வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் பதினான்கு!

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்

கிழக்கிலும் தெற்கிலுமிருந்து வனம் முனகிய சத்தங்கள் காற்றில் ஏறிவந்து மேலே நகராமல் அங்கேயே மடிந்துகொண்டிருந்தன. பிறந்ததுமே சூரியனைநோக்கித் தாவிய அஞ்சனை குமாரன்போல், முதுவேனில் வைகாசியிலேயே உச்சம் பெற்றிருந்தது. அதன் ஒரு துளி நழுவி விழுந்து இரவு வெம்மையானது. வேனில் பருக்களில் அது நசநசப்புச் செய்து, நகங்களின் சொறிதலுக்காய் அரித்துக்கொண்டிருந்தது.

கூடியிருந்த மனிதர்களின் கவனம் அதில் அவ்வளவு சிதறியதாய்த்  தெரியவில்லை. அவர்கள் பார்வையில் கதைசொல்லும் முள்ளிக் கிழவி இருந்துகொண்டிருந்தாள்.

அவளுக்கு இன்னும் தன் கதைநேரம் தொடங்க நேரமிருந்தது. காம்பு கிள்ளிய வெற்றிலைக்கு இன்னும் சுண்ணாம்பு தடவி அவள் முடித்திருக்கவில்லை. அதன் பிறகும் சில கைங்கரியங்கள் உண்டு.
அதுவரை சபை காத்திருக்கும்.

அன்னமுத்துவும், செல்லத்தங்கமும், சரஸ்வதியும், ஆனாக் கிழவனும், அருளம்பலமும், நடராசனும், நாகேந்திரனும், நாகாத்தையும், கலாவதியும், கணநாதனும் இன்னும் பல குழந்தைகளுமான பத்து பன்னிரண்டு பேர் கொண்ட சபை அது.
நெருங்கி அமர்ந்திருந்ததில் குடும்பங்கள் குலைந்திருந்தன. யார் யாரின் புருஷன், யார் யாரின் மனைவி, எவர்கள் எவர்களது பிள்ளைகளெனத் தெரியாதிருந்தது. அருளம்பலத்தின் மனைவியைத் தட்டி நாகேந்திரன் ஒருபோது கொஞ்சம் புகையிலை கேட்டான். அவள் ஒரு துண்டை நீட்டி கிள்ளியெடுக்கச் சொன்னாள். அவன் கிள்ளியெடுத்ததை நல்லவேளையாக அருளம்பலம் காணாதிருந்தான். சபை குழம்பக்கூடிய ஒரு காரணம் அவ்வாறாக மறைந்துபோனது.

மருத மரத்துக்குள் சொருகியிருந்து கீழே குளத்தின் நீரலையும், தாமரைப் பூமுகமும் கண்டுகொண்டிருந்தது நிலவு. நாகாத்தை நிலவை ஆழ்கிணற்றில்போல் தூரத்தில் கண்டாள். கணநாதனும் அதைக் கண்டான். அவனது அம்புலி தோன்றாததில் அவனுக்கு கவலையாக வந்தது. கவலையை அவன் நிலவை உடைத்து அம்புலியாக்கி மனத்தில் உலவவிட்டு மறக்கத் தெரிந்திருந்தான். அதையே அப்போது அவன் செய்துகொண்டிருந்தான்.

இன்னும் ஒரு பெரிய காற்றலை வெப்பம் சுமந்து வந்தது. வைக்கோல் மணம் அதில் விரவியிருந்தது. அரிசியின் மணமும், நாளைய பசியின் மணமும் கொண்டிருந்தது அது.

பசி எவருக்கும் உண்டாவதில்லை, அது உண்டாக்கப்படுகிறது. அந்த நுட்பத்தைத் தெரிந்தவர்களல்ல அந்தச் சபையிலிருந்தவர்கள். அவர்களில் நாலு எழுத்து படித்தவர்களும், எழுத்தே தெரியாதவர்களும்கூட, இருந்தார்கள். பசியைத் தெரிந்து, பசியின் காரணம் தெரியாத அந்த மனிதர்கள் கதை கேட்கத் தெரிந்திருந்தார்கள்.

கதைசொல்லும் கிழவி நாலு எழுத்துப் படித்தவள். அ, ஆ. இ, ஈ இவற்றை அவள் தன் ஏழாம் வயதிலேயே ஒரு பள்ளிக்கூடத்திலே படித்தாள். அவளது தந்தை அந்த எழுத்துக்களுடன் அயன்ன, ஆயன்ன, இயன்ன, ஈயன்ன என்ற எழுத்துக்ளும் அறிந்திருந்தார். அவளது தந்தைவழித் தாத்தாவும் அவை அறிந்தவர்தான். அது சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னராக நடந்தது.

தோடையிலிருந்து மாம்பழம் வந்தாலென்ன, மாமரத்திலிருந்து தோடம்பழம் வந்தாலென்ன? மாம்பழத்தையும் தோடம்பழத்தையும் உண்ணும்விதம்தானே தெரிந்திருக்கவேண்டும்? விதம் தெரிந்தால் இரண்டுமே இனிக்கும்.
அவர்களுக்கு எதை எப்படித் தின்பதென்பது தெரிந்திருந்தது.

முள்ளிக் கிழவி சிலநாட்களுக்கு முன்னர் சொன்னதுதான் அது.

இன்றைக்கு என்ன கதை விரிப்பாளென்று எவருக்கும் அனுமானமில்லை.

அங்கே அமர்ந்திருந்த ஒரு பையன் தன் தாயைக் கேட்டான். “இண்டைக்கு பாட்டி என்ன கதை சொல்லுமம்மா?”
“காத்திரு. சொல்லேக்கதான் தெரியும்.”

“அம்மாளாச்சி வந்த கதை, இல்லாட்டி ஏழு கன்னிமார் கதை சொல்லச் சொல்லம்மா, நல்லாயிருக்கும்.”

முள்ளிக் கிழவி அது கேட்டாள். நிமிர்ந்து நேரே பார்த்தாள். தாயோடிருந்த  பையனைக் கண்டாள். எட்டு வயது இருக்கலாம். இன்னும் குழந்தைதானென எண்ணினாள். இனி அவன் அம்மாளாச்சி வந்த கதை சொல்லும்படி அழுது அடம்பிடிக்கலாமென கிழவி நினைத்தாள்.

பையன் அழுது அடம்பிடித்தான். முள்ளிக் கிழவி நிமிர்ந்தாள். “அதுக்கெல்லாம் கதை முந்தியே இருக்கு, மோன. வற்றாப்பளை அம்மனுக்கும், ஏழு கன்னிமாருக்கும்போல மடுமாதாவுக்கும் கதை இருக்கு. நான் இருக்கிற கதையைச் சொல்லுளவளில்லை. சொல்லுற கதையை இருக்க வைக்கிறவ. மோன, பாட்டி எந்தக் கதை சொன்னாலும் ரஸம் இருக்கும். அதுதான உனக்கு வேணும்? கதையின்ர ரஸம்.’

கிழவியின் கண்கள் கிறங்கியிருந்தன.

கிறங்காமல் கிறங்கவைக்கிற கதை சொல்ல முடியுமோ?

அவள் பின்னே திரும்பி கைவிரல் இரண்டை உதடு இரண்டின் குறுக்காய் வைத்து துப்பலைப் பீச்சினாள். கணக்காய் நாலு முழம் தாண்டி அது போய் அடங்கியது. கரு மண்ணில் செம்புள்ளிகளாய் நிலவு வெளிச்சத்தில் மின்னிக் கிடந்து மெது மெதுவாய்க் காய்ந்தது.

முள்ளி ஆச்சியின் கதை தொடங்கியது.

ஆரும் கண்டிராத, ஆரும் கேட்டிராத காலம் அது. இப்பவும் ஆரும் கவனம் கொண்டிருக்காத காலமும்.

