ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


பண்பாடு என்பது மாந்தர்களுடன் தொடர்புடைய ஒரு சொல்லாகும். இச்சொல் ஆங்கிலத்தில் CULTURE என்னும் சொல்லுக்கு இணையானப் பொருளில் தமிழில் பயன்படுத்தப்படுகின்றது. பண்பாடு பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும், அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத்தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது. மேலும், அது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், வாழ்வின் வழிமுறைகள், சமூகக் கட்டமைப்புகள் என்பனவற்றைச் சுட்டி நிற்கிறது. மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில்கள், கருவிகள் போன்றவையும் இப்பண்பாட்டில் அடங்கும்.

பண்பாடு – பொருள் விளக்கம்
பண்பாடு என்பது மக்களால் ஆக்கப்பெற்ற கருவி. அந்த ஊடகத்தைக் கொண்டே மக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றனர். மக்கள் தலைமுறை தலைமுறையாக குழுவாகச் சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும், பழக்கங்களும், மரபுகளும் சேர்ந்த தொகுதியே பண்பாடு ஆகும்.

'பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்க நெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும் மனிதன் சமுதாயத்தில் ஓர் உறுப்பினராக இருந்து கற்கும் பிற திறமைகளும், பழக்கங்களும் அடங்கிய முழுமைத் தொகுதியாகும்.'1
என்று அறிஞர்களால் விளக்கம் தரப்பட்டுள்ளது.

பண்பாட்டு மாற்றம்
ஒரு குறிப்பிட்ட இனத்தில் வழங்கி வந்த பண்பாடு காலப்போக்கில் மாற்றம் பெற்றுவிடுகின்றது. இத்தகையப் பண்பாட்டு மாற்றம் என்பது குறிப்பிட்ட பண்பாட்டில் மட்டுமல்லாது பெறுகின்ற பொழுது அந்நியப் பண்பாட்டின் கூறுகளை மற்றொரு பண்பாடு ஏற்றுக்கொள்கிறது.

'பண்பாடு மாற்றமென்பது தனியோரு செயலோடு மட்டும் தொடர்புடையது அல்ல. பல செயல்களின் மொத்த தொகுதியாகும். இந்த நிகழ்வின் ஒரு பண்பாட்டின் கூறுகள் அயல் பண்பாட்டுக் கூறுகளால் மாற்றப்படுகின்றன அகற்றப்படுகின்றன. இதனால் பண்பாட்டில் ஏற்படும் மாற்றத்தின் தொடக்கம் நிலையான இயக்கத்தைப் பெற்றுத்  தொடர்ச்சியாக வழிக்கோலுகிறது.'2

இவ்வாறு பண்பாட்டு மாற்றமானது அந்தந்தப் பண்பாட்டில் நிலைத்து இயங்கக் கூடியதாகவும், பிற பண்பாட்டுத்தாக்கத்தினால் மீள முடியாமலும் செயல்படுகின்றது.

பண்பாட்டு அதிர்வு
பண்பாட்டு மாற்றம், பண்பாட்டு அதிர்வு இவை இரண்டிற்கு இடையே மிகுதியான வேறுபாடுகள் உள்ளன. பண்பாடு மாற்றத்தில் ஒரு சமூகமானது விரும்பியோ அல்லது விரும்பாமலோ பிறிதொரு சமூக பண்பாடுகளை ஏற்றுக் கொள்கிறது. ஆனால், பண்பாட்டு அதிர்வு என்பது நிர்பந்த வசத்தால் ஒரு சமூகமானது முற்றிலும் மாறுபட்ட அயலகச்சூழல் சார்ந்த பண்பாட்டினை ஏற்றுக்கொள்ளும் நிலையாகும்.

பண்பாட்டு அதிர்வு என்பது முற்றிலும் புதிய அறிமுகமில்லாத பண்பாட்டுச் சூழலுக்குள் தள்ளப்படும் மனிதன் அல்லது குழுவின் மனநிலையினை குறிக்கும். பெரும்பாலும் இடப்பெயர்வு, காலணியநிலை, எதிர்பாராத சமூக, அரசியல் நடவடிக்கைகளால் இப்பண்பாட்டு அதிர்வுகள் ஏற்படுகின்றது. ஒவ்வொரு சமூகமும் தங்களது பண்பாடானது பிற சமூகப் பண்பாட்டை விட உயர்ந்தது என்ற மனநிலையிலேயே இயங்கிக் கொண்டிருக்கும். அவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கும் தனிநபரோ அல்லது குழுவோ புதிய பண்பாட்டுச் சூழலைக் காணும் பொழுது உடனடியாக எல்லாமே மாறுபட்டதாக உள்ளதோடு இதுவரைக் காணாத உணராத பண்பாட்டுச் சூழலுடன் வினைபுரிய வேண்டிய நெருக்கடி ஏற்படுகின்றது.

ஆசிரியர் அ.முத்துலிங்கம் வடக்குவீதி சிறுகதைத்தொகுப்பிற்கு அளித்துள்ள முன்னுரையில் அயலகப் பண்பாடுகள் குறித்து விவரிக்கின்றார். அயலகங்களில் மரியாதை செய்யும் பண்பாடு பற்றி குறிப்பிடுகையில், 'அமெரிக்கக்காரனுக்கு எழுந்து மரியாதை செய்து சேர் என்று அழைத்தால் பிடிப்பதில்லை. ஆங்கிலேயனுக்கு கால்களை ஒடுக்கிவைத்து மரியாதை முன்னே தலைகுனிந்து நிற்பது அசிங்கமாகப் படுகிறது. ஜெர்மன்காரனுக்கு கைகட்டி பவ்யமாக நின்றால் போதும், வேறு விளையே வேண்டாம். ஆனால் எங்கள் ஊர்களில் இன்றுகூட ஒரு பெரியவரைக் கண்டதும் தோளில் போட்ட சால்வையை எடுத்து கக்கத்தில் வைப்பது நடந்துகொண்டு தான் வருகிறது.'3 இவ்வாறு பல நாடுகளில் மரியாதை செய்யும் பண்பாடு மாறுபாடு மிகுந்ததாக காணப்படுவதை ஆசிரியர் விவரிக்கின்றார்.

அமெரிக்க பண்பாடு குறித்து கூறும் ஆசிரியர், 'அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் பதினாறு வயதுக்கு மேல் கன்னித் தன்மையோடு ஒரு பெண் இருந்துவிட்டால் அவளுக்கு எவ்வளவு அவமானம். அவள் பொய்யுக்காவது கன்னி கழிந்துவிட்டது என்று சொல்லவேண்டிய நிர்பந்தம்.'4 இவ்வாறு அமெரிக்க பெண்களின் பண்பாட்டு நிலைக்குறித்து விவரிக்கின்றார். வையன்னா கானா என்னும் சிறுகதையில் ஆப்பிரிக்கா பண்பாடு குறித்து, 'ஆப்பிரிக்காவில் எல்லாம் காலில் விழும் பழக்கம் கிடையாது. கிறிஸ்தவர்கள் கணிசமாக இருக்கும் நாடு என்ற படியால் முழங்காலில் இருந்து பழக்கம் புழக்கத்தில் இருந்தது.'5 இவ்வாறு ஆசிரியர் விவரிக்கின்றார்.

