தமிழகத்தின் மேற்கே,மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைமாவட்டம் நீலகிரியாகும். இம்மாவட்டம் பல்வேறு தனிச்சிறப்புகளை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. அவற்றுள் முதன்மையானது யுனெஸ்கோவால் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் உயிர்க்கோள காப்பகமும் அவை உள்ளடங்கிய உயிர்க்கோள மண்டலமும்  நீலகிரியாகும். தவிரவும் இந்தியாவெங்கும் இனங்காணப்பட்ட அருகிவரும்  தொன்மையான 75 பழங்குடி குழுக்களில் ஆறுவகையான தொல் பழங்குடிகளின்  ஒருமித்த வசிப்பிடமாகவும், பழங்குடிகள் உள்ளிட்ட பல்வேறு இனக்குழுமக்கள் வாழும் பகுதியாகவும்,15 க்கும் மேற்பட்டதிராவிட மொழிகள் பேசப்படும்  திராவிட மொழிகளின் நுண்ணுலமாகவும், சமூகவியல் , மானுடவியல், மொழியியல்,புவியியல்,சூழலியல் முதலான பல்துறை சார்ந்த  ஆய்வுகள் மேற்கொள்ளும் ஆய்வுக்களங்களின்  ஆவணப் பெட்டகமாகவும் நீலகிரி விளங்கிவருகிறது.

உயிர்சூழல் மண்டலம்
பூமியில் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றுள் மனித இனமும் ஒன்றாகும். உயிர்க்கோளத்தில் உயிர் வாழ தேவையான சூழலை உருவாக்கித்தரும் அரிய இயற்கை அமைப்புகள் சில இடங்களில் மட்டுமே இருக்கும். இந்த இடங்களே உயிர்க் கோளத்தில் தேவையான சூழலை உருவாக்கித்தரும் என்பதால், அத்தகைய இடங்கள் உயிர்க்கோள் காப்பகங்கள் என ‘யுனெஸ்கோ’ அமைப்பு இனங்கண்டு  வருகிறது . அவ்வாறு யுனெஸ்கோ அமைப்பால் 1986 இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் உயிர்க்கோள் காப்பகமும்  நீலகிரியாகும். இங்கு  இலையுதிர் மற்றும் முட்புதர் காடுகள் ,ஈரப்பதம் மிகுந்த  பசுமை மாறாக் காடுகள் , சோலை புல்வெளிகள் ,சவானா புல்வெளி காடுகள்  முதலானவை இங்குள்ளன.அவற்றுள் உலகில் உள்ள 3238 பூக்கும் இனத்தாவரங்களுள் சுமார் 135 இனங்களும்  தவிரவும் அரியவகை பூச்சியுண்ணும் தாவரமான, டொசீ இமயமலைக்கு அடுத்தப்படியாக இங்குதான் உள்ளது.

அருகிவரும் தொல்பழங்குடிகள்
சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலமலைத் தொடரில் பன்னெடுங்காலமாக பல்வேறு வகையான பழங்குடி இனக்குழுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். நீலமலைத்தொடரில்  தோடர், கோத்தர்,இருளர்,குறும்பர், பணியர் காட்டுநாயக்கர்   அதன் நிலவியல் தன்மைக்கேற்பவும், மேற்கொண்டுள்ள தொழில் நிலைக் கேற்பவும்   தனித்தமைந்த பண்பாட்டு அடையளாக்கூறுகளுடனும் பலபகுதிகளில் வசித்து வருகின்றனர்.இவர்களது பேசும் வழக்கு மொழி மற்றும் பண்பாட்டின் அடிப்படையில் இப்பழங்குடிகள்  அனைவரும் திராவிடப்பழங்குடிகளாகவே ஆய்வாளர்களால் இனங்காணப்படுகின்றனர். எழுத்து வழக்கற்று பேச்சு வழக்கினை மட்டுமே கொண்டு பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் இப்பழங்குடிகளின் பண்பாட்டையும், மரபார்ந்த அறிவையும், இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை இவர்களது சடங்கு முறைகளிலும் வாய்மொழி வழக்காறுக்களிலும் கண்டுணர இயலும். இத்தகு நிலையில்  அருகிவரும் தொல்பழங்குடிகள்  இனக்குழுக்களுள் ஒன்றான காட்டு நாயக்கர்கள் தங்களது வாய்மொழி வழக்காறுகளில் எவ்வாறு  கதைகளாகவும், ,விடுகதைகளாவும், சடங்குமுறைகளாகவும் தம் பண்பாட்டில் பதியவைத்து பல்வேறு வாழ்வியல் நிலைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதை  களஆய்வின் மூலம் நீலகிரி மாவட்டம்,கூடலூர் பகுதியில் சேகரித்த தரவுகளின் அடிப்படையில்  ஆராய்வதே  இக்கட்டுரையின்  நோக்கமாகும் .

