-முனைவர் ஈஸ்வரன், பா., உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், (நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம், விருதுநகர் மாவட்டம் –தமிழ் இலக்கிய உலகில் வருணனையானது முக்கிய இடத்தைப் பெறுகின்றது. இவ்வருணனையானது ஒரு இலக்கியம் வளர்ச்சியடைவதற்கும் அது சிறப்படைவதற்கும் உறுதுணையாக அமைகின்றது. இலக்கியத்தில் வருணனை அமையவில்லையென்றால் அவ்விலக்கியம் சுவையுடையதாக அமையாது. படிக்கும் வாசகர் மனதில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டுவிடும். ஆசிரியர், மாணவர்களுக்கு அல்லது வாசகர்களுக்கு மற்றும் அறிவுத்தளத்தில் உள்ளவர்களுக்குத் தான் கூறநினைக்கும் கருத்தினை வருணனையைப் பயன்படுத்தி எடுத்துரைத்தால் வாசகர்கள் மனதில் எளிமையாகப் பதிந்துவிடும். இவ்வாறு, வருணனையைப் பயன்படுத்தி கருத்தினை எடுத்துரைக்கின்றபோது, மரபு மாறாமல் எடுத்துரைக்கவேண்டும். மரபானது இலக்கியத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் முக்கியமானதாகும். மரபுயில்லையேல் மனிதன் இல்லை. மனிதன் இல்லையேல் இலக்கியம் இல்லை. ஆகையால், இவ்வாறு முக்கிய இடத்​தை வகிக்கின்ற வருணனை மற்றும் மரபு பற்றிய விரிவான விளக்கங்கள் குறித்து இக்கட்டுரை ஆராய்வதாக அமைகின்றது.

வருண​னை - அகராதி தரும் விளக்கம்

‘வர்ண​னை’ என்பதற்கு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) ​‘நேரில் பார்ப்பது ​போன்ற உணர்​வை ஏற்படுத்தும் ​பேச்சு அல்லது எழுத்து; description; Commentary’1 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வருணனை

வருண​னை மனிதர்க​ளை​யோ அல்லது மிருகங்க​ளை​யோ அல்லது இயற்​கை மற்றும் ​செயற்​கைப் ​பொருட்க​ளை​யோ விரிவாக நீட்டி அழகுணர்வுடன் அழகுபடுத்தி விவரிப்பத​னை மட்டும் ​தன்னகத்துள் கொண்டதல்ல. வருண​னை என்பது அழகுபடக் கூறுவதுதான் என்று அனைவரும் நி​னைத்துக்​ கொண்டிருக்கின்​றனர். ஆனால், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் பெயர்களுக்குப் ​பெயர​டையாகவும், இவ்வுலகிலுள்ள உயிர்கள் ​செய்கின்ற வினைகளுக்கு வினையடையாகவும் வருண​னை இடம்​பெறுவதுண்டு. ​மேலும், இயற்​கை மற்றும் செயற்​கைப்​ பொருட்களுக்கு முன்ன​டையாகவோ அல்லது பின்னடையாகவோ இடம்​பெறுவதும் வருண​னையாகும்.

வர்ண​னை அ​மைய​வேண்டிய விதம்

வருண​னை அமைய​வேண்டிய விதம் குறித்து எஸ்.​வையாபுரிப்பிள்​ளை இலக்கியச்சிந்த​னைகள் நூற்களஞ்சியம்: ​தொகுதி-1 இல் குறிப்பிடு​கையில், “யாதேனும் ஒரு ​பொரு​ளை, அதன் பலதிறப்பட்ட இயல்புகளையும் அறிவு எளிதிற்பற்றுமாறு, அழகும் சு​வையும்பட விவரித்துக் கூறுவதுதான் வர்ண​னை, வர்ணம் என்றால் நிறம் அல்லவா? இதிலிருந்து விவரிக்கப்படும் ​பொருள் அழகுற்றுச் ​சோபிக்கும்படி வர்ண​னை அ​மைதல்​வேண்டும்”2 என்கிறார்.

வருண​னையின் இன்றிய​மையா​மை

இலக்கியத்தில் வருண​னையானது முக்கிய உறுப்பாகச் செயல்படுகின்றது. இவ்வருண​னையின் முக்கியத்துவத்தி​​னை விளக்கு​கையில், “வருண​னைகள் இலக்கியங்களுக்குச் சிறப்புச் ​செய்கின்றன. அந்த வகையில் இலக்கியத்தின் சுவைக்கு ஊன்று​கோலாக அமைவது வருண​னை​யாகும். வருணனை இல்லாத இலக்கியமானது சுவையற்ற உணவி​னைப் ​போன்றதாகும்”.3 என்று வருணனையின் இன்றிய​மையா​மை குறித்து க.சிதம்பரம் எடுத்து​ரைத்துள்ளார்.

