- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'


அத்தியாயம் முப்பத்தி ஒன்று

அடுத்து வந்த சில நாட்களில் நாங்கள் எந்த ஊரிலும் நிற்காமல் நதியில் மிதந்து கொண்டே இருந்தோம். மேற்கொண்டு தெற்கு நோக்கியே நாங்கள் சென்று கொண்டிருந்ததால், காலநிலை கொஞ்சம் சூடாகவே இருந்து வந்தது. எங்களது வீட்டிலிருந்து மிக நீண்ட தொலைவில் நாங்கள் இருந்தோம். நரைத்த தாடி போல மரத்தின் கொப்புகளிலிருந்து தொங்கி கொண்டிருக்கும் கிளைகளைக் கொண்ட ஸ்பானிஷ் மோஸ் என்ற மரங்களை எல்லாம் எங்களின் பயணத்தில் காண ஆரம்பித்தோம். அவை அப்படி வளர்ந்து தொங்கி கொண்டிருப்பதையும் அவைகளின் அடர்ந்த தோற்றத்தால் காடுகளை இருண்டதாவும், அச்சமூட்டுகிறவிதமாகவும் மாற்றியது என்பதையும் என் வாழ்வில் முதல் முறையாக அப்போதுதான் கண்டேன். ஆபத்துகளைக் கடந்து வந்து விட்டோம் என்று கணக்கிட்ட அந்த மோசடிப் பேர்வழிகள் வரும் வழியில் உள்ள சிறு கிராமங்களில் மீண்டும் தங்கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்தார்கள்.

முதலில் மதுத் தடுப்புக் கூட்டங்கள் நடத்த முயற்சி செய்தார்கள். ஆனால், அவர்களின் மது வாங்கக் கூடத் தேவையானாக வருமானம் அதில் கிடைக்கவில்லை. இன்னொரு கிராமத்தில் நடனப் பள்ளி ஒன்று தொடங்கினார்கள். ஆனால் ஒரு கங்காரு நடனமாடுவதை விடச் சிறப்பாக அவர்கள் ஆடத் தெரியாதவர்கள். எனவே, முதல் தடவை பொது மக்கள் முன்னிலையில் அவர்கள் துள்ளிக் குதித்து, நடனம் என்ற பெயரில் ஏதோ முயன்றபோது, மக்கள் உள்ளே நுழைந்து அவர்கள் மீது ஏறிக் குதித்து ஒரு வழி செய்து அங்கிருந்து துரத்தி அடித்தார்கள். இன்னொருமுறை, தங்கள் பேச்சாற்றல் திறமையை வெளிப்படுத்தும் தொழிலை முயற்சித்தார்கள். ஆனால், அவர்கள் தங்களின் பேச்சுத் திறமையை முழுதும் வெளிப்படுத்தும் முன்பே மக்கள் எழுந்து நின்று தகாத வார்த்தைகளால் அவர்களை அர்ச்சித்து, அங்கிருந்து ஓட ஓட விரட்டினார்கள்.

மதப் பிரச்சாரம், மனோவசியம், மருத்துவத் தொழில், குறி சொல்பவர்கள் இன்னும் என்னவெல்லாம் அவர்களால் முடியுமோ, அதையெல்லாம் முயற்சித்துப் பார்த்தார்கள். ஆனால் எதிலுமே அதிர்ஷ்டம் அவர்களுக்கு துணை நிற்கவில்லை. நாங்கள் அப்படியே தோணியில் மிதந்து கொண்டிருக்கும்போது, தொடர்ந்த ஏற்பட்ட தோல்விகளால் மனம் உடைந்த அந்தக் கயவர்கள், அவர்களிடம் இருந்த அனைத்து உடமைகளையும் தோணியின் மீது வீசிவிட்டு சோர்ந்து போய் பேசாது இருந்தார்கள். தைரியத்தை இழந்து, நம்பிக்கையற்ற தோற்றத்துடன் அரை நாளுக்கு ஒரு வார்த்தை என்ற வகையில் பேச்சைக் குறைத்துக் கொண்டு தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருந்தார்கள்.

இறுதியாக சோகமாக இருப்பதை நிறுத்தி விட்டு, ஒருவருக்கொருவர் ஏதோ ஒரு விஷயத்தைப் பரிமாறிக் கொண்டார்கள். அந்தக் கூம்புக் குடிலுக்குள் சென்று கிசுகிசுத்த குரலில் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு மணி நேரம் ரகசியமாக ஏதோ பேசிக் கொண்டார்கள். முந்தய மோசடிகளை விடக் கடுமையான ஒரு வஞ்சகம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் எங்களுக்கு நன்றாகப் புரிந்தது. அது என்னவாக இருக்குமென்று பலமுறை நாங்கள் எங்களுக்குள் யோசித்துப் பார்த்தோம். கடைசியில் ஏதோ வீடு அல்லது கடையை உடைத்துத் திருட முயற்சிப்பது அல்லது கள்ளப் பணம் தயாரிப்பது அல்லது அது போன்ற ஏதோ ஒரு நயவஞ்சகம் செய்யத்தான் திட்டம் போடுகிறார்கள் என்று நாங்கள் யூகித்தோம்.

அது எங்களை மிகவும் அச்சமூட்டியது. அவர்களின் திட்டம் எதுவாகிலும் நாங்கள் அதற்கு எந்த வகையிலும் துணை நிற்கக் கூடாதென்று இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். அப்படி எங்களையறியாது அவர்களின் திட்டத்தில் நாங்கள் சிக்கிக் கொண்டால், அதிலிருந்து அவர்களைக் கழற்றி விட்டுவிட்டு அவர்களை அவர்களே பார்த்துக் கொள்ளும்படி சூழ்நிலையை மாற்றிவிட வேண்டும் என்றும் முடிவெடுத்தோம். நல்லது. ஒரு நாள் காலை பைக்ஸ்வில் என்ற பாழடைந்த சிறு ஊருக்கு இரண்டு மைல் தொலைவின் கீழ் தோணியை நல்ல பத்திரமான ஓரிடத்தில் மறைத்து வைத்து வைத்தோம்.

