அல் ஹண்டர் (Al Hunter)

1.  கவிதை: கனவுக் குதிரைகள் (Dream Horses)!

(Walt Bresette நினைவாக)!
ஆங்கிலத்தில்: அல் ஹண்டர் (Al Hunter) - கனடியக் கவிஞர்  | தமிழில்: வ.ந.கிரிதரன்!

1

நிலவு வெளிச்சத்திற்குக்
கீழாக
விண்ணில்
எனது கனவுக் குதிரைகள்
தெற்கு நோக்கி
ஓடும்.

தெற்கு: பயணம் இங்குதான்
முடியும், அத்துடன்
தெற்கு: பயணம் இங்குதான்
மீண்டும் தொடங்கும் -
ஆத்மாக்களின்
பயணத்தில்.

தெற்காகச் செல்லும்
அடிச்சுவட்டில்
செல்லுமிடம் தெரியாமல்
ஒருவேளை
மூடப்பட்ட நதிப்
பள்ளத்தாக்கு நோக்கி
அல்லது மறைந்திருக்கும்
மலைப்பாறைகளினுச்சியின்
மேலாகச் செல்லும்
கிளைவிட்டுச் செல்லும்
பாதைகளுமுண்டு.
குதிரைகள் அங்கு
போவது கிடையாது.

நான்கு நாட்களாக
இரவும் பகலுமாகப்
பயணித்து விட்டு
அதிகாலைப் பொழுதில்
உண்பதற்காகவும்,
ஓடைகள் கொண்டு வரும்
தெளிந்த , நீல நீரை
அருந்துவதற்காகவும்
அவை தங்கும்.

கனவுக் குதிரைகள்
முன்னர்
கடந்து சென்ற
இந்த வழியில்,
நினைவுகளின்
ஞாபகங்களின்
பழந்தீயில் அவை
இரவுகளினூடும்
அந்திக் கருக்களினூடும்
தம்மைச் சூடேற்றிக்
கொள்ளும்.

ஐந்தாவது நாட்
காலையில் அவை
கடக்கத் தேவையில்லாத
ஆற்றங்கரையினை
வந்தடையும்.
மீண்டுமொரு வைகறையில்
மீள்பிறப்பிற்காக
ஏனைய கனவுக் குதிரைகள்
கூடும்
தெற்குக் கரையினை
அடையும் வரையில்,
நீரின் மேற்பரப்பினூடாக
வைரங்களைப் போல்
நர்த்தனமிட்டபடி
அவற்றின் குளம்புகளே
அவற்றினை இழுத்துச்
செல்லும்.

ஓ! மகா
ஞாபகசக்தி மிக்கவரே
திரும்பி வாரும்.
திரும்பி வாரும்
எனது கனவுகளின்
வளம் மிக்க
நீல வயல்களிற்குள்...

2

பனித்துளிகள்
ஒட்டிக்
கொண்டிருக்கும்
இனிய புதிய
புற்களிருக்குமிடத்தில்,
உதிக்கும்
சூரியனை நோக்கி
உனது குதிரையினைத்
திருப்பியபடி, அதன்
பிடரி மயிரினை
ஒரு சேரப் பிடித்தபடி,
கனவுகள்
பயிரிடப்படாத
வயலிற்குள்
நோக்கியபடி
நீண்ட, ஆழ்ந்த நட்புமிகு
இதயத்துடன்
நீ!
அதனை
நீர்
அருந்தவிடு.
அதனைச்
சுவைக்க விடு.
அதன் பின்
அதன் மீது
சவாரி
செய்.


மூலம்: பிரிட்டிஸ் கொலம்பியாப் பல்கலைக் கழகத்தினால் வெளியிடப்படும் கனேடிய இலக்கியம் ( Canadian Literature காலாண்டிதழ், மாரி 2000, இதழ் இலக்கம்: 167)

 


டூக் ரெட்பேர்ட் (Duke RedBird)

2.  எனது விடுதி!

டூக் ரெட்பேர்ட் (Duke RedBird) - கனடியக் கவிஞர்| தமிழில்: வ.ந.கிரிதரன்

எளிமையாயிருந்தது எனது பேர்ச் மரத்திலான விடுதி.
தூய்மையாயிருந்தது நான் அருந்திய தண்ணீர்.
வேகமாயிருந்தது என்னைச் சுமந்து சென்ற படகு.
நேராயிருந்தது என்னைக் காத்த அம்பு.
மூர்க்கமாயிருந்தது நான் உண்ட இறைச்சி.
இனிமையாயிருந்தது மேப்பிள்மரச் சக்கரை.
வலிமையாயிருந்தது என்னைத் தாங்கிய மூலிகை.
உயர்வாயிருந்தது எனது அன்னை பூமி.


