- மார்க் ட்வைன் -முனைவர் ஆர்.தாரணிஎன் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'


அத்தியாயம் பதினைந்து


தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்)- 15தெற்கு இல்லினோயில் உள்ள கைரோ நகருக்குச் சென்று சேர இன்னும் மூன்று இரவுகள் பிடிக்கும் என்று நாங்கள் கணக்கிட்டோம். அங்கேதான் ஒஹையோ நதி மிஸிஸிப்பி நதியில் வந்து கலக்கிறது. அங்கே செல்லத்தான் நாங்களும் விரும்பினோம். அங்கே இந்தத் தோணியை நல்ல விலைக்கு விற்று விட்டு, ஒரு நீராவிப்படகு எடுத்துக் கொண்டு ஒஹையோ நதியில் பயணம் செய்து, அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களுக்குச் செல்ல விரும்பினோம்.

இரண்டாம் நாளிரவு பனிமூட்டம் ஆரம்பித்தது. கடுமையான பனிமூட்டத்தினூடே படகைச் செலுத்திச் செல்வது அறிவீனமான செயல். எனவே சிறிய தீவு போன்ற பகுதிக்கு சென்று அங்கே காத்திருப்பது என்று முடிவு செய்தோம். தோணியை அந்தத் தீவில் கட்டக் கயிற்றுடன் துடுப்பை வலித்துக் கொண்டு செல்லும்போது அங்கே சிறு சிறு செடிகள் மட்டுமே இருந்தன. நதிக்கரையின் ஓரத்தில் இருந்த இளம் செடிகளை நோக்கி கயிற்றை வீசினேன். ஆனால் நதி நீரின் விசை மிகவும் வலுவாக இருந்ததால், தோணி இழுத்துக்கொண்டு கயிறு சுற்றியிருந்த செடிகளை வேரோடு அறுத்துக் கொண்டு வந்து விட்டது. கடுமையான பனிமூட்டம் முற்றிலும் சூழ்ந்து கொண்டுவர நான் பீதியில் வலுவிழந்தேன்.

தோணி கண்ணைவிட்டு மறைந்தது. இருபது அடிகளுக்கு முன் இருப்பது எனக்குத் தெரியாத அளவு பனிமூட்டம் மறைத்திருந்தது. ஒரு நிமிடம் அச்சத்தில் உறைந்து நின்ற நான், அடுத்த நொடி சுதாரித்துக் கொண்டு நான் இருந்த இலேசான படகிலிருந்த துடுப்பை இறுகப் பற்றி வேகமாய் வலிக்கலானேன். ஆனால் அது நகரவேயில்லை. அவசரத்தில் அந்த படகைக்கட்டியிருந்த கயிறை அவிழ்க்க மறந்திருக்கிறேன். வெளியே குதித்து அதன் கயிற்றை அவிழ்க்க முயற்சி செய்தேன். ஆனால் மிகுந்த பரபரப்பில் நடுங்கிக் கொண்டிருந்த எனது கரங்கள் அக்காரியம் செய்யப் பயனற்றுப் போயின.

கயிற்றை அவிழ்த்த உடனே, எங்களது தோணியை நோக்கி செலுத்தினேன். தீவின் கரையை ஒட்டி மிகுந்த சீற்றத்துடன் துடுப்பை வலித்தேன். அந்த விஷயம் சரியாகத்தான் சென்றது. ஆனால் அந்த சிறு தீவின் நீளம் அறுபது அடி கூட இல்லாததால் அதன் கடைசிப் பகுதிக்குச் சென்றவுடன், திடமான வெள்ளைப் பனி மூட்டத்தில் நான் சிக்கினேன். ஒரு இறந்த மனிதனுக்குக் கூட தான் எங்கே செல்கிறோம் என்று தெரிந்திருக்குமோ என்னவோ, எனக்கு அந்தக் கணம் எதுவுமே புலப்படவில்லை.

