நீர்வை பொன்னையன்எழுத்தாளர் நீர்வை பொன்னையனின் மறைவு பற்றி முகநூற் பதிவுகள் மூலம் அறிந்துகொண்டேன். எழுத்தாளர் நீர்வை பொன்னையன் என்றால் முதலில் நினைவுக்கு வருவது அவரது 'மேடும் பள்ளமும்' சிறுகதைத்தொகுதிதான். தனது இருபத்தேழாவது வயதிலிருந்து எழுத்துத்துறைக்கு வந்தவர் எழுத்தாளர் நீர்வை பொன்னையன். அவர் தான் எழுதிய முதலாவது சிறுகதை வெளிவந்த ஆண்டு  1957 என்று அண்மையில் ஆதவன் தொலைக்காட்சியில் நடைபெற்ற நேர்காணலொன்றில் கூறியிருக்கின்றார். அது வெளியானது ஈழநாடு வாரமலரில் என்றும் கூறியிருக்கின்றார். அதனைப்பாராட்டி அப்போது ஈழநாடு ஆசிரியராகவிருந்த இரா. அரியரத்தினம் தனக்குக் கடிதமொன்றினை எழுதியதாகவும் அந்நேர்காணலில் அவர் கூறியிருக்கின்றார். அதே சமயம் 1961ஆம் ஆண்டு வெளியான தனது முதலாவது கதைத்தொகுதியான 'மேடும் பள்ளமும்' தொகுதிக்கான முன்னுரையில் அவர் தான் முதலாவதாக எழுதிய சிறுகதை 'புயல்' என்று குறிப்பிட்டிருக்கின்றார். மேலும் அத்தொகுதியி;லுள்ள சிறுகதைகளை வெளியிட்டதற்காக தேசாபிமானி, தினகரன், வீரகேசரி, கலைமதி, தாமரை, தமிழன், கலைச்செல்வி ஆகியவற்றில் வெளிவந்தவை என்றும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருக்கின்றார். அங்கு அவர் ஈழநாடு பற்றியெதுவும் குறிப்பிடவில்லை. இக்குழப்பம் எனக்கு அண்மையில் அவர் நேர்காணலைக் கேட்டதிலிருந்து ஏற்பட்டதொன்று. ஏனென்றால் அவரது 'மேடும் பள்ளமும்' சிறுகதைத்தொகுதியைப் பல வருடங்களுக்கு முன்னர் வாசித்ததிலிருந்து அவரது முதற்கதை 'புயல்' என்றே எண்ணியிருந்தேன். ஒரு வேளை அவர் அத்தொகுதி வெளியானபோது ஈழநாடு பற்றிக் குறிப்பிட மறந்திருக்கலாம். முதற்கதை 'புயல்' என்று தவறுதலாகவும் குறிப்பிட்டிருக்கலாம். 1957 ஆம் ஆண்டுக்குரிய ஈழநாடு வாரமஞ்சரிப் பிரதிகளைப் பார்த்து முடிவு செய்ய வேண்டிய விடயமிது.

இருந்தாலும் 'மேடும் பள்ளமும்' அவரது முதற்கதையோ இல்லையோ அவரது ஆரம்பக் கதைகளிலொன்று. 1930ஆம் ஆண்டு பிறந்த அவர் தனது இளமைப்பருவத்திலேயே சிறுகதைகள் எழுதத்தொடங்கி விட்டார். எனக்கு நீர்வை பொன்னையன் என்றால் முதலில் நினைவுக்கு வருவது அவரது முதற் சிறுகதைத்தொகுதியான 'மேடும் பள்ளமும்'தான். அதிலுள்ள 'மேடும் பள்ளமும்' சிறுகதைதான். அவரது ஆரம்ப சிறுகதையே அவரை நினைவு படுத்தும் சிறுகதையாக அமையும் வகையில் சிறப்பாக எழுதியிருப்பது அவரது எழுத்தாற்றலுக்குச் சான்று. 'மேடும் பள்ளமும்' சிறுகதையின் கரு இதுதான்:  அக்கிராமத்தின் உயர்குடி நில உடமையாளன் ஒருவனிடமிருந்து நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் விளைவித்துக் கொண்டிருந்தான் ஒரு தொழிலாளி. அவன் சமூகத்தின் அடிமட்டத்தைச் சேர்ந்த தாழ் குடிகளில் ஒருவன். பயிருக்குப் பயன்படாது என்ற நிலைலியிருந்த மேட்டு நிலத்தை எடுத்து நெல் விளைவித்தான் அவன். கடந்த இரு வருடங்களாக அவனுக்கு நட்டத்தை ஏற்படுத்திய அந்த மேட்டு நில வயல் அவ்வருடம் அவனுக்கு நல்ல விளைச்சலைக் கொடுத்தது. வழக்கமாக விளைச்சலைக் கொடுக்கும் அந்நில உடமையாளனின் பள்ள நில வயல் அம்முறை பெய்த பெரு மழை ஏற்படுத்திய அழிவினால் பாதிப்புற்றிருந்தது. இதனால் மனம் புழுங்கிய அந்நில உடமையாளன் அத்தொழிலாளியை உடனடியாகவே குத்தகைப்பணப் பாக்கியைக் கட்டும்படி வற்புறுத்தினான். அவ்விதம் கட்டாவிட்டால் அவனது விளைச்சலைத் தானே சாகுபடி செய்யப்போவதாகப் பயமுறுத்தி இறுதியில் அவ்விதமே செய்கின்றான். அத்தொழிலாளியையும் அடித்துப் பள்ள வயலின் மூலையில் போட்டு விடுகின்றான். இதனால் வெகுண்டெழுந்த தொழிலாளர்கள் ஒன்று அந்நில உடமையாளனுக்குக்கெதிராகத் திரண்டு எழுகின்றார்கள். அம்மேட்டு நிலத்தை நோக்கி, தாழ் நிலத்து வயலில் அடிபட்டுக் காயமடைந்து கிடந்த அந்தத்தொழிலாளியையும் சுமந்தபடி மேட்டு நிலத்தை நோக்கிச் செல்கின்றார்கள். இதுதான் கதை. இச்சிறுகதையினை நீர்வை பொன்னையன் அவர்கள் சிறப்பாகவே எழுதியிருக்கின்றார். இதுவொரு குறியீட்டுக் கதை. வர்க்கமற்ற சமுதாயத்துக்கான போராட்டத்துக்குத் தொழிலாளிகள் திரண்டெழுவதை விபரிக்கும் குறியீட்டுக்  கதை.