ரேய்மன் சொஸ்டர் (Raymond Souster)

3.  கோடைப் பல்லி!

ரேய்மன் சொஸ்டர் (Raymond Souster) -
கனடியக் கவிஞர் | தமிழில்: வ.ந.கிரிதரன்

வெம்மை
கிளைவிட்டுப் பரந்து கிடக்கும் நாக்கு.

இந்தக்
கோடைப் பல்லி

எம்முடலின்
ஒவ்வொரு அங்குலத்தையும்

ஏறக்குறைய காதலுடன்
நக்கும்.


ரேய்மன் சொஸ்டர் (Raymond Souster)

4.  பனி உறைந்த ஆற்றின் மீது நடத்தல்!

ரேய்மன் சொஸ்டர் (Raymond Souster) -
கனடியக் கவிஞர் | தமிழில்: வ.ந.கிரிதரன்

எனக்கும்
கண்ணிற்குப் புலப்படாத
இந்த தண்ணீரின் 'சளசள'ப்பிற்குமிடையில்
ஆறு அங்குல பனிக்கட்டி இடைவெளி.

நான் இன்னும்
மிகவும் அவதானத்துடன்
குற்றம் சாட்டும்
பயத்துடன் கூடிய
குதிகளுடன்
நடக்கின்றேன்.

ஆறு அங்குலத்திற்கும்
கீழ்
இந்த ஆறும்
என்னைப் போல்
தனது உறைந்துவிட்ட
பெருமைகளை
மீறாமாலிருப்பதில்
இரகசியமெதுவுமில்லை.


Margaret Avision

5.  முதல்!

மூலம்: மார்கரெட் அவிசன் ()
கனடியக் கவிஞர்| தமிழில்: வ.ந.கிரிதரன்

மிகவும் அதிகமான ஆனந்தம்
இந்த முப்பரிமாண,பரிதியற்ற
வட்டத்தை
கடந்தகாலமும்
பச்சாதாபமும்
அதனைச் சுற்றி
எல்லையாக
விரிந்திருக்காவிடின்
அதன் உயர்ச்சியான
உண்மையிலிருந்து
வெளியே
இழுத்து வந்துவிடும்.

கடவுளின்
கணக்கில்
நூறிற்கும் மேலும்
சதவீதமுண்டு.

அவருடைய
புதியபடைப்பு
முழுமையானது.
ஒன்றானது.
ஆரம்பம் மிக்கது.


6. அவளது தலைமயிர்!

மூலம்: மெல் டாக் (Mel Dagg) - கனடியக் கவிஞர் | தமிழில்: வ.ந.கிரிதரன்

அவளது தலைமயிர்
இரு கரிய பின்னல்களாகப்
பின்னப் பட்டிருந்தது
இப்பொழுது.
அத்துடன்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வருடமும்
என்னுடைய
காதலைப் போல்
அவை வளர்ந்து கொண்டேயிருந்தன.
துதித்தலுடன் நான்
பின்னால் நடந்தபடி
நீண்ட கரிய பின்னல்கள்
நகரத்து வீதிகளைத்
தொட்டுவிடாமல்
தூக்கும் வரையில்.

ஆனால் கிராமத்திலோ
அவள்
அவற்றைச் சுயமாகவே
நிலத்தைக் கூட்டும்படி
தொங்க ஓட விட்டவளைப்போல்
இருக்கும்.

அவை எப்பொழுதுமே
தொடுவதற்காக
வளர்ந்திருந்தன.


7.  கரும் பாத மொழி!

மூலம்: மெல்டாக் (Mel Dagg) - கனடியக் கவிஞர்| தமிழில்: வ.ந.கிரிதரன்

எங்களது மொழி
மிருகங்களினதும்
மரங்களினதும்
உருவங்களில்
எழுதப் பட்டது.
அதனால் தான் உன்னால்
அதனைப் பேச முடியாது.
ஆனால் உனது காதுகளை
நிலத்தில் வைத்துக் கேட்பாயானால்
வௌ¢ளை எருமைகளின்
ஆத்மார்த்த உணர்வுகளை நீ
கேட்கலாம்.
அவற்றின் குளம்புகள்
இப்பொழுதும்
எங்களது புல்வெளிகளினூடாகச்
செல்கின்றன.