இனி துடுப்பு வலித்தால். கரையில் முட்டுவேனோ அல்லது தீவில் கொண்டு இடிப்பேனோ என்று தெரியாததால், துடுப்பு வலிப்பதை நான் நிறுத்தினேன். அந்த சமயத்தில் என் கைகளைச் சேர்த்துப் பிடிக்கக் கூட இயலாத அளவு அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்த நான் அப்படியே அசையாமல் உக்கார்ந்து மிதந்து கொண்டிருப்பது என்று முடிவு கட்டினேன். நதியில், தூரத்தே இருந்து ஒரு விளிச்சப்தம் கேட்டதும், எனது உற்சாகம் மீண்டும் தொற்றியது. அந்த ஒலியை மீண்டும் கேட்பதற்காக கவனமாக துடுப்பு வலிக்க ஆரம்பித்தேன். அடுத்த முறை அந்த ஒலியைக் கேட்டவுடன், அந்த ஒலியை நோக்கித் தான் செல்லவில்லை என்றும் அதனின் வலது புறம் சென்று கொண்டிருப்பதையும் உணர்ந்தேன். அடுத்த முறை கேட்டபோது அதனிலிருந்து இடது பக்கம் போய்க்கொண்டிருந்தேன். அந்த ஒலியை தொடர்ந்து செல்வதை விட்டுவிட்டு அங்கேயே எல்லா இடங்களிலும் சுற்றி வந்திருக்கிறேன் என்பதால் அந்த ஒலி கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு நீங்கியது.

அந்த மடையன் விடாமல் தகர டப்பாவில் அடித்திருந்திருக்கலாம் என்று நான் எண்ணினேன். ஒரு விளிக்கும் இன்னொரு விளிக்கும் இடையிலான நேரம் எனது படகைச் சரியாக திருப்ப இயலாது திசை மாற்றுகிறது. ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. அந்த விளிச்சப்தம் வெகு விரைவில் எனது பின் புறம் கேட்கும் வரை நான் தொடந்து துடுப்பு வலித்துக்கொண்டே இருந்தேன். எனக்கு இப்போது நன்கு புரிந்து விட்டது. ஒன்று நான் யாரோ ஒருவரது விளிச்சப்தத்தை தொடர்ந்து கொண்டு போயிருக்க வேண்டும் அல்லது நான் மொத்தமாக ஒன்றும் புரியாமல் திரும்பித்திரும்பி சுற்றிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

துடுப்புகளைக் கீழே எறிந்தேன். மீண்டும் அந்த விளிச்சப்தம், இப்போதும் எனது பின்பக்கம் இருந்து ஒலித்தது. ஆனால், இந்த முறை வேறு ஒரு திசையிலிருந்து கேட்டது. என்னை நோக்கி வருவது போல ஒலி இருந்தாலும், அவ்வப்போது இடம் மாறிக் கொண்டே இருந்தது. நான் அதற்கு பதில் ஒலி எழுப்பிக்கொண்டே இருந்தேன். வெகு விரைவில் என் முன்புறமாக அந்த ஒலி கேட்டது. நதிநீரின் விசை படகின் தலையை நீரின் சுழலுக்கு ஏற்பத் திருப்புகிறது என்று இப்போது நான் அறிந்து கொண்டேன். எனவே வேறு யாரோ அல்லாது ஜிம்தான் ஒலி எழுப்பிகிறான் எனும் பட்சத்தில் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. இயல்பான நாட்களில் இருப்பது போல பொருட்கள் கேட்கவோ பார்க்கவோ முடியாத அந்தக் கடும் பனிமூட்டத்தில் குரல்களை அடையாளம் கண்டுபிடிப்பது மிகுந்த சிரமமாக இருந்தது.

