- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர்  -


பதிவுகள் மார்ச் 2005 இதழ் 63 -
1. சிறுகதை: வேஷங்கள்! -  -சந்திரவதனா செல்வகுமாரன் (ஜேர்மனி)-

காலைப்பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும், பூக்களுமாய் ஜேர்மனி அழகாகத்தான் இருந்தது. சிக்னலுக்காக காரில் காத்துக் கொண்டிருந்த உமாவின் மனது மட்டும் அந்தக் காலைக்குச் சிறிதும் பொருந்தாது புழுங்கிக் கொண்டிருந்தது. கோபத்தில் தகித்தது என்று கூடச் சொல்லலாம்.

"எப்படி அவனால் முடிந்தது...! எப்படித் துணிந்து சொன்னான்...!" காலையில் சந்துரு சொன்ன செய்தியில் கொதிப்படைந்த அவள் கோபத்தை அக்சிலேட்டரில் காட்டினாள்.

சந்துரு வேறு யாருமல்ல. அவள் கணவன்தான். 15வருடத் திருமண வாழ்க்கை. அன்புக்குச் சின்னமாக நிலாவினி அவர்களின் செல்ல மகள்.

"நேற்று இரவுவரை அன்பாகத்தானே இருந்தான்...! நடித்தானா...?" காலையில் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுவான் என அவள் கனவில் கூட நினைக்கவில்லை.

"உமா உம்மோடை நான் கொஞ்சம் கதைக்கோணும்." காலையில் தேநீருடன் சென்ற உமா, படுக்கையிலிருந்த அவனை எழுப்பிய போது குழைந்தான். அவனது வார்த்தையின் பரிவில் நெகிழ்ந்து, அப்படியே அவனருகில் கட்டில் நுனியில் அமர்ந்து, அவன் மார்பின் சுருண்ட கேசங்களைக் கோதியபடி "சொல்லுங்கோ" என்றாள் மிக அன்பாக.

 

"நீ அழக் கூடாது."

"சும்மா சொல்லுங்கோ."

சில கணங்கள் நிதானித்து "உமா நான் இண்டையிலையிருந்து முன்சனில் தங்கப் போறன்."

"ஏன்....?" மிகவும் திடுக்கிட்டவளாய்

"ஒவ்வொருநாளும் பயணஞ் செய்யிறது சரியான கஸ்டமாயிருக்கு."

"இவ்வளவு நாளும் செய்தனிங்கள்தானே! இப்ப மட்டும் என்ன வந்தது..?"

"பார்த்தீரே..! இப்பவே ரென்சன் ஆகிறீர். நான் இன்னும் விசயத்துக்கே வரேல்லை. "

" ....... "

சந்துருவின் புதிருக்கு மௌனமாக தனக்குள் விடை தேடினாள்.

"உமா உமக்குத் தெரியுந்தானே என்னோடை அந்தச் சக்கி என்ற செக்கொஸ்லாவியப் பொம்பிளை வேலை செய்யிறது..?"

"ஓமோம். புருசன்காரன் விட்டிட்டுப் போயிட்டான் எண்டு சொன்னனிங்கள். அவள்தானே......! பாவம்...... அவளின்ரை மகன் எப்பிடி இருக்கிறான்?"

"அது வந்து...... உமா..! அவளின்ரை மகன் சரியான சுகமில்லாமல் இருக்கிறான். அவளுக்கு என்ரை உதவி தேவைப் படுது. அதுதான் என்னை வந்து.... "

"வந்து...... "

"தன்னோடை இருக்கச் சொல்லிக் கேட்கிறாள். "

"அதுக்கு.....! "

"அதுதான் அவளோடை போய் கொஞ்ச நாளைக்கு இருப்பமெண்டு தீர்மானிச்சிருக்கிறன்."

விக்கித்துப் போன உமா விருட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து விட்டாள். ஒரு கணம் துடிக்க மறந்த அவளது இதயம் மீண்டும் அவசரமாகத் துடிக்கத் தொடங்கியது. வார்த்தைகள் வெளி வர மறுத்தன.

"யோசிக்காதையும். நான் உம்மட்டையும் வந்து வந்து போவன். உமக்கென்ன குறை இஞ்சை இருக்கு. ஊரிலை போலை அடுப்பை ஊதி... உடுப்பைக் கல்லிலை அடிச்சுத் தோய்ச்சு... இப்பிடி ஒரு கஸ்டமும் இல்லைத்தானே... எல்லா வசதிகளும் இருக்குத்தானே. "

"இதெல்லாம் நீங்களாகுமோ..? நீங்கள் அவளை விரும்பிறீங்களோ...?"

"இல்லை... இல்லை... அவள்தான் என்னை உயிருக்குயிராய் விரும்புறாள். நான் இல்லையெண்டால் அவளுக்கு ஒரு துணையும் இல்லை. "

"நானும் அம்மா அப்பா சகோதரங்களையெல்லாம் விட்டிட்டு வந்திருக்கிறன். இந்தப் பெரிய ஜேர்மனியிலை உங்களையும் நிலாவினியையும் விட்டால் எனக்கும் வேறை ஆர் இருக்கினம்?" இப்போது அவளிடம் அழுகை பொங்கியது.

"ஏன் இப்ப அழூறீர்? நான் உம்மட்டையும் வருவன்தானே. நீர் படிச்ச பொம்பிளை இதை அனுசரிச்சுப் போகோணும். ஊருலகத்திலை நடக்காத விசயமே இது...!"

"நோ... என்னாலை ஒரு நாளும் இதுக்கு ஒப்புக் கொள்ளேலாது."