அ.முத்துலிங்கம்குதம்பேயின் தந்தம் என்னும் சிறுகதையில் ஆப்பிரிக்காவில் காடுகள் வெட்டும் பகுதிக்கு ஆலோசகராக ஆசிரியர் பணிபுரிகின்றார். அங்கு, உயர் ஆதிகாரி கொடுத்த விருந்திற்கு மனைவியை ஆசிரியர் அழைத்துச் செல்கின்றார். அத்தருணத்தில் உயர் அதிகாரியின் மனைவி ஆசிரியரின் மனைவியின் முகத்தில் இருக்கும் பொட்டினை பார்த்து, இது எந்த இனத்தைக் குறிக்கிறது என்று கேட்கிறாள். ஆசிரியருக்கும் அவருடைய மனைவிக்கும்  போகப் போகத்தான் அவர்களின் பண்பாட்டினை புரிந்துகொண்டார்கள்.

'அங்கே குழந்தைகள் பிறந்தவுடனேயே அந்த அந்த இனம்  தங்கள் சின்னத்தை குழந்தையின் முகத்திலேயும், மார்பிலேயும் பொறித்து விடுவார்கள். ஒரு கூரிய கண்ணாடித்துண்டினால் இப்படிக் கீறிக்கொள்வார்கள். இந்த வடு இறக்கும் வரை அழியாது. இதன்படி ஒரு இனத்தவர் தங்கள் இனத்தாரை உடனே அடையாளம் கண்டு கொள்வார்கள.;'6 உடலில் உருவாக்கும் புற அடையாளங்கள் தங்களுடைய இன மக்களை இனங்காணுவதற்கு முன்னோர்களால் உருவாக்கப்பட்ட வழிமுறைகளாக ஆப்ரிக்கா மக்கள் எண்ணுவதை இக்கதையின் வாயிலாக அறிகின்றோம். குதம்பேயின் தந்தம் சிறுகதையில் இடுப்பு தெரிய சேலைக்கட்டுவது பண்பாட்டுக்கு மீறிய செயலாக ஆப்பிரிக்காவில் பின்பற்றப்படுவதை பதிவுச்செய்கின்றது. 'அவள் என் மனைவியின் சேலையைத் தொட்டு தொட்டுப் பார்த்தாள்; பிறகு தடவிப் பார்த்தாள். அவளுக்கு அதில் அப்படி ஒரு மோகம் தனக்க வெகு காலமாகவே சேலை உடுக்க ஆசையென்று சொன்னாள். அதற்கு மனைவி, அதற்கென்ன நான் கட்டி விடுகிறேனே! இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே? என்று சொன்னாள். ஆனால் அந்த இளம் பெண் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு கூறினாள்; இது எங்கள் வீட்டில் நடக்காத காரியம். எனக்கு எவ்வளவோ விருப்பம் தான்; ஆனால் அசிங்கம் என்று வீட்டிலே தடை போட்டு விடுவார்கள். என் மனைவி ஆடிவிட்டாள். என்ன, அசிங்கமா? சேலையா? என்று கேட்டாள். அதற்கு அந்த நங்கை கண்களை அகலவிரித்து, முக்கால் வாசி மார்புகளைக் காட்டிய படியே, சொல்கிறாள்; ஆமாம்; இடையைக் காட்டி சேலை உடுப்பதை எங்கள் வீட்டில் செக்ஸியாகக் கருதுகிறார்கள். இது நடக்காத காரியம். என் மனைவி திகைத்து விட்டாள். இந்தக் கதையை பின்னர் அவள் என்னிடம் விபரித்த போது நானும் தான் அதிர்ந்து விட்டேன்.'7 தமிழ் மக்களால் பண்பாட்டுடன் கூடிய குடும்ப பாங்கான உடையாகக் கருதப்படும் சேலையானது, ஆப்பிரிக்காவில் காமம் சார்ந்த உடையாக பார்க்கப்படும் விதத்தை ஆசிரியர் இக்கதையில் வெளிப்படுத்துகின்றார். அ.முத்துலிங்கம் வடக்குவீதி என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு அளித்துள்ள முன்னுரையிலும் தமிழர் பண்பாட்டினை பார்க்கும்  ஆப்பிரிக்கரின் பார்வையை விவரிக்கின்றார், இதனை, 'மேற்கு ஆப்பிரிக்காவில் நான் இருந்த சமயம். ஒரு நாள் தமிழ் சினிமாப்படம் ஒன்றை வீடியோவில் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஆப்பிரிக்கர் ஒருத்தர் உள்ளே வந்தார். நன்றாகப் படித்து உயர் பதவியில் இருப்பவர். வீடியோவில் கல்யாண சீன் ஒன்று நடந்துகொண்டிருந்தது. மணப்பெண் வழக்கம்போல ஒரு காலை மடித்து வைத்து மற்றக் காலை குத்துக்காலிட்டு நிலம் பார்த்து உட்கார்ந்திருந்தாள். இந்த மனுசன் கண் வெட்டாமல் இந்தக் காட்சியை பார்த்துவிட்டு சொல்கிறான், இந்தப் பெண் இருக்கும் முறை எவ்வளவு செக்ஸியாக இருக்கிறது என்று. எனக்கு அதிர்ச்சி, அகராதிப்படி அந்தப் பெண் மிகவும் நாணமாக, ஒடுக்கமாக, பவ்யமாக அல்லவா இருந்தாள். இன்னும் எத்தனையோ, நாங்கள் மதித்துப் போற்றும் சில விஷயங்கள் பிற நாட்டவருக்கு விநோதமாகப் படுகின்றது.'8 இவ்வாறு விவரிக்கின்றார். தமிழர்களின் பண்பாடு சார்ந்த உடையானது அயல்நாடுகளில் கவர்ச்சி தன்மை மிக்கதாக பார்க்கப்படுவதை ஆசிரியரின் கூற்று உணர்த்துகின்றது.