தொடர்ந்துகொண்டேயிருந்தது விளிச்சப்தம். ஒரு வினாடி அல்லது அதற்கும் அதிகமான நேரத்தில் சரிவான கரைப்பகுதியில் புகைமூட்டப்பேய்கள் போன்று அடர்ந்து நிற்கும் மரங்களுடன் நான் குறுக்கே சறுக்கிச்சென்று கொண்டிருந்தேன். நீரின் விசை என்னை இடது புறம் தூக்கி எறிந்து நான் அதனூடே இழுத்துச் செல்லப்பட்டேன். தடைகளுக்குள் புகுந்து செல்லும் போதெல்லாம் நதிநீர் இரைச்சலுடன் உறுமியது.

அடுத்த சில வினாடிகளில், அனைத்தும் திடமான வெள்ளையாக மாறி அசைவற்றுப் போனது. முழுமையாய் அசைவற்ற நிலையில் நானும் அமர்ந்து எனது இதயம் பலமாய்த் துடிப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டேன். அடுத்த முறை நான் மூச்சு விடுவதற்குள் எனது இருதயம் நூறுமுறை படபடத்துக் கொண்டது என்பதையும் நான் கணக்கிட்டுக் கொண்டேன்.

அதன்பின் எனது முயற்சியைக் கைவிட்டேன். என்ன நடக்கிறது என்பதையும் நான் நன்கு புரிந்து கொண்டேன். நான் இருந்த அந்த செங்குத்தான கரை ஒரு தீவில் இருந்தது. எனக்கு எதிர்ப்புறமான கரைக்கு ஜிம் மிதந்து சென்று சேர்ந்திருக்கக் கூடும். பத்து நிமிட நேரத்தில் கடந்து செல்ல இது ஒன்றும் மணல் சூழ்ந்த சிறிய டௌஹெட் திட்டு அல்ல. மரங்கள் அடர்ந்து இருக்கும் அந்தப் பிரதேசம் நல்ல பரப்பைக் கொண்ட ஒரு தீவு. ஐந்து அல்லது ஆறு மைல் தூர நீளமும் அரை மைல் தூர அகலமும் கொண்ட ஒரு பெரிய தீவு.

என் காதுகளை ஒலியின் திசைக்குத் திறந்து வைத்துக் கொண்டு அமைதியாய் அமர்ந்து ஒரு பதினைந்து நிமிடம் அப்படியே சென்று கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். மணிக்கு நாலு அல்லது ஐந்து மைல் வேகத்தில் நான் இன்னும் மிதந்து கொண்டேதான் இருந்தேன். ஆயினும் அதை நான் சரியாக கவனிக்கவில்லை. இது போன்ற சமயங்களில் நீங்கள் ஜடமாக நீரின் மேல் அமர்ந்திருப்பதைப் போன்று தோன்றக் கூடும். ஏதேனும் ஒரு மரக்கட்டைத்தடை உங்களைத் தாண்டி வேகமாகப் போனால், நீங்கள் எத்தனை மைல் வேகத்தில் பயணம் செய்கிறீர்கள் என்று நீங்கள் உணர மாட்டீர்கள். அதற்குப் பதிலாக, உங்கள் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு எத்தனை வேகத்தில் அந்த மரக்கட்டைத் தடை நகர்கிறது என்று நீங்கள் சிந்திக்கக் கூடும். கடும்பனி மூட்டத்தில், இருட்டுக்கட்டிய வேளையில் தனி ஒரு மனிதனாக அவ்வாறு அங்கே இருப்பது கொடுமையான சோகமொன்றுமில்லை என்று நீங்கள் சிந்திப்பதாக இருந்தால், அதை நீங்கள் ஒரு சமயம் முயற்சித்துப் பாருங்கள், அப்போது புரியும் நான் குறிப்பிடுவது என்னவென்று.

