"நான் என்  பால்ய ,பதின்மப் பருவத்து வாசிப்பு, எழுத்தனுபவங்களை இங்கு எழுதுவதற்கு முக்கிய காரணம் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இவ்வனுபவங்களை அறிய வேண்டுமென்பதற்காகவே. பொதுவாக எழுத்தாளர்கள் தம் பால்ய, பருவத்து எழுத்து, வாசிப்பனுபவங்களை விரிவாக எழுதுவது குறைவு. எனது அப்பருவத்து அனுபவங்கள் இப்பொழுதும் மகிழ்ச்சியைத்தருவன. இந்நிலையில் இவற்றை வாசிக்கும் இளம் பருவத்தினருக்கும் இவ்வனுபவங்கள் நிச்சயம் இன்பத்தைத்தருவதுடன் , வாசிப்பு, எழுத்தில் ஆர்வமுள்ளவர்களை மேலும் இத்துறைகளில் ஆழ்ந்து ஈடுபடத்தூண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு." - வ.ந.கி -


V.N.Giritharan in his teen days..பதின்ம வயதுகளில் ஈழநாடு மாணவர் மலரில் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் நான் நாவலர் வீதியும், கே.கே.ஸ்.வீதியும் சந்திக்குமிடத்திலிருந்த சாந்தையர் மடப்பிள்ளையார் கோயில் வருடா வருடம் சிவராத்திரி தினத்தையொட்டி நடாத்தும் சமயக் கட்டுரைப்போட்டியில் பங்குபற்றியிருக்கின்றேன். 1971- 1974 காலகட்டத்தில் மூன்று தடவைகள் பங்கு பற்றியிருக்கின்றேன். நாவலர் பள்ளிக்கூடத்தில் போட்டி நடைபெற்றது. அவற்றில் இரு தடவைகள் முதலாவதாகவும், ஒருமுறை இரண்டாவதோ அல்லது மூன்றாவதாகவும் வந்திருக்கின்றேன். பரிசாகச் சான்றிதழும் , சமய நூல்களும் தந்தார்கள். அவற்றில் முதல் பரிசைப்பெற்ற ஒரு கட்டுரையொன்றின் தலைப்பு மட்டும் நினைவிலுள்ளது. அது 'சமயமும், விஞ்ஞானமும்' அதில் டார்வினின் கூர்ப்புக் கொள்கையையும் திருவாசகரின் 'புல்லாய்ப் பூண்டாய்..' என்று வரும் சிவபுராண வரிகளையும் ஒப்பிட்டு விஞ்ஞானம் இன்று கூறியதை அன்றே கூறியவர் மாணிக்கவாசகர் என்று வாதிட்டிருந்தேன். அப்போட்டிகளை நடத்துவதில் ஈடுபாடுள்ள இருவர் இன்னும் என் நினைவிலுள்ளார்கள். ஒருவர் இளம் வயதுடையவர். சாந்தையர் மடப்பிள்ளையார் கோயில் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளவர். நாவலர் வீதியில் வசித்தவர். அவருடன் காணப்பட்ட இன்னுமொருவர் ஆசிரியரைப்போன்று தென்பட்டார். கந்தசாமி என்று அவருக்குப்பெயர் என்று நினைவு. ஏனெனில் பெற்ற பரிசுச் சான்றிதழ்களிலும் இ.கந்தசாமி என்ற பெயரே இருந்ததாக நினைவு (சிலவேளை அது தவறாகக்கூட இருக்கலாம். நீண்ட காலமாகிவிட்டதால் நினைவில் உறுதியாக அப்பெயரில்லை.) ஆனால் பின்னர் கார்க்கியின் நூல்கள், அறிஞர் அண்ணாவின் பகுத்தறிவு நூல்கள் காரணமாகச் சமயம் மீதான ஈடுபாடு எனக்குக் குறைந்தது. கார்ல் மார்க்சின் கோட்பாடுகளை விரிவாக அறிந்த காலகட்டத்தில் விஞ்ஞானமே என் மெய்ஞ்ஞானமாயிற்று. எம் மானுட அறிவுக்குட்பட்ட விடயங்களை அறிவதற்கான, புரிதலுக்கான வழி அறிவியலே என்பதே தற்போது என் நிலைப்பாடு.

குரல் மாறி, மீசை வளர்ந்து 'கோழி கூவும் வயது'ப் பருவம் தொடங்கியபோது என் ஆர்வம் புனைவுகள் எழுதுவதில் திரும்பியது. காதல், பாசம் போன்ற மானுட உணர்வுகளை வைத்துக் கதை புனையும் ஆர்வம் தோன்றியது. அக்காலகட்டத்தில் விதவைப் பெண்ணொருத்திக்கு மறுவாழ்வு கொடுக்கும் நாயகன் ஒருவனை வைத்து நாவலொன்றை சிஆர் கொப்பியொன்றில் எழுதினேன். நாவலின் பெயர் 'பறவைகள் பாடுகின்றன'. அதனை நான் பத்திரிகை, சஞ்சிகை எதற்கும் அனுப்பவில்லை. அது போல் இன்னுமொரு நாவலையும் 'மண்ணின் மாண்பு' என்று எழுதினேன். அதனையும் அனுப்பவில்லை. இதில் 'பறவைகள் பாடுகின்றன' நாவலை என் சகோதர , சகோதரிகள் மற்றும் அவர்களின் நண்பர்கள் சிலர் வாசித்து அதன் வாசகர்களானார்கள்.

