- பதிவுகள் இணைய இதழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான கவிஞர் வேதா இலங்காதிலகம் அவர்களின் கவிதைத் தொகுப்பான 'மனக்கடல் வலம்புரிகள்' இலங்கையில் ஜீவநதி பதிப்பகத்தின் நூற்றி நாற்பத்தெட்டாவது வெளியீடாக வெளிவந்துள்ளது. அத்தொகுப்புக்கு நான் எழுதிய அணிந்துரையிது. நூலைச்சிறப்பாக, அழகான வடிவமைப்புடன் வெளியிட்டுள்ளார்கள் ஜீவநதி பதிப்பகத்தினர். பதிப்பகத்தினருக்கும், கவிஞருக்கும் வாழ்த்துகள். - வ.ந.கிரிதரன் -


- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -கவிஞர் வேதா இலங்காதிலகத்தை நான் முதன் முதலில் அறிந்துகொண்டது 'பதிவுகள்' இணைய இதழ் மூலமாகத்தான். 'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து தமிழகம் தொடக்கம் உலகின் ஏனைய பாகங்கள் பலவற்றில் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் பலர் தம் படைப்புகளை அனுப்பி ஆக்கப்பங்களிப்பு செய்து வருகின்றார்கள். 'பதிவுகள்' எழுத்தாளர் ஒருவரின் கவிதைகள் நூலுருப்பெறுவது மகிழ்ச்சியினைத்தருகின்றது. கவிஞர் வேதா இலங்காதிலகம் இணைய இதழ்கள், தமிழ் வானொலிகள் என ஊடகங்கள் பலவற்றில் அயராது தொடர்ச்சியாக எழுதிவருபவர். தொடர்ச்சியாக , சளைக்காமல் அவர் தொடர்ந்து எழுதிவருவது அவரது எழுத்து மீதான பற்றினை வெளிப்படுத்துமொரு செயல். 

வேதா இலங்காதிலகத்தின் கவிதைகளை வாசித்தபொழுது எனக்கு முதலில் அவற்றில் தென்பட்ட  பிரதான அம்சங்களாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடுவேன். அவை மானுட நேயத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. அவை மானுட உயர்வுக்கான வழிமுறைகளை வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. அவை மானுடர்தம் தாய்மொழியின் முக்கியத்துவத்தை, அதன் மீதான பற்றினை வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. அவை மானுடர்தம் பல்வகை உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.  அவை மானுடர் வாழும் இயற்கைச்சூழலை, அதன் அழகினை விதந்தோடுபவையாகவுள்ளன. இவற்றுடன் அவ்வப்போது அவரது கற்பனையாற்றலை, படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் கவிதைகளில் தென்படும் உவமைகள், உருவகங்கள் அமைந்துள்ளன. இவ்வகையில் சிறப்புற்றிருக்கும் கவிதைகளை உருவாக்க அவர் பாவித்திருக்கும் எளிமையான மொழியின் இனிமையும் அவரது கவிதைகளின் முக்கியமான அம்சங்களிலொன்று. இவை பற்றிச் சுருக்கமாக இனி நோக்குவோம்.

வேதா இலங்காதிலகத்தின் கவிதைகளில் மானுட நேயம் 'நன்மைகளால் மனிதத்தை வாழ வைப்போம்' என்னுமோரு கவிதையில் அவர் பல்வகைக்காரணங்களினால் துவண்டிருக்கும்  மானுடருடன் இதமாகப் பேசுங்கள் என்கின்றார். உலகை வெறுத்திருப்பவனுக்கு உந்தும் வார்த்தை உயர்ச்சிபபடியாகும் என்கின்றார்.

"பந்தங்களின்றி பாசவலை அறுந்து
நொந்து இதயம் துகள் துகளாகுவோர்
வெந்து மனம் வேதனையில் கரைவோர்
வெறுமைத் தனிமையில் விரக்தி கொள்வோர்
வறுமையான சுய தகுதி இழப்போருடன்
வசந்தத் தென்றலாய் இதமாக பேசுதல்
நொந்த இதயத்திற்கு நெம்புகோலாகும் -அது
நொடியில் மனம் இயக்கும் மின்சாரமாகும்."

