பிரான்சில் முருகபூபதிஎமது தாயகம் ஈழத்தில் 1970 களில்  எழுத்துத்துறையில் சிறகு முளைத்து இலக்கிய வானில் இற்றைவரையில்  உயர உயர பறந்து கொண்டிருக்கும்இலக்கியப் பறவை முருகபூபதி  கங்காரு நாட்டின் சரணாலயத்திற்கு  1987 இல் புலம்பெயர்ந்தவர். கலை இலக்கியவாதிகள் நிரம்பிய  பாரிஸ் மாநகரம்  நோக்கி  இந்தப்பறவை சிறகு விரித்தது. தனது கல்வி கண்ணை திறந்த வட்டுக்கோட்டை  சித்தங்கேணிபண்டிதர் மயில்வாகனனாரின் நூற்றாண்டு நிகழ்வுக்காக பாரிஸ்  வந்த முருகபூபதியை மூன்று தருணங்கள்சந்தித்தேன் .  பல தடவைகள் தொலைபேசியில் பேசினேன். அவருடனான  சந்திப்புகளும்,உரையாடல்களும் சிந்திக்க வைத்தன.அவரது வாயிலிருந்து சிந்திய
வார்த்தைகள் அனைத்தும் எனது மனக்கணினியில் பதிந்துள்ளன.

1972 ஆம் ஆண்டு  வீரகேசரி நாளிதழ்  அவரது எழுத்து பயணத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது. முதலில் அவரது ஊர் நீர்கொழும்பின் பிரதேச நிருபராக தனது பணியை ஆரம்பித்தார். இன்று நான்கு தசாப்தங்களுக்கும்  மேலாக அவரது  எழுத்துப் பயணம் அகன்று விரிந்து தொடர்கிறது.இந்தப் பாதை நீளமானது,அகலமானது என்பதை புரிந்து கொண்டு,  முன்வைத்த காலை பின் வைக்காது தொடர்ந்து முன்னேறி வருகிறார்.

எங்கே சென்றாலும் எதனைப்பார்த்தாலும் எவரைச் சந்தித்தாலும் அவருக்கு தீனிதான் !! தான் கற்றதையும் பெற்றதையும்  யதார்த்தம் குறையாமல், அற்புதமாக சுவையான ரசனையுடன்  வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வார். “பேப்பரையும் பேனாவையும் தவிர தனக்கு வேறு எதுவும் தெரியாது “என்றுதான்அவர் 1987 இல் அவுஸ்திரேலியா வந்தபோது தெரிவித்தார்.   அவர் இன்றும் எழுதிக்கொண்டே இருக்கிறார்.

வீரகேசரி வாரவெளியீட்டில்   “இலக்கியப்பலகணி “ என்ற மகுடத்தில் ரஸஞானி என்ற பெயரில்தான்அவரது எழுத்துக்களை முதலில் வாசித்தேன்.    சமீபத்தில் அவரது வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி  என்ற ஆவணப்படத்தை பாரிஸில் பார்த்து ரசித்தேன். அதனை,  அவரது அவுஸ்திரேலியா நண்பர்கள்  எழுத்தாளர்  கிருஷ்ணமூர்த்தி மற்றும்  ஒளிப்பதிவாளர் மூர்த்தி ஆகியோர் தயாரித்துள்ளனர். முருகபூபதி வீரகேசரி வாரவெளியீட்டில்  இலக்கியப்பலகணி எழுதிய காலத்தில்,  தினகரன் வாரமஞ்சரியில்  இலக்கிய விவகாரம் மற்றும்நாட்டு நடப்புகளை எஸ்தி என்னும் பெயரில்  மூத்த ஊடகவியலாளர்  எஸ். திருச்செல்வம் எழுதினார். யாழ்ப்பாணம்  ஈழநாடுவில் அதன் செய்தி ஆசிரியர் கே.ஜீ.மகாதேவா இப்படியும் நடக்கிறதுஎன்ற பத்தி எழுத்தைஎழுதினார்.   அதுபின்னர்  புத்தகமாகவும் வெளிவந்துள்ளது. சிந்தாமணியில் அதன் ஆசிரியர் எஸ். டீ. சிவநாயகம் இலக்கியபீடம் என்ற வாராந்த பத்தி எழுத்துக்களை எழுதிவந்தார். பின்னளில்  உதயன்-சஞ்சீவி யில் அதிரடி அரங்குஎன்ற பத்தியைமின்னல் என்ற பெயரில்  மற்றும் ஒரு மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன் எழுதினார்.தற்பொழுது  அவர் யாழ்ப்பாணம்  காலைக்கதிர் பத்திரிகையில் இனி இது இரகசியம் அல்ல என்னும் தலைப்பில் அதே மின்னலாக ஒளிர்கிறார். இத்தகைய பத்திகளை வாசிப்பதற்கென்றே ஒரு பெரிய வாசகர் கூட்டம் இருந்தது. இன்றும் அந்த எண்ணிக்கை குறையவில்லை. இந்த எழுத்துகளை வாசிப்பதால் பல செய்திகளையும் சுவாரசியமான  தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