காட்டு நாயக்கர்
காட்டு நாயக்கர்’ என்ற பழங்குடியினர் “ஜேனு குறுமன்’,‘தேன் குறும்பர்’,‘காட்டு நாயக்கன்’,‘களத்து நாயக்கன்’,‘நாய்க்கன்’,‘ஜேனு குறும்பா’,‘தேன் குறும்பன்’,‘ஜேனு கொய்யோ’‘சோல நாயக்கன்;’ என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்”. தொல் பழங்குடி குழுக்களான இவர்களைத் தமிழகத்தில் ‘காட்டு நாய்க்கன்’ எனவும் கேரளாவில்; ‘காட்டு நாய்க்கன்’, எனவும் அதிகாரப் பூர்வ பெயராகக் கொள்கின்றனர். இவர்கள் வயநாடு, நீலகிரி போன்ற பகுதிகளில் பரவலாகக் காணப்பட்டாலும் தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளிலும் வசிக்கின்றனர்.காட்டு நாயக்கர் என்ற பழங்குடியினர் தங்களின் தோற்றத் தொன்மத்தை இந்தியக் காப்பியமான மகாபாரதத்தோடு தொடர்புப்படுத்துகின்றனர். இக்காப்பியத்தில் காணலாகும் இடபாசூரனின் வழிவந்தவர்கள் தாங்கள் என நம்புகின்றனர்.வேட்டைக்குச் சென்ற திருமாலை எதிர்த்த வேட்டைக்குலத்தலைவனே இடபாசூரன். இத்தொன்மமானது இடபாசூரனின்வழி வந்தவர்கள் காட்டு நாயக்கர்கள் என்று அவர்களால் நம்பப்படுகின்றது.

குடியிருப்பும் தொழிலும் :
கூடலூரை  சார்ந்த பகுதிகளில் வாழும் காட்டுநாயக்கர்களது  குடியிருப்புக்கள் அனைத்தும் பிற பழங்குடிகளை போலன்றி அடர்ந்த முதுமலை வனப்பகுதியை சார்ந்து மட்டுமே காணப்படுகின்றது . ஏனென்றால் இவர்களது வாழ்வும் அதனூடான பண்பாடும் காடுபடு பொருட்களை சேகரித்து வனத்தினை சார்ந்து  வாழ்வதையே இன்றளவும் அடிப்படையாக கொண்டது. இத்தகு பண்பாட்டை சடங்குகளிலும் வாய்மொழி வழக்காறுகளிலும் வெளிப்படுவதை காணலாம்.