எங்களை அங்கேயே மறைந்திருக்கச் சொல்லிவிட்டு, ராஜா மட்டும் கரைக்குச் சென்று யாருக்கேனும் முன்பு அவர்கள் நடித்து ஏமாற்றிய திருட்டுராஜா விளையாட்டுப் பற்றிய தகவல் தெரிந்திருக்கிறதா என்று பார்த்து வரச்சென்றார். (வீடு ஏதேனும் கொள்ளையடிக்க வசதியாக உள்ளதா என்று பார்த்து வரச்செல்கிறார் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். போங்கள். போய் பார்த்து வாருங்கள்! கொள்ளையடித்து விட்டு இங்கு திரும்பி வந்து பார்க்கையில், ஜிம்மும், நானும் உங்களுக்கு கடுக்காய் கொடுத்துவிட்டு தோணியை எடுத்துக் கொண்டு கம்பி நீட்டியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைவீர்கள். அத்தோடு உங்கள் வாழ்நாள் முழுதும் இந்த அதிர்ச்சியிலேயே கழிப்பீர்கள்). அன்று மதியம் வரை அவர் திரும்பி வரவில்லையெனில், பிரபுவும், நானும் எல்லாம் சரியாக இருக்கிறது என்று முடிவு கட்டி ஊருக்குள் அவரைப் பின்தொடர வேண்டும் என்று ராஜா கூறினார்.

எனவே நாங்கள் இருந்த இடத்திலேயே அப்படியே தங்கி இருந்தோம். பிரபு குமுறிக்கொண்டும், கவலைப் பட்டுக் கொண்டும் எரிச்சலுடன் காணப்பட்டார். தொட்டதற்கெல்லாம் எங்கள் மீது எரிந்து விழுந்தார். எங்களால் எதுவுமே சரியாகச் செய்யமுடியாது என்பது போல எங்களிடம் சிறு சிறு விசயத்திற்குக் கூட குறை கண்டுபிடித்தார். ஏதோ உள் அர்த்தம் உள்ளது என்று எனக்குத் தோன்றியது. மதிய வேளை வந்தும் ராஜா வராமல் போகவே எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. அப்படியாவது ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு அதன் மூலமாக இந்த வெட்டி ஆட்களை ஏமாற்ற சந்தர்ப்பம் கிடைத்தால் எங்களுக்கு அது அதிர்ஷ்டம்தானே என்று எண்ணினேன்.

எனவே பிரபுவும் நானும் புறப்பட்டு ராஜாவைத் தேடி அந்த ஊருக்குள் நுழைந்தோம். சீக்கிரமே அவரை மது விற்கும் கடையின் பின்புறம் கண்டோம். மிகுந்த குடிபோதையில் இருந்த அவரை நான்கைந்து வெட்டித்தடியர்கள் சீண்டிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கடுமையாக நிந்தித்தபடி, தன் பலத்தைக் கொண்டு அவர்களைச் சாய்த்து விடுவதாக சவால் விட்டுக்கொண்டிருந்தார். ஆனால், அதிக அளவு அவர் குடித்திருந்ததால், அவர்களை ஒன்றுமே செய்யமுடியாத நிலையில் இருந்தார். பிரபு கடுங்கோபத்துடன் அவரை காச் மூச் என்று திட்டி, “கிழட்டு முட்டாள்” என்று விளித்தார்.

ராஜாவும் பதிலுக்கு பிரபுவை நோக்கிக் கேவலமாக கத்த ஆரம்பித்தார். அடுத்த நொடி இருவரும் ஒருவரையொருவர் தாக்க ஆரம்பித்தனர். எனவே, இதுதான் சமயம் என்று எண்ணிய நான் என் கால்கள் எத்தனை விரைவாய் என்னை இட்டுச் செல்லுமோ அத்தனை விரைவாய் தோணியை நோக்கி ஓடிச் சென்றேன். இது எங்களுக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பம். நீண்ட நேரம் கழித்தே மீண்டும் ஜிம்மையும், என்னையும் அவர்கள் பார்க்க முடியும் என்ற காரணத்தினால் நான் சட்டென முடிவெடுத்தேன். மேல் மூச்சு எடுத்துத் திணறினாலும், மிக்க மகிழ்ச்சியுடன் நான் தோணியை அடைந்தேன். பின்னர் கூவினேன்:

"நாம் செல்ல ஆரம்பிக்கலாம், ஜிம்! நமக்கு வழி இப்போது சரியாகி விட்டது."

ஆனால் எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அந்தக் கூம்புக் குடிலிலிருந்து யாரும் வெளிவரவில்லை. ஐயகோ! ஜிம் சென்று விட்டான். நான் அவனுக்காகச் சத்தமிட்டேன். திரும்பவும் கத்தினேன். பின்பு, மீண்டும் கூவி அழைத்தேன். மரங்கள் அடர்ந்த காட்டுப் பாதையில் ஊளையிட்டுக் கொண்டும், அவனுக்காகக் கத்திக்கொண்டும் நான் ஓடினேன். அப்படியே அமர்ந்து கதறி அழுக ஆரம்பித்தேன். என்னால் அதைத் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. ஆனால், அவ்வாறே வெகுநேரம் அமர்ந்திருக்க இயலாது என்பதால், விரைவிலேயே எழுந்து நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டே சாலையில் நடந்து சென்றேன். அந்தச் சமயத்தில், அவ்வழியாக வந்த ஒரு சிறுவனைக் கண்டேன். ஜிம் பற்றிய விவரணையைக் கூறி இப்படி ஒரு வித்தியாசமான நீக்ரோவை அவன் எங்கேனும் பார்த்தானா என்று அவனை வினவினேன்.

"ஆம்" அவன் கூறினான்

."எங்கே?"

"நதிக்குக் கீழ்பக்கம் இரண்டு மைல் தொலைவில் உள்ள சைலஸ்பிலிப்ஸ் வீட்டில் அவனைக் கண்டேன். தப்பி ஓடி வந்துள்ள நீக்ரோ அவன். எனவே, அவனைப் பிடித்து விட்டார்கள். அவனையா நீ தேடிக் கொண்டிருக்கிறாய்?"

"கண்டிப்பாக இல்லை. காட்டில் ஒன்றிரண்டு மணி நேரம் முன்பு அவனைச் சந்தித்தேன். யாரிடமாவது அவனைப் பற்றிக் கூறினால் என்னுடைய கல்லீரலை அறுத்து எடுத்துவிடுவதாக அவன் என்னைப் பயமுறுத்தினான். நான் இருக்குமிடத்திலேயே என்னை படுத்துக் கிடக்கச் சொன்னான். அப்படியே நானும் செய்தேன். அவன் மிரட்டியதிலிருந்து நான் வெளியில் வரப் பயந்து கொண்டு அங்கேயே இருந்தேன்."

