ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?சமூகவியல் என்பது ஓர் ஆய்வுமுறை என்பது மட்டுமல்லாமல், அது சமூகத்தைப் பற்றியும், அதன் அமைப்பைப் பற்றியும், அதன் அசைவியக்கத்தினைப் பற்றியும், பௌதீக நெறி நின்று விளக்கும் அறிவியல் துறையுமாகும். மக்கள் குழும உணா்வுடன் தங்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும் தமக்கான ஒருவிதப் பாதுகாப்பைப் பெறவும் உருவாக்கிக் கொண்டதே சமூக அமைப்பாகும். இது பல்வேறு அலகுகளாலும் பற்பல அடுக்குகளாலும் கட்டமைக்கப்பட்டதாகும். இத்தகைய சமூகக் கட்டுமானங்களைப் பகுப்பாய்வு செய்வதுடன் அதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி நிலைகளை அறுதியிடவுமான அறிவுத்துறையாகவும் சமூகவியல் விளங்குகிறது.

சமூக இருப்பை உணர்தல் என்பதான தத்துவார்த்த தேடல் வரலாற்றுக் காலந்தொட்டே மனித சாராம்சத்தின் ஒரு பகுதியாக இருந்துவந்த போதிலும்     கி.பி. 19-ம் நூற்றாண்டில்தான் சமூக வாழ்வு பற்றிய அறிதலும் வாழ்நிலை சார்ந்த புரிந்துணர்வும் விஞ்ஞானரீதியில் முழுவதுமாகத் துளக்கமுறத் தொடங்கின. சமூகத்தில் மனித இருத்தலைப் பற்றிய புதிர்கள் தெளிவுறுத்தப்பட்டன.

இச்சமூகவியல் என்னும் அறிவுத்துறையின் தோற்றத்திற்குக் காரணமானவா் பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஆகஸ்ட் கோண்ட் ஆவார். இவரே சமூகவியல் என்ற பெயரோடு இந்த அறிவுப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.1 சமூகம் தொடர்பான இயற்கைவழி விஞ்ஞானம் ஒன்றினைக் காண்பதே கோண்டின் பிரதான இலக்காக இருந்தது. இது மனிதகுலத்தின் கடந்தகால வளர்ச்சியை விளக்குவதுடன் வருங்காலம் பற்றி மதிப்புரைப்பதாகவும் இருந்தது. ஆகஸ்ட் கோண்ட்டைத் தொடர்ந்து பல்வேறு அறிஞர்கள் சமூகவியல்சார் சிந்தனைகளை வளர்த்தெடுத்துள்ளனர்..

சமூக நடத்தை விதிகளை ஆராய்வதும் அதற்கான காரண-காரிய தொடர்பை விளக்குவதும் சமூகவியலின் சிறப்பம்சமாக விளங்குகிறது. இது பிற சமூக அறிவியல்களோடு நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. சமூக அறிவியலாளர்கள் கண்டறிந்த மூலங்களிலிருந்தும் பல்வேறு  தரவுகளைச் சமூகவியல் பயன்படுத்திக் கொள்கிறது. வரலாற்றியல், மானுடவியல், மொழியியல், பொருளாதாரவியல், இனவரைவியல், அரசியல், அறவியல், உளவியல் போன்ற பல்வேறு அறிவாய்வுத் துறைகளும் சமூகவியலுக்குப் பங்களிப்பைச் செய்துள்ளன.

மேற்கண்ட கோட்பாட்டாய்வுகள் தாம் எடுத்துக்கொண்ட சமூகப் பொருண்மைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு ஆய்வு நிகழ்த்துகின்றன. ஆனால் சமூகவியல் ஆய்வானது அவற்றை ஒரு சமூக நிகழ்வாகக் கொண்டு அது பிற நிகழ்வுகளோடும் பிற அமைப்புகளோடும் கொண்டுள்ள தொடர்பொழுங்கைப் பற்றியும் ஆய்கிறது. எனவே சமூகவியல் தன்னளவில் பரந்துவிரிந்த ஆய்வுப் பரப்பைக் கொண்டுள்ளது. மட்டுமல்லாமல் சமூகம் முழுமைக்குமான ஆய்வுமுறையாகவும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.

கார்ல் மார்க்ஸ், ராபர்ட் பார்க், பெரட்டோ, தர்ஸ்டன் வெப்ளன், லெவிஸ் கோசர் மற்றும் ரேஸ்மன் போன்றோர் குறிப்பிடத்தகுந்த சமூகச் சிந்தனையாளர்கள் ஆவர். இந்திய அளவில் அம்பேத்கர்  போன்றோரையும் தமிழகத்தில் ஈ.வெ.ரா பெரியார் போன்றோரையும் இவ்வகையில் குறிப்பிடமுடியும்.

மேற்கண்ட சிந்தனையாளர்களில் மார்க்ஸின் சமூகப் பார்வை பொருளாதாரத்தை மையமிட்டதாக இருந்தது. சமூக வாழ்வை நிர்ணயிப்பது பொருளாதார நிலைகளே என்பது மார்க்சிய சித்தாந்தமாகும். வர்க்கங்களின் போராட்டம் என்பதையே முதன்மையான தவிர்க்கவியலாத சமூக முரண் என மார்க்ஸ் விவரித்தார். சமூக வரலாற்றைப் பொருளாதாரம் சார்ந்த உற்பத்தி உறவுகளுடன் தொடர்புபடுத்தி விளங்கியவா் மார்க்ஸ் - ஏங்கெல்ஸ்சும் ஆவர். இதுவே பின்னாளில் இயங்கியல் பொருள்முதல்வாதமாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தைப் புரிந்து கொள்ளவும் அதனைப் புரட்சிகரமான சமூகமாக மாற்றியமைக்கவுமான தத்துவக் கோட்பாடாக இது விளங்குகின்றது.