சடங்குகள் :
காட்டு நாயக்கர் ஒருதார மணமுறையைக் கொண்டுள்ளனர். உடன்போக்குத் திருமணமுறை இவர்களிடையே காணப்படுகிறது. தவிர, பெண் எடுக்கின்ற வீட்டில் பணிகளைச் செய்து அவர்களுக்கு மனநிறைவேற்பட்டு பெண் கொடுத்து மணம் முடித்து வைக்கும் முறையும் காணப்படுகிறது. பெற்றோர்கள் பார்த்து முடிக்கும் திருமணமானது பின்வரும் நிலையில் நிகழும் மாப்பிள்ளையை அவனது தாய்மாமன் பெண் வீட்டிற்கு அழைத்துச் செல்வான். இருவீட்டாரும் ஒப்புதல் ஏற்படின் அவர்களது தலைவரான ‘காரணவன்’ ஒப்புதலுடன் நாள் குறிப்பர். திருமண நாளன்று மாப்பிள்ளை தன் உறவினருடன் பெண் வீட்டிற்குச் செல்வர்”. அவர்களை பெண் வீட்டார் தாரை தப்பட்டை முழங்க வரவேற்பர். அவர்களின் தலைவரான ‘காரணவர்’ திருமணத்தை நடத்துகிறார். வேட்டி, 10¼  பணம், வெற்றிலை பாக்கு முதலானவற்றைப் பரிசப்பணமாக மணப் பெண்ணின் தாய் தந்தையரிடம் கொடுத்து மணத்தை நடத்துவர். மாப்பிள்ளையின் தாய்மாமன் புத்தாடையை மணப் பெண்ணிடம் கொடுப்பார். அவர் அதை உடுத்தி வந்ததும் மணம் நிகழும். அதன் பிறகு மணமக்கள் வந்துள்ள உறவினர்களுக்கு வெற்றிலைப் பாக்கு கொடுத்து ஆசி பெறுவர். விருந்தும் நடன நிகழ்வும் நடைபெறும். அன்று மாலை மணமக்கள் மாப்பிள்ளை வீட்டிற்குச் செல்வர். அங்குள்ள பிற சமூகத்தவர்களின் வீடுகளுக்கு மணமக்கள் சென்று அவர்களிடம் வாழ்த்தினையும் பரிசினையும் பெறுகின்றனர். மறுவீடு செல்லும் போது மணமக்கள் உணவை ஒருவருக்குக்கொருவர் ஊட்டிக் கொள்வது மண நிகழ்வின் நிறைவாகும். மதனி மணமோ, மைத்துனி மணமோ இவர்களிடம் இல்லை. விதவை மறுமணம் என்பது இயல்பானது. முரண்பாடு ஏற்பட்டால் குடும்பத்தில் மூத்தோர் தீர்த்து வைக்கின்றனர் அல்லது அவர்களே விரும்பியவர்களோடு வாழ்கின்றனர். இவர்கள் மணமுறையானது இயல்பானதாகவும் எளிமையானச் சடங்குகளைக் கொண்டதாகவும் உள்ளது. இருவழி முறை மணம், தந்தை வழி முறை மணம், தாய்வழி முறை மணம் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். ஆனால், அக்காள் மகளை மணக்கும் முறை இவர்களிடம் காணப்படவில்லை. ‘தாலி’ என்பது இவர்களது மணத்தில் முக்கிய இடம் பெறுவதில்லை.

காட்டு நாயக்கர் பெண்கள் பருவமடைந்தவுடன் அவர்களுக்காக தனிக் குடிசையில் பதினைந்து நாட்கள் வரை இருக்க வேண்டும். பதினாறாவது நாள் ‘அரசின மதுவே’ எனப்படும் பூப்புச் சடங்கு நிகழும். இதில் உறவினர்கள் அனைவரும் அக்குடியிருப்பில் உள்ளோரும் பங்கு பெறுவர். இவர்களது சமூக வழக்கில் தாய் மாமன் முன்னிலைப்படுவதில்லை. அவரது மனைவியே பெண்ணின் தலையில் மஞ்சள் நீர் ஊற்றுவார். பிறகு ஆற்றில் நீராடி அவர்களது தெய்வத்தை வணங்கி வீடு திரும்புவாள். வீடு திரும்பும் அப்பெண்ணை தாய்மாமன் மனைவியே மலர் மாலை போட்டு வரவேற்பாள். உறவினர்கள் பரிசளிப்பர். பிறகு விருந்து நடைபெறும். சடங்கு நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் வெற்றிலைப் பாக்கு கொடுத்து அனுப்புவர். இவ்வாறே இப்பழங்குடிகளுள் பூப்புச் சடங்கானது நிகழ்வுறுகிறது.