"நல்லது." அவன் கூறினான், "இனி நீ அவனுக்குப் பயப்படத் தேவையில்லை. ஏனெனில் அவனைப் பிடித்து விட்டார்கள். இங்கிருந்து தெற்கே உள்ள ஏதோ ஒரு பகுதியிலிருந்துதான் அவன் ஓடி வந்திருக்க வேண்டும்."

"நல்ல வேளை! அவனைப் பிடித்து விட்டார்கள்."

"நானும் அப்படிதான் சொல்லுவேன். அவனைப் பிடிப்பவர்களுக்கு இருநூறு டாலர் பரிசு என்று கூறினார்கள். சும்மா சாலையில் கிடைக்கும் பணத்தைக் கண்டெடுப்பது போலத்தான் அது."

"ஆம் அப்படித்தான். முதலில் அவனை நான் பார்த்த நிமிஷத்திலிருந்தே, நான் மட்டும் பெரிய ஆளாக இருந்திருந்தால் அவனைப் பிடித்துக் கொடுத்து அந்தப் பணத்தைப் பெற்றிருக்கலாம் என்று நினைத்தேன். யார் அவனைப் பிடித்தது?"

"அது யாரோ ஒரு முதியவன் - ஒரு வெளியூர் ஆள். அந்த ஆளுக்கு நதியின் மேல்திசை நோக்கி அவசரமாகச் செல்ல வேண்டியிருப்பதால், முழுப் பரிசையும் பெற்றுக் கொள்ள நேரமில்லை என்று கூறி நாப்பது டாலர் மட்டும் வாங்கிக் கொண்டான். கொஞ்சம் யோசித்துப் பார். நான் மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தால் ஏழு வருடங்கள் ஆனாலும் காத்திருந்து அந்த பரிசுப் பணம் முழுதும் வாங்கியிருப்பேன்."

"நானும்தான்." நான் கூறினேன், "ஆனால்,நாப்பது டாலர்களுக்கு அவன் தகுதியா என்று தெரியவில்லை. அவ்வளவு குறைவான பணத்திற்கு அவன் நீக்ரோவைப் பிடித்துக் கொடுக்கிறான் என்றால் அதில் ஏதோ வில்லங்கம் உள்ளது என்றுதானே நினைக்கத் தோன்றுகிறது."

"இல்லை. சட்டப்படிதான் அது இருக்கிறது. ஒரு கயிற்றில் உள்ளது போல நேர்கோட்டில்தான் இருக்கிறது. அவன் கையில் உள்ள அச்சடித்த காகிதத்தை நானே பார்த்தேன். அதில் மிகவும் சரியாக விவரிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள ஒரு புகைப் படம் அந்த நீக்ரோ போலவே உள்ளது. அது மட்டுமல்லாது, அவன் நதியின் கீழ்பக்கம் நியூ ஆர்லியன்ஸ் ஊரில் உள்ள ஏதோ ஒரு தேயிலைத் தோட்டப் பண்ணையைச் சார்ந்தவன் என்றும் கூட குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆமாம் சார். அங்கே ஒன்றும் வேடிக்கையான விளையாட்டு நடக்கவில்லை. ஹேய்! மெல்லுவதற்கு உன்னிடம் புகையிலை ஏதேனும் உள்ளதா?"

என்னிடம் எதுவும் இல்லை. எனவே அவன் அங்கிருந்து அகன்றான். நான் மீண்டும் தோணிக்குச் சென்று கூம்புக் குடிலுக்குள் அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தேன். ஆனால் நான் என்ன செய்யவேண்டுமென்பது எனக்குச் சரியாக புரிபடவில்லை. மீண்டும் மீண்டும் யோசித்ததில் தலை வெடித்துவிடும் போலத் தோன்றியது. ஆயினும் இந்த சூழ்நிலையிலிருந்து மீண்டு வருவதற்கான தீர்வு எனக்குக் கிடைத்தபாடில்லை. மொத்தமான இந்த நீண்ட பயணத்தில், எங்களுக்கு எதுவும் பயனில்லாவிட்டாலும் இந்தப் பொறுக்கிகளுக்கு நாங்கள் எத்தனை ஊழியம் புரிந்திருப்போம்! ஈவு இரக்கமற்ற இந்தத் திருடர்கள் யாரோ ஒரு வேற்று மனிதனுக்கு ஜிம்மை விற்று அவனை அடிமைத்தனத்திற்கு பலியாக்கியதன் மூலம் அனைத்தையும் நாசமாக்கிவிட்டார்கள். அதுவும், இவை அனைத்தையும் செய்தது பிச்சைக் காசு நாப்பது டாலர்களுக்காக என்பது அதை விடக் கொடுமை.

ஜிம் மட்டும் அப்படி ஒரு அடிமையாகவே வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அவனின் சொந்த ஊரிலேயே அவன் குடும்பத்துடன் அப்படி வாழ்வது ஆயிரம் மடங்கு சிறந்த விஷயமாக இருக்கும் என்று நான் கருதினேன். டாம் சாயருக்கு எழுதி மிஸ். வாட்ஸனிடம் ஜிம் இங்கே இருப்பதைத் தெரிவிக்கச் சொல்லவேண்டும் என்று நான் எண்ணினேன். ஆனால் அதை இரண்டு காரணங்களின் அடிப்படையில் நிராகரித்து விட்டேன். தன்னை மிகுந்த சாதுர்யமாய் ஏமாற்றி விட்டு நன்றியில்லாது தப்பியோடிய ஜிம் மீது அவள் வெறுப்பிலும், கட்டுக்கடங்காத சீற்றத்திலும் இருப்பதால், மீண்டும் அவள் நதியின் கீழ் பக்கமாக . உள்ள பகுதியில் அவனை விற்று விடக்கூடும் என்பது முதல் காரணம். அவ்வாறு, அவள் விற்கவில்லையெனினும் நன்றி கெட்ட ஜிம்மை இழிவாக நிந்தித்து அவன் வாழ்வில் மோசமான கஷ்டங்களை ஏற்படுத்த அனைவரும் கண்டிப்பாக முனைவார்கள். அவனின் வாழ்க்கை முழுதுமே அவன் அவமானப்பட்டுக் கொண்டும், சோதனைகளைத் தாங்கிக் கொண்டும் வாழவேண்டியிருக்கும். இரண்டாவதாக, என் நிலைமை என்ன ஆகும்? தப்பி ஓடிப்போன ஒரு நீக்ரோவுக்கு சுதந்திரம் பெற்றுத் தர ஹக் ஃபின் உதவியாக இருந்தான் என்பது உலகம் முழுதும் பரவிவிடுமே!