குதம்பேயின் தந்தம் என்னும் சிறுகதையில் ஆப்பிரிக்க பண்பாடு விவரிக்கப்படுகின்றது. அவர்களின் பண்பாட்டில் முருங்கைக்காயை தொடாது இருக்கும் நிலையினை, 'அன்று முருங்கைக்காயுடன் நல்ல சாப்பாடு. ஆப்பிரிக்காவில் முருங்கைக்காய் என்ன சும்மா கிடைத்து விடுமா? நாலு மைல் தூரம் காட்டிலே போய் அல்லது தேடி ஆய வேண்டும். இதை 'பேய்க்காய் என்று தான் அங்கே சொல்லுவார்கள்; தொடவே மாட்டார்கள். இப்படி அருமையாகக் கிடைக்கும் காய்க்கு ருசியே தனி. அது மாத்திரமல்ல, என் மனமும் அன்று வெகு சந்தோஷமாக இருந்தது.'9 இவ்வாறு விவரிக்கின்றார். பலநாடுகளில் உணவுப்பொருளாக உள்ள முருங்கைக்காய் ஆப்பிரிக்காவில் பேய்க்காய் என்று தொடாது இருக்கும் நிலையினை  இக்கதை பதிவுச்செய்கின்றது. ஆப்பிரிக்கா பழங்குடிமக்களில் ஆண் பல பெண்களை திருமணம் செய்துக்கொள்ளும் முறை உள்ளதை இக்கதையில் ஆசிரியர் வெளிப்படுத்துகின்றார். 'இன்றைக்கு எங்கள் குடிகள் தலைவர் மூன்றாவது மனைவியையும் எடுத்திருக்கிறார்; பதினெட்டு வயதுப் பெண். அவளுடைய நடனத்தைப் பார்க்க ஊர் முழுக்க அங்கே கூடிவிடும்'10 பழங்குடித்தலைவர் மணந்துகொள்ளும் மணப்பெண் ஊரார் முன்னிலையில் நடனம் ஆடுவாள் என்ற செய்தியையும் அறிகிறோம். ஆப்பிரிக்காவில் பெண்களை சீர் கொடுத்து மணக்கும் பழக்கம் உள்ளதை ஆசிரியர் குதம்பேயின் தந்தம் சிறுகதையில் தெரிவுப்படுத்துகின்றார். மேலும், 'குடிகள் தலைவருக்க இப்ப வயது 65 ஆகிறது. இது மூன்றாவது மனைவி; கொஞ்சம் குமரி அவள். 40 ஆடுகளும், 8 மாடுகளும் கொடுத்து அவளை வாங்கினாராம். இப்படியான மயக்கும் அழகி அவருக்கு மிகவும் மலிவாகவே கிடைத்துவிட்டதாக குதம்பே அபிப்பிராயப்பட்டான்.'11 ஆப்பிரிக்க பழங்குடிமக்களின் திருமண முறைகள் குறித்தும் குதேம்பேயின் தந்தம் விவரிப்பதை அறிகின்றோம்.

துரி என்னும் சிறுகதை அமெரிக்காவைக் கதைக்களமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க பண்பாடாக, 'எங்களைப்போல இன்னும் பல பெற்றோரும் அமெரிக்காவின் பலபகுதிகளிலும் இருந்து அங்கே வந்திருந்தனர். பதினேழு வயது தாண்டிய பிள்ளைகளை இப்படி பெற்றோர் கூட்டிவந்து கல்லூரிகளில் சேர்ப்பது இங்கே ஒரு சடங்கு. பிள்ளைகளுடன் பெற்றோருடைய உறவுகள் துண்டிக்கப்படும் முக்கியமான நாள் இது. இதன் பிறகு பெற்றோர் வேறு, பிள்ளைகள் வேறு என்று தங்கள் பாதையில் பிரிந்து சென்று விடுவார்கள்'12 பிள்ளைகளை கல்லூரிகளில் பெற்றோர்கள் இணைந்து வந்து சேர்க்கும் நிலை, பிள்ளைகள் தங்கள் தனித்து செயல்பட வேண்டிய கட்டாயம் ஆகியவை குறித்து ஆசிரியர் விவரிக்கின்றார்.

கிரகணம் எனும் சிறுகதையானது பாக்கிஸ்தானை கதைக்களமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. இக்கதை பஸ்மினா என்னும் சிறுமியை மையப்பாத்திரமாகக் கொண்டுப்படைக்கப்பட்டுள்ளது. பஸ்மினாவின் தந்தை ரத்தப்பகை முன்விரோதத்தின் காரணமாக கொலைச்செய்யப்பட்டார். இதனைப் பண்பாடு ரீதியாக பாக்கிஸ்தானியர் பார்க்கும் நிலையினை, 'இரண்டு நாட்களாக போலீஸ் வந்து விசாரணை எல்லாம் நடந்தது. மூன்று தலைமுறையாக இப்ராஹிம் குடும்பத்திற்கும், இன்னொரு குடும்பத்திற்கும் இடையில் தொடரும் இரத்தப்பகைதான் இதற்கு காரணம். சாப்பிட வழியில்லை ஆனால் கொலை செய்வதற்க மாத்திரம் தயங்கமாட்டார்கள். கொலை செய்த குடும்பம் பிராய்ச்சித்தமாக இரத்தக் காசு  கொடுத்தாலொழிய இந்தச் சண்டை தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்பா இதை எங்களுக்கு அப்போது விளக்கியது ஞாபகம் இருக்கிறது.'13 இரத்தக்காசு என்பது கொலையுண்ட நபரின் குடும்பத்திற்கு கொலை செய்த குடும்பம் கொடுக்க வேண்டிய பணமாகும். பஸ்மினாவை தத்து எடுக்க ஆசிரியர் முடிவு செய்தார். எனினும் பாக்கிஸ்தானில் தத்து எடுப்பதில் உள்ள சிக்கல்களாக, 'பாகிஸ்தானில் ஓர் இளம் முஸ்லிம் பெண்ணை தத்து எடுப்பதென்றால் அது அப்படி ஒன்றும் லேசான காரியமல்ல. எத்தனையோ பேரைப் போய் பார்க்க வேண்டும்; பேப்பருக்கு மேல் பேப்பராக நிரப்பிக் கொடுக்க வேண்டும் கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதி நினைவூட்ட வேண்டும்'14.  ஆசிரியர் குறிப்பிடுகின்றார். பாக்கிஸ்தானில் பண்பாடு மிகவும் கடுமையானதாக பின்பற்றப்படுகின்றது. கிரகணம் சிறுகதையில் பாக்கிஸ்தானிய மக்களின் வாழ்வியல் நிலை விவரிக்கப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானின் பண்பாட்டு நிலையினை ஆசிரியர் வடக்கு வீதி சிறுகதை தொகுப்பின் முன்னுரையில் விவரிக்கின்றார். 'எங்கள் ஊரில் எப்படி உடும்பு பிடிப்பார்கள் என்றும், அதை உயிருடன் கட்டி தொங்கவிட்டு, தோலை உரித்து என்னமாதிரி சமைப்பார்கள் என்பதையும் விவரித்தேன். அவர்கள் ஸ்தம்பித்து போய்விட்டார்கள். பத்து அவ்கானி காசு கடனுக்காக துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல தயங்காதவர்கள், கல்நெஞ்சக்காரர்கள். இவர்கள் தங்கள் வாழ்நாளில் பார்த்திராத ஒரு உடும்புக்காக இரக்கப்பட்டார்கள். என்னால் நம்ப முடியவில்லை.'15 பணத்திற்காக கொலை செய்யக்கூடிய பண்பாட்டு நிலையினை உடையவர்கள் ஆப்கானிஸ்தானியர் என்பதனை ஆசிரியரின் கூற்றிலிருந்து உணரலாம்.  அயல்நாடுகளில் வழங்கப்படும் தண்டனைகள் காலம் காலமாக எவ்வித மாறுதலும் இன்றி பழம் பண்பாட்டு நிலைச்சார்ந்து வழங்கப்படுவதை, 'சிலுவையில் அறைவதும், கழுவில் ஏற்றுவதும் கூட இப்படித்தான். பயங்கரமான சாவு. உயிர் உடனே போகாது குற்றவாளி நோவு தாங்காமல் இரவிரவாக அலறிக்கொண்டே இருப்பானாம். இரண்டு மூன்று நாள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிரியும். இப்படி கொடூரமான தண்டனைகள் இப்பவும் சில நாடுகளில் தொடருகிறது. பிரம்படி கொடுப்பதும், தலையை துண்டிப்பதும், கல்லால் அடிப்பதும் இன்றும் சில நாடுகளில் கடைப்பிடிக்கும் தண்டனைகள்தான்.'16 அ.முத்துலிங்கம் தமது வடக்கு வீதி சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் பதிவுச்செய்கின்றார்.