ஹெகலின் (1770-1831-ஜெர்மன்) இயங்கியல் தத்துவத்தையும் ப்யர்பாக்ன் பொருள்முதல்வாதத் தத்துவத்தையும் இணைத்து இயங்கியல் பொருள்முதல்வாதம் எனும் தத்துவத்தை மார்க்ஸ் உருவாக்கினார். பொருளின் இயக்கத்தை வலியுறுத்தி அது ஏன் இயங்குகிறது என்பதையும் எப்படி இயங்குகிறது என்பதையும் விளக்கியுரைப்பது இயங்கியல் எனப்படும். இயங்கியல் பொருள்முதல்வாதத்தை மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் பொருத்திக் காணும் விதமாக வரலாற்றுப் பொருள்முதல்வாதம் அமைந்தது. உயிரியல் வளர்ச்சியின் விதிகளை டார்வின் கண்டு உரைத்தது போல மனிதவரலாற்றின் வளர்ச்சி விதிகளை மார்க்ஸ் கண்டறிந்தார். உற்பத்திமுறையே சமூக அமைப்பை தீர்மானிக்கிறது, உற்பத்திமுறை மாறும்போது சமூகக் கட்டமைப்பும் மாறுகிறது. அரசு, கருத்தியல், மதம் ஆகியனவும் இவ்வுற்பத்தி முறையினால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றன என்பன வரலாற்று பொருள்வாதத்தின் சாராம்சமாகும்.

‘மார்க்ஸியத்தைச் செழுமைப்படுத்தியவா்கள் என லெனின் ஸ்டாலின், மாவோ போன்றோரைக் குறிப்பிடலாம். ரஷ்யாவில் பொதுவுடைமைக் கட்சியை நிறுவி அக்கட்சியின் மூலம் புரட்சியை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களை மார்க்ஸியத் தத்துவத்தின் துணைகொண்டு வழங்கியவா் லெனின் ஆவார். லெனினுக்குப் பின்னா் ரஷ்ய சோஸலிசத்தைக் கட்டிக்காத்தவா் ஸ்டாலின். சோசலிச சமூக அமைப்பில் இருந்து கம்யூனிச சமூக அமைப்பை நோக்கிய புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியவா் மாவோ. இவா்களின் சிந்தனைகளோடு மார்க்ஸியம், மார்க்சிய லெனினியமாக, மார்க்ஸிய மாவோயிசமாக வளா்ச்சி கண்டது. இவா்களின் சிந்தனைகளின் ஒட்டுமொத்தமே உலகின் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் தத்துவமாக விளங்கியது’2.

இவா்கள் மட்டுமல்லாது அந்தோணியா கிராம்சி, ரோசா லுக்சம்பா்க் முதலிய மார்க்சிய ஆய்வாளா்களின் கருத்துகளும் மார்க்ஸியத்துள் அடக்கியே கூறப்படுகின்றன. மார்க்ஸியத்தைப் பவ்வேறு கோணங்களில் விமா்சித்தும் விரிவுபடுத்தியும் அதனைப்  பலர் வளா்த்தெடுத்துள்ளனா். “மார்க்சியம் உள்முரண் அற்றதன்று. தனக்குள்ளும் சில முரண்களைக் கொண்டிருக்கிறது. இந்த உள்முரண்கள் தாம் தொடா்ந்து ஆய்வுகளுக்கும், புதிய வகையிலான விளக்கங்களுக்கும்; காரணமாக அமைகின்றன 3.” என்ற சு.துரையின் கூற்று குறிப்பிடத்தக்கது.

மார்க்ஸியா்கள் பல்வேறு சமூகப் பார்வைகளினூடாகச் சமூகத்தின் பலதரப்பட்ட முரண்பாடுகளிலுமுள்ள வா்க்கச் சாயலை விளக்கிக் காட்டினா். எனவே மார்க்ஸியமானது மார்க்ஸ் ஏங்கல்சோடு மட்டும் நிறைவடைந்துவிடவில்லை. அவா்களுக்குப் பிறகு மார்க்ஸியக் கொள்கைகளை விரிவுபடுத்தியவா்கள், அதனைச் சமூகத்தின் பல மட்டங்களிலும் இட்டு நிரப்பியவா்கள், அதன் பல்வேறு அம்சங்களோடு பொருத்திக் கண்டவா்கள் போன்றோரின் சிந்தனைத் தொகுப்பே மார்க்ஸியம் என வழங்கப்படுகிறது. அவ்வகையில் மார்க்ஸியம், சமூகவியல் துறைக்கு ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. சமூகவியலுடன் இணைந்து மார்க்ஸிய சமூகவியல் எனும் ஆய்வுமுறை இன்று வளா்ந்து வந்துள்ளது.

மார்க்ஸிய சமூகவியல் சமூகப் பிரச்சினைகளை அறிவியல் தன்மையோடும் விரிவான பார்வையோடும் அணுகுகிறது. இத்தகைய சூழலில் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றை மார்க்ஸியக் கொள்கைகளின்வழி ஆராயும் ஆய்வு முறையைக் கையாண்டவா் அந்தோணியா கிராம்சி ஆவார்.

அந்தோனியா கிராம்சியும் இந்தியச் சூழலும்
அந்தோனியா கிராம்சியின் கருத்தாக்கங்களை இந்தியச் சூழலில் பொருத்திக் காண்பது என்பது அவசியமானது மட்டுமல்லாமல் வரலாற்றுத் தேவையுமாகவும் உள்ளது. இந்திய வரலாறும் இத்தாலிய வரலாறும் பரஸ்பரம் ஒத்திருப்பது ஏதேச்சையான உண்மையென மார்க்ஸ் கருத்துரைத்துள்ளார். இத்தாலியச் சிந்தனையாளரும் மாபெரும் புரட்சியாளருமான அந்தோனியா கிராம்சியின் சிந்தனைகளை இந்தியா போன்ற கீழைப் பிராந்தியங்கள் பரவலாக முன்னெடுக்க வேண்டும் என்பதும் புரட்சிகர மாற்றத்திற்குரிய மூலங்களாக கிராம்ஸியச் சிந்தனைகள் விளங்குகின்றன என்பதும் இன்றைய அறிஞா் மட்டத்தில் பேசப்படுகின்ற ஒன்றாகவும் இருக்கின்றது. கிராம்சியின் கருத்தாக்கங்களின் இந்தியத் தேவையை எஸ்.வி. ராஜதுரை மற்றும் வ.கீதா தம்முடைய ‘கிராம்சி புரட்சியின் இலக்கணம்’ எனும் நூலில் கீழ்க்கண்டவாறு அடையாளப்படுத்தியுள்ளனா்.