காட்டு நாயக்கர்கள் இறந்தவர்களைப் புதைக்கின்றனர். இறந்தவரின் உடலை மஞ்சள் நீரால் குளிப்பாட்டி மாலை அணிவித்து பாடையில் வைக்கின்றனர். பிணத்தைப் பாடையில் வைத்தவுடன் அவர்களது பூசாரியான மந்திரகாரணு மந்திர சக்தி நிரம்பிய இரண்டு மோதிரங்களை அவர் வீட்டில் வைப்பார். இறந்தவர் விரும்பிப் பயன்படுத்தியப் பொருட்களையும் புதைப்பர். இவர்கள் புதைப்பதற்கு வெட்டும் குழியானது சாதாரண குழியைப் போல் அல்லாமல், வெட்டப்படும் குழியின் பக்கவாட்டில் ஒரு குகை போல் குழியைக் குடைந்து அதனுள்தான் பிணத்தை அடக்கம் செய்வர். இதற்குக் காரணம் பிணத்தின் மீது நேரடியாக மண்ணை போடக் கூடாது என்பதேயாகும். கணவன் இறந்தால் மனைவியும், மனைவி இறந்தால் கணவனும் இடுகாட்டிற்குச் செல்ல வேண்டும். மூன்று நாட்கள் தீட்டு அனுசரிக்கின்றனர். மறுபிறப்பு, ஆன்மா போன்ற நம்பிக்கைகள் இவர்களிடம் இல்லை.இத்தகு முறையினை கொண்ட இப்பழங்குடிகள் எவ்வாறு அவற்றை தமது வாய்மொழி வழக்காறுகளின் வழி வெளிப்படுத்துகின்றனர் என்பதைக் காணலாம்.