புகலிடச் சூழல்களில், மாநகரச் சூழல்களில் பந்தங்களின்று பாசவலையறுந்து , மனம் வெந்து கரைந்து , தனிமையில் வாடும் மானுடர் பலர். அவர்களை அரவணைத்து, அவர்தம் வாழ்வினை உயர்த்துவது பற்றிச்சிந்தித்த கவிஞரின் மானுட நேயத்தின் வெளிப்பாடே மேற்படி வரிகள். இதமாகப்பேசுதல் நொந்த இதயத்திற்கு நெம்புகோல். மனத்தை இயக்கும் மின்சாரம். இன்மொழியினை (இதமான பேச்சு) நெம்புகோலுக்கும்,  மின்சாரத்துக்கும் உவமித்திருக்கின்றார் கவிஞர், அதுவும் நெஞ்சையீர்க்கும் எளிய, இன்மொழியில். வாழ்வே வேண்டாமென்று ஒதுங்கியிருப்பவனுக்கு அவன் நிலையினை மாற்ற 'உந்தும் வார்த்தை' முக்கியம். அவ்வார்த்தையால் 'தடுமாற்றம், மனப்பாரம்' விலகும். எளிமையான இந்த மன உதவியானது 'தரணியில் தளர்வோனுக்கு குளிர்மைத்தபோவனம்'.

இவ்வரிகளில் பல இடங்களில் வார்த்தைகள் இன்னோசையுடன் கேட்பதற்கு முக்கிய காரணங்களில் முதன்மையானது வரிகளில் , அடிகளில் காணப்படும் மோனைகளாகும்.  'பந்தங்களின்றி பாசவலை', 'துகள் துகளாகுவோர்', 'வெந்து மனம் வேதனையில்',  'வெறுமைத்தனிமையில் விரக்தி', 'நொந்த இதயத்திற்கு நெம்புகோல்', 'மனம் இயக்கும் மின்சாரம்' இவ்விதமாக மோனைகள் மலிந்து கவிதையின் வரிகளை இனிமையாக்குகின்றன. இவரது கவிதைகளில் காணப்படும் முக்கிய பண்புகளிலொன்று இவ்விதமான மோனைகள் நிறைந்த எளிய மொழிநடை. இதனை அளவாகவே கவிதை கூறும் பொருளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் கவிஞர் பயன்படுத்தியுள்ளார்.

இக்கவிதையில் காணப்படும் மேலும் சில வரிகளைப்பார்ப்போம்.

"இந்த உலகு தனக்கு வேண்டாமென்றவனுக்கு
உந்தும் வார்த்தை உயர்ச்சிப் படியாகும்.
நீந்தும் தடுமாற்றம்,  மனப்பாரம் விலக்கும்.
சிந்து பாடி சுயநம்பிக்கை அரங்கேற்றும்.
வந்த தனிமைத் தடை நீக்கும்.
எந்தப் பணமூட்டை தரும் நன்மையிலும்
எளிமை மனஉதவி, தரணியில் தளர்வோனுக்கு
குளிர்மைத் தபோவனமாகும். தலை உயர்த்தும்."

இங்கும்  'உந்தும் வார்த்தை உயர்ச்சிப்படி', 'தனிமைத் தடை', 'தரணியில் தளர்வோன்' என மோனைகளுடன், 'வந்த, எந்த' போன்ற எதுகைகளுமுண்டு. இக்கவிதையிலுள்ள கீழுள்ள் வரிகளைப் பாருங்கள்:

"தொன்மை மனிதரின் அகதி வாழ்வின்
தன்மை, தகுதி வேறு – இன்று
பன்மை அறிவு பெற்ற மனிதர்
நன்மை வழி நடக்காது மாறுவது
வன்மை வழியைச் சிலர் தேடுவது
உண்மை அறிவுடை மனித சுபாவமல்ல.
வெண்மை உள்ளமாய் நன்மை செய்தால்
அண்மையாய் இறைவன் அருகில் நெருங்கலாம்."