குங்கிலியக்கலய நாயனார் சிறுகதையில் ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய பண்பாடு குறித்து, 'மாவீரன் அலெக்சாந்தர் அழகி ருக்ஷானாவின் சௌந்தர்யத்தில் மனதைப் பறி கொடுத்தது இங்கே தான். ஆஹா! இந்தப் பெண்கள் தான் என்ன அழகு! அவர்கள் கண்கள் பச்சை நிறத்தில் ஆளை மயக்கும். கூந்தலோ கருமையிலும் கருமை. பெண் குழந்தைகளைத் தான் பார்க்க முடியும்; வளர்ந்து விட்டாலோ பர்தாவில் புகுந்து விடுவார்களோ?'17 இவ்வாறு விவரிக்கின்றார். பெண்கள் முகத்தையும் உடலையும் பர்தா அணிந்து வெளியுலக ஆடவர்கள் எவரும் காணாதபடி இஸ்லாமிய பண்பாட்டுடன் வாழ்க்கை வாழ்பவர்கள் என்பதை ஆசிரியர் பதிவுச்செய்கின்றார். குனிந்த தலை நிமிராது நிலத்தைப் பார்த்து நடப்பது தமிழ் பெண்களின் பண்பாடு. இப்பண்பாட்டினை மாற்றிக்கொள்ள இயலாத அமெரிக்காவில் வசிக்கும் இலங்கைப்பெண்ணின்  நிலையினை, 'முதலில் வந்தவன் கேட்ட முதல் கேள்வியை நினைத்து அவள் இன்றைக்கும் ஆச்சரியப்படுவாள். யாரோ தேசியகீதம் இசைப்பதுபோல நீ எதற்காக எப்போதும் தலைகுனிந்து நிற்கிறாய்? அவள் எப்படி பதில் சொல்வாள்? 17 வருடங்கள் அவள் அப்படித்தான் நிலத்தைப் பார்த்தபடி பள்ளிக்கூடத்துக்கு போனாள், வந்தாள். அதை திடீரென்று அவளால் மாற்ற முடியவில்லை'18
அமெரிக்ககாரி என்னும் சிறுகதையில் ஆசிரியர் இவ்வாறு பதிவுச் செய்கின்றார்.

இலங்கையிலிருந்து கல்வி கற்க அமெரிக்காவிற்கு வந்த பெண்ணின் வாழ்க்கை நிலையினை, 'நீ உங்கள் நாட்டு இளவரசியா? என்றான். 'இல்லை. அங்கேயிருந்து துரத்தப்பட்டவள். இனிமேல்தான் நான் ஒரு நாட்டை தேடவேண்டும் என்றாள். 'நீ அரசகுமாரி மாதிரி அழகாக இருக்கிறாய் என்று சொன்னான் அந்த அவசரக்காரன். அன்றிரவே அவள் அறையில் தங்கமுடியுமா என்று கேட்டான். அதற்கு பிறகு அவனும் மறைந்துபோனான். இவர்கள் அவளிடம் எதையோ தேடினார்கள். அவள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இன்னும் இலங்கைக்காரியாகவே இருந்தாள்'19 இவ்வாறு வெளிப்படுத்துகின்றார். நாடு மாறினாலும் பண்பாட்டு நிலையில் எவ்வித மாற்றமும் அடையாத இலங்கைப் பெண்ணின் நிலையினை இக்கதையில் ஆசிரியர் விவரிக்கின்றார்.