“இந்தியப் பார்ப்பனியத்துடன் ஒப்பிடக்கூடிய இத்தாலியத் தத்துவங்களைப் பற்றிய அவரது விமா்சனம், புரட்சிகரப் பாட்டாளி வா்க்கத்தின் கருத்துநிலை மேலாண்மை, பட்டாளி வா்க்கம் நடத்த வேண்டிய பண்பாட்டுப் புரட்சி ஆகியன குறித்த அவரது விளக்கங்கள் முதலியன, இந்தியாவில் புரட்சிகர மாற்றத்திற்காகப் போராடுகிறவா்கள் கற்றுக் கொள்ள வேண்டியனவாகும்4என்கின்றனா்.

கிராம்சியைப் பற்றிய விரிவான நூல்கள் சமீப காலமாகத் தமிழில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ‘கிராம்சி புரட்சியின் இலக்கணம்’ என்ற எஸ்.வி. ராஜதுரை,   வ. கீதா எழுதிய நூலும், இ.எம்.எஸ், கோவிந்தப்பிள்ளை ஆகியோர் இணைந்து எழுதிய ‘கிராம்சியின் சிந்தனைப் புரட்சி’ என்னும் நூலும் ‘தோ்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்’ என்னும் பெயரில் வான்முகிலன் அவா்களால் மொழிபெயா்க்கப்பட்டு ஒரு நூலும் வெளிவந்திருக்கிறது. இவையெல்லாம் கிராம்சியின் வாழ்வியலையும் கோட்பாடுகளையும் ஓரளவு புரிந்து கொள்ள உதவுகின்றன.

கிராம்சியின் சிந்தனைப் பின்புலம்
வரலாற்றுப்போக்கிற்கு ஏற்ப தத்துவங்களின் போக்கும் மாறியே வந்துள்ளன. காலமாற்றத்திற்கேற்றவாறு கருத்துமாற்றங்களை ஏற்காத தத்துவங்கள் காலப்போக்கில் வரலாற்று இயக்கத்தில் செயலற்றதாய்ப் போய்விடுகிறன. மார்க்சியம் காலத்திற்கும் சூழலுக்கும் உகந்த தத்துவமாகச் சில சிந்தனையாளா்களிடையே தன்னைப் புதுப்பித்துக் கொண்டே வந்திருக்கிறது. அவ்வகையில் மார்க்சியத்தை வளா்த்தெடுத்து அதன் சிந்தனையோட்டங்களைச் செழுமைப்படுத்தி நவீன நோக்கிலான ஆய்வு முறையாகப் பரிசோதனைக்குட்படுத்திக் காட்டியவா்  அந்தோணியா கிராம்சி ஆவார்.

வெறும் பொருளாதார நெருக்கடியே புரட்சியைத் தீர்மானிக்கிறது என்னும் வறட்டுத்தனமான மார்க்ஸிய விளக்கத்திற்கு மாறாக பண்பாடு, கருத்துநிலை மேலாண்மை ஆகியனவும் புரட்சியை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன என்பதான சிந்தனையை முன்வைத்தவா் அந்தோணியா கிராம்சி ஆவார்.

கிராம்சியின் தத்துவார்த்தப் பின்புலத்திற்கு முக்கியக் காரணியாக அமைந்தது. அவா் தோ்ந்தெடுத்துக் கொண்ட பொதுவுடைமை மார்க்கமும் மார்க்ஸியப் படிப்பினையும் என்பதை அவருடைய படைப்புகளை வாசிக்கும்பொழுது அறிந்துகொள்ள முடிகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஹெகல், குரோச்சே டி பாண்டிஸ் போன்ற தத்துவ அறிஞா்களின் படைப்புகளையும் மாக்சிய வெல்லியின் அரசியல் தத்துவங்களையும் ஆழமாகப் பயின்றிருக்கிறார். அவை எல்லாவற்றையும் மிகத் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்து பார்க்கும் ஆற்றலையும் கொண்டிருந்தார்.

இவ்வாறு கிராம்சி தன் தத்துவப் பார்வையை மார்க்ஸிய வழியில் கூர்மை தீட்டிக்கொண்டார். இத்தாலியப் பொதுவுடைமைக் கட்சி செயலராகப் பணியாற்றிய அனுபவமும் அன்றைய அரசியல் நடைமுறைகளும் கிராம்சியின் சிந்தனை வளா்ச்சிக்கு மேலும் உரமூட்டின. தத்துவமும் கோட்பாடும் அற்ற அரசியல் நடைமுறைகள் வெறும் பயனற்ற காரியமே எனக் கிராம்சி கருதினார். கிராம்சியின் சமூகவியல் பார்வை புரட்சிகர சமூக மாற்றத்தை எதிர்நோக்கும் இயங்கியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் அமைந்திருந்தது.

“சமூகத்திலுள்ள பிறப்புரிமைகளும் வேறுபாடுகளும் இயற்கையால் உருவாக்கப்பட்டவையல்ல, மாறாக, சமூகத்தால் உருவாக்கப்பட்டவை அதன் காரணமாகவே அவற்றைக் கடந்து வரவும் முடியும் எனக் கிராம்சி கூறினார் 5;” இது அவருடைய நுட்பமான வரலாற்று இயங்கியல் பொருள்முதல்வாதப் பார்வையைக் காட்டுவதாக உள்ளது.