உமா கோபமாக முன்னேறி மூர்க்கத்தனமாக அவனது மார்பில் குத்தினாள். நுள்ளினாள். முகமெல்லாம் பிறாண்டினாள். அவன் அவளைத் தள்ளி விட்டு "பொம்பிளை மாதிரி நடந்து கொள்ளும்." என்று கத்தினான். அவனது இடது கன்னத்தில் இவளது நகம் பட்டு இரத்தம் துளிர்த்து நின்றது. வலியோடு அதைத் தடவியவன் கையில் பட்ட இரத்தத்தை அவளிடம் காட்டி, "இங்கை பாரும் எனக்கு இரத்தக் காயம் வர்ற அளவுக்கு பிறாண்டியிருக்கிறீர். இதுக்கு மேலை என்னைத் தொட்டீரோ..! நடக்கிறது வேறை. நானும் சும்மா இருக்க மாட்டன். என்ரை முடிவு முடிவாகீட்டுது. ஒத்துப் போனீர் எண்டால் உமக்கும் நல்லது. எனக்கும் நல்லது. நிலாவினிக்கும் நல்லது. இல்லாட்டி நீர்தான் கஸ்டப் படுவீர். நிலாவினிக்கு இதொண்டும் தெரியத் தேவையில்லை. "

உமாவுக்கு மலைப்பாக இருந்தது. தனது மூர்க்கத் தனமான செய்கையில் எரிச்சலாகவும், வெட்கமாகவும் இருந்தது. "என்னவெல்லாம் இவன் சொல்கிறான்" என்று கலக்கமாகவும் இருந்தது. சக்கியைப் பற்றி சந்துரு ஏற்கெனவே சொல்லியிருக்கிறான். அவளுக்காக உமாவும் பரிதாபப் பட்டிருக்கிறாள். அதுக்காக சந்துருவே போய் சக்கிக்கு வாழ்க்கை கொடுப்பதென்பது எந்த வகையில் நியாயமானது? "இவன் சொல்வதெல்லாம் உண்மைதானா அல்லது தன்னைச் சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறானா" என்று குழம்பினாள்.

நிலாவினியும் வீட்டில் இல்லை. பாடசாலை ரூர் என்று போய் விட்டாள். திரும்பி வர இன்னும் எட்டு நாட்களாகும்.

"நீங்கள் சும்மா பகிடிக்குத்தானே சொல்லுறிங்கள்...?" ஒரு நப்பாசையோடு கேட்டாள்.

"இல்லை உமா. சீரியஸாத்தான் சொல்லுறன். எனக்கு உம்மையும் விருப்பம்தான். ஆனால் இப்ப சக்கிக்கு என்ரை உதவி தேவை. "

இயலாமை என்ற ஒன்று இப்போ உமாவை ஆக்கிரமித்தது. "ஓ....." வென்று குழறினாள்.

"ஏனப்பா இப்படிக் குழறுறீர்? பக்கத்து வீட்டுச் சனத்துக்கெல்லாம் கேட்கப் போகுது. என்ன நினைக்குங்குள். ஊரெண்டு நினைச்சீரே. ஏதோ மூண்டாந்தர குடும்பங்கள் மாதிரிக் கத்திறீர்!"

"ஆர் என்ன நினைச்சாலும் எனக்குப் பரவாயில்லை. நீங்கள் செய்யத் துணிஞ்சது மட்டும் முதலாந்தரமா இருக்கோ..?"

வார்த்தைகள் மிகச் சூடாக அநாகரிகமாக நீண்டு... ஒன்றோடொன்று மோதி.. உமாவுக்கு, சந்துரு முரட்டுத்தனமாக அடிக்க, உமா தன்னைக் காத்துக் கொள்ள எண்ணி, இழுத்துப் பறித்து கதவில் இருந்த திறப்பையும் இழுத்து எடுத்துக் கொண்டு வெளியில் ஓடினாள். கொஞ்ச நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றவள்... காரையும் எடுத்துக் கொண்டு இலக்குத் தெரியாமல் ஓடி.. சிவப்பு லைற்றில் தரித்து நின்றாள்.

சிக்னல் பச்சையாக, பின்னிருந்த காரோட்டி கோன் அடித்து "தூங்குகிறாயா...?" என்று சைகை காட்டிச் சினக்க.. சிந்தனையிலிருந்து தற்காலிகமாக விடுபட்டு..... மீண்டும் பலம் கொண்ட மட்டும் அக்சிலேட்டரை அழுத்தி சீறிக் கொண்டு பறந்தாள்.

ஒரு பாடசாலையின் முன் ஒரு குழந்தை வீதியைக் கடப்பதை கடைசி செக்கனில் கண்டு அவசரமாக பிறேக்கை அழுத்தினாள். "கடவுளே...! நான் என்ன செய்கிறேன். அந்தப் பிள்ளை அடிபட்டிருந்தால்...?" என்று முனகினாள். அப்படியே போனவள் வழியில் உள்ள மைக்கல் தேவாலயத்தின் அருகில், காரை நிறுத்தி விட்டு தேவாலயத்துக்கான படிகளில் ஏறி ஓரிடத்தில் அமர்ந்தாள். அடக்க முடியாமல் அழுதாள். திடீரென்று நிர்க்கதியாகப் போய் விட்டது போல உணர்ந்தாள். பைத்தியம் பிடித்தவள் போல அரற்றினாள். யோசிக்க முடியாமல் மூளைப்பகுதி நொந்தது. கண்களின் முன்னே மெல்லிய புகைமண்டலம் போல எதுவோ மறைத்தது. எதையும் சரியாகச் சிந்திக்க முடியாமல் திண்டாடினாள்.

