- மார்க் ட்வைன் -- என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்' -


அத்தியாயம் ஐந்து

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 5முனைவர் ஆர்.தாரணிஅறைக்கதவை அடைத்துவிட்டு நான் திரும்பிப்பார்க்கும் வேளை, அங்கே அவர், என் அப்பா. என்னை அவர் அதிகம் அடித்துத் துன்புறுத்துவதால், அவரைக் கண்டு எல்லாக்காலங்களிலும் நான் பயம் கொண்டிருந்திருக்கிறேன். .அதே போல்தான் அன்றும் பயந்தேன். ஆனால், ஒரு நிமிடத்திற்குப் பிறகு, அவரைப் பார்த்தவுடன் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் பயத்தின் தன்மை சிறிது மாறியவுடன், எனது மூச்சைக் கொஞ்சம் இழுத்துப் பிடித்துத்தளர்த்தினேன். அங்கே பயப்பட ஏதுமிலை என்பதை நான் உணர்ந்தேன்.

அவருக்கு வயது ஐம்பது இருக்கும். வயதுக்கேற்ற தோற்றத்தில்தான் அவரும் காணப்பட்டார். ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து, வழுவழுப்புடன், நீண்டு கீழே விழும் தலைமுடி வழியாக பளபளத்த கண்கள் திராட்சைக்கொடியினூடே கூர்ந்து நோக்குவதைப் போல் இருந்தது. அவரது தலைமுடியும், முடிச்சு விழுந்து நீண்டிருந்த அவரது தாடியும், கொஞ்சம் கூட நரைக்காமல் கருகருவென இருந்தது. அந்த முடிக்கற்றைகளினூடே வெளிப்பட்ட அவரது முகம், நோயுற்று வெளுத்துப் போயிருக்கும் வெண்மை நிறத்தில், மரத்தின் வெள்ளைத் தேவாங்கு அல்லது நீரின் ஆழத்தில் இருக்கும் மீன் போன்றவைகளின் நிறத்தில் இருந்தது. உங்களை கடும் பீதியில் ஆழ்த்த அதுவே போதுமானது. அவரின் ஆடைகள் கந்தலாக இருந்தன. அவர் தனது ஒரு காலை எடுத்து அதன் கணுக்காலை இன்னொரு காலின் முட்டியின் மீது வைத்து அமர்ந்திருந்தார். அவர் மேலே வைத்திருந்த காலின் பூட் கிழிந்து, காலின் இரண்டு விரல்பகுதிகள் அந்த ஓட்டை வழியே வெளியே தெரிவதை நீங்கள் நன்றாகக் காண முடியும். அந்த விரல்பகுதிகளை அவர் சிறிதாக அசைக்கவும் செய்தார். மேல்பக்கம் உள்ளே குழிந்து, தளர்ந்து இருக்கும் அவரது தொப்பியானது கீழே தரையின் மீது கிடந்தது.

நான் அங்கே நின்று அவரை உற்றுப்பார்த்துக்கொண்டிருக்க, அவரும் நாற்காலியில் இருந்துஅமர்ந்தவாறே, சுழன்று திரும்பி என்னை நோக்கிக்கொண்டிருந்தார். மெழுகுவர்த்தியைக்கீழே வைக்கும் வேளையில்தான் ஜன்னல் திறந்து கிடப்பதை, நான் கவனித்தேன். அப்படியானால் அவர் அந்த கூரைக்கொட்டகை வழியாக ஏறி ஜன்னல் வழியாக உள்ளே வந்திருக்க வேண்டும். அவர் என்னை மேலும் கீழும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்து விட்டு கடைசியில் கூறியதாவது: "சலவை செய்யப்பட ஆடைகள் உனக்கு!. நீ மிகவும் மேலிடத்தை சார்ந்ததாக உன்னை எண்ணிக்கொள்கிறாயோ?"

"இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்" நான் கூறினேன்.

"உன் புத்திசாலித்தனத்தை என்னிடம் காட்டாதே. நான் வெளியே சென்றிருக்கும் சமயத்தில் உனக்கு ரொம்பத் திமிர் அதிகமாகி விட்டது. என்னை போலீஸ் பிடித்துக் கொண்டு போவதற்குள் உன் திமிரை நான் அடக்குவேன். நீ இப்போது கல்வி கற்று எழுதவும், படிக்கவும் வேறு செய்கிறாய் என்று அனைவரும் கூறுகிறார்கள். அதனால் உன் அப்பாவை விட நீ உயர்ந்தவன் என்ற எண்ணம் உனக்கு அதிகமாக உள்ளது, ஏனெனில் உன் அப்பாவுக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது, இல்லையா? பொறு. உனக்கு ஒரு நல்ல ஒரு பாடம் கற்பிக்கிறேன். .யார் உனக்கு இவ்வாறு கீழ்த்தரமாக கேலி செய்யப் பழக்கிவிட்டது? யார் சொல்லிக் கொடுத்தது?"

