- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'


அத்தியாயம் முப்பத்தி மூன்று

இவ்வாறாக முடிவு கட்டிய நான், குதிரை இழுத்துச் செல்லும் பாரவண்டியில் ஏறி ஊரை நோக்கிச் சென்றேன். பாதிதூரம் செல்லும்போதே, எனக்கு எதிரே ஒரு பாரவண்டி வருவதைக் கண்டேன். கண்டிப்பாக அது டாம் சாயர்தான். அவன் என் அருகே வரும்வரைக் காத்திருந்து பின்னர் கூறினேன், "நிறுத்துங்கள்" என்று. வண்டி என்னருகே நின்றது. என்னைக் கண்டதும் டாம் சாயரின் வாய் ட்ரங்க் பெட்டியின் மூடி போலப் பிளந்து அப்படியே நின்றும் விட்டது. தொண்டை வறண்டு போனவன் போல இரண்டு மூன்று முறை சிரமப்பட்டு எச்சிலை விழுங்கி விட்டு பின்னர் கூறினான்:

"உன்னைக் காயப்படுத்தும் எந்த விஷயமும் நான் உனக்குச் செய்ததில்லையே. அது உனக்கே தெரியும். எனவே ஏன் நீ இப்படித் திரும்ப வந்து என்னை இவ்வாறு பயமுறுத்துகிறாய்?"

"நான் திரும்ப வரவில்லை. உண்மையில் நான் போகவே இல்லை." நான் கூறினேன்.

எனது குரல் கேட்டு அவனது மண்டை கொஞ்சம் தெளிந்தது போலத் தோன்றியது. ஆயினும் அவன் முழுமையாகத் திருப்தி அடையவில்லை.

"என்னை முட்டாளாக்க முயற்சிக்காதே. உனக்கு நீயே அப்படிச் செய்வாயா என்ன? உண்மையில் நீ ---- நீ ஒரு பேய் அல்லவே?"

"சத்தியமாக நான் பேய் அல்ல." நான் கூறினேன்.

"நல்லது. நான் .........நான் ...........நல்லது. இது கொஞ்சம் சமாதானப்படுத்துகிறது. ஆனால் என்னால் எதுவும் புரிந்து கொள்ள முடியவில்லை. இங்கே பார். நீ கொலை செய்யப்படவில்லையா?"

"இல்லை. நான் கொலை செய்யப்படவில்லை. அது எல்லாமே மற்றவர்களை நம்ப வைக்க நான் நடத்திய நாடகம். இன்னும் நீ நம்பவில்லையென்றால், இங்கே அருகில் வந்து என் சருமத்தைத் தொட்டுப் பார்."

 

அப்படியே அவன் செய்தான். அது அவனைத் திருப்திப்படுத்தியது. என்னை மீண்டும் சந்தித்த ஆனந்தத்தில் அவனுக்குத் தலைகால் புரியாமல் போய்விட்டது. நடந்த அனைத்து விஷயங்களையும் அவன் அந்த நிமிடமே தெரிந்து கொள்ள விரும்பினான். ஏனெனில் எனக்கு நடந்த விஷயங்கள் அனைத்தும் அவன் மிகவும் விரும்பும் மர்மமும், மாபெரும் சாகசங்களும் நிறைந்திருப்பதால் அதை கேட்டுத் தெரிந்துகொள்ளத் துடித்தான். ஆனால், அவனை சிறிது நேரம் பொறுமையாகக் காத்திருக்கும்படி கூறினேன். அவனின் வண்டியை ஒட்டி வந்த ஓட்டுனரை சிறிது நேரம் காத்திருக்கச் சொல்லிவிட்டு என்னுடைய வண்டியில் நானும் டாமும் கொஞ்ச தூரத்திற்கு ஒரு சவாரி போனோம். நான் சிக்கி இருக்கும் பிரச்னை பற்றிக் கூறி இதற்கு என்ன தீர்வு என்று அவனிடம் அறிவுரை கேட்டேன். ஒரு நிமிடம் தொந்தரவு செய்யாது தனித்து விடும்படி அவன் கூறினான். பின்னர் யோசித்தான், யோசித்தான், யோசித்துக் கொண்டே இருந்தான். விரைவில் அவன் இவ்வாறு கூறினான்:

"ஓகே. எனக்கு யோசனை கிடைத்து விட்டது. என்னுடைய பெட்டியை எடுத்து உன்னுடைய வண்டியில் ஏற்றிக் கொள். அது உன்னுடையது என்று கூறிக் கொள். அப்படியே வண்டியைத் திருப்பி மெதுவாக ஒட்டிச் சென்று நீ அடைய வேண்டிய நேரத்திற்கு வீடு சென்று சேர்ந்து கொள். நான் திரும்ப ஊருக்குள் செல்கிறேன். பின் அங்கிருந்து மீண்டும் பயணப்பட்டு நீ வீடு சேர்ந்த கால் மணி அல்லது அரை மணி நேரத்திற்கும் பிறகு நான் வந்து சேர்கிறேன். என்னைப் பார்த்ததாகக் காட்டிக் கொள்ளாதே."