அதன்பின், நான் மீண்டும் அந்த ஊரிலுள்ளோர் எல்லோரிடமும் மிகுந்த அவமானத்துடன் மண்டியிட்டுத் தலைவணங்கியே என்றும் வாழவேண்டியிருக்கும். இப்படியாகத்தான் விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும். மனிதன் தெரியாமல் ஏதேனும் தவறு செய்து விட்டால், அதற்கான விளைவுகளை வாழ்நாள் முழுதும் அனுபவிக்க அவன் விரும்பமாட்டான். ஜிம் மறைந்து வாழும் வரை இந்த மாதிரியான அவமானங்கள் நடக்க வாய்ப்பில்லை என்று நான் முடிவு செய்தேன். எனக்கு நேர்ந்துள்ள சிக்கலும் அதுவேதான்.

இது பற்றி நான் அதிகம் சிந்திக்கச் சிந்திக்க, என்னுடைய மனசாட்சி என்னை இன்னும் அதிகமாக குத்திக் கிழித்தது. மிகவும் கொடூரமாகவும், மோசமாகவும் நான் உணர்ந்தேன். திடீரென ஒரு விஷயம் என் மனதை உலுக்கியது. கடவுளின் அருள்நலம் என்னைப் பளாரென முகத்தில் அறைந்தது போன்றதொரு புதுப் பிரச்னையை உணர்ந்தேன். சொர்க்கத்திலிருந்து கடவுள் எப்போதுமே என்னுடைய கொடும் குணத்தைப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார் என்று எனக்கு அது உரைத்தது. எந்தக் கெடுதலும் எனக்குச் செய்யாத ஒரு அப்பாவி முதிய பெண்மணியின் வேலையாள் நீக்ரோவை நான் திருடிக் கொண்டு வந்துவிட்டேன் என்பதும் கடவுள் அதைக் கண்காணித்துக் கொண்டே இருந்து, தீய அந்தச் செயலை நீண்ட நாள் அனுமதியாது இவ்வாறு தண்டனை கொடுத்து விட்டார் என்பதும் எனக்குப் புலப்பட்டது. மிகுந்த கலக்கத்தில் நான் தரையில் வீழும் அளவு பலமற்றவனாகி விட்டேன். என்னுடைய கெட்ட வளர்ப்பே இதற்குக் காரணம் என்று என்னுடைய நடத்தைக்கு சிறந்த விளக்கங்களை எனக்கு நானே அளித்துக் கொள்ள முற்பட்டேன். ஆனால் "ஞாயிற்றுக் கிழமை பள்ளிகளுக்கு நீ ஒழுங்காகச் சென்றிருந்தால் நீக்ரோக்களுக்கு நீ உதவி செய்தது போல உதவுபவன் நரகத்தின் கொடுந்தீயில் எரிந்து போவான் என்ற தண்டனை பற்றி நீ அங்கே படித்திருப்பாய்" என்று எனக்குள் ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது.

இவ்வாறு சிந்திக்கையில் எனது உடல் நடுக்கமுற்றது. இனி நான் தீய எண்ணங்களைக் கைவிட்டு நல்ல சிறுவனாக இருக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். எனவே, மண்டியிட்டு அமர்ந்தேன். ஆனால், வார்த்தைகள் ஏதும் வெளிவரவில்லை. ஏன் வரவில்லை? கடவுளிடமிருந்து, என்னிடமிருந்து கூட எதையும் நான் மறைக்க முடியாது என்பதே நிஜம். ஏன் அவ்வாறு வார்த்தைகள் வராது தடுமாறுகிறேன் என்று எனக்கு நன்கு புரிந்தது. அதற்குக் காரணம் எனது இருதயம் சரியான இடத்தில் இல்லாமாலிருப்பதே ஆகும். அதற்குக் காரணம் எனக்கு நானே நேர்மையாக இல்லாததே ஆகும். என்னிடமே நான் பொய் சொல்லிக் கொண்டும் அந்தக் கடவுளிடத்தில் பொய் சொல்லிக்கொண்டும் வாழ்ந்திருக்கிறேன்.

எல்லா கெட்டவிஷயங்களையும் விட்டுவிடுகிறேன் என்று சொல்லிக் கொண்டாலும், அடி மனதின் ஆழத்தில் மிகவும் மோசமான செயல்களையே செய்து வந்திருக்கிறேன். அந்த நீக்ரோவின் முதலாளியிடம் சென்று அவன் எங்கே இருக்கிறான் என்ற சரியான விஷயத்தைச் செய்ய வேண்டும் என்பதை வாயால் கூறத்தான் முயற்சித்திருக்கிறேன். ஆனால், என் அடிமனதின் ஆழத்தில் அது ஒரு பொய் என்று எனக்குத் தெரிந்திருந்திருக்கிறது. கடவுளுக்கும் இது தெரிந்திருக்கும். ஒரு பொய்க்காக நான் பிரார்த்திக்க முடியாது என்பதை அன்றுதான் தெரிந்து கொண்டேன்.

எனவே நான் சொல்லிக்கொள்ள முடியாத அளவு கஷ்டத்தில் இருந்தேன். என்ன செய்வதென்றும் எனக்கு அறவே புலப்படவில்லை. இறுதியாக, எனக்கு ஒரு யோசனை தோன்றியது. நான் ஏன் ஒரு கடிதம் எழுதக் கூடாது என்று என்னையே கேட்டுக் கொண்டேன். பின்னர் என்னால் பிரார்த்தனை செய்ய முடியுமா என்று முயன்று பார்த்தேன். ஆஹா! என்னால் இப்போது கொஞ்சம் நிம்மதியாக உணரமுடிவது எவ்வளவு நன்றாக இருக்கிறது! அனைத்துத் துயரங்களும் ஒரு நொடியில் என்னைவிட்டுப் போனது போல உணர்ந்தேன். மகிழ்ச்சியுடனும், பரபரப்புடனும் தாளையும், பென்சிலிலையும் எடுத்து எழுத அமர்ந்து கீழ்கண்டவாறு எழுதினேன்.

