வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் ஏழு!

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்பிரச்னையின் தீர்வுக்கான தேடுதல் தன் எதிரே கொண்டுவந்து நிறுத்திய முடிவினைக் கண்டபோது கோர்ப்ரல் உக்கு பண்டார மனம் திடுக்குற்றான். அந்த அதிர்ச்சியில் உடம்பே அதிர்ந்ததுபோல் உணர்ந்தான். நாளும் நாளும் வெகுக்கும் தன் மன வதையிலிருந்தான மீட்சிக்கு வேறு வழியே கிடையாதாவென அயர்ச்சியடைந்தான். அவன் மேலும் யோசிக்க முனைந்தான். வேறு எந்த வழியும் சாத்தியமாகாது என்பதைவிட, அதற்கு அந்த ஒரேயொரு வாசல்தான் இருந்ததென்பதையே அவன் அறுதியாகக் கண்டான். அவனுக்குள் தயக்கம் எழுந்தது. அது அவனது வாழ்முறையையே தலைகீழாக மாற்றிப்போட்டுவிடும். அம்மா, தங்கை, அக்காவின் வாழ்க்கையை நிலைகுலைத்துவிடும். ஆயினும் அதுமட்டுமே வழியெனில், அவன் அதை செய்யத்தான் வேண்டும்.எந்தவொரு மலையடிவாரத்திலோ, வனத்தின் அடர்வினுள்ளோ, சரித்திரப் பழமை வாய்ந்த ஆலயம் தூபி விஹாரையென்ற எந்த இருள்வினுள்ளுமோ தன்னை மறைத்து காலத்தைக் கழிப்பதொன்றும் எண்ணுகிற அளவு சுலபமானதில்லை. ஆனால் அவன் அதையே செய்யவேண்டியவனாய் இருந்தான்.

விடுதலைப் புலிகளுடன் வடக்கிலோ கிழக்கிலோவான எந்தவொரு பாரிய யுத்தத்தின் போதும் ராணுவத்திலிருந்து ஓடிக்கொண்டுதான் இருந்தார்கள். அவ்வாறாக ஓடியவர்களின் தொகையை ஒரு கணக்கு இருபத்தையாயிரமென்று சொல்லியது. சாதாரண ராணுவத்தினராக அவர்கள் இருந்தார்களென்ற ஓர் அம்சம் அதிலுண்டு. பெரும்பாலும் யுத்த பயங்கரங்களும், உயிரச்சங்களும்  அவர்களை அவ்வாறு செய்ய தூண்டியிருக்கக்கூடும். ஆனால் அவன் அவையல்லாத வேறொரு காரணத்தில் ஓடப்போகிறான். ராணுவச் செயற்பாடுகளின் மேலான ஒரு நீதிவிசாரணை அந்த முடிவை அவனுக்குத் தீர்ப்பாக்கியிருந்தது.

அந்த அவனது காரணத்தை வைத்து, உண்மையில் ராணுவமே ‘நீ ஓடிவிடு’ என அவனுக்குச் சொல்லவேண்டும். அவன் அங்கே இருந்தால், பௌத்த நாட்டின் கட்டுப்பாடும், ஒழுக்கமுமான படையென சொல்லியபடியிருக்கும் அரச சாட்சியங்களை அவன் நொருங்கிப் போகச் செய்துவிடுவான்.

ராணுவம் அவ்வாறு சொல்லிவிடாது. அது அவனை தூரத்து சிங்கள கிராமமொன்றிலிருந்து வந்த ஒரு சிங்களனாகவே பார்த்திருந்தது. ஆனால் ஒரு மனிதனாகவும் சகித்துப் போகமுடியாத பயங்கரங்களை அவன் தன் ராணுவ வாழ்க்கையில் கண்டிருந்தான். அனுசரித்துப் போவதற்கான எல்லையையும் அப் பயங்கரங்கள் மிகவும் கடந்திருந்தன. அந்த எல்லை கடந்ததின் புள்ளியை ஆறேழு வருஷங்களுக்கு முன்னான ஒரு சம்பவத்துடன் உக்கு பண்டார அடையாளப்படுத்தினான்.

