ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

உலகத்து உயிர்கள் ஒவ்வொன்றும் உயிர்வாழ்வதற்கும், அதனூடே இவ்வுலகினில் இடையறாத தொடர்ச்சி நிலையை அடைவதற்கும் உணவென்பது அடிப்படையானதொன்றாகும். மானுட சமூகமானது தொடக்க காலம் முதலாக பல்வேறு முறைகளில் உணவினை சேகரித்து வருவதென்பது, அதன் படிநிலை வளர்ச்சி நிலையினையும், நாகரிக முறையினையும் வெளிப்படுத்துவதாகும். கூடலூர் வட்டாரத்தொல் பழங்குடிகளான பணியர்,காட்டுநாயக்கர்,குறும்பர் போன்றோர் எத்தகு உணவுசெகரிப்பு முறையினை மேற் கொண்டுள்ளனர்,திராவிடப் பழங்குடிகளான இவர்கள் அதற்கு வழங்கும் சொற்கள் என்ன,அச்சொற்கள் பழந்தமிழோடு கொண்டுள்ள உறவு நிலைகளென்ன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உணவுச் சொற்கள்

பசி என்பது அனைத்து உயிரினங்களுக்கும் இருக்கின்ற ஒரு உயிரியல் நிகழ்வாகும். உயிரினங்கள் உடல் ஆதாரங்களைச் செலவிட்டு இயங்குகையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அவ்வாதாரங்களின் இருப்பு நிலை மிகவும் குறையும்போது அது பசி எனும் உணர்வாக வெளிப்படுகிறது. உண்மையில் பசி என்பது உடலியல் இயக்கத்தின் போது அடிப்படை எரிபொருள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கீழ் குறைவதைச் சுட்டிக் காட்டும் ஓர் உயிரியல் அளவு மானியாகும். பழங்குடிகளின் பண்பாட்டில் உணவு என்பது காடுகளில் கிடைக்கும் காய், கனிகள், கொட்டைகள், தேன். மேலும், கீரைகள், நண்டுகள், நத்தைகள், மீன்கள், வேட்டையாடிக் கிடைக்கும் காட்டு விலங்குகள் முதலானவற்றை கொள்ளலாம். இவைதவிர, தற்கால உணவு முறைகளுக்கும் அவர்கள் ஆட்பட்டுள்ளது பிற சமூகத் தொடர்பால் ஏற்பட்டுள்ள மாற்றமாகும். அவ்வாறு உணவுத் தொடர்பான அவர்களின் வழக்கில் காணும் தனித்தன்மையான சொற்களை அதன் பொருண்மை நிலைகளையும் சான்றுகளுடன் காணலாம்.

கள்ளி

கள்ளி’ எனும் சொல் ‘கள்ளியங் கடத்திடை’ (ஐங். 323) என செடி வகையினைக் குறித்து வருகிறது. இச்சொல் மேலும் திருகு கள்ளி, இலைக்கள்ளி, சதுரக்கள்ளி, மண்டங்கள்ளி, சப்பாத்திக்கள்ளி, சாதிக்காய் மரம், திருடி, கள்ளர் சாதிப் பெண், வேலை செய்யாது கழப்புபவள் போன்ற பொருண்மைகளைக் கொண்டுள்ளது. கூடலூரில் ‘கள்ளி’ எனும் இச்சொல் பணியர் பழங்குடி வழக்கில் உணவுப் பொருளைக் குறித்து வருகின்றது. மூங்கிலென்பது பழங்குடிகளின் பண்பாட்டில் இரண்டறக் கலந்திருக்கும் ஒன்றாகும். அந்த மூங்கிலின் குருத்தினைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி,அதன் கசப்புசுவை முற்றாக நீங்கும் வகையில், ஏழு முறை வெந்நீரில் வேக வைத்து அதனுடன் மஞ்சள், சீரகம்,உப்பு,பச்சை மிளகாய் முதலான பொருட்களை இட்டு இடித்து, கடுகிட்டு தாளித்து உண்பர். இவ்வாறு மூங்கில் குருத்தால் செய்யும் உணவுப் பொருளையே ‘கள்ளி’ எனும் சொல்லால் பணியப் பழங்குடிகள் குறிக்கின்றனர். இது இவர்களிடம் காணப்படும் உணவு முறையும், சொல் வழக்கமுமாகும்.