சந்துருவுக்கும் அவளுக்கும் இடையில் அடிக்கடி சின்னச் சின்னச் சண்டைகள் சச்சரவுகள் என்று வரத் தவறுவதில்லைத்தான். சண்டைகள் கருத்து வேறுபாடுகள் இல்லாத குடும்பங்களா..? சில சமயங்களில் சந்துருவின் மேல் சந்தேகங்களும் வந்து பொங்கியிருக்கிறாள்தான். அவையும் சந்துரு கூறும் பொய்ச் சமாதானங்களில் பொங்கிய வேகத்தில் அடங்கியும் போயிருக்கின்றன. ஆனால் இந்தளவுக்கு தன்னை அப்படியே விட்டு விட்டுப் போய் இன்னொருத்தியுடன் வாழத் துணிந்த அவன் துணிவும், அதை மிகச் சாதாரண விடயம் போல அவள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற அவன் வேண்டுகோளும், இவளை நிலைகுலைத்து விட்டன. தன்னவன் இன்னொருத்திக்குச் சொந்தம் என்று தெரிந்தால் எந்தப் பெண்ணால்தான் நிலைகுலையாமல் இருக்க முடியும்.

தேவாலயம் உயர்ந்து கம்பீரமாக நின்றது. உல்லாசப் பிரயாணிகள் உள்ளே சென்று அதன் உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தார்கள். சிலர் உச்சியில் நின்று நகரின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். இவளுக்கும் ஒரு விபரீத ஆசை வந்தது. தானும் போய் ஏறினாள். அதிக எண்ணிக்கையான வளைந்து வளைந்து செல்லும் படிகளில், ஒவ்வொன்றாக ஏறும் போது மனச்சோர்வுடன் உடற் சோர்வும் சேர்ந்து கால்கள் தடுமாறின. தலை சுற்றியது. ஆனாலும் ஏறி விட்டாள். மூச்சு வாங்கியது. மேலே நின்று பார்த்தாள். எதுவும் தெளிவில்லாமல் ஏதோ ஒரு மெல்லிய புகைமண்டலம் முன்னே தெரிந்தது. பச்சை மரங்கள் கூட புகை போர்த்தி வெண்மை பேர்ந்த பச்சைகளாகத் தெரிந்தன. யாரும் எதிர் பார்க்காத ஒரு கணத்தில் எம்பிக் குதித்தாள்.

அங்கு நின்ற எல்லோருமே அதிர்ச்சியில் அவலக்குரல் எழுப்ப அவள் இரத்தமும் சதையுமாய் தேவாலயத்தின் படிகளில் சிதறினாள். ஒரு கணம் ஸ்தம்பித்து நின்ற அந்த இடத்தை பொலிஸ்வாகனங்களும் அம்புலன்ஸ் வண்டியும் அல்லோல கல்லோலப் படுத்தின. சிவப்பும் வெள்ளையும் கலந்த தடுப்பு நாடாக்கள் கட்டப்பட்டு அந்த வீதியிலான போக்குவரத்துக்களும் மக்கள் நடமாட்டமும் தடைப்படுத்தப் பட்டது.

இது மூன்றாவது சாவு. முதலில் 14வயது நிரம்பிய ஒரு யேர்மனிய மாணவி. அடுத்து ஒரு இந்தியத் தமிழ்ப்பெண். இப்போ இலங்கைத் தமிழ்ப்பெண். தேவாலய உச்சிக்கு இனி யாருமே ஏற முடியாது என்ற அறிவித்தலோடு தேவாலயத்தினுள்ளே இருந்த உச்சிக்கு ஏறும் படிகளை மறித்து கேற் போட்டு பெரிய மாங்காய்ப்பூட்டு போடப் பட்டது.

விசாரரணைகள் தொடர்ந்து... சாக்கில் அள்ளிக் கட்டப் பட்ட உமாவின் உடல் என்று சொல்லப் பட்ட சதைத் துண்டுகள் அடக்கம் செய்யப்பட்டு இரண்டு கிழமைகள் ஓடி விட்டன. சந்துருவைத் துக்கம் விசாரிக்க உறவினர்கள் என்ற பெயரில் சிலரும், நண்பர்களும் வந்து வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

சந்துரு சோகமாய் தாடியை மழிக்காமல் தேவதாஸ் வேடம் போட்டிருந்தான். யார் வீட்டுக்கு வந்தாலும் ஒரு சோகப் பாட்டுள்ள இசைத்தட்டை சுழல விட்டு தன் சோகத்தை இன்னும் பலமாக மற்றவர்களுக்குக் காட்டினான். அழுவாரைப் போல இருந்து "அவ பாருங்கோ சரியான நல்லவ. ஆனால் யேர்மனியிலை இருக்கிற எல்லாப் பொம்பிளையளுக்கும் உள்ள அதே பிரச்சனைதான் அவவுக்கும். தனிமைதான் எல்லாத்துக்கும் காரணம். தாய் தகப்பன் ஊரிலை. சொந்தம் எண்டு சொல்லிக் கொள்ள ஒருவரும் பக்கத்திலை இல்லை. நானும் வேலையோடை. மகள் நிலாவினி பள்ளிக்கூடம் ரூர் எண்டு திரிவாள். இவ நாள் முழுக்க வீட்டிலை தனியத்தானே. அதுதான் அவவுக்கு சரியான மனஅழுத்தம். எப்பவும் சும்மா இருந்து அழுறதும்....." சொல்லிக் கொண்டே இருந்தான்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
7.3.2005


பதிவுகள் நவம்பர் 2007 இதழ் 95
2. சிறுகதை: காதலினால் அல்ல!  - சந்திரவதனா செல்வகுமாரன் -