ஒரு நாட்டின் ராணுவமென்பது நாட்டு மக்களோடு நேரடியாக தொடர்பில்லாதது. பாரிய இயற்கைப் பேரிடர்களின்போது நிவாரண நடவடிக்கைகளில் அது ஈடுபடுத்தப்படுவதுண்டு. அப்போது அதன் கைகள் கட்டப்பட்டுவிடுகின்றன. எதிரிகளுடனான யுத்தமாய் அது தன் கடமையை எதிர்கொள்கிறபோது, அதன் கட்டுக்கள் அறுக்கப்படுகின்றன. இல்லாவிட்டால் அதுவாகவே அதை அறுத்துக்கொள்ளுகிறது. அப்போதும் அது எதிரியுடனான யுத்தமாகவே இருக்கவேண்டும். துவேஷத்தின் அழித்தொழிப்பாக அது இருத்தலாகாது. சிறீலங்கனாகவும், சிங்களனாகவும், ராணுவ அதிகாரியாகவும் அவனுடைய நிலைப்பாடு அதுவாகவே இருந்தது.

கோர்ப்ரல் உக்கு பண்டார அப்போது தன் கைதடி முகாமில் தனக்கான அறையில் இருந்துகொண்டிருந்தான். பழையதுகளை யோசிக்க அது ஒரு நல்ல தருணமாகவிருந்தது. தம்மைத் திறந்து பார்க்க அவனை யாசித்துக்கொண்டிருந்த சம்பவங்களாயிருந்தன அவை. தன் முடிவின் செயற்பாட்டுக்கு முன் எல்லாவற்றையும்… எல்லாவற்றையுமேதான்…. நினைத்துப் பார்ப்பது அவனுக்கு அவசியம். முடிவை மாற்றுவதற்கல்ல, அதைச் செயற்படுத்தும் வேகத்தை, திண்ணத்தை அது அவனுக்கு அளிக்கும்.

எழுந்து லைற்றை அணைத்துவிட்டு மறுபடி வந்து மேசையில் அமர்ந்தான்.

சித்திரையின் வெம்மை தகரக் கூரையினூடாக ஊறி உள்ளே ஒழுகிக்கொண்டிருந்தது. முன்னாலிருந்த சிறிய ஜன்னல் வழி வெளியே பார்வை பரந்தது. பௌர்ணமி வர இன்னும் நாட்கள் சில இருந்தன. வானம் கரியால் மூடுண்டு கிடந்தது. வரண்டிருந்த கொஞ்சமான மரங்களும் அசைவறுத்து நின்றுகொண்டிருந்தன.

அப்போது அவன் சாதாரண ராணுவத்தினனாக இருந்தான். செம்மணி முகாமில் அவனுக்கு பணியிருந்தது. அன்று மதியத்தில் வீதிக் கண்காணிப்புக்குப் புறப்பட்ட குழுவில் ஒருவனாய் ட்றக்கிலே ஏறியிருந்தபோது அவன் அவளைக் கண்டான்.
அது 1996இன் ஆவணி மாதத்து 7ஆம் தேதி. அன்று ஒரு புதன்கிழமை.

அவளை அவனுக்கு ஞாபகமாகவிருந்தது. கடந்த சில மாதங்களாக அவளை அவன் பார்வையில் அறிமுகமாகியிருந்தான். பார்க்கும்போதென்றில்லை, எப்போதும் சிரிப்பனவாக அவளது கண்கள் இருந்தன. அவனது தங்கை யாமினியின் தோற்ற ஒருமைகளை நிறைய அவளில் கண்டு அதிசயித்திருந்தான் அவன். அதே நிறமும் உயரமும். முகத்திலும் அவ்வாறான ஒரு அப்பாவித்தனமான மென்மை ஊடோடியிருந்தது.

சுண்டிக்குழி பெண்கள் கல்லூரியின் சீருடையோடு சைக்கிளில் வந்துகொண்டிருந்தாள். செம்மணி ராணுவ சோதனை நிறுத்தம் வர சைக்கிளிலிருந்து இறங்கினாள். அவளிடம் ஏன் அத்தனை கேள்விகள்? நிமிஷங்கள் ஆகின. இன்னும் அவள் அங்கேயே விசாரணையில். அது பிரச்னையின் அடையாளமென எண்ணினான் உக்கு பண்டார. அவனது மனம் கலவரமடைந்தது. ட்றக் புறப்பட்டுச் செல்கையில் அவன் மறுபடி பார்த்தபோது அவள் அங்கே இல்லை.

பெரிதாக யோசிக்க உக்குவுக்கு எதுவுமிருக்கவில்லை. அவன் மனத்தில் அழியாத சம்பவமாய் அது விழுவதற்கு இன்னும் நேரமிருந்தது.