வருண​னை உத்தி

வருண​னை உத்தி குறித்து​ செ.​வை. சண்முகம் தமது எழுத்திலக்கணக்​கோட்பாட்டில், “​மொழி அ​மைப்பில் ​​வேறுபாட்​டை விளக்குவதற்காக ஒருவிதப் பாகுபாட்டை அ​மைத்து, அந்தப் பாகுபாட்​டை வருணிப்பதற்காக மற்​றொரு பாகுபாட்டைச் ​செய்தலே வருண​னை உத்தி என்று குறிப்பிடுகிறார்.”4 மேலும், வருண​னை உத்தி என்பது ஒன்​​றைச் சிறப்பித்துக் கூறுவதற்கும் இழிவுபடுத்தி இயம்புவதற்கும் பயன்படுத்தப்படுகிறது, இவ்வருண​னை உத்திக்குப் பொருத்தமாக உவ​மைகளும், உருவகங்களும் ​கையாளப்படுகின்றன.

கற்ப​னையின் பயன்பாடு

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?கற்ப​னையானது இலக்கியத்திற்கும் இலக்கியம் ப​டைக்கின்றவர்களும் உறுது​ணை புரிகின்றது. இக்கற்ப​னையின் பயன்பாட்டினைத் தமிழ் இலக்கியக் கொள்​கைகள் நூலானது, “புலவனுக்கு மிக இன்றிய​மையாது ​வேண்டப்படுவது கற்பனையாகும். ‘போலச் ​செய்த​லே’ ப​டைப்புக்கு அடிப்ப​டையாயினும் அது​​வெறும் ​போலியாக முடியாது ​பொலிவாக அ​மையுமாறு உதவுவது கற்பனையாகும். கற்பனையென்னும் ​சொல் சங்கப்பாடல்களுள் காணப்படவில்லை. ‘பு​னைவு’ என்ற ​சொல் ​பெரும்பான்​மையும் இப்பொருளில் வழங்கப்பட்டுள்ளது. (பரி.6, புறம்.12, அகம்.98, பதிற்.62, பத்துப்.6:485, 7:147) ‘நாவிற் பு​னைந்த நன்கவி​தை’ என்னும் பரிபாடல் ​தொடர், கவி​தை/நல்ல கவி​தை அமையும் மு​றைக்குப் பு​னை/கற்ப​னை பயன்படுவதைக் குறிப்பிடுகிறது.”5

கற்ப​னையும் வருண​னையும்

இறந்த காலத்தில் அல்லது நிகழ்காலத்தில் முழுவதும் நடந்திராத நிகழ்வுகளைச் சாதாரண மனிதன் அல்லது ​சொல்லாற்றல் மிக்க கவிஞன் தன் மனத்தில் தோன்றிய என்னத்​தை அல்லது கருத்​தைக் கூறுவது கற்ப​னை எனலாம். இக்கற்பனையானது ஒருவேளை எதிர்காலத்தில் நடக்கக்கூடிய நிகழ்வாகக்கூட அமையலாம். கற்பனையானது பலநேரங்களில் உண்மை நிகழ்வு நிகழவும் அறிவியல் கண்டுபிடிப்பிற்கு அடித்தளமாகவும் அமைந்துவிடுகின்றது என்பத​னை பாரதியாரின் பாடலால் உணர்ந்து​​கொள்ளலாம். இதனை,

“காசி நகர்ப்புலவர் பேசுமுரைதான்
காஞ்சியிற் கேட்பதற்கோர் கருவி செய்வோம்”
6 (பாரதியார் பாடல்)

எனும் பாடல் அடிகள் எடுத்தியம்புகின்றன, பாரதியார், கவிதையைக் கற்பனை கலந்த மோனை நயத்தோடு இயற்றியிருந்தாலும், அன்றைய கற்பனையானது இன்றையத் தகவல்தொடர்புக் கருவிகள் கண்டுபிடிப்பிற்கு மூலதனமாக அமைந்துவிட்டது என்றே கூறலாம். சான்றாகக் கூறினால், தொலைபேசியின் கண்டுபிடிப்பால் நாம் காசியில் இருந்து பேசினால் காஞ்சியில் இருப்பவர் நம் பேச்சைக் கேட்க முடியும். இன்று கைபேசிக் கண்டுபிடிப்பால் காசியில் இருந்து பேசினாலும் கடலுக்குள்ளிருந்து பேசினாலும் உலகில் எந்த மூலையிலிருந்தாலும் கேட்கின்ற அளவிற்கு அறிவியல் கண்டுபிடிப்பு வளர்ந்துவிட்டது. இ​தைப்​போன்று பல கண்டுபிடிப்புகள் வந்து​​கொண்​டேயிருக்கின்றன. இத​னை​யே பாரதியார் அன்றே தம் கவி​தையில் பாடியுள்ளார் என்பது புலனாகிறது.