"எல்லாம் சரி. ஆனால் ஒரு நிமிடம் நில்லு. யாருக்கும் தெரியாத, எனக்கு மட்டுமே தெரிந்த இன்னொரு ரகசியம் கேள். அங்கே ஒரு நீக்ரோ இருக்கிறான். அவனை அடிமைத்தனத்திலிருந்து திருடிவிட நான் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். அவன் பெயர் ஜிம். அவன் முதிய மிஸ். வாட்ஸனின் அடிமை ஜிம்" நான் கூறினேன்.

"ஹாங்! ஆனால், ஜிம் வந்து ........." அவன் இழுத்தான். அப்படியே நிறுத்திவிட்டு மீண்டும் யோசிக்கத் தொடங்கினான்.

"நீ என்ன சொல்லப் போகிறாய் என்று எனக்குத் தெரியும். அவனை அப்படித் திருடுவது மிகவும் ஈனத்தனமான, கேவலமான செயல் என்று கூறப் போகிறாய். அவ்வாறு இருந்தால்தான் என்ன? நானே இழிசெயல் செய்பவன்தான். எனவே அவனை நான் திருடத்தான் போகிறேன். நீ இது பற்றி யாரிடமும் கூறக்கூடாது அல்லது தெரிந்தது போலவும் காட்டிக் கொள்ளக் கூடாது. சரியா?"

அவனின் கண்கள் ஒரு கணம் பிரகாசமடைந்தது. "அவனைத் திருட நான் உனக்கு உதவி செய்கிறேன்." அவன் கூறினான்.

யாரோ என்னை துப்பாக்கிக் குண்டுகளால் சுட்டு வீழ்த்தியதை போல கடும் அதிர்ச்சியடைந்தேன். இப்படிப்பட்ட திடுக்கிடும் விஷயத்தை என் வாழ்வில் நான் என்றுமே கேட்டதில்லை. அவன் சொல்லியதைக் கேட்டபின், டாம் சாயரின் மீது எனக்கிருந்த மரியாதை கடகடவென கீழே சரிந்தது என்றுதான் நான் சொல்லவேண்டும். அதை சுத்தமாக என்னால் நம்பவே முடியவில்லை. டாம் சாயர் - ஒரு நீக்ரோ திருடன்?!

"இருக்கவே முடியாது" நான் சொன்னேன், “நீ கேலி செய்கிறாய்."

"இல்லை. நான் கேலி செய்யவில்லை."

"அப்படியானால் நல்லது" நான் கூறினேன், “கேலியோ, உண்மையோ, தப்பி ஓடி வந்த நீக்ரோ பற்றி ஏதேனும் நீ கேள்விப்பட்டால், நீயோ அல்லது நானோ இருவருமே அவனைப் பற்றி ஒன்றும் தெரியாதமாதிரி நடந்து கொள்ளவேண்டும் என்பதை நீ நினைவில் கொள்."

அவனின் ட்ரங்க் பெட்டியை எடுத்து என்னுடைய வண்டியில் நான் வைத்துக் கொண்டேன். பின்னர், அவன் அவன் வழியில் சென்றான். நான் என் வழியில் சென்றேன். உண்மையில் கொஞ்சம் மெதுவாகப் போய் சேர்வதுதான் சரியாக இருக்கும் என்பதை மறந்து, மிகுந்த சந்தோசத்தாலும், நினைவுகளுக்குள்ளே மூழ்கிப் போனதாலும் வேகமாகச் சென்று விட்டேன். ஊருக்குள் போய் திரும்பி வரும் ஒரு பயணத்திற்கு எடுக்கும் நேரத்தை விடக் குறைவான நேரத்திலேயே நான் வீடு போய் சேர்ந்து விட்டேன். கதவினருகே காத்திருந்த அந்த முதிய கனவான் கூறினார்:

"இது மிகவும் பெரிய விஷயம். இந்த கிழட்டுக் குதிரை இத்தனை விரைவாக இந்தப் பயணம் செய்தது என்று யாரேனும் நினைக்கவே முடியாதுதான். அவளுக்குச் சரியான நேரத்தை நான் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அவள் கொஞ்சம்கூட வியர்வை சிந்தவேயில்லை - ஒரு துளி கூட. ஆஹா! அருமை! ஏன், இந்தக் குதிரையை நான் விற்கவே போவதில்லை - இப்போது -அது நூறு டாலர் பணமாக இருந்தாலும் சரி. உண்மையாக நான் மாட்டேன். இந்தப் பயணத்திற்கு முன்பாக இருந்திருந்தால், ஒரு பதினைந்து டாலருக்குத்தான் அவளை விற்றிருப்பேன். அவ்வளவுதான் அவள் மதிப்பு என்று நான் எண்ணியிருந்தேன்."