"அந்த விதவை. அவள்தான் கூறினாள்."

"அந்த விதவை. ஹா! அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்கச் சொல்லி அந்த விதவைக்கு யார் சொல்லிக் கொடுத்தது?"

"யாரும் அவளுக்கு சொல்லவில்லை."

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 5

"பிரச்சினை செய்வது பற்றி நான் அவளுக்குக் கற்றுக் கொடுக்கிறேன். நீ நான் சொல்வதைக் கேள். பள்ளிக்குச் செல்வதை முதலில் நிறுத்து. நான் சொல்லுவது கேட்கிறதா? தனது அப்பாவிடம் திமிர் காட்டாமல், தனது அப்பாவை விட தான் சிறந்தவன் என்ற எண்ணம் வராது எப்படி ஒரு சிறுவனை வளர்த்துவது என்று நான் அவர்களுக்குக் கற்றுத் தருகிறேன். நான் மட்டும் திரும்பவும் உன்னை பள்ளியில் பார்த்தேனென்றால், அப்புறம் இருக்கு உனக்கு சங்கதி! உன் அம்மா சாகும்வரை

அவளுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. அத்துடன் உன் குடும்பத்தில் உள்ள எந்தப் பயலுக்கும் அவர்கள் சாகும் வரை படிப்புவாசனையே கிடையாது. என்னாலும் படிக்க முடியாது. நீ என்னவோ பெரிதாக ஊதிக்கொண்டு திரிகிறாய். நான் ஒருபோதும் அதை அனுமதிக்க மாட்டேன். கேட்கிறதா நான் கூறுவது? எங்கே, இப்போது நீ படிப்பதை நான் கொஞ்சம் கேட்கிறேன்."

நான் ஒரு புத்தகத்தை எடுத்து, ஜெனரல் ஜார்ஜ் வாஷிங்டன் பற்றியும் புரட்சிப் போர் பற்றியும் அதில் இருந்தவைகளைப் படிக்க ஆரம்பித்தேன். நான் படிக்க ஆரம்பித்து ஒரு முப்பது நொடிகளுக்குப் பிறகு, அவர் தன் கையால் புத்தகத்தை ஓங்கி அடித்து அந்த அறையின் குறுக்கே அதை விசிறினார்.

அவர் சொன்னார் "ஓ. அப்போது இது உண்மைதான். உன்னால் படிக்க முடிகிறது. நீ என்னிடம் சொன்னபோது நான் நம்பவில்லை. இப்போது.... நான் சொல்வதை நன்றாகக் கேள். இவ்வாறு திமிர்த்தனம் செய்வதை இத்தோடு நிறுத்தி விடு. நான் அதைச்சகித்துக்கொள்ள மாட்டேன். நான் உன்னைக் கண்காணித்துக்கொண்டே இருப்பேன், அதி புத்திசாலியே! இன்னொருமுறை நீ பள்ளிக்குச் செல்வதை நான் பார்த்தால், அடித்துத் தொலைத்துவிடுவேன். ஜாக்கிரதை. நீ சர்ச்சுக்கு எல்லாம் வேறு செல்கிறாயாமே? இப்படி ஒரு உதவாக்கரை மகனை நான் எங்குமே கண்டதில்லை.”

நீலமும், மஞ்சளுமாக ஒரு சிறுவன் மற்றும் சில மாடுகள் இருந்த படத்தை அவர் கையில் எடுத்தார்.

"இது என்ன?"

"அது எனது ஆசிரியர்கள் எனது பாடத்தை நான் நன்கு புரிந்துகொள்வதற்காக எனக்குக் கொடுத்தது."

அதை அவர் கிழித்து வீசிவிட்டுக் கூறினார், "இதைவிடச் சிறந்ததாக நான் உனக்குக் கொடுக்கிறேன் - நல்ல அடி கொடுக்கிறேன்."