 

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்)- 15

நல்லது. தொடர்ந்து ஒரு அரைமணி நேரத்திற்கும் மேலாக, அவ்வப்போது நான் விளிச்சப்தம் கொடுத்துக் கொண்டே இருந்தேன். கடைசியாக தூரத்தே இருந்து எனக்குப் பதில் கொடுக்கும் விதமாக இன்னொரு சப்தம் கேட்டது. அதைப் பின்தொடர நான் முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. அவ்வப்போது சிறுசிறு குறுகிய வாய்க்கால்கள் மணல் திட்டுகளினிடையே ஓடுவதைக் கண்ணுற்ற நான் கூட்டமாக இருந்த மணல்திட்டுகளின் இடையே மாட்டிக் கொண்டுவிட்டேன் என்று அனுமானித்தேன். சிலவற்றை நான் காணமுடியவில்லை. ஆனால் நீர்விசை நதிக்கரையில் கிடந்த உயிர்ப்பற்ற பழைய சருகுகள் குப்பைகள் ஆகியவற்றுடன் மோதி ஏற்படுத்தும் ஓசை என் காதில் நன்கு விழுந்தது. நல்லது. அந்த திட்டுகளுக்கிடையே விளிச்சப்தம் மறைந்து போக வெகு நேரம் பிடிக்கவில்லை. நான் முடிந்தவரை அந்தச் சப்தத்தை பின் தொடர முயற்சித்தேன். ஐரிஷ் கதைகளில் வரும் ஜாக்கின் லாந்தர் விளக்கு போலவே அந்த சப்தத்தை பின்தொடர்வதும் மிகவும் கடினமாக இருந்தது. அந்த சப்தம் எங்கெல்லாம் குதித்தது, எப்படியெல்லாம் இடம் மாறியது என்பதை நீங்கள் கற்பனை கூடச்செய்து பார்க்க முடியாது.

நான்கு அல்லது ஐந்து முறை என்னைக் கரையிலிருந்து நகர்த்திக்கொள்ளவும், அங்கிருந்த மணல்திட்டுகளில் மோதிக் கொள்ளாதிருக்கவும் துடுப்பு கொண்டு சமாளித்தேன். தோணியும் அவ்வப்போது கரையில் முட்டிக்கொண்டு இருந்திருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். இல்லாவிட்டால், அது இன்னமும் வெகு தொலைவு சென்றிருக்கக் கூடும் என்றும் காதில் ஒலி விழும் தொலைவு தாண்டி பயணித்திருக்க வேண்டும் என்றும் கணித்தேன். நான் இருந்த சிறுபடகு என்னைவிட வேகமாக மிதந்து சென்றுகொண்டிருந்தது.

நல்லது. சிறிது நேரத்திற்குப் பின், மணல் திட்டுகள் அல்லாத திறந்த நதிக்கு நான் வந்து சேர்ந்தேன். ஆனால் இங்கு எந்த விளிச்சப்தமும் கேட்கவில்லை. ஜிம் எங்காவது மரக்கட்டைத் தடைகளுக்குள் மாட்டித் தவித்துக் கொண்டிருப்பான் என்று நினைத்தேன். நான் மிகவும் களைப்படைந்திருந்தேன். எனவே படகில் ஆயாசமாகச் சாய்ந்து கொண்டேன். இனி எந்த முயற்சி செய்வதிலும் பலனில்லை என்று கூறிக் கொண்டேன். ஆயினும் அமைதியாய்த் தூங்க நான் விரும்பாவிட்டாலும், தூக்கம் கண்களை முட்டித் தள்ளியதால், தூங்காமலிருக்கவும் என்னால் இயலவில்லை. எனவே பூனை தூங்குவது போன்றதொரு சிறு தூக்கம் போட முடிவு செய்தேன்.

உண்மையில் பூனைத்தூக்கத்தை விட அதிகமான நேரம் ஆகி விட்டது நான் விழித்துப் பார்க்கையில் வானத்தில் விண்மீன்கள் மின்னிக் கொண்டிருந்தன. பனிமூட்டம் மறைந்து விட்டது. படகின் பின்பக்கத்தை முதலில் திருப்பி ஒரு வட்டம் அடித்தேன். முதலில் நான் எங்கே உள்ளேன் என்று எனக்குப் புரியாமல் ஏதோ கனவு என்று எண்ணிக் கொண்டேன். அதற்குப் பின், பல காலத்திற்கு முன் நிகழ்ந்தது போல எல்லா விஷயங்களும் ஒவ்வொன்றாய் எனக்குப் புலப்பட ஆரம்பித்தது.