இது மட்டுமே அவர் கூறினார். எனக்குத் தெரிந்த வரையில் அவரைப் போன்ற இனிமையான அப்பாவியான மனிதன் வேறு யாரும் இருக்க முடியாது. அவர் ஒரு விவசாயி மட்டுமல்லாது ஒரு போதகரும் கூட என்பதில் பெரிய வியப்பு ஏதும் இல்லை. அவருடைய சொந்தக் செலவிலேயே கட்டப்பட்ட மரக்கட்டைகளால் ஆன சிறியதொரு தேவாலயம் அந்த பண்ணையின் பின்புறம் அவர் வைத்திருந்தார். ஒரு தேவாலயமாகவும் மற்றும் படிப்புச் சொல்லித்தரும் ஒரு சிறு பள்ளியாகவும் அதை அவர் நடத்தி வந்தார். வேறு எந்த சுயலாபத்திற்காகவும், மதப்பிரசாரத்திற்காகவும் அதை அவர் பயன்படுத்தவில்லை. அந்த தெற்குப் பகுதியில் பெரும்பான்மையான விவசாயிகள் தங்களின் மதப் பிரச்சாரத்திற்காக அவ்வாறான தேவாலயங்களை பயன்படுத்தி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரைமணி நேரத்திற்குப் பின் டாமின் வண்டி முன்புறமிருந்த மதில் ஏணியின் பக்கமாக இழுத்துக் கொண்டு வந்து சேர்ந்தது. வீட்டு சன்னலிலிருந்து ஒரு ஐம்பது கஜத் தொலைவிலேயே அவன் வண்டி நின்றதால் சன்னல் வழியாக அதை நோக்கிய சேல்லி சித்தி இவ்வாறு கூறினாள்:

“பாருங்கள். யாரோ வந்திருக்கிறார்கள் என்று நான் வியந்து கொண்டிருக்கிறேன். ஏதோ வேற்று ஆள் மாதிரி தெரிகிறது. ஜிம்மி! (அது அவளின் ஒரு குழந்தை) ஓடிப் போய் லிசியிடம் சாப்பிட இன்னொரு தட்டு மேசை மீது வைக்கச் சொல்.”

வெளியாட்கள் அங்கே அதிகம் வந்து பழக்கம் இல்லாததால் அனைவரும் புதிதாக வந்த ஆளைக் காண முன்புற வாயிலை நோக்கி ஓடினர். டாம் அந்த மதில் ஏணியின் மீது ஏறி வந்து வீட்டை நோக்கி நடை போட்டான். அவன் வந்த வண்டி ஊரை நோக்கித் திரும்பச்சென்றது. நாங்கள் அனைவரும் முன்பக்கக் கதவருகே வந்து கூடி நின்றோம். சுற்றிருப்போரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக புதிதாகக் கடையில் வாங்கிய ஆடைகளை டாம் அணிந்திருந்தான். அப்படிப்பட்ட விஷயங்களை அவன் மிகவும் விரும்புவான். இவ்வாறான சூழ்நிலைகளில், தனக்குரிய பாணியை அவன் செய்யும் விஷயங்களில் மிக அழகாகக் கடைப் பிடிப்பான். பரிதாபமான சிறு ஆட்டுக்குட்டி போல பின்பக்கத் தோட்டம் வழியாக மறைந்து வீட்டுக்குள் வரும் சிறுவனல்லவே அவன்! இல்லை! சிலுப்பிக் கொண்டு கம்பீரமாக நிற்கும் ஒரு கிடாரி போன்று, மிகுந்த தன்னம்பிக்கையுடன் அதே சமயம் அமைதியாக அவன் நடந்து வந்தான். எங்களின் முன்பாக வந்து நின்ற டாம் அவனின் தொப்பியைக் கழற்றிய விதம் தூங்கிக் கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகள் இருக்கும் பெட்டியின் மூடியை அவைகளை எழுப்பாமல் மென்மையாகத் திறப்பது போன்றே ஒயிலாகவும் ரம்மியமாகவும் இருந்தது.

“நான் யூகிப்பது சரியானால் ஆர்க்கிபால்ட் நிகோலஸ் வீடுதானே இது?” அவன் கேட்டான்.

