட்சியில் கதையின் நகர்வு மிக மெதுவாக அமைந்திருந்தது. இக் காட்சியில் சில பார்வையாளர்கள் அதிருப்தி காட்டிய போது கூட அதனை மிக விரைவில் வெற்றி கொள்ளும் வண்ணம் தனது அசைவுகளையும், உரையாடல்களையும் அவர் அமைத்துக் கொண்டார்.

கண்ணாடி வார்ப்புகள் நாடகக் காட்சி

நடிப்பைத் தவிர இந்நாடகத்தில் விதந்து குறிப்பிடத்தக்க இன்னோர் அம்சம் ஒளி அமைப்பாகும். மிகுந்த அழகிய உணர்வுடனும் பொருத்தத்துடன் ஒளி அமைப்பு விளங்கியது. நாடகக் காட்சிகளின் உணர்வு நிலைக்கும் ஒளிக்குமிடையில் இருந்த தொடர்பு கவனிக்கத்தக்கது. ஒளி சார்ந்த உத்தி முறைகள் நாடகத்தின் உணர்வோட்டத்தை மாற்றிவிடாமல் அதனுடன் இணைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் அமெண்டா தனது இளமை நினைவுகளில் லயித்துப் போகின்ற சந்தர்ப்பத்தில் வர்ண பல்ப் பாவித்து சின்ன சிறிய ஒளி உருண்டைகளை மேடை முழுக்க ஓடவிட்டது கனவுச் சூழலை ஏற்படுத்தியதாயினும் அக்கட்டத்தில் அமெண்டாவின் நடிப்பு வசனம் ஆகியவற்றை ஊன்றிக் கவனிக்க இயலாமலிருக்கின்றது. எமது ரசிகர்களுக்கு இவ்வுத்தி புதிதாகையால் அந்த உத்தி பற்றி கூறியாக வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் மேடையேறிய “கண்ணாடி வார்ப்புகள்” வரவேற்புப் பெற்றுள்ள இச் சந்தர்ப்பத்தில் தமிழ் நாடக வளர்ச்சி குறித்தும் ஒரு குறிப்புக் கூற வேண்டியுள்ளது. பாரம்பரியத் தமிழ்ப் பகுதிகள் தரமான நாடகங்களைப் பொறுத்தவரை கலாசாரப் பாலைவனமாகத்தான் இதுவரை நாடக ஆர்வலர்களினால் கணிக்கப்பட்டன. எனினும் இந்த எண்ணத்தை மறுபரிசீலனை செய்யும் நினைவை சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் மேடையேறிய நாடகங்களும், நாடக அரங்கில் நிறைந்திருந்த மக்களும் புலப்படுத்தியுள்ளனர். விழிப்பு, அபசுரம், பிச்சை வேண்டாம், ஓலங்கள், நட்சத்திரவாஸி, பலி, புதியதொரு வீடு, கண்ணாடி வார்ப்புகள், ஆகிய இந்நாடகங்கள் யாழ்ப்பாணத்தில் மேடையேறியது மட்டுமன்றி நாடகம் பற்றிய காத்திரமான சிந்தனையையும் சிறு சிறு குழுக்களிடமாவது ஏற்படுத்தியுள்ளன.

இலங்கைப் பல்கலைக்கழக யாழ் வளாக மாணவர்களைக் கொண்டு சி. மௌனகுரு தயாரித்த “புதிய தொருவீடு” யாழ்ப்பாணத்தில் அரியாலை, வட்டுக்கோட்டை, பண்டத்தரிப்பு, பருத்தித்துறை போன்ற கிராமங்களில் மேடையேற்றப்பட்டு வரவேற்புப் பெறுகின்றமையும், நாடக டிப்ளோமாப் பயிற்சி பெற்ற திறமையாளர்களினால் நாடகப் பயிற்சி நெறி வகுப்பு ஒன்று திருநெல்வேலியில் ஆரம்பிக்கப்பட்டமையும், அப்பகுதிகளில் யாழ்ப்பாண நாடக ஆர்வலர் பலர் ஆர்வத்துடன் பங்குபெறுவதும் யாழ்ப்பாணத்தில் துளிர்க்கும் ஆரோக்கியமான நாடக ஆர்வத்தின் ஒரு குறியீடாகும். தமிழ் நாடக உலகத்தில் ஒளி மிகுந்த காலம் ஒன்று உதயமாகப் போகிறது என்பதற்கு இவை அறிகுறிகளாகும்.
கண்ணாடி வார்ப்புகள் நாடகக் காட்சி
தமிழ்ப் பகுதிகளில் நாடகம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தில் பிற மொழிகளில் உள்ள சிறந்த நாடகங்களை தமிழாக்கம் செய்வதும், தமிழில் தயாரிப்பதும் மிக வேண்டப்பட்டதாகும். உலக நாடக வளர்ச்சியின் பல்வேறு பரிமாணங்களை அறிந்து கொள்ளவும், அந்தப் பின்னணியில் எமது வளர்ச்சியை நோக்கவும் மதிப்பீடு செய்யவும், எதிர்காலத்தை அமைக்கவும் அது உதவும். பிறமொழி நாடகங்கள் பல தழுவல்களாகவும், மொழி பெயர்ப்புக்களாகவும் தமிழில் அவ்வப்போது இடம் பெற்றிருப்பினும் அவற்றின் பாதிப்பு அத்துணை அழுத்தமாக இருக்கவில்லை. பிற மொழி நாடகங்களைத் தமிழில் தர முயலும் போது அந்நாடகத்தின் பொருள், செய்தி, அனுபவம் என்பன எமது நாட்டுச் சூழலுடன் ஒற்றுமை கொண்டுள்ளதா என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும். இல்லாவிடின் வெறும் பரிசோதனை முயற்சியாகவும், நாடகப் பயிற்சியாகவும் தமிழாக்கம் செய்ததாகவே மொழிபெயர்ப்பு நாடகங்கள் அமைந்துவிடக்கூடிய அபாயம் உண்டு. நாடகம் வெகுஜன ஊடகம் என்ற தனது உள்ளார்ந்த தன்மையை நிலைநிறுத்திக் கொள்ள நாடகத்தின் கருப் பொருள் எமது பார்வையாளருடன் எவ்விதத்திலாவது சம்பந்தப்பட்டதாக அமைதல் வேண்டும். இவற்றையெல்லாம் மனதில் கொண்டு சிறந்த நாடகப் பிரதியை தேர்ந்தெடுத்து தமிழாக்கி தயாரிக்கும் போது அது தமிழ் நாடக வளர்ச்சியின் முன்னேற்றத்திற்கான நிச்சயமான பங்களிப்பாக அமையும். பாலேந்திரா இத்தகைய முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவார் என எதிர்பார்க்கிறோம்.

நன்றி: க.பாலேந்திராவின் முகநூற் பதிவு.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R