இவ்விதமானதொரு சூழலில் 1975இல் சிரித்திரன் நடத்திய 'அ.ந.கந்தசாமி' சிறுகதைப்போட்டிக்கு என் சிறுகதையான 'சலனங்கள்' சிறுகதையை அனுப்பி வைத்தேன்.

இவ்விதமானதொரு சூழலில் 1975இல் சிரித்திரன் நடத்திய 'அ.ந.கந்தசாமி' சிறுகதைப்போட்டிக்கு என் சிறுகதையான 'சலனங்கள்' சிறுகதையை அனுப்பி வைத்தேன். வயதுக்கு மீறிய கதை. நோய்வாய்பட்டிருந்த கணவனுடன் வாழுமொரு பெண்ணின் சலனமுற்ற மனநிலையை மையமாக வைத்துப்பின்னப்பட்ட சிறுகதை. அப்போது நான் யாழ் இந்துக்கல்லூரியில் க.பொ.த (உயர்தர) வகுப்பில் அடியெடுத்து வைத்திருந்த சமயம். அச்சமயம் எமக்குச் 'சீனியர்களான' மாணவர்கள் சிலர் ஆச்சி வீட்டுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் வாடகைக்கிருந்து யாழ் இந்துவில் படித்துக்கொண்டிருந்தார்கள். முல்லைத்தீவுப் பகுதியிலுள்ள முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவ்வீட்டில் குடியிருந்த இன்னுமொரு மாணவனான ராஜரத்தினம் என் வகுப்பு. முரசுமொட்டையைச் சேர்ந்தவர். அவர் மூலமாக அம்முள்ளியவளை மாணவர்களும் எம்முடன் நட்புடன் பழகினார்கள். அவர்களிலொருவர் பெயர் முல்லைத்திலகன். சிறந்த நடிகர். அவர் ராஜாராணியில் வரும் கலைஞரின் சோக்கிரடீஸ் வசனங்கள், கட்டப்போம்மன் திரைப்பட வசனங்கள் மற்றும் வசந்தமாளிகைப்பட வசனங்களையெல்லாம் சிறப்பாகப் பேசுவார். அவற்றை நாம் இரசிப்போம். அவரது கையெழுத்து அழகானது, அவரிடம் எனது சலனங்கள் கதையைக்கொடுக்க அழகான கையெழுத்தில் பிரதியெடுத்துத்தந்தார். அதனைச் சிரித்திரனின் போட்டிக்கு அனுப்பி வைத்தேன். அப்போட்டியில் அக்கதைக்கு ஆறுதற் பரிசு கிடைத்தது. அதுதான் நான் எழுதி அச்சில் வெளியான முதற் சிறுகதை.

இப்படியும் ஒரு பெண். (17.4.77 ஈழநாடு வாரமலர். நூலகம் தளத்திலுள்ளது.)

அதன் பின் சிறுகதைகளை எழுதி ஈழநாடு வாரமலருக்கு அனுப்பினேன். 1976 -1978 காலகட்டத்தில் எனது நான்கு சிறுகதைகள் ஈழநாடு வாரமலரில் வெளியாகின. இன்னுமொரு சிறுகதை 'பல்லி சொன்ன பாடம்' என் பல்கலைக்கழகக் கால கட்டத்தில் வெளியானது. என்னிடமில்லை. அக்காலகட்டத்தில் இன்னுமொரு சிறுகதையான 'ஆலமரத்தடியில் பிறந்த ஞானம்' தினகரன் வாரமஞ்சரியில் வெளியானது. அது வெளியான ஆண்டு 1979 அல்லது 1978இன் இறுதிப்பகுதியாக இருக்க வேண்டும். அது

எனக்குப்பிடித்த சிறுகதைகளில் ஒன்று. நான் வைத்திருந்த தலைப்பு 'நவீன புத்தன்' அதனை தினகரன் 'ஆலமரத்தடியில் பிறந்த ஞானம்' என்று மாற்றியிருந்தது. கதைக்கரு இதுதான்: கடன் சுமை காரணமாகக் கட்டிய மனைவியையும், குழந்தையையும் விட்டு விட்டு , ஓரிரவில் தற்கொலை செய்வதற்காக வீட்டை விட்டுச் செல்கின்றான் நாயகன். வழியில் சிறிது நேரம் ஆலமரமொன்றின் அடியில் தங்கிச் சிந்திக்கின்றான். அங்கு மரத்தின் மறுபுறத்தே ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்ந்து கொண்டிருந்த பிச்சைக்காரத்தம்பதியின் உரையாடலைக்கேட்கின்றான். அதிலிருந்து மனம் மாறியவனாக மீண்டும் வீடு திரும்புகின்றான். வீட்டைத்துறந்த புத்தருக்கு ஞானம் கிடைத்தது அரசமரத்தடியில். இவனுக்குக்கிடைத்ததோ ஆலமரத்தடியில். அவர் திரும்பவில்லை. இவன் திரும்பினான். இச்சிறுகதை வெளியாகி நீண்ட நாள்களின்பின்னரே வெளியானது பற்றி அறிந்தேன். ஆனால் எப்படியோ பத்திரிகைப்பிரதி எனக்குக் கிடைத்தது.