அமெரிக்ககாரி என்னும் சிறுகதையில் மதி என்கின்ற இலங்கைப் பெண் தமிழ் பண்பாட்டு நிலையினை கடந்து செயல் படாத நிலையினை, 'கறுப்பு எறும்புகள் நிரையாக வருவதுபோல பையன்கள் அவளை நோக்கி வந்தார்கள். அவளுடைய கரிய கூந்தலும், கறுத்து சுழலும் விழிகளும் அவர்களை இழுத்தன. ஆனால் வந்த வேகத்திலேயே அவர்கள் திரும்பினார்கள், அல்லது அவளை விட்டுவிட்டு வேறு பெண்களிடம் ஓடினார்கள். முதலில் வந்தவன் கேட்ட முதல் கேள்வியை நினைத்து அவள் இன்றைக்கும் ஆச்சரியப்படுவாள். யாரோ தேசியகீதம் இசைப்பதுபோல நீ எதற்காக எப்போதும் தலைகுனிந்து நிற்கிறாய்?  அவள் எப்படி பதில் சொல்வாள்? 17 வருடங்கள் அவள் அப்படித்தான் நிலத்தைப் பார்த்தபடி பள்ளிக்கூடத்துக்கு போனாள், வந்தாள். அதை திடீரென்று அவளால் மாற்ற முடியவில்லை.'20 தமிழர் பண்பாட்டில் நாணத்தினால் பெண் நிலம் பார்த்து இருப்பவளாகவே படைக்கப்பட்டுள்ளாள். புலம்பெயர்ந்த நாட்டிலும் பெண் தலைகுனிந்தே பெரும்பாலும் நிற்கிறாள், நடக்கிறாள், பேசுகின்றாள். ஆகவே, நாடு மாறினாலும் பண்பாட்டினை இழக்காத தமிழ் பெண்ணின் நிலையினை இக்கதை பதிவுச்செய்கின்றது. மேலும், 'இலங்கையிலிருந்து வந்து படிக்கும் மாணவி அவள் ஒருத்திதான். பாரம்பரிய நடனம்என்று தன் பெயரைக் கொடுத்தாள். அவளிடம் ஒரு சேலை இல்லை, நல்ல நடன ஆடைகூடக் கிடையாது. ஒரு பஞ்சாபிப் பெண்ணின் உடையை கடன் வாங்கி இயன்றளவு ஒப்பனை செய்து தயாரானாள். அவள் பள்ளிக்கூடத்தில் ஆடிய என்ன தவம் செய்தனை பாடலுக்கு அபிநயம் பிடிப்பது என்று தீர்மானித்தாள். பாடலை முதலில் பாடி நாடாவில் பதிவு செய்து வைத்துக்கொண்டாள். மேடையிலே நின்றதும் திரை இரண்டு பாதியாக பிளந்து நகர்ந்தது. மெல்லிய நடுக்கம் பிடித்தாலும் துணிச்சலுடன் பாடலை விளக்கி இரண்டு வரிகள் பேசிவிட்டு ஆடினாள். மாணவர்கள் எதிர்பாராத விதத்தில் கைதட்டி வரவேற்றார்கள்.'21 தமது பண்பாட்டினை அயலகங்களில் தமிழர்கள் காக்கும் நிலை, அயலகப்பண்பாடுகளுக்கு பிற நாட்டினை மதிப்பளிக்கும் நிலை ஆகியவை இக்கதையில் மதி என்னும் பாத்திரத்தின் வாயிலாக பதிவுச்செய்யப்படுகின்றன. மேலும், 'ஒரு வியட்நாமிய மாணவன் கம்பி வாத்தியத்தை இசைத்தபடி பாடினான். இவள் ஒப்பனையை கலைத்துவிட்டு வெளியே வந்தபோது அந்த வியட்நாமிய மாணவன் இவளுடைய நடனத்தை வெகுவாகப் பாராட்டினான். இவளும் பேச்சுக்கு அவனுடைய வாத்தியம் அபூர்வமானதாக இருந்தது என்றாள். அவன்  16 கம்பிகள் கொண்ட அந்த பெண்கள் வாத்தியத்தை தன்னுடைய இறந்துபோன வியட்நாமிய அம்மாவிடம் கற்றுக்கொண்டதாகக் கூறினான். எப்போதாவது அவள் ஞாபகமாக தான் அதை வாசிப்பதாகச் சொன்னான். ஆயிரம் கண்ணாடிகள் வைத்து இழைத்த நீண்ட உடை தரித்து, தலையிலே வட்டமான தொப்பி அணிந்த அவனை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது.'22 அயலகங்களுக்கு புலம்பெயர்ந்தவர்கள் தங்களுடைய பாரம்பரிய பண்பாட்டினை மொழி, நடனம், உடை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின வாயிலாக காக்கும் திறத்தினை அமெரிக்ககாரி என்னும் இச்சிறுகதை பதிவுச்செய்கின்றது. மேலும், வியட்நாம் நாட்டின் பண்பாட்டு நிலையினை, 'வியட்நாமியருக்கு சந்திரன் பவித்திரமானது. அவர்கள் விழாக்களில் சந்திரனுக்கு முக்கிய பங்கு உண்டு என்றவன் தொடர்ந்து நேற்று உங்கள் நடனம் மிக அழகாக இருந்தது. வியட்நாமிய நடன அசைவுகளுடன் ஒத்துப்போனது  என்றான்.'23 இவ்வாறு விவரிக்கின்றது. வியட்நாம் மக்கள் சந்திரனை தெய்வமாக வழிபடுபவர்கள் என்பதை இக்கதையின் வாயிலாக அறியலாம், மேலும், 'மதியின் தாய் அனுப்பிய தாலியை சங்கிலியில் கோத்து அவளுடைய கழுத்தில் அவன் கட்டினான். வியட்நாமிய சடங்கு இல்லையா? என்றாள் அவள். முழுச்சந்திரன் வெளிப்பட்ட ஓர் இரவில் சந்திரனில் தோன்றிய கிழவனை சாட்சியாக வைத்துக்கொண்டு அவன் இஞ்சியை உப்பிலே தோய்த்து கடித்து சாப்பிட்டான். மீதியை அவள் கடித்து சாப்பிட்டாள். அத்துடன் அவர்களுடைய திருமண வாழ்க்கை சந்திரக் கிழவனின் ஆசியுடன் சிறப்பாகத் தொடங்கியது.'24 அயலகங்களில் தங்களுடைய பண்பாட்டின் படி புலம்பெயர்ந்தவர்கள் திருமணம் செய்துக்கொள்ளும் நிலையினை தமிழ், வியட்நாம் பண்பாட்டின் படி மதி என்னும் பாத்திரத்திற்கு திருமணம் நிகழ்வதை ஆசிரியர் இக்கதையில் பதிவுச்செய்கிறார்.

அமெரிக்காவில் வாழும் நடாஷா என்னும் உக்ரெய்ன் நாட்டுப் பெண் தன்னுடைய நாட்டின் பண்பாட்டினை அயலகத்தில் வெளிப்படுத்தும் நிலையினை, 'எங்கள் நாட்டு வழக்கப்படி நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஒரு ரகஸ்யத்தை பரிமாறிக்கொள்ளவேண்டும். அந்த ரகஸ்யம் எங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்தது. அப்பொழுதுதான் அதன் பவித்திரத் தன்மை கெடாது. சிலபேர் தங்கள் மார்புகளிலும், கைகளிலும் காதலை பச்சை குத்திக் கொள்வதுபோல நாங்கள் ரகஸ்யத்தை பரிமாறி அதை உறுதி செய்கிறோம் என்றாள்.'25 ஆசிரியர் இவ்வாறு விவரிக்கின்றார். உக்ரெய்ன் நாட்டில் இரகசியங்களை பரிமாறிக் கொள்வதை பண்பாடாக கொண்டுள்ள நிலையினை இச்சிறுகதையின் வாயிலாக அறிகின்றோம்.
காபூல் திராட்சை என்னும் சிறுகதையில் ஆசிரியர் காபூல் பெண்களின் பண்பாடு குறித்து, 'பெண்கள் உரிமைக்காகப் பாடுபடும் அமெரிக்கப் பெண்மணி ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலுக்கு பயணம் செய்தார். அங்கே ஆண்கள் முன்னே நடக்க, பர்தா அணிந்த பெண்மணிகள் பின்னே ஆறு அடி தூரத்தில் தொடர்வதைக் கண்டார். 'சீ, இது என்ன அடிமைத்தனம்' என்று மனம் நொந்துபோய் திரும்பிவிட்டார்.'26 காபூல் நாட்டில் பெண் அடிமைத்தனத்தின் உச்சநிலை குறித்தும், ஆண்களுக்கு பெண்கள் அடிமைகளாகவே திகழ வேண்டும் எனும் கருத்தினை இச்சிறுகதை வெளிப்படுத்துவதை  பதிவுச்செய்கின்றார். மேலும், காபூலில் பெண்கள் பர்தா அணியும் நிலை, ஆண்களுக்கு சமமாக பெண்கள் நடத்தப்படாத நிலை ஆகியவற்றை அறிகிறோம்.