வருண​னையானது நிகழ்ந்த நிகழ்வுக​ளை​யோ அல்லது நிகழ்கின்ற நிகழ்வுகளையோ அல்லது நிகழக்கூடிய நிகழ்வுக​ளை​யோ சிறப்பிக்கும் ​பொருட்டுச் சற்றுக் கற்ப​னை கலந்து உயர்வாகக் கூறுவதாகும். இவ்வருண​​னை நிகழ்ச்சி​யை மட்டும் உயர்த்திக் கூறக்கூடியது மட்டுமல்ல. உயர்தி​​ணைக​ளையும் அஃறிணை களையும் நடந்த, நடக்கின்ற, நடக்கவிருக்கின்ற உண்​மைக​ளை மரபுக​ளோடும் மரபுக​ளை ஒட்டியும் ​ சற்றுக் கற்ப​னை கலந்து அழகுணர்​வோடு வெளிப்படுத்துவதாக அ​மையக்கூடியதாகும். ஆகையால், கற்ப​னைக்கும் வருணனைக்கும் உள்ள சிறிய ​வேறுபாடுக​ளை நன்கு அறியலாம்.

செய்யுள் வடிவமும் வருணனையும்

தமிழ்​ இலக்கியங்களில் செய்யுள் கட்ட​மைப்பிற்கு உதவுகின்ற வடிவத்தினைத் தொல்காப்பியர் செய்யுளியலில் முதல் நூற்பாவிலேயே குறிப்பிடுகின்றார். இதனை,

“மாத்தி​ரை ​யெழுத்தியல் அ​சைவ​கை எனாஅ,
யாத்த சீ​ரே அடியாப் ​பெனாஅ,
மர​பே தூக்​கே ​தொ​டைவ​கை எனாஅ,
​​நோக்​கே பா​வே அளவியல் எனாஅத்
தி​ணை​யே ​கை​கோள் ​பொருள்வ​கை எனாஅக்
​கேட்​போர் கள​னே காலவ​கை எனாஅப்
பய​னே ​மெய்ப்பா ​எச்சவ​கை எனாஅ,
முன்னம் ​பொரு​ளே து​றை வ​கை எனாஅ
மாட்​டே வண்ண​மொடு யாப்பியல் ​வ​கையின்
ஆறுத​லையிட்ட அந்நால் ​ஐந்தும்
அம்​மை அழகு ​தொன்​மை ​தோ​லே
விருந்​தே இ​யை​பே புல​னே இ​ழை​பு எனாஅப்
​பொருந்தக் கூறிய எட்​டொடும் ​தொ​கைஇ
நல்லி​சைப் புலவர் ​செய்யுள் உறுப்​பென
வல்லிதிற் கூறி வகுத்து​ரைத் தன​​ரே”7

என்னும் நூற்பாவில் விளக்குகின்றார். செய்யுள் உறுப்பானது 6+ 20+ 8 = 34 உறுப்புக்கள் என்பது இதனால் தெளிவுபடுத்தப்படுகின்றது. செய்யுள் வடிவமானது வருண​னை​யைக் கட்டுப்படுத்தும் ஒரு கருவியாகத் திகழ்கின்றது எனலாம். அந்த அளவிற்குச் செய்யுள் வடிவமானது வருணனையில் முக்கியப் பங்கினை வகிக்கின்றது. சங்கத்தொகை நூற்களில் இடம்பெறுகின்ற செய்யுட்களில் அடியளவு குறைந்து வருகின்றபோது வருணனைக் கூறுகளின் எண்ணிக்​கைக் குறைந்தும் அடியளவு நீண்டு இடம்பெறும்போது வருண​னைக் கூறுகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இடம்பெறும். இந்தநிலையைச் சங்க எட்டுத்தொகை நூற்களிலேயே குறைந்த அடியளவைக்கொண்டு ஏறுவரிசையில் தொடங்குகின்ற ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை ஆகிய ஐந்து அகநூற்களில் இடம்பெறுகின்ற வருணனைகளையும், நீண்ட அடிகளால் அமையப்பெற்ற பத்துப்பாட்டிலுள்ள அகநூற்களில் இடம்​பெறுகின்ற வருணனைகளையும் ஒப்பிடும்​போது தெளிவாக அறியமுடியும்.