மறுநாள்தான் கேள்வியில் தெரிந்தது, விசாரணைக்குத் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த அந்த மாணவி அன்று வீடு திரும்பவில்லையென்று. அவளைத் தேடி மாலையில் புறப்பட்ட தாய் ராசம்மா, தம்பி பிரணவன், அவள் சோதனைக் காவலரணில் விசாரணைக்காக தடுக்கப்பட்டாளென்ற விபரத்தை அறிந்து வீட்டாரிடம் சொல்லிய அயல்வீட்டுக்காரர் கிருபாகரன் சிதம்பரம் என மூவரும்கூட காணாமல் போயிருந்தனர்.

அதுபோன்ற பல சம்பவங்கள் அங்கே கதையாகி உலவியிருக்கின்றன. சிரிப்பும் கேலியுமாய்ப் பகிரப்பட்டவை உக்குவின் காதுகளிலும் ஏறியிருந்தன. அந் நால்வரும் காணாமல்போயிருக்கும் காரணத்தை அவற்றின் சமன்பாட்டில் ஊகிக்க உக்குவால் முடிந்திருந்தது. அது அவனை மிகவும் சஞ்சலப்படுத்தியது.

அயலும் உறவும் சென்று தலைமை பொலிஸ் நிலையத்தில் புகாரளித்தது. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் நடந்த விபரங்கள் எடுத்துச் சொல்லப்பட்டன. மாணவி எவரும் விசாரணைக்காக தடுக்கப்பட்டதுமில்லை, அவளைத் தேடி உறவினர் யாரும் அங்கு வந்ததுமில்லையென செம்மணி ராணுவ முகாம் அதிகாரிகள் கூறிவிட்டனர். பத்திரிகைகள் யுத்ததர்மம் காக்க மௌனித்திருந்தன.

நால்வருக்கும் என்ன நடந்ததென்ற கேள்வி கிணற்றில் போட்ட கல்லாக இருந்துகொண்டிருந்தது.

சர்வதேச பத்திரிகையாளர் சமூகத்தின் முன்பும், மனித உரிமை அமைப்புகள், பெண்ணுரிமை இயக்கங்களின் கேள்விகளின் முன்பும் வாயற்றிருந்தது அரசாங்கம். அதற்காக அது தன்னை அலட்டிக்கொள்ளவில்லை.

நீடித்த மௌனத்தின் பின் விபரம் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு அறிவிக்கப்பட்டதின் பேரில், லெப். கொலனல் குணரத்ன தலைமையில் ஒரு ராணுவப் பொலிஸ் விசாரணைக் குழு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்தது. பிரணவன் தாயாரை ஏற்றிச் சென்ற சைக்கிளின் செயின் கவரை, பிரணவனின் நண்பனொருவன் முகாமுக்கு அண்மையிலுள்ள ஒரு சைக்கிள் கடையில் அடையாளம் கண்டான். விசாரணைக்கு ஒரு தடயம் கிடைத்தாயிற்று.

இறுதியில் விசாரணை வெற்றிகரமாக முடிந்து அந்த மாணவி பாலியல் பலாத்காரம் புரியப்பட்டும், மற்ற மூவரும் சித்திரவதை செய்யப்பட்டும் கொலை செய்யப்பட்ட விபரங்கள் வெளியாகின. அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களாக பதினொரு பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் ஆறு பேர் ராணுவத்தினராகவும், ஐந்து பேர் ராணுவ பொலிஸாராகவும் இருந்தார்கள். கொலைசெய்யப்பட்ட நான்கு உடல்களும், மயானமும் உப்பங் கழியுமாய் பரந்திருந்த செம்மணியின் பயங்கரங்கள் மூடுண்ட நிலத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்டன. மாணவியினதும், அவளது தம்பியினதும் உடல்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு ஒரு கரும்பையில் போடப்பட்டிருந்தன. ராசம்மாவினதும் கிருபாகரனினதும் உடல்கள் கழுத்தில் சுருக்கிட்டு இறுக்கிய நிலையில் கிடந்திருந்தன. மாணவியின் சடலத்தின் மீதான மருத்துவ பரிசோதனை அவள் கூட்டு வல்லுறவு புரியப்பட்டிருப்பதையும், அண்ணளவாய் அதைப் புரிந்த நபர்களது எண்ணிக்கையையும் சொல்லியது. உலகம் அதிர்ந்தது. காணாமல் போதலென்பதின் அர்த்தம் என்னவென்பதறிந்து தங்கள் உறவினைக் காணாமலாகியோர் துடித்துப் போயினர்.  ஊரெல்லாம் ஒப்பாரியாயிற்று.