காதலினால் அல்ல... புள்ளிகளை மட்டுந்தான் எங்களால் போட முடிகிறது. எந்தெந்தப் புள்ளிகள் இணைந்து எந்த வடிவில் வாழ்க்கைக் கோலம் அமையப் போகின்றது என்பதை யாரும் முற்கூட்டியே உணர்ந்து கொள்வதாகவோ அறிந்து கொள்வதாகவோ எனக்குத் தெரியவில்லை. புள்ளிகளை மட்டுந்தான் எங்களால் போட முடிகிறது. எந்தெந்தப் புள்ளிகள் இணைந்து எந்த வடிவில் வாழ்க்கைக் கோலம் அமையப் போகின்றது என்பதை யாரும் முற்கூட்டியே உணர்ந்து கொள்வதாகவோ அறிந்து கொள்வதாகவோ எனக்குத் தெரியவில்லை. நேற்றுத்தான் போலிருக்கிறது. நீ ஜேர்மனிக்கு வந்தது. நான்கு வருடங்களின் முன் வந்திருந்தாய். பார்த்துப் பேசும் பாக்கியம்தான் எனக்கில்லாமற் போய் விட்டது. பார்க்காமலே இருந்து விடுவோம் என்றாய். பால்ய காலத்து முகங்களையே மனங்களில் வார்த்திருப்போம் என்றாய்.

இன்றைக்கு ஏன் இதெல்லாம் என் நினைவில் வருகின்றதென்றே எனக்குத் தெரியவில்லை. இரவின் நிசப்தங்களைக் குலைக்கும் ஒவ்வொரு சப்தங்களும் எனக்குக் கேட்கின்றன. ஆழ்ந்து உறங்கிப் போகும் நான் ஏன் இப்படி அர்த்த ராத்தரியில் அர்த்தமற்று விழித்திருக்கிறேன் என்று புரியவில்லை. மனசு குழம்புகிறது. எதையோ இழந்தது போலத் தவிக்கிறது.

´எனக்குப் பிரியமான யாருக்கும் ஏதாவது ஆகியிருக்குமோ..?´ இருட்டுக்குள் நடந்து வரும் போது தூரத்தே தெரியும் வேப்பமரத்தில் ´பேய் இருக்குமோ!´ என்ற நினைவு வந்தவுடன் குடல் தெறிக்க ஓடும் சின்னப்பிள்ளை போல, கேள்வி தோன்றிய மாத்திரத்தில் மனசு சில்லிடுகிறது. ´வேண்டாம், எந்த அசம்பாவிதங்களும் வேண்டாம். இதற்கு மேல் யாரையும் இழக்கவோ, யாரும் எதையாவது இழந்து விட்டார்கள் என்று கேட்கவோ இந்த மனசுக்குத் திராணியில்லை.´ நினைவுகளிலிருந்து விலகி ஓடுகிறேன். வேப்பமரத்துக்குப் பயந்து ஓட, வளைவில் தெரியும் முடக்குக் காணிக்குள் விருட்சமாய் விரிந்திருக்கும் புளியமரம் மீண்டும் பேயை நினைவு படுத்துவது போல் எனக்குள்ளும் வேண்டாத நினைவுகள் வந்து என்னைப் பயமுறுத்துகின்றன. குடல் தெறிக்க ஓடுகிறேன்.

´இல்லை, யாருக்கும் ஒன்று நடந்து விடாது. எனக்கு நித்திரை வராததற்கான காரணம் வேறாக இருக்க வேண்டும்.´ இரவிலே உடற்பயிற்சி செய்வது அவ்வளவு நல்லதல்ல, என்று ராகினி பலதடவைகள் சொல்லியிருக்கிறாள். இருந்தும் வேலை முடிந்த பின் ரெட்மில்லரில் 45நிமிடங்கள் ஓடிவிட்டுத்தான் வீட்டுக்கு வந்தேன். அதனால்தான் நித்திரை கொள்ள முடியவில்லைப் போலும்.

என்னதான் சமாதானம் செய்தாலும், ஏனோ சில நாட்களாகவே மனம் குழம்பித்தான் இருக்கிறது. இன்று கொஞ்சம் அதிகப் படியாக. என்னவென்று புரியாத உணர்த்தல்கள். அடிக்கடி விழிப்பு. படுத்ததும் தூங்கி விடும் என் இயல்பு நிலையில் இருந்து விலகியிருக்கிறேன். ஏதோ ஒரு யோசனை என்னை அழுத்துகிறது. ஏன் இந்த உணர்வுகள் என்ற கேள்வி இந்தச் சில நாட்களுக்குள் பலதடவைகள் எனக்குள் எழுந்து விட்டது. ஆனாலும் ஐரோப்பிய அவசரங்களினூடு என் நாட்களும் விரைகின்றன.