அந்தோனியா கிராம்சியும் லெனினியமும்
மார்க்ஸியத் தத்துவங்களை நன்றாக உள்வாங்கியிருந்த கிராம்சியின் சிந்தனைக்கு நடைமுறை வடிவம் வகுத்தளித்தது லெனினியக் கருத்தாக்கம் தான் என்றால் அது மிகையல்ல. கிராம்சி தன்னுடைய சிந்தனைகளை லெனினைக் கண்டறிந்த பிறகு அவரது புரட்சிகர நடைமுறைகளோடும் செயல்பாடுகளோடும் ஒன்றிணைத்துக் கண்டார்.  கிராம்சியின் சிந்தனை, நடைமுறை ஆகிய இரண்டினது இணைப்பிற்கான தொடக்கமாக அமைந்தது 1917ஆம் ஆண்டு பிப்ரவரி ரஷ்யப் புரட்சிக்கான அவரது எதிர்வினைதான். கிராம்சியின் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளின் தொடக்கமாக இதனைக் கருத முடிகிறது.

கிராம்சியின் சிந்தனைப் பரிமாணங்கள்
மார்க்ஸிய, லெனினியக் கருத்தாக்கங்கள், முதலாளித்துவ அதிகாரத்தை தகா்த்தெரிவதைக் கொள்கை முழக்கங்களாகக் கொண்டு பட்டாளி வா்க்க ஆட்சியை நிலைப்படுத்திய போதிலும் அங்கும் புதியதொரு அதிகார அமைப்பு உருக்கொள்வது தவிர்க்கவியலாமல் போனது.

“1917-இல் லெனின் ரஷ்யாவில் அக்டோபா் புரட்சி மூலம் பொதுவுடைமைக் கட்சியை நிறுவுகிறார். ஆனால் அங்கேயும் ஓர் அதிகார வா்க்கம், ஆளும் வா்க்கம் புதிதாகத் தோன்றுகின்றது. ஆட்சியாளா்கள் கட்சி உறுப்பினா்கள் என்ற புதிய அதிகாரவா்க்கம் தோன்றுகிறது. பொருளாதாரம் மட்டுமே அடிப்படை அல்லவோ? வேறு காரணங்களும் உண்டோ? என்ற ஐயம் சிந்தனையாளா்கள் மனங்களில் தோன்றுகிறது. மற்ற மேல்கீழ் மக்களின் மனோதத்துவம்தான் பொருளாதாரத்தைக் கட்டுமானங்களைத் தீர்மானிக்கிறது. அம்மனோதத்துவம் கலாச்சாரத்தின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது என்ற புதிய சிந்தனை தோன்றுகிறது,  கிராம்சி இத்தகைய சிந்தனைக்கு வித்திடுகிறார்..6”

மார்க்ஸிய லெனினியக் கருத்தாக்கங்களை மேலும் விரிவுபடுத்தி அதனை ஒரு தத்துவார்த்த ஆயுதமாக வடிவமைத்தவா் கிராம்சி ஆவார். பாட்டாளிவா்க்கத்தின் சமூகவியல் என்பது வரலாற்றுப் பொருள்முதல் வாதத்திலிருந்து, மார்க்ஸியத்தைக் கற்பதிலிருந்து தொடங்க வேண்டும், மேலும் அதனை ஒரு கருத்துநிலையாகத் தத்துவார்த்தக் கோட்பாடாக உருமாற்ற வேண்டும் என்று கிராம்சி கருதினார்.

பாட்டாளி வா்க்கம் தமக்கான கருத்துநிலையை உருவாக்கிக் கொண்டு அதனை வெகுமக்களிடம் பரப்ப வேண்டும். வர்க்கப் போராளிகளுக்கு அறவியல், உளவியல் தன்மை வாய்ந்த உறுதியான நம்பிக்கைகளை ஊட்டி அவா்களது உணா்வுகளை வலுப்படுத்த வேண்டும். அதுதான் பாட்டாளி வா்க்கத்தின் வெற்றிக்கு மிக முக்கியமானதும் அடிப்படையானதும் என்று கூறினாh. இது வரையிலான சமூகக் கண்ணோட்டத்தையும், மதக் கண்ணோட்டங்களையும், தத்துவங்களையும் கடந்து செல்லக்கூடிய கருத்தியல் இன்றைய பாட்டாளி வா்க்கத்தின் வெற்றிக்குத் தேவை என வலியுறுத்தினார். அதிகாரவா்க்கத்தின் செயல்பாடுகளின் தன்மை பற்றி புரிந்துகொள்வதைவிட அவ்வதிகார வா்க்கத்தை உருவாக்குகின்ற கூறுகளில் அதிக கவனம் செலுத்தினார்.

ஆட்சியாளா்கள் அதிகாரம் மிக்கவா்களாக ஆவதற்கு ஆளப்படுபவா்கள் ஆட்சியாளா்களின் உலகக்கண்ணோட்டத்தை ஏற்றுக்கொண்டு வாழ்வதும் ஆட்சியாளா்களின் கருத்துக்களையே வெகுமக்கள் தங்களுடைய பொதுப்புத்தியாகக் ஏற்றுக் கொள்வதும்தான் காரணம் என்றார். அதுமட்டுமல்லாது ஆளும் வா்க்கங்கள் தமக்குக் கீழ்ப்பட்டவா்களின் சம்மதத்தை சமூகஒப்புதலை எவ்வாறு வென்றெடுக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கிராம்சி வலியுறுத்தினார்.
கிராம்சி பொதுவாக முதலாளியம் பற்றியோ, பொருளாதாரச் சுரண்டல் பற்றியோ அருவமான ஆய்வுகளில் ஈடுபடவில்லை. மாறாக, அவா் வாழ்ந்த இத்தாலிய சமுதாயத்தின் இத்தாலிய வரலாற்றின் தூலமான நிலைமைகள், இத்தாலிய பூர்ஸ்வா அரசின் உருவாக்கங்கள், அந்த உருவாக்கத்தில் அறிவாளிகள் எனப்படுவோர் வகித்த பாத்திரம் ஆகியவற்றைப் பகுத்தாய்வு செய்வதுதான் அவரது அக்கறையாக இருந்தது.