பல்வேறு குறுநிலங்களாய் வன்னி அப்போது பிளவுண்டிருந்தது.

ஒவ்வொரு குறுநிலமும் ஜனங்களின் வசிப்பிடத்துக்கான நிலத்தையும், வயல் நிலத்தையும், வயல் பரப்பைவிட அதிகமான வனப் பரப்பையும், அதேயளவுக்குச் சமமாய் கோடையில் காய்ந்து சதுப்பாய் மாறும் நீர்வெளியையும் கொண்டிருந்தது.
முடியில்லாத, முடியுள்ள நாற்பது ராசாக்கள் அந் நிலங்களை ஆண்டார்கள்.

அவர்களுக்குள் அடிக்கடி சண்டையும் வந்தது.

ஒருபொழுது நீருக்காக, ஒருபோது விளைச்சலின் அபகரிப்புக்காக, ஒருமுறை ஆனைகள் இருந்த வனத்துக்காகவென்று பல காரணங்களில் அச் சண்டைகள் நடந்தன.

மக்களும் உழைப்புக்காகவும், உழைப்பில்லாததற்காகவும் என பல காரணங்களில் சண்டை பிடித்தார்கள். சிலர் வன்னி இகந்துசென்று பணத்தோடு வரும் வித்தை தெரிந்திருந்தார்கள். அதுபற்றி வெளியுலகு நன்கு அறிந்திருந்தது. உண்மையில் களவை அவர்கள் செய்யவில்லையென்றே சொல்லவேண்டும். தேவைக்கானதை தாமாக எடுக்கிறதை மட்டுமே அவர்கள் செய்தார்கள்.

எது வசதியோ அதுவே அவர்களுக்குச் சரியாக இருந்ததென்று அயல் சொல்லியது. அதனால்தான் விழுந்தபாட்டுக்கு குறி வைப்பான் வன்னியன் என்ற பழமொழி வந்தது. அதை உருவாக்கியது வடக்காய் இருந்தது.

கொம்பன் ஆனையின் தந்தமெடுக்க தீராத வெறியுடன் காலையிலிருந்து தன் நாலுபேர்ப் பரிவாரத்தோடு மேற்கிலே எல்லி மறையும்வரை வனமறுத்து திரிந்துகொண்டிருந்தார் ஒரு ராசா.

கொம்பன் ஆனையின் தந்தத்துக்குள்ளே முத்துக்கள் விளைந்திருக்குமென்று ஒரு முது பணிக்கன் அவருக்கு ஒரு ரகசியத்தை சொல்லிக் கொடுத்திருந்தான். ஒரு துவக்கும், இரண்டு ஈட்டிகளுமாய் அவர் வேட்டையில் இறங்கியிருந்தார்.
கொம்பன் ஆனைபற்றிய தகவல்கூட மாரி துவங்கும்வரை அவர் செவியில் விழுந்திருக்கவில்லை.

கறுத்த ராசாவின் கனத்துக் கிடந்த உடம்பு இளைத்துப் போனது. வெளித்துக் கிடந்த முகம் இருட்டிப் போனது. விம்மிக் கிடந்த மனம் துவண்டுவிட்டது.

சிவிகை ஊரும் ராசாத்திக்கு அளித்த வாக்கை எப்படிக் காப்பாற்றுவது? பாண்டிய நாட்டிலிருந்து எவ்வளவு ஜால வார்த்தைகளில் அவளை அங்கே அவர் கூட்டிவந்திருந்தார்? முத்தும், ரத்தினங்களும்கொண்ட பேழைகள்… முத்தாலும் ரத்தினத்தாலுமான அணிகள்…

ராசா வெம்பியிருந்தார்.

‘இந்த மாரி தொடங்கு முன் கொம்பனின் தந்தம் கொண்டுவந்து கிலு கிலுவென அதனுள் விளைந்திருந்த முத்துக்களை கிலுக்கிட்டிபோல் கிலுக்கிக் காட்டுவேன், என் ராஜவள்ளிக் கொடிக்’கென ராசா அவளுக்கு வாக்கு கொடுத்திருந்தார்.
காற்றிலே வார்த்தையின் ஒவ்வொரு சொல்லும் உதிர்ந்து போவதைக் கண்டுகொண்டிருந்தார் ராசா.

தந்தங்கள் கொண்டுவரும்வரை மஞ்சனக் கட்டிலில் ராசாத்தி அவர் புட்டத்தையும் பதிக்க விடமாட்டாள்.

ராசா மனையிலில்லாமல் இருப்பதும், காயும் கனியும் கிழங்கும், தேனும், இறைச்சியும் புசிப்பதும், வெறுநிலத்தில் உறங்குவதும் எல்லாம் ஊரெங்கும் பரவிற்று.

மாரி வந்தது. மாதத்தில் மாரி வந்தும், மாரியில் மழை வராதிருந்தது. விளைச்சல் பொய்க்கும், வறுமை பெருகும், பசி தலையெடுக்கும், என்ன தெய்வ குற்றமோ என ஏங்கினார் ராசா. பதிவிரதைகள் குறைந்தனரோவென பதறினார்.
அன்றைக்கு ஒரு நிறைந்த அமாவாசை. அவருக்கு ஒரு முட்டி நறுந்தேன் கிடைத்தது.

“இது மட்டும் போதுமா, பரிசாரகா?” எனக் கேட்க, பரிசாரகன் எங்கிருந்தோ, யாரைக் கெஞ்சியோ ஒரு கலயம் கள்ளைக் கொண்டுவந்தான்.
அகமகிழ்ந்தார் ராசா.

கள்ளாசை முடிந்தபோதும் ராசாவுக்கு ஒரு ஆசை எஞ்சியிருந்தது. பக்கத்தில் நின்ற பரிசாரகன், “ஊருக்குள் நீர் புகாமல் அதைத் தணிக்க முடியாது” என்றான். அவன் சூளெடுக்க, ராசா மொட்டாக்குப் போட்டுக்கொண்டு அந்த அமாவாசை இருளுக்குள் இறங்கினார்.
ஒரு மருத மரக் குளத்தின் மறுகரையில் குரக்கன் அறுத்த வெளியொன்று விரிந்து கிடந்தது.

இருளிலும் ஒரு வெளியானது தன்னுள் மர்மமாய் ஒரு ஒளியைக் கொண்டிருக்கிறதோ? அப்போதும் அந்த வெளி சிறிதாய் வெளித்திருந்தது.

மண்ணால் ஆனதெனினும் பெரிதாகவிருந்து உடைமையாளனின் வளப்பம் சொல்லியது ஒரு குடிசை. அது அவனது வலிமையின் அடையாளமும் ஆகும். ராசாவுக்கு அது தெரிந்திருந்தது. அவர் கவனம் கொண்டார்.
ராசா ஓசையெழுப்பாமல் குடிசையை அணுகி அங்கிருந்த ஒரு பொட்டுக்குள்ளால் தன் பார்வையை ஊடுருவ விட்டார்.

உள்ளே குழந்தையொன்று தடுக்கில் தூங்கிக்கொண்டிருந்தது. நான்கு வயதிருக்குமா? அப்படித்தான் தெரிந்தது. குடிசையில் நடுக் கப்போடு குளித்து, அழகாய்ச் சேலைகட்டி, பொட்டிட்டு, நெய் பூசி தலைவாரி, காட்டுப் பூச் சூடி, அஞ்சனமெழுதிய பெண்ணொருத்தியும் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.

யாருக்காகக் காத்திருக்கிறாளென ராசா எண்ணினார்.

அவள் முகமோ மேலே நிமிர்ந்திருந்தது. கண்ணோ முகட்டில் நிலைத்திருந்தது.

அப்போது ராசா எண்ணினார், அவள் விண்ணிலிருந்து வரும் தேவனுக்காகக் காத்திருக்கிறாளென்று. விண்ணானது நேர்மேலே மட்டுமில்லை, அடிவானம்வரை விரிந்திருக்கிறதென கற்றவர் சிலர் அவரிடம் சொல்லியிருந்தார்கள். அடிவானத்தின் கீழே தேவர்களும் இருக்கிறார்கள்.