“இல்லை, தம்பி!” அந்த முதிய கனவான் பதிலிறுத்தார், “உன்னுடைய வண்டியின் ஓட்டுநர் தவறான வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தது பற்றி நான் வருத்தம் தெரிவிக்கிறேன். நிகோலஸ் என்பாரின் வீடு சாலையின் கீழ்புறமாக ஒரு மூன்று மைல் தொலைவில் தள்ளி இருக்கிறது. அதனால் பரவாயில்லை, உள்ளே வரலாம். உள்ளே வா.”

தனது தோளைக் குலுக்கியபடியே டாம் கூறினான், “நேரம் கடந்துவிட்டது ---அந்த ஓட்டுனரும் கண்ணை விட்டு மறைந்து விட்டார்.”

“ஆம்! அவன் சென்று விட்டான், மகனே! நீ உள்ளே வந்து எங்களுடன் சேர்ந்து உணவருந்து. பிறகு, வேறு ஏதேனும் வண்டி ஏற்பாடு செய்து உன்னை நிகோலஸ் வீட்டில் விட்டுவிட ஏற்பாடு செய்கிறோம்.”

“ஓ! உங்களை அவ்வாறெல்லாம் நான் தொந்தரவு செய்யக் கூடாது. அது பற்றி நான் கற்பனை கூடச் செய்து பார்க்கக் கூடாது. அந்த வீடு வெகு தொலைவு இல்லை என்றால் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை.”

“ஆனால், நீ நடந்து செல்ல நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தெற்கத்தி மக்களின் விருந்தோம்பல் அதற்கு அனுமதிக்காது. தயை செய்து உள்ளே வரவேண்டும்.”

“ஆம்! உள்ளே வா” சேல்லி சித்தியும் கூறினாள், “எங்களுக்கு இதனால் ஒரு துளி அளவு கூட எந்தத் தொந்திரவும் இல்லை. உள்ளே வந்து நீ தங்கவேண்டும். மண்தூசு படிந்த இன்னும் நீண்ட மூன்று மைல் தொலைவு சென்றே நீ நிகோலஸ் வீட்டை அடையவேண்டும். அப்படி நடந்து செல்ல உன்னை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அத்துடன் சாப்பிட உனக்காக ஒரு தட்டு மேசையின்மீது எடுத்து வைக்கச் சொல்லி நீ உள்ளே வரும்போது பார்த்தவுடனேயே நான் கூறிவிட்டேன். எனவே எங்களை ஏமாற்றக் கூடாது. உள்ளே வந்து, உன்னுடைய வீட்டைப் போல் நினைத்து நிம்மதியாக இரு.”

டாம் அவர்களுக்கு நிறைந்த மனத்துடன் மிகவும் நேர்த்தியான முறையில் நன்றி கூறினான். அவர்கள் வறுபுறுத்தி அழைத்த பிறகு உள்ளே வந்தான். ஓஹொயோவில் உள்ள ஹிக்ஸ்வில் என்ற ஊரிலிருந்து புதிதாக இங்கே வந்திருக்கும் தன்னுடைய பெயர் வில்லியம் தோம்ப்ஸன் என்று உள்ளே நுழைந்தவுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். பின்னர், மிகவும் பணிவாகக் குனித்து ஒரு வணக்கம் போட்டான்.

அவன் ஊரான ஹிக்ஸ்வில் பற்றியும், அங்கு வசிப்பாரைப் பற்றியும் தொடர்ந்து ஏதேதோ அவன் பேசிக் கொண்டே சென்றான். நான் மிகவும் நடுக்கமாக உணர்ந்தேன். என்னுடைய துன்பத்திற்கு இந்த நடவடிக்கை எவ்வாறு உதவப் போகிறது என்று கலக்கமுற்று இருந்தேன். இறுதியாக, இப்படி அவன் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், திடீரென எழுந்து சேல்லி சித்தியிடம் சென்று அவள் எதிர்பாராத தருணத்தில் அவளின் உதட்டில் முத்தமிட்டுவிட்டான். பின், ஒன்றுமே நடவாத மாதிரி திரும்ப தன் இருக்கைக்கு வந்து வசதியாக அமர்ந்து கொண்டு மீண்டும் பேசுவதைத் தொடர்ந்தான். அதிர்ச்சியுற்ற சித்தி தனது உதட்டை பின்னங்கைகளால் அவசரமாகத் துடைத்தவாறு குதித்து நின்றாள். பின்னர் மிகுந்த கோபத்துடன் கேட்டாள்: “ஏன், போக்கிரியே!”

அடிபட்டவனைப் போல் காணப்பட்ட அவன் சொன்னான், “நான் மிகுந்த வியப்படைகிறேன், மேடம்!”

“நீ வியப்படைகிறாயா? நல்லது……… நான் யாரென்று நினைத்து விட்டாய்? நல்லவன் என்று உன்னை நான் நினைக்க ஆரம்பிக்கையில் எதற்காக இப்படி எனக்கு முத்தம் கொடுத்தாய்?”