மிஸ். வாட்ஸன்! தப்பி ஓடிப் போன உங்களின் நீக்ரோ பைக்ஸ்வில் ஊரின் இரண்டு மைல் கீழே உள்ள ஒரு வீட்டில் இருக்கிறான். மிஸ்டர். பிலிப்ஸ் அவனைப் பிடித்து வைத்திருக்கிறார். நீங்கள் சொல்லியனுப்பினால் அவனை உங்களிடம் கொடுத்து பரிசுத் தொகை வாங்கிக் கொள்வார். -- ஹக் ஃபின்

முதன் முதலாக என் வாழ்வின் பாவங்கள் அனைத்தையும் தொலைத்துக் கட்டி என் மனது சுத்தமாகியது போல நான் உணர்ந்தேன். இந்த அளவு நிம்மதியாய் நான் என்றுமே உணர்ந்ததில்லை. இப்போது, என்னால் கடவுளிடம் பிரார்த்திக்க இயலும் என்று நம்பினேன். ஆனால், உடனே நான் பிரார்த்தனை செய்யத் தொடங்கவில்லை. தாளையும், பென்சிலையும் கீழே வைத்து விட்டு, கீழே அமர்ந்து. எல்லாக் காரியங்களும் அதனதன் போக்கில் சரியாக நடந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்றும், இப்படி நான் வாழ்க்கையில் முழுமையாகத் தொலைந்து போய் கடைசியில் நரகம் செல்லும் நிலை வந்ததையும் பற்றி மீண்டும் சிந்திக்க ஆரம்பித்தேன். இப்படியே எண்ணிக் கொண்டே சென்றேன்.

தொடங்கிய நாள் முதல் இன்றுவரை நதியில் நாங்கள் மேற்கொண்ட பயணத்தை நினைத்துப் பார்த்தேன். என் எண்ணம் முழுதும், பகல் பொழுதானாலும் சரி, இரவு வேளையானாலும் சரி ஜிம் மட்டுமே அந்தப் பயணத்தில் இருந்தான். சில சமயங்களில் நிலவொளியில், சில சமயங்களில் புரட்டிப் போடும் புயலில், சில சமயங்களில் படகில் சௌகர்யமாக மிதந்து கொண்டு, பேசிச் சிரித்துக் கொண்டு, பாடல்கள் பாடிக் கொண்டு கொண்டு என அனைத்து சூழ்நிலைகளிலும் துணை நின்றவன் ஜிம். கடந்து வந்த பயணத்தில் எந்தக் காரணத்தினாலோ, என்னால் அவனை அலட்சியப் படுத்தி ஒதுக்க இயலவில்லை என்பது என் மனதில் உறைத்தது. உண்மையில் எதிர்மாறான நிலை. நான் உறங்க அனுமதித்து என்னுடைய நேரத்தையும் சேர்த்து அவன் தோணியைக் கவனித்துக் கொள்வான்.

அந்தப் பனிமூட்டத்தில் நாங்கள் பிரிந்து சென்று மீண்டும் சேர்ந்தபோது என்னைக் கண்டு அவன் அடைந்த ஆனந்தமும், அந்த குடும்பப் பகையில் நான் சிக்கித் தவித்து மீண்டும் அவனைத் தேடி சதுப்பு நிலம் வந்தபோது அவன் என்னை மனமார வரவேற்று வாழ்த்தியது எல்லாம் என் நினைவில் வந்து போனது. மற்ற சில சந்தோசமான பொழுதுகளையும் நான் நினைவு கூர்ந்தேன். தேன் எடுத்து வருவதிலிருந்து இன்னும் அவனால் செய்ய முடிந்த விஷயங்களை எனக்காகச் செய்து, எனக்குத் தேவையான எல்லாவற்றையும் எனக்குக் கொடுத்து என்னை அரவணைத்துக் காத்தான்.

என்னிடம் அவன் எத்தனை அன்பாக இருந்தான் என்று நான் நினைத்துப் பார்த்தேன். கடைசியாக, நதியின் பக்கம் பயணிக்கையில், படகில் உள்ளவர்களுக்கு அம்மை நோய் போட்டுள்ளது என்று அந்த ஆட்களிடம் கூறி அவனை நான் காப்பாற்றியபோது, நன்றியுணர்வின் மிகுதியால் அவன் என்னை அவனின் நண்பர்களிலேயே மிகச் சிறந்த நண்பன் என்றும் தற்போது அவனுக்காக உள்ள ஒரே நண்பன் எனவும் அவன் கூறியது என்று அனைத்தையும் ஒன்று விடாமல் யோசித்துப் பார்த்தேன். பின்னர் மிஸ். வாட்ஸனுக்கு நான் எழுதி வைத்திருந்த கடிதத்தைக் குனிந்து நோக்கினேன்.

அது ஒரு கடினமான கட்டம். அந்தக் கடிதத்தைக் கையிலெடுத்து வைத்துக் கொண்டேன். இரண்டு விஷயங்களுக்கு மத்தியில் நான் இப்போது தீர்க்கமான முடிவு எடுக்கப் போகிறேன் என்றும் அந்த முடிவுதான் கடைசி வரை நிலைத்து நிற்கும் என்றும் உணர்ந்த நான் கொஞ்சம் நடுக்கமுற்றேன். ஒரு நிமிடம் என் மூச்சை இழுத்துப் பிடித்தவாறு ஆழமாகச் சிந்தித்தேன். பின்னர் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்: "அப்படியானால் சரி. நான் நரகத்துக்கே செல்லத் தயார்."

அது மோசமான வார்த்தைகள் கொண்ட மோசமான எண்ணமாக இருக்கலாம். ஆனால் அதுதான் நான் கூறியது. அதை நான் திரும்பப் பெறவுமில்லை. இனி வர போகும் காலத்திலும் அதை மாற்றியமைக்கும் உத்தேசமும் இல்லை. அது பற்றிய மொத்த எண்ணங்களையும் மனதிலிருந்து அகற்றினேன். மீண்டும் கெட்டவனாகவே மாறிவிடு என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன். இவைகள் செய்யத்தான் நான் வளர்க்கப்பட்டிருக்கிறேன். இவைகள்தான் என்னால் நன்கு செய்ய முடியும். நல்லவனாக இருக்க என்னால் முடியாது. மீண்டும் ஆரம்பித்து, ஜிம்மை அந்த அடிமைத்தனத்திலிருந்து திருட்டுத்தனமாக மீட்பது எப்படி என்ற வேலையை செய்யப் போகிறேன். அதை விட மோசமாக ஏதேனும் செய்ய வேண்டி வந்தாலும் அதையும் நான் செய்ய முழுமனதுடன் தயாராகவே இருக்கிறேன். இந்தக் கணத்திலிருந்து கெட்டவனாக நான் இருக்கவேண்டியிருந்தால், அதையும் நான் சரியாகத்தான் செய்யப் போகிறேன்.