அவள் நோக்கியிருந்த திசையிலிருந்து அவளது தேவன் பாண்டிய நாட்டிலிருப்பதை அவர் புரிந்தார். பாண்டிய நாட்டிலிருந்து அல்லது மலையாள, தெலுங்கு எந்த நாட்டிலிருந்தும் தேவன் காதலுக்காக ஓடிவருவதில்லை என்பது ராசாவுக்குத் தெரிந்திருந்தது. தொழிலுக்காய் போனவன் தொழில் முடித்தே வீடு திரும்புவான்.

அதுவரை அவர்களது மானத்தையும், மரியாதையையும் மனையிலுள்ள அவர்களது மனைவிகள் கட்டிக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

வலத்தில் வைத்து தாலி கட்டி, இடத்தில் இருத்தி அந்தப் பொறுப்பு அவர்களிடம் கையளிக்கப்படுகிறது. அதுவரை அது புருஷன்களது அம்மாக்கள் வசமிருக்கிறது. அம்மாக்கள் இல்லாதவர்களுக்கு அவர்களது சகோதரிகள் அதைக் காப்பாற்றிக்கொடுக்கிறார்கள். அதையே எடுத்து தம் மனைவியரிடம் அவர்கள் காத்துவைப்பதை ஒப்புக்கொடுக்கிறார்கள்.

அதைக் காபந்து செய்வது மனைவிகளின் அறமாக சின்ன வயதிலிருந்தே ஒரு பெண்ணுக்குப்  புகட்டப்பட்டிருக்கிறது.

மாரியும், வெய்யிலும், பனியும், காற்றும், சூரிய சந்திர பிரபைகளும் அவர்கள் கற்பறத்தில் தவறும்போது நிலைபெறாது போய்விடுமென அம்மா அப்பா அல்லாத, அதுவரை எந்தப் பந்தமுமில்லாத, எதுவித முன் அறிமுகமுமில்லாத புருஷன்களால் மனைவிகள் எச்சரிக்கப்படுகிறார்கள்.

தேவன் வரமாட்டாரென அந்தத் தேவதை நம்பிக்கை இழப்பதை ராசா கண்டார். நினைவின்வழி அந்தத் தேவை எப்போதும் பூர்த்தி செய்யப்படுவதில்லை. உடல் துளைத்து எய்தும் இன்பத்தினாலேயே அது நிறைவுசெய்யப்படுகிறது. அவள் தேவையோடிருப்பது ராசாவுக்கு நன்கு வெளிச்சமானது.

குருவிகளும் சத்தமொடுங்கி இரவு முதிர்ந்திருந்தது. அதுவும் அமாவாசையின் இரவு. அது நட்சத்திரங்கள் விசிறிய ஒளியை அடக்கும் மும்முரத்திலும் இருந்தது.

ஒளிர்ந்துகொண்டிருக்கும் வீட்டு விளக்கின் சுடர் அவிந்தால் அவளது பிரபஞ்சம் இருளும்.

ராசா காத்திருந்தார்.

எண்ணெயின் அளவு கீழிறங்க விளக்கின் சுடர் குறைந்து வந்தது. அவள் விளக்கைத் தூக்கி எண்ணெயின் அளவைப் பார்த்தாள். எண்ணெய் தீர்ந்திருந்தது. அது அவள் குறித்துவைத்த எல்லைபோலும். இனி அவள் தேவனுக்காக காத்திருக்க மாட்டாள்.
அவள் டப்பென எழுந்தாள். எதிர்பார்ப்பு, ஏமாற்றம், கண்ணீர் எல்லாம் நிலத்தில் விழுந்து கலீரென நொருங்கின. அவளது கண்களிலிருந்து சிதறித் தெறித்த கண்ணீர் ராசா திடுக்கிடும்படி அவரது முகத்திலும் பறந்தது.

அவள் தன் சேலைத் தலைப்பால் கண்ணீரைத் துடைப்பாளென ராசா எண்ணினார். அவ்வாறே அவள் தன் கண்ணீரை சேலைத் தலைப்பால் துடைத்தாள்.

இன்னுமொன்று மட்டும் நொருங்காமல் தன்னுள் முழுதாய் இருப்பதை அவள் அறிவாள். அது அந்தச் சூழ்நிலையில் உடைபடச் சாத்தியமில்லாதது.  அவள் கோபத்தோடு மாதங்களின் கணக்குப் பார்த்தாள். பிறகு அதை முணுமுணுத்தாள்.
ராசாவுக்கு அது கேட்டிருக்கவில்லை.

பரிசாரகனைத் தட்டி, “நீ அது கேட்டாயா?” என வினவினார்.

“மூன்று வருஷமாய்ப் போச்சு என்றாள்” என அவன் சொன்னான்.

“மூன்று வருஷமாகவா?” என்று சிறிது சத்தமாகவே ஆச்சரியப்பட்டுவிட்டார் ராசா.

“ஓம், அதற்கென்ன?” என்றபடி குரல் திசையில் திரும்பினாள் அந்தப் பெண்.

ராசா இருப்பை வெளிப்படுத்த மாதரசி குடிசையின் படலையை அரக்கித் திறந்து கையிலிருந்த கத்தியை ஓங்கினாள்.

ராசா முன்னால் வந்து முட்டாக்கை எடுத்தார்.

“ராசாவா!”

அவளது வாய் திறந்தது ஆச்சரியத்தில். கை தானாய்த் தாழ்ந்தது.

அவளது சிவந்த அதரங்களுள் அணைந்துகொண்டிருந்த விளக்குச் சுடரில் வெண்பற்கள் மினுங்கின.

ராசா கேட்டார். “மாதரசே, மூன்று வருஷங்களென்றா சொன்னாய்?”

“மூன்று வருஷங்களாகத்தான், ராசாவே!” என்றாள் ராசாவின் மாதரசி.

“காணாதிருந்தேனே!” என துக்கித்தார் ராசா.

கண்டுகொள்ளுமென அவள் தேவனுக்கானதை  ராசாவுக்குக் காட்டினாள்.

பரிசாரகன் பந்தத்தை அவித்து, தன் ஆசையையும் அதுபோலாக்கிவிட்டு, குடிசைக்கு வெளியே நிலத்திலமர்ந்து காத்திருந்தான். ராசா கொடுத்திருந்த ஈட்டி அவனருகே முனையின் சுடர் மினுங்கக் கிடந்திருந்தது.

விடிபொழுதில் ராசா தானே படலையைத் திறந்துகொண்டு வெளியே வந்தார்.

பரிசாரகன் எழுந்துநின்றான். அப்போது அவரது கையில் மாதரசின் தங்கச் சங்கிலி தொங்கிக் கிடந்து சிரிப்பதை அவன் கண்டான். “அட்டியின்றிக் கொடுத்தாளா?”

“அட்டிசொல்ல அவளில்லை.”

“என்ன செய்தீர், ராசாவே?”

“இந்த இரவில் எனக்கே பெண்டாக இருந்தாளெனினும், அவள் கற்பை இழந்தவளே ஆகிறாள். அவள் போன்றவர்கள் அங்கத்தால் மாதரசிகளாயிருந்தாலும், அவிசாரிளே. அவர்கள் வாழும் பூமியில் மழை பொய்க்கும். அல்லாமல் மழை வந்தாலும் வெள்ளமாய்ப் பெருகும். வளம் அழியும். உயிர்கள் அழியும். நாடு அழியும். தான் வாழும் தகுதியை அவள் அப்போதே இழந்துவிட்டாள். சவத்துக்கு அணி எதற்கு? வா, போகலாம்.”

கதைசொல்லும் கிழவி மேலே பார்த்தாள்.