மிகவும் பணிவுடன் தலை குனிந்தபடியே அவன் கூறினான்”

“எந்த அர்த்தத்துடனும் அதை நான் செய்யவில்லை, மேடம்! அதன் மூலம் நான் எந்தத் துன்பமும் கொடுக்க எண்ணவில்லை. நான்……………………..நான்………………….. நான்……….உங்களுக்குப் பிடிக்கும் என்று நான் நினைத்தேன்.”

“ஏன், சின்ன முட்டாளே!” அங்கிருந்த ராட்டையின் நீண்ட கம்பியைக் கையிலெடுத்தாள். ஆயினும், அதை கொண்டு அவனைத் தாக்க முற்படாதிருக்க அவள் மிகவும் முயற்சி செய்தது போல இருந்தது. “அதை நான் விரும்புவேன் என்று எப்படி நீ நினைக்கக் கூடும்?”

“எனக்குத் தெரியாது. அது அவர்கள்……….அவர்கள்……..அவர்கள் அப்படிச் செய்தால் உங்களுக்குப் பிடிக்குமென்று சொன்னார்கள்.”

“எனக்கு பிடிக்குமென்று சொன்னார்களா? அப்படி உன்னிடம் யார் சொல்லியிருந்தாலும் அவர்கள் பைத்தியங்கள்தான். இவ்வாறு ஒரு விஷயத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை. யார் அவர்கள்?”

“நல்லது. எல்லோரும்தான். அவர்கள் எல்லோரும்தான் கூறினார்கள், மேடம்!”

தன்னுடைய கோபத்தை அடக்க அவள் மிகவும் முயற்சித்தாள் கண்கள் படபடவென்று அடிக்க, கைவிரல்களை அவனைக் கீறிவிடுவது போல நீட்டிக் கொண்டிருந்தாள். பின்னர் கூறினாள்:

“யார் அந்த அவர்கள்? அவர்களின் பெயரைச் சொல். இல்லாவிடில் சீக்கிரமே அந்த முட்டாள்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்து விடும்.”

மிகவும் வருத்தமுற்றவனாக அவன் இருந்தான். அவனுடைய தொப்பியைக் கையிலெடுத்துக் கொண்டு தயங்கியவாறே கூறினான்:

“என்னை மன்னித்துவிடுங்கள். இதை நான் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அனைவரும் என்னை இவ்வாறு செய்யச் சொன்னதால் நான் செய்தேன். “அவளை முத்தமிடு” என்று அவர்கள் அனைவரும் கூறினார்கள். அது உங்களுக்கு பிடிக்கும் என்றும் சொன்னார்கள். அவர்கள் எல்லோரும் தனித்தனியாக என்னிடம் இவ்வாறு சொன்னார்கள். என்னை மன்னித்து விடுங்கள், மேடம்! இனி இவ்வாறு நான் செய்யமாட்டேன். உறுதியாக நான் இவ்வாறு செய்ய மாட்டேன்.”


“நீ செய்ய மாட்டாய் ஹா? உன்னை நான் நம்புவேன் என்று நீ நினைக்கிறாய்.”

“இல்லை, மேடம்! நீங்களாகவே என்னை வந்து முத்தமிடு என்று கேட்கும் வரை, சத்தியமாக நான் செய்ய மாட்டேன். அவ்வளவுதான்!”

“நான் வந்து உன்னைக் கேட்கும் வரை? நல்லது. என் வாழ்நாள் முழுதும் இந்த மாதிரி ஒரு ஒன்று நான் கேள்விப்பட்டதேயில்லை. பைபிளில் வரும் மெதூசா போன்று நீ 900 வருடங்கள் வாழ்ந்தாலும் சரி. இல்லை, உன்னை போல வேறு யாரும் வந்தாலும் சரி. நான் ஒருபோதும் அது போன்ற விஷயத்தை உங்களிடம் கேட்க மாட்டேன்.”

“நல்லது” அவன் கூறினான், “இது எனக்கு மிகுந்த திகைப்பைத் தருகிறது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் உங்களுக்குப் பிடிக்கும் என்றதால் நானும் உங்களுக்குப் பிடிக்கும் என்று நினைத்து விட்டேன். ஆனால், நான்……….” அவன் பேச்சை நிறுத்திவிட்டு யாரேனும் தன் மீது பரிதாபப் பார்வை பார்க்கிறார்களா என்று சுற்றிலும் மெதுவாக நோக்கினான். அருகிலிருந்த அந்த முதிய கனவானைப் பார்த்தவுடன் இவ்வாறு கேட்டான்: “அவர்கள் நான் முத்தமிட்டதை விரும்புவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா சார்?”