தொடர்ந்தும்  இவ்வாறானபத்தி எழுத்துகளை படைத்த முருகபூபதி, சிறுகதை, நாவல், கட்டுரை, பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம், நேர்காணல், கடித இலக்கியம் முதலான துறைகளில்  இதுவரைக்கும் 22 நூல்களை எழுதியுள்ளார்.இணையத்தளங்கள் ,பத்திரிகைகள் உட்பட  இலக்கிய இதழ்களிலும் எழுதிக்கொண்டிருக்கிறார்.இந்த தொடர் பயணத்தில் அவரது மற்றும் ஒரு வரவுதான் அண்மையில் வெளிவந்துள்ள  “சொல்லத்தவறிய கதைகள்” நூல்.  இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் யாவும் கதைகள் போன்றுதான் அமைந்துள்ளன. அதனால் இதனை  புனைவுசாரா இலக்கிய வகை என அழைக்கிறார்.

இதன் அறிமுக விழா அண்மையில் பாரிஸ்  நகரில் நடைபெற்றது.எழுத்தாளர்கள்,  கலைஞர்கள், இதழாசிரியர்கள் பலர்  கலந்து கொண்ட   இந்நிகழ்வு ஒரு இலக்கிய சந்திப்பாகவே இடம்பெற்றது.பாரிஸில்  வதியும் எழுத்தாளர் கோமகன் நடத்தும்  “நடு”எனும் இணைய இதழின் அனுசரனையுடன்  இந்நிகழ்வு அரங்கேறியது. கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான வாசுதேவன் தலைமை தாங்கினார். “ஒரு பேனா போராளி சொல்லிய கதைகள் “என இந்நிகழ்வு குறித்து ஏற்கனவே  எழுதியிருக்கின்றேன்.

முருகபூபதியை   சந்தித்த கணங்களில் அவர் எம்மை  சிந்திக்க வைப்பார். மல்லிகைக்கும் முருகபூபதிக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு என்பது  எமக்குத்தெரிந்திருந்தாலும், அதன் ஆசிரியர்  டொமினிக் ஜீவாவுடன் பழகிய  அந்த நாட்கள்,  மல்லிகையில் எழுதிய விடயங்கள்,  மல்லிகை சிறப்பு மலர்கள்,  நீர்கொழும்பு,அவுஸ்திரேலிய சிறப்பு மல்லிகை மலர்கள் பற்றி சுவாரஸ்யமாக உரையாடினார்.  இதுபற்றி ரஸஞானி ஆவணப்படத்திலும் பேசியுள்ளார்.  அதில்  மல்லிகையின்அச்சுகோப்பாளர் சந்திரசேகரத்துடன் எடுத்த  ஒளிப்படமும் காண்பிக்கப்படுகிறது. தான் சந்தித்து உறவாடிய  இலக்கியப் படைப்பாளிகள் எல்லோரையும் நினைவு படுத்தினார்.

பாரிஸ் இலக்கிய சந்திப்பில்   ஒரு  சம்பவத்தை மறக்க இயலாது.  இலங்கையில்  மறைந்த அவரது  இலக்கிய நண்பர்  எழுத்தாளர் டானியல் அன்ரனியின் மகனை அச்சந்திப்பில் கண்டபோது,  அவரை ஆரத்தழுவிமுத்தமிட்டு வாழ்த்தியதுடன்  டானியல் அன்ரனிக்கும் தனக்குமுள்ள உறவையும்  வெளிப்படுத்தினார்.