ம்.. மீண்டும் நீ… ஏன் என் நினைவுகளில் வருகிறாய். மனத்திரையில் வலம் வரும் பலநூறு முகங்களுக்கு இடையில் நீ கொஞ்சம் அதிகமாகவே வருகிறாய் போலிருக்கிறது. அடிக்கடி வருகிறாய். இந்தச் சில நாட்களுக்குள் உன்னை இன்னும் அதிகமாக நினைக்கிறேன் போல இருக்கிறது. இரண்டு மூன்று நாட்களுக்கு முன் ஏதோ ஒரு உந்துதலில் உனது மகளுக்கு ஒரு மின்னஞ்சல் எழுதினேன். உனதும், உன் மனைவியினதும் புகைப்படம் ஒன்று எனக்கு அனுப்பும் படி. அவள் பதிலுக்காக இன்னும் என் மனம் காத்திருக்கிறது. ஏனோ, உன்னைப் பார்க்க வேண்டும் போல மனதுள் ஆவல் எழுகிறது. மனங்களின் தொடுகைகளைத் தவிர வேறெந்தத் தொடர்பும் இல்லாத தூரத்தில் நீ. உறவினன் என்பதையும் தாண்டிய ஏதோ ஒரு பிரியம் உன் மேல். எனக்கு உன் மேல் இருக்கும் பிரியத்தை விட உனக்கு என் மேல் இருக்கும் பிரியம் அதிகம் என்பதை நான்கு வருடங்களின் முன் நீ ஜேர்மனிக்கு வந்த போது தொலைபேசியில் பேசிய போதுதான் உணர்ந்தேன். அப்போதும் கூட நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. தொலைபேசி என்ற ஒரு சாதனம் இருந்ததால் பேசிக் கொண்டோம்.

அன்று மிகச் சாதாரணப் பெண்கள் போலவே நூறில் ஒன்றாய், இல்லையில்லை ஆயிரத்தில் ஒன்றாய், அதை விடப் பொருத்தமாய் உலகத்தில் ஒன்றாய்… சமையல் முடித்து, சாப்பாடு முடித்து, கொஞ்சம் முன்னேற்றமாய், மினுக்கிக் கழுவி மினைக்கெடாமல் பாத்திரங்களை டிஸ்வோசரில் போட்டு விட்டு, துடைப்பத்துக்குப் பதிலாக வக்கும் கிளீனரை எடுத்த போதுதான் உனது தொலைபேசி என்னை அழைத்தது. யாராவது தொல்லை பேசுபவர்கள்தான் அழைக்கிறார்களோ என்ற யோசனையில் மனசுக்குள் சலனித்து விட்டுத்தான் எடுத்தேன்.

என்னை முழுமையாகச் சலனப்பட வைக்க என்றே கனடாவில் இருந்து வந்தாயோ! என்னமாய் பேசி விட்டாய். மீண்டும் மீண்டுமாய் எனக்குள்ளே அவை ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. நினைவுகளில் மிதக்கின்றன.

அதுக்காக காதல், கத்தரிக்காய் என்று விபரீதமாய் ஏதும் கற்பிதம் பண்ணி விடாதே. நான் இன்னொருத்தன் மனைவி. நீ இன்னொருத்தியின் கணவன். சத்தியமாய் உன் மேல் எனக்குக் காதலில்லை. ஆனாலும் என்னைச் சலனப் படுத்துகிறாய். சற்று சஞ்சலப் படுத்துகிறாய். ஒரு வேளை உன் காதலை அன்றே நீ சொல்லியிருந்தால் நானும் உன்னைக் காதலித்திருப்பேனோ, என்னவோ..!

எனக்கென்ன தெரியும்? நீ என்னைக் காதலித்தாய் என்று நான் எங்கு கண்டேன்? பனங்கூடல் தாண்டி, அப்பாவோடு நான் உன் வீட்டுக்கு வரும் போதெல்லாம், மச்சான் நீ என்றும், உன்னை மணப்பது நான் என்றும் அப்பாச்சி சொல்லும் போதெல்லாம் எனக்கேதோ மரப்பாச்சி விளையாட்டுப் போலத்தான் இருக்கும்.

திருமணத்தின் அர்த்தமோ, காதலின் சந்தமோ தெரியாத அந்த வயதில் அரைக் காற்சட்டைக்கு வெளியே அரைநாண் கயிறு எட்டிப் பார்க்க விளையாடிக் கொண்டிருக்கும் உன் மீது எனக்கு எந்த ஈடுபாடுமே வரவில்லை. காதல் மட்டும் எப்படி வரும்? அப்படியிருக்க அப்பாச்சியின் வார்த்தைகள் உன்னுள் ஆழப் பதிந்து போனதையும், நான் உனக்குத்தான் என்ற ஆசை உன்னுள் வேரூன்றி வளர்ந்து விட்டதையும் நான் எப்படி அறிவேன். ஒரு தரமாவது… நான் வளர்ந்த பின்னாவது நீ எனக்குச் சொல்லியிருக்கலாமே.

நான் பள்ளிக்கூடத்துக்குப் போகும் நேரங்களில் நீ சந்திக் கடையின் முன் ஒற்றைக்காலைத் தரையில் ஊன்றிய படி, மற்றக்கால் தொங்கிக் கொண்டு நிற்க சைக்கிளில் தவமிருந்தது எனக்காகத்தான் என்று நான் நினைக்கவேயில்லை. நீ சொன்ன போதுதான் நீ சந்தியில் நின்றதைப் பற்றியே நினைத்துப் பார்க்கிறேன்.

நீ கப்பலில் போய் விட்டாய் என்ற போது மாமியின் கஸ்டங்கள் தீர்ந்து விடும் என்று மனம் மகிழ்ந்தேனே தவிர வேறெந்த உணர்வும் எனக்கு வரவில்லை. நீ மட்டும் எப்படி உனக்குள் அப்படியொரு கனவை வளர்த்துக் கொண்டு திரும்பி வந்தாய். அங்கிருந்தாவது உன் விருப்பத்தை, ஆசையை, காதலைச் சொல்லி ஒரு கடிதம் எழுதியிருந்திருக்கலாமே!

ம்;.. அதற்கு நான்தான் அவகாசம் தரவில்லையோ!