“நல்லது. இல்லை……..நான்………நான்…..நல்லது, இல்லை. அப்படி ஏதும் நான் நினைக்கவில்லை.”

பின்னர் அந்த அறை முழுதும் மீண்டும் சுற்றி நோட்டமிட்ட டாம் என்னை நோக்கிக் கூறினான்: “டாம்! சேல்லி சித்தி இருகரங்களையும் என்னை நோக்கி விரித்துக் கொண்டு சிட் சாயர் என்று ஓடி வரமாட்டார்கள் என்று நீ நினைக்கிறாயா…………..?”

“அடப்பாவி!” அவள் இடைமறித்தாள் “குட்டித்திருடா! இப்படியா முட்டாளாக்குவது?” அவனை அரவணைக்க ஓடி வந்த அவளைத் தடுத்து அவன் கூறினான்:

“இல்லை, முதலில் அனுமதி கேட்கும் வரை என்னை அணைக்கக் கூடாது.”

அவள் அதன்பின் ஒரு நொடி கூட காத்திருக்கவில்லை. அவனிடம் அனுமதி கேட்டுவிட்டு, கட்டியணைத்து மிகுந்த அன்புடன் மேலும் மேலும் அவனை முத்தமிட்டுக் கொண்டே இருந்தாள். பின்னர், அவனை அந்த முதியவனிடம் திருப்பிக் காட்ட, அவரும் அவனை அணைத்துக் கொண்டார் சிறிது நேரத்திற்குப் பின் அனைவரும் அமைதியடைந்தார்கள். அதன் பின் கேட்டாள்:

“அடத் தங்கமே! இப்படி ஒரு ஆச்சர்யம் என் வாழ்வில் நடந்ததே இல்லை. உன்னை நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை. டாம் மட்டும்தான் வருகிறான் என்று நினைத்தோம். அக்கா இது பற்றி தனது கடிதங்களில் எதுவுமே குறிப்பிடவில்லை. டாம் தவிர வேறு யாரும் வருவதாகச் சொல்லவேயில்லை.”

“அது அப்படிதான். டாம் தவிர வேறு யாருமே வருவதாக திட்டமிடவில்லை,” அவன் கூறினான், “ஆனால், நான் கெஞ்சிக் கூத்தாடி அழுததில், கடைசி நிமிடத்தில் சரி நானும் செல்லலாம் என்று அவள் கூறிவிட்டாள். எனவே, நாங்கள் நதியின் கீழ்ப்புறத்தில் மீது பயணம் செய்து வந்தோம். முதலில் டாம் வந்து வீடு சேர்வது எனவும், நான் ஒரு வேற்று ஆள் போல நடித்து கொஞ்சம் தாமதமாக வந்து சேர்வது எனவும் அதன் மூலம் உங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கவும் அப்போது நாங்கள் முடிவு செய்தோம். ஆனால் அது ஒரு தவறு, சேல்லி சித்தி! இந்த வீடு வேற்று ஆட்களுக்கு உகந்தது அல்ல.”

“இல்லை. உன்னைப் போன்ற குட்டித் திருட்டு பசங்களுக்கு கண்டிப்பாக இல்லை, சிட்! எனக்கு நேர்ந்த அதிர்ச்சியில் உன் வாயில் நன்றாக ஒரு அடி போட்டிருப்பேன். ஆனால், இப்போது அது பற்றி எனக்குக் கவலையில்லை. நீ ஆயிரம் குறும்புகள் செய்து என்னை நக்கலடித்தாலும் உன்னை இங்கே எங்களுடன் வைத்துக் கொள்ள அதை நான் சந்தோசமாக ஏற்றுக் கொள்வேன். அடேங்கப்பா! என்ன நடிப்பு நடித்தாய்! நான் பொய் சொல்லப் போவதில்லை. நீ என்னை முத்தமிட்டதும் அதிர்ச்சியில் இறந்துவிட்டது போலாகி விட்டேன்!”

வீட்டுக்கும் சமயலறைக்கு இடைப்பட்ட நீண்ட பாதையில் இருந்த மேசையில் அமர்ந்து நாங்கள் உணவை உண்டோம். மேசையின் மீது ஏழு குடும்பங்கள் சாப்பிடும் அளவு உணவு இருந்தது. மிகவும் சூடாகவும் இருந்தது. இரவு முழுதும் குளிர்ந்த பாதாளஅறையில் பதப்படுத்தப்பட்டு, காலையில் பெரிய துண்டங்களாக அறுக்கப்பட்ட மனிதக் கறி போன்று கொழுப்புடன் கெட்டியாக இருந்த மாமிசம் வேறெங்கும் காணாதவகையில் அங்கு இருந்தது. நாங்கள் சாப்பிட ஆரம்பிக்கும் முன் சைலஸ் மிக நீண்ட ஆசீர்வாத வழிபாடு செய்தார். அதுவும் வேண்டியதாகத்தான் அப்போது இருந்தது. மிகவும் சூடாக இருந்த உணவு அவரின் நீண்ட ஆசீர்வாதம் முடிந்து கூட எப்போது ஆறிவிடுவது போல ஆறிவிடவில்லை.