நதி அந்த இடத்தில் மிகவும் அகன்று காணப் பட்டது. நதியின் இரு கரைகளிலும் வளர்ந்து நிற்கும் உயர்ந்த அடர்ந்த மரங்கள் ஒரு திடமான அரண் போன்று அமைந்து நட்சத்திரக் கூட்டங்களை காணத் தடை விதித்தன. நீரோட்டத்தின் வெகு தொலைவுக்கு நான் நோக்கியபோது அங்கே ஒரு கருப்புப்புள்ளி போன்ற ஒன்றைக் கண்டேன். அதை நோக்கிச் சென்ற நான், அங்கே அறுக்கப்பட்ட மரக்கட்டைகள் ஒன்று கூடி உள்ள காட்சி மட்டுமே கண்டேன். பின்னர் இன்னொரு புள்ளி மாதிரி ஒன்று கண்டு அதனையும் துரத்திப் பிடித்தேன். இந்த சமயம் என் கணிப்பு சரிதான், அதுதான் எங்களின் தோணி.

நான் உள்ளே சென்றபோது ஜிம் அமர்ந்தவாறு தனது கால் முட்டிகளில் தலையை வைத்து, அவனது வலது கரம் துடுப்புகளில் ஒன்றைப் பிடித்தவாறு தொங்கிக் கொண்டிருக்க அயர்ந்து உறங்கி கொண்டிருந்தான். இன்னொரு துடுப்பு சிதைந்து போயிருந்தது. தோணி முழுதும் இலைகள், தழைகள், கிளைகள் மற்றும் தூசியால் நிரம்பி இருந்தது. நதியின் மீது பயணம் செய்கையில் மிகக்கடுமையான சோதனைக்கு ஆட்பட்ட தோற்றத்தில் அது இருந்தது.

என் சிறிய படகைத் தோணியுடன் சேர்த்துக் கட்டினேன். தோணியுள் ஜிம்மின் கால் பக்கத்தில் கிடந்த நான் கொட்டாவி விட்டபடி எனது முஷ்டிகளை ஜிம்முக்கு நேராக நீட்டி கொண்டே கூறினேன் " ஹலோ ஜிம்! நான் நன்கு உறங்கிவிட்டேனா? ஏன் என்னை நீ எழுப்பவில்லை?"

"அப்பா ஆணடவா! இறைவா! இது நீதானா ஹக்? நீ சாகவில்லையா? நீரில் மூழ்கிவிடவில்லையா? நீ வந்துவிட்டாயா? மெய்யாகவே இந்த உண்மை நல்லதாக இருக்கிறது. நண்பனே! அதிக நன்மை கொண்ட உண்மையாக இருக்கிறது. எங்கே உன்னை நான் நன்கு பார்க்கிறேன், குழந்தாய்! உன்னைத் தொட்டுப் பார்க்கிறேன். இல்லை . நீ இறக்கவில்லை. நீ அதே போல் உயிருடன் நன்றாகத் திரும்ப வந்துவிட்டாய். நீ அதே பழைய ஹக்தான்- அதே ஹக்தான். நன்றி கடவுளே!

"என்ன ஆயிற்று ஜிம் உனக்கு? நன்கு குடித்திருக்கிறாயா?"

"குடிப்பது? நான் குடித்திருக்கிறேனா? குடிக்க எனக்கு ஏதேனும் சந்தர்ப்பம் இருந்ததா?"

"அப்படியானால் ஏன் இப்படி பித்துப் பிடித்தமாதிரி உளறுகிறாய்?"

"பித்து என்று எதை நீ குறிப்பிடுகிறாய்? நான் பைத்தியம் பிடித்தவன் போல் பேசுகிறேனா?"