சில வருடங்கள் கழித்து, நீ கப்பலில் இருந்து திரும்பி வந்த அன்றே என்னைப் பார்க்க என்று ஒடி வந்ததாய் சொன்னாயே! அப்போது கூட "மாமி..." என்றுதானே கூப்பிட்டுக் கொண்டு வந்தாய். அம்மா மீது உனக்கு அத்தனை பாசம் என்றுதான் நினைத்தேனே தவிர, உன் வரவு எனக்குள் எந்த சந்தத்தையும் ஏற்படுத்தவில்லை. நான் என்பாட்டில் என் குழந்தையை மடியில் வைத்து பால் கொடுத்துக் கொண்டிருந்தேன். அந்தக் காட்சியில் உன் மனம் நொருங்கிப் போனதைக் கூட நீ யாருக்கும் அன்று சொல்லவில்லையே!

இத்தனை வருடங்கள் கழித்து, நான் பேரப்பிள்ளையையும் கண்ட பின் இதையெல்லாம் நீ என்னிடம் சொன்ன போது எனக்கு ஏதோ சினிமாப் படத்துக்கான கதையொன்றைக் கேட்பது போன்ற பிரமைதான் வந்தது. என்ன..? ஒரு வித்தியாசம். வழமையான கதைகளில் நான் வாசகியாய் அல்லது ரசிகையாய் இருப்பேன். இந்தக் கதையில் நானே கதாயநாயகியாய்…

நீ ஜேர்மனிக்கு வந்திருந்த போதும், நான் வர முடியாது போன அந்தக் குடும்பச் சந்திப்பில் ஒவ்வொரு அழைப்பு மணியின் போதும் நான்தான் வருகிறேன் என்று எதிர்பார்த்து ஏமாந்தாயாமே! அங்கு வந்திருந்த உறவுகளில் சிலர் என்னிடம் பின்னர் சொன்ன போது நியமாகவே நான் வருந்தினேன். வந்திருக்கலாமே என்று மனசுக்குள் ஆதங்கப் பட்டேன். ஆனாலும் பார்க்காமலே இருந்து விடுவோம் என்றும், பால்ய காலத்து முகங்களையே மனதில் வார்த்திருப்போம் என்றும் நீ சொல்லிச் சென்றதை நினைத்து மனத்தை ஆற்றிக் கொண்டேன்.

எனது 18வயதுக்குப் பிறகு உன்னைச் சந்தித்துக் கொண்டதாய் எனக்கு ஞாபகம் இல்லை. எனது அந்த வயது முகத்தைத்தான் உனக்குத் தெரியும். அதே போல நான் கடைசியாகச் சந்தித்த உனது அந்த 23வயது முகத்தைத்தான் எனக்கும் தெரியும்…

இப்போதும் கூட உன் மனைவி வேலைக்கும், மகள் பாடசாலைக்கும் சென்ற பின்னான தனிமைப் பொழுதுகளில் நீ என்னைப் பற்றிய நினைவுகளில் மூழ்குவாய் என்று சொன்னாயே! அது அவ்வப்போதான தனிமைப் பொழுதுகளில் என் நினைவுகளைச் சீண்டுவதை நான் உணர்கிறேன். அதற்காக எனக்கு உன்மேல் காதல் இருக்கிறது என்று மட்டும் நினைத்து விடாதே. இப்போதும் சொல்கிறேன், சத்தியமாக உன் மேல் எனக்குக் காதல் இல்லை.

ஆனாலும் வாழ்க்கை பற்றிய விடை கிடைக்காத சில பல கேள்விகள் என்னுள் எழுகின்றன. பெரியவர்கள் போட்ட புள்ளிகள் உன் மனதில் மட்டும் கனவுக் கோலமானது ஏன்? என்னை நீ நினைத்ததையும், என்னை நீ காதலித்ததையும் உணராமலேயே நான் வேறொருவனைக்: காதலித்து, கல்யாணம் செய்து… என்பாட்டில் வாழ்ந்திருக்கிறேனே! சின்ன உணர்த்தல்கள் கூட என்னிடம் இல்லாமற் போனது எப்படி?

மீண்டும் மீண்டுமாய் இந்த உன் பற்றிய நினைவுகள் ஏன் வருகின்றன என்று தெரியாமலே நான் தூங்கி விட்டேன் போலிருக்கிறது.

விடிந்த பொழுதிலும் மனசு குழம்பித்தான் இருக்கிறது. எனக்குப் பிரியமான யாருக்கும் ஏதாவது ஆகியிருக்குமோ? நினைக்கும் போதே வாயில் வைக்கக் கொண்டு போன உணவு நழுவி விழுந்து விடுகிறது. என் மேல் பிரியமான யாருக்காவது...? கேள்விகள் தோன்றுவதும் வழமை போலவே எனக்குள்ளேயே அமுங்கிப் போவதுமாய் பொழுது அவசரத்தோடு விரைகிறது.

வேலையிலும் மனதில் அமைதியில்லை. வேளைக்கே வீட்டுக்கு வந்து விட வேண்டும் போல மனசு அந்தரிக்கிறது. வந்து விட்டேன். அப்போதுதான் அந்த அழைப்பு… நீ;; ஒரு மருத்துவமனையில் கடுமையான நோயில் வீழ்ந்திருக்கிறாய் என்ற செய்தியோடு.

ஒரு கணம் திக்குமுக்காடி விட்டேன். எப்படியாவது உன்னோடு பேச வேண்டும் என்று மனம் துடிக்கிறது. நன்றாகக் கதைத்துக் கொண்டுதான் இருக்கிறாய் என்றும் மருத்துவமனை என்பதால் இரவு பேச முடியாது என்றும் காலையில் பேசும் படியும் சொல்கிறார்கள். சிறிது நேரத்தில் மருத்துவமனைக்கான தொலைபேசி இலக்கத்தைத் தருகிறோம் என்கிறார்கள்.