வாய்மொழிக் கதைகள்:
வாய்மொழிக் கதைகள் மக்களின் மரபார்ந்த அனுபவத்தின் வெளிப்பாடாகும். தங்களது வாழ்க்கை வரலாறுகளை மரபுசார்ந்து கட்டமைத்துக்கொண்ட நாட்டுப்புறக் கூறாக விளங்கும் வாய்மொழிக் கதைகள் நாட்டுப்புற மக்களின் உள்ளக்கிடக்கையை உணர்வுப் பூர்வமாக வெளிப்படுத்துவன. எழுத்து வழக்கற்று பேச்சு வழக்கை மட்டுமே கொண்டுள்ள இப்பழங்குடிகளது பண்பாட்டுக்கூறுகளை வாய்மொழி இலக்கியங்களே வெளிப்படுத்துவன.  கூடலூர் வட்டாரத்தில் காட்டுநாயக்கர் பழங்குடிமக்களிடையே வழங்கிவரும்  கதைகளையும் விடுகதைகளையும்  சேகரித்து  தரவுகளின் அடிப்படையில்   அவர்கள் கூறிய வாய்மொழித் தன்மைக்குட்பட்டே இங்கே  அக்கதைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கதை – 1 (மாரி தெய்வக் கதை)
“எங்கள் இனத்தில் யாராவது இறந்துவிட்டால் அவர்களைக் கொண்டு அடக்கம் செய்துவிட்டு வரும்வரை வீட்டில் உள்ள அனைவரும் கதவை அடைத்துவிட்டு அஞ்சு நடுங்கி இருப்பர். அதன்பிறகு அச்சத்தைப் போக்க அடக்கம் செய்துவிட்டு வீடு திரும்பியதும் நாங்கள் எங்கள் சாமியான மாரியிடம் நாங்கள் ‘சத்தம் ஏதும் போடக்கூடாது, கல்லெடுத்து எறியக்கூடாது, மண்ணெடுத்து வீசக்கூடாது, புள்ளங்க நடக்கும் இடம்’ என்று கூறியதும் அது எங்களின் வேண்டுதலுக்கேற்ப அச்சத்தைப்போக்கி எங்களை தைரியமாக்கும். என்றும்  “ஒருவருடத்திற்கு முன்பு ‘முக்கப்பாடி’ காட்டுநாயக்கர் குடியிருப்பில் திருமணம் நடைபெறவிருந்த காலைப்பொழுதில் மணப்பெண்ணுக்குக் காக்காய் வலிப்பு எற்பட்டது. திருமணத்திற்கு பல சமூகத்தவரும் வந்திருந்தனர். மணப்பெண் மயங்கி விழுந்தவுடன் அனைவரும் அச்சத்திற்குட்பட்டனர், பலர் மருத்துவமனைக்கு விரைவாகக் கொண்டுசெல்ல ஏற்பாடுகளைச் செய்தனர். அப்போது உடனே எங்கள் கோயில் ‘மூப்பன்’ எங்கள் மாரி தெய்வத்திடம் ‘அப்பெண்ணிற்கு இந்நிலை வந்திருக்கக் கூடாது. நிறையபேர் வந்திருக்காங்க, எங்கள பத்தி அவங்க என்ன நினைப்பாங்க’ என்றவுடன் தெய்வம் மூப்பன் மீது ஏறி ‘எங்க மக்களுக்கு நா எல்லா சுகமும் குடுத்தேனு சரியாயிடும் கவலபடாதே’ என்ற அருள்வாக்கு மொழிந்தவுடன் நுரையடங்கி நினைவுத் திரும்பி திருமணம் இனிதே நடைபெற்றது” என்கிறார் வெள்ளேரி  குட்டன். இது நிகழ்ந்த கதையாக இவர்களிடம் வழங்கப்படுவது. இதில் இவர்களின் தெய்வத்துடன் இவர்கள் நேரடியாக உரையாடும் போக்கினையும், கோயில் மூப்பனுக்கும் தெய்வத்திற்குமான உறவுநிலையினையும், அருளாடும் வழக்கினையும் வெளிப்படுத்துகின்றது. எனவேதான் மங்களமில்லாததாக இறப்புச் சடங்கினைக் கருதி துக்கத்தினை அனுசரிக்கும் இவர்கள் மூப்பனின் இறப்பினை மட்டும் கொண்டாட்ட நிகழ்வாக கருதி நிகழ்த்துகின்றனர்.