ஜிம்மை அங்கிருந்து எப்படிக் காப்பாற்றுவது என்ற யோசனையில் நான் ஆழ்ந்தேன். பல்வேறு விதமான வழிகளை யோசித்து இறுதியாக எனக்குப் பொருத்தமான ஒரு திட்டத்தை தயாரித்தேன். நதியின் கீழ்புறமாக இருந்த மரங்கள் அடர்ந்த தீவுக்குள் சென்று அதன் பல்வேறு வழிகள் அதை அமைப்பு என அனைத்தையும் குறித்து வைத்துக் கொண்டேன். இருள் சூழ்ந்து வரும் வேளையில், அந்தத் தீவுக்குள் மறைவான இடம் சென்று உறங்க ஆரம்பித்தேன். இரவு முழுதும் உறங்கி விட்டு, காலை வெளிச்சம் முழுதும் பரவும் முன்பே கண் விழித்தேன். காலை உணவை அருந்திவிட்டு, எனது உடைகளை அணிந்து கொண்டேன். மீதி இருந்த உடைகள் மற்றும் சில பொருட்களை ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டு தோணியில் மிதந்து கொண்டே கரையை நோக்கிச் சென்றேன். நதியின் கீழ்திசையில், பிலிப்ஸ் இருக்கும் மர அறுவைக் கூடம் என்று நான் யூகித்த இடத்திற்கு வந்து எனது துணி மூட்டையை மரங்களுக்கிடையே ஒளித்து வைத்தேன். பின்னர், நதியின் கீழ்ப்பக்கமாக இருந்த மர அறுவைக் கூடத்திற்கு ஒரு கால் மைல் தொலையில் கரைக்கு அருகே ஒரு ஓடையின் வாய்ப்பகுதியில் தோணிக்குள் சில பாறாங்கற்களை வைத்து நிரப்பி, மூழ்கடித்து வைத்தேன். எனக்குத் தேவைப் படும்போது, அதை நான் கண்டுபிடிக்க முடியும் என்று எனக்குத் தெரியும்.

பின்னர் அங்கிருக்கும் சாலையை நோக்கி நடந்தேன். அந்த மர அறுவைக் கூடத்தை கடக்கும் சமயம், அங்கிருந்த ஒரு பலகையில் பிலிப்ஸ் மர அறுவைக் கூடம் என்று எழுதியிருந்ததைக் கண்டேன். அதிலிருந்து ஒரு இருநூறு அல்லது முன்னூறு கஜத் தொலைவில் இருந்த பண்ணைத் தோட்டத்திற்குப் போனேன். அங்கு நின்று சுற்றிலும் பார்த்தேன். நன்கு சூரிய வெளிச்சம் இருந்தாலும், யாருமே கண்ணுக்குத் தென்படவில்லை. நான் யாரையும் பார்க்க விரும்பாததால் அது பற்றி நான் கவலைப்படவில்லை. அங்கிருந்த சமவெளியான நிலத்திற்கு சென்றடைய நினைத்தேன். என்னுடைய திட்டப்படி, நதியின் கீழ்க் கரையிலிருந்து அல்லாது, கிராமத்தின் பக்கத்திலிருந்து பிலிப்ஸ் வீடு உள்ள இடத்திற்கு வருவதாகத்தான் நான் காட்டிக்கொள்ளவேண்டும்.

எனவே, வேகமாக ஒரு நோட்டம் விட்டேன். பின்னர் நேராக ஊரை நோக்கிச் சென்றேன். என் தலையெழுத்து! அங்கே நான் முதலில் பார்க்க நேர்ந்த மனிதன் பிரபு தான். முன்பு போலவே மூன்று இரவுகள் நடக்கப் போகும் பழைய கால திருட்டு ராஜா நாடக மோசடிக்கான அச்சடித்த நோட்டீசுக் காகிதங்களை அவர் அங்கே ஒட்டிக் கொண்டிருந்தார். அந்த வஞ்சகர்களுக்குத் தான் என்ன தைரியம்! துரதிஷ்டவசமாக, முன்பே அவரைக் கவனித்து மறைந்து கொள்ள முடியாமல், நேராக அவர் மூஞ்சியில் விழிக்கும்படி ஆகிற்று. திடுக்குற்ற அவர் கூறினார்:

"வாங்க வாங்க! எங்கிருந்து வருகிறீர்கள்?" பின்னர் அவர் ஆர்வத்துடனும், சந்தோஷத்துடனும் கேட்டார், "தோணி எங்கே? நல்ல இடத்தில் மறைத்து வைத்து விட்டாயா?"

"ஏன், அதைத்தான் நான் உங்களிடம் கேட்க இருந்தேன், கருணை மிக்கவரே!" நான் கூறினேன். அதைக் கேட்ட பின்னர் அவர் மகிழ்ச்சி மறைந்து விட்டது.

"அதை ஏன் என்னிடம் நீ கேட்க வேண்டும்?" பிரபு கேட்டார்.

. "நல்லது." நான் கூறினேன், "நேற்று ராஜாவை அந்த மதுக்கடையில் பார்த்த போது, அவருக்குப் போதை தெளிந்து நிதானத்திற்கு வர குறைந்தது நாலு மணி நேரமாவது ஆன பின்புதான் அவரைக் கூட்டிப் போகமுடியும் என்று நான் நினைத்தேன். எனவே, நேரத்தைச் செலவழிக்க இந்த ஊரை ஒரு சுற்று சுற்றினேன். ஒரு மனிதன் என்னிடம் வந்து பத்து சென்ட் காசுகள் கொடுத்து அவனின் கட்டுமரத்தை நதிக்குக் குறுக்கே தள்ளிக் சென்று ஒரு ஆடு வாங்க உதவி செய்ய முடியுமா என்று கேட்டான். நானும் சரி என்று கூறி அவனுடன் சென்றேன். ஆடு வாங்கி இழுத்துக் கொண்டு கட்டுமரத்திற்கு வந்தபோது, என்னிடம் ஆட்டின் கயிறைக் கொடுத்து விட்டு, கட்டுமரத்தை முன்னுக்குத் தள்ளிவிட, அதன் பின்பக்கம் அவன் சென்றான். என்னால் பிடிக்க முடியாத அளவு ஆடு மிகவும் பலமாக இருந்ததால், குதித்து கயிற்றைப் பிடிங்கிக் கொண்டு அது ஓட ஆரம்பித்தது. நாங்களும் அதன் பின்னே ஓட ஆரம்பித்தோம்.”