சர்வதேச பத்திரிகையாளர், மனித உரிமை ஆர்வலர், மனித உரிமை நிறுவன அலுவலர் மற்றும் பெண்ணுரிமை அமைப்பைச் சேர்ந்தவர்களின் தலையீடு, சம்பவத்தை சர்வதேச வியாபகம் கொள்ளவைத்தது. அப்போது அது கிருஷாந்தி கூட்டு வல்லுறவு கொலையென்று பெயர் பெற்றிருந்தது.

உக்கு எல்லாமறிந்து நெஞ்சுக்குள்ளாய் அழுதான். அவன் செய்ய எதுவுமில்லை. அது மனத்தைக் கொன்றுவிட்டு உயிரில் வெறியை ஏந்தித் திரிகிற கூட்டமாயிருந்தது. அது எந்த அறத்தையும், எந்த புனிதத்தையும் அழிக்கிற வன்னெஞ்சர்களின் புகலிடமாய் இருந்தது. கூட்டு வல்லுறவு, கொலை, சித்திரவதைகள் நிறுவனமயப்பட்ட அமைப்பாகியிருந்தது சிறீலங்கா ராணுவம் என்பதை முடிவாய்த் தெரிந்தான் அவன்.

அதற்காக உள்ளுக்குள்ளாய் துடிப்பதைத் தவிர, அவனால் செய்ய எதுவும்தான் முடியாமலிருந்தது. ஓடிவிடுகிற நினைப்பும் அப்போது தோன்றியிருக்கவில்லை.

காணாமல் போதல் விவகாரத்தில் உலகிலேயே இலங்கை இரண்டாவது இடத்திலுள்ளதென பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல் அல்லது தன்னிச்சையின்றி காணாமல்போதல் ஆகியனவற்றின்மீது ஆய்வு செய்யும் ஒரு குழு தன் அறிக்கையில் தெரிவித்தது. இலங்கையின் முகத்தில் மேலுமொரு மோசமான கூட்டுப் பாலியல் வல்லுறவு, கொலைச் சம்பவம் தீராத பழியாக முத்திரை குத்தப்பட்டாயிற்று.

கொழும்பு உயர்நீதி மன்றத்தில் மூன்று நீதிபதிகளின் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஐந்து பொலிஸாரில் இரண்டு பேர் அரசு தரப்பு சாட்சிகளாக மாறிவிட்டிருந்தனர். நடந்த கொடுமைகளெல்லாம் வெட்டவெளியாகி அனைவரின் மனத்திலும் அச்சத்தை விதைத்தபடி காற்றிலேறி திரிந்துகொண்டிருந்தன.

ஒருவர் பின் ஒருவராக அத்தனை பேர்கள் பலாத்காரம் புரிந்த அந்த பத்தொன்பது வயதுச் சிறுபெண் இடையிலே மயக்கமடைந்துபோனாள். பிறகு தன்னைப் பலாத்காரம் புரிய வந்த ஒவ்வொருவனிடமும் தண்ணீர்… தண்ணீரென்று கேட்டு கெஞ்சினாள். அதன் பின்னரும்கூட சிதைப்பைச் சித்திரமாய்ச் செய்துகொண்டிருந்த நிலையில், கடைசி ஆள் அவளோடு வல்லுறவுகொள்ள வந்தபோது, ‘ஒரு ஐந்து நிமிஷம் எனக்கு ஓய்வு தாருங்கள்’ என யாசித்தாள். படுகொலை செய்யப்பட்டுக்கொண்டு இருக்கும் அந்தக் கடைசிநேர யாசகமும் நிராகரிக்கப்பட்டது. சாட்சிகள் சம்பவத்தை வெளியில் விரித்தன.

உலகம் துக்கத்தால் தன்னை மூடியது.

நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் குற்றவாளிகளென முடிவானது. அப்போது தலைமை நீதிபதி, அவர்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறார்களா எனக் கேட்டார். அதற்கு முதலாவது சந்தேக நபர் லான்ஸ் கோர்ப்ரல் டி.எஸ்.ராஜபக்க்ஷே சொன்னவை நீதிமன்றத்தை மட்டுமல்ல, உலகையே ஸ்தம்பிக்க வைத்தன. அவனது வார்த்தைகள் இவ்வாறாக இருந்தன. ‘நாங்கள் யாரையும் கொலை செய்யவில்லை. எங்கள் மூத்த அதிகாரிகளால் எங்களுக்கு அனுப்பப்பட்ட உடல்களை குழிதோண்டி புதைக்கமட்டுமே செய்தோம். இவ்வாறான முந்நூறு நானூறு புதைகுழிகளை எம்மால் செம்மணியிலே காட்டமுடியும்.’ தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆறு பேருக்கு மரண தண்டனையும், மூன்று பேருக்கு இருபது வருஷ சிறையூழியமும் ஐம்பதினாயிரம் ரூபா அபராதமுமான கடுந்தண்டனையாக அத் தீர்ப்பு இருந்தது.