கதை – 2 அம்பலமூலா – வாலாட்டு விஷ்ணு கோயில்
அம்பலமூலா பக்கத்துல வாலாட்டுனு ஒரு இடம் அங்க ‘முதியன், முதுக்கி’ ரெண்டு பேரும் ரொம்ப வயசானவங்க. ஒரு கொட்டாய் போட்டு அங்க இருந்தாங்க. ராத்திரியான நல்ல தீ போட்டு இடது பக்கம் முதுக்கியும் வலது பக்கம் முதியனும் தூங்குவாங்க. இங்கேயே வீடு கட்லாம்னு அப்படியே இருந்தாங்க. ஒருநாள் தீ போட்டு நல்லா தூங்குறாங்க. முதுகுல கல்லு இரண்டுபேரையும் குத்தியிருக்கு. உடனே பயந்து எந்திரிச்சி, பார்த்திருக்காங்க. முதியனும் முதுக்கியும் படுத்த எடத்துல இரண்டு கல்லு முளைச்சிருக்கு. உடனே பயந்து நெல்லு எடுக்குற பெரிய கூடையெடுத்து அந்த கல்ல மூடி வைக்கிறாங்க. அவுங்க அஞ்சி அதை தெய்வம்னு நம்பி அதை கும்பிட ஆரம்பிச்சிருக்காங்க. நாயக்கமாரு எல்லாத்தையும் கூப்பிட்டு அந்த கல்லுக்கு பூச பண்ணியிருக்காங்க. அதுக்கு முன்னால அங்க கோயில் இல்லாததுனால அங்க இருந்த செட்டிமாருங்களும்  பூசை பண்ண வந்தாங்க. இந்த வாய்ப்ப பயன்படுத்தி அவுங்க கோயில் கட்டி, அத விஷ்ணு கோயிலா மாத்திட்டாங்க. இப்ப அது சுத்தி மதிலோட பெரிய கோயில நிக்குது. தினம் 10, 15 பூசை நடக்குது. என்றாலும், இன்னிக்கும் எங்களுக்குதான் முதலிடம் தராங்க. அதனாலதான் எங்களை  ‘முதலி’ ன்னு சொல்றாங்க அதை நாங்க தொடங்கிவைச்ச பிறகுதான் எல்லா பூசையும் நடக்கும்.என்று அவர்கள் கூறும்  வாய்மொழிகதையின் மூலமாக கூடலூர் பகுதியில் பிற சமூகத்தவர்வர்கள் வழிபடும்  பலகோவில்களுக்கு மூலமாக இருப்பது பழங்குடிகளது கோவில்களாகவே   உள்ளன.  இதனை உறுதிப்படுத்தும் விதமாக  விலங்கூர் பகுதியில் பன்நெடுங்காலமாக  காட்டு நாயக்கர் குடியிருப்பிலுள்ள மாரிக் கோயிலிலிருந்து மண்ணெடுத்து கொண்டுவந்தே நிலாக்கோட்டையில் மிகப்பெரிய மாரியம்மன் கோயிலைக் கட்டி இன்றளவும் அனைத்து சமூகத்தவரும் வழிபட்டு  மிகப்பெரும் திரு விழாக்களை கொண்டாடி வருகின்றனர் என  குள்ளி கூறும் கதை இவர்களது தெய்வத்தின் தோற்றத்தையும், அதன் ஆற்றலையும்,  மேனி லையாக்கத்தால்  இவர்களுற்ற ஆதிக்க சமூகத்தினரின் தாக்கத்தினையும் இக்கதைகள்  தெளிவுற  வெளிப்படுத்துகின்றது.