“எங்களிடம் நாய் இல்லை. எனவே, கிராமம் முழுதுமாக துரத்திக் கொண்டு ஓடி, அந்த ஆடு களைப்படைந்தவுடன் பிடித்தோம். அதைப் பிடிப்பதற்குள் இருட்டு கவிழ்ந்து விட்டது. பின்னர் அதை இக்கரை கொண்டு சேர்த்து விட்டு, தோணியை நோக்கிச் சென்றேன். அங்கே சென்று பார்க்கும் வேளை, தோணி அங்கிருந்து சென்றுவிட்டது. ஏதேனும் கிடுக்குப் பிடியில் சிக்கியதால் அவர்கள் இங்கிருந்து ஓடிவிட்டார்கள் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். போனவர்கள் என்னுடைய நீக்ரோவையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார்கள். உலகத்திலேயே எனக்கு என்று இருந்த ஒருவன் அந்த நீக்ரோ தானே! இப்போது நான் ஒரு புது இடத்தில் இருக்கிறேன். என்னிடம் இனி எந்தச் சொத்தும் கிடையாது. எல்லாவற்றையும்விட பிழைப்பதற்கு ஏதும் வழி கிடையாது. எனவே, இரவு முழுதும் அந்த மரங்களுக்கிடையே அழுது கொண்டே படுத்துறங்கி விட்டேன். ஆனால் தோணிக்கு என்ன ஆயிற்று? அப்புறம் ஜிம்! பாவம் ஜிம்!"

"தொலைஞ்சது போ! தோணிக்கு என்ன ஆகியிருக்கும் என்று எனக்குத் தெரியும். அந்த கிழட்டு முட்டாள் அதற்கு ஒரு விலை பேசி ஒரு நாற்பது டாலர் வாங்கியிருப்பான். நேற்று நாம் அவனை மதுக்கடையில் பார்த்த போது அங்கிருந்த வெட்டிப் பயல்கள் அரை டாலர் பந்தயம் என்று தந்திரம் செய்து, முதலிலேயே அவன் விஸ்கிக்கு செலவளித்தது போக மிச்சமிருந்த ஒவ்வொரு சென்ட் காசுகளையும் பிடிங்கி விட்டார்கள். பின்னர், நாங்கள் இரவு வீடு திரும்பிப் பார்க்கும்போது அங்கே தோணி இல்லை. எனவே "சின்னத் திருட்டுப் பயல் தோணியைத் திருடிக் கொண்டு நதியின் கீழ்திசை நோக்கி ஓடிப் போயிருப்பான்" என்று நாங்கள் பேசிக் கொண்டோம்.

"என்னுடைய நீக்ரோ வை விட்டு விட்டு நான் ஓட முடியுமா? இந்த உலகத்திலேயே எனக்கென்று இருக்கும் ஒரே நீக்ரோ அவன்தான். என் சொத்து அவன் ஒருவன்தான்."


"ஓ! நல்லது. அது பற்றி நாங்கள் சிந்திக்கவேயில்லை. உண்மையில் அவன் நம்முடைய நீக்ரோ என்றுதான் நாங்கள் நினைக்க ஆரம்பித்து விட்டோம். ஆம். அப்படிதான் நாங்கள் நினைக்கிறோம். அவனுக்காக நாங்கள் பட்ட துன்பத்தை யார்தான் சொல்ல முடியும்? நாங்கள் அங்கு சென்று தோணியைக் காணவில்லை என்று கண்டதும் மிகவும் மனம் உடைந்து போனோம். எங்களுக்குத் தெரிந்த ஒரே விஷயம் அந்த ராஜா நாடகத்தை அரங்கேற்றுவதுதான். கையில் காசு வேறு இல்லாது எனது கைப்பையை சுரண்டி சுரண்டி அதில் வெறும் தூள் மட்டுமே வரும்படி காய்ந்து போயிற்று. எங்கே அந்த பத்து சென்ட் நாணயங்கள்? அதை என்னிடம் கொடு."

என்னிடம் கொஞ்சம் பணம் இருந்தது. எனவே அவனுக்கு பத்து சென்ட் அதிலிருந்து நான் கொடுத்தேன். ஆனால் அதை எங்கள் இருவருக்கும் சாப்பிட ஏதாவது வாங்கச் சொல்லி கெஞ்சினேன். என்னிடம் இருப்பது அந்தக் காசு மட்டும்தான் என்று கூறினேன். நேற்றிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை என்றும் கூறினேன். அவர் ஏதும் கூறவில்லை. ஆனால் அடுத்த நொடி, திடீரென ஏன் பக்கம் திரும்பிக் கேட்டார்:

"அந்த நீக்ரோ நம் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு சென்று விடுவானா? அப்படிச் செய்தால் அவனின் தோலை உரித்து விடுவோம்."

"மண்ணைத் தூவி விட்டானா? அவன் ஓடி விட்டானா?"

"இல்லை. அந்த கிழட்டு முட்டாள் அவனை விற்று விட்டான். என்னுடைய பங்கும் அவன் எனக்குக் கொடுக்கவில்லை. இப்போது முழுப் பணமும் போயிற்று."

"அவனை விற்று விட்டார்களா?" அழுது கொண்டே கூறினேன், "ஆனால் அவன் என்னுடைய நீக்ரோ. அந்தப் பணம் என்னுடையது. அவன் எங்கே? எனக்கு என்னுடைய நீக்ரோ திரும்ப வேண்டும்."

"நல்லது. உன்னுடைய நீக்ரோ கண்டிப்பாக உனக்குக் கிடைப்பான். நை நை என்று தொணதொணப்பதை முதலில் நிறுத்து. இங்கே பாரு! எங்களை எங்காவது மாட்டிவிட நினைத்தாயானால்? உன்னை நம்பினால் நான் நாசமாகத்தான் போகவேண்டும். ஏன், நீ எங்களைக் காட்டிக் கொடுக்க துணிந்தால் ..........."

அவர் பேச்சை நிறுத்தினான். பிரபுவின் விழிகளில் தென்பட்ட அப்படிப்பட்ட குரூரத்தை அதற்கு முன் நான் எப்போதுமே கண்டதில்லை. அழுகையால் சிணுங்கிக் கொண்டே நான் கூறினேன்:

"யாரைப்பற்றியும் அர்த்தமில்லாமல் பேசிக் கொண்டு திரிய எனக்கு விருப்பமில்லை. அத்துடன் யாரையும் பற்றி யாரிடமும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க எனக்கு நேரமும் இல்லை. என்னுடைய நீக்ரோவைத் தேடி நான் செல்லவேண்டும்."