வருணனைக் குறைவிற்கான காரணம்

பெருங்காப்பியத்தில் அமைகின்ற மிகநீண்ட வருணனைகள் போன்று அதன்பிறகு வந்த இலக்கியங்களில் பெரும்பாலும் நீண்ட வருணனைகள் இடம்பெறாமல் போனதற்குக் காரணம் மனிதனின் சமூகச் சூழ்நிலையும், மனிதன் அடைந்த மாற்றங்களுமேயாகும். இக்கருத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக ‘இலக்கிய மரபு’ என்னும் நூலில், “சென்ற நூற்றாண்டு வ​ரையில் க​தைகளில் வாழ்க்கை முறைகள், உ​டை வகைகள், பழக்கவழக்கங்கள் முதலியவற்​றை விரிவாக வருணிக்கும் வழக்கம் இருந்தது. பக்கம் பக்கமாக இவற்​றை வருணித்தல், கதையாசிரியர்களின் திறமையைக் காட்டுவதாகவும் இருந்தது. ஆயின், இப்​போது உலகம் ஒரு குடும்பம்​ போல் நெருங்கிவரும் ​போக்கு மிகுந்துவருகிறது. போக்குவரத்தால் பயணங்கள் பெருகுதல், கல்வியால் மனப்பான்​மை ஒன்றுபடல், சமுதாய உறவால் பழக்கவழக்கங்கள் ஒ​ரே வ​கையாதல், நாகரிகக் கலப்பால் உ​டை முதலியன ஒத்துவருதல் ஆகியவற்றால், வாழ்க்​கையில் உள்ள வேறுபாடுகள் குறைந்து வருகின்றன. ஆக​வே, உ​டை முதலியவற்​றையும் பழக்கவழக்கங்க​ளையும் எல்லோரும் அறிந்திருப்பதால், அவற்​றைப் பற்றிய வருண​னை வீணானதாக உள்ளது. ஆதலின், இக்காலத்துக் க​தைகளில் அவற்​றை வருணித்தல் குறைந்துவிட்டது எனலாம்.”8 என்று மு.வரதராசன் குறிப்பிடுகின்றார்.

மரபு

மரபிற்கான ​பொருத்தமான விளக்கத்தி​னைக் க. காந்தி அவர்கள், “மரபு என்பது எழுதப்படாத சட்டம். இத​னைச் சமூகம் உள ஒருமைப்பாட்டால் உருவாக்குகின்றது. இம்மரபுகள் சமுதாய நலன்கருதி ஏற்பட்டவை”9 என்றும், “மரபு என்பது வழக்கமாகத் தலைமு​றை த​லைமு​றையாகப் பின்பற்றப்படுவது எனப்​பொருள்படும்”72 என்றும் தமது தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்​கைகளும் எனும் நூலில் ​சுட்டியுள்ள​மை அறியத்தக்கது.

எது மரபு?

எது மரபு என்னும் கருத்தி​​னை அல்லது விளக்கத்தி​னை இலக்கணவியல் மீக்கோட்பாடும் ​கோட்பாடுகளும் என்னும் நூலில், “‘மரபு’ என்னும் ​சொல் எ​தையும் குறிக்கலாம். சுருக்கமாகக் கூறினால் இறந்த காலம் தற்காலப் பயன்பாட்டிற்கு வழங்கும் எதுவும் மர​பேயாகும். ​​கொஞ்சம் விரிவாகக் கூறினால், மரபு முந்​தைய தலைமு​றையினர் இன்​றைய த​லைமு​றையினருக்கு விட்டுச்​செல்லும் ஒரு கருத்தாகவோ ப​டைப்பாக​வோ நம்பிக்​கையாக​வோ இருக்கலாம். கருத்தானல், அது முந்​தைய த​லைமு​றையினரால் ஏற்றுக்​கொள்ளப்பட்டிருக்க ​வேண்டும். படைப்பானால், அது முந்​தைய த​லைமு​றையினரல​லே​யே ப​டைக்கப்பட்டிருக்க வேண்டும். நம்பிக்​கையானால், முந்​தைய த​லைமு​றையினரால் முழுவதுமாக நம்பப்பட்டிருக்க ​வேண்டும். ஒரு சமூகத்தின் நடைமு​றைகளால் உருவாகிக் கருத்தும் கற்ப​னையும் கலந்து கட்ட​மைக்கப்பட்டுப் பிற்காலத் த​லைமு​றையினர்க்கு வந்து ​​சேரும் எதுவும் மர​பே.”10 என்று சீனிவசன் குறிப்பிடுவதாக, சு.இராசாராம் எடுத்து​உரைக்கின்றார்.