ஆனால் கிரிஷாந்திக்கு நிகழ்ந்த சோகத்தை யாரால் ஆற்ற முடியும்?

தன் நிம்மதியைக் குலைக்கும்படியாக தொடர்ந்தும் அதுபோன்ற பயங்கரமான சம்பவங்களையே உக்கு அறிந்துகொண்டிருந்தான்.

கல்முனையில் 1997 வைகாசி 17இல்  கோணேஸ்வரி என்ற முப்பத்தொன்பது வயதான நான்கு பிள்ளைகளின் தாய் பொலிஸ் படையினரால் கூட்டு வல்லுறவு கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டாள். அவளது யோனிக்குள் கிரனேட்டை வெடிக்கவைத்து கொலைபண்ணிய விதம் கேட்ட அனைவரையும் அதிரவைத்தது.

மன்னார் பள்ளிமுனையில் 1999 ஆடி 12இல் இருபத்தொரு வயதான முன்னாள் விடுதலைப் போராளி ஐடா கர்மலிட்டா கூட்டுறவு வல்லுறவின் பின் கொலை செய்யப்பட்டாள். சம்பந்தப்பட்டவர்கள் யாரென அடையாளம் காணப்படவில்லை. புங்குடுதீவைச் சேர்ந்த சாரதாம்பாள் சரவணானந்தக் குருக்கள் என்ற மாணவிமீது 1999 மார்கழி 28இல் புரியப்பட்ட கூட்டு வல்லுறவிலும் கொலையிலும் கடற்படை சம்பந்தப்பட்டிருந்தது.

இனத்துவேஷத்தின் கொதியுலையாக இருந்து, காமாந்தகாரம், நிர்தாட்சண்யமான கொலை, மனிதாபிமானமற்ற சித்திரவதைகளைப் புரியும் இதுபோன்ற எந்த அமைப்பிலும் அவனால் ஒரு மனிதனாய் சேவைசெய்வது சாத்தியமில்லை. அவன் அதிலிருந்து ஓடிவிடலாம்தான். ராணுவச் சட்டம் அதை குற்றமென்கிறது. ஆனால் மனச்சாட்சி அதை நியாயத்தின்பால் வைக்கிறது. அவன் மனச்சாட்சியின் தீர்ப்பினை ஏற்க முடிவுகட்டினான்.

மறுநாள் காலையிலேயே விடுப்புக்கு எழுதிக்கொடுத்துவிட்டான் உக்கு.

ஒரு மாதத்துக்கு மேலாயிற்று விடுப்பு கிடைக்க. அது கிடைத்த மறுநாளில் காங்கேசன்துறை துறைமுகத்தை நோக்கி அவன் தன் பயணத்தைத் தொடக்கினான். அது வைகாசி விசாகத்துக்கு ஐந்து நாட்கள் முந்தியதாக இருந்தது.

மூன்று நாட்கள் காவலிருந்து ஏறிய கப்பலிலிருந்து திருகோணமலை துறைமுகத்தில் இறங்கி வெளியே வந்தபோது உடம்புபூரா பரவிய ஒரு விடுதலையின் பரவசத்தை உணர்ந்தான் உக்கு.

திருகோணமலைக்கும் அனுராதபுரத்துக்குமிடையே அடர்ந்த வனம் இருந்தது. இன்றும்தான் மர்மங்களினதும், அபூர்வங்களினதும் கொள்கலனாய் இருந்தது அது. அங்கெல்லாம் வன வேடரும், மலை வாழ்நரும் இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பதாக கதைகள் இருந்துகொண்டிருந்தன. அவர்களில் ஒருத்தனாகிவிடுவதே அவனது எண்ணமாக இருந்தது. அது ஒரு வாழ்க்கையை, ஏதோ ஒருவிதமான வாழ்க்கையை, அவனுக்களிக்கும். அவனது ரகசியத்தை தன்னுள் பொத்திவைத்து அது பாதுகாத்திருக்கும்.