இதனால் அவர் கொஞ்சம் கவலையடைந்தவராகக் காணப்பட்டார். கையில் பிடித்திருந்த நோட்டீசுகள் காற்றில் படபடக்க, தன் நெற்றியை சுருக்கிக் கொண்டே ஏதோ யோசித்தார். இறுதியாக அவர் இவ்வாறு கூறினார்:


"உனக்கு நான் ஒன்று சொல்கிறேன். நாங்கள் மூன்று நாட்கள் இங்கே தங்குவதாகத் திட்டமிட்டிருக்கிறோம். எங்களை யாரிடமும் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்றும், அந்த நீக்ரோவையும் அவ்வாறு செய்ய விடமாட்டேன் என்று நீ எனக்கு சத்தியம் செய்து கொடுத்தால், அந்த நீக்ரோவை எங்கு சென்று நீ கண்டுபிடிக்கலாம் என்று நான் கூறுவேன்."

அவ்வாறே நான் சத்தியம் செய்தேன். அவர் கூறினார்:

"அங்கே ஒரு விவசாயி , அவர் பெயர் சைலஸ் பி......." பின்னர் டக்கென்று நிறுத்தினார். உண்மையைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார் போலும். ஆனால் வாக்கியத்தை அவ்வாறு அரைகுறையாக நிறுத்திவிட்டு, வேறு ஏதோ சிந்திக்கத் தொடங்கினார். அந்த ஆள் உண்மை சொல்லும் எண்ணத்தை மாற்றிக் கொண்டது எனக்கு நன்கு புரிந்தது. என்னை அவர் நம்பமாட்டார் என்பது தெரியாதா? அடுத்த மூன்று நாட்களுக்கு நான் அவர்கள் வழியை விட்டு நகர்ந்து எங்காவது செல்வதை அவர் உறுதிப்படுத்த விரும்புகிறார் என்று தோன்றியது. ஒரு நிமிடம் மேலும் சிந்தித்தபிறகு இவ்வாறு கூறினார்:

"அவனை வாங்கிய மனிதன் பெயர் அப்ரம் பாஸ்டர் - அப்ரம் ஜி பாஸ்டர். இந்த ஊரை விட்டு நாற்பது மைல் தொலைவில், லபாயெட் நகருக்குச் செல்லும் வழியில் வசிக்கிறார்."

"ரொம்பச் சரி" நான் சொன்னேன், "மூன்று நாட்களில் நான் நடந்து சென்று அடைந்து விடுவேன். இன்று மதியம் கிளம்புகிறேன்."

"இல்லை. நீ இப்போது கிளம்பு. நேரத்தை வீணடிக்காதே! அதே போல் போகும் வழியில் யாரிடமும் அரட்டை அடித்துக் கொண்டு செல்லாதே. வாயை நன்கு மூடிக் கொண்டு நேராகப் பாதையைப் பிடித்துக் கொண்டு போய் கொண்டே இரு. அப்படிச் சென்றால் எங்களால் உனக்கு எந்த தொந்தரவும் வராது. சொல்வது புரிகிறதா?"

அதைக் கேட்கத்தான் நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். அவனே என்னிடம் இவ்வாறு சொல்வதற்காகத்தான் இத்தனை நேரம் நான் முயற்சி செய்து கொண்டிருந்தேன். என்னுடைய திட்டத்தைச் செயலாக்க நான் தனியாக இருக்கவேண்டியது அவசியம்.

"எனவே நீ செல்லலாம்," அவர் கூறினார், "மிஸ்டர். பாஸ்டரிடம் நீ என்ன வேண்டுமானாலும் கூறிக் கொள்ளலாம். ஜிம் உனது நீக்ரோ என்று அவரை நம்பவைக்க நீ முயற்சிக்கலாம். சில முட்டாள்களுக்கு எழுத்து மூலமான எந்த பத்திரமும் தேவையில்லை. நல்லது. அப்படித்தான் இங்கே தெற்குப்பக்கம் நடக்கிறது. இந்த நோட்டீசு மற்றும் பரிசுப் பணம் இரண்டும் பொய் என்று அவர்களிடம் நீ கூறினால் அவர்கள் ஒருவேளை உன்னை நம்பக்கூடும். அதனால்தான் அவனை முதலில் விடுவிக்க நீ வந்துள்ளதாக அவர்களிடம் விளக்கம் கூறு. இன்னும் எது வேண்டுமானாலும் கூறிக் கொள். ஆனால் போகும் வழியின் இடையில் இங்கேயும் அங்கேயும் என்று இவற்றை எல்லாம் கூறிக் கொண்டிருக்காதே!"

பிறகு நான் அங்கிருந்து ஊரின் பின்பக்கமாகச் சென்றேன். நான் எந்தத்திசையிலும் சுற்றிப் பார்க்கவே இல்லை. ஆனால், அவர் என்னைக் கண்காணிப்பது போன்றதொரு உணர்வு எனக்கு இருந்தது. கூடிய விரையில் அவரைக் களைப்படையச் செய்ய வைக்க என்னால் முடியும். எனவே முதலில் நேராக ஊருக்குள் ஒரு மைல் தூரம் சென்று பின்பு நின்றேன். அதன் பிறகு மீண்டும் ஒருமுறை பின்பக்கமாக வந்து பிலிப்ஸ்ஸின் பண்ணைக்குள் நுழைந்தேன். அங்கும் இங்கும் இனி முட்டாள்தனமாக அலையாமல் என்னுடைய திட்டத்தை அப்போதே நிறைவேற்றுவது என்ற எண்ணத்தில் நான் உள்ளே நடக்க ஆரம்பித்தேன். ராஜாவும், பிரபுவும் அந்த ஊரிலிருந்து வெளியேறும் வரை ஜிம் ஏதாவது சொல்லிவிடாமல் இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். மேற்கொண்டு அவர்கள் மூலமாக எங்களுக்கு எந்தத் துன்பங்களும் நேர வேண்டாம் என்பது என் எண்ணம். அவர்களால் நான் அனுபவித்த தொல்லைகள் இத்தோடு போதுமடா, சாமி! வாழ்க்கை மொத்தத்திற்குமாகச் சேர்த்து அவர்களைத் தலை முழுகுவது நல்லது என்று நான் அப்போது விரும்பினேன்.


முனைவர் ஆர்.தாரணி

- முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R