கக்கு

கக்கு’ எனும் சொல் ‘கக்குவான், கற்கண்டு’ என்ற பொருள்களைத் தரும். கக்கு எனும் சொல் கூடலூரின் பொது வழக்கில் சிறுமியர் விலையாடும் விளையாட்டைக் குறிக்கும் சொல்லாகும். தமிழக வடமாவட்டப் பகுதிகளில் அவ்விளையாட்டு ‘செல்லி’ எனும் பெயரால் அறியப்படுகிறது. நெல்லைப் பகுதிகளில் ‘சிக்கிக் கடுக்கோ’ என்ற சொல்லால் குறிக்கின்றனர். ஆனால்,கூடலூர்ப் பகுதியில் பணியர் பழங்குடிகள் ‘கக்கு’ எனும் சொல்லை உணவுச் சொல்லாகக் கொள்கின்றனர். புதிதாக உழும் வயலில் காணப்படும் நத்தை இனத்தை சார்ந்த நீர்வாழ் நத்தையினை சேகரித்து அதனை வெந்நீரில் இட்டு அதன் சதைப் பகுதியை உண்கின்றனர். இவர்தம் வழக்கில் இதன் பெயரே ‘கக்கு’ எனப்படுகின்றது. இவ்உணவு முறையானது இவர்களிடம் மட்டுமே காணப்படும் ஒன்றாகும். காரணம் இவர்கள் மட்டுமே இன்றளவும் நீர்வளம் நிறைத்த வயல்சார்ந்த வாழ்க்கை முறையினைக் கொண்டுள்ளதால் இச்சொல் வழக்கும் இவர்களிடம் மட்டுமே உள்ளதாகும்.

மொலையரி

மொலையரி’ எனும் சொல் மூங்கில் அரிசியைச் சுட்டுவதாகும். மூங்கில் பூத்துக்,காய்த்து,நெல்லானவுடனே முற்றாக அழிந்துவிடும். இதனைத்தான் தனிப்பாடல் ஒன்றில் ‘நண்டு வேய் கதலி நாசமுறும் காலத்தில் கொண்ட கரு அழிக்கும்’ என அவ்வையார் பாடுகின்றார். மிகவும் அரிதாகவே கிடைக்கும் உணவுப்பொருளான மூங்கில் அரிசி முலைத்து வருவதால் இப்பெயர் பெற்றுள்ளதாக உணர முடிகின்றது. மலையாள மொழிவழக்கில் மூங்கில் இப்பெயரினை பெறுகின்றது. இதனை உணவு முறையாக பெரும்பாலான பழங்குடிகள் கொண்டுள்ளனர். மூங்கில் அரிசியை எடுத்து உமி நீக்கி நன்றாக வேகவைத்து,கஞ்சி, பொங்கல், தோசை, புட்டு போன்ற உணவு வகைகளாக்கி உண்கின்றனர். இதற்கு மூலப் பொருளான மூங்கில் நெல்லினையே இவர்கள் ‘மொலையரி’ எனும் சொல்லால் குறிப்பிடுகின்றனர். (மொல அரிசி - மூங்கிலரிசி)இத்தகைய மூங்கில் அரிசி வாதத்தைப் போக்கும் மருந்தாக பயன்படுவதாகவும் கூறுகின்றனர். இச்சொல் வழக்கு இப்பகுதியின் பொதுவழக்கே ஆகும்.

கூனு

கூனு’ எனும் சொல் வளைதல், முதுகு வளைதல் என்ற பொருள் தரும். தமிழகத்தில் கூனு எனும் சொல் பொது வழக்கில் முதுகு வளைந்தவர்களைக் குறிக்கும் பொருண்மை கொண்டதாகவே அறிய முடிகின்றது. ஆனால், பழங்குடிகள் உள்ளிட்ட சமூகத்தவர்களின் வழக்கில் இது ‘காளான்’ என்ற உணவுப் பொருளையே சுட்டுகின்றது. இக்காளானை, ‘காளாம்பி’ (சிறு. 132:134) என்ற சொற்களால் சங்கப் பாடல் சுட்டுகிறது. ஆனால் ‘கூனு’ எனும் சொல் மலையாள மொழியிலும் காளானையே குறிக்கின்றது. கூனில் பலவகை உள்ளன. அவை ‘கூனு’, ‘மரக்கூனு’(மரக்காளான்), ‘அரிக்கூனு’ (அரிசிக்காளான்) முதலானவை அவற்றுள் உண்ணத் தகுந்தவை அரிக்கூனு, ‘கூனு’ முதலானவை ஆகும். மழைகாலங்களில் மட்டுமே கிடைக்கும் உணவுப்பொருளான காளன், கூனு என இப்பகுதியில் பொதுவழக்குச் சொல்லாகவே வழங்கிவருகிறது.