விலங்கு போல் பயமுறுத்தும் அடிக்குரலில் முணுமுணுத்தவாறே ஒரு நிமிடம் அமர்ந்திருந்த அவர் பின் கூறியதாவது:

"நறுமணம் வீசிக்கொண்டு உலவும் நாகரீகச் சிறுவனே! உனக்கு ஒரு படுக்கை. அதில் நல்லதொரு விரிப்பு. அத்துடன் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி, கால்மிதிக்கக் கம்பளம். உன் அப்பா பன்றிகளுடன் கிடங்கில் உறங்குகையில், உனக்கு இத்தனை உல்லாச வாழ்க்கை இங்கே. இப்படி ஒரு மகனை நான் எங்கேயும் கண்டதில்லை. நான் கைதாகிச் செல்வதற்குள் உனக்கு இது எல்லாம் இல்லாமலே செய்துவிட்டுப் போகிறேன். பார்த்துக் கொள். அது மட்டும் அல்ல. நீ பெரிய பணக்காரனாமே! அது எப்படி நடந்தது?"

"அது ஒரு பொய். அப்படித்தான் அது நடந்தது."

"இங்கே கவனி. எப்படி என்னிடம் பேசவேண்டும் என்று தெரிந்து கொள். எதெல்லாம் என்னால் எடுத்துக்கொள்ள முடியுமோ, அதை நான் எடுத்துக்கொள்வேன். ரொம்ப மேதாவி போல் நடிக்காதே. நான் கடந்த இரண்டு நாட்களாக இந்த ஊரில் இருக்கிறேன். எல்லாரும் நீ எப்படி பணக்காரனாகிவிட்டாய் என்பது பற்றித்தான் பேசுகிறார்கள். இங்கு மட்டுமல்ல. நதியின் கரையிலும் உன்னைப்பற்றித்தான் பேசுகிறார்கள். அதனால்தான் நான் இங்கு வந்தேன். அது எனக்குத் தேவை. உன்னிடம் உள்ள பணத்தை நாளை என்னிடம் கொடுத்துவிடு.”

"ஆனால் என்னிடம் பணம் ஏதும் இல்லை."

"அது ஒரு பொய். நீதிபதி தாட்சர் வைத்திருக்கிறார். நீ அவரிடம் சென்று வாங்கி எனக்கு கொடு."

"என்னிடம் பணம் இல்லையென்று நான் கூறிவிட்டேன் அல்லவா? வேண்டுமானால் நீதிபதி தாட்சரிடம் சென்று நீயே கேள். அவரும் அதைத்தான் கூறுவார்"

"சரி சரி. அவரிடம் நான் கேட்கிறேன். அவரை எனக்கு கொடுக்கும்படி செய்கிறேன். இல்லையானால், அதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்கிறேன். ஹேய்! இப்போது உனது சட்டைப்பையில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்? எனக்கு அது வேண்டும்."

"என்னிடம் ஒரே டாலர்தான் உள்ளது. அதுவும் எனக்கு எதற்குத் தேவை என்றால் ......."

"அது உனக்கு எதற்குத் தேவை என்பது பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. பேசாமல் இங்கே கொடு."

அதை என்னிடம் இருந்து எடுத்து திருப்பித்திருப்பி பார்த்து உண்மையான வெள்ளிதானா என்று சோதித்தார். பின்னர் கீழே இறங்கிச் சென்று காலையில் இருந்து குடிக்காமல் இருப்பதால் ஒரு பாட்டில் விஸ்கி வாங்கப்போவதாகக் கூறினார்.. ஜன்னல் வழியே வெளியே குதித்து கூரைக்கொட்டகை மேல் நிற்கும் வேளையிலும், தனது தலையை திரும்பவும் உள்ளே நுழைத்து, நான் திமிர் செய்யக்கூடாதெனவும், அவரை விடச் சிறந்தவனாக இருக்கவேண்டுமெனவும் அச்சுறுத்தினார். ஒரு வழியாக அவர் சென்று விட்டார் என நான் நினைக்கும் தருணத்தில் மீண்டும் திரும்பி வந்து, நான் பள்ளிக்குச் செல்லக்கூடாதெனவும், அப்படி மீறிச் சென்றால், என்னைக் கையும் களவுமாகப் பிடித்து அடி வெளுத்துவிடப் போவதாயும் பயமுறுத்தினார்.