“முருகபூபதியின் அன்பில் திக்குமுக்காடிப்போனேன்,அதில் திளைத்து போனேன்.  அந்த முத்தத்தின் ஈரம் இன்னும் காயவில்லை”என்று டானியல் அன்ரனியின் மகன் உணர்ச்சிபொங்கத் தெரிவித்தார் .

முருகபூபதி,  இலக்கிய வாதிகள் பற்றிய தகவல்களை விரல்நுனியில் வைத்திருப்பவர். நெல்லை க.பேரன் மற்றும் அவரது முழுக்குடும்பமும்  ஷெல் தாக்குதலில் 1991 இல் கொல்லப்பட்டார்கள்.   நான்  யாழ்ப்பாணம்ஈழநாடுவில் பணியாற்றிய காலங்களில் அவர் என்னுடன் பழகியவர்.இவர் பற்றிய தகவல்களை  தேடிய பொழுது எனக்கு  முருகபூபதியின் எழுத்துக்கள்  கைகொடுத்ததன.இதே போன்று  ஈழநாடு பத்திரிகை அதிபர் கே.ஸி.தங்கராஜாஅவர்கள் குறித்த தகவல்களை தேடிக்கொண்டிருக்கிறேன் என்று முருகபூபதியிடம்  கூறிய போது, அவரை சந்தித்தது முதல், அவருடன்  பழகிய அனுபவங்களை விபரித்தார்.   கவிஞர் புதுவை இரத்தினதுரையின்இலக்கிய ஆளுமை-  புலமை மற்றும் அவரது தொடர்புகளையும் நனவிடை தோய்ந்தார். இலங்கை  முற்போக்கு இலக்கிய முகாம்  மற்றும் எஸ்.பொ.தொடங்கிய நற்போக்கு இலக்கியம் முகாம் பற்றிய   அந்த நாளைய இலக்கிய விவகாரங்களை கூறினார். ரஸஞானி என்னும் ஆவணப்படத்தில் முருகபூபதியின் பன்முக ஆற்றல்களையும் பலர் வியந்து பாராட்டியுள்ளனர்.   அதில் ஒருவர் ,”கதிர்காம அழகி மனம் பேரியின்கொலை தொடர்பாக எழுதிய முருகபூபதி,  செம்மணியில்  கிருசாந்தி சிதைக்கப்பட்டகதையை  சொல்லவில்லையே…!?  என்று ஆதங்கப்பட்டார். அதற்கான பதிலை பாரிஸ் படைப்பாளிகளுடனான சந்திப்பில் முருகபூபதி  கூறினார்.

“மனம்பேரி சம்பவம் தொடர்பான செய்திகளை நன்கு அறிந்தவன்.  சம்பவம் நடந்தஇடத்திற்கும்  சென்றிருக்கிறேன்.  அப்படியாகத்தான் அந்த எழுத்து உருவானது.   கிருசாந்திக்குநிகழ்ந்தது பற்றியும்  அறிந்து வைத்திருக்கிறேன் .  கேள்விஞானத்தில் எழுதும்போது அவதானம் தேவை . எனினும் காலம் வரும்போது பதிவாகும்” என கூறினார்

ஈழப்போராட்ட ஆரம்ப காலங்களில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து  அகாலம் என்னும் நூலை எழுதியிருக்கும்  பாரிஸில் வசிக்கும் சி.புஸ்பராணியை சந்தித்தபோது,  “உங்களின் சிறைநாட்கள் செய்திகளைவீரகேசரியில்  செம்மைப்படுத்தி  எழுதியிருக்கிறேன் “  என்றார்.எனினும்  தனது பாரிஸ்  பயணத்தில்தான்  முதல் முதலில்  புஸ்பராணி அக்கா போன்ற ஆளுமைகளை சந்தித்தேன் என்றார். சொல்லத்தவறிய  கதைகள்நூலின் முதல் பிரதியை  அவருக்கே வழங்கி கெளரவித்தார்.