மரபின் நி​லைக்களன்

மரபின் நி​லைக்களனானது எவ்விதத்தில் அ​மையப்​பெற்றிருக்கின்றது என்பதனை, “மரபுக்குள் பண்பாடும் அனுபவமும் இ​ழைந்திருக்க, மரபின் வழியான க​லை இலக்கியமும் அதன் பல கட்ட​மைப்புக​ளைக் ​கொண்டு விளங்குகின்றன என்று பா.செல்வகுமார் தமது தமிழ்ப்புதுக்கவி​தைகளில் பின்​னை நவீனத்துவக் கூறுகள் என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்”11 (பக்.70). ​மேலும், தாம் எடுத்தாண்ட மேற்கோளில், “மரபு, மரபுக்கவி​தை​யைப் பற்றி சிற்பி குறிப்பிடு​கையில், வழிவழியாக வந்த நீண்ட பாரம்பரியத்​தையும் அந்தப் பாரம்பரியம் ​சேமித்து வைத்த அனுபவங்களையும் அனுபவங்களின் ​வெளிப்பாட்டு ஊடகங்களான க​லை, இலக்கியம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் அத்த​னையும் ஒட்டு​மொத்தமாகக் குறிக்கும் அ​டையாளச் ​சொல் மரபு…கவி​தை​யைப் ​பொறுத்தமட்டில் யாப்பு, வரையறுக்கப்பட்ட வடிவம், தீர்மானிக்கப்பட்ட உள்ளடக்கம், புது​மைக​ளை ஏற்கமறுக்கும் ​போக்கு ஆகியவற்றுக்கு ஒரு குறியீடாக மரபு என்ற ​சொல் ​கையாளப்பட்டு வருகிறது”12 என்று குறிப்பிடுகின்றார்.

மரபின் இலக்கணம்

மரபு என்பது எந்தப் ​பொரு​ளை எந்தச் ​சொல்லால் எவ்வழியில் அறிவு​டை​யோர் ​சொன்னார்க​ளோ, அப்​பொரு​ளை அச்சொல்லால் அவ்வழியில் ​சொல்லுதல் ஆகும். இதனை,

“எப்​பொரு ​ளெச்​சொலி ​னெவ்வா றுயர்ந்​தோர்
​    செப்பின ரப்படிச் ​செப்புதன் மர​பே”13

​எனும் நூற்பாவின் மூலம் பவணந்தி முனிவர் எடுத்தியம்பியுள்ளார்.

தொல்காப்பியத்தில் மரபு

பறவை மற்றும் விளங்குகளின் இளமைப் பெயரைக் குறிப்பிடுவதற்கும் மரபு இருக்கின்றது என்பதனை,

“மாற்ற அரும் சிறப்பின் மரபுஇயல் கிளப்பின்
பார்ப்பும், பறழும், குட்டியும், குருளையும்
கன்றும், பிள்ளையும், மகவும், மறியும் என்று
ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே.”14(தொல்.மர.1.)

என்னும் நூற்பாவின் வாயிலாகத் தொல்காப்பியர் எடுத்துரைக்கின்றார். இம்மரபினைப் பின்பற்றியே சங்க இலக்கியப் பாடல்கள் அமைந்திருக்கின்றன எனலாம்.

தொல்காப்பியர் பறவை மற்றும் விளங்குகளின் ஆண்பால் பெயரைக் குறிப்பிடுவதற்கு மரபு இருக்கின்றது என்கிறார். இதனை,

“ஏறும், ஏற்றையும், ஒருத்தலும், களிறும்
சேவும், சேவலும், இரலையும், கலையும்
மோத்தையும், தகரும், உதளும், அப்பரும்,
போத்தும், கண்டியும், கடுவனும், பிறவும்
யாத்த ஆண்பால் பெயரென மொழிப.”15 (தொல்.மர.2.)