கதை – 3 முதியன் முதுக்கி கதை :
முதியன் முதுக்கி பெரிய காட்டுக்குள்ள போறாங்க.  சாப்பாட்ட தேடிப் போறாங்க. ரொம்ப நேரம் தேடியும் எதுவும் கிடைக்கல. அதுக்கு பிறகு நிறைய காட்டு கிழங்கு கிடைச்சுது. அதெல்லாத்தையும் தீ மூட்டி சுட்டு தின்னாங்கா. நிறைய கிழங்கு தின்னதுனால ரொம்ப தண்ணி தாகம். தேடித் தேடிப் பார்க்குறாங்க, எங்கேயும் தண்ணியக் காணோம். ரொம்ப தூரம் தேடிப்போனப்போது ஒருஏடத்துல சேர் மாதிரி இருந்திருக்கு. ஆஹா தண்ணி கிடைச்சிருச்சேன்னு ஆசையில அந்த எடத்துல குச்சியால குழி தோண்டி இருக்காங்க. குழி எடுத்து பார்த்தா அங்கேயும் தண்ணி வரல. ரொம்ப தாகத்தோடயும், கோபத்தோடயும் திரும்பவும் எங்கயாவது தண்ணி இருக்குமானு தேடிப்போயிருக்காங்க. அப்ப முதுக்கி ஓரு எடத்த பார்க்குறாங்க. அங்க பார்த்த ஒருபெரிய குளம். உடனே சந்தோசமாக தண்ணிய இரண்டு பேரும் தாகம் தீரக் குடிச்சிருக்காங்க. தாகம் தீரவும் தேடிவந்த களைப்பல அங்க கொஞ்ச நேரம் உட்;கார்ந்து இருக்காங்க. அதுக்கு அப்பற அந்த இரண்டு பேரையும் அங்க கண்ணால கூட காணமுடியாம மாயமா மறைஞ்சிட்டாங்க. அந்த இரண்டு பேரும் எங்களோட தெய்வமா அந்த காட்டுல இருக்காங்க. அவங்க ரெண்டுபேரும் தான் எங்கல காட்டுல எல்லா ஆபத்திலையும் இருந்து பாதுகாக்குறவங்க. எனவே அவங்கள நம்பித்தா நாங்க காட்டுக்குள்ளே போறோம். என்று பூசாரி வேலு கூறும் இக்கதையும் இவர்களது முதாதையர் வழிப்பாட்டினை வலியுறுத்துகின்றது. இன்றளவும் தம் முதாதையர்கள் தங்களை காத்துவருகின்றனர் என்று கருதும் போக்கினையும், தங்களின் முதன்மை தெய்வமாக முதாதையரை கருதும் நிலையினையும் இக்கதையின் வழி காணமுடிகிறது. இதன் வெளிப்பாடாகவே கூடலூர்ப் பகுதியில் வாழும் பிற பழங்குடிகளான குறும்பர்கள், பணியர்கள் ஆகியோர்களோடு எக்காரணத்தைக் கொண்டும மணஉறவுக் கொள்வதில்லை.

விடுகதைகள்
காட்டு நாயக்கர் பழங்குடிகள் விடுகதைகளை ‘ஒண்ட்டு’ எனவும் ‘ஒண்ட்டு கதெ’ எனவும் குறிப்பிடுகின்றனர். விடுகதை என்பது வாய்மொழி வழக்காறுகளுள் ஒன்றாகவும், தாம் காணும் பொருட்களையும் செயல்களையும் பிறர் சிந்தித்து அறியும் வண்ணம் உருவாக்கும் இலக்கிய வடிவமாகவும், அதனூடாக வெளிப்படும் அம்மக்களின் மொழியை நுட்பமாக கையாளும் திறனும் கொண்டதாக விளங்குகின்றன.

‘பட்டிக சுட்டாலெ கண்ணி பேகா’ எனும் விடுகதையில் கூடையை எரித்தால் அதனோடு இணைந்துள்ள கயிறு எரியாது எனக் குறிபிட்டு அதற்கு விடையாக ‘வழி’ என்பதைக் கூறுகின்றனர். அதேபோல ‘பானகது ஒந்து உண்டே’ எனும் விடுகதையில் பூமியின் மீது ஒரு உருண்டை எனக் கூறி இதன் விடையாக நெடிய மரங்களின் மீது கட்டியுள்ள மிகப்பெரிய ‘தேன்கூடு’ என விடை சொல்லுகின்றனர். இந்த இரண்டு விடுகதைகளும் இவர்களது வனம் சார்ந்த வாழ்வினையும், தேனோடு உள்ள பண்பாட்டு உறவினையும், தேனெடுப்பதே இவர்களது உலகம் என்பதையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. வனத்துறையும் கோடையில் காட்டுத்தீ பரவாமல் இருக்க இப்பழங்குடிகளைக் கொண்டே வனத்தைச் சுற்றி தீத்தடுப்புக் கோடுகள் அமைப்பதை இப்பழமொழியோடு இணைத்தெண்ணலாம்.