மருத மரத்தில் கொளுவியபடியிருந்து குளத்தில் நீரலையும், தாமரையின் பூமுகமும் பார்த்த நிலவு வானத்தின் நடுவுக்கு நகர்ந்து போயிருந்தது.

நட்சத்திரங்களும் பிரகாசமாய் ஜொலித்தன.

பூமியில் படிந்த வெளிச்சத்தில் கிழவி கண்டாள், இன்னும் பலர் அங்கே கூடியிருப்பது. அதில் அறிந்த ஒரு முகமும். சந்திரிகா! கிழவியின் கண்கள் மினுமினுத்தன.

அது ஒரு புண்ணிய பலன்.

மடியில் வைத்து கதை சொல்ல முடியாதுபோன பேரக் குழந்தைக்கு மண்ணில் வைத்துக் கதை சொல்வதான பாக்கியம் கிடைப்பது முன்செய்த புண்ணியத்தினாலேயே சம்பவிக்கிறது.

அவள் வெற்றிலை குதப்ப ஆரம்பித்தாள்.

சந்திரிகாவை அவ்வப்போது தலை நிமிர்ந்து பார்த்தாள்.

பதினெட்டு… இருபது… வயதுக்கு மேலே இருக்காது.

மஞ்சள் வரிகள் பிய்த்துப்போட்ட பச்சை உடுப்பு.

அவள் புலிகள் இயக்கத்திலா இருக்கிறாள்?

அவளுக்கு திருப்திகரமாக அது இருந்தது.

பதவியாவின் நீர் செறி நிலத்து வளம் மிகுந்த வனத்திலிருந்து காலம் விரட்ட தாயோடும், தாத்தாவோடும் வடதிசை நோக்கிப் புறப்பட்ட அந்த நாளை அவள் அப்போது நினைத்துப் பார்த்தாள்.

மாஓயாவின் முன்னின்று வனத்திடமிருந்தும், நதியிடமிருந்தும் விடைபெற்ற பொழுதில் அவளுக்கு வயது பன்னிரண்டு இருக்கலாம். அதிலிருந்து அவள் வாழ்க்கை எத்தனையாயும், எத்தகையதாயும் மாறிப்போனது!

துவக்கோடு வேட்டையாட வந்த லோங்ஸ் போட்ட ராசா ஒருத்தனைக் கண்டு அவள் காதலாகிறபோது, புதிய இடத்தின் விவசாயப் பரப்பில் அவளுக்கு ஆண்டுகள் நான்கு கடந்துபோயிருந்தன.

துவக்குடன் வந்த லோங்ஸ்காரன் அவளுக்கு சோடா கொடுத்தான். பணிஸ் கொடுத்தான். நாள்பட வைத்து தின்ன ஒரு பக்கற்று விசுக்கோத்தும் கொடுத்தான். பின் ஒருபோது காதலாசை அவனுக்கு மேவிவர சரித்திராவை ஆசையாக அணைத்து ஒரு பிள்ளையையும் பரிசு கொடுத்தான்.

போனவன் பிறகு எப்போதும் திரும்ப வரவேயில்லை.

அம்மா வயிற்றிலறைந்து அழுதாள்.

தாத்தா தலையிலடித்து கத்தினார்.

பத்து மாதங்களின் பின், ‘உன்னை வேண்டாம். எக்கேடும் கெட்டுப் போ. பிள்ளையைத் தா. அது அவிசாரி கையில் வளரவேண்டாம். அது எங்களின்ர வமிசம்’ என்று குழந்தையை எடுத்துக்கொண்டு எங்கோ போனார்கள். சரித்திரா தடுக்கவில்லை. குழந்தையை வைத்து என்ன செய்வதென்று அவளுக்குத் தெரியாதே இருந்தது. அது போனது நல்லதென்று சரித்திரா கருதினாள்.

பின்னர் அவளுக்கு எந்த ஆசையும் வரவில்லை, குழந்தையைப் பார்க்கும் ஆசையைத் தவிர.

ஐந்து ஆண்டுகளாயின அவர்களின் இருப்பிடம் கண்டுபிடிக்க.

தாத்தா இறந்துபோன நிலையில் அம்மாமட்டும் உழைத்து குழந்தையைக் காப்பாற்றிக்கொண்டிருந்தாள் அப்போது.
மனிதர்கள் சிலர் அவளோடு அன்பாக இருந்தார்கள். ஊர் ஆதரவாய்ப் பழகியது. அது தன் மகள் வளர நல்ல இடமென நினைத்தாள் சரித்திரா.

எப்போது பார்க்கத் தோன்றுகிறதோ அப்போது வந்து தன்னை மறைத்து நின்று பார்த்துப் போனபடியிருந்தாள்.
தனக்கு தன் அப்பன் வைக்கவிரும்பிய பெயரையே, தாய் தன் பிள்ளைக்கு வைத்திருந்தாளென்பது தெரிய சரித்திரா சிலிர்த்துப்போனாள். ‘சமுத்திரா’ என ஆசையோடு மனத்துள்ளாய் அழைத்து பிள்ளைத் தவனம் குறைத்தாள்.
சமுத்திரா பள்ளி சென்றாள். பள்ளியிலே மட்டையிலுள்ள எழுத்து முழுவதும் படிக்கத் தெரிந்தாள். படமில்லாத புத்தகங்களும் வாசிக்கப் பழகினாள். கூட தையலும், நெசவும், கோழி வளர்ப்பும் கற்றுக்கொண்டாள்.

வளர்ந்த பின் ஒருநாள் அவளுக்கு திருமணம் நடந்தது. அதையும் சரித்திரா மறைந்திருந்தே பார்த்தாள். மணமகன் அரசாங்க தபால் நிலையத்திலே சைக்கிள் வைத்துக்கொண்டு ஊரெல்லாம் திரிந்து அஞ்சல் விநியோகம்செய்யும் ஒரு சின்ன உத்தியோகம் பார்க்கிறவராய் இருந்தார்.

சிலநாள் கழிய அவள் வந்தபோது அவர்கள் அங்கே இருந்திருக்கவில்லை. அவர்கள் சென்ற இடமும் சரித்திராவுக்குத் தெரியாமல் போனது. தாயார் அவதியின்றி ஒரு நல்ல சாவை அடைந்ததுமட்டும் அயலிலே அறிந்தாள்.

மகளின் தேடலை மறுபடி தொடங்கினாள். அவர்களை ஒருநாள் அதே ஊரின் வேறொரு திசையில் கண்டுபிடித்தாள். ஆனாலும் நேரே சென்று மகளுடன் பேச அவளுக்கு அச்சமாயிருந்தது. தாய் கொடுத்த அவிசாரியென்ற பழி அவளைச் செல்லவிடாது தடுத்தது. தாயிடம் வாங்கிய அடிபோல், தன் மகளிடமும் வாங்கவேண்டாமே என்பதினாலா அப்படி? அவள் ஒதுங்கியிருந்தே பார்த்தாள்.

அப்போது சமுத்திராவுக்கு ஒரு பிள்ளை பிறந்திருந்தது.

அவள் ஒளிந்திருந்து பார்த்தவேளையில் சமுத்திரா தன் பிள்ளைக்கு வீர வன்னியன் கதை சொல்லிக்கொண்டிருந்தாள். அந்தக் கதையை சரித்திராவும் அறிந்திருந்தாள். சமுத்திராவின் கதை சொல்லும் ஆற்றல் அவளுக்கு ஆச்சரியமாய் இருக்கவில்லை. கல்லாமல் பாதி குலவித்தையென சொல்லப்படுவதை அவள் அறிவாள்.

சந்திரி… சந்திரி என்று அழைத்து பிள்ளைக்கு அவள் சோறூட்டினாள்.