இக்கதையில் எனக்குப் பிடித்த இன்னுமொரு முக்கியமான அம்சம். நில உடமையாளன் உயர்குடி. அத்தொழிலாளியோ தாழ்குடி. உயர் குடி வயலிருப்பதோ தாழ்நிலத்தில். தாழ்குடியின் வயலிருப்பதோ உயர்நிலத்தில்; மேட்டு நிலத்தில். சிறுகதையின் தலைப்பு 'மேடும் பள்ளமும்'. தாழ் நிலையிலுள்ள தொழிலாளர்களின் நிலை அம்மேட்டு நில வயலைப்போல் வளம் கொழிக்க தொழிலாளர்கள் அனைவரும் அணி திரண்டெழ வேண்டுமென்பதுதான் நீர்வை பொன்னையனின் நோக்கம். அதுவே அவரது இலட்சியமும், இலக்கியத்துக்கான நோக்கமும். இறுதி வரையில் அவரது எண்ணம் அந்நிலையிலிருந்து தளும்பவேயில்லை. அவரது கதாபாத்திரங்கள் தொழிலாளர்களாகத்தாமிருந்தார்கள். அவர் வாழ்ந்த சமுதாயத்தில் வர்க்க, வர்ணரீதியாக அடக்குமுறைகளுக்குள்ளாக்கப்பட்டுப் பல்வகையான துன்பங்களையும் அனுபவித்து வரும் அம்மக்களைப்பற்றியே அவரது எழுத்துகள் இறுதிவரையிலிருந்தன. அதிலவர் மிகவும் உறுதியாகவேயிருந்தார்.

இது போல் ஆரம்பக்கதையொன்றின் மூலம் நினைவு கூரப்படும் வேறு தமிழ் எழுத்தாளர்கள் எவருமுள்ளனரா? தன் ஆரம்பக் காலக் கதைகளிருந்து இறுதி வரையில் தொழிலாளர்களுக்காக இயங்கியவர் அவர். எழுதியவர் அவர். அதிலவர் மிகவும் தெளிவாகவேயிருந்தார். தன் படைப்புகளுக்கு இலங்கை அரசினால் வழங்கப்படும் விருதுகள் பலவற்றையும் பெற்றார். அவரது படைப்புகளைத்தாங்கிப் பல பதிப்பகங்களால் அவரது படைப்புகள் தொகுக்கப்பட்டு வெளியானதைப் பார்க்கும் பாக்கியம் அவருக்குக் கிட்டியது ஆறுதலளிப்பது.

தான் இளமையில் வரித்துக்கொண்ட அரசியல் சித்தாந்தங்களுக்காக ஆரம்பத்திலிருந்து இறுதிவரை எழுதியவர், செயற்பட்டவர் நீர்வை பொன்னையன் அவர்கள். சமுதாயத்தில் அதிக துன்பங்களுக்குப் பொருளியல்ரீதியிலுள்ளாகிப் பலவகைத்துயர்களுக்கு முகங்கொடுப்பவர்கள் அவர்களே. அதனால்தான் அவரது எழுத்துகள் அம்மக்களைப்பற்றியதாகவே எப்போதுமிருந்தன. அம்மக்களின் விடுதலைக்காகவே குரல் கொடுத்தன. தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகள் பற்றி அவருக்கிருந்த தெளிவு, அவற்றினின்றும் தழும்பாது இறுதி வரையில் செயற்பட்ட அவரது உறுதி என்னை மிகவும் கவர்ந்தவை. அவரது இழப்பு தமிழ் இலக்கிய உலகுக்கு மட்டுமல்ல உழைக்கும் மக்களுக்கும்தான். அவர்களுக்காக இறுதிவரை உறுதியாக, தெளிவுடன் , தளராமல் இயங்கிக்கொண்டிருந்த இதயம் தன் துடிப்பை நிறுத்திக்கொண்டுவிட்டது. எமது ஆழ்ந்த அஞ்சலி.

'மேடும் பள்ளமும்'  இணைப்பு : http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R