‘சின்ன சின்ன கொம்புலு சின்ன சின்ன முட்டா’ எனும் விடுகதையில் சிறிய கொம்பில் சிறிய முட்டை என்பதாகக் கூறி அதற்கு விடையாக ‘நெல்லிக்காயைக்’ குறிக்கின்றனர். அதேபோல ‘முள்ளெண்ட முருக்கில்லா பாலுண்டு பசுவில்லா’ எனக் கூறும் விடுகதையில் முள்ளிருக்கும் ஆனால் அது முள்முருங்கை மரமல்லா, பாலிருக்கும் ஆனால் அது தரும் பசுமாடல்லா எனக்கூறி விடையாக ‘பலாக்காயைக்’ குறிப்பிடுகின்றனர். காடுபடு பொருட்கள் சேகரிப்பதை அடிப்படையாகக் கொண்டுள்ள இப்பழங்குடிகளிடம் இத்தகைய விடுகதைகள் அவர்களது வாழ்வியலையே வெளிக்காட்டுகின்றது.

‘ஒந்து கூசு தலெ கெணத் துகிறாது’ எனும் விடுகதையில ஒரு குழந்தை தலைகீழாகத் தொங்குகிறது எனக்கூறி அதற்கு விடையாக ‘வாழைப்பூவைக்’ குறிப்பிடுகின்றனர். அதுபோலவே ‘ஒந்து அவ்வே ஹெத்தெ மக்கா தலெ எல்லா நர்த்துத்து’ எனக் கூறுகின்றனர். ஒரு தாயின் பிள்ளைகள் அனைவரின் தலையும் நரைத்துவிட்டது எனக்கூறி அதற்கு விடையாக ‘சோளம்’ என்று குறிப்பிடுகின்றனர். இவை இரண்டும் அவர்களின் வேளாண் சார்ந்த வாழ்வியலை வெளிப்படுத்துகின்றன. அது போன்று ‘பா எந்தல பந்தாது போ எந்தல ஹோதாது’ என்றால் வா என்றால் வரும், போ என்றால் போகும் என்பதாகக்கூறி விடையாக ‘கதவு’ என்பதைக் குறிக்கின்றனர். இது அவர்களது நாடோடித் தன்மையிலிருந்து வீடு அமைந்து வாழ்ந்ததைக் குறிப்பிடுகின்றது. இவர்களிடம் காணப்படும் பழமொழிகளான இவர்களது நாடோடி வாழ்வையும், அதற்காக மேற்கொண்ட உணவு சேரிப்பு முறைகளையும் தொடர்ந்து வீடமைத்து வாழ்ந்த நிலைத்த வாழ்வையும் வெளிப்படுத்துவதாக காணப்படுகின்றது.

முழுக்க தம் வாழ்வினை வனம்சார்ந்தாக கட்டமைத்துள்ள காட்டுநாயக்கர்களின் வாய்மொழி வழக்காறுகளும் வனத்தின் தாக்கத்தினை உட்செறித்ததாகவும், வனத்தோடு முழுவதுமாக அர்ப்பணமாகி வாழ்ந்துவருகின்ற இவர்களின் வாழ்முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும், அவர்களின் முன்னோர்களின் மரபுசார் வாய்மொழியியல் வழக்காறுகளின் எச்சமாகவும், பிற சமூகங்கள் கொண்டுள்ள மேனிலையாக்கத்தின் அடிப்படையான காரணங்களை கண்டறியும் விதமாகவும் திகழ்கின்றன.

பார்வை நூல்கள்
1. தென்னிந்திய குலங்களும் குடிகளும், எட்கர் தர்ஸ்டன்
2 . தமிழக பழங்குடிகள்,  சீ.பக்தவத்சலபாரதி
3 . கூடலூர் வட்டாரப் பழங்குடி மக்களின் வழக்குத்தமிழ் (முனைவர் பட்ட ஆய்வேடு)        செ.துரைமுருகன்
4. Kattunayakkans of Nilgiri district , Jakka Paarthasaarati.
5. Blue mountains, Paul Hockings.

* கட்டுரையாளர்: - முனைவர் செ.துரைமுருகன் , உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,  குமரகுரு பன்முகக் கலையறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு  -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R