என்னும் நூற்பா எடுத்துரைக்கின்றது. இம்மரபினைப் பின்பற்றியே சங்க இலக்கியப் பாடல்கள் அமைந்திருக்கின்றன. ஆனால், ஆட்டின் ஆண்பால் ​பெயரை அப்பர் என்றும் ​மோத்​தை என்றும் வழங்கும் மரபு சங்கத்தொகை நூற்களில் இடம்பெறவில்லை என்று கு.மோகனராசு திருக்குறளில் மரபுகள் என்னும் நூலின் முகவுரையில் குறிப்பிட்டிருப்பதனால் தொல்காப்பியத்தின் தொன்மையை இதனால் உணரமுடிகின்றது.

பறவை மற்றும் விலங்குகளின் பெண்பால் பெயரைக் குறிப்பிடுவதற்கு மரபு இருக்கின்றது என்பதனைத் தொல்காப்பியர்,

“பேடையும், பெடையும், பெட்டையும் பெண்ணும்
மூடும், நாகும், கடமையும், அளகும்,
மந்தியும், பாட்டியும், பிணையும், பிணவும்,
அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே.”16 (தொல்.மர.3.)

என்னும் நூற்பாவின் மூலம் எடுத்துரைக்கின்றார். சங்கத்தொகை நூற்களில் இவ்வழக்காறுகளைப் பின்பற்றியே பாடல்கள் அமைந்துள்ளது என்று கூறினாலும்,

ஆட்டின் ​பெண்பால் ​பெய​ரை மூடு என வழங்கும் மரபு, நரி, நாய், பன்றி ஆகியவற்றின் ​பெண்பால் ​பெய​ரைப் பாட்டி என வழங்கும் மரபு முதலாய வழக்காறுகள் சங்கத்​தொ​கை நூல்களில் இடம்​பெறவில்லை என்பதனை கு.மோகனராசு திருக்குறளில் மரபுகள் என்னும் நுலின் முகவுரையில் குறிப்பிட்டிருப்பது சிந்தனைக்குறியதாகவும் தொல்காப்பியத்தின் பழமையை அறியத்தக்கதாகவும் அமைந்துள்ளது.

அறிவில் மரபு மாறாமை

தொல்காப்பியர் பன்னெடுங் காலத்திற்கு முன்பே ஒரு மருத்துவர் போன்று உயிர்களின் அறிவைப் பாகுபாடு செய்து வைத்துளார். இப்பாகுபாடானது இன்றளவும் பொருத்தமாகவே அமைந்துள்ளது. இம்மரபில் எந்தவித மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை. இக்கருத்தினை,

“ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.”17(தொல்.மர.27.)

எனும் நூற்பாவின் வழி அறியலாம். இந்நூற்பாவில் குறிப்பிடப்பட்டுள்ள ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிரினங்களின் வருணனைகள் சங்கத்தொகை நூற்களில் இடம்பெற்றுள்ளன.

தொல்காப்பியத்தில் மரபும் ​நெகிழ்ச்சியும்

மரபின் ​நெகிழ்ச்சியானது ​“தொல்காப்பியர் காலத்தி​லே​யே (அல்லது அவர் காலத்திற்கு முன்பா​க​வே) மரபில் ஓரளவு ​நெகிழ்ச்சி ஏற்பட்டிருக்க ​வேண்டும் எனத் ​தோன்றுகின்றது.

“குரங்கின் ஏற்றி​னைக் கடுவன் என்றலும்
மரம்பயில் கூ​கை​யைக் ​கோட்டான் என்றலும்
​செவ்வாய்க் கி​ளி​யைத் தத்​தை என்றலும்
​வெவ்வாய் ​வெருகி​னைப் பூ​சை என்றலும்
குதி​ரையுள் ஆணி​னைச் ​சேவல் என்றலும்
இருள்நிறப் பன்றி​யை ஏனம் என்றலும்
எரு​மையுள் ஆணி​னைக் கண்டி என்றலும்
முடியவந்த அவ்வழக் குண்​மையின்
கடிய லாகா கடனறிந் ​தோர்க்​கே”18 (​தொல்.1568)

எனவரும் மரபியல் நூற்பா மரபின் ​நெகிழ்ச்சி நி​லை​யை​யே குறிப்பிடுகின்றது. முடிய வந்த வழக்காயினும் கடிதல் கூடாது என்ப​தே ​தொல்காப்பியம்.