"பின்னே இல்லையா? என்னவோ நான் திரும்பி வந்து விட்டேன், அது, இது என்றெல்லாம் உளறிக் கொட்டுகிறாயே? ஏதோ நான் போய்த் தொலைந்தது போல. "

"ஹக்! ஹக் ஃபின்! என் கண்களைப் பார்த்துக் கூறு. என் கண்களைப் பார். நீ காணாமல் போய்விடவில்லையா?"

"போனேனா? ஏன். என்ன உளறுகிறாய்? நான் எங்கேயும் போகவில்லை. நான் எங்கே போவேன்?"

"நல்லது. இங்கே பாரு பாஸ்! ஏதோ வேடிக்கை நடந்து கொண்டிருக்கிறது.. கண்டிப்பாக நடக்கிறது. நான் நான்தானே? நான் இங்குதான் இருந்தேனா அல்லது இல்லையா? இப்போது அதுதான் நான் தெரிந்து கொள்ள வேண்டும்."

"நல்லது. நீ கண்டிப்பாக இங்கேதான் இருந்தாய் என்பது வெட்ட வெளிச்சம். ஆனால் நீ இப்போது பழைய முட்டாளாகி அனைத்தையும் குழப்புகிறாய், ஜிம்!"

"நான். நானா? நல்லது. எனக்கு இதற்கு பதில் கொடு. நீ கயிற்றைக் கட்ட அந்த மணல்திட்டுக்கு இந்தச் சிறு படகில் போனாயல்லவா?"

"இல்லையே. நான் போகவில்லையே. எந்த மணல்திட்டு? நான் அவ்வாறு எதையும் பார்க்கக் கூட இல்லையே."

"நீ எந்த மணல்திட்டையும் பார்க்கவில்லையா? இங்கே பார். கயிறு நழுவியதால், நான் நதியில் தோணியில் சறுக்கிக்கொண்டு செல்லும்போது உன்னையும் அந்த சிறுபடகையும் பனிமூட்டத்தினிடையே விட்டுச் செல்லவில்லையா?

"என்ன பனிமூட்டம்?"

"ஏன், அந்தப் பனி மூட்டம். இரவு முழுதும் சூழ்ந்திருந்த பனிமூட்டம். அந்தத் தீவுகளில் நாம் இருவரும் மாறிப் போகும்வரை நீ விளிச்சப்தம் எழுப்பி, நானும் எழுப்பி ஒருவரை ஒருவர் தேடவில்லையா? அப்புறம் நம்மில் ஒருவர் தொலைந்து விட இன்னொருவர் எங்கே இருக்கிறோம் என்று தெரியாது தொலைந்ததற்குச் சமமாக இருக்கவில்லையா?அப்புறம் மூழ்கிப் போவது போன்றதொரு நிலையில் அந்த தீவுகளுக்குள் புகுந்து நான் வரவில்லையா? இது எல்லாமே நடக்கவில்லையா, பாஸ்? பதில் சொல்லு."

"இது எனக்கு அதிகப்படியாகத் தோன்றுகிறது, ஜிம்! நான் எந்தவொரு பனி மூட்டம், அல்லது தீவு அல்லது கஷ்டம் அல்லது அப்படி எதையுமே பார்க்கவில்லை. பத்து நிமிடம் முன்பு நீ அசந்து தூங்க ஆரம்பிக்கும் வரை நான் இங்கே உட்கார்ந்து இரவு முழுதும் உன்னிடம் பேசிக் கொண்டுதானிருந்தேன். பிறகும் நான் அதைத்தான் செய்தேன். அந்த சமயம் நீ குடித்திருக்கக் கூடாது. எனவேதான் நீ இவ்வாறு கனவு கண்டிருக்க வேண்டும்."

"ஓ! பொய் சொல்லாதே! பத்து நிமிடக்கனவில் இத்தனை சாத்தியமா?"

"நல்லது. சத்தியமாக, இது கனவுதான். ஏனெனில் இதில் எதுவுமே நடக்கவில்லை."

"ஆனால் ஹக்! அது அத்தனையுமே எனக்கு உண்மை போலத்தான் தோன்றியது. ரொம்ப இயல்பாக ......."