அப்போது சரித்திரா நினைத்தாள், குழந்தைக்கு சந்திரிகாவென்ற பெயராயிருக்கலாமென. அது சரியாகவே  இருந்தது.
1995இன் பின் வன்னி நிலைமை சடுதியில் மாறிப்போய் விட்டது.  வடக்கிலிருந்து வீடிழந்து, சொத்திழந்து, உறவுகளை இழந்த சனங்களின் தொகையால் வன்னி நிறைந்துபோய் இருந்தது. அவர்கள் பசியாயிருந்தார்கள். அவலம் கொண்டிருந்தார்கள்.
அமளி அடங்கிய பின் சமுத்திராவையோ, சந்திரிகாவையோ பிறகு அவள் காணவில்லை.

யுத்தம் நடந்தது. ஊர்கள் வெறித்தன. மக்கள் பாதுகாப்புத் தேடி பூப்பாகம் எங்கணும் அலைந்து திரிந்தனர். மிச்சமாய்க் கிழவிகளும், கிழவன்களும் ஊர்களில் இருந்தார்கள். சமுத்திராவும் பிள்ளையும் நாடு கடந்து போயிருக்கலாமேயென சரித்திரா ஆதங்கப்பட்டாள்.

பின்னர் தெரிந்தது அவர்கள் அவ்வாறு போயிருக்கவில்லையென. தேடியலைந்து மறுபடி சரித்திரா அவர்களைக் கண்டாள். அப்போது அவர்கள் அவ்வூரின் இன்னொரு திசையில் இருந்திருந்தார்கள். அது அவர்களுக்கு சொந்தமாய் நிலமில்லையென்பதை அவளுக்கு திண்ணமாய் எடுத்துரைத்தது. தனக்கான கால் ஏக்கர் காணியை சமுத்திராவுக்கு கொடுக்க நிச்சயித்து, உறுதிப் பத்திரத்தை அவளிடம் சேர்ப்பிக்க கோயில் ஐயரை கேட்கவேண்டுமென எண்ணிக்கொண்டாள்.
ஒருபோது அவளறிந்தாள், அப்போது களத்தில் ராணுவமும் புலிகளும் மட்டுமே நிற்பதாக. ஏனைய இயக்கங்களுக்கு என்னவாயிற்றென்பதை சரித்திரா அறியாதிருந்தாள்.

புலிகளுக்குப் பயந்தே சில இயக்கங்கள் அயல் நாடுகளுக்குத் தப்பிப் போயின என்றும், சில இயக்கங்கள் அவர்களால் அழித்தொழிக்கப்பட்டனவென்றும் சொல்லப்பட்டது. சரித்திராவுக்கு உண்மை தெரியாதிருந்தது.

வன்னி பெரும்பாலும் விடுதலைப் புலிகளின் கையில் வந்திருந்தது. ஆனாலும் எல்லையோரங்களில் ஆழ ஊடுருவும் படையணிகளின் தாக்குதல்கள் நடந்துகொண்டே இருந்தன.

எல்லாச் சண்டைகளையும் வனத்துக்குள்ளிருந்து கண்டாள் அவள்.

பயணத்தின் இடையிடையே யாரேனும் இடம்பெயர்ந்து சென்ற ஒரு வீட்டில் தங்கினாள். அவளுக்கு கோயில்களில் மதிப்பிருந்தது. அவை ஒருநேரச் சாப்பாட்டுக்கு மனமுவந்து வழிசெய்தன. மாத்தளன், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியாவென எங்கே அவள் அலையவில்லை? தலங்களின் கதைகள் அவ்வாறுதான் அவளிடத்தில் சேகரமாகின.

அவள் ராணுவத்தாலோ சமூகவிரோதிகளாலோ சிதைக்கப்படக்கூடிய நிலைமைகள் திகைந்திருப்பதை கோயில் ஐயர்கள் கூறி அவளை எச்சரித்தார்கள்.

சித்திரவதைகளும், பாலியல் வல்லுறவுகளும், கொலைகளும், காணாமல்போதல்களும்பற்றி அவளும் கேள்விப்பட்டிருந்தாள். கிருஷாந்தி, ஐடா கர்மலிட்டா, கோணேஸ்வரி, சாரதாம்பாளென எத்தனை பெண்கள்…! செம்மணிப் புதைகுழி, மிருசுவில் புதைகுழி, துரையப்பா விளையாட்டரங்க புதைகுழியென எத்தனை புதைகுழிகள்…!

ஆனாலும்…

‘கிணத்தடி குளக்கரையெண்டு எந்த ராத்திரியிலயும் நான் போய்ப் படுக்கிறது ஏனெண்டு ஐயா நினைக்கிறியள்? செத்திடுவன். சும்மா நினைக்காதயுங்கோ, செத்திடுவன்.’ அவள் பதில் அவர்களை திகைக்கவைத்தது.

‘எப்பிடி நீ இல்லாமப் போனாலும் எங்களுக்கு கவலைதான், முள்ளியாச்சி.  தெய்வங்களின்ர கதையள நீ தேடிக்கொண்டு வந்து ஒரிடத்தில குவிக்கிறாய்.  அதுக்காக எங்களுக்கு நீ வேணும்’ என்றிருந்தார்கள் அவர்கள்.

அதை அவள் புரிந்திருந்தாள்.

அவள் அப்போது இயலாதவளாயிருந்தாள். கி.மீ.க்களை தன் காலடியில் அடக்கிய முள்ளிக் கிழவி விதையுண்ட கண்ணி வெடிகளால் நடமாட்டம் குறைந்தாள். அப்போதுதான் அவள் கதைசொல்லிக் கிழவியென்று பேரெடுத்தது.

அவளுக்கு தெரியாதிருந்த காலத்தின் இடைவெளி அப்போது கடக்கப்பட்டிருக்கிறது. ஆறேழு வருஷங்களின் பின் சந்திரிகாவை அவள் மறுபடி கண்டிருக்கிறாள். அதுவும் ஒரு புலிப் பெண்ணாக. இனி அவளது அம்மாவை… அப்பாவை… முள்ளிக் கிழவி கேட்டறிவாள். அவளுக்கு தொடுப்பு விழுந்துவிட்டது.

முன்னால் அம்மாளாச்சி, ஏழு கன்னிமார் கதை கேட்ட சின்னப் பையன் தூங்கிக்கொண்டிருந்தான். தாயிடம் சைகையில் காட்டினாள் அவனை எழுப்பிவிட. இனி அவள் தொடரப் போகும் கதைப் பகுதி அம்மாளாச்சி கதையைவிட, ஏழு கன்னிமார் கதையைவிட ரஸம்கூடியதாய் இருக்கும்.

அது மாதரசைக் கொன்றுவிட்டு மணிமாலையோடு வந்த ராசா கதையின் இரண்டாம் பாகம்.

மாதரசி செத்த பின்னால் மாமழை பெய்தது. நதிகள் பாய்ந்தன. குளங்கள் நிறைந்து வடிநீர் நிலமெங்கும் வெள்ளம் பரந்து பூமி குளிர்ந்திருந்தது. அவை கோபம் கொள்ளாதிருந்தன.

ராசா அகமகிழ்ந்தார். கோடை விழுந்தது. ராசா வேட்டையில் கவனமானார்.

கொம்பனைப்பற்றிய பேச்சு அரசல்புரசலாக ராசாவின் காதுக்கு வந்தது, நீர் நிலைகள் வற்றிவிட்டதில் வெகுதூரத்திலிருந்து ஆனைகள் தாகம் மேலிட்டு குடியிருப்புகளின் சமீபத்தை அடிக்கடி கண்டு மீள்வதாக.
ராசா உஷாரானார்.

மேலும் நாள்கள் வெப்பத்தின் வெகிர்ப் பருக்களைத் தாங்கமுடியாது வாரங்களாயும் மாதங்களாயும் கழிந்து ஓடின.

ஒருநாள் ராசாவின் மாளிகை முன் மக்கள் குறையிரக்க வந்ததாக மாளிகை ஆள் வந்து சொன்னான்.
ராசா, “குறையென்னவாம்?” என்றார்.