கொம்புளானா என்னும் சிறுகதையில் கனடா நாட்டிலும் தமிழ் பண்பாட்டினை கடைப்பிடிக்க முயலும் தமிழர்களின் நிலையினை பத்மாவதியின் பாத்திரத்தின் வாயிலாக வெளிப்படுத்துகின்றார். 'பத்மாவதிக்குக் கணவன் சொல்வது வேத மந்திரம். அவருடைய இரண்டு மந்திர வார்த்தை  'பாரம்பரியம்', 'காலாச்சாரம்'  என்பவைதான். அகதியாக கனடாவுக்கு தஞ்சம் கேட்டு வந்த பிறகு இந்த மந்திரச் சொற்களுக்கு வேகம் கூடியது. அதுதான் பத்மாவதி சனிக்கிழமை கால நேரங்களில் சாந்தனுக்குத் தமிழ் சொல்லித் தரவேண்டும் என்ற ஏற்பாடு. ஒரு வருடப் பயிற்சியில் அவன் எழுத்துக்கூட்டி வாசிப்பான். ஆனால் இந்த கொம்புளானா கொடுமையில் இன்று மாட்டிவிட்டான். 'ல' எழுத வேண்டிய இடத்தில் 'ள' போட்டு பிரளயம் வந்துவிட்டது. 'வட் இஸ் திஸ்? கொம்புளானா! கொம்புளானா! என்று கத்தியபடி போய்விட்டான்.'27 கனடாவிற்கு புலம்பெயர்ந்த  தமிழர்களின் தலைமுறையினர் தமிழைக்கற்றும் ஆர்வம் குறைந்தவர்களாகவே உள்ள நிலையினையும் வெளிப்படுத்துகின்றார். மேலும், 'வாசல் மணி அடித்தது. திடுக்கென்றது. இன்னும் மைதிலி ரெடியாகவில்லை. இன்று மாறுவேடப் போட்டியில் கலந்துகொள்கிறாள். கணவர் அறிவுறுத்தியபடி பாரதியார் வேடம்தான் போட வேண்டும் என்று யோசித்திருந்தாள். என்னதான் நாடு மாறி பிழைப்புக்கு வந்தாலும் பாரம்பரியத்தை விடக்கூடாது என்ற கொள்கை இருந்தது. 'ஹூ இஸ் பறாதியா?' என்ற மைதிலியின் ஒரு கேள்வியில் இந்த கலாச்சாரம் அடிபட்டுபோனது. 'துயில் அழகி' வேஷம் நல்லாயிருக்கும் என்ற தீர்மானித்தார்கள்.'28 அயலகத்திற்கு புலம்பெயர்ந்ததால் புலம்பெயர்ந்தவர்களின் தலைமுறையில் ஏற்படும் பண்பாட்டு மாற்றங்களை இக்கதை பிரதிபலிக்கிறது.

ராகுகாலம் சிறுகதையில் தமிழ்ப் பண்பாட்டு நிலையினை நைரொபியில் கடைபிடிக்கும் தமிழர்களின் பண்பாடு, பழக்கவழக்கங்களைக் கண்டு அதிர்ச்சி அடையும் நைரோபியின் நிலையினை, 'மாரியோ முதல் தடவையாக ஒரு வெளிநாட்டுக்காரரிடம் வேலை பார்த்தான். அதனால் அவனுக்கு அடிக்கடி சம்சயங்கள் வந்தன. டொன்னுடைய பழக்க வழக்கங்கள், விருப்பு வெறுப்புகள் ஒன்றுமே அவனுக்கு முதலில் புரிபடவில்லை. அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்றும் தெரியவில்லை. அவன் படித்த முதல் பாடம் காலையில் காரை எடுக்கும்போது பின்னோக்கி எடுக்கக்கூடாது என்பதுதான். புதிய கார் ஒன்றை வாங்கி டொன் செய்த புதிய காரியம் இவனைப் பிரமிக்க வைத்தது. பூசணிக்காய் ஒன்றைக் கார் சில்லின் கீழ் வைத்து நசித்து கார் ஓட்டியதைக் கூறி அதற்குக் காரணம் கேட்டான். நான் எனக்குத் தோன்றிய மாதிரி அர்த்தம் சொன்னதும் மிகவும் கலவரப்பட்டு யோசனையில் ஆழ்ந்தான்.'29 இவ்வாறு விவரிக்கின்றார்.  காலையில் காரைப்பின்னோக்கி எடுத்தல் தீய சகுனம் என்பதும், புதிய வாகனம் வாங்கும் பொழுது திருஷ்டிக்காக பூசணிக்காய் உடைக்கும் பழக்க நிலையினையும் நிலையையும் ஆசிரியர் இச்சிறுகதையின் வாயிலாக விவரிக்கின்றார். தமிழர்கள் அயலகங்களில் உடை, உணவு, மொழி, பழக்கவழக்கங்களில் தாயக பண்பாட்டிலிருந்து மாறுபட்டாலும் மூடப்பழக்கவழக்கங்களை அயலகங்களிலும் தொடரும் நிலையினை இச்சிறுகதை பதிவுச்செய்கின்றது.

ராகுகாலம் சிறுகதை இந்திய பண்பாட்டினை, 'அந்த அம்மா இரண்டு அடையாளம் (பொட்டு) வைத்திருக்கிறாளே! ஒன்று நெற்றியிலே, மற்றது உச்சியிலே. அவர்களுடைய மகளுக்கு மட்டும் ஓர் அடையாளம். அது ஏன் என்ற கேள்வியுடன் இன்னொரு நாள் வந்தான். அதற்கும் பதில் தயாராக வைத்திருந்தேன்.  மாரியோ அந்த அம்மாமீது மிகவும் மரியாதை வைத்திருந்தான். அவள் சொல்வதுதான் அவனுக்கு வேத வாக்கு. நவராத்திரி, தீபாவளி போன்ற மங்கல நாட்களில் உற்சாகத்தோடு கலந்துகொள்வான். அவற்றின் விபரங்களை ஆச்சரியத்தோடு கேட்டுக் கிரகிப்பதில் ஆர்வம் காட்டுவான். அவர்கள் பழக்க வழக்கங்கள், உணவு வகைகள்கூட அவனுக்குச் சீக்கிரத்தில் அத்துப்படியாகிவிட்டன.'30 இவ்வாறு வெளிப்படுத்தும் முறையில் படைக்கப்பட்டுள்ளது. திருமணமான தமிழ்ப் பெண்கள் பொட்டு வைக்கும் முறை, திருமண நடைபெறாத பெண்கள் பொட்டு வைக்கும் முறை, அயலகங்களிலும் பண்டிகைகளை கொண்டாடும் தமிழர்களின் பண்பாட்டுத்தாக்கம் ஆகியவை  இச்சிறுகதையில் விவரிக்கப்படுகின்றன.