"அது எவ்வளவு இயல்பாக இருந்தாலும் அந்தக் கதையால் ஒன்றும் பலனில்லை. நான் இங்கேதான் முழுநேரமும் இருந்தேன் என்று எனக்குத் தெரியும்.”

ஐந்து நிமிட நேரம் ஏதும் பேசாமல் இருந்த ஜிம் ஏதோ ஒன்றை யோசித்தவாறே பிறகு கூறினான் "நல்லது. அப்படியானால் நான் கனவுதான் கண்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்கிறேன். ஹக்! ஆனால் இது போன்றதொரு தீவிரமான கனவு என் வாழ்வில் நான் கண்டதில்லை. அதே போல் இந்தக் கனவு என்னைச் சோர்வில் ஆழ்த்தியது போல் வேறு எந்தக் கனவும் செய்ததில்லை."

"ஓ. அது பரவாயில்லை. சில சமயங்களில் கனவுகள் நம்மைக் களைப்படையச் செய்துவிடும். இந்தக் கனவு என்னவோ தனித்தன்மை வாய்ந்தது போல் தோன்றுகிறதே. அதைப்பற்றி விரிவாகக் கூறு, ஜிம்!"

இவ்வாறாக ஜிம் முதலிலிருந்து கடைசிவரை முழுக்கதையையும் கூறத் தொடங்கினான். இடையிடையில் கொஞ்சம் மிகைப்படுத்தினாலும், அது எவ்வாறு நடந்ததோ அவ்வாறேதான் கூறினான். தனது கனவு ஒருவகையான முன்னெச்சரிக்கை போல அர்த்தம் கொண்டிருப்பதால், அதைப் பற்றிச் சரியாக ஆராயத்தேவை உள்ளது என்று கூறினான். முதல் மணல்திட்டு ஒரு நல்ல மனிதன் எங்களுக்கு உதவி செய்வதைக் குறிப்பதாக உள்ளது என்று கூறினான். ஆனால் நீரின் விசை நம்மை முதல் மனிதனிடமிருந்து இழுத்துச் செல்லும் இன்னொரு கெட்ட மனிதன் என்று குறிப்பிட்டான். அவ்வப்போது நமக்கு வரும் கஷ்டங்களுக்கான எச்சரிக்கை அந்த விளிச்சப்தங்கள் என்றான். நாம் அதைச் சரியாகப் புரிந்துகொண்டு அந்த எச்சரிக்கையை உள்வாங்காவிடில், நமது வாழ்வில் அதிர்ஷ்டத்திற்குப் பதில் துரதிஷ்டம் வந்து சேரும் என்றும் சொன்னான்.

இடையிடையே குறுக்கிட்ட மணல்திட்டுகள் அடங்கிய பகுதி சில கெட்ட மனிதர்களால் நாம் எதிர்கொள்ளப்போகும் கஷ்டங்களை உணர்த்துவதாக உள்ளது. ஆனால் நம் வேலையை மட்டும் நாம் பார்த்துக் கொண்டு, யாரிடமும் எதிர்த்துப் பேசாமல், அவர்களின் கோபத்தைக் கிளறாமல் இருந்தால் நாம் அந்த பனிமூட்டத்தை நல்லபடியாக கடந்து வந்து விடலாம். கடைசியில் சுதந்திர மாகாணங்களுக்கு சென்று நாம் சேர்வதை திறந்த நதிக்கு வந்து சேர்ந்தது குறிக்கிறது என்றும் உரைத்தான்.

நான் தோணிக்குள் ஏறி இருந்த சமயம் மிகவும் மேக மூட்டமாக இருந்தது. இப்போது வானம் தெளிவாக இருந்தது.

"நல்லது. உனது விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது, ஜிம்!" நான் கூறினேன் "ஆனால் இவை எதைக் குறிக்கிறது?"