உக்கு அனுராதபுரத்திற்கு அங்கிருந்து பஸ் எடுத்தான். மேற்குநோக்கிய திசையில் பெருநிலங் கடந்து உள்ளே உள்ளேயாகச் செல்ல மனித வாடை குறைந்துகொண்டு வந்தது. கிராமங்கள் அருகி வனம் தொடங்கியது. தார்ப் பாதையை செம்மண் தெருவொன்று இடைவெட்டக் கண்டு, தன் வரைபடத்தின்படியான சந்தி அதுவேயென நிச்சயித்து, அவன் இறங்கினான். வேளை மதியம் கடந்திருந்தது. திக்குமட்டும் தெரிந்திருந்தது. வழி தெரியாதிருந்தும் மனத்தில் தோன்றியபடி ஒரு வழியெடுத்தான் உக்கு. அவனை இனி தேவர்களே வழி நடத்துவார்கள்.

இனிமேல் அவன் பயணிக்கவேண்டிய தூரம் அவனது கால் நடையிலிருந்தது. தன்னை ஓரளவு அடையாளம் காணப்படக்கூடிய தூரத்திலிருந்து அவன் விலகி வந்துவிட்டான். தன் சுவடுகளையும் பின்னால் அவன் விட்டுவைக்கவில்லை. இனிமேல் கொஞ்சம் சுயாதீனமுண்டு அவனுக்கு.

அம்மாவுக்கோ, திருமணமாகாதிருக்கும் அந்த கிருஷாந்தி போன்ற ஒற்றைத் தங்கைக்கோ, அக்கா ஜெயஶ்ரீக்கோ அவனெடுத்த வழி தெரியப்போவதில்லை. எப்படியும் அவர்கள் தப்பிப் பிழைத்துக்கொள்வார்கள். அவன் ராணுவத்திலிருந்து காணாமல்போனது சிறிது தாமதத்திலேனும் அவர்களுக்குத் தெரியவரச் செய்யும். அப்போது அவர்கள் ஒருமுறை அழவும் செய்வார்கள். ஆனாலும் சுதாரிப்பது கஷ்ரமாயிருக்காது. அதுபோன்ற கதைகளை அவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். அது அவன் வாழ்ந்துகொண்டிருக்கிற செய்தியை அவர்களிடத்தில் உணரப்பண்ணும். அப்போதும் ஒரு கேள்வி அவர்களில் தொங்கிக்கொண்டிருக்கும். ‘சமாதான காலத்தில் உக்கு ஏன் ஓடினான்?’ அதன் பதிலை ஒருகாலத்தில் அவன் அவர்களுக்குச் சொல்லக்கூடும். அவனது ஊர் அழகானது. அரநாயக்கபோல் அழகான ஊர் எதுவிருக்கிறது இலங்கையில் அல்லது உலகத்தில்? உறவுகளைப்போல் அதையும் அவன் மீளும் காலம் தெரியாமல் பிரிகிறான்.

அம்மாவின் பிரார்த்தனை அவன்கூட வரும்.

துணிவாக அவன் நடக்கத் துவங்கினான்.

இரவுகளில் ஆறுதலைக்கொண்டு, பகல்களில் பயணித்தான்.

கொஞ்சமாய் உண்டு அடுத்த நாளுக்காய் மிச்சம் பிடித்தான்.

நீரும் பாணும் ரின்மீனும் முடிகிறதென எண்ணுகிறவரையில் தூரத்தே அவனுக்கு ஒரு குடியிருப்பு தெரிந்தது.
ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் கலகலப்புடன் பகலை எதிர்கொண்டபடியிருந்தார்கள்.
பயங்கர மிருகங்களும், விஷ ஜந்துக்களும் குடியிருப்பை அண்டிய பகுதியில் அண்டியிருக்காதென்ற நம்பிக்கையில் ஒரு யாவறணை மரத்தோடு சாய்ந்து அமர்ந்தான் உக்கு.

தாகத்துக்குத் தண்ணீர் தேடிப்போல் மெல்லவாய் மரங்களின் உச்சியிலேறிய வெய்யில் குத்துப் பார்வையில் ஒரு தாமரைக் குளத்தைக் கண்டுகொண்டிருந்தது.