-மேற்படி கவிதைகள் வில்லியம்/ஹிறிஸ்டின் மோவாட் (William , Christine Mowat) ஆகியோரால் பதிப்பிக்கப்பட்டு, மாக்மில்லன், கனடா பதிப்பகத்தினால் (Macmillan of Canada) வெளியிடப்பட்ட Native People in Canadian Literature என்னும் நூலிலிருந்து பெறப்பட்டவை.-

 


Lord Byron

8.  என் இனிய மேரி ஆனுக்கு

- ஆங்கிலத்தில்: கவிஞர் பைரன் | தமிழில் : வ.ந.கிரிதரன் -

கவிஞர் பைரனின் (Lord Byron) பிரபல்யமான கவிதைகளிலொன்று 'எனது இனிய மேரி ஆனுக்கு' (To My Dear Mary Anne ). அவரது பதினைந்தாவது வயதில் ஏற்பட்ட முதற் காதல் தோல்வியையடுத்து தன் இழந்த காதலி மேரி ஷாவேர்த்தை (Mary Anne Chaworth) நினைத்து எழுதிய கவிதை.


1,

சென்றுவருகிறேன் என் இனிய மேரி, நிரந்தரமாகவே.
அவளிடமிருந்து நான் விரைவாகவே விடைபெற வேண்டும்.
எம்மிருவரையும் *விதித்தேவதைகள் பிரித்தாலும்
அவளது உருவம் என் நெஞ்சில் குடியிருக்கும்.

2,

எரியுமென் நெஞ்சின் சுவாலையானது
காதலர்களின் இதயங்களில் ஒளிர்வதைப்போன்றதல்ல.
மேரி மீது நான் கொண்டுள்ள காதலானது
காமனேற்படுத்தும் காதல் உணர்வுகளை விட
மிகவும் தூய்மையானது.

3,

உன் அமைதி சீர்குலைவதை நான் விரும்பமாட்டேன்.
உன் இன்பம் துன்புறுவதை நான் விரும்பமாட்டேன்.
என் காதல் வேட்கையினைத் தவறாக எடுக்க வேண்டாம்.
உன்னுடைய நட்பொன்றே நான் வேண்டுவது.

4,

என் நெஞ்சு கொண்டிருக்கும் நட்பினைப்
பத்தாயிரம் காதலர்கள் கூட உணரமாட்டார்கள்.
சூடான இரத்தம் என் நரம்புகளில் ஓடிக்கொண்டிருக்கும் வரையில்
இந்த நட்பு எப்பொழுதும் என் இதயத்தில் குடிகொண்டிருக்கும்.

5,

என் மேரி தீயசக்திகளிலிருந்து தன்னைப்பாதுகாக்க
சொர்க்கத்தின் அரசர் பூவுலகை நோக்கட்டும்...
அவள் ஒருபோதும் துன்பத்தின் சீற்றத்தை உணராதிருக்கட்டும்.
அவளது இன்பம் எப்பொழுதுமே முடிவற்றதாகவிருக்கட்டும்.

6,

மீண்டுமொருமுறை என் இனிய பெண்ணே, சென்றுவருகிறேன்.
விடைபெறுகிறேன் மீளும் வேதனையுடன்,
என்னுடைய மார்பிலிருக்கும் இதயத்தின் துடிப்பிருக்கும்வரை
எப்பொழுதும் உன்னை எண்ணிக்கொண்டேயிருப்பேன்.

*விதித்தேவதைகள் - the fates என்பது கிரேக்கர்களின் புராணங்களின் அடிப்படையில் மானுடரின் விதியை நிர்ணயிக்கும் மூன்று நெசவுத் தெய்வங்களைக் குறிப்பது. வெண்ணிற ஆடைகளில் தோன்றும் தேவதைகளிவை. குளோத்தோ (Clotho), லசெசிஸ் (Lachesis) & அட்ரொபொஸ் (Atropos) என்பவை அத்தேவதைகளின் பெயர்கள். மனிதர் ஒருவர் பிறக்கும்போது அவரது வாழ்வை நிர்ணையிக்கும் விதியானது இம்மூன்று தேவதைகள் நிர்ணயிக்கும் விதிகளின் மொத்த விளைவாகும்


 Percy Bysshe Shelley

9. காதல் தத்துவம் (Love’s Philosophy)