அன்று மதியம் முழுதும் நாங்கள் அரட்டை அடித்தோம். டாமும் நானும் அவர்கள் பேசும் எல்லா விஷயங்களையும் உன்னிப்பாகக் கவனித்து வந்தோம். ஆனால், எந்த ஒரு இடத்திலும் தப்பி ஓடி வந்த நீக்ரோ பற்றி பேச்சு அடிபடாததால் நாங்கள் கூர்ந்து கவனித்தது வீண் என்பது போலத் தோன்றியது ஜிம் பற்றிய பேச்சை நாங்களாகவே துவக்க எங்களுக்குக் கொஞ்சம் கலக்கமாக இருந்தது. ஆனால் அன்று இரவு உணவின் போது அங்கிருந்த குட்டிப் பையன்களில் ஒருவன் கேட்டான்: “பா! டாம், சிட், அப்புறம் நான் மூன்று பேரும் ஊருக்குள் நடக்கும் காட்சியைக் காணப் போகட்டுமா?” என்று.

“இல்லை” அந்த முதியவர் கூறினார், “அங்கே ஏதும் காட்சி நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. அப்படியே நடந்தாலும் அதற்கெல்லாம் நீங்கள் போகக்கூடாது. அந்த மோசடிக்காட்சியைப் பற்றி, தப்பி ஓடி வந்த நீக்ரோ நமது நண்பர் பர்டனிடம் நிறையக் கூறியிருக்கிறான். அவன் கூறியதை பர்டன் எல்லாரிடமும் கூறப்போவதாகச் சொல்லிவிட்டுச் சென்றான். எனவே, பார்வையாளர்களான மக்கள் அந்த திமிர் பிடித்த வஞ்சகர்களை இந்நேரம் ஊரை விட்டே அடித்துத் துரத்தியிருப்பார்கள்.”

ஓ! இப்படிப் போகிறதா கதை! இனி யாரும் ஒன்றும் செய்யமுடியாது. அன்றிரவு நானும் டாமும் ஒரே அறையில் ஒரே படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது. எனவே உணவு உண்டு முடித்தவுடன், அனைவரிடமும் நாங்கள் களைப்படைந்திருப்பதாகச் சொல்லி, இரவு வாழ்த்துக் கூறிவிட்டு நேராக எங்கள் அறைக்குச் சென்றோம். அங்கிருந்து சன்னல் வழியாக மேலே ஏறி இடிதாங்கிக் கம்பியைப் பிடித்துக்கீழிறங்கி ஊரை நோக்கிச்சென்றோம். ராஜாவையும், பிரபுவையும் யாரும் இந்நேரம் காட்டிக்கொடுத்திருக்க முடியாது. என்று நான் எண்ணினேன் எனவே, அவர்கள் ஏதேனும் பிரச்சனைக்குள் மாட்டுவதற்குள் அவர்களை எச்சரிக்க நினைத்து வேகமாகச் சென்றேன்.

நாங்கள் ஊரைச் சென்று அடைவதற்குள், நான் கொலை செய்யப்பட்ட விதத்தை நினைத்து அனைவரும் வருத்தமடைந்ததையும், அதன்பின் அப்பா திடீரெனக் காணாமல் சென்று விட்டதையும், இன்று வரை ஊர் திரும்பாததையும் பற்றி டாம் என்னிடம் கூறினான். ஜிம் தப்பி ஓடியதைப் பற்றியும் அங்கிருந்த அனைவரும் அமளி செய்து குதித்துத் தீர்த்தார்கள் என்றும் கூறினான். திருட்டுராஜா நாடகம் போட்டு ஊரை ஏமாற்றும் இந்தக் கயவர்கள் பற்றியும், எங்களின் தோணிப்பயணம் பற்றியும் நேரம் உள்ளவரைக்கும் சொல்லித்தீர்த்தேன். அதற்குள்ளாகவே ஊர் வந்துவிட்டபடியால் எங்கள் பேச்சை நிறுத்திவிட்டு அங்கே பார்த்தபோது, கடலலை போன்ற மக்கள் கூட்டம் கையில் டார்ச் விளக்குப் பிடித்தபடி ஊளைச் சத்தமிட்டுக் கொண்டும், ஊதுகுழலால் ஒலி எழுப்பிக் கொண்டும், சேகண்டி தட்டிக் கொண்டும் வேகமாக வருவதைக் கண்டோம். சாலையின் ஒரு ஓரத்திற்குத் துள்ளிக் குதித்து நகர்ந்து நாங்கள் அந்தக் கூட்டத்திற்கு வழி விட்டோம். அந்தக் கூட்டம் எங்களைக் கடந்து போகையில், அதன் நடுவே ராஜாவும் பிரபுவும் தங்களின் கால்கள் இரும்புக் கம்பிகளால் பிணைக்கப்பட்ட நிலையில் அவர்களால் இழுத்துச்செல்லப் படுவதைக் கண்டேன்.