அத்தனை நாள் களைப்பையும், அழுக்கையும் கழற்ற உக்கு தாமரைக் குளத்தில் இறங்கினான்.
சிறிதுநேரத்தில் எதிர்க் கரையில் தெரிந்தது, தன் நீளக் கூந்தலை மேலாடையாக்கி இடைவரை தண்ணீரில் மறைந்துகொண்டு நீராடியபடியிருந்த ஒரு கறுத்த பெண்ணின் உருவம். உலகையே மறந்த சுகத்தில் மூழ்கியிருந்து நீரின் குளிர்ச்சியை அவள் கண்டுகொண்டிருந்தாள். நீரில் முங்கி எழுகிறபோது தன் கட்டுடல் கண்டு பரவசம் அடைந்துகொண்டிருந்தாள். தன்னுடல் கண்டு கொள்ளும் பரவசம் வேட்கையின் உச்சம்கொண்டிருக்கிறது.

அவ்வாறான தரிசனங்கள் பெறாதிருந்தவன் உக்கு. அரநாயக்கவின் புத்த கோயில் சுற்றாடலில் வாழ்ந்து, பெரு விசுவாசமில்லாவிட்டாலும் பக்தியை பரம்பரை ஒழுக்கமாய்க் கொண்டிருந்தவன். சில கணப் பொழுதுகளாயிற்று அவன் அந்தக் காட்சியின் கவர்ச்சியிலிருந்து தன்னை மீட்டெடுக்க. அவன் அங்கே தங்குவதாயிருந்தாலும் சுற்றாடல்பற்றி கொஞ்சம் தெரிந்திருக்கவேண்டும். அதற்காகவேனும் அவன் அவளை அறியவேண்டும். அவன் தன்னை அவள் காணும்படி செய்ய துவட்டிய துவாயைப் பிழிந்து காற்றில் உதறினான். அது படார்… படாரென எழுப்பிய சத்தத்தில் அவள் திரும்பினாள்.
ஆண் கண்ட அந்தப் பெண் கிறுங்காமல் நின்றிருந்தாள். தன் நிலை மிகுந்த இயல்புபோன்ற திண்ணத்தில் ஒரு சிறு அசைவுதானும் அவளிடத்தில் எழாதிருந்தது. இலச்சையென்பது அவளுக்கு வேறு ஒன்றாக இருக்கக்கூடும். அதை அவனே கொண்டிருக்கவேண்டும் என்றுகூட அவள் எண்ணியிருக்கலாம்.

அவன் மரத்தோடு ஒதுங்கி உடை மாற்றிக்கொண்டு வர, அவள் முண்டுடுத்தியும் சட்டை அணிந்தும் கொண்டு, கரையிலிருந்து துணிகளை அலசிக்கொண்டிருந்தாள். பின் தன்னை அவனில் ஞாபகமாய்ப் பதித்துவிட்டு மெல்ல நடந்து குடியிருப்பை அடைந்தாள்.

உக்குவுக்கும் அங்கே மறைந்திருக்கும் உத்தேசம் இருந்திருக்கவில்லை. அது அவனது தீர்மானத்தின் அறுதியான அடைவு அல்ல. நடமாட்டத்தை மறைக்காததில் மதியத்துக்கு மேலே குடியிருப்பிலுள்ள பலர் அவனைக் கண்டுவிட்டிருந்தனர். தன்னையல்ல, தன் அடையாளத்தையே அவன் மறைக்க விரும்பினான். அவர்கள் தூர நின்று அவனைக் கண்டபடியிருந்தனர். அவர்கள் அச்சப்பட்டதாய்த் தெரியவில்லை. ஆயினும் முன்னே வந்து அவனை யாரென்று விசாரித்தறியும் துணிச்சலும் இல்லாதவர்களாய்த்  தோன்றினார்கள்.

உக்குவுக்கு பசி வந்தது. பாண் துண்டொன்றும் ஒரு தோடம்பழமும் பையில்  மீதமாயிருந்தன. தண்ணீர் முடிந்திருந்தது. வெற்றுப் போத்தலை எடுத்துக்கொண்டு குடியிருப்பைநோக்கி நடந்தான். குடிநீரெடுக்கும் சுனையேதாவது அருகிலே கண்டிப்பாக இருக்கும். அதையும் அவர்களிடமே அவன் கேட்டுத் தெரியவேண்டியவனாய் இருந்தான். ஒரு குடிசை வாசலில் நின்று உள்ளே இருளிலிருந்த உருவத்திடம் போத்தலை அசைத்துக் காட்டினான். அவளொரு மூதாட்டியாய் இருந்தாள். மூதாட்டி கலயத்தில் தண்ணீர் கொண்டுவந்து போத்தலில் ஊற்றிக் கொடுத்தாள்.