ராகுகாலம் என்னும் சிறுகதையானது பண்பாட்டு மாற்றம் குறித்து விவரிக்கும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. இக்கதையில், 'ஒரு நாள் பார்த்த போது யாமா சோமா இறைச்சியை அவர்களுடன் பகிர்த்து உண்டு கொண்டிருந்தாள். அந்தச் சிறுமி ஆப்பிரிக்கச் சிநேகிதிகளின் சகவாசத்தால் முற்றிலும் மாறி வர, மாரியோவோ தன்னுடைய இயல்பான குணத்தையும், பழக்க வழக்கங்களையும் துறந்துவிட்டான். அந்த அம்மாவின் மேல் அவனுக்குப் பற்றுதல் அதிகமானது. சிறிது சிறிதாக மாமிசம் சாப்பிடுவதையே விட்டுவிட்டு அவர்களுடைய இட்லி, சாம்பார் தோசைக்கு அடிமையானான். அது மாத்திரமல்ல, சிவராத்திரி, கந்தசஷ்டி பற்றியெல்லாம் தீவிரமாகச் சிந்திக்க ஆரம்பித்திருந்தான்.'31 தமிழ்ச் சிறுமி ஆப்பிரிக்க பண்பாட்டிற்கு ஏற்ப மாறுவதையும், ஆப்பிரிக்க இளைஞன் தமிழ் பாண்பாட்டிற்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்வதையும் இக்கதை பதிவுச்செய்கின்றது. ராகுகாலம் சிறுகதையானது தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்ப மாற்றம் அடைந்த ஆப்பிரிக்க இளைஞன், தமிழர்களின் மூடப்பழக்கங்களையும் அப்படியே கடைபிடிப்பதை, 'நெற்றியிலே திருநீறு பூசி அதிலே குங்குமப் பொட்டு. 'ஏன், என்ன நடந்தது?' 'நேர்முகத் தேர்வுக்கு புதன்கிழமை பன்னிரெண்டு மணிக்குக் கூப்பிட்டிருந்தார்கள். எப்படி போக முடியும்?'  'நீ போகவில்லையா?'  'சரியான ராகுகாலம், வேலை கிடைக்கவா போகிறது?'32 இவ்வாறு இக்கதை விவரிக்கின்றது. மூடநம்பிக்கையினால் நேர்முகத்தேர்விற்குச் செல்லாத ஆப்பிரிக்க இளைஞனின் நிலை இக்கதையில் பதிவுச்செய்யப்படுகின்றது.

 

மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான  ஜமைக்கா நாட்டின் சடங்கு முறை குறித்து  அடைப்புகள் சிறுகதையில், 'அலுவலகத்தில் மீனுவுக்கு பக்கத்து அடைப்பில் இருப்பவள் பெயர் எஸ்தர். அவளுடைய தேசம் ஜமய்க்கா. எந்த அறையினுள் நுழையும் முன்பும் அவள் கண்கள் பார்ப்பது வாசல் கதவுகளின் அளவுகளை. நுழைந்த பிறகு பார்ப்பது இருக்கைகளின் அகலங்களை. இரண்டு முழங்கைகளின் உதவியால் மார்புகளைத் தூக்கிக்கொண்டு வருவாள். சமீபத்தில் குழந்தை பெற்றவள். அந்தக் குழந்தையுடன் பிறந்த இருபதடி தொப்புள் கொடியை தன்னிடம் கொடுக்கும்படி ஆஸ்பத்திரியில் கேட்டபோது மறுத்துவிட்டார்கள். அவள் நாட்டிலே செய்வதுபோல சில சடங்குகளை அவளால் செய்ய முடியவில்லை. அது பெரிய வருத்தம் அவளுக்கு.'33
ஜமைக்கா மக்கள் குழந்தை பிறந்தவுடன், குழந்தைக்கும் தாய்க்கும் பிணைப்பினை ஏற்படுத்திய தொப்புள் கொடியைக் கொண்டு சடங்குகள் செய்யும் முறையினை உடையவர்கள் என்பதை இக்கதையில் ஆசிரியர் பதிவுச்செய்கின்றார்.
அமெரிக்ககாரி என்னும் சிறுகதையில் மதி என்கின்ற இலங்கைப் பெண் தமிழ் பண்பாட்டு நிலையினை மீற இயலாத நிலையினால் அமெரிக்காவில் நிகழ்ந்த நிகழ்வுகள் ஆகியவற்றினால் தமது குழந்தை அமெரிக்க பண்பாட்டுடன் வளர்க்க வேண்டும் என்னும் எண்ணம் உடையவளாக மாறுகின்றாள். இந்த நிலையினை, 'குழந்தையின் முகம் அவள் அம்மாவுடையதைப் போலவே இருந்தது. சின்னத் தலையில் முடி சுருண்டு சுருண்டு கிடந்தது. பெரிதாக வளர்ந்ததும் அவள் அம்மாவைப்போல கொண்டையை சுருட்டி வலைபோட்டு மூடுவாள். தன் நண்பிகளுடன் கட்டை பாவாடை அணிந்து கூடைப்பந்து விளையாட்டு பார்க்கப் போவாள். சரியான தருணத்தில் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரிப்பாள். 'என் அறையில் வந்து தூங்கு  என்று ஆண் நண்பர்கள் யாராவது அழைத்தால் ஏதாவது சாட்டுச் சொல்லி தப்பியோட முயலமாட்டாள். பல்கலைக்கழக கலாச்சார ஒன்று கூடலில் 'என்ன தவம் செய்தனை பாடலுக்கு அபிநயம் பிடிப்பாள் அல்லது பதினாறு கம்பி இசைவாத்தியத்தை மீட்டுவாள். ஒவ்வொரு நன்றிகூறல் நாளிலும் புதுப்புது ஆண் நண்பர்களைக் கூட்டி வந்து பெற்றோருக்கு அறிமுகம் செய்துவைப்பாள்.'34 ஆசிரியர் இவ்வாறு விவரிக்கின்றார். அயலகங்களுக்குச் சென்றவர்கள் தமது பண்பாட்டு நிலையிலிருந்து மாற்றம் அடையாது காத்து வந்தாலும், அவர்களுடைய எதிர்கால தலைமுறையினர் அயலகத்தின் சூழலில் அயலகப்பண்பாட்டினை தழுவி வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாக உள்ள நிலையினை இக்கதைப் பதிவுச்செய்கின்றது.