உடல் முழுக்க தார் பூசிக் கொண்டும், சிறகுகளால் மூடப்பட்டும் மனிதர்கள் போன்றே அவர்கள் தென்படாவிட்டாலும் அது அவர்கள்தான் என்பது எனக்கு நன்றாக அடையாளம் தெரிந்தது. மனித உருவம் போல் அல்லாமல், படைவீரர்களின் தொப்பியில் உள்ள இறக்கைகள் பிரம்மாண்டமாய் உருவெடுத்தது போன்றே அவர்கள் காணப்பட்டார்கள். அந்தக் காட்சி எனக்குக் கடுமையான சோர்வைக் கொடுத்தது. இந்த பாவப்பட்ட கயவர்களுக்காக நான் மிகவும் மனம் வருந்தினேன். இந்த நிலையில் அவர்களைப் பார்த்த பின்னும் அவர்களிடம் கோபம் கொண்டிருப்பது நியாயம் அல்ல என்று நான் எண்ணினேன். அது மிக பயங்கரமான ஒரு காட்சி. தங்களுக்குள், ஒருவருக்கொருவர் எத்தனை குரூரமாக மனிதர்கள் இருக்க முடியும் என்பதன் சாட்சி அது.

தாமதமாக வந்ததால் எதுவும் செய்ய இயலாத நிலையில் நாங்கள் இருப்பதைப் புரிந்து கொண்டோம். கூட்டத்தில் பின்தங்கி, மெதுவாக சென்று கொண்டிருந்த சிலரை அங்கே என்ன நடக்கிறது என்று வினவினோம். பார்வையாளர்கள் அனைவரும் இந்த மோசடி பற்றி எதுவும் தெரியாதவர்கள் போல நடித்துக் கொண்டே உள்ளே காட்சி காணச்சென்றார்களாம். அந்தக் கிழட்டு அப்பாவி ராஜா கும்மாளமிட்டுக் குதித்துக் கொண்டே மேடையின் மத்தியில் வரும் வரை மிகவும் அமைதியுடன் ஒரு வார்த்தை கூட பேசாது அனைவரும் இருந்தார்களாம். பிறகு, கூட்டத்தில் யாரோ ஒருவர் சமிக்கை காட்ட அனைவரும் ஒன்று கூடி அவர்களைப் பிடித்து விட்டார்களாம்.

வீடு திரும்பும் வேளை முன்பிருந்து போல அல்லாது உற்சாகமிழந்த நிலையில் நான் இருந்தேன். எந்தக் குற்றமும் புரியவில்லையெனினும், பங்கப்பட்டு தனக்குள் ஒடுங்கிப் போய், கொஞ்சம் குற்ற உணர்ச்சியும் சேர்ந்து கொள்ள நான் மிகவும் மோசமாக அப்போது உணர்ந்தேன். ஆனால், அது எப்போதுமே அப்படித்தான் இருக்கும் போல. நீங்கள் நல்லது செய்வதற்கும் கெட்டது செய்வதற்கும் பெரிய வித்யாசம் ஏதும் இல்லை. உங்கள் மனசாட்சிக்குப் பொது அறிவு என்று ஒன்று கிடையவே கிடையாது. எப்படிச் செய்தாலும் அது உங்களை ஏதோ ஒரு வகையில் நச்சரித்துக்கொண்டே இருக்கும். என்னிடம் மட்டும் மனிதனைப் போன்ற மனசாட்சி கொண்ட ஒரு மஞ்சள் நாய் இருந்திருந்தால், அதை விஷம் வைத்துக் கொன்றிருப்பேன். உங்கள் மனதின் பெரும்பகுதியை இந்த மனசாட்சி எனும் ஒன்று பிடித்து வைத்துக் கொண்டு இருப்பதால் எந்த லாபமும் இல்லை. மாறாக, அது உங்களுக்குக் கெடுதல் மட்டுமே செய்கிறது. நான் சொன்ன அதே கருத்தைத்தான் டாம் சாயரும் கூறினான்.

[தொடரும்]


முனைவர் ஆர்.தாரணி

- முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R