அடுத்த நாள் நன்கு குடித்துவிட்டு நீதிபதி வீட்டுக்குச் சென்று பணம் கொடுக்கச் சொல்லிக் கேட்டு மிகவும் துன்புறுத்தி இருக்கிறார். ஆனால் அவருக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்காததால் நினைத்தது நடக்கவில்லை. பணத்தை அவர் கொடுக்க வைப்பதற்காக வழக்குத் தொடரப்போவதாக சூளுரை செய்திருக்கிறார்.

நீதிபதி தாட்சரும், அந்த விதவையும் என் அப்பாவிடம் இருந்து என்னைப் பிரித்து, தங்கள் இருவருள் ஒருவரையே எனக்கு சட்டப்படி பாதுகாவலனாக நியமிக்கும்படி நீதிமன்றத்தில் முறையிட்டார்கள். ஆனால், அந்த வழக்குக்கான நீதிபதி ஊருக்குப் புதிது என்பதால் எனது கிழட்டுத் தகப்பனைப் பற்றி சரிவரத் தெரியாமல் நீதிமன்றம் இதில் தலையிடக்கூடாது என்றும், குடும்பங்களைப் பிரிப்பதற்கு நீதிமன்றம் உதவக்கூடாது என்றும் தீர்ப்பு வழங்கிவிட்டார். ஒரு குழந்தையை அவனின் அப்பாவினிடமிருந்து பிரிப்பதை அவர் விரும்பவில்லை என்றும் அந்த நீதிபதி கூறிவிட்டார். எனவே நீதிபதி தாட்சருக்கும், அந்த விதவைக்கும் என் விஷயத்தைக் கைவிடுவதை விடுத்து வேறு வழி இல்லாது போனது.

இந்தத் தீர்ப்பு எனது கிழட்டு அப்பாவுக்கு தலைகால் புரியாத அளவு சந்தோஷத்தைக் கொடுத்தது. அவருக்காக நான் பணம் கொண்டு வந்து கொடுக்கவில்லையெனில் தோலை உரித்து சதை வெளியே தெரியும்வரை விளாசிவிடுவதாகக் கூறினார். நீதிபதி தாட்சரிடம் இருந்து மூன்று டாலர்கள் கடன் வாங்கினேன். அதைப்பிடுங்கிக்கொண்ட அப்பா நன்கு குடித்துவிட்டு ஊர் முழுக்கபோதையில் கத்திக்கொண்டும், கூக்குரலிட்டுக் கொண்டும், ஒரு தகர டப்பாவை தட்டி சத்தம் எழுப்பிக்கொண்டும் திரிந்ததால், நடு ராத்திரியில் காவலர்கள் அவரைப் பிடித்து சிறையில் அடைத்து விட்டனர். சிறையில் ஒரு வாரத்திற்கு அடைத்து வைத்திருந்தார்கள். ஆனால் சிறையில் இருந்தாலும் அவரின் மகனுக்கே அவரே முதலாளி என்றும் அவர் விரும்பியபடி அவனை அவர் அடிக்கலாம் என்பதால் அவர் மிகவும் திருப்தி அடைந்திருப்பதாக பிதற்றியிருக்கிறார்.

அப்பா வெளியே வரும் சமயம் அவரை புது மனிதனாக மாற்ற வேண்டும் என்று அந்த புது நீதிபதி கருதினார். அப்பாவை அவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று சுத்தமான புது ஆடைகள் வழங்கி, காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என்று அனைத்தையும் அவர் குடும்பத்தாருடன் ஏதோ நீண்டகால நண்பர்கள் போன்று அமர்ந்து உண்ண வைத்திருக்கிறார். இரவு உணவுக்குப் பிறகு அப்பாவிடம் அவரின் குடிப்பழக்கம் மற்றும் உள்ள கெட்ட பழக்கங்களைப் பற்றி அந்த கிழட்டு மனிதன் அழும்வரை அறிவுரை கூறியிருக்கிறார். தான் ஒரு முட்டாளாக இருந்து தன் வாழ்வு முழுதையும் தொலைத்து விட்டதாகவும், இனி வரும் காலங்களில் ஒரு புதிய மனிதனாக இருக்கப்போவதாகவும், அவரால் யாருக்கும் அவமானம் வராது என்றும் அப்பா அவரிடம் கூறியிருக்கிறார். அவரின் வாழ்க்கையைப் பார்த்து நீதிபதி அவரைக் கேவலமாக பார்ப்பதற்குப் பதிலாக அவருக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என்று அப்பா கூறியுள்ளார். மிகவும் பெருமிதம் அடைந்த நீதிபதி அப்பாவைக் கட்டியணைத்து வாழ்த்துத் தெரிவிக்கும் வேளையில் மிகவும் நெகிழ்ந்து அவரின் கண்களும் அவரின் மனைவியின் கண்களும் கலங்கிவிட்டது.