பாரிஸில்  தினபதி – சிந்தாமணி  ஊடக வியலாளரும் முன்னாள் இலங்கை நாடாளுமன்ற செய்தியாளருமான  செல்வரத்தினம் வீட்டில் தங்கிருந்தார்.  அங்கேயும் இலக்கிய சந்திப்புகளே  நடைபெற்றன.பலரும்  தமது வீடுகளுக்கு அழைத்துச் சென்று அவரை கொண்டாடினார்கள். பாரிஸ்  வாழ் தமிழர்களின் பண்புகளை  அவதானித்து கருத்துச்சொன்னார்.  அவரது பாரிஸ்  பயணம் எழுத்தாக விரியும் என்று நம்புகிறேன்.  அப்போது பல செய்திகளை எழுதுவார் என எதிர்பார்க்கலாம்.

மூத்த பத்திரிகையாளர்,டான் தொலைக்காட்சி இயக்குனர் எஸ்.எஸ்.குகநாதன் வீட்டில்  இலக்கிய  ஆர்வலர்களைசந்தித்தார். ஜெர்மனியிலிருந்து தேனி இணைய இதழ் ஆசிரியர் நண்பர் ஜெமினியும் முருகபூபதியைப் பார்க்க ரயிலில் வந்து சேர்ந்தார்.  குகநாதனுடன் நீண்ட காலமாக நட்புடன்இருப்பவர் முருகபூபதி.  குகநாதன் வெளியிட்ட பாரிஸ் ஈழநாட்டில் கதைகள், கட்டுரைகள் எழுதியவர்.   அதில் சுமார் 12 இலக்கிய ஆளுமைகளைப்பற்றி முன்னர் எழுதியவர்.  அதன் பெயர் நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள்,  குகநாதனின்சகோதரன் காவலூர் ஜெகநாதனோடும் தொடர்பில் இருந்த நாட்களை நினவு படுத்தினார். குகநாதன்  இலங்கையில்நின்றதனால் இச்சந்திப்பில்  அவர் இல்லாத போதும், அவரது மனைவி பிள்ளைகள் முருகபூபதி  மீது அன்பைப் பொழிந்தனர்.இலக்கிய ஊடக கலந்துரையாடலாக அந்த சந்திப்பும்  மன நிறைவோடு நடந்ததாக விடைபெறும்போது சொன்னார்.

பாரிஸில்  பண்டிதர் க. மயில்வாகனனார் நூற்றாண்டு நிகழ்வில் கலந்து கொண்ட அவர்,  தனது ஆரம்ப பாடசாலை கல்வியை ஞாபகப்படுத்தினார். “அ”எழுத வைத்து அரிச்சுவடியை ஆரம்பித்த திலிருந்து நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் தோற்றத்தையும் வளர்ச்சியையும்   கதையாகச்சொன்னார்.  எந்தவொரு வரலாற்றையும் சுவைபொங்க கதையாக சொல்வது அவரது இயல்பு. மேற்கிலங்கை  நீர்கொழும்பில் இருந்து  வட இலங்கை யாழ்ப்பாணம் சென்று படித்தது,  பனை மரத்தை  அப்பொழுதுதான் முதலில் பார்த்தது,   சாதி என்றால் என்ன என்பதையும் அங்குதான் கண்டேன் என்பதையும்   அவர் கதைகதையாக சொன்னபோது ரசித்தோம். நல்லதொரு கதை சொல்லிதான் முருகபூபதி. சித்தங்கேணியில்  தனது ஆசான்  பண்டிதர் மயில்வாகனன் மற்றும்  அவரது மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்த அந்த நாட்களை , பழகிய இனிய  பொழுதுகளை இரைமீட்டார்.  நூற்றாண்டு அரங்கில் பண்டிதரின் பிள்ளைகளை அழைத்து உச்சிமோந்தார். நீர்கொழும்பு – யாழ்ப்பாணம் – அவுஸ்திரேலியா-பிரான்ஸ் என தொடரும் தமது  உறவுகளைவிலாவரியாக விளக்கினார்.

வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பிரான்ஸ்  தமிழர் மீது தான் வைத்திருக்கும் அன்பையும் அபிமானத்தையும் முருகபூபதி வெளியிட்டார். புகலிட மண்ணில் தனது எழுத்துப்பயணத்திற்கு விதையிட்டவர்கள் பிரான்ஸிலுள்ள   “ஓசை “ மனோ,    “ஈழநாடு “ “ குகநாதன் ,   “ தமிழன் “ காசிலிங்கம்  என நன்றியுடன் கூறினார்.இந்த ஊடகங்கள் தனது எழுத்துகளை அரியணையில் ஏற்றி வைத்தன என்பதை வெளிப்படுத்தினார். 2011 ஆம் ஆண்டு கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்தியபோது, அதற்கு பக்கபலமாக நின்று கருத்துப்போர் நடத்திய பாரிஸ் படைப்பாளி ஷோபா சக்தி உட்பட மாநாட்டுக்கு ஆதரவாக பாரிஸிலிருந்து கையொப்பம் இட்டவர்களையும் நன்றியுடன் நினைவுபடுத்தினார்.

முருகபூபதி,  தனதுஎழுத்து பணியுடன் நின்று விடாது இலங்கையில் நீடித்த  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட  ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்விமேம்பாட்டு பணிகளிலும் அவுஸ்திரேலியாவில் பல அன்பர்களையும் இணைத்துக்கொண்டு, தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.   இதற்காக இலங்கைமாணவர் கல்வி நிதியம்என்ற தன்னார்வ தொண்டு அமைப்பையும்  1988 இல் அங்கு உருவாக்கியவர். இந்த நிதியத்தின்  ஊடாக சுமார் 3000 மாணவர்கள் பயனடைந்திருப்பது தெரியவருகிறது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழகம் பிரவேசித்து பட்டதாரிகளாகி தொழில் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

“ தனது சிறிய வயதிலே வறுமையின் நிறம் சிவப்பு என்பதை அனுபவித்தேன் .  அதனால்தான் இந்தத்  திட்டம் உருவானது  “என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஈழத்தமிழர்கள் எங்கிருந்தாலும் நிமிர்வுடன் நிற்பார்கள் என்பதைபாரிஸ் லாச்சப்பலுக்கு வரும்எவரும் புரிந்து கொள்வார்கள் என்பதையும் அவர் பூடகமாக தெரிவித்தார்.இங்குள்ள தமிழரின் நிமிர்வையும் திமிரையும் கண்டு வியந்தார்.பிரான்ஸிலுள்ள தமிழரின் வாழ்வியல் சமூக பொருளாதாரம் ஆய்வு செய்யப்பட வேண்டும் .யாராவது  அதற்கானதேடலில் இறங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். எமது அடுத்த சந்ததியிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பல நடவடிக்கைகைள  முன்னெடுக்கவேண்டும்  எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அவுஸ்திரேலியாவில்  வதியும் ஊடகவியலாளர்  நண்பர் தெய்வீகன் பற்றியும் பேசினோம். அவருடன் நெருங்கிய தொடர்புடன் இருப்பதாக முருகபூபதி  கூறினார்.
எங்களின் சமையல்கலை  பற்றிஉரையாடியபொழுது “ தனக்கு நன்கு சமைக்கவும் தெரியும் “   என்றார் அவர் .  சமையல் அறையில்  சமையல் செய்வதும் அவர் சம்பந்தமான ரஸஞானி ஆவணப்படத்திலும் காண்பிக்கப்பட்டது,

“புகலிடத்தில் ஆண்கள் தான் நளபாகத்தில் வல்லவர்கள்  “ என்றார்.

பாரிஸ்  பயணம் முடிந்து பிரித்தானியாவுக்கு   பறந்தார்.அங்கும் இலக்கியவாதிகள்  முருகபூபதியை சுற்றி வளைத்தனர் .   அங்கிருந்து    அவர்  தமிழகம் சென்ற வேளையில்  தொலைபேசியில் பேசினேன்.   “தொடர்ந்தும்  தொடர்பில் இருப்போம் “என்று கூறி விடைபெற்றார். சுமார்  45 ஆண்டுகளுக்கு  முன்னர்  இலங்கையில் அறிமுகமான நண்பர் முருகபூபதியை,  நீண்ட இடைவெளிக்குப்பின்னர் பாரிஸ் மாநகரில் சந்தித்து கலந்துரையாடியது மறக்கமுடியாத அனுபவம்தான்.

நன்றி: தேனீ இணையத்தளத்தில் வெளியான இக்கட்டுரையை 'பதிவுகள்' இதழுக்கு அனுப்பியுதவியவர் எழுத்தாளர் முருகபூபதி.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R