இங்கு 'தொன்மை', தன்மை, பன்மை, வந்த, எந்த' என எதுகைகளுமுள்ளன. இக்கவிதையின் இன்னோசைக்கு மேலுள்ளவாறு கவிதையில் காணப்படும் மோனைகள், எதுகைகளும் முக்கிய காரணம். இவரது கவிதைகள் பலவற்றில் இவ்விதமான மரபுக் கவிதையின் கூறுகள் காணப்படுகின்றன. கீழுள்ள 'உறவுமுறை அழைப்பு.' என்னும் கவிதையைக் கவனியுங்கள்.

"உருபு மயக்கம் தமிழிற்கு உண்டு.
உறவு மயக்கம் மனிதருக்கு உண்டு.
சிறப்புடன் பெயர் கூறி அழைத்தல்
உறவில் மேல் நாட்டுப் பாணி.
உறவு முறை கூறுமெம் பழக்கம்
உறவிற்குத் தரும் ஒரு நெருக்கம்.
உறவு முறையழைப்பு உயர் உரிமை.
உறவின் பாதுகாப்பு, உறவின் விளைநிலம்.

உறவுமுறையில் அழைக்கும் நிராகரிப்பு
உறவுப் பெறுமதி புரியாத நினைப்பு.
இறவாத ஊக்குவிப்பு உறவுமுறை அழைப்புää
உறவிற்கு உபநிடதம், உறவிற்கு உரம்.
சிறப்பு கௌரவம், மன ஆபாசமழிக்கும்ää
துறவு இன்றித் தூக்கி எறியவியலா
நறவுடை நம்பிக்கை நடவு. இறுகிய
உறவுமுறை அழைப்பு மனிதநேய நிறைவு."

இங்கு கவிஞர் தாராளமாகவே மோனைகள், எதுகைகளைப் பாவித்திருகின்றார்.

"உருபு மயக்கம் தமிழிற்கு உண்டு.
உறவு மயக்கம் மனிதருக்கு உண்டு." சிறப்பான ஆரம்ப வரிகள். 

இம்மொழிச்சிறப்புடன் 'தரணியில் தளர்ந்தவனுக்கு உந்தும் வார்த்தை' கூறி உயர்த்துவது வெளிப்படுத்துவது சக மானுடர்கள் மீதான மானுட கவிஞரின் மானுட நேயத்தைத்தான். மானுட நேயத்தை வலியுறுத்துவதுடன் , மானுட வளர்ச்சிக்குரிய வழிமுறைகளை, அறிவுரைகளையும் இவரது கவிதை வரிகள் வெளிப்படுத்துகின்றன.

மானுட உயர்வுக்கான வழிமுறைகளை எடுத்துரைக்கும் கவிதைகள்.
மானுட நேயத்தை வெளிப்படுத்தும் வேதா இலங்காதிலகத்தின் கவிதைகளில் காணப்படும் இன்னுமொரு முக்கிய அம்சம் அவை எடுத்துரைக்கும் மானுட வளர்ச்சிக்கான அறிவுரைகளாகும். உதாரணத்துக்கு 'இலட்சியம்… எட்ட.' என்னும் கவிதையைச் சற்று நோக்குவோம். அதில்வரும் பின்வரும் வரிகள் என்னைக் கவர்ந்தவை:

"உந்தும் உயரெண்ணத்தை
ஏந்துங்கள் மனக்கிண்ணத்தில்!
கந்தக எண்ணம் நீக்கி,
சந்தன வாசனை  தாங்குங்கள்!

சிந்துங்கள் புன்னகை!
பந்தங்கள் இறுகும்!
அந்தம் வரையுங்களுக்கு
ஆனந்தம் சொந்தம்!"

சோர்ந்திருக்கும் , தளர்ந்திருக்கும் மனத்தை உற்சாகத்துடன் தட்டியெழுப்பி நடைபோட வைப்பதற்கு உந்தும் உயரெண்ணம் தேவை. மனக்கிண்ணத்தில் அவ்வெண்ணத்தை ஏந்துங்கள். புன்னகை சிந்துங்கள், பந்தங்களிறுகும். அந்தம் வரை ஆனந்தமிருக்கும்.  அதே சமயம் இவ்விதமாக ஆரோக்கிய எண்ணங்களை மானுடர்தம் மனங்களில் விதைக்கும் கவிதைகளில் ஏற்கனவே கூறியதுபோல் மரபுக்கவிதைகளின்  கூறுகள் மலிந்திருக்கும். மேலுள்ள வரிகளிலும் அதனைக் காணலாம்.