உக்ரைன் நாட்டில் காதல் செய்யும் பொழுது கடைப்பிடிக்கப்படும் பண்பாடு குறுத்து நடார் கூறும் பொழுது, 'அந்த ரகஸ்யம் எங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்தது. அப்பொழுதுதான் அதன் பவித்திரத் தன்மை கெடாது. சிலபேர் தங்கள் மார்புகளிலும், கைகளிலும் காதலை பச்சை குத்திக் கொள்வதுபோல நாங்கள் ரகஸ்யத்தை பரிமாறி அதை உறுதி செய்கிறோம் என்றாள். ஆயிரம் வார்த்தைகளை இருப்பில் வைத்துக்கொண்டு இப்படி நீளமாகவும், தர்க்கமாகவும் பேசினாள். 'சரி, நீ ஒரு ரகஸ்யம் சொல்லுஎன்றான். 'அது எப்படி? நீதான் முதலில் காதலைச் சொன்னாய். நீதான் ரகஸ்யத்தையும் சொல்லவேண்டும் என்றான் அவள்.'35 இவ்வாறு விவரிக்கின்றார். காதலை முதலில் சொன்னவர்கள் தான் இரகசியத்தையும் சொல்ல வேண்டும். உக்ரைன் நாட்டின் இரகசியங்களைப் பாரிமாறிக்கொள்ளும் பண்பாட்டினையும், உலகின் பிற நாடுகளின் காதல் குறித்த பண்பாடுகளையும் வெளிப்படுத்துகிறார். காதலை முதலில் சொன்னவர்கள் தான் இரகசியத்தையும் சொல்ல வேண்டும்.

போரில் தோற்றுப்போன குதிரைவீரன் என்னும் சிறுகதையானது அமெரிக்காவின் உச்சகட்ட  நாகரீக மாற்றத்தினை, 'நான் எங்கேயும் ஓடிவிட மாட்டேன். போன ஞாயிறில் இருந்து நீயல்லவோ எனது காதலன். இந்த உடம்பு உன்னுடையதுதான்.'36.
காதலன் பணி நிமி;த்தம் காரணமாக மாற்றலாகி செல்லும் பொழுது மனம் ஒத்து பிரியும் நிலை அயலகங்களில் உள்ளதை இக்கதை பதிவுச்செய்கின்றது

காபுல் திராட்சை எனும் சிறுகதையில் ஆசிரியர் காபுலின் பண்பாடு, வாழ்க்கை நிலை குறித்து, 'கள்ள பாஸ்போர்ட்காரருக்கும், அடையாள அட்டை இல்லாதோருக்கும் அனுமதி கிடையாது. வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் போன்றவற்றை வரவேற்பறையில் பாதுகாப்புக்கு விடவும். தகுந்த துணையுடன் வரும், முழுக்க முகத்திரை அணிந்த பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஆண்களுடன் வரும் பெண்கள் தங்கள் மணப்பதிவை உறுதி செய்ய வேண்டும். இப்படியாக இன்னும் பல கட்டளைகள் மோசஸின் பத்து கட்டளைகள் அப்போது எனக்கு வெகு சாதாரணமாகப்பட்டன.'37 பண்பாடு சார்ந்த கடுமையான சட்ட திட்டங்களை தன்னகத்தே கொண்ட நாடு ஆப்கானிஸ்தான் என்பதனையும், இங்கு துப்பாக்கி கலாச்சாரம் மிகவும் இயல்பான ஒன்று என்பதையும் இக்கதையின் வாயிலாக அறிகின்றோம்

தொகுப்புரை
அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள் கனடா, அமெரிக்கா, சுவீடன், ஸியாரா லியோன், பாக்கிஸ்தான், சுவீடன், நைஜிரியா, பிரான்ஸ், ஆப்கானிஸ்தான் என விரியும் முத்துலிங்கத்தின் கதைப்புலங்கள். பூகோள ரீதியாக இடத்திற்கு இடம் மாறுபடும் மொழி, இனம், நிறம், உணவுப்பழக்கங்கள், சடங்குகள், சமய வழிபாடுகள் போன்ற இயல்பான வேறுபாடுகளால் உருவாகும் அனுபவங்களின் தன்மையை வெளிப்படுத்துகிறது.

அடிக்குறிப்புகள்
1. பக்தவட்சல பாரதி,  பண்பாட்டு மானுடவியல், பக், 151.
2. எஸ்.பொ, இ.பா, (தொ.ஆ) பனியும் பாவையும் பக்,58.
3. அ.முத்துலிங்கம், வடக்கு வீதி, முன்னுரை, றறற.ழௌடயமயஅ.உழஅ
4. அ.முத்துலிங்கம், வடக்கு வீதி, முன்னுரை, றறற.ழௌடயமயஅ.உழஅ   
5. அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், வையன்னா கனா, பக்,149.
6. அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், குதம்பேயின் தந்தம், பக்,149.
7. அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், குதம்பேயின் தந்தம், பக்,160.
8. அ.முத்துலிங்கம், வடக்கு வீதி, முன்னுரை றறற.ழௌடயமயஅ.உழஅ.
9. அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், குதம்பேயின் தந்தம், பக்,166.
10. அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், குதம்பேயின் தந்தம், பக்,169.
11. அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், குதம்பேயின் தந்தம், பக்,169.
12. அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், குதம்பேயின் தந்தம், பக்,170.
13. அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், துரி, பக்,196.
14. அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், கிரகணம், பக்,228.
15. அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், கிரகணம், பக்,234.
16. அ.முத்துலிங்கம், வடக்குவீதி, முன்னுரை, றறற.ழௌடயமயஅ.உழஅ
17. அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், குங்கிலியநாயனார், பக்,234.
18. 19. அ.முத்துலிங்கம், அமெரிக்ககாரி, அமெரிக்ககாரி, பக்,162.
20. அ.முத்துலிங்கம், அமெரிக்ககாரி, அமெரிக்ககாரி, பக்,163.
21. அ.முத்துலிங்கம், அமெரிக்ககாரி, அமெரிக்ககாரி, பக்,162.
22. அ.முத்துலிங்கம், அமெரிக்ககாரி, அமெரிக்ககாரி, பக்,165.
23. அ.முத்துலிங்கம், அமெரிக்ககாரி, அமெரிக்ககாரி, பக்,169.
24. அ.முத்துலிங்கம், அமெரிக்ககாரி, அமெரிக்ககாரி, பக்,169.
25. அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், பூமாதேவி, பக்,387.
26. அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், காபுல் திராட்சை, பக்,707.
27. அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், கொம்புளானா, பக்,620.
28. அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், கொம்புளானா, பக்,623.
29. அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், ராகுகாலம், பக்,631.
30. அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், ராகுகாலம், பக்,631.
31. அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், ராகுகாலம், பக்,632.
32. அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், ராகுகாலம், பக்,635.
33. அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், அடைப்புகள், பக்,683.
34. அ.முத்துலிங்கம், அமெரிக்ககாரி, அமெரிக்ககாரி, பக்,173.
35. அ.முத்துலிங்கம், அமெரிக்ககாரி, வேட்டைநாய், பக்,69.
36. அ. முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் சிறுகதைகள், போரில் தோற்றுப்போன   
குதிரைவீரன், பக்,732.
37. அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், காபுல் திராட்சை, பக்,707.


* கட்டுரையாளர்: மு.இன்பவள்ளி, பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, இரா.வே.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செங்கல் பட்டு - 603001.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R