“ராசா கருணைகூர்ந்து தங்கள் உயிரைக் காத்தருளவேண்டுமாம்” என்றான் செய்தி கொண்டுவந்தவன்.

“எவ்வகையில் அவர்களது உயிர்ப் பாதுகாப்புக்கு அச்சம் வந்ததாம்?”

“ஆனையொன்று மதமெடுத்து குடிசைகளைப் பிய்த்தெறிந்தும், வீடுகளை இடித்துத் தள்ளியும், அகப்பட்டவர்களை காலின் கீழ் போட்டு நசித்துக் கொன்றும் அட்டகாசம் பண்ணுகிறதாம். நேற்றுவரை குடிமக்களில் மூன்று பேரை அது அவ்வாறு கொன்றுவிட்டிருக்கிறது.”

“அது அதிகம்தான்.”

“கொம்பனிருக்கும்வரை தங்களுயிருக்கு பாதுகாப்பில்லை என்கிறார்கள், ராசாவே.”

“கொம்பனா? கொம்பன் ஆனையென்று தெளிவாய்ச் சொன்னார்களா?”

“தெளிவாய்ச் சொன்னார்கள், ராசா. அது அண்மைய வனப் பகுதியில்தான் எங்கோ அலைந்துகொண்டும் இருக்கிறதாம்.”

“கவலை வேண்டாமென்று போய் அவர்களுக்குச் சொல்லு. அவர்களது ராசா துவக்கும் கையுமாக அதையே தேடி அலைந்துகொண்டிருப்பதாகவும், ஆனையைக் கொன்று விரைவில் அவர் மாளிகை வருவாரென்றும் சொல்லு. அதை சிவிகையூரும் ராசாத்தியின் காதுகளில் விழுகிறமாதிரியும் பலமாய்ச் சொல்லு.” தகவல் கொண்டோடியை விரைவில் செல்லென போகவிட்டார் ராசா.

மேலும் இரண்டு தினங்களை காலம் உதிர்த்தது.

ஒருநாள் மதியத்தில் நொற… நொறவென்ற சத்தம் அவர்களிருந்த வனத்தின் அருகாய்க் கேட்டது. ராசா துவக்கை எடுத்தார். பரிவாரத்தினர் ஈட்டிகளை எடுத்தனர். வீரம் பொங்கி வெளியிட்ட சினம் வழிய ராசா சத்தம்கேட்ட திசையில் வேகமாக நடக்கத் துவங்கினார். புதர்களை விலக்கி, மரங்களினூடாக பரிவாரத்துடன் நடந்தார்.

நீர் வெறித்த குளமொன்றில் தாமரைகள் காய்ந்து கிடந்தன. ராசா குளக்கரை வழி நடந்து மறுபுறம் சென்றார். புதர்களை விலக்கி மேலே முன்னேறினார்.

திடீரென மரங்களைக் கடந்துவந்த வெய்யிலின் கிரணங்கள் மறைந்தன

ராசா வியப்புடன் தலையை நிமிர்த்தினார். கருமலை கண்டார். அப்படியொரு மலையை தன் ராஜதானியில் எங்குமே கண்டிருக்கவில்லையே என எண்ணினார் ராசா. அவருக்கு அது அதிசயமாக இருந்தது. அவர் மேலும் அக்கருமலையை அணுகினார்.

கருமலை திடீரென அசைந்தது.

மனித வாடையில் அதன் மூர்க்கம் தெறித்தது.

ராசா, “ஐயோ…!” என்றலறினார். ஆனையைவிட வேகமாகத் திரும்பினார். துவக்கையும் பயத்தில் நழுவவிட்டவராய் ராசா ஓடத் துவங்கினார்.

ஈட்டிகள் கைவிட்ட பரிவாரம் பின்னால் ஓடியது.

ஆனை வெறிபிடித்திருந்தது. மூர்க்கம் கொண்டிருந்தது. அழிப்பைத் தவிர வேறு எதைக் காணவும் விரும்பாதிருந்தது. அழிவு… அழிவு… அதுவே அதன் ஒற்றைக் குறியாய் இருந்தது.

அது ராசாவையும் பரிவாரத்தையும் தன் தும்பிக்கையால் பற்றி மேலே எறிந்து, மறுபடி பிடித்து நசித்து… பிராணன் துளி துளியாய்க் கழருவதைக் காணும் மூர்க்கம் கொண்டிருந்தது. செடிகள், புதர்கள், மரக் கிளைகள் துவம்சமாகின.
ராசா வேண்டாத தெய்வமில்லை.

எப்படியோ ராசா தப்பி மாளிகை வந்து சேர்ந்தார்.

அவருடைய ஏவலாள்கள் மாளிகையைச் சுற்றிக் குவித்திருந்த வைக்கோல், சணல், ஓலைகளுக்கு  தீயை மூட்டினார்கள்.
வாயு வேகத்தில் வந்த ஆனை தீயைக் கண்டு தயங்கியது. தான் தோற்கடிக்கப்பட்டுவிட்டதை உணர்ந்தது. தோல்வியும் ஒரு வெறியாக, அது திரும்பி குடிமனைப் பக்கமாய் ஓடியது. அகப்பட்டதெல்லாம் அதன் கால்களின் கீழ் பொடிப்பொடியாயின. ஓடமுடியாத இருவரை தூக்கி நிலத்திலறைந்தே அது கொன்றது.

அத்துடன் அதனாலான மரணத்தின் தொகை ஐந்து ஆனது.

ராசா பாதுகாப்பாக மாளிகையுள் இருந்தார்.

ராசாத்தி அந்த வேர்த்து விறுவிறுத்து இன்னும் நடுக்கம் முற்றாய்த் தணியாதிருந்த ராசாவை அவர் விரும்பிய இடத்தில் புட்டத்தைக் குத்த அனுமதித்து பேசாமலிருந்தாள்.

மறுநாள் ராசா அவ்வாறு பாதுகாப்பிலிருந்போது குடிமனைக்குள் புகுந்த  ஆனை மேலும் ஒரு சிறுவனையும், ஒரு பெண்ணையும் கால்களில் இடறிக் கொன்றது. அப்போது ஆனையால் விளைந்த மரணத்தின் தொகை ஏழாக ஆனது.
தோட்டங்கள் அழிந்தன.

சொத்துக்கள் சிதைந்தன.

கொம்பனுக்கு அஞ்சி குடிசனம் புலம் நீங்க ஆரம்பித்தது.

ஒருநாள் குடியிருப்பின் தொங்கலில் வேலையாயிருந்த வேலப்பன் கூச்சலிட்டான், “அரியாத்தை… ஓடியிடு… அந்தப் பக்கமாயே ஓடியிடு. கொம்பன் வருகுது. அரியாத்தை… ஓடியிடு” என.

அரியாத்தை துண்ணென குடிசையிலிருந்து வெளிக்கிட்டாள்.

அக்கம்பக்கத்துச் சனமெல்லாம் உடுத்த துணிகளோடு பிள்ளைகளை இழுத்தபடி ஓடிக்கொண்டிருந்தது.

அரியாத்தையைக் கண்டவர்களெல்லாம் கத்தினார்கள். “அரியாத்தை ஆனை வருகுது… ஓடிவா.”

‘ஆனை வருகுதா? அதுகின்ர இடம் இதுவில்லையே. அதுதான் தன்ர இடத்துக்குப் போகோணும். அதை விட்டிட்டு என்னை ஓடச் சொல்லுகினம்.’

அவளால் ஓடிவிட முடியாது. அவள் திறமையான ஒரு பணிக்கத் தந்தைக்குப் பிறந்தவள். திறமையான ஒரு பணிக்கக் குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டவள். ஆனைக்கு வசப்பட்டு வாழவல்ல, வசப்படுத்தி வாழப் பழகினவள். அவளுக்கு ஆனையோடு அவசியம் வருமெனில் யுத்தம் புரியவும் திடமிருந்தது. அவள் ஓடிவிட மாட்டாள்.