சீர

சீர’ எனும் சொல்லுக்கு தமிழ்ப் பேரகராதி தலைச்சீரா – பலாசம், கவசம், சிற்றுண்டி வகை ஆகிய பொருட்களைத் தருகின்றது. சீர எனும் இச்சொல் இப்பகுதியில் காட்டும் பொருளானது கீரை என்பதாகும். கீரையினையே ‘சீர’, ‘சீரா’ எனப் பழங்குடிகள் தமது வழக்கில் அழைக்கின்றனர். கீரை பழங்குடிகளின் உணவில் முதன்மை இடத்தை வகிக்கின்றது. அவற்றுள், பல வகைகள் உள்ளன. அவற்றுள் மனத்தக்காளிக் கீரையினை ‘கரிமுடுக்கு சீரா’ எனவும், பரங்கிக்காய் கீரையை ‘கும்பளச் சீரா’ எனவும் அழைக்கின்றனர். மலையாள மொழியிலும் கீரையை ‘சீரா’ என்ற சொல்லாலேயே குறிப்பிடுகின்றனர். இச்சொல் மலையாள மொழியின் தாக்கத்தினால் பழங்குடிகளின் வழக்கிலும் இடம்பெற்றுள்ளது.

சுருளி

சுருளி’ எனும் சொல் இலங்கையின் மரவகைகளுள் ஒன்றனையும், தொழுகண்ணி என்பதையும் பொருளாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடுகிறது பேரகராதி. பழங்குடிகளான காட்டு நாயக்கர், பணியர், குறும்பர் ஆகியோரது வழக்கில் சுருளி என்பது ஓடைக்கரைகளில் காணலாகும் சுருள்சுருளான கீரை வகைகளுள் ஒன்றினையே குறிப்பிடுகின்றனர். அதன் இலைப் பகுதியானது சுருண்டு இருப்பதால் சுருளி என்ற பெயரைப் பெற்றுள்ளது. இது இப்பழங்குடிகள் மட்டுமே உணவாகக் கொள்வதால் இவ்உணவு வழக்கமும், இச்சொல் வழக்கமும் மேற்காணும் பழங்குடிகளின் வழக்கில் மட்டுமே காணப்படும் ஒன்றாகும். இச்சொல் பொதுவழக்கினைப் பெறவில்லை எனினும் பழங்குடிகளுடனான தமிழ்மொழியின் உறவினையும், திராவிட மொழிகளின் தொடர்ச்சியினையும் வெளிப்படுத்துகின்றது.

தாள்

தாள்’ எனும் சொல் கால், மரம் முதலியவற்றின் அடிப்பகுதி, பூ முதலியவற்றின் அடித்தண்டு, வைக்கோல், விளக்குந்தண்டு, முயற்சி, ஆதி, சட்டைக் கயிறு, விற்குதை, வால்மீன் விசேடம், ஒற்றைக் காகிதம், தாழ்ப்பாள், கொய்யாக் கட்டை, மூட்டுவாயின் ஊடுருவச் செறிக்கும் கடையாணி, திறவுகோள், தாடை, கண்டம் போன்ற பொருண்மைகளைக் கொண்டுள்ளதாக தமிழ்ப் பேரகராதி சுட்டுகிறது. பணியர் எனும் பழங்குடி வழக்கில் நீர் நிலைகளிலும் அதன்கரைப் பகுதியில் காணப்படும் கீரை வகைகளுள் ஒன்றினைக் குறித்து வருகிறது. இலங்கையின் மலையக வழக்கில் ‘சேமங்கீரையென வழங்கப்படும் கீரையினையே இவர்கள் ‘தாள்’ என்ற சொல்லால் சுட்டுகின்றனர். தாள் எனும் இச்சொல்லானது தமிழில் தாவரங்களின் தண்டுப்பகுதியினை குறித்து வருவது இலக்கியங்களில் பரவலாகக் காணவியலும். தமிழிலக்கியமும் வழக்கும் கையாளும் ‘தாள்’ எனும் சொல் வழக்கினை பணியர் பழங்குடிகள் வழங்கிவருவது தமிழின் உறவினையும் தொன்மையினையும் காட்டுவதாகும்.

காய்ச்சல்

காய்ச்சல்’ எனும் சொல் உலர்ச்சி, வெப்பம், சுரநோய், மனவெரிச்சல் ஆகிய பொருள் தரும். பொதுவான வழக்கில் காய்ச்சல் எனும் சொல் நோயினையே குறித்து வருகின்றது. ஆனால், கூடலூர்ப் பகுதியில் பழங்குடிகளின் பொது வழக்கில் கிழங்கு வகையின் பெயரைக் குறித்து வருகின்றது.மலையாள மொழியில் ‘காய்ச்சல்’ என்றே சொல் வழக்குப் பெற்றுள்ளது.