மரபில் நி​லைத்த தன்​மை ​வேண்டும் என வ​ரையறுக்கப் பட்டிருப்பினும், காலப்​போக்கில் ​நெகிழ்ச்சிகள் ஏற்படுவதுண்டு என்பதற்குத் ​தொல்காப்பியத்தில் கூறப்படும் பல மரபுச் ​சொற்கள் சங்கத்​தொ​கை நூல்களி​லே​யே வழக்கிழந்தமையைக் காட்டலாம். ஆட்டின் ஆண்பால் ​பெய​ரை அப்பர் என்றும் மோத்​தை என்றும் வழங்கும் மரபு, ஆட்டின் ​பெண்பால் ​பெய​ரை மூடு என வழங்கும் மரபு, நரி, நாய், பன்றி ஆகியவற்றின் ​பெண்பால் ​பெய​ரைப் பாட்டி என வழங்கும் மரபு முதலாய வழக்காறுகள் சங்கத்​தொ​கை நூல்களில் இடம்​பெறவில்லை.”19 என்று கு.மோகனராசு திருக்குறளில் மரபுகள் என்னும் நுலின் முகவுரையில் ​தொல்காப்பிய நூற்பா​வைச் சுட்டிக்காட்டி மரபின் ​நெகிழ்ச்சி குறித்து விளக்குகின்றார்.

மரபும் மாற்றமும்

உலகில் எதுவும் நி​லையானது இல்​லை. மாற்றம் ஒன்​றே நி​லையானது. அம்மாற்றமானது மரபில் உடனடியாகவும் முற்றிலும் வேறுபட்டும் நிகழ்ந்துவிடாது என்னும் கருத்திற்கு வலுச்​சேர்க்கும் விதமாக, “மரபு என்பது உடனே மாறக்கூடியது அன்று;​ நெடுநாள் நி​லைத்து நிற்பது எனலாம். மரபிலிருந்து மாற்றம் ஏற்படுமானால், அது ​மெல்ல ​மெல்ல​வே நிகழும்; மரபை ஒட்டி​யே நிகழும்”20 என்று கு. ​மோகனராசு திருக்குறளில் மரபுகள் என்னும் நூலில் விளக்கியுள்ளத​னைக் காணமுடிகின்றது.

வருணனை என்பதற்கு அகராதிகள் தரும் விளக்கங்கள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. வருணனை எவ்வாறெல்லாம் இடம்பெறும் என்பதும், வருணனைக்கான சொற்பொருள் விளக்கமும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வருணனையானது அ​மைய​வேண்டிய விதம் குறித்து விரிவாக அறியமுடிகின்றது. கற்பனையின் பயன்பாடானது அறிவியல் கண்டுபிடிப்பிற்கு அடித்தளமாக அமைந்திருப்பதனை அறியமுடிகின்றது. கற்ப​னைக்கும் வருண​னைக்குமுள்ள வேறுபாட்டினை நன்கு உணர்ந்து கொள்ள இவ்வாய்வு ஏதுவாக அமைகின்றது.

தொல்காப்பியத்தில் வருணனையின் அடிப்படைக் கூறுகள் அமைந்துள்ளதைத் தொல்காப்பிய நூற்பாக்களின் வாயிலாக அறியமுடிகின்றது. இக்காலகட்டத்தில் வருணனை குறைந்து வருவதற்கான மிக முக்கியமான நடப்பியல் காரணங்கள் சுட்டப்பட்டுள்ளன. மரபிற்கான இலக்கணத்தினை நன்னூல் நூற்பாவின் வாயிலாக இங்கு அறியமுடிகின்றது. தொல்காப்பியத்தில் மரபு மற்றும் அறிவில் மரபு மாறாமை குறித்துத் தொல்காப்பியர் உயிரினங்களின் வாயிலாக விளக்கிச் செல்கின்றதனை அறியலாம். மரபின் இன்றிய​மையா​மையையும் மரபில் மாற்றம் ஏற்பட்டால் ஏற்படும் விளைவுகளையும் தொல்காப்பியர் தெளிவுபடுத்திச் செல்வதனைக் காணமுடிகின்றது. தொல்காப்பியத்தில் மரபும் ​நெகிழ்ச்சியும் மரபையொட்டியே அமையவேண்டும் என்பது புலப்படுத்தப்படுகின்றது. மரபானது மாற்றம் அடைந்தால் அம்மாற்றமும் மரபையொட்டிய நிகழும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புகள்