இரண்டு மரங்களுக்கிடையே கட்டிய கொடியில் வற்றலுக்குப் போட்ட இறைச்சித் துண்டுகள் காய்ந்தபடி தொங்கிக்கொண்டிருந்தன. மூதாட்டி இன்னும் வாசலில் நின்று அவனைப் பார்த்தபடியிருக்க ருசி அறியப்போல் ஒரு துண்டை அலாக்காக எடுத்து கடித்துப் பார்த்தான். உப்பும் மிளகாய்ப் பொடியும் பிரட்டிய இறைச்சியாக இருந்தது. இன்னொரு துண்டையும் எடுத்துக்கொண்டு பழையபடி மரத்தடிக்குச் செல்ல திரும்பினான். மதியத்தில் கண்டிருந்த நீள்கூந்தலாள் தூரத்து குடிசையொன்றின் வாசலிலிருந்து ஒரு பெண் குழந்தைக்கு பேன் பார்த்துக்கொண்டிருப்பது கண்டான்.

அவன் ஒரு இறைச்சி வற்றலையும், பாண் துண்டையும் தின்று தண்ணீரைக் குடித்துவிட்டு மரத்தடியிலேயே படுத்துக்கொண்டான். பகலின் அந்தத் தூக்கம் அவனுக்குத் தேவையாகவிருந்தது. இரவு அவனுக்கு விழித்திருக்கும்படியும் நேரலாம். மிருகங்களுக்கும், விஷ ஜந்துக்களுக்கும் மட்டுமில்லை, அந்தக் குடியருப்பு மனிதர்களையும் அறியாதிருந்ததில் அவன் அச்சப்படவே வேண்டும். வேட்டையும் விவசாயமும் தொழிலாய்க் கொண்டிருந்தார்கள் என்பதை தண்ணீர் எடுக்க குடியிருப்புக்குச் சென்றபோது கருவிகள் மூலமும், தானிய வகைகள் காயப்போட்டிருப்பதின் மூலமும் அவன் தெரிந்திருந்தான். ஆனாலும் அவர்கள் அவனை அறிய முனையாததில், அவர்கள் நட்பாய் இருக்கக்கூடியவர்களாய் அவன் காணவில்லை. அவர்கள் அவனைக் காணாதிருப்பதுபோல, காணாமலாக்கிவிடவும் கூடும். அவர்களிடத்தில் நாய்கள் இருந்தன. அவை தூங்கிக்கொண்டிருந்தன. சில நாய்கள் அவனைக் கண்டபோதும் குரைக்கவேயில்லை. வேட்டை நாய்கள் குரைக்காதோ என அப்போது எண்ணினான் உக்கு. அவர்கள் அதுபோல் அம்பு விடுவதற்கும் தெரிந்தவர்களாய் இருக்கலாம். அவற்றின் முனையில் விஷம் தடவி எய்து கொலைசெய்யும் நுட்பம்  அறிந்தவர்களாகவும் இருக்கக்கூடும். அனைத்திற்கும் சாத்தியங்கள் இருந்தன. அவ்வாறான எதன் சாத்தியத்தையும் ஆலோசித்து அடுத்த நடவடிக்கையை எடுப்பது தற்பாதுகாப்பின் அம்சம்.
அவன் தூங்கிப்போனான்.

விழித்தெழுந்ததும் மரத்தடியில் சாய்ந்தான்.

இனி செய்வதென்னவென்ற வினா பாறையாய் அவனுள்ளத்தை அழுத்திக்கொண்டிருந்தது. தானே விரும்பி ஏற்றுக்கொண்ட கடினங்களின் பாதை அது. அவன் தன்னின் சகலதுகளையுமே அங்கே இழக்கக்கூடும். தன்னையும் ஒருவேளை.
மனத்தை யோசனைகளால் நிறைத்துக்கொண்டிருந்த பொழுதில் வனத்தில் இரவு வந்தது.

பறவைகள் சத்தமெழுப்பின.

குடியிருப்பில் ஒன்றிரண்டு வெளிச்சப் புள்ளிகள் தெரிந்தன.

ஆம், இரவு விழுந்துவிட்டது.

அன்றைக்கு விசாகமென்பது திடீரென அவனுக்கு ஞாபகம் வந்தது. புத்த ஞாயிறு தோன்றிய நாள். நிலவையேனும் காண அவன் மேலே தேடினான். ஆங்காங்கே வெளிச்சப் பாளங்கள் விழுந்திருந்தன. நிலவு மரங்களுள் மறைந்தே இருந்தது.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R