நூரே

நூரே’ எனும் சொல் கிழங்கினைக் குறித்து வரும் பொருண்மை கொண்டதாகும். இது பணியர், காட்டுநாயக்கர் ஆகியோர் வழக்கில் காணப்படும் சொல்லாகும். அடர்ந்த வனப்பகுதிகளில் காணப்படும் கிழங்கு வகையே ‘நூரே’ கிழங்கு எனப்படும். இச்சொல் வழக்கு மேற்காணும் பழங்குடிகளின் வழக்கில் மட்டுமே காணப்படும் சொல்லாகும்.

பாவாட்ட

பாவாட்ட’ எனும் சொல்லும் கிழங்கினைக் குறித்து வரும் பெயர் கொண்டதாகும். பணியர் வழக்கில் இச்சொல் காணப்படுவதாகும். அடர் வனங்களில் கிடைக்கும் காடு படுபொருளான இக்கிழங்கு வகையான மருந்து பொருளாக பயன்படுவதாகும். இதனால், இக்கிழங்கினை விற்பனை செய்கின்றனர். இச்சொல் வழக்கு மேற்காணும் பழங்குடிகளிடம் மட்டுமே காணப்படும் சொல் வழக்காகும்.

ஞெண்டு

எக்கர் ஞெண்டின்’ (நற். 267:2) எனும் இவ்வடிகளுள் ‘ஞெண்டு’ என்ற சொல்லானது குறிக்கும் பொருள் நண்டு என்பதே ஆகும். இச்சொல் வழக்கு பணியர், காட்டுநாயக்கர் ஆகியோர் வழக்கில் காணப்படும் சொல்லாகும். மேற்காணும் பழங்குடிகள் உள்ளிட்ட அனைவரின் உணவுப் பொருளாக நண்டு உள்ளது. இச்சொல் வழக்கும் அந்நிலையைப் பெற்றுள்ளது. சங்க இலக்கியம் சுட்டும் ஞெண்டு என்னும் சொற்பயன்பாடு பழங்குடிகளின் வழக்கில் இடம்பெற்றுள்ளது தமிழின் விரிவையும் திராவிடமொழி உறவையும் வெளிப்படுத்துவன.

சக்கை

சக்கை’ எனும் இச்சொல் கோது, பட்டை, சிராய், இறுக்கும் தக்கை, துப்பாக்கி தக்கை, பலா, காட்டுப் பலா ஆகிய பொருண்மைகளைக் கொண்டுள்ளது. சக்கை எனும் இச்சொல் பழந்தமிழ் வழக்கில் ‘உழுந்தின் அதரை’ (புறம். 299:2) யினைக் குறித்து வந்துள்ளது. எனினும், இச்சொல் பொதுவாகக் ‘கழிவு’, ‘தேவையற்றது’ என்ற பொருண்மைகளைக் கொண்டே இன்றளவும் உணர்த்தி வருவதைக் காணமுடிகின்றது. இது கால இடைவெளியால் ஏற்பட்ட பொருண்மை சுருக்கமாகவும், பொருள் மாற்றமாகவும் உள்ளதே ஆகும்.

கூடலூர் பகுதியில் ‘சக்கை’ என்ற சொல்லானது ‘பலா’ என்ற பழந்தமிழ்ப் பொருளையே இன்றளவும் உணர்த்தி வருவதைக் காணமுடிகின்றது. ‘பலா’ என்ற சொல் வழக்கு குறைவாகவும், பழங்குடி உள்ளிட்ட அனைத்து சமூகத்தவரின் பொது வழக்காக ‘சக்கை’ என்ற சொல்லே பலா என்ற பொருண்மையில் பெருவழக்காக உள்ளதைக் காணமுடிகின்றது.

பழந்தமிழ் வழக்கில் ‘சக்கை’ என்ற சொல் பலா, காட்டுப் பலா ஆகியவற்றைக் குறித்து வந்த போதிலும் களப் பகுதியில் இவ்விரண்டையும் இச்சொல் குறித்து வருவது பொருண்மை மாற்றமற்ற நிலையைக் காணமுடிகின்றது. கூடலூர்ப் பகுதி மலைப் பகுதியாகவும் இருப்பதால் இங்கு மிகுதியான அளவில் பலா மரங்கள் காணப்படுகின்றன. தவிர பழங்குடிகளின் மிக முக்கிய உணவுப் பொருளாகவும் இச்சக்கை உள்ளது. இவர்கள் பலாப்பழத்தை ‘சக்க பழம்’ எனவும் பிஞ்சுக் காயை ‘இடிச் சக்க’ என்ற சொற்களால் குறிப்பிடுகின்றனர். எனினும், ‘சக்கை’ என்ற சொல் பொது வழக்குச் சொல்லாக உள்ளதைக் காணமுடிகின்றது.