ஆசிரியர் சந்திரவதனா செல்வகுமாரன்மனசுக்குள் அலை புரள்கிறது. விழிகளில் நீர் திரள்கிறது. ஆனாலும் உன்னோடு பேசலாம் என்ற நம்பிக்கை என்னுள் பலமாக இருக்கிறது. அதிகம் காத்திருக்க வைக்காமல் தொலைபேசி அழைக்கிறது. எடுத்த போது, எனது நம்பிக்கைகள் தவிடு பொடியாகின்றன. நீ போய் விட்டாயாம். அப்போதுதான், அந்தச் சில நிமிடங்களுக்குள்தான்… என்னோடு பேசாமலே போய் விட்டாயாம்.  சொன்னது போலவே பார்க்காமலே போய் விட்டாய். ஒப்பாரி வைத்து அழுகின்ற அளவுக்கு நான் இல்லை. ஆனாலும் அவ்வப்போதான தேற்றுவார் இன்றிய தனிமைகளில் ஆற்றாமையில் கொட்டி விடுகிறது கண்ணீர்.

9.10.2007
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள் அக்டோபர் 2003 இதழ் 46
3. சிறுகதை: ராகவன்  - சந்திரவதனா செல்வகுமாரன் (யேர்மனி) -

ராகவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று எனக்கு இன்று வரை தெரியாது. அன்று பிரயோககணித வகுப்பு முடிந்ததும் 'ஓர்கானிக் கெமிஸ்ட்ரி' தொடங்கியது. பதினோராம் வகுப்புக்கான மாஸ்டர் வரவில்லையென்பதால் அந்த வகுப்பு மாணவர்களையும் எமது 12ம் வகுப்புக்குள் விட்டார்கள். பெப்பே தான் அவசரமாக வாங்கில் மேசைகளை ஒழுங்கு படுத்தி விட்டது. அது யார் பெப்பே...! என்ற யோசனை உங்களுக்கு வரலாம். அது பாவம். நாங்கள் பெண்கள் எல்லோருமாகச் சேர்ந்து அதுக்கு வைத்த பெயர்தான் பெப்பெ. அதென்ன அஃறிணையில்... என்று நெற்றியைச் சுருக்குகிறீர்களா? அவனெண்டு சொல்ல முடியவில்லை. வயதில் மூத்தது. அவர் என்று சொல்ல முடியாத படி பெப்பே. நாங்கள் ரியூற்றறிக்குள் நுழையும் போது கதவைத் திறந்து விடுவதிலிருந்து கரும்பலகையைச் சுத்தமாக்கி... என்று எல்லாவற்றையும் செய்து வைப்பதுதான் பெப்பேயின் வேலை.

யாரோ நாங்கள் பெப்பே என்று சொல்வதை அதுக்குச் சொல்லி, ஒரு நாள் இடைவேளை நேரம் அது வந்து அதன் அர்த்தம் என்ன? ஏன் தனக்கு அப்பிடிப் பெயர் வைக்க வேண்டும் என்று கேட்க எங்களுக்குப் பாவமாகி விட்டது. பெயர் வைப்பதில் மும்முரமாக நின்ற சந்திரப்பிறேமா மட்டும் நைஸாக நழுவி விட்டாள்:

மனசுக்குள் கனவுகளை வளர்த்துக் கொண்டு மன்மத நினைப்பில் பெண்களுக்கு நடுவில் வேலை செய்து கொண்டிருந்த பெப்பே இப்போதெல்லாம் எங்களைக் கண்டால் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

சில பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் உதவி செய்ய, பெப்பே முகத்தைத் தொங்கப் போட்ட படி வாங்கில்களை அடுக்கிக் கொண்டிருக்கவே ஆண் மாணவர்கள் சிலர் தடால் புடால் என்று ஓடிவந்து அமரத் தொடங்கினார்கள். இடங் காணததால் பக்கப் பாடாகவும் வாங்கில்கள் போடப் பட்டன.

வகுப்பு தொடங்கி விட்டது. பெப்பே அவசரமாய்ப் புதுச் சோக்குகளை கொண்டு வந்து மேசையில் வைத்து விட்டு வெளியேறி விட்டது.

மணியம் மாஸ்டர் வழக்கம் போல  'ஓர்கானிக் கெமிஸ்ட்ரி'யை இரட்டை அர்த்தம் தொனிக்க விளக்கிக் கொண்டிருந்தார். சிரிப்பலைகளின் நடுவே அவசரமாய் நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தோம். திடீரென்று என் காலில் ஏதோ தட்டுப் பட்டது. திடுக்கிட்டுக் குனிந்து பார்த்தேன். ஒரு கால் நீண்டிருந்தது. அது பக்கப் பாடாக எனக்கு வலது பக்கமாக வைக்கப் பட்டிருந்த வாங்கிலில் இருந்த ராகவனின் கால். நிமிர்ந்து பார்த்தேன். அவன் குனிந்த தலை நிமிராமல் நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தான்.