முசோலினியின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிராம்சி:
முசோலினி (1883-1945) இத்தாலியில் தொழிலாளி வா்க்கத்துக்கு எதிராக பாசிஸ்ட் கட்சியை நிறுவினார். கருஞ்சட்டைப் படையினா் என்ற பெயரில் இவரால் திரட்டப்பட்ட படையினா் பல்வேறு இடங்களில் படுகொலைகளை நிகழ்த்தினா். இத்தகைய பாஸிச நடைமுறைகளுக்கு எதிராகத் தொழிலாளி வா்க்கம் போர்க்கொடி உயா்த்தியது. இப்புரட்சியைச் சிகப்புப் புரட்சி என வா்ணித்தனா். ஏப்ரல்; 13லிருந்து 24 வரை பதினொரு நாள் நடைபெற்ற வீராவேசமான போராட்டம் பாசிச பயங்கரவாதிகளால் அடக்கி ஒடுக்கப்பட்டது. தொழிலாளி வா்க்கத்தின் முன்னேற்றத்தை முறியடிக்கும் விதமாக அக்டோபா் 30ஆம் நாள் முசோலினி அரியணை ஏறினார்.

இந்நிலையில் தொழிற்சாலைக் குழுக்களுக்குத் தலைமைத் தாங்கியிருந்த கிராம்சி முசோலினியைக் கடுமையாக எதிர்த்தார். நாடாளுமன்றத்தில் முசோலினிக்கும் கிராம்சிக்கும் கடுமையான வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. கிராம்சியின் சாதுர்யமான பேச்சு முசோலினியை நிலைகுலைய வைத்தது. வாதத்தின் இறுதியில் கிராம்சி இவ்வாறு கூறினார். “உங்களால் இயலக்கூடிய ஒரே காரியம், பாட்டாளி வா்க்கம் இதுகாறும் கையாண்டுள்ள வழிமுறைகளுக்குப் பதில் வேறு வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு நிர்ப்பந்திப்பதுதான். இத்தாலியின் பாட்டாளி வா்க்கத்திற்கும் விவசாய மக்களுக்கும் இந்த மன்றத்தில் நாங்கள் ஒன்றைக் கூற விரும்புகிறோம். இந்த தேசத்தின் புரட்சிகரச் சக்திகளை யாராலும் ஒருபோதும் தகா்த்துவிடமுடியாது. பாசிஸ்டுகளே உங்கள் தீய கனவுகள் ஒரு போதும் நனவாகிவிடா 7”

இவ்வாறு கிராம்சி தனது பேச்சை முடிக்கையில் நாடாளுமன்ற அவையில் ஒரே கூச்சல் குழப்பம். அது கிராம்சியின் முதல் பேச்சு மட்டுமல்ல கடைசிப் பேச்சும் தான். அதன்பிறகு கிராம்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். பாசிஸ்ட் அரசின் வழக்கறிஞா் இந்த மூளையை இருபது ஆண்டுகளுக்குச் செயலிழக்கச் செய்ய வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இருபதாண்டுச் சிறைத்தண்டணைக்காக கிராம்சி சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அந்தக் காலக்கெடு முடிவதற்குள்ளேயே நோயாளியான அவரைச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற சா்வதேச நெருக்குதல் முசோலினியைப் பணிய வைத்தது. ஆனால் பத்தாண்டுகளுக்குப் பிறகு சிறை மீண்டபோதிலும் அவா் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார். சில மாதங்களுக்குள்ளேயே 46-ஆம் வயதில் (1937 ஏப்ரல் 27) உயிரிழந்தார்.

கிராம்சியின் மேலாண்மை குறித்த கருத்தாக்கங்கள்
மேலாண்மை என்னும் கருத்தாக்கம் மார்க்ஸிய மூலவா்களாலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கிராம்சி குறிப்பிடும் மேலாண்மை அவற்றிலிருந்து வேறுபட்டதாகும். அரசியல் சமூகத்தின் நிலைத்திருப்புக்கும் கட்டுறுதிக்கும் வன்முறை அல்லது பலபிரயோகம் தான் காரணம். ஒரு வா்க்கமோ அல்லது வா்க்கக் கூட்டணியோ இன்னொரு வா்க்கத்தின் மீதோ வா்க்கக் கூட்டணியின் மீதோ வன்முறையின் மூலம் செலுத்தும் ஆதிக்கத்தின் கூறுதான் அரசு என்பர் மார்க்ஸியர். ஆனால் கிராம்சி வெறும் வன்முறையோ, பலப்பிரயோகமோ மட்டும் ஒரு வர்க்கத்தை ஆளும் வர்க்கமாக நிலைத்திருக்கச் செய்யாது. அத்துடன் ‘மேலாண்மையும்’ கூட இருக்க வேண்டும் என்றார். அதாவது அறிவு, சிந்தனைத் துறைகளைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற அமைப்புகளாலும் தனிமனிதர்களாலும் சமுதாயத்திலுள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் பரப்பப்படுகிற  உலகக்கண்ணோட்டம் அல்லது வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தையே மேலாண்மை  என்று கூறலாம்.

கிராம்சியின் கருத்துப்படி அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலும் அதைக் கைப்பற்றிய பிறகு அதைப் பேணிப் பாதுகாப்பதிலும் முதலாளி வா்க்கமும் அதன் பிரதிநிதிகளும் மேற்கொள்ளும் நடைமுறைகளை உள்ளடக்கியதே மேலாண்மை ஆகும்.