வச்ச

வச்ச’ என்ற இச்சொல்லானது கூடலூர் பகுதியில் மீனைக் குறிக்கும் சொல்லாகும். ‘மீன்’ எனும் சொல் இப்பகுதியில் வழக்கில் இருந்த போதும் வணிக ரீதியாக ‘வச்ச’ என்ற சொல்லும் இப்பகுதியில் மீனினைக் குறிக்கும் சொல்லாகும். இதற்கு காரணம் தமிழ் மொழியில் காய்ந்த மீனைக் குறிக்க ‘கருவாடு’ என்ற சொல் இருப்பது போல் மலையாள மொழியில் இல்லை. அதற்கு அவர்கள் ‘காய்ந்த மீன்’ என்ற சொல்லையே கையாள்கின்றனர். மீன் இப்பகுதியில் முக்கிய உணவாக இருக்கக் காரணம் கூடலூர்க்கு அருகில் கள்ளிக்கோட்டையின் கடல்பரப்பு இருப்பதே ஆகும். அதனால், அங்குள்ள மீன்கள் பெருமளவில் கூடலூர்ப் பகுதிக்கு கொண்டு வரப்படுகின்றது. மேலும், மீன் விற்பனை செய்பவர்கள் மலையாளிகளாக இருப்பதால் அவர்கள் ‘பச்சை மீனு’ என்ற சொல்லைச் சுருக்கி பச்ச என்றழைத்து அது மருவி ‘வச்ச வச்ச’ என்ற சொல்லாக மாற்றம் பெற்றுள்ளது. இவ்வாறு மீன் வியாபாரிகளால் அறிமுகம் பெற்ற இச்சொல்லானது பழங்குடி சமூகம் உட்பட அனைத்து சமூகத்தவரின் வழக்கிலும் காணப்படும் சொல்லாகவே மாற்றம் பெற்றுள்ளது. எனினும், ‘மீன்’ என்ற சொல் பொது நிலையிலும், வச்ச என்ற சொல் வணிக நிலையிலும் பரவலாகக் காணப்படுவதை உணர முடிகின்றது. இச்சொல் வழக்கைத் தமிழில் காணமுடியவில்லை.

பழங்குடிகளின் உணவுப்பண்பாடும் அதனூடே வழங்கப்படும் சொற்கள் என்பதும் மானுட சமூகத்தின் படிநிலையான வளர்ச்சிநிலையினையும், திராவிடப் பண்பாட்டின் உறவுநிலையின் தொடர்ச்சியினையும், இயற்கையோடு இயைந்த பண்புநிலையினையும் வெளிப்படுத்துகின்றன. இன்றளவும் எழுத்து வழக்கற்று, பேச்சு வழக்கினை மட்டுமே கொண்டுள்ள இம்மொழிகள் இடையறாமல் பழந்தமிழுடன் கொண்டுள்ள தொடர்பு முறையினையும் வெளிப்படுத்தி வருகின்றன. பழங்குடி மக்களும்,அவர்தம் மொழியும் தனித்த தன்மையுடையன என்ற பொதுப்பார்வையில் இருந்து விலகி அவர்களது வழக்குச் சொற்களையும், அவை தமிழுடனும்,திராவிட மொழிகளுடனும் கொண்டுள்ள உறவு முறைகளை மேலும் கண்டறிந்தால், தமிழின் தொன்மையும் செம்மொழித்தன்மையும் மென் மேலும் சிறந்து விளங்கும் என்பது சிறிதும் ஐயமில்லை.

பார்வை நூல்கள்

1.புறநானூறு,

2.நற்றிணை,

3.ஐங்குறுநூறு,

4.சிறுபாணற்றுப்படை,

5.தென்னிந்திய குலங்களும் குடிகளும், எட்கர் தர்ஸ்டன்,

6.தமிழ்ப்பேரகராதி ,

7. பண்பாட்டு மானிடவியல், சீ. பக்தவத்சலபாரதி,

8. தமிழர் மானிடவியல், சீ. பக்தவத்சலபாரதி,

9. தமிழர் உணவு, (பதி) சீ. பக்தவத்சலபாரதி,

10. கூடலூர் வட்டாரப் பழங்குடி மக்களின் வழக்குத்தமிழ் (முனைவர் பட்ட ஆய்வேடு) செ. துரைமுருகன்.

 

* கட்டுரையாளர்: - முனைவர் செ.துரைமுருகன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலையறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R