கவிஞர் ஷெல்லியின் புகழ்பெற்ற கவிதைகளிலொன்று 'காதல் தத்துவம்' .இதனைத் தழுவி இதே பெயரில் இரு கவிஞர்கள் கவிதைளை எழுதியிருக்கின்றனர். ஒருவர் அ.ந.கந்தசாமி. இவரது கவிதை தேன்மொழி (1955) சஞ்சிகையில் வெளியானது. இன்னுமொரு தழுவல் கவிதையை எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகம் எழுதியிருக்கின்றார். அது ஈழநாட்டில் வெளியானது.  அவற்றில் ஷெல்லியின் கவிதையிலுள்ள ஆத்மீக வெளிப்பாடு இல்லாதிருப்பதை அவதானிக்கலாம். அவர்கள்தம் கொள்கைகளுக்கேற்ப அதனை அவர்கள் தவிர்த்திருக்கக்கூடும். அதன் காரணமாகவே அதனைத்தவிர்த்து முழுமையான மொழிபெயர்ப்பாக இல்லாமல் தழுவித் தம் கவிதைகளைப்படைத்திருக்க வேண்டும். மேலும் பலர் தழுவியோ அல்லது மொழிபெயர்த்தோ எழுதியிருக்கக்கூடும். இங்கு நான் இதே தலைப்பில் ஷெல்லியின் கவிதையை மொழிபெயர்த்திருக்கின்றேன். ஷெல்லியின் கவிதை மரபுக்கவிதை. ஆனால் அதனை அதன் கருத்தின் அடிப்படையில் தமிழாக்கம் செய்துள்ளேன். ஓரிரு மரபுக்கவிதையின் அம்சங்களிலிருந்தாலும் இது மரபுக்கவிதையல்ல.

காதல் தத்துவம்

- பேர்ஸி பிஷ் ஷெல்லி | தமிழில்: வ.ந.கிரிதரன்

ஊற்றுகள் ஆற்றுடன் கலந்துவிடும்.
ஆறுகளோ ஆழியில் கலந்துவிடும்.
சொர்க்கக் காற்று எப்போதும்
சேர்ந்தே கலந்து விடுமின் உணர்வுடனே.
இங்கு எவையும் தனித்தில்லை;
இறைவிதி வழியனைத்து மிங்கோர்
ஆன்மா ஆகியிணைந்தே கலந்துவிடும்..
அடியேனிலையே அவ்விதமுன்னுடன் ஏன்?

மலைகள் *உயர்சொர்க்கம் தழுவுதலைப் பார்!.
அலைகளும் தமக்குள்  தழுவி நிற்கும்.
மலர் எதற்கும் மன்னிப்பில்லையம்
மலர் மலரை இகழ்ந்து விடின்.
கதிரொளியும் ககனம் தழுவி நிற்கும்.
மதிகிரணங்க ளாழியை முத்தமிடும்.
நீயெனை முத்தமிடவில்லை யென்றால்
நிகழுமின் செயலனைத்தின் அர்த்தமென்ன?

* உயர் சொர்க்கம் என்னும் சொல்லைக் கவிஞர் வானுக்குப் பாவித்துள்ளார். வான் தழுவும் மலைகள். உயரத்திலுள்ள வானத்தைத்தழுவும் உயர்ந்த மலைகள். அதனை அவர் வானம் என்று பாவிக்காமல் உயர் சொர்க்கம் என்று பாவித்துள்ளார்.  அதற்குக் காரணம் அவர் இக்கவிதையை உணர்வு ரீதியில், ஆன்மீக ரீதியில் &   உடல்ரீதியில் அணுகியிருக்கின்றார். அதனால்தான் நேரடியான தழுவுதல், உணர்வுகள் போன்ற சொற்களுடன் , அவ்வப்போது சொர்க்கக்காற்று, உயர் சொர்க்கம், இறைவிதிவழி, ஆன்மா என ஆன்மீகச் சொற்களையும் கலந்திருக்கின்றார் என்றெண்ணுகின்றேன். அதனாலேயே உயர்சொர்க்கமென்ற சொல்லையே நானும் பாவிக்க விரும்புகின்றேன். காதல் தத்துவம் என்னும் இக்கவிதையில் கவிஞர் ஷெல்லி காதலை  மூன்று தளங்களில் (உடல்ரீதியாகம் உணர்வுரீதியாக & ஆத்மார்த்தரீதியாக) அணுகியிருப்பதால் இதனை அணுகுவதற்கு ஆழமான அணுகுமுறை அவசியம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R