'சத்தியம்' என்னுமொரு கவிதையில் 

'ஊக்கம் தரும் சத்தியப் பாதை
பூக்கள் பரப்பிய பாதையாகும்"  என்கின்றார்.  அதனால் 'பூரண மனிதநேயதேசமாகும் வாழ்வு' என்கின்றார். மனிதநேய தேசமாக வாழ்வினை உருவகிக்கின்றார் கவிஞர் இங்கே. இவை போன்ற மானுட உயர்ச்சிக்கு, வளர்ச்சிக்கு உந்துசக்தியாகவிருக்கும் உயரெண்ணங்களை இவரது கவிதைகள் பலவற்றில் காணலாம்.

தாய்மொழியின் முக்கியத்துவம்
இவரது கவிதைகளில் காணப்படும் இன்னுமோர் அம்சம் தமிழ் மொழிபற்றியது. தமிழ்  மொழியைப்பற்றிக்கூறும் கவிதைகள் இனவெறி பிடித்தவையல்ல. மாறாக மொழிச்சிறப்பை வலியுறுத்துபவை. 'தமிழ்' என்னும் கவிதை கூறுவதென்ன?

"தமிழ் மொழியது தமிழன் அடையாளம்.
தமிழை அணையுங்கள் மனதிற்குக் கும்மாளம்.
தமிழோடிணையுங்கள் வேர் காக்கும் தாராளம்.
தமிழாற் பேசுங்கள் விளைவுகள் ஏராளம்.
தன் மொழியால் இன்பம் விளையும் தாராளம்.
தமிழோடு தரமாக வாழுங்கள்!..வாழுங்கள்!"

அடிதோறும் மோனை வைத்துப்பின்னப்பட்ட மொழி கவிதையின் ஓசைக்கு மிகவும் ஒத்தாசையாகவிருக்கின்றன. இதிலுள்ள தமிழன் போன்ற சொற்பதங்களைத் தவிர்த்திருக்கலாமென்று தோன்றுகின்றது. அதற்குப்பதிலாகத் தமிழர் போன்ற சொற்பதங்களைப் பாவித்திருக்கலாம். அல்லாவிடில் இவை ஆணாதிக்க வெளிப்பாடுகள் எனப் பெண்ணியவாதிகள் விமர்சிக்கக் கூடும்.

மானுட உணர்வுகளின் வெளிப்பாடு!
மானுட உணர்வுகள் பல்வகை. அவற்றில் ஏமாற்றம் கூட ஓருணர்வுதான். கவிஞர் தன் வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்ற உணர்வொன்றினை வைத்துக் கவிதை புனைந்திருக்கின்றார். பொதுவாகப்பட்டமளிப்பு நிகழ்வில் அதற்குரிய ஆடையணிந்துதான் பட்டதாரிகள் செல்வது வழக்கம். ஆனால் இங்கோ 'பெட்டகோ' பட்டம் பெறுவதற்காய் சென்றபோது அவ்விதமான ஆடையேதுமின்றிச் செல்கின்றார். அது ஏமாற்ற உணர்வினைத்தருகின்றது கவிஞருக்கு. ஆனால் அதனை இன்று நினைக்கையில் சிரிப்புத்தான் வருகிறது. அதுவும் வெற்றுச்சிரிப்பு, 'சான்றிதழ் ஏந்திய கோலம்!!' என்னும் கவிதையில் வருகின்றது இவ்வரிகள்.:

"ஏந்திய சான்றிதழ் பட்டமளிப்பு ஆடையின்றி
சாதாரண மனிதராய்ச்  சான்றிதழ் ஏந்தியது
இதுவொரு பெரிய ஏமாற்றம் அன்றெனக்கு.
இன்று நினைத்தாலுமொரு வெற்றுச் சிரிப்புதிரும்."