ஆனைக்கு பொறி வைக்க நேரமிருக்காது.

காலில் தடம் விழுத்த பிரப்பங்கொடி போடலாம். வெறி பிடித்த ஆனை அதையும் பிய்த்தெறிந்து கடக்கும். என்றாலும் அதை ஒரு முதல் தடையாக எழுப்ப முடியும்.

பிரப்பங்கொடிகளை தடம் விழும்படி சுருட்டி பாதைமேல் பொறுக்க நிற்கும்படி மரங்களில் வளைத்துக் கட்டினாள்.

பின் குடிசைக்குள் போய் வேல்கம்பை எடுத்துவந்தாள்.

சனம் வெறித்துப் போன குடியிருப்பில் நின்று, ஆனை வரும் திசைநோக்கி ஆங்காரமாய் நின்றிருந்தாள் அரியாத்தை.
எப்பிடி?

இந்தமாதிரி தாக்குநிலையெடுத்து… ஒரு காலை முன்னயும், மற்றக் காலை பின்னயுமாய் வைச்சு…
முள்ளிக் கிழவி அரியாத்தையின் அவதாரமாய் எழுந்துநின்று தன்னை காட்சிப் படுத்தினாள்.

கேட்டவர் அதிசயித்தனர். கண்டவர் வாய் பிளந்தனர். வீரம் மெதுவாக தங்கள் நரம்புகளுக்குள் ஊறுவதை அவர்கள் உணர்ந்தனர்.
அரியாத்தையின் கோலத்தைக் காட்டிவிட்டு கிழவி மறுபடி அமர்ந்தாள். முன்னால் அசைவறுத்திருந்த சிறுவனைநோக்கிக் குனிந்தாள். பின் தாயார் பக்கம் திரும்பினாள். “ஏன் பிள்ளை, பொடியன் தூக்கடியில இருக்கோ?”
“இல்லை, ஆச்சி. கேட்டுக்கொண்டுதான் இருக்கிறான்.”

“பாத்துக்கொண்டும் இருக்கவேணும். ம்! மோன்ர பேரென்ன?”

“துஷியந்தன்.”

கிழவி பையனைப் பார்த்தாள். “துஷியந்தா, முள்ளியாச்சி நிண்ட விதம் கண்டியெல்லோ? அப்பிடித்தான் அண்டைக்கு அரியாத்தை நிண்டாள்.

“கையில வேல்கம்போட நிண்டாள்.”

அப்ப ஆனை அசைஞ்சு அசைஞ்சு… அக்கம்பக்க மரக் கிளையளை வெறித்தனமாய் முறிச்செறிஞ்சுகொண்டு வருகுது.
அசைஞ்சு… அசைஞ்சு… வானத்தில மேகத் துண்டு அசைஞ்சு போகுமே அந்தமாதிரி வருகுது.

அரியாத்தைக்கு ஆனைக்கு அப்பாலிருந்த காட்சி மறைந்தது.

கண்ணிலே கருமையின் உருவம்மட்டும்.

பிரப்பங்கொடியில் கால்கள் சிக்குப்பட ஆனை கோபத்தில் உறுமியது. உதறி நடக்க முனைந்தது. அப்போது மேலும் தடங்கள் விழுந்தன. அடம்பன் கொடியென்றால் அறுத்தெறிந்துவிட்டு போகும். அது பிரப்பங்கொடி. தன்னை அது அந்தச் சிக்கலிலிருந்து மெதுமெதுவாய் விடுவிக்க வேண்டும்.

ஆனை ஆக்ரோஷம் பெற்றது.

தும்பிக்கையை உயரத் தூக்கி பூப்பாகம் கிடுகிடுக்க பிளிற்று.

தூர தூரமாய் ஒலித்த அந்தப் பேரொலியில் வனப் பறவைகளெல்லாம் வெருண்டடித்து பறப்பெடுத்தன.
அரியாத்தை வேல்கம்பை ஓங்கினாள்.

ஆனை அப்போது தன் பார்வையில் மனிதவுரு எதனையும் கண்டிருக்கவில்லை.

வெறுவனத்தில் விளைகிற தீங்கா இது?

அது பிரப்பங்கொடிகளை உதறி எறிந்தது. துதிக்கையைத் தாழ விட்டு அகப்பட்ட கொடிகளை வலித்தெறிந்தது.
அதற்கு மதம் சிந்தத் தொடங்கியது. ஊர் அளாவி அதன் நாற்றம் பரவியது. தன் சினக் கண்களால் விழித்து நோக்கியபடி ஆனை திரும்பியது.

அரியாத்தை அதன் படபடவென வீசிக்கொண்டிருந்த அதன் சுளகுக் காதினைப் பார்த்தாள். இன்னும் அரை முழம் வேல்கம்பு பின் நகர்ந்தது. இன்னும் இன்னும் பின்னோக்கியாய் அதன் ஆகக்கூடிய எல்லையில் ஆடாது அசையாது அது தரித்து நின்றது.
கூழும், தினையும், குரக்கனும், மரவெள்ளிக் கிழங்கும் செறித்திருந்த உடம்பின் வலிமை அவளது கைகளுக்கு, தோளுக்கு திரண்டெழுந்தது.

அவள் பார்வையை இடுக்கினாள். கருமேகம் மறைந்தது. ஆனை மறைந்தது. படீர் படீரென அடிக்கும் சுளகுக் காதும் மறைய, அதன் பின்னாலுள்ள துவாரம் மட்டும் ஒரு  புள்ளியாய் குவிந்தது.

அதுதான் அந்தக் கணம். சற்றே ஆனை திரும்பினாலும் இனி குறி தவறும்.

இதயத்தின் மறைவிடத்துள் ஆபத்துக் கணங்களுக்காக திரள் கொண்டிருந்த வலிமை சட்டென கையும் தோளும் சுரந்தேறியது.
அவள் வேல்கம்பைப் பாய்ச்சினாள்.

சாதாரண குடிகளின் சாதாரண வேல்கம்பு ஒன்றுக்கு அன்று அசாதாரண சக்தி கிடைத்திருந்தது. அது அதன் பெறுபேற்றுக் கணமும். காணமுடியா ஆழத்துள் அது யானையின் காதினுள் நுழைந்து நிலைத்தது.

என்ன அது?

ஆனை ஒரு கணம் திகைத்தது.

மறுகணம் உறுமிற்று, பிளிறிற்று, அலறிற்று, கத்திற்று. பெரு ஓலமெடுத்தது.

தன் உயிர்நிலைக் கவசம் உடைந்துவிட்டதை ஆனை உணர்ந்தது.

மேலே அதன் உயிர்ப்பற்றும் சேர்ந்த வெறி எகிறிப் பாய ஆனை கண்மண் தெரியாமல் ஓடிற்று. பெரு மரங்களில் மோதிற்று. பார்வை மறைந்துவரும் மயக்க நிலையில் ஓடவும் தளர்வடைந்தது. பின் மெதுமெதுவாய் நிலத்தில் சரிந்தது.

அது தொம்மென விழுந்த சத்தத்தில் மறைவிடங்களிலிருந்து சிலர் வெளிப்பட்டனர். மர உச்சிகளில் பதுங்கியிருந்தோர் மெல்ல கீழிறங்கினர்.

அரியாத்தை கொம்பனை வீழ்த்திய செய்தி காட்டுத்தீபோல் குறுநிலம் முழுக்க பரவிற்று.

மாளிகையைச் சற்றி தீயெழுப்ப மறைந்திருந்தோர் செவிகளுக்கும் அது எட்டியது. அவர்கள் வெளியே வந்தார்கள். தம் அவதி அடங்கினார்கள். ஒரு மரணத்தின் எதிர்கொள்ளுகையின் அச்சம், அறுதியாக அவர்களிலிருந்து அகன்றிருந்தது அச் செய்தியால்.
உள் நுழைந்த செய்தியில் மாளிகையும் நிம்மதியடைந்தது.