சுக்குநூறாகிப் போயிருந்த துடுப்பு, தோணிக்குள் இருந்த அந்த இலைகள், மற்றும் குப்பைகள் இவற்றை சுட்டிக் காட்டிக் கேட்டேன். அவற்றை மிகவும் தெளிவாகப் பார்க்கமுடிந்தது அப்போது.

ஜிம் அந்தக் குப்பைகளைக் கவனித்தான். பிறகு என்னை நோக்கினான். மீண்டும் அந்தக் குப்பைகளைப் பார்த்தான். அவன் மனதில் அந்தக் கனவு மிக ஆழமாகப் பதிந்திருந்தால் அதை விட்டு விட மனமில்லாது, உண்மையை எதிர்நோக்கத் தயங்கினான்.

ஆனால் அனைத்து விஷயங்களையும் ஒட்டவைத்துப் பார்த்து உண்மையில் என்ன நடந்திருக்கும் என்று உணர்ந்து கொண்ட அவன், ஒரு கடினமான முகபாவனையுடன் . என்னைப் பார்த்துக்கொண்டே கூறினான் "அவை எதைக் குறிக்கின்றன? நான் சொல்கிறேன். உன்னை அழைத்து அழைத்து நான் மிகவும் களைப்படைந்து அப்படியே அசந்து தூங்குகையில், நீ தொலைந்ததை எண்ணி எனது இதயம் மொத்தமும் சுக்குநூறாக வெடித்துவிட்டது. தோணியைப் பற்றியோ அல்லது என்னைப்பற்றியோ நான் பெரிதும் கவலை கொள்ளவில்லை. பிறகு நான் கண்விழித்து எழுந்த போது உயிர் பிழைத்து நலமாக வந்து சேர்ந்த உன்னைக் கண்டு கதறி அழுதேன். என் மனதில் எழுந்த நன்றியுணர்ச்சியை காட்டிக்கொள்ள முட்டி போட்டு அமர்ந்து உனது பாதங்களைப்பிடித்து முத்தம் கொடுத்துத்தீர்க்க நினைத்தேன். நீயோ இந்த கிழட்டு ஜிம்மை எப்படி பொய் சொல்லி முட்டாளாக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்திருக்கிறாய். இந்தப் பொருட்களே குப்பைகள். குப்பைகள் என்பது சிலர் தங்களின் நண்பர்களின் மீது மோசமான வேடிக்கை விளையாட்டு நடத்தி அவர்களை அவமானப்படவைப்பது ஆகும்.”

பிறகு அவன் எழுந்து மெதுவாக நடந்து தோணியின் கூம்புவடிவக் குடிலுக்குச் சென்றான். இதுவரை பேசியதே போதும் என்பது போல,வேறு ஒரு வார்த்தைகூடப் பேசாது சென்றான். என்னை நினைத்து நான் மிகவும் அவமானமாக உணர்தேன். அவன் பாதங்களை முத்தமிட்டு அவன் கூறியதைத் திரும்ப எடுத்துக்கொள்ள வேண்டிக்கொள்ள வேண்டும் போன்றதொரு எண்ணம் நிறைந்தது.

ஒரு நீக்ரோவிடம் மன்னிப்பு கேட்கும் அளவு என்னைத் தயார் செய்ய எனக்குப் பதினைந்து நிமிடங்கள் பிடித்தது. ஆனால் அதை நான் செய்தேன். பிற்காலத்தில் அதை எப்போதுமே நான் கேவலமாக நினைக்கவில்லை. அதன் பின்னர் அவ்வாறான தரக்குறைவான ஏமாற்று வேலைகளை ஒருபோதும் அவனிடம் நான் காட்டியதில்லை. அவனின் மனம் இந்த அளவு வெறுத்துப் போகும் என்று முன்பே எனக்குத் தெரிந்திருந்தால், இவ்வாறான ஒரு விளையாட்டை நான் அவனிடம் விளையாடி இருந்திருக்க மாட்டேன்.

[தொடரும்]


 

முனைவர் ஆர்.தாரணி

- முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R