கவிஞர்கள் பொதுவாகப் பாடுபொருளாக வீடு, வானம், இரவு, புல்லி(ளி)னங்கள் போன்றவற்றையே குறிப்பிடுவர். ஆனால் இங்கு அதுவும் தகர்ந்துபோய் விடுகின்றது. கவிதையென்பது உணர்வின் வெளிப்பாடு. இங்கும் கவிஞரின் ஏமாற்ற உணர்வானது கவிதையாகியுள்ளது.

வேதா இலங்காதிலகத்தின் கவிதைகளில் இயற்கை
பொதுவாகவே கவிஞர்கள் இயற்கையின் வனப்பில் தம்மை மறப்பவர்கள். இயற்கையைப்பொருளாகக்கொண்டு கவிஞர்கள் பலர் கவிதைகளைப் படைத்திருக்கின்றார்கள். வேதா இலங்காதிலகமும் அதற்கு விதிவிலக்கானவர் அல்லர் என்பதை அவரது இயற்கை பற்றிய பல கவிதைகள் புலப்படுத்துகின்றன. தேனீ, நிலவே, நீராடும் நிலவே, இயற்கை அணிகலன்கள் , காற்றே காற்றே போன்ற கவிதைகள் அவரது இயற்கை மீதான ஈடுபாட்டை எடுத்துக்காட்டுகின்றன. 'நீராடும் நிலவே' என்னும் கவிதை வெண்ணிலவைப்பற்றி கூறுகின்றது.

"நீல ஆழியில் நீராடும் நிலவே!
நீயங்கு தனியாக அல்லவே நிலவே!
கோல நட்சத்திர நங்கைகள் உனக்கு
நீள வெண்திரை மறைவு நல்குதல்
விலகாப் பஞ்சுத் திரை விரித்தல்
அழகுக் குளியலறை ஒன்றில்லையென்றா?"

நீலவானில் பவனிவரும் நிலவு கவிஞரின் கற்பனையினைத்தூண்டி விடுகின்றது. 'நீலவான்' அவருக்கு நீலக்கடலாகத் தென்படுகின்றது. நீலக்கடலில் நிலவுப்பெண் நீராடுகின்றாளாம். அவள் குளிப்பதற்குக் குளியலறையின்றா நட்சத்திர நங்கைகள் நீண்ட வெண்மேகத்திரையினால் அவளுக்கு மறைவிடம் ஏற்படுத்துகின்றார்கள் என்றொரு கேள்வியையும் எழுப்புகின்றார் கவிஞர். நீண்ட வெண்திரையினை மேகத்துக்கு உருவகமாக்குகின்றார்.  நீல ஆழியை நீல மேகத்துக்கு உருவகமாக்குகின்றார். கவிஞரின் கற்பனையாற்றலை வெளிப்படுத்தும் வரிகளிவை. இவ்விதம் நீல ஆழியையும், நீள வெண்திரையையும் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ளும் பணியினை வாசகர்களிடம் விட்டு விடும் கவிஞர் அடுத்துவரும் வரிகளில்

"கடல் நீலவானத்திலுன் அழகான
உடல் மூடும் சேலை மேகம்"

என்று நீலவானமே கடலென்றும், உடல் மூடும் சேலையே மேகமென்றும் முன்னர் உருவகங்களாக்கி ஊகிக்கும்  பணியினை வாசகர்களிடம் விட்டுவிடும் கவிஞர் இங்கு அவற்றை உவமைகளாக்கி அவை எவையென்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகின்றார்? எதற்கோ?

சுருக்கமாகக்கூறின் கவிஞர் வேதா இலங்காதிலகத்தின் இக்கவிதைகள் அவரை மனித நேயம்மிக்க கவிஞராக, இயற்கையை உபாசிக்கும் கவிஞராக, கற்பனையாற்றல் மிக்க கவிஞராக, மானுடருக்கு அறிவுரைகள் கூறும் மானுட வழிகாட்டியாக, ஆசிரியராக அவரை வெளிப்படுத்துகின்றன. இவை அவர் எதிர்காலத்தில் இத்துறையில் மேலும் சாதனை படைப்பாரென்ற நம்பிக்கையினை ஏற்படுத்துகின்றன.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R