கிராம்சியின் ‘கருத்துநிலை’ குறித்த சிந்தனைகள்
“ஒரு சமூகத்தின் மேலாதிக்கம் பெற குழுக்கள் தம் மேலாதிக்கத்தை நியாயப்படுத்தவும் தம் நலன்களைப் பேணுவதற்கும் கருத்துக்களையும் நம்பிக்கைளையும் உருவாக்கிக் கொள்கின்றன. இதனையே கருத்தியல் என்று சமூகவியலாளர் கூறுவர். கருத்தியல் அதிகாரத்துடன் தொடா்புடையது. அதிகாரம் அந்தக் குழுக்களைக் கீழ்ப்படுத்தி வைக்கவும், கருத்தியல் சமூக சமத்துவமின்மையை நியாயப்படுத்தவும் பயன்படுகின்றன. மக்களின் சிந்தனையில் பனிமூட்டமாகக் குவியும் கருத்தியல் அவா்களை ஒடுக்குவதற்கான சம்மதத்தையும் பெற்றுத் தருகிறது. ஒடுக்குதலின் வேதனையையும், துன்பத்தையும் தணித்து  ஆறுதலையும்கூட வழங்குகிறது 8”. 

தம் சிறைக்குறிப்பேடுகளில் கிராம்சி, பண்பாடு, தத்துவம், உலகக்கண்ணோட்டம், உலகம் பற்றிய கருத்து என்னும் சொற்களைக் கருத்துநிலை என்பதற்கான பரந்த பொருளில் பயன்படுத்துகின்றார். இவை சமுதாய உறுப்பினர்களுக்குத் திட்டவட்டமான நிலைப்பாடுகளையும் செயல்பாட்டிற்கான திசைமார்க்கத்தையும் வழங்கும் ஆற்றல் உடையனவாக உள்ளன.

ஒரு தேசிய மக்கள் கூட்டுச் சித்தத்தை உருவாக்க, தனது  சொந்த நலன்களுடன் பிற வர்க்கங்கள், குழுக்கள், இயக்கங்கள் ஆகியவற்றின் நலன்களை இணைப்பதில் வெற்றிபெறும் வர்க்கமே மேலாண்மை பெற்ற வர்க்கமாகும். அதாவது ஒரு அடிப்படை வர்க்கம், தனது குறுகிய குழுநலன்களையும் தற்சாய்வுகளையும் கடந்து புதிய வரலாற்றுஅணியை உருவாக்க, அரசியல், பொருளாதாரத் திட்டங்களில் அவசியமான சமரசங்களையும் விட்டுக்கொடுப்புகளையும் செய்து கொள்வதற்குத் தேவையான அரசியல்தலைமையை உருவாக்க வேண்டும். இத்தகைய வரலாற்று அணியை உருவாக்குவதில் கருத்துநிலை முக்கியப்பாத்திரம் வகிக்கிறது 9.

குடிமைச் சமூகம், அரசியல் சமூகம் குறித்து கிராம்சியின் கருத்தாக்கங்கள்.
குடிமைச் சமுதாயம் என்னும் சொற்றொடர ஜான் லாக், ரூசோ போன்ற ஆங்கில, பிரெஞ்சுத் தத்துவவாதிகளால் பயன்படுத்தப்பட்டது. இயற்கை நிலையிலுள்ள மானுட சமுதாயம், அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் சமுதாயம் ஆகியவற்றைப் பிரித்துப் பார்க்க அவர்கள், நிர்வகிக்கப்படும் சமுதாயத்தைக் குடிமைச்சமூகம் என அழைத்தனர் 10.

ஆனால் ஹெகல் பூர்ஸ்வா சமூகத்தையே குடிமைச்சமூகம் என அழைக்கிறார். சமுதாயத்தில் நிலவும் பொருளாதார உறவுகளைக் குறிக்க இப்பதத்தை ஹெகல் பயன்படுத்தினார். குடும்பம் எனும் அமைப்பைவிட்டுத் தனிமனிதர்கள் பொருளாதாரப் போட்டியில்  இறங்குவதால் குடிமைச் சமூகம் உருவாகின்றது என அவர் கருதினார். தனிநபர்களின் தனிப்பட்ட தேவைகள், சுயநலன்கள் போட்டிகள், பொறாமைகள் ஆகியவை நிரம்பியுள்ள களமே குடிமைச்சமூகம் என்ற ஹெகல், தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் சாத்தியப்பாடு உடைய இந்தக் குடிமைச் சமூகத்தில் பொதுநலன்களை நிலைநிறுத்த அரசின் மூலமாகவே முடியும் என்றார்.

எனவே குடிமைச்சமூகத்திற்கு மேலானதாகவும் எல்லோருக்கும் பொதுவானதாகவும் அரசியல் சமுதாயம் இருப்பதாக ஹெகல் கருதினார். ஹெகலைப் போலவே தம் தொடக்ககாலப் படைப்புகளில் மார்க்ஸ் குடிமைச் சமுதாயம் என்னும் சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளார் என்றாலும் ஹெகல் கருத்திலிருந்து மார்க்ஸ் சிறிது வேறுபடுகிறார்.  அரசை குடிமைச் சமுகத்தின் நலன்களுக்கானதாக ஹெகல் கூற, மார்க்ஸ் அதனைச் சுரண்டல் வடிவமாகக் காண்கிறார்.

குடிமைச் சமுதாயத்தில் மனிதர்களிடையே ஒற்றுமையை நிலவச் செய்வது சட்டங்கள் மட்டுமே. அச்சட்டங்கள் சமுதாய மக்களிடையே நிலவிய பொருளாதார முரண்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை, மாறாக அவற்றிற்குத் தொடர்பற்றவையாகவும் அருவமான வகையிலும் இருந்தன. அரசின் சட்டப்பூர்வமான கட்டுப்பாடு குடிமைச் சமுதாயம் சிதறுண்டு இருப்பதையும், அங்கு துன்பத்துயரங்கள் நிலவுவதையும் தடுத்து நிறுத்தவில்லை. பூர்ஸ்வா சமூகத்தில் தனிமனிதற்கு இரட்டை அடையாளங்கள் உள்ளன. அவை.