என்னை விட இளையவன். 11ம் வகுப்பு மாணவன். எனக்குப் பிரயோககணிதம் படிப்பிக்கும் இரத்தினவேல் மாஸ்டரின் மகன். இரத்தினவேல் மாஸ்டர் கடமையே கண்ணானவர். அவர் வகுப்புக்குள் நுழைந்து விட்டால் ஆர்முடுகல், அமர்முடுகல், வேகம், நேரம், கரும்பலகை, சோக், டஸ்ரர்,........ இவைகள் தவிர வேறெதுவும் எம் சிந்தனையில் செல்லாது. 'கெமிஸ்ட்ரி'யில் மாதிரி பிரயோககணித வகுப்பில் நிறையப் பெண்களும் இருக்க மாட்டார்கள். ஏதோ பெண்கள் கணிதம் படிக்கத் தகுதியில்லாதவர்கள் என்பது போல டொக்டர், ரீச்சர் கனவுகளோடு உயிரியலும், தாவரவியலும் படிக்கச் சென்று விடுவார்கள்.  நானும் கீதாவும் இன்பியும்தான் கணிதம் படிப்போம். மிச்ச எல்லாம் பெடியன்கள்தான்.

எங்களுக்குத்தான் சின்னதாகக் கூடப் பெண்களின் பக்கமாகச் சிரிக்காமல் சீரியஸாகப் படிப்பிக்கும் இரத்தினவேல் மாஸ்டரின் ஆசிரியத் தன்மையும், திறமையும் தொ¢யும். அதனால் நாங்கள் மூவரும் அவர் மகன் ராகவனையும் மற்றைய மாணவர்கள் போல சாதாரணமாக எண்ணாது சற்று எட்டவே வைத்திருந்தோம்.

இதென்னடா...? வாங்கிலுக்குக் கீழே தவறுதலாக ஒரு கால் பட்டதுக்கு இத்தனை ஆரவாரமா என உங்களுக்கு ஒரு சிரிப்பான யோசனை வரலாம். அந்தக் காலம் என்ன உதட்டோடு உதடுரசிக் ஹலோ சொல்லும் இன்றைய காலமா.? ஓன்றாகப் படிக்கும் மாணவனுடன் கூட ஒரு வார்த்தை பேசாது, ஆண் பெண் என்று பிரித்து, பிரித்து வைத்து.. கண்கள் சந்தித்துக் கொண்டாலே பாவம் என்பது போல தலைகுனிந்து திரியும் இற்றைக்கு 28 வருடங்கள் முந்திய காலமல்லவா அது..!

பார்வையே தொடக் கூடாது. புன்னகை.. அது தெரியாமல் கூட ஆண் மாணவர்கள் முன் பெண் மாணவர்களுக்குப் பூக்கக் கூடாது. இந்த நிலையில் ஒரு ஆண் மாணவனின் கால் பெண் மாணவியின் காலில் படுவதென்பது சும்மாவா..?

ராகவன் தலை கவிண்ட படியே எழுதிக் கொண்டிருந்தான். யாராவது அவதானித்திருப்பார்களா என்று அறிந்து கொள்ள மெதுவாகப் பார்வையைச் சுழற்றினேன். எல்லோரும் நோட்ஸ் எடுப்பதிலேயே கவனமாக இருந்தார்கள். யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதில் எனக்குப் பெருநிம்மதி. இருந்தாலும் ஏதோ அவமானப் பட்டுப் போன மாதிரியான ஒரு உணர்வு. முன் வாங்கிலில்தான் நான் இருந்தேன். எனக்கு நேரெதிரே கரும்பலகைக்கு முன் நின்று படிப்பித்துக் கொண்டிருக்கும் மணியம் மாஸ்டர் கண்டிருப்பாரோ என்று மனசுக்குள் ஒரு சின்ன உறுத்தல்.

ராகவன் தலையை நிமிர்த்தியதை நான் காணவில்லை. அவன் நோட்ஸ் எடுக்கும் விதத்தைப் பார்த்தால் அவன் என் காலில் தட்டுப் பட்டதையே உணராதவன் போலத் தெரிந்தான். தெரியாமல்தான் நடந்திருக்கும். அவன் நல்ல பெடியன். என் மனசுக்கு நான் கூறிக் கொண்டேன்.

வகுப்பு முடிந்து வெளியில் வந்த போதும் யாரும் இது பற்றி எந்தக் கேள்வியும் கேட்க வில்லை. எனக்கு இப்போ துணிச்சலான நிம்மதி. யாரும் காணவில்லை.

அடுத்த வாரம் பாடசாலைக்குச் சென்ற போது எனது நிம்மதி பாடசாலை மதில்களில் கரிக்கட்டியால் குலைக்கப் பட்டிருந்தது. ராகவன் என்று எழுதி பக்கத்தில் கூட்டல் அடையாளம் போட்டு எனது பெயரும் எழுதப் பட்டிருந்தது. என்னையும் ராகவனையும் இணைத்தும் நான் ராகவனின் காலைத் தட்டினேன்  என்றும் அரசல் புரசலான கதைகள் பாடசாலைச் சுவர்களில் எதிரொலித்தன.

எனது கால் மாஸ்டரை நோக்கித்தான் நீள முடியுமே தவிர எனக்கு வலது பக்கமாக இருந்த ராகவனின் பக்கமாய் நீள முடியாது. அவனாக வேண்டு மென்று என் பக்கம் நீட்டினானோ..? அல்லது தவறுதலாக நடந்ததோ எனக்குத் தெரியாது. ஆனால் அதை ஒரு தவறான கதையாக ஊருக்குள் உலாவ விட்டு விட்டான்.

ஏன்ரா இப்படி ஒரு கதையை உருவாக்கினாய் என்று அன்று அவனிடம் சென்று கேட்க ஆண் பெண்ணுக்கிடையில் அன்றிருந்த இடைவெளி இடம் தரவில்லை. அதனால் இன்றுவரை ராகவன் ஏன் அப்படி நடந்து கொண்டான்..? என்ற கேள்வி என்னை விட்டு அகலவும் இல்லை.

15.9.03

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R