க்ரியா, தற்காலத் தமிழ் அகராதி (தமிழ்-தமிழ்- ஆங்கிலம்), ப.900.
எஸ். ​வையாபுரிப்பிள்​ளை - இலக்கியச்சிந்த​னைகள் நூற்களஞ்சியம்: ​தொகுதி-1, ப.80.
க. சிதம்பரம், பெரியபுராணத்தில் வருண​னைகள் – ஓர் ஆய்வு, ப.87.
செ.​வை. சண்முகம், எழுத்திலக்கணக்​கோட்பாடு, ப.302.
ச.​வே. சுப்பிரமணியன், (ப.ஆ), வீராசாமி, (ப.ஆ), - தமிழ் இலக்கியக்​கொள்கைகள், ப.36.
பாரதியார் பாடல்கள்.பக்.21.
ச.வே.சுப்பிரமணியன், தொல்காப்பியம் தெளிவுரை, தொல்.செய்.நூற்.1.
மு.வரதராசன், இலக்கியமரபு, பக்.38.
க. காந்தி, தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்​கைகளும், ப.15-16.
சு. இராசாராம், இலக்கணவியல் மீக்கோட்பாடும் ​கோட்பாடுகளும், ப.107.
பா. செல்வகுமார், ​ தமிழ்ப்புதுக்கவி​தைகளில் பின்​னை நவீனத்துவக் கூறுகள், ப.70.
பா. செல்வகுமார், ​ தமிழ்ப்புதுக்கவி​தைகளில் பின்​னை நவீனத்துவக் கூறுகள், ப.70.
கழகப்புலவர் குழுவினர், நன். சொல்.நூ.388.
ச.வே.சுப்பிரமணியன், தொல்காப்பியம் தெளிவுரை, தொல்.மர.நூற்.1.
மேலது, தொல்.மர.நூற்.2.
மேலது, தொல்.மர.நூற்.3.
மேலது, தொல்.மர.நூற்.27.
மேலது, தொல்.மர.நூற்.1568.
கு.மோகனராசு, திருக்குறளில் மரபுகள் - முகவு​ரை, பக்.xi,xii.
கு.மோகனராசு, திருக்குறளில் மரபுகள், பக்.20-21.

துணை நின்ற நூல்கள்

காந்தி, க. தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்​கைகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்​மைச்சா​லை, மையத்​தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, ​சென்​னை – 600 113, மறுபதிப்பு: 2008.

சண்முகம், ​செ.​வை. எழுத்திலக்கணக்​கோட்பாடு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சி.ஐ.டி.வளாகம், தரமணி, சென்​னை – 600 113, மறுபதிப்பு: 2001.

சிதம்பரம்,க. பெரியபுராணத்தில் வருணனைகள் – ஓர் ஆய்வு, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

சுப்பிரமணியன், ச.வே. தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 600 108. முதற்பதிப்பு:1998.

செல்வகுமார், பா. தமிழ்ப்புதுக்கவி​தைகளில் பின்​னை நவீனத்துவக் கூறுகள், இ7, பாரத் அடுக்ககம், ஆர்.வி.நகர், அண்ணாநகர் (கிழக்கு), ​ சென்​னை – 600 102. பதிப்பு: 2010.

பாரதியார், பாரதியார் பாடல்கள், பாரதி பதிப்பகம், 126/108 உஸ்மான் சாலை, தியாகராயர் நகர், ​சென்​னை-17. முதற்பதிப்ப:1981.

பேராசிரியர், கழக ​வெளியீடு, ​சென்​னை. முதற் பதிப்பு:1959.

மோகனராசு, கு. திருக்குறளில் மரபுகள், தமிழ் இலக்கியத் து​றை, ​சென்​னைப் பல்க​லைக்கழகம், முதற் பதிப்பு:1981.

வரதராசன், மு. இலக்கியமரபு, பாரி நிலையம், 184, பிராட்வே, சென்னை – 600 108. முதற் பதிப்பு:1988.

வையாபுரிப்பிள்​ளை, எஸ்.​ இலக்கியச்சிந்த​னைகள் நூற்களஞ்சியம்: ​தொகுதி-1, பாரி நிலையம், 184, பிரகாசம் சா​லை, ​சென்​னை-108, முதற்பதிப்பு:1999.

வையாபுரிப்பிள்​ளை, எஸ். (ப.ஆ), தமிழ்ப்​பேரகராதி,(​லெக்ஸிகன் – ​தொகுதி 1,2), ​சென்​னைப் பல்க​லைக்கழகம், சென்​னை – 600 005, முதற் பதிப்பு: 1982.

இராஜராம், சு. இலக்கணவியல் மீக்கோட்பாடும் கோட்பாடுகளும் காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்​கோயில் – 629 001. முதற் பதிப்பு:2010.

* கட்டுரையாளர் - - முனைவர் பா.ஈஸ்வரன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (ஆங்கிலத்துறை), கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்). கிருஷ்ணன்கோவில் - 626 126. -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R