1.    குடிமைச் சமுதாயத்திலுள்ள அடையாளம் (முதலாளி, தொழிலாளி)
2.    அரசு வழங்கும் அடையாளம் (குடிமகன்)

இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக உள்ளது. முதலாளிக்கும் தொழிலாளிக்கும் முரண்பாடுகள் உள்ளன. இருவருக்குமிடையே பிளவும் ஏற்றத்தாழ்வும் நிலவுகின்றன. ஆனால் குடிமக்கள் என்னும் வகையில் இருவருமே சமமானவர்களாகக் கருதப்படுகின்றனர;. இந்த சமத்துவம் அருவமானது. குடிமைச் சமூகத்தில் போட்டியும், பொறாமையும், சுரண்டலும் நிலவுகின்றன. ஆனால் அரசோ, தனிமனிதர;கள் எல்லோருமே ‘இனமக்கள்’ என்று கூறுவதன் மூலம் போலி ஒற்றுமையை உருவாக்குகிறது. இதன் காரணமாக, குடிமைச் சமுதாயத்திற்கும் அரசிற்குமிடையே பிளவு ஏற்படுவது தவிர;க்க முடியாததாகிறது எனக் கருதிய மார்க்ஸ் குடிமைச் சமுதாயமும் அரசும் புரட்சிகரமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றார். பின்னாளில் வரலாற்றுப் பொருள் முதல்வாதம், உற்பத்தி உறவுகள், உற்பத்தி சக்திகள் போன்ற கருத்தாக்கங்களை வளர்த்தெடுக்கையில் குடிமைச் சமுதாயம் என்னும் கருத்தாக்கத்தைக் கைவிட்டார்.

ஹெகல், மார்க்ஸ் ஆகியோரைப் போலவே கிராம்சியும்  குடிமைச் சமுதாயம், புவியியல் சமுதாயம், அரசியல் சமுதாயம் (அரசு) என்று பாகுபாட்டைச் செய்தார். ஆனால் இந்தப்பாகுபாடு விசயங்களைப் பகுத்தாய்ந்து புரிந்துகொள்வதற்காக மட்டுமே கிராம்சியால் பயன்படுத்தப்பட்டது. அரசியல் சமுதாயம், குடிமைச்சமுதாயம் இரண்டுமே ஒன்றிணைந்த முழுமையே என்பது கிராம்சியின் கருத்தாகும். கிராம்சி இவ்வாறு கூறுகிறார்.
‘அரசு என்பது வெறும் அரசாங்க இயந்திரமாக ஆகிவிடாது. மேலாதிக்கத்தை நிலைநிறுத்துகின்ற அரசுக் கட்டுப்பாட்டில் இல்லாத அனைத்து இயந்திரங்களையும் அரசு என்றே அழைக்க முடியும் 11”

கிராம்சியின் பார்வையில் அரசு என்பதை அதன் முழு அர;த்தத்தில் பார்த்தால் அரசின் கட்டுப்பாட்டில் அல்லாது தனித்தியங்கும் மத நிறுவனங்கள், பள்ளிக் கூடங்கள், தொழிற்சங்கங்கள், செய்தி நிறுவனங்கள் ஆகியவையும் அரசு என்பதில் இயங்குபவையே எனலாம். இது பற்றி கிராம்சி பின்வருமாறு கூறுகிறார்.

‘அரசு என்பதன் முழு அர்த்தமே என்னால் மறுபரிசீலனைச் செய்யப்பட வேண்டியதாக ஆயிற்று. இதுவரை அரசு என்பதை ஒரு சர்வாதிகாரக் கருவியாகவே நான் எண்ணியிருந்தேன். ஆனால் உண்மையில் அரசு என்பது சமுதாயத்தின் ஒரு பகுதியினர் முழுச்சமுதாயத்தின் மீதும் செலுத்திவரும் மேலாதிக்கம் என்றே அர்த்தப்படுத்தப்பட வேண்டும். இந்த மேலாதிக்கமானது மத நிறுவனங்கள், கல்விக் கூடங்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் ஆகியவை மூலம் செயல்படுத்தப் படுகிறது 12.
சிறைச் குறிப்பேடுகளில் பல இடங்களில் கிராம்ஸி குடிமைச் சமுதாயம் என்பது அறவியல், ஒழுக்கவியல் சமுதாயம் என்று கூறுகிறார். ஏனெனில், குடிமைச் சமுதாயத்தில் தான் ஆதிக்க வர்க்கம், அறவியல், கருத்துநிலைப் போராட்டங்களின் மூலம் தனது மேலாண்மையைக் கட்டியெழுப்புகின்றது.

எனவே கிராம்சியின் அரசியல் பார்வை, பண்பாடு சார்ந்த சமூக நடத்தைகளையும் அதனை ஒழுங்கமைக்கின்ற கலாச்சார அமைப்புகளையும் கவனத்தில் கொண்டது. அறிவுசார் அறவியல் தலைமை என்பதே அரசு எனும் வடிவமாக உள்ளது என அவா் விளக்குகிறார்.

கிராம்சிய புரிதலில் மொழி, இன, மத பண்பாட்டுப் பிரச்சினைகளை அணுகுதல்
மொழி, இன, மதப் பண்பாட்டுப் பிரச்சினைகள் எந்த ஒரு சமூகத்திலும் தவிர்க்கவியலாத சிக்கல்களை விளைவிப்பனவாகும். ஆரிய இனமும், சமஸ்கிருதப் பண்பாடும், சமஸ்கிருத மொழியும் இந்தியாவில் தொடர்ந்து தனது மேலாண்மையைப் பேணிவருகின்றன. அவை தமது  மதக் கருத்தியலின் வழி மிகப்பெரும் ஆதிக்கச் சக்தியாக உருவெடுத்துள்ளன. பெருமதம், பெரும்பண்பாடு, பெருமரபு என்பவற்றிற்குள்ளாகப் பார்ப்பனியம் மட்டுமே தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ளது. காலத்துக்குகந்த கருத்தியல்களை மீட்டுருவாக்கம் செய்துகொள்வதில் பார்ப்பனியம் இன்றளவும் வெற்றிபெற்று வந்துள்ளது எனலாம்.

இந்தியாவில் நிலவி வந்த பல்வேறு பண்பாட்டு மரபுகளின் மீதும் தனது மாபெரும் ஆழிமண்டலத்தை நிகழ்த்தி, பண்பாட்டு ரீதியாகவும், மதரீதியாகவும், மொழி ரீதியாகவும் மேலாண்மையைக் கட்டமைத்துக் கொண்டது. இவையாவும் பொய் தர்க்க வாதங்களாலும், வரலாற்றுக்குப் புறம்பான புராணிக தொன்ம எடுத்துரைப்புகள் மூலமாகவும், மத ஐதீகக் கதைகளின் மூலமாகவும், பார்ப்பனிய அதிகார வர்க்க கருத்தியல்களின்வழி கட்டமைக்கப்பட்டதாகும். சிறுபான்மை இனம் இப்பெருநிலப்பரப்பில் தொடர்ந்து ஆளும் வர்க்கமாகத் தம்மை ஆக்கிக் கொண்டமைக்கு அது தன் கருத்தியல் அடிப்படையிலான மேலாண்மையை நிலைநிறுத்தியிருப்பது காரணமாக இருக்கின்றது. தன் மதம்சார்ந்த ஆதிக்கப் பலத்தைத் தக்க வைத்துக் கொள்வதன்மூலம் சமூகத்தில் வா்ண-சாதிப் படிநிலைகளை இறுக்கமாகப் பேணிக்காக்கின்றது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சங்ககாலம் தொட்டே இவ்வடஆரியப் பண்பாடானது தமிழ்மொழி, இன, பண்பாட்டு மரபுகளிலும் தனது மேலாதிக்கத்தை மிக நுட்பமாகச் செலுத்தி வந்துள்ளது. பார்ப்பனியம் அந்தோணிய கிராம்சி சொல்வதைப் போல வெறும் படைபலத்தாலன்றி பண்பாட்டு ஆதிக்கத்தாலும் தமது செல்வாக்கை நிலைநாட்டியுள்ளது. சங்ககாலம் என்ற நூலை எழுதிய ம.ரா.போ. குருசாமி கீழ்க்கண்டவாறு குறிப்படுகிறார்.

“படைகளின் மூலம் ஒரு நாட்டை வெல்லுதலைவிட, பண்பாட்டு வழியாக ஒரு நாட்டை வெல்லுவது தான் உண்மையான வெற்றி. இதனைவிடச் சிறந்த சான்று தேவையில்லை. கடவுள் வழிபாடு முதல் காதலொழுக்கலாறு வரை வீட்டுத் தனிவாழ்க்கை முதல் நாட்டுப் பொதுவாழ்க்கை வரை இலக்கிய மரபு முதல் இலக்கண விதிகள்வரை படிப்படியே தமிழினத்தின் தனித்தன்மை உருவம் கடந்து வந்துள்ளது 14.  என்று ஆரியர்கள் தமிழருடன் இணைந்து வாழ்ந்து பண்பாட்டுக்கலப்பு வழியாக வெற்றி பெற்றதாகக் கூறும் மு.வ.வின் கருத்தை ஏற்றுக் கொள்கிறார்.

இவ்வாறு தமிழ்ச்சமூகத்தில் சமயம் சார்ந்து சடங்கியல் அதிகாரத்தையும் சமூகம் சார்ந்து ஒருவித உயர் தகுதியையும் ஈட்டிக் கொள்வதற்கு அதன் கருத்தியல் செயல்பாடுகள் நுட்பமான முறையில் வடிவமைத்துக் கொள்ளப்பட்டமையே காரணங்களாகும். எனவே கிராம்சியின் சமூகவியல் கண்ணோட்டத்தில் இவற்றை அணுகும்பொழுது மேலாண்மை செலுத்துகின்ற கருத்துநிலைக் கூறுகளை எளிதில் பகுப்பாய்வு செய்ய இயலும்.

அடிக்குறிப்புகள்
1.    என்.சண்முகலிங்கம், சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள் அமைப்பும் இயங்கியலும். ப.1
2.    மகாராசன் (தொ.ஆ), மார்ச்சியமும் மொழியியல் தேசிய இனப்பிரச்சினையும், ப.12
3.    சு.துரை, மார்ச்சியமும்தமிழிலக்கியமும். ப.2
4.    எஸ்.வி.ராஜதுரை - வ.கீதா, கிராம்சி புரட்சியின் இலக்கணம், ப.598
5.    மேலது, ப. 57
6.    இரா. குப்புசாமி, நீட்சே, ப.12
7.    எஸ்.வி.ராஜதுரை - வ.கீதா, மு.சு,நூல், ப.326
8.    என்.சண்முகலிங்கம், கருத்தியல் என்னும் பனிமூட்டம் வரலாறும் கருத்தியலும் பற்றிய கட்டுரைகள், முன்னுரை, ப,4
9.    எஸ்.வி.ராஜதுரை - வ.கீதா, மு.சு.நூல், பக். 417-418
10.    மேலது, ப.400
11.    நாகார்ஜீனன் - ரமேஷ், அரசு அறிவு அதிகாரம், ப.3
12.    மேலது,, ப.2
13.    ம.ரா.போ குருசாமி, சங்க இலக்கியம், ப.95
14.    மு.வரதராசனார். மொழிவரலாறு, ப.381

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர் : - முனைவர் ர. சுரேஷ், உதவிப் பேராசிரியா், கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர். -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R