தன் வாழ்நாள் முழுதும் தான் எல்லோராலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதால் தனக்குத் தேவை கொஞ்சம் அனுதாபம் என்று அப்பா கூறியுள்ளார். அந்த புது நீதிபதி முழுதாக என் அப்பாவை நம்பியதால், அன்றிரவு உறங்கப்போகும்வரை இருவரும் கண் கலங்கியபடி பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.. எனது கிழடு எழுந்து நின்று தன் கையை உயர்த்திக் கூறியதாவது: "என் கரத்தைப் பாருங்கள், மேன்மை பொருந்திய அன்பர்களே, தாய்மார்களே! கரத்தைப் பிடித்துக் குலுக்குங்கள். ஒருகாலத்தில் பன்றிகளுடன் ஒன்றாக இந்தக்கரம் இருந்தது. ஆனால் இனிமேல் இல்லை. பழைய வாழ்வுக்கு இனி சாகும்வரை போகப்போவதில்லை என்ற உறுதியுடன் புது வாழ்க்கையைத் தொடங்கிய ஒரு மனிதனின் கரம் . என் வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். நான் சொன்னதை நீங்கள் என்றும் மறந்து விடாதீர்கள். இப்போது இது சுத்தமான கரம். எனவே யாரும் அஞ்ச வேண்டாம்."

எல்லாரும் ஒன்றன் பின் ஒன்றாக கண் கலங்கியபடியே அப்பாவின் கரத்தைப் பிடித்து குலுக்கினார்கள். புது நீதிபதியின் மனைவி அந்தக் கரத்தில் ஒரு முத்தம் கூடக்கொடுத்தாள். பின்னர் கிழட்டு மனிதன் உறுதிப் பத்திரத்தில் முத்திரை பதித்தான். புது நீதிபதி அவரது வாழ்வில் அது ஒரு புனிதத் தன்மை பொருந்திய அல்லது அது போன்றதொரு கணம் என்று கூறினார். அதன் பின்னர் அந்த கிழட்டு மனிதனை அவர்கள் வீட்டின் எஞ்சிய அழகான ஒரு படுக்கையறையில் தங்க வைத்துள்ளார்கள். ஆனால் நள்ளிரவில் மதுகுடிக்கும் தாகம் கிழவனை வாட்டி எடுக்கவே, அவன் ஜன்னல் வழியே வெளிவந்து வீட்டின் முகப்பின் கூரையில் இறங்கி அதன் கீழ் இருக்கும் அகலமான தூணைப்பிடித்து இறங்கி தெருவுக்கு வந்து, தான் அணிந்திருந்த புதிய மேல்ச்சட்டையை ஒரு ஜாடி மதுவுக்காக விலை பேசிவிட்டான்.

பிறகு திரும்பவும் ஜன்னல் வழியே அந்த அறைக்குள் நுழைந்து தன் இஷ்டம் போல் இருந்திருக்கிறான். விடிகாலை வேளையில் மீண்டும் ஜன்னல் வழியாகத் தவழ்ந்து வெளியேறி வரும்போது மதுபோதையினால் தடுமாறி முகப்பிலிருந்து கீழே விழுந்து இடது கரத்தில் இரு இடங்களில் முறிவு ஏற்படுமாறு செய்து விட்டான். நல்ல வெளிச்சம் வந்து அவர்கள் அவனைக் காணும் வரை அவன் நினைவில்லாது அங்கேயே கிடந்தான். கடைசியாக அவர்கள் அவனுக்கு என்று ஒதுக்கிய படுக்கை அறைக்குச் சென்று பார்க்கையில் அங்கே அவன் ஏற்படுத்தியிருந்த சேதாரம் அவர்களுக்கு உண்மையைத் தெளிவாக விளக்கியது.

புது நீதிபதி கடுங்கோபம் அடைந்தார். எனது கிழட்டு அப்பாவை சீர்திருத்தம் செய்ய துப்பாக்கியே உகந்த வழி என அவர் சீற்றத்துடன் கூறினார்.

[தொடரும்]


மொழிபெயர்ப்பாளர் பற்றி...

முனைவர் ஆர்.தாரணி

- முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R