ஈழநாடு வாரமலரில் வெளியான கதைகள் (1976 -1978) வருமாறு:


1. அஞ்சலை என்னை மன்னித்து விடு. (என்னிடமில்லை)

2. இப்படியும் ஒரு பெண். (17.4.77 ஈழநாடு வாரமலர். நூலகம் தளத்திலுள்ளது.) - http://noolaham.net/project/383/38281/38281.pdf

3. மணல் வீடுகள் ( 19.6.77 ஈழநாடு வாரமலர்; நூலகம் தளத்திலுள்ளது. இச்சிறுகதையை ஈழநாடுச் சிறுகதைகள் பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையில் என்னை ஈழநாடுப் பத்திரிகையின் ஏழாவது தலைமுறைப் படைப்பாளிகளிலொருவராகக் குறிப்பிடுகையில் குறிப்பிட்டிருப்பார். ) - http://noolaham.net/project/382/38156/38156.pdf

4. அவள் கூறிய உண்மை. (22.1.78 ஈழநாடு வாரமலர்; நூலகம் தளத்திலுள்ளது.) - http://noolaham.net/project/352/35123/35123.pdf

மணல் வீடுகள் ( 19.6.77 ஈழநாடு வாரமலர்; நூலகம் தளத்திலுள்ளது.)

சலனங்கள் சிறுகதை வெளியானதன்பின் சிரித்திரன் ஆசிரியரின் மகன் ஜீவகனையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இவர் அப்பகுதி இளைஞர்களுடன் அடிக்கடி திரிவார். பல்வேறு இளைஞர் குழுக்கள் அப்பகுதியில் சந்திக்குச் சந்தி இயங்கின. நாம் எம் வயதுக்குரியவர்களுடன் திரிந்தாலும், அவ்வப்போது ஏனையவர்களுடனும் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது நேரம் போக்குவதுண்டு. அவற்றிலொன்று மனோஹரா தியேட்டருக்கருகிலிருந்த சந்திரா கபே. அவர்களிலொருவராகவே ஜீவகன் எனக்கு அறிமுகமானார். அவர் சிரித்திரன் ஆசிரியரின் மகனென்று அறிந்தபோது சலனங்கள் சிறுகதையைப்பற்றிக் கூறியதும் அவர் என்னைச் சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரத்துக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது சிரித்திரன் ஆசிரியர் ஐயனார் கோயிலுக்கண்மையில் வசித்து வந்தார். எனது 'மண்ணின் மாண்பு' நாவலை அவரிடம் கொடுத்துக் கருத்துக் கூறும்படி கேட்டிருந்தேன். அதை அவர் பின்னர் திருப்பித்தரவில்லை. அப்படியே தொலைந்து போனது. சிரித்திரனில் சலனங்கள் சிறுகதையுடன் 'மையல்' என்னும் சிறு கவிதையும், சிட்டு என்னும் சிறுவர் கவிதையும் வெளியாகின. 'மையல்' புதுக்கவிதைப்போட்டிக்கொன்றுக்காக அனுப்பப்பட்டு , பரிசுக்குரியதாக ஒன்றுமே தேர்வு செய்யப்பட்டிருக்காத நிலையில் , பிரசுரிப்பதற்குரியவையாகப் பாராட்டப்பெற்றுப் பிரசுரமான கவிதைகளிலொன்று. அக்காலகட்டத்தில் சிரித்திரன் வெளியிட்ட 'கண்மணி' சிறுவர் சஞ்சிகையிலும் எனது சிறுவர் சிறுகதையொன்று 'அரசாளும் தகுதி யாருக்கு?" என்னும் தலைப்பில் வெளியானது. இது தவிர 'நியதி'

அக்காலகட்டத்தில் சிரித்திரன் வெளியிட்ட 'கண்மணி' சிறுவர் சஞ்சிகையிலும் எனது சிறுவர் சிறுகதையொன்று 'அரசாளும் தகுதி யாருக்கு?" என்னும் தலைப்பில் வெளியானது

என்னும் உருவகக்கதையொன்றும், புத்தாண்டுக் கவிதையொன்றும் ஈழநாடு பத்திரிகையில் வெளியாகின.

இதே சமயம் அக்காலப்பத்திரிகைகளில் புதுக்கவிதைகள் முக்கியத்துவம் பெற்றுப் பல்வேறு பெயர்களில் (உரைவீச்சு, கவிதைத்துளிகள் போன்ற ) பிரசுரமாகத்தொடங்கின. என் கவனம் அவற்றை நோக்கித்திரும்பியது. அவை பற்றி அடுத்த பதிவில்...

[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R