அப்போதுதான் மாளிகைக்குள் அமைதியான, இனிமையான, சுகந்தமான காற்று பிரவேசித்தது.
ராசா வெளியே வந்தார்.

குடிமக்களின் ஆரவாரத்தைக் கேட்டார்.

குடிமக்களை மட்டுமல்ல, குடிமக்களின் ராசாவையும் அரியாத்தை காத்துவிட்டாள்.

“அழைத்து வா, உடனடியாக.”

“ஆரை ராசாவே?”

“அந்த வேழம்படுத்த அரியாத்தையை. சிவிகை கொண்டுபோ. ராசாத்திபோல் அழைத்துவா.”

குடியானவளான அரியாத்தை, ராசாத்தி ஊரும் சிவிகையிலேறி மாளிகை வந்து சேர்ந்தாள். அடக்கமாய் ராசாவின் முன் நின்றாள்.

ராசா சீன வெண்பட்டொன்று எடுத்துவந்து அவளைப் போர்த்தினார். ஒரு பணிக்கன் மகள்… ஒரு பணிக்கனின் மனைவி… ராசாவால் கௌரவம் பெறுகிறாள். அரியாத்தையின் மேனி புளகித்து, நெஞ்சு விம்மியெழுந்தது.

ராசா சிங்காசனத்துக்கு நிகராசனத்தில் அவளை அமரச் செய்தார். அவளின் வீரத்தைப் போற்றுவதாய் முடியற்ற தன் தலை வணங்கினார். வன்னிக் குறுநிலங்களில் தங்கள் குறிச்சி அவளால் பெரும்பேர் கொண்டதெனச் சொல்லி உவகைகொண்டார். வீரத்தின் சின்னமான அவள் தன் மாளிகையில் எந்த நேரமும் தடையற்ற பிரவேசம் புரிய அனுமதியளித்தார்.
பிறகு ஏவலாள் ஒருவனை அழைத்து, “கொண்டு வா, அந்தக் கொம்பனின் தந்தங்களை என் ராசாத்திக்கு” எனக் கட்டளையிட்டார்.

எல்லாம் கண்டிருந்த ராசாத்தியின் நெஞ்சு பதறியது.

உட்தலம் உடைந்து பதவி, பட்டம், செல்வமெல்லாம் தன் குடியானவள் முன் சிதறிக் கிடப்பதை அவள் கண்டாள். அவளது வீரத்தில் எடுத்த முத்துக்களையா ராசாத்தி அணிய நேரப்போகிறது?

அவள் தனிமையிலிருந்து அரியாத்தையை ஒழிக்க சூழ்வினை தயாரித்தாள்.

அழகிய போர்வையொன்றெடுத்து அதில் விஷப் பொடியைத் தூவினாள். தன் குறுநிலவரசு காத்த குடியானவளுக்கான தன் பரிசென ராசாத்தி அவளுக்கதை போர்த்தினாள். தன் வீரத்தின் பரிசை மென்முறுவல் காட்டி தோளில் தாங்கினாள் அரியாத்தை.
அவ்வழகிய போர்வையை கொண்டுசென்ற அரியாத்தை பன்னப்பாயில் படுத்து அதை ஆசையாக எடுத்து தன்னை மூடினாள்.
மூச்சு திணறியதுபோலிருந்தது.

புதுப்போர்வையின் குணமதுவோவென ஆச்சரியித்து அடங்கினாள் அரியாத்தை. ஆனாலும் தினமும் அதையே எடுத்துப் போர்த்தினாள். எழுந்ததும் அதை கவனமாய் எடுத்து அழகாக மடித்து வைத்தாள்.

வேலப்பன் பெருமிதம் சொல்லுமாறில்லை. அவன் கண்பட்டவர் எவரிடமும் தன் மனைவியின் வீரத்தை எடுத்துரைத்துக்கொண்டு திரிந்தான்.

ஒருநாள் அரியாத்தை போர்த்திப் படுத்த போர்வை இருந்தது. அவளின் வேழம்படுத்த அரியாத்தையென்ற புகழிருந்தது. அரியாத்தை மட்டும் உடலைவிட்டு எங்கோ கழன்று போயிருந்தாள்.

இண்டைக்கு நான் சொன்னது அரியாத்தையின்ர கதைதான். ஆனாலும் நானறிஞ்ச அரியாத்தையின் கதை இது. அரியாத்தையை அவளது கணவன் வேலப்பனே சாக்கொண்டதாயும் ஒரு கதை இருக்கு. அது பேரோட, காலத்தோட பொருந்திப் போகேல்லை. அது என்ர கவனத்தை உசுப்பினதுமில்லை.

அரியாத்தையின்ர வமிசத்தாக்கள் இண்டைக்கும் இந்த வன்னியில இருக்கினம். அவைக்கு அரியாத்தையின்ர ஞாபகமாய் ஆத்தை எண்டு முடியிற பேரிருக்கும். நானறிஞ்ச ஒரு ஆத்தை சிவாத்தையாக, ஒரு ஆத்தை யோகாத்தையாக இருக்கினம். இவையள் அந்த வமிசத்தைச் சேர்ந்தாக்களாயிருக்க ஏலும்.

உங்களுக்குள்ள நீங்களே கேக்கவேண்டிய கேள்வியாய் இது இருக்கு. நீங்களும் ஒரு ஆத்தையா?

“அம்மா… சொல்லம்மா… நானும் ஒரு நாகாத்தைதானெண்டு சொல்லம்மா” என கலாவதி தாயை இடித்துச் சொன்னாள்.
“இருக்கட்டும். இது சொல்லி தெரியவைச்சு ஒண்டும் ஆகப்போறேல்ல. எங்கட மனசுக்குத் தெரிஞ்சிருந்தாப் போதும்தான?” நாகாத்தை திண்ணமாய்ச் சொன்னாள்.

விடியல் கீழை வானத்தின் இருளை முட்டிக்கொண்டிருந்தது.

சபை அங்கேயே சரிந்து படுத்தது. சிலர் காலைக் கடன் கழிக்க எழுந்து சென்றார்கள். அவர்களுக்கு பயணங்கள் இருந்தன.
காலையில் கோயில் பூசை முடிய அவர்கள் தொடங்குவார்கள் தனித்தனியான தம் பயணத்தை.

சந்திரிகா வந்தாள். “பாட்டி, நான் போகோணும். இப்ப இஞ்ச மாங்குளம் முகாமிலதான் இருக்கிறன். அப்பப்ப வந்து பாக்கிறன்.”
“விடியிறமட்டுமாச்சும் என்னோட நிண்டு போவன்.”

“எனக்கும் ஆசைதான். எண்டாலும் இஞ்ச ஒரு போராளியை விடிஞ்சோடன அன்ராசபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகோணும். காலைக் கழட்டவேண்டி வருமெண்டு சொல்லுகினம். நான் கூட நிக்கவேணும். நாங்கள் ஒண்டாய் நிண்டு செய்த சமரிலதான் அவவுக்கு அப்பிடி வந்தது.”

“ம். அம்மா அப்பாவெல்லாம் எப்பிடி இருக்கினம்?”

“நல்லாயிருக்கினம், பாட்டி. ஒருநாளைக்கு வந்து கூட்டிக்கொண்டு போறன் அங்க.” சொல்லிக்கொண்டு போய் தன் சைக்கிளை எடுத்தாள் சந்திரிகா. கூட வந்திருந்த போராளியும் போய் சைக்கிளை எடுத்தாள்.

ஆம், காலமென்னவோ யுத்த நிறுத்த காலம்தான். அந்தக் காலமும் அதற்கான அவதியைக் கொண்டிருக்கிறதென எண்ணினாள